மீண்டும் சிறை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 3, 2023
பார்வையிட்டோர்: 1,638 
 
 

(இந்த கதையின் ‘கரு’ சிறு வயதில் காமிக்ஸ்சில் படித்த ஞாபகம்)

கார்கோ என்னும் மிக சிறிய நாடு ! இயற்கை வளங்கள் நிறைந்தது. அதனால் எண்னற்ற சுற்றுலா பயணிகளால் கொழித்துக்கொண்டிருக்கும் நாடு. ஓட்டி இருக்கும் அமெரிக்காவின் பாதுகாப்பில் இருந்து கொண்டிருக்கும் நாடு. காரணம் அமெரிக்கா கடுமையான குற்றவாளிகளை ஆயுள் கைதிகளாக அங்குதான் அனுப்பி வைத்து பாதுகாக்கும்.

நல்ல இருட்டு ! நேரம் எப்படியும் மூன்று மணி இருக்கலாம் !

அந்த நகரின் நடுவில் ஒரு “ட்ரக்” வந்து நின்றது. அதிலிருந்து இருபது பேர் கொண்ட கும்பல இறங்கியது. அவர்களின் கையில் ஏ,கே.நாற்பத்தி ஏழு ரக துப்பாக்கி இருந்தது.

இறங்கிய அவர்கள் ஒரு இராணுவ சிப்பாய்களின் அணிவகுப்பு போல் வரிசையாக நின்றனர். திடீரென்று அந்த “ட்ரக்கிலிருந்து” ஒரு குரல் ‘தாக்குங்கள்’. ஒரு இடம் கூட விடக்கூடாது. அனைத்தும் தவிடு பொடியாக வேண்டும்..

அவ்வளவுதான் அனைவரின் கையிலிருந்த துப்பாக்கியிலிருந்து தோட்டாக்கள் பறக்க ஆரம்பித்தன. கண்ணில் கண்ட பொருட்கள் எதையும் விடவில்லை. அனைத்தும் துப்பாக்கி தோட்டாக்களால் துளைக்கப்பட்டு சிதறி சின்னா பின்னாமாகின். பாதையின் ஓரத்தில் இருந்த அனைத்து கடைகளின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டு நாசப்படுத்தபட்டன. அங்கங்கு உறங்கிக்கொண்டிருந்த நபர்கள் நடு நடுங்கி அப்படியே படுத்து தங்களை காப்பாற்றிக்கொண்டனர்.

தொடர்ந்து அரை மணி நேரம் மழை பொழிவது போல் சீறிக்கொண்டிருந்த தோட்டாக்கள் ஓய்வு பெற ட்ரக்கிலிருந்து ஒரு குரல் அனைவரும் வாருங்கள். அவ்வளவுதான், சுட்டுக்கொண்டிருந்த இருபது பேரும் இராணுவ நடை நடந்து ட்ரக்குக்குள் ஏற ட்ரக் கிளம்பியது.

மறு நாள் காலை, அந்த நகரமே அல்லோகலப் பட்டுக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட நூறு கோடிக்கு அளவுக்கு மேல் அங்கிருந்த பொருட்கள் சேதமாகியிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டது. சுமார் ஐநூறு மீட்டர் தூரம் இரு பக்கமும் இருந்த அனைத்து வீடு, கடைகள் தோட்டாக்களால் துளைக்கப்ப்ட்டு நாசப்படுத்தப்பட்டிருந்தன.

காவல் கட்டுப்பாட்டு துறை அலுவலகம் !

அந்த நகரின் அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளால் நிரப்ப்பட்டு, யார் செய்தது? என்ன காரணம்? எதற்கு இவ்வளவு நாசம் விளைவித்தார்கள்? இந்த கேள்வி அவர்களிடமிருந்து மட்டுமல்ல, அங்கிருந்த அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும், செய்தி பத்திரிக்கைகளிலும் விவாதிக்கப்பட்டு பேசும் பொருளாகியிருந்தன.

இப்போதைக்கு மகிழ்ந்து கொள்ள ஒரு செய்தி ! யாருக்கும் உயிர் சேதம் இல்லை. இதிலிருந்து வந்தவர்களின் நோக்கம் சுற்றியுள்ள பொருட்களை நாசம் செய்வது மட்டுமே, மற்றபடி அவர்கள் ஏன் செய்தார்கள்? எதற்கு செய்தார்கள் என்பது பெரிய கேள்விக்குறி !

ஒரு வாரம் ஓடியிருந்தது, “சிகிலி” நகரம் தூங்கி வழிந்து கொண்டிருந்தது. விடியற்காலை மூன்று மணி இருக்கலாம், நகரின் நடு மையத்தில் ஒரு ‘ட்ரக்’ வந்து நிற்க அதிலிருந்து இருபது பேர் இறங்கினர்.அவர்கள் கையில் ஏ.கே. நாற்பத்து ஏழு ரக துப்பாக்கி, அதே போல் அவர்கள் இராணுவ வரிசையாக நடை நடந்து ஒரு இடத்தில் நிற்க அதே குரல் ‘தாக்குங்கள்’ட்ரக்கிலிருந்து ஒலிக்க…அவ்வளவுதான் இருபது பேரின் கையிலிருந்த துப்பாக்கியில் இருந்து தோட்டாக்கள் மழையாய் பொழிய அரை மணி நேரம் தோட்டாக்களின் இரைச்சல், சத்தம் ஓய அவர்கள் திரும்ப அதே ட்ரக்கில் ஏறினர். ட்ரக் கிளம்பியது..

மறுநாள் காலை அந்த நகரம் அல்லோகலப்பட போன வாரம் “பாகல்” நகரத்தில் நடந்தது போல “சிகிலி” நகரத்திலும் தாக்குதல். யார் இவர்கள்? அந்நிய சக்திகளா? தீவிர வாதிகளா? அவர்களுக்கு என்ன நோக்கம்? ஏன் நகரங்களை நாசம் செய்து கொண்டிருக்கிறார்கள்?

தலைநகர் ஜூஜூம்மாவில் இராணுவம், காவல்துறை, மற்றும் சிவில் நிர்வாகத்துறை இவைகளின் இரகசிய கூட்டம் நடைபெற்றது. என்ன நடக்கிறது? யார் இவர்கள்? இந்த கேள்வி அவர்களால் அலசப்பட்டு இறுதியாக அமெரிக்காவின் உளவுப்பிரிவிற்கு செய்தி கொண்டு செல்லப்பட்டது.

அமெரிக்க உளவுப்பிரிவிலிருந்து புகழ் பெற்ற “லாரன்ஸ் மற்றும் டேவிட்” வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு கார்கோ நாட்டில்ம் நடை பெறும் சம்பவங்கள் எடுத்துரைக்கப்பட்டது.

தலை ஹகரம் “ஜூஜூம்மாவில்” வந்து இறங்கிய லாரன்ஸ், டேவிட்டை வரவேற்க அந்த நகர தலைமை காவல் துறை.அதிகாரி காத்திருந்தார். அவர்கள் இருவரும் இராணுவ பாதுகாப்பு கொண்ட ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். ஒரு மணி நேரத்தில் இருவரும் கார்கோ நாட்டு பாதுகாப்பு குழுவிடம் பேசிக்கொண்டிருந்தனர்.

அலுவலக சுவற்றில் காங்கோ நாட்டு வரை படம் ஒட்டப்பட்டு “பாகல்” நகரத்தில் நடந்த தாக்குதல்களும், அடுத்து “சிசிலி” நகரத்தில் நடந்த தாக்குதல்களையும் இருவருக்கும் விளக்கப்பட்டன. இருவரும் ஆழ்ந்த யோசனையுடன் அதனை கவனித்துக் கொண்டிருந்தனர்.

மாலை நேரம் ! சுற்றுலா பயணிகளின் கூட்டம் அந்த இடத்தை சுற்றி இருக்க !

பிரபலமான ஹோட்டல் ஒன்றில் டேபிளில் அமர்ந்து சுவாரசியமாய் தேநீர் அருந்திக்கொண்டு இரு நகர தாக்குதல்களை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள், லாரன்சும், டேவிட்டும். மாலை நேரமாக இருந்ததால் சுற்றுலா பயணிகளின் கூட்டம், தங்குவதற்கும், காலி செய்து கொண்டும் பொழுது போக்காய் நடந்து கொண்டிருப்பவர்களுமாய் இருந்தது.

அங்கு வந்து நின்ற ஒரு காரிலிருந்து நான்கு பேர் இறங்கி லாரன்ஸ், டேவிட், இருவரை நோக்கி நடந்து வந்தனர். பேசிக்கொண்டே இருந்தாலும் லாரன்சின் கண்கள் சுழன்று கொண்டே இருந்ததால் இவர்களின் நடையும், பார்வையும் வித்தியாசம் தென்படவே சட்டென டேவிட்டின் தலையை இழுத்து கீழே தள்ளி தானும் விழுந்தார். இருவரும் சர சரவென ஊர்ந்து மறைவிடத்துக்குள் சென்றவர்கள் தங்களது துப்பாக்கியை தூக்கி சுடுவதற்கு முன் !

வந்திருந்த நால்வரின் கையிலும் துப்பாக்கி இருக்க அவைகள் சட சட்வென குண்டுகளை இரைய ஆரம்பித்தன. அங்கிருந்த அத்தனை கூட்டமும் அலறி அடித்துக்கொண்டு கீழே உருள ஆரம்பித்தன. இந்த வாய்ப்பில் லாரன்ஸ் டேவிட்டின் முதுகில் சைகையாய் வரைய அதை புரிந்து கொண்ட டேவிட் சட்டென உருண்டு எதிர்புறம் சென்றவர் திடீரென தன் துப்பாக்கியில் அவர்களுக்கு எதிர் தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தார். இப்பொழுது நால்வரும் சட்டென டேவிட்டின் தாக்குதலுக்கு பதில் கொடுக்க திரும்ப இந்த நொடி அவகாசம் போதுமானதாக லாரன்சுக்கு இருந்தது. சட்டென வெளியே வந்தவர் தனது துப்பாக்கியால் நால்வரையும் சுட்டு வீழ்த்தினார்.

டேவிட் அந்த உயர் போலீஸ் அதிகாரிகளிடம் இறந்தவர்கள் யார் என்று விசாரித்தீர்களா? கேட்கவும் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த “பைலை” டேவிட் கையில் கொடுத்தார்கள்.

கார்கோ நாட்டை சேர்ந்த இருவர், அமெரிக்க நாட்டை சேர்ந்த ஒருவன், ஐரீஸ் நாட்டை சேர்ந்த மற்றொருவன். நால்வரும் சிறைக்கைதிகளாய் ஒரே இடத்தில் இருந்தவர்கள்., நால்வருக்கும் விடுதலை ஆகி நான்கைந்து மாதங்கள்தான் ஆகியிருக்கிறது,.

இந்த தாக்குதலின் நோக்கம் என்ன?

கண்டிப்பாய் லாரன்ஸ், டேவிட்டை குறி வைத்துத்தான் தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். எதிராளிக்கு “தாங்கள் இருவரும்” இது விஷயமாக வந்திருப்பது தெரிந்திருக்கிறது. டேவிட் மெல்ல சிரித்தார். அவரின் சிரிப்பை கவனித்த லாரன்ஸ் என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தி பார்க்க இவர்கள் நால்வருக்குமே துப்பாக்கி சுடும் பயிற்சி குறைவு என்பதை கவனித்தாயா?

ஆம், தலையசைத்த லாரன்ஸ் நீ உருண்ட நொடியில் உன்னை சுட்டிருக்க முடியும், ‘நால்வரும்’ ஒரே நேரத்தில் உன்னை நோக்கி சுட ஆரம்பித்திருக்க கூடாது, சரிதானே.

சரிதான் தலையசைத்த டேவிட் சரி இவர்களுக்கும் அந்த தாக்குதல் நடத்தும் கும்பலுக்கும் என்ன சம்பந்தம்?

உதட்டை பிதுக்கி காட்டிய லாரன்ஸ் நால்வரும் ஒரே சிறையில் இருந்த கைதிகள், அவ்வளவுதான் நமக்கு கிடைத்திருக்கும் துப்பு..

நள்ளிரவு அந்த ஹோட்டல் அறையில் எதிர் எதிராய் உட்கார்ந்து கார்கோ நாட்டின் வரை படத்தை டேபிளின் மேல் வைத்து உரையாடிக்கொண்டிருந்தார்கள் டேவிட்டும், லாரன்சும் திடீரென முகம் பிரகாசமாக லாரன்ஸ் குதித்தார். டேவிட் நன்றாக கவனி

பாகல் நகரத்தின் சிறப்பு என்ன?

நல்ல இயற்கையான மலைகள், புல்வெளிகள், ஏரிகள், குளங்கள், அவ்வளவுதான், இன்னும் இருக்கிறது சொல்.

இன்னும் இன்னும். நல்ல நல்ல ஹோட்டல்கள், அப்புறம்..அப்புறம்..ம்…சொல்..இங்கு பழமையான கோட்டை ஒன்று இருக்கிறது.

யெஸ்..அந்த கோட்டை இப்பொழுது என்னவாக இருக்கிறது ?

டேவிட் சிரித்தாவாறு அது தெரிந்தது தானே சிறைச்சாலை இருக்கிறது..

குட்..அடுத்து சிசிலி அதில் என்ன இருக்கிறது கவனித்தாயா?

சிசிலியிலும் இதே போல கோட்டை ஒன்று இருக்கிறதே, அதுவும் ஜெயிலாகத்தான் இருக்கிறது. அப்படியானால் இப்படி வைத்துக்கொள். அடுத்து இந்த மாதிரி கோட்டைகள் வேறு எங்கு இருக்கிறது?

“பதேர்” “ப்க்சியா” “குடா”..இந்த மூன்று நகரங்களில் கூட கோட்டை இருக்கிறதே? அப்படியானால் அடுத்த தாக்குதல் அந்த நகரங்களில்தான் நடைபெறும் என்று தோன்றுகிறது.

நாம் இப்பொழுது செய்யவேண்டியது என்ன?

இப்பொழுது மணி என்ன?

மணி பனிரெண்டுக்கு மேல் ஆகிறது. சரி அவர்கள் தாக்குதலை எத்தனை மணிக்கு ஆரம்பிக்கிறார்கள். சரியாக மூன்று மணிக்கு ஆரம்பித்து அரை மணி நேரம் தாக்கிவிட்டு மறைந்து விடுகிறார்கள்.

குட் உடனே மூன்று நகரங்களின் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு போனை போடு, அவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நீயே சொல்லிவிடு

லாரன்சின் கட்டனையை ஏற்று டேவிட் போனை நோக்கி விரைந்தார்.

டேவிட் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று மனதுக்குள் தீர்மானித்து மூன்று நகரத்து காவல்துறை உயரதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். அவர்கள் எங்கெங்கு தாக்குதல் நட்த்த வாய்ப்பு என்பதை கணித்து அங்கு போலீஸ் படையை மறைவாக நிறுத்த சொன்னார்.

ஒரு வேளை அவர்கள் இன்று தாக்காவிட்டால்? இந்த கேள்வி அங்கிருந்து வரவும், புரிந்து கொள் எப்பொழுது வேண்டுமானாலும் தாக்கலாம், அதனால் இப்பொழுது முதல் உஷாராக இரு என்றுதான் உனக்கு சொல்கிறோம். கோபமாய் சொன்னார் டேவிட்.

டேவிட் விரைவாக ஹோட்டலை விட்டு இறங்கி தயாராக நின்ற காவல்துறை காரில் விமான படைத்தளம் சென்றவர் தயாராய் நின்ற ஹெலிகாப்டரில் ஏறி “பதோவை” நோக்கி செலுத்த சொன்னார்.

அதே நேரத்தில் லாரன்ஸ் தனது பயணத்தை பக்சியாவை நோக்கி ஆரம்பித்தார்.

இவர்கள் இருவரும் அங்கு செல்லுமுன் “குடாவில்” தாக்குதல் ஆரம்பித்து விட்டிருந்தது.

‘டேவிட்டுக்கு’ செய்தி பறக்க ஹெலிகாப்டரை ‘குடாவை’ நோக்கி திருப்பியவர் அந்த நகரத்தின் தாக்குதல் நடக்கும் இடத்தின் அருகிலேயே சென்று மேலே பறந்தபடி அங்கு எதிர் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த காவல்துறைக்கு உதவியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார்.

இதுவரை இருமுறை எதிர் தாக்குதலை சந்திக்காத ‘இவர்கள்’ இப்பொழுது எதிர் தாக்குதலை சந்திக்கவும் மிரண்டு ஓடி வந்து ட்ரக்குக்குள் ஏறி உட்கார்ந்து கொண்டனர். “ட்ரக்” இப்பொழுது கண் மண் தெரியாமல் ஓட ஆரம்பித்தது.

டேவிட் வந்த ஹெலிகாப்டர் வானத்தின் மேல் அமைதியாய் பறந்து அந்த “ட்ரக்”ன் பயணத்தை கண்காணித்தபடி தொடர்ந்து சென்றது.

மறு நாள் கார்கோ நகரின் தென்மேற்கே அமெரிக்க எல்லையை ஒட்டியுள்ள ஒரு மலைக்குகைக்குள் அந்த “ட்ரக்” கண்டு பிடிக்கப்பட்டு அங்கு மறைந்திருந்த இருபத்தி ஐந்து பேரை கைது செய்தனர். அவர்கள் பெரும்பாலும் நாற்பது அல்லது நாற்பது ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களாகவே இருந்தனர்.

கைது செய்தவர்களை விசாரிக்க, அவர்கள் அனைவருமே சிறையில் இருந்து வெளி வந்த கைதிகள் என தெரிந்தது. இவர்களுக்கு கட்டளையிடும் தலைமையாக செயல்பட்ட அமெரிக்கர் மூவரை கைது செய்தனர். அவர்கள் ஏறத்தாழ வயது முதிர்ந்தவர்களாக இருந்தனர்.

அவர்கள் தனிப்பட்ட முறையில் லாரன்ஸ் டேவிட்டிடம் தெரிவித்த பதில் “இந்த அரசாங்கம் எங்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்து கார்கோ நாட்டு சிறையில் தள்ளி விட்டது. எங்களுடைய இளமை வாழ்க்கை அனைத்தையும் இந்த சிறையிலேயே கழித்து விட்டோம். இதற்காக பழிக்கு பழி வாங்க காத்திருந்தோம். நாங்கள் மூவரும் விடுதலை ஆனவுடன் எங்களைப்போல கைதியாய் இருந்து வெளி வந்தவர்களை இங்கு கூட்டி வந்து எங்கள் படைகளில் சேர்த்து இந்த சமுகத்து அழகாய் இருப்பவைகளை, எல்லாவற்றையும் அதன் அலங்காரங்களையும் அழித்தோம்.

இருந்தும் இப்படி மாட்டிக்கொண்டு மீண்டும் சிறைக்கு செல்ல போகிறோம். என்று நினைக்கவில்லை. வேண்டாம்..தயவு செய்து இங்கேயே சுட்டு கொன்று

விடுங்கள். கதறினார்கள். நாங்கள் அளவு கடந்து சிறைச்சாலையில் வாழ்ந்து விட்டோம். எங்களுக்கு சிறைக்கு செல்ல விருப்பமில்லை…

அவர்களின் கதறலை கேட்ட லாரன்ஸ் துக்கம் நிறைந்த குரலில் நாம் என்ன செய்ய முடியும்? மீண்டும் சிறை என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தும் இதில் ஈடுபடாமல் இருந்திருக்க வேண்டும். பெருமூச்சுடன் சொன்னார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *