கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: August 17, 2023
பார்வையிட்டோர்: 3,016 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வெய்யில் அனலாக இருந்தது. பங்குனி தோற்கும். முகத்தில் அடிக்கும் காற்றில் காங்கை. இந்த இடத்தில் இப்போது ஒரு கிழமையாகத் தெருவைச் செப்பஞ் செய்கிறார்கள். தார் உருக்கும் நெருப்பின் புகையும் ஊற்றிய தாரின் மேற் பரவிய மண்ணின் புழுதியுமாய் இந்த வெய்யிலுடன் சேர்ந்து கால் கிலோமீற்றர் தூரத்திற்கு வதக்கி எடுக்கின்றன.

“அல்லங்காடி” முன் நிறுத்தி, மூக்கைப் பிடித்துக்கொண்டு போய் அன்றைய பேப்பரை வாங்கிக் கொண்டு வந்தார். தலைக் கவசத்தை மாட்டிக் கொண்டு ஏறினார். எஞ்சினை இயக்கி கியரைப் போட்டதுதான் தாமதம் இரண்டடிகூட உன்னியிராது. கறகறவென்று பெரிதாய்ச் சத்தம். திடுக்கிட்டதா, அனிச்சையாய் கையும் காலும் இயந்திரத்தை நிறுத்தியமையா, எது முதலில் நடந்தது என்று தெரியவில்லை . “என்ன சங்கடம் ஒருநாளும் இல்லாமல்?” என்று முனகிக் கொண்டே மீண்டும் இறங்கினார்.

இல்லை, சில்லுக்குள் ஒன்றும் சிக்கிக்கொண்டு இருக்கவில்லை. கடை வாசலை விலத்தி, சற்றுத் தள்ளி நின்ற காட்டுப் பூவரசு நிழலில் விட்டுவிட்டுப் பார்க்கலாம்…

சைக்கிள் உருள மறுத்தது.

“என்ன சேர் பிரச்சினை?”, கடைப் பையன் வெளியே வந்தான்.

“செயின் அறுந்து போச்சுப்போல கிடக்கு” என்றபடி, நடு ஸ்ராண்டில் விட்டார். கியர், நியூட்ரலில் தான் நின்றது. ம்ஹும்…

சைக்கிளின் அருகோடு குந்தி, சில்லை முன்பின்னால் மெல்ல அசைக்க.

அறுந்தது மட்டுமல்ல, சிக்கிக்கொண்டும் விட்டிருக்கிறது. தாண்டிப் போன ஒவ்வொரு வாகனமும் சுழற்றிய புழுதியிலும் முக்குளிக்க வேண்டியிருந்தது.

மூன்று நிமிடத்துள் அந்த சில்லால் சுழல இயலுமாய் ஆனது.

இனி? செயின் கவரைக் கழற்றும் சாவிப்பை இல்லை. என்ன செய்யலாம்? நேரத்தைப் பார்த்தார்.

பன்னிரண்டு அரையாகிக்கொண்டிருந்தது. இரண்டு மணிக்கு வகுப்பு. குளித்துச் சாப்பிட்டுவிட்டு வரலாம் என்று வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தார்.

இரண்டு கிலோமீற்றர் சுற்று வட்டாரத்தில் திருத்தும் இடங்கள் ஏதும் இல்லை. ரவியின் ரயர்க்கடை நினைவு வந்தது. அவனிடம் சாவிகள் இருக்கும். வந்த பாதையால் திரும்பிக் கொஞ்சத் தூரம் போகவேண்டும். அதுவும், இந்த தார் ஊற்றுகிற பிரதேசத்தில்தான்….. வேறு வழியில்லை .

கண்டதுமே கைவேலையை விட்டுவிட்டு எழுந்துவந்தான் ரவி. “என்னையா, இப்பதானே இதால போனனீங்கள்?” கடகடவென்று செயின் கவரைக் கழற்றலானான்.

இந்த முப்பது வருட ஓட்டத்தில் இப்படிச் செயின் பிரச்சினை தருவது இது இரண்டாவது தடவை. இதற்கு முதல், யாழ்ப்பாணம்

ஸ்ரேசனடியில் ஒரு தரம் எப்போதோ…..

“லொக் கழன்று போச்சு ஐயா…. வளம் மாத்திப் போட்டிருக்கு….” “மாத்தியா”

பைக் எப்போதும் சரியாக இருக்க வேண்டும் அவருக்கு. ஆளோடு ஒரு பகுதியாகவே ஆகிவிட்டிருந்தது அது. எந்த இடத்திலும் எந்தப் பிரச்சினையும் தராத மாதிரி – வருடம் ஒரு சேவிஸ் தப்பாது. இடையில் ஏதாவது ஒரு சிறு ஆணி தளர்ந்தாலும் இறுக்கிவிட்டுத்தான் மறுவேலை! சே….!

“ஒரு குண்டைக் கழட்டி விட்டுப் பூட்டும்”

பத்து நிமிஷ வேலை, பரவாயில்லை. நேரத்துக்குப் போய் விடலாம்.

காலில் சுற்றிய சாக்கும், தலையில் தொப்பியுமாய் – இந்தத் தார் ஊற்றுகிற தொழிலாளிகளுக்கு என்ன சம்பளம் கொடுத்தாலும் தகும் என்று பட்டது. தன் சட்டையைக் குனிந்து பார்த்தார். அங்கு மிங்குமாய்க் கரித் துகள்கள்…

ஏறி உட்கார்ந்து ஸ்ராட்டரை உதைத்த போதே அந்த மெல்லிய வித்தியாசத்தைக் கால் உணர்ந்தது.

ஒன்று, இரண்டு, மூன்று…… என்னவாயிருக்கும்?

“பிளக்கைப் பார்க்கட்டா ஐயா?” என்றான் ரவி.

“பாரும்”

பிளக் சரியாகத்தான் இருந்தது. பளிச்சென்று பூத்துப்போய், ஒரு கரிப்பொட்டோ எண்ணெய்த் துளியோ இல்லாமல்.

“கரண்ட் வருகுதோ பாரும்…”

அடப்ரரைக் கழற்றி சைக்கிள் உடலோடு பிடித்தான். உதைத்தார்.

“இல்லை”, ரவி அண்ணாந்து பார்த்தான்.

“செயின் கவரை இன்னொருக்காக் கழட்டும்”

கையில் சாவித் தட்டும் முகத்தில் கேள்விக்குறியுமாய் மீண்டும் குந்தினான் ரவி.

சரிதான்! சின்னி விரலளவில் ஒரு இஞ்சி நீட்டிக் கொண்டிருந்த பல்ஸரில் வெடிப்பு வடிவாகவே தெரிந்தது! இதை நான் ஏன் முதலில் பார்க்க யோசிக்கவில்லை என்ற எண்ணம் வந்தபோதே, இந்த மொடலுக்கு இந்தப் பல்ஸரைப் பொருத்த வேறு இடமில்லாமல் செயின் சுற்றும் பாதையில் பொருத்திய ஜப்பான்காரனில் ஆத்திரம் வந்தது.

“என்ன செய்யலாம் ஐயா?”

வலு வேகமாகப் போன ஒரு மினி பஸ் புழுதியைச் சுழற்றி, அதில் மறைந்தது.

“தயாவைத்தான் கூப்பிட வேணும்” என்றபோதே, அவன் வந்தாலும் மாற்றுவதற்குப் புதிது கிடைக்குமோ, அல்லது வைன்ட் செய்துதான் போட வேண்டியிருக்குமோ என்ற ஐயமும் வந்தது. எப்படியோ இன்றைக்குச் சாப்பிட்டு விட்டல்ல சாப்பிடாமலே கூட வகுப்புக்குப் போக முடியாது என்பது உறைத்தது. ஒன்றைத் தொட்டு ஒன்றாக இன்றைக்கு இரண்டாவது இது…

“போன் பண்ணீட்டு வாரன்” என்றவர் இருபுறமும் வடிவாகப் பார்த்தபடி தெருவைக் கடந்தார். முகங் கழுத்தெல்லாம் புகையும், புழுதியுமாய் ஒட்டுகிற மாதிரி இருந்தது.

நல்ல வேளையாகக் கல்லூரி அலுவலகத்தில் இந்த நேரத்திலும் யாரோ இருந்தார்கள்.

“…நாளைக்குக் கட்டாயம் வருவேன்”

தயாவின் செல்போனை அணைத்து விட்டிருந்தான் போலும். எடுக்கவே முடியாதிருந்தது. திரும்ப ரவியிடம் வந்தார்.

“சைக்கிள் நிக்கட்டும் நான் போய்த் தயாவைக் கூட்டியாறன்”

“தயா இப்ப எங்காவது போயிருந்தால் நேரம் மட்டுமில்லை, ஓட்டோக் காசும் வீண்!” என்ற எண்ணம் போகும் போது வந்தது. நல்ல வேளை, தயா கராஜில் தான் நின்றான்.

“நீங்கள் நில்லுங்கோ , நாங்கள் போய் எடுத்து வாறம்” உதவிக்கு ஒரு ஆளோடு தன் பைக்கில் வெளிக்கிட்டவனிடம் சாவியையும், ஓட்டோ வாடகையையும் கொடுத்துவிட்டு, கராஜ் தாழ்வாரத்தோடு வெய்யில் படாமல் போய் நின்றார்.

“எப்படியும் தயா போய் வர அரை மணித்தியாலம் ஆகும்.” கைக்குட்டையை எடுத்து முகம், கழுத்து எல்லாம் அழுத்தித் துடைத்தார். இந்த இடத்தில் தெருவுக்குத் தார் ஊற்றவில்லை என்றாலும், அருகில் அரைக்கும் ஆலை’ அறிவிப்புப் பலகை தெரிந்த இடத்தில் இருந்து இரைச்சலும், மிளகாய் நெடியும் விடாமல் வந்து கொண்டிருந்தன…… இப்போது இலேசாகப் பசிக்கிற மாதிரி இருந்தது…. அருகில் தேத்தண்ணிக் கடைகூட எதுவும் இல்லை.

“மாத்தத்தான் சேர் வேணும்” சொல்லிக்கொண்டே வந்து நிறுத்தினான் தயா.

“வாறியளா ரவுணுக்கை பாத்திட்டு வருவம்?”

“வேறு என்ன வேலை?” அவனுடைய பைக்கிலேயே புறப்பட்டார்கள்.

“புதுசு கிடைச்சா நல்லதாப்போம்….. இந்த மொடல் ஐமிச்சம்.” போகேக்கை சொல்லிக்கொண்டே வந்தான். வைண்ட் பண்ணிப்போட நாளையாகுமோ, நாளையின்று ஆகுமோ….

ஸ்ரான்லி வீதி முழுக்கத் தடவவேண்டி இருந்தது. நகரவும் முடியாத, திரும்பவும் முடியாத நெரிசல். நிறுத்தக்கூட இடமில்லாத நெருக்கடி. ஒரு முகில்கூட மறைக்காத வெய்யில்….

பல்ஸர் கிடைத்தபோது இரண்டு ஐம்பது. “உங்களுக்கு லக் இருக்கு மாஸ்ரர்” என்றபடி வந்தான் தயா.

வேலைகள் ஒப்பேற்றும் வேளைகளில் அவனுடைய சேர் மாஸ்ரராகிவிடும்.

“தயா இதில தேத்தண்ணி குடிச்சிட்டுப் போவம்” சந்தி தாண்டும் போது சொன்னார்.

“நான் ஒரு தேத்தண்ணி மட்டும்…. சாப்பிடப் போக வேணும் சேர்.”

“நானும் தேத்தண்ணி மட்டும்தான், பனடோலோட…” தேனீர் குடித்துக் கொண்டிருக்கும் போது தயா சொன்னான்.

“சேர், செயின் எல்லாம் வடிவாகக் கழுவச் சொல்லி பெடியள ட்டச் சொல்லிப் போட்டு, நான் ஒருக்கா டக்கெண்டு வீட்டை போய் வந்திர்றன்.”

“சரி” “அரை மணித்தியாலத்துக்குள்ளை வந்திடுவன்.”

தயா வர மூன்றரை – பூட்ட நாலு… எப்படியும் நாலரையாகும்…. இன்னும் ஒன்றரை மணித்தியாலம்…!

சரியான வேளையில் நினைவு வந்தது. “என்னை லைபிறறியடி யிலை விட்டுட்டுப் போம்”… என்றார். வகுப்புக்கள் முடிந்து போகும் போது போகவென்றிருந்த வேளையில் சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்தார். அட்டைகள் இருந்தன. “சரியா நாலு மணிக்கு கராஜுக்கு வருவன்” நூலகத்தின் முன் இறங்கும் போது நிச்சயப்படுத்திக் கொள்வதுபோல் சொன்னார்.

தேடத் தொடங்கி முக்கால் மணித்தியாலம் ஆகியும், தேடிய இரண்டிலும் ஒன்றைக்கூட சந்திப்பதாய் இல்லை. அந்த இரண்டை யும் நிச்சயமாக எவருமே எடுத்திருக்க மாட்டார்கள். இங்கேதான் எங்கோ இருக்கும். இருந்தது. ஆனால், எந்த ஒழுங்கும் இல்லாத இதனை அலுமாரிகளில் எங்கென்று தேடுவது? வைக்கோற் பட்டடை யில் ஊசி தேடுவதுபோல…. நாலு மணிக்கு பத்து நிமிடம். அங்கிருந்த பணியாளர்களுக்கு ஒரு இக்கட்டைத் தான் ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறேன் என்று உணர்ந்தவராய்…

“நாளைக்குப் பார்ப்பம்” என்றவாறு வெளியில் வந்தார்.

வெய்யில் இன்னும் வாட்டிக்கொண்டுதான் இருந்தது. தயாவின் கராஜுக்கு இங்கிருந்து உள்ள தூரம் இரண்டுங் கெட்டான் – நடப்பதற்கு அதிகம், ஓட்டோக்காரர் ஒப்புக்கொள்ள மறுக்கும் அளவுக்குக் கிட்ட! எதிர் வெய்யில் முகத்தை எரித்தது: பார்வை யைக் கூசப் பண்ணியது…

இன்று இந்த வேலையும் கூடச் சரிவரவில்லை …..

தண்டவாளம் இருந்த இடத்தைத் தாண்டும்போது, பின்னால் இருந்துவந்த ஒரு மோட்டார் சைக்கிள் பக்கத்தில் நின்றது.

“ஏன் நடந்து போறியள்?” செல்வா! “ஏறுங்கோ” என்றார். தலைவலி இப்போ விட்டிருந்தது.

தயா ஆயத்தமாகத்தான் வைத்திருந்தான். எடுத்து ஒரு வட்டம் அடித்துப் பார்த்தார். “சரி தயா.” சொன்னதுக்கு மேல் ஐம்பது வைத்தார்.

“வேண்டாம் சேர்”

“வைச்சிரும்” என்றார், வேண்டுகோள் போல. சொல்லிக் கொண்டே வெளிக்கிட்ட போது நாலரை.

வழியில் மனம் கணக்குப் பார்த்தது. பல்ஸர் ஐநூறு , கூலி நூற்றைம்பது, ஓட்டோ நூற்றைம்பது. எண்ணூறு ரூபாய். நாலு மணி நேரம். இரண்டு வகுப்புக்கள்….

இந்த அலுப்புக் களைப்பு எல்லாவற்றையும் அள்ளி ஊற்றுந் தண்ணீரில் கழுவ வேண்டும்….

வீட்டின் நேரே முன்னால் இருந்த கோயிலடியில் இறங்கினார். தெரு வழமைக்கு மாறாக அமைதியாய் இருந்தது. செருப்பைக் கழற்றும் போதே,

“நாங்களும் கும்பிட்டுப் போவம் ” என்ற குரல் கேட்டது. நாலு பையன்களும் இரண்டு பெண்களுமாய்…. ஏழெட்டு வயதுக்குள் தானிருக்கும் எல்லோருக்கும்.

போட்டி போட்டுக்கொண்டு புத்தகக் கட்டுக்களைப் பொத்துப் பொத்தென்று கோவிலின் முன் வைத்தார்கள்.

“அப்பனே, பிள்ளையாரப்பா!” கையிரண்டையும் தலைக்குமேல் உயர்த்தியது ஒரு சின்னன்.

இந்த விளிப்பு சினிமாவின் தாக்கம் என அவர் நினைத்த போதே….

“பிள்ளையாரில்லை! வைரவர்!” ஒற்றைப் பின்னல்காரி அதட்டினாள்.

“வைரவரப்பா”

“வைரவரப்பா…” ஒவ்வொருவராய்க் கும்பிட்டார்கள். ஆளையாள் பார்த்து “சரி வாங்கோ” என்று புறப்பட்டார்கள். வழி விட்டு மெல்லிய புன்சிரிப்புடன் விலகி நின்றார்.

“வணக்கம், ஐயா!” ஒட்ட வெட்டிய முடியும் பெரிய கண்களு மாய் நின்றவன் அண்ணாந்து உசாராய்க் கூறினான்.

“வணக்கம், வணக்கம்” சிரித்தவாறே செருப்பை மாட்டினார். “குட்மோனிங் சேர்”, நீலச்சட்டைப் பையன் சொன்னான். “மோணிங் இல்லையடா!” அதட்டியது அதே ஒற்றைப் பின்னல். “குடாஃப்ரனூன்!” இன்னொருவன் இடையில். “போடா!” பின்னல்காரி கீச்சிட்டாள். “குட் ஈவினிங்”

தன்னைச் சுற்றி நடந்த வாதங்களுக்குள் அகப்பட்டு சிரித்த வாறே நின்றார், அவர்.

“ஐயாவையே கேப்பம்” இரண்டாவதாய் பேசியவன் ஆலோசனை சொன்னான்.

“ஐயா சொல்லுங்கோ”

“ஐயா சொல்லுங்கோ”

“குட்மோணிங் தானே?”

“குடாஃப்ரனூன் தானே? என்னையா?”

‘குட்ஈவினிங்காரி’ ஒன்றும் பேசவில்லை .

“பொறுங்கோ, பொறுங்கோ சொல்லுறன்” கையமர்த்தினார்.

என்னை எங்கே கண்டிருப்பார்கள் இவர்கள்? எப்படி வந்தது இவ்வளவு நெருக்கம்? வியப்பும், மகிழ்வும் வந்தபோதே இவர்களை இதுநாள்வரை கவனிக்காமல் – காணாமல் கூட இருந்துவிட்டேன் என்று இரண்டு கவலைகளும் கூடவே எழுந்தன. இன்றைக்கு மூன்றாவது தோல்வி? சிறியவைதான் எனினும்….

“சொல்லுங்கோவன், ஐயா?”

“குட்மோணிங் எண்டு காலையிலதான் சொல்ல வேணும்.” ஆதரவாகச் சிரித்தார்.

“பாத்தியோ”

“அப்ப, குடாஃப்ரனூன் தானே ஐயா”

“சொல்லலாம்தான். ஆனால், அது பின்னேரம் நாலு நாலரை மட்டும்தான். அதுக்குப் பிறகு குட்ஈவினிங்தான் சரி”

பின்னல்காரி, ஓசை எழாமல் கைதட்டியபடி துள்ளினாள். அவள் முதுகைத் தட்டியபடி சிரித்தாள் அவள் தோழி.

“இப்ப எத்தினை மணி?” ஆஃப்ரனூன்காரன் அப்பீல் செய்தான். ஆள் பரவாயில்லை .

“அஞ்சு மணியாகுது” சிரித்தபடி சொன்னார்.

“பாத்தியா?”

“பழைய நேரமோ? புதிய நேரமோ?”

மேன்முறையீட்டுக்காரன் விடுவதாய் இல்லை.

“எப்படிப் பார்த்தாலும் நாலுக்கு மேலதானே!” பெண்கள் கலகலவெனச் சிரித்தார்கள்.

அவருக்கு சந்தோஷம் சிரிப்பாய் வந்தது.

“மணிக்கூடு பார்த்துச் சொல்லத் தேவையில்லை…… இப்ப எப்பிடியும் பொழுதுபடுகுது தானே!”, எல்லோருக்கும் சமாதான மாய்ச் சொன்னார்.

“சரி ஐயா போட்டு வாறம்…”

“போட்டு வாறம் ஐயா….”

“குட் ஈவினிங்”

“வாறம் ஐயா”

சிரித்தபடி பைக்கைத் தள்ளிக்கொண்டு நடந்தார். படலையைத் திறந்துகொண்டு உள்ளே போய் முற்றத்தில் நிறுத்திய போது, எதிரே திண்ணையில் பார்த்தபடி நின்றார் அவர் மனைவி.

“என்ன வலு சந்தோஷமாய்க் கிடக்கு, என்ன விசேசம் இண்டைக்கு?”

“வாகன சுகம்” என்றார் சிரிப்பு மாறாமலேயே.

– 01-10-2004, நமது ஈழநாடு

– கனகசெந்தி கதாவிருது பெற்ற சிறுகதைகள், முதற் பதிப்பு: 21-07-2008, தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான், மீரா பதிப்பகம், கொழும்பு.

ஐயாத்துரை சாந்தன் ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவர். மொழிபெயர்ப்பிலும் உலக எழுத்தாளர்களைத் தமிழில் அறிமுகம் செய்வதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 27 நூல்களை எழுதியிருக்கிறார். இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார். யாழ்ப்பாண மாவட்டம், மானிப்பாய், சுதுமலை என்ற ஊரில் வசித்து வரும் சாந்தன் மொறட்டுவ உயர்தொழில் நுட்பவியல் கழகத்தில் பயின்ற குடிசார் பொறியியலாளர். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழி எழுத்தாளர். ஆங்கில…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *