மீண்டு வந்த தோடி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 26, 2021
பார்வையிட்டோர்: 4,784 
 

அந்த அதிகாலை வேளையில் முள்ளியாற்றின் கரையில் படபடப்போடு காத்திருந்தான், ஏகலைவன்!

சலசலவென ஓடிக்கொண்டிருக்கும் முள்ளியாற்றுக்கோ அளப்பரியா சந்தோஷம்.

இரண்டுக்கும் ஒரே காரணம் தான்.

ஆம், டி.என்.ராஜரத்தினம் பிள்ளை!

இசையை ரசிக்காத ஜீவன்கள் இந்த உலகத்தில் இருக்க முடியுமா என்ன?

அதுவும் தோடி ராகம் புகழ் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை என்றால், ஜில்லா அத்தனையும் அவர் முன் கை கட்டி நிற்குமே!

தோடியும் பிள்ளை அவர்களையும் பிரித்துப் பார்க்க முடியுமா?

பிள்ளை அவர்கள் தோடி ராகத்தால் புகழின் உச்சம் தொட்டவர். பிள்ளை அவர்களால் தோடியின் இனிமை கூடியது.

ராஜரத்தினம் பிள்ளைக்கு வாழ்க்கை முழுவதுமே ஆரோகணம்! சென்ற இடமெல்லாம் சிறப்பு!

அவர் கச்சேரிகளில் பாடும் போது மேடை போட்டு மிடுக்காக அமர்ந்து கொண்டு தான் நாதஸ்வரம் வாசிப்பார்.

நிற்காத ரயில் வண்டியும் அவரது ஊரில் நின்று சென்றதும், இருளில் மூழ்கிக் கிடந்த ஊர் மின் விளக்குகளால் வெளிச்சம் பெற்றதும், பிள்ளை அவர்கள் வரும் போது கலெக்டரையும் எழுந்து நிற்கச் செய்ததும், மைசூர் மகாராஜாவே பணிந்து சென்றதும் எல்லாத்துக்கும் தோடி தான் காரணம் என்றால் நம்புவீர்களா?

நம்பினான், ஏகலைவன்!

நாகபட்டிணத்தில் ஒரு சாதாரண நாதஸ்வர வித்வான். அவனது வாசிப்பில் அபஸ்வரம்! ஆனாலும் வேஷத்தில் ராஜரத்தினம் பிள்ளை அவர்களை அப்படியே பின்பற்ற வெறித்தனம் கொண்டு பிள்ளையைப் போன்றே குடுமி வைத்துக் கொண்டான். தலையில் கிராப் வைத்துக் கொண்டான். காதுகளில் கடுக்கன் மாட்டிக் கொண்டான். டால் வீசும் மோதிரங்கள். ஏகலைவன், அண்ணாச்சியை மனதிலே வச்சுக்கிட்டு இரவு பகலாக பல மாதங்களாக சாதகம் செய்யத் தொடங்கினான்.

டி.என்.ராஜரத்தினம் பிள்ளையைப் போன்று நானும் தோடியின் புகழை நிலை நிறுத்துவேன். நானும் புகழ் அடைவேன் என்கிற தீரா வைராக்கியத்தை தன் நெஞ்சில் கொண்டான். ஏகலைவன்!

இன்று பிள்ளை அவர்களை நேரில் சந்திக்கவும் துணிவு கொண்டான்.

ஏகலைவனுக்கு ஒரு புறம் சந்தோஷம்! தனது மானசீக குருவை நேரில் சந்திப்பதில். இன்னோரு புறம் பயம். அவர் பயங்கர கோபக்காரர் என்று கேள்விப்பட்டிருக்கிறான். ஒருவாறு மனதைத் திடப்படுத்திக் கொண்டு ஆற்றின் கரையில் காத்திருந்தான்.

கோமாலப்பேட்டை சாமி புறப்பாடுக்கு வந்திருக்கும் பிள்ளை, முள்ளியாற்றுத் தண்ணீரில் தன் தேகம் குளிர்ந்து, சிரசு தொட்டு முங்கி எழும்போது, வெண்ணிற அன்னம் தன் செந்நிற அலகால் நீர் அருந்தும் போது பொன்னிறம் பூண்டு ஜொலிக்கும் நீர்நிலை போன்று முள்ளியாறு இப்போது உருமாறியது.

கழுத்தளவு தண்ணீரில் நின்று கொண்டு ” ததரினனா ” பாட ஆரம்பித்தார்.

முள்ளியாறு மட்டுமன்றி முள்ளியாற்று கரையோரம் படர்ந்திருந்த செடி கொடி மரம் இலை தழைகள் எல்லாமும் மயக்கம் கொண்டு பிள்ளையின் ராகத்திற்கு தகுந்தபடி தலையாட்டியது!

புல்லினங்கள் கரையாமலும், கரையோர பூவினங்கள் இதழ் விரிக்காமலும் பிள்ளையின் ராக இசையின் வசமாகின!

“என்ன பன்னுடுது ஜலத்தை தொட்டதும் பாட்டு வந்துடுது ” தனக்குத் தானே சொல்லிக் கொண்டு கரை ஏறினார், பிள்ளை.

அழுத்தமான வண்ணங்களில் தனது ஜரிகை மயமான பட்டு ஜிப்பா சகிதமும் கழுத்து முதல் பாதம் வரை ஜம்மென்று அணிந்து கொண்டார். தனக்குத் தானே மீண்டும் மீண்டும் சரிபார்த்துக் கொண்டு ” பலே ” என்று உடன் வந்திருந்த பக்க வாத்தியக்காரரை நோக்கி கேட்டுக் கொண்டார்.

பதிலுக்கு பக்க வாத்தியக்காரரும் ” பலே… பலே… ” என்று பதிலளிக்கவும் மனத் திருப்திக் கொண்டார், பிள்ளை.

வெற்றிலை சீவல் பன்னீர் புகையிலை சகிதமும் வாயில் போட்டுக் மென்று கொண்டே ” தத்ததரினனன ” ராகத்தோடு முணு முணுத்துக் கொண்டே முன்னே நடக்க எத்தனிக்கையில், பிள்ளையின் முன் தயங்கித் தயங்கி வந்து நின்றான், ஏகலைவன்.

“அண்ணாச்சி நமஸ்காரம் ”

“என்ன தம்பி, சவுக்கியமாயிருக்கியா?”

“இருக்கேன் அண்ணாச்சி, உங்க ஆசீர்வாதம்! ”

“அசப்பிலே பாத்தா என்னை மாதிரியே இருக்கே? என்னை மாதிரியே வாசிக்கிறாயாமே? கேள்விப்பட்டிருக்கேன். பேஷ் பேஷ், யாருக்கிட்டே பாடம்? ”

“உங்களையே குருவா மனசிலே வெச்சுக்கிட்டு சாதகம் செய்றேனுங்க”

“அப்படியா? பலே… பலே! ஆமா நீ என்னவோ ஆசாரிகிட்ட உன் வாத்தியத்த இன்னும் கொஞ்சம் நீளமா செய்யச் சொன்னயாமே? ”

“ஆமாங்க அண்ணாச்சி, மந்தர ஸ்தாயியை கொஞ்சம் அழுத்தமா பேச வைக்கலாம்னு ஒரு இஞ்ச் கூடுதலா பண்ணச் சொன்னேனுங்க ”

“வாசிப்பு எப்படி? ”

“ஏதோ என்னால முடிஞ்சளவு இசையை என் ஆத்மபலத்தோடு இரண்டறக் கலந்து மனோபலம் ஆத்மபலம் கொண்டிருக்கேனுங்க. உங்களோட ஆசிர்வாதம் எனக்கு உதவியா இருக்கும்னு நம்புறேனுங்க. நிச்சயம் உங்களப் போலவே வாசிப்பேன் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குண்டு ” மட மடவென்று இடைவெளி கொடுக்காமல் சொல்லி முடித்தான், ஏகலைவன்.

“பலே பலே … நாதஸ்வரம் வாசிக்கிறது அவ்வளவு லெசாப்போச்சு? என்ன செய்ய காலம் கலிகாலமா மாறிடுச்சுல்லையோ?”

கோமாலப்பேட்டை குக்கிராமம் மெல்ல மெல்ல கண் விழிக்கத் தொடங்கியிருந்தது.

நடுத்தெருவை தாண்டி சிறிது தூரம் வரை உரையாடிக்கொண்டே சென்ற பிள்ளை, கோமாலப்பேட்டை ஆலய பிரகாரத்திலிருந்த முருகன் சிலை கண்ணில் பட்டதும் சிலையாக நின்றார்.

ஒரு கணம் நின்று நிதானித்து தனது வலது கையை மேலே உயர்த்தியதும், ” ஐயா ” என்றவாறு பக்கவாத்தியக்காரர் பிள்ளையின் முன் ஓடி வந்து நின்றார்.

தனது நாதஸ்வரத்தை உடனே எடுத்து வரும்படி சைகையால் உத்தரவு பிறபித்தார்.

முருகப் பெருமானின் திருவடியில் தன் கண் பதித்தார், பிள்ளை.

முருகன் திருவடியின் பாத விரல்கள் பத்தும் தாமரை மலரின் இதழ்கள் போன்று காட்சியளிப்பது கண்டு மருங்கி நின்றார்.

பச்சை நிறப் பட்டால் திருமேனி அலங்கரிக்கப்பட்டு தலையில் சிவப்பு நிற கிரீடம் சூடி புன்னகை சிந்தும் திருமுகத்தில் சந்தனம் குங்குமம் தடவி பூமாலைகளால் அலங்கரித்து, அந்த ராஜ அலங்காரத்தில் ஜொலித்துக் கொண்டிருந்த முருகனை தரிசித்ததும் ராஜரத்தினம் பிள்ளையின் கண்களிலிருந்து கண்ணீர் முத்துக்கள் பொல பொல வென சொரிந்தன.

நாதஸ்வர சீவாளியை வெத்திலையால் சிவந்திருந்த பிள்ளையின் உதடுகள் படபடப்போடு ஸ்பரிசத்தன.

தன் சிந்தை மயங்கி தன்னையே இழந்து மனம் உருகினார்.

பிள்ளை தன் நாதஸ்வரத்தில் ஜீவனை உண்டு பண்ண எண்ணினார்.

நாதஸ்வரத்தை எடுத்து தோடி வாசிக்க முனைந்த போது ஏதோ நினைவுக்கு வர தயங்கி யோசனையில் ஆழ்ந்தார். தன் நண்பரிடம் தோடியைப் பாடமாட்டேன் என வாக்குக் கொடுத்திருந்தது ஞாபகத்துக்கு வந்து மனதில் சங்கடத்தை உண்டு பண்ணியது. உடனே, தோடியை விடுத்து சண்முகப்பிரியா ராகத்தை தொடுத்தார்.

மெய் சிலிர்த்து தன்னையே மறந்து ஆதி அந்தமற்ற நாத உபாசனையை முருகனுக்கு சமர்பித்த பிள்ளை, மெல்ல தன் கண்களை அசைத்துப் ஏகலைவன் பக்கமாக பார்த்தார்.

ஏகலைவன், பிள்ளையின் கண்களின் அசைவை புரிந்து கொண்டவனாய், தன் தோளில் தொங்கிக் கொண்டிருந்த நாதஸ்வரத்தை எடுத்து தோடியைத் தொட்டான்.

மேல் ஸ்தாய் பஞ்சமத்தை தொட்டு விட்டு, உடனே கீழேயிருந்து திரும்பவும் அதிவேகத்தில் பிர்க்கா அடித்து, மேலே மேலே ஏறி தைவத்தில் நின்று இனிமை நிறைத்து சௌக்கியம் பொருந்தி ராக ஆலாபனையில் வின்யாசம் செய்து முடித்ததும் மெல்ல கண்களை திறந்தான், ஏகலைவன்.

எதிரே நின்றிருந்த பிள்ளையின் கண்களில் நீர் கசிந்தது!.

“குருவே, என் வாசிப்பில் ஏதாவது அபஸ்வரம் ஏற்பட்டு விட்டதா? தவறேதும் நிகழ்ந்ததா? என்னை மன்னிச்சுடுங்க குருவே” என பிள்ளையின் காலில் விழுந்தான்.

பிள்ளையின் கண்களில் இன்னும் மலமல வென்று கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

“பலே பலே, எத்தகைய சிறப்பான சங்கீதம்! தோடியின் இனிமை கமகம் அடடா… பேஷ் பேஷ்… ” எண்ணி எண்ணி பெருமிதம் கொண்டு ஏகலைவனை எழுந்திருக்கச் சொன்னார்.

“ஏகலைவா! முருகப்பெருமானுக்கு என்னால தோடியை சமர்பிக்க முடியாம போயிருச்சேன்னு மனசுல கவலையா இருந்துச்சு. என் கவலையை தீத்துவெச்சுட்டே! நீ வாசிச்ச தோடி என்னை நெகிழச் செய்துடுத்து. எனக்கு ஆனந்தக் கண்ணீர். உன் வாசிப்பிற்கு ஈடு இணை ஏது? குயிலின் பாட்டு அது தங்கியிருக்கும் தோட்டத்துக்கு மட்டும் சொந்தம் இல்லன்னு உன் வாசிப்பில் சொல்லாம சொல்லிட்டேயே”

“ஏகலைவா! ஸ்தானத்தை பிடிக்கிறது அற்ப வெற்றி தான். நீ இதயத்தைப் பிடிச்சிட்டே! இது தான் மிகப் பெரிய வெற்றி! ”

“என் தோடி காலப்போக்குல மறையலாம். நீ வாசிக்கிறது என்றென்றும் நிலைச்சிடும்! ” உணர்ச்சிப் பெருக்கில் மனம்மாரப் பாராட்டினார்,

“ஏகலைவா, இன்னும் வாசி உன் நாதஸ்வரம் பேசட்டும். என் செவிகள் குளிரட்டும் ”

“மன்னிக்கவும் குருவே, இனி நான் தோடியைத் தொடப்போவது இல்லை. தோடியும் டி.என்.ராஜரத்தினம் பிள்ளையையும் பிரிக்க முடியாதுன்னு பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் வாசிக்கும் தோடி மிகச் சிறப்பானது. உங்கள் தோடிக்கான ரசிகர்கள் ஏராளம். காலத்தால் என்றென்றும் அழிக்க முடியாதது. அதுக்கு ஈடு இணை கிடையாது. இருக்கவும் கூடாது! ” என்று பாதம் பணிந்தான்.

டி.என்.ராஜரத்தினம் பிள்ளை மெய் சிலிர்த்துப்போனார்!.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *