(1995 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கருக்கலைப் புணரும் காலைப் பொழுது. இரவு கவிந்த பனி, மொட்டை மாடியை நனைத்திருந்தது. மாடியில் நின்று சூழலை வெறித்ததில் நேரம் கரைந்தது. நெடிதுயர்ந்த பனைக ளும், சவுக்கும் எட்டி நின்று காற்றில் அசைந்தன. உயரத்தில் நின்று பார்த்ததால், ஊரின் நடுப்பகுதி தெளிவாய் தெரிந்தது. வயோதிபர் சிலரது பதுங்கிய நடமாட்டத்தை அதிகாலைத் தெரு அசிரத்தையுடன் ஏற்றது. இயற்கை உபத்திரத் தீர்வுக்காய் இந்த விடியலில், இவர்கள் ஆற்றோரப் பக்கம் நகர்கிறார்களா? அல்லது குளிருக்கு இதமாய் சூடாய் தேனீர் பருகிட கடைத்தெ ருப் பக்கம் போகிறார்களா?
தலையில் சுற்றிய முண்டாசும், பிருஷ்டத்தில் கட்டிய கைகளுமாய், உற்சாகம் தொலைத்த முகங்களுமாய் எங்குதான் செல்கிறார்கள். விடியலை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களே இவர்கள்தான். இரவை அர்த்தத்தோடு அனுபவித்த காலங்கள் , அந்நியமாகிப் போனதால், உதயத்தின் மீது இத்தனை. உவப்பா? கடந்த காலம் வீரியங்களை அள்ளிச் செல்ல, நிகழ்காலம் பலவீனங்களை நிர்பந்திக்க, வெறுமை இருப்பின் சலனங்கள், கானல் வரிகளாய் கண்சிமிட்ட…? இவை – இப்போது – இவர்களுக்கு, உடன்பாடற்ற சங்கதிகள் தான்! காலம் சில கனமான கோடுகளை, நிர்தாட்சண்யமாய் வயோதி பம் மீது வரைந்து களிக்கிறதே!
சூரிய ஒளி இன்னும் சுள்ளென்று உறைக்கவில்லை. ஒரு ஊமை நெருடலில் மனம் கிடந்து தவிக்கிறது. அதிகாலை அமைதியை மீறிக்கொண்டு, டி.எம்.எஸ்.ஸின் வெண்கலக் குரல், சாராயக் கடை ஒலிபெருக்கியிலிருந்து பீறிட்டது.
“ஓடும் மேகங்களே… ஒரு சொல் கேளீரோ! ‘சட்டைப் பையைத் தடவிப் பார்த்து சலிப்படைகிறேன் நான். விரல் நடுக்கம் தீர, விடியவே போய், கொஞ்சம் அண்ணார்ந்து பார்த்து விட்டு வரலாம், என்ற அவசியத்தினால் அல்ல. காலைச் சாப்பாட்டுக்கு ஒரு வழியுமில்லையே என்ற ஆதங்கத் தினால். நேற்றைய இரவின் உபவாச உறக்கம், வேறு உடலை வாட்டுகிறது. காசின்றி இன்றைய பொழுது எப்படிக் கழியும்? உடற்சோர்வும் பசியும், உடலை வாட்டுகிறது.
செல்வம் முதலாளி ஏன் இன்னும் வரவில்லை. நேற்றே வந்து விடுவதாகச் சொன்னாரே! எப்படியும் இன்று வரலாம். நம்பிக்கைச் சரடு இறுக, வழிமேல் விழி புதைக்கிறேன். பரிச்சயமற்ற முகங்கள், அந்நியமான ஊர், சிலவுக்கு காசு தீர்ந்துபோன நிலை, இவை பூதாகாரமான நிலை, இதை செல்வம் முதலாளி அறியாமலிருக்க நியாயமில்லை. அறை யில் மூலையில் கிடக்கும், தோள்பையை நிராசையுடன் வெறித்தேன். பெட்டிக்குள் சுருண்ட பாம்புகளாய் இருசோடி உடுப்புகள் இருந்தன.
செல்வம் முதலாளி என்னை இந்த ஆத்தூருக்கு கூட்டி வந்து நான்கு நாட்கள் இருக்கலாம். அதற்கு முன் அவரது இல்லத்தில், துறைமுக ஊரில், விருந்தாளி நான். அங்கெல் லாம் கொழும்புக்காரர்களை மோப்பம் பிடித்துத் திரிகிறார்கள், என்று, என்னை இந்த தூங்கு மூஞ்சி லாட்ஜில் அடைக்கல மாக்கி விட்டு, கொஞ்சம் பணமும் தந்து விட்டுப் போனவர் தான். மனுஷன் இன்னும் வந்த பாடில்லை.
“மச்சான்! அக்கரைக்குப் போயிட்டு வாரியா? பிளைட் சிலவு எல்லாம் தாறேன். கொஞ்சம் காசு அங்கு வர இருக்கு” என்ற வர்த்தக நண்பனின் வேண்டுகோளுக்கு தலையாட்டித் தொலைத்தேன். வந்து ஒரு மாதமாகிறது. விஷயம் இன்னும் கைகூடவில்லை . ‘கொஞ்சம் காசு வர இருக்கு,’ என்ற நண்ப னின் பரிபாஷை, ஐந்து இலக்கங்கொண்ட பல ஆயிரங்கள்.
‘வீட்டுக்கு துணிமணியெல்லாம் தாரேன் இருங்க, மொத் தக் காசையும் தந்து அனுப்புகிறேன். ஆறுதலா ஊருக்குப் போகலாம்!’ என்றார் செல்வம் முதலாளி. எனக்கொரு சந்தே கம், இவர் பிடவைக் கடை வைத்திருக்கிறாரா – அல்லது கூல் ஹவுஸ் வைத்திருக்கிறாரா என்று. என் தலையில் சதா ஐஸைக் கொட்டி காலத்தை விழுங்கிக் கொண்டிருந்தார். நேரம் செல்லச் செல்ல, மனதில் சந்தேகமும், வயிற்றில் உக்கிரப் பசியும் வாட்டித் துளைத்தது. ஒரு வேளை ஊருக்கு அவரைத் தேடிப்போவது என்றாலும் ஒரு பத்து நபாவாவது வேண் டுமே. யாரிடமாவது யாசகம் கேட்பதைத் தவிர எனக்கு வேறு வழி?’
“யாசிப்பவரை எனக்குப் பிடிப்பதில்லை . இவர்களது சுயநலத்திற்கு வறுமை ஒரு ஆயுதம். வாங்குவதே வாழ்க்கை என்றாகிவிட்டவருக்கு, பிறருக்கு கொடுக்கும் கருணை எப்படி வரும்? பிறருக்கு உதவி செய்யாதவன் மனிதநேயமில்லாதவன்!”
வைக்கம் பஷீரின் வாசகங்கள் நினைவை நெருடின. அவருடைய கூற்று எனக்கும் ஏற்புடையது தான். ஆனால், கடன், கைமாற்று, உதவி, போன்ற கௌரவ யாசகங்களில் சிக்கிக் கொள்ளாத இன்றைய மனிதன் எங்கிருக்கிறான்?
வாழ்க்கை எல்லாச் சமூகக் காரணிகளோடும் கை கோர்த் துக் கொள்கிறதே! ‘இனி பொறுப்பதற்கில்லை!’ அந்தராத்மா அலறித் துடிக்க, வயிறு உக்கிரமாகக் கொதிக்கிறது. பாதையில் வந்து நின்று, சுற்றம் பார்த்து, வள்ளல் தரிசனமொன்று கிட்டாதா? என்ற ஆவலில் அவலப்பட்டேன்.
ஆத்தூர் என்ற பெயர் இந்தக் கிராமத்திற்கு எவ்வளவு பொருத்தம். திரும்பும் இடமெல்லாம் தெய்வ சன்னிதிகள். ஊரின் நடுவே, வெண் துகிலுடுத்து, ஒய்யாரமாய் சயனித்துக் கிடக்கும் ஆறு. ஊரில் தகித்த வெய்யிலின் உஷ்ணத்தை தவிர்ப்பதில் இந்த ஆற்றுக்கு, பெரும் பங்குண்டு. இருகரைக ளிலும் ஆண்- பெண், பேதமின்றி குளிக்கும் கிராமத்தவர்கள். அண்ணாச்சி! சௌக்கியமா? என்ற பரஸ்பர குசல விசாரிப்பு கள். கரை ஓரமாக, உஸ் என்ற ஓசையோடு துணிகளை ஓங்கியறைந்து அழுக்ககற்றும் சலவைத் தொழிலாளி. அவனுக் குப் பக்கபலமாக கழுவிய துணிகளை உலரப் போடும் மனைவி.
இங்குள்ள கோயில்களில் திருவிழா, உபன்னியாசங்களுக் குப் பஞ்சமில்லை. நேற்று முன்தினம் வாரியாரின் அருளுரை, யேசுதாஸின் பக்தி பாடல்கள், சுவைத்துக் கேட்டதில் மனதில் மகிழ்ச்சி பொங்கியது. தற்போதையை கவலை வயிறு நிறைய வேண்டும் என்பதை. யாரிடம் கேட்பது? யாரைத் தெரியும் எனக்கு? பசி நெருப்பு கனன்று தகிக்கிறது. மயங்கிச் சோர்ந்த விழிகளுடன் கடைத்தெரு வழியாகத் தள்ளாடி நடக்கிறேன். அல்லாஹு… அக்பர்… அல்லாஹ்… அக்பர்!… குருதிநாளங்களில் குதூகலம் பரவ ஆச்சரியத்தால் அதிர்ந்து நிற்கிறேன்.
கடைத்தெருவுக்குப் பின்புறமமாக இருக்கும் பள்ளிவாச லிலிருந்து வந்த அதான் ஒலி அது. இங்கும் முஸ்லிம்கள் வாழ்கிறார்களா? நம்பவே முடியவில்லை என்னால். “கலாச் சார பேதமின்றி ஒரு மொழியைப் பேசுகிறவர்கள் ஒன்றுபடு வது எவ்வளவு உவப்பான சங்கதி…!” இங்கு, இவர், இன்னார், என்று சட்டென இனங்காணுவது கொஞ்சம் கஷ்டமான காரியம். இப்போது கொஞ்சம் நம்பிக்கையும் பிறக்கிறது. ‘தான் ஆடாவிட்டாலும், தன் சதை ஆடும், என்பார்களே!’ முயன்று பார்க்கலாம்.
அசருத் தொழுகைக்காக பள்ளி வாசலில் பஸார் புள்ளிகள் நிறைந்திருந்தார்கள். ஒழுச் செய்து விட்டு நடுங்கிக் கொண்டே தொழுகை முடித்தேன். இப்போது ஒரு ஆன்மீகச் சுகமும் உடலைத் தழுவியது. தொழுது தழும்பேறிய நெற்றி, தொப்பி யுடன், பலரின் அன்னியமான பார்வைகள், என்மீது படர்கின்றன. கருணை துலங்கும் ஒரு முக தரிசனத்திற்கான எனது தேடல் நீள்கிறது. புன்முறுவலையும், சலாத்தையும், அச்சார மாக்கிக் கொண்டு ஒருவரை அணுகி எனது நிலையினைக் கூறுகிறேன். “ஒரு வியாபார விஷயமாக வந்தேன். எதிர்பாரா மல் இப்படியாகிவிட்டது. கடுமையான பசி, துறைமுக ஊருக் குப் போகவேண்டும். இரண்டுக்குமாக ஒரு பத்து ரூபாய் நீங்கள் உதவி செய்தால், அல்லாஹ் உங்களுக்குப் பரக்கத் செய்வான்!” வேடிக்கை பார்க்கவென கூடிய கூட்டத்திலிருந்து எந்த அனுதாப வார்த்தைகளும் வரவேயில்லை.
கடுமையான முகத்தோற்றமுள்ள ஒரு வெள்ளைத் தாடி பெரியவர் உரத்த தொனியில் சொன்னார்.
‘இப்படி எவ்வளவோ பேர் வராங்க! காசெல்லாம் தரதுக்கு இல்ல! வேற இடம் பாருங்க!’
பெரியவர் முன்மொழிந்ததை, வழி மொழிவதைப் போல மற்றவர்கள், நழுவினர். பள்ளிவாசல் உட்புறமெங்கும் பளிச் சென துல்லியம் துலங்கியது. கிடுகிடா நடுங்கும் உடலைத் திடப்படுத்திக்கொண்டு பாதைக்கு வருகிறேன்.
நபிகளாரின் அருள் வாக்கு ஞாபகத்தில் தெறித்தன. “நன்மைகளில் எல்லாம் மேலானது, பிற மனிதனை நேசிப் பது. கொடைகளிலெல்லாம் மேலானது பசித்தவனுக்கு உண வளிப்பது!” பாதையில் ஒரு இளைஞனை எதிர்கொள்கிறேன். கூட்டுத்தொழுகையை (இமாம் ஜமாஅத்) தவற விட்ட அவச ரம் முகத்தில் தெரிகிறது. என் பஞ்சப் பாட்டின் படிம வரிகளை அவனிடம் ஒப்புவிக்கிறேன். அந்த முகத்தில் ஒரு அசாதாரண அக்கறை சுரக்கிறது.
“சரி! காக்கா! கவலைப்படாதீங்க, நான் உதவி செய்கி றேன். நீங்க பஸ் நிலையப் பக்கமாக போகும்போது ‘ஸ்டார். கபே, வரும். அது நம்மடைதான். அங்க போய் இருங்க. நான் தொழுதிட்டு வாறேன்” என் மனதில் பாலை வார்த்து விட்டு இளைஞன் இறையில்லத்திற்குள் சென்றான். ஸ்டார் கபேயை ஒருவாறு கண்டு பிடித்து விட்டேன். சிறிய கடைதான். ஆனால் வியாபாரம் களை கட்டுகிறது. கடையிலிருந்து வந்த முட்டை ரொட்டி வாசனை பெருங்குடலை ஏங்க வைத்தது. கடையின் உட்புறத்தை நோட்டமிட்ட எனக்கு மீண்டும் ஏமாற்றம். கெஷ்யரின் கடுமையான முகத்தோற்றம் கொண்ட முரட்டு ஆத்மா ஒன்று வேலையாட்களைத் திட்டித் தீர்த்துக் கொண்டி ருந்தார். முகச் சாயலைப் பார்த்தால், இவர் இளைஞனின் தந்தையாகவும் இருக்கலாம். எங்கே என்னுடைய காரியம் கைகூடாமல் போய்விடுமோ என்ற கவலை என்னை உறுத்தியது.
தலை கிறுகிறுத்துச் சுழல, பாதையோரத்து வாங்கில் சரிகிறேன். இளைஞனின் வருகையும், அதைத் தொடர்ந்து பெரியவரின் வெளியேற்றமும், மனதில் மீண்டும் புதிய நம்பிக்கைக்கு வித்திட்டது. ரொட்டி, கறி, நேந்திரப்பழம், டீ என்ற என் வயிற்று அக்னி தணித்தான். என் கைக்குள் இருபது ரூபாவைத் திணித்து விட்டு நேசத்தோடு பார்த்தான்.
“தம்பி! மிக்க நன்றி! நான் துறைமுக ஊருக்கு போயிட்டு வந்து உங்கட கடனை அடைப்பேன்!”
“காக்கா! திருப்பி வாங்கிறதுக்கு பெயர் உதவி இல்லை. ஊர் விட்டு ஊர் வந்த உங்களுக்கு ஒரு கஷ்டம். இதற்குக் கூட உதவாட்டி, நான் எப்படி ஒரு மனிசனா, இருக்க முடியும்?. சந்தோஷமா, போயிட்டு வாங்க”.
வயிறு நிறைந்ததில் உடலில் புது உற்சாகம் பிறந்தது. செல்வம் முதலாளியைக் கறுவிக் கொண்டே பஸ்ஸுக்குள் இருக்கையில் அமர்கிறேன். இப்போது ஆத்தூரின் வெய்யில் அவ்ளவு கடுமையாக உறைக்கவில்லை.
– 10.12.1995 – வீரகேசரி – மீறல்கள், மல்லிகைப் பந்தல் வெளியீடு, முதற்பதிப்பு: நவம்பர் 1996
– சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல