மினுக் மிட்டாய்கள் – ஒரு குளக்கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 2, 2023
பார்வையிட்டோர்: 2,323 
 
 

பின் மதிய வெயிலில் மினுக் மிட்டாய்கள் சுட்டுக் கொண்டிருந்தது குளம். வெயிலுக்கு ஒதுங்கிய நான் குளக்கரையில் குவிந்தேன். மர நிழலில் மன குழல் ஊத…மதியம் கூட பூக்கும் என்றறிந்தேன். 

மெல்லிய சிறுவன் கடைசி படியில் அமர்ந்து தூண்டில் இட்டுக் கொண்டிருந்தான். சத்யஜித் படத்தின் காட்சி போல கண்கள் வித்தை காட்டியது. வெயிலுக்கு விசிறி வீசும் குளக்கரை வட்டம் மனதுக்குள் நெட்டை எடுத்தது. பின்னிருந்த திட்டில் என்னில் இருந்து இறங்கி அமர்ந்து விட்டேன்.

பேச்சு கொடுக்க… அந்த சிறுவன் மூச்சில் அமைதி என்று ஜாடை செய்தான். இரண்டு நிமிட இடைவெளியில் மீன் மாட்டிய பிறகே பேசினான். நான் கேட்கும் கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை. பிறகு… அவன் பதிலுக்கு என் கேள்விகளை மாற்றிக் கொண்டேன். கெண்டை என்றான். சங்கு என்றான். பேசிக் கொண்டே இருப்பவன்… தூண்டில் நீருக்குள் மூழ்கிய நொடியில் தவம் இயற்ற ஆரம்பித்தது விடுவான். சீடனை போல வாய் மூடி அமர்ந்திருந்தாலும்… மனம் திறந்து கொண்டு கொண்டாட்டம் போட்டதைத் தான் இங்கே சொல்ல முற்படுகிறேன்.

ஒவ்வொரு மீனையும் மாட்டிய வேகத்தில் இன்னும் வேகமாய் மேல் நோக்கி தூண்டிலை தூக்கி பக்குவமாய் தூண்டில் முள்ளில் இருந்து மீனின் வாயை அகற்றுகையில்…கையில் மீன்… வழுக்க மட்டுமா செய்கிறது. வலுக்கவும் தான். உள்ளங்கையில் பலம் ஏந்தி…மீனை பின்னால் இருக்கும் கரையில் தூக்கி வீசுகிறான். அது துடிக்கிறது. அங்கும் இங்கும் துள்ளி நெடு நேரம் வரை மீண்டும் உயிரை பெற்று விட…. அது ஒரு பெரும் போராட்டம். அது தரைக்கும் சிறைக்குமான துள்ளிய வெற்றிடத்தின் மூச்சு உணரல். பேசாமல் மீனை தூக்கி மீண்டும் நீருக்குள் போட்டு விடலாமா என்று கூட தோன்றியது.

இன்னைக்கு ராத்திரி சாப்பாட்டுக்கு இது தான் என்றான். தோன்றலை மனம் விட்டது.

ஒரு மீனை பிடித்த வேகத்தில் மீண்டும் நீருக்குள் வீசி எறிந்தான். ஏன் என்றேன். அது குட்டி என்றான். சிறுவா நீ பெரியவா என்றேன்.

தரையில் துள்ளும் மீன்… துள்ளி துள்ளி நீருக்கருகே சென்று விட்டது. டேய் தம்பி… அது இப்ப தண்ணிக்குள்ள போய்டும் போல என்றேன். போகட்டும் என்றான். வாய்க்குள்ளேயே போதனையோ என்றேன்.

டேய்… ஒரு மீனை காக்கா தூக்கிட்டு போகுது என்றேன். போகட்டும் என்று ஒரு பக்க கன்னம் ஒதுக்கி விடு விடு என்பது போல பாவித்தான்.

ஒரு பெருச்சாளி ஒரு பொந்துக்குள் இருந்து வெளியே வந்து மண் அப்பி செத்து கிடந்த மீனை மோந்து பார்த்து மேய்ந்தது. நான் டேய்… டேய் என்று பதற… அந்த எலி வந்த வேகத்தில் பொந்துக்குள் நுழைந்து கொண்டது. அவன் ஸ்ஸ் என்று கண்கள் ஒளிர சொன்னது இதற்கு தானா என்று உணர்ந்தேன்.

ஒரு பாம்பு நீந்தியபடி அவன் அருகே வர…அசையும் நீரை அசையாமல் பார்த்தபடியே எனக்கு முன்னமே இன்னொரு ஸ்ஸ்… சத்தம் வராமல் காட்டி விட்டான். நான் கண்கள் நெளிய… நெற்றியில் வியர்வை சொட்ட… பார்க்க பார்க்கவே… கையில் இருக்கும் தூண்டிலை கொண்டு ஒரு போடு.

அடேய் என்பதற்குள்… மீன் வாசத்துக்கு மேல ஏறிடும்.. என்றான். என் பதற்றம் கண்டு…. செத்துருக்காது.. உள்ள வழியா அந்தாண்ட போயிடும் என்றான். ஓ அது செல்ல அடி போல… வந்த புன்னகையை வழுக்காமல் நிறுத்திக் கொண்டேன். சில போது வெறும் தூண்டிலை தூக்கி விட்டு… சிலதுங்க நல்லா சுதாரிப்பா இருக்குங்க… மாவ நைசா தின்னுட்டு முள்ளுல மாட்டாம தப்பிச்சிடுங்க என்றான். மீன் மொழி அறிந்தவன் போல. ஏனோ வெளிச்சம் விரிச்சு கிடந்த வான் நோக்க தோன்றியது.

சரியாக ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை ஒரு பூவாவது மரத்தில் இருந்து நீருக்குள் விழுந்து மிதக்க தொடங்குகிறது. ஒரு முறை சிவப்பு பூ… ஒரு முறை ஊதா… ஒரு முறை மஞ்சள்… பூக்களின் விடுதலை நீரில் முத்தமிட அது ஆலாபனை அதிர்வு. நான் பார்த்தவரை இரண்டு முறை அவன் தலையிலும்.. ஒரு முறை அவன் தோளிலும் கூட விழுந்தது. ஒரு முறை கூட அவன் தலையை தடவிக் கொள்ளவே இல்லை. தோளை உலுக்கிக் கொள்ளவும் இல்லை.

ஒரு கழுகு… தாழப் பறந்து வந்து… நீரை தொட்டு போனது. இன்னொரு முறை இன்னொரு கழுகு. இன்னொரு முறை நாரை போல.. என்று தான் நினைக்கிறேன். காக்கா… பறவை என்று அதனதன் விளையாட்டு அதனதற்கு. வாத்துகள் சில நீந்திக் கொண்டிருந்தன. அது வாத்து தானா என்ற சந்தேகத்தோடு…நீருக்குள் தலையை மட்டும் நீட்டியபடி நகரும்… என்னவோ ஒரு பறவை. 

மதிய நேர மௌனத்தை அசைத்துக் கொண்டே இருந்த குளத்தில் தான் எத்தனை எத்தனை தவங்கள்.கிளம்ப எழுந்து விட்டேன். சரி தம்பி பாப்போம் என்று காற்றுவாக்கில் சொல்லி விட்டு அங்கிருந்து நடந்த போது மீண்டும் திரும்பி பார்த்தேன். அவனை காணவில்லை. மினுக் மினுக் சப்தங்களோடு குளம் தனித்திருந்தது. எங்கே என்று ஒரு கணம் மனதில் மீன் துள்ளியது. ஒரு வேளை நீருக்குள் அவன் வீசி எறிந்த சிறு மீன் தானோ அவன். நீருக்குள் நீந்த சென்றிருப்பானோ…. யோசித்துக் கொண்டே நகர்ந்த போது…. நானும் காணாமல் போனதாகவே நம்பினேன். சரி எங்கு போயிருப்பேன்.. அந்த காக்கா தூக்கி போன சற்று பெரிய மீனோ நான்… இருக்கலாம்….இருக்கலாம்…!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *