அது 1963 ம் வருடம்…
மதுரை மீனாட்ஷி அம்மன் கோயிலின் மிக அருகில் வெங்கடேச பவன் என்று மிகப் பிரபலமான ஒரு சிறிய ஹோட்டல் ஒன்று இருந்தது.
அந்த ஹோட்டலில் அனந்து என்கிற அனந்தராமன் சர்வர் வேலை செய்து கொண்டிருந்தார். ஐம்பத்தைந்து வயதானாலும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருக்கு அந்த ஹோட்டலில் மூன்று வேளை சாப்பாடு இலவசம். தவிர ஹோட்டலிலேயே இலவசமாகத் தங்கிக் கொள்ளலாம். மாதச் சம்பளம் ஐந்து ரூபாய்.
அவருக்குள் ஒரு தீராத ஆசை. சம்பளப் பணத்தை சேமித்து வைத்து எடுத்துக்கொண்டு ஒருமுறை காஞ்சிபுரம் சென்று மஹா பெரியவாளை நேரில் தரிசனம் செய்து ஆசீர்வாதம் பெற்றுத் திரும்பிவிட வேண்டும் இந்த ஆசை மட்டும் அவருக்குள் எப்போதும் கனன்று கொண்டேயிருந்தது.
ஆனால் மதுரையில் இருந்து காஞ்சிபுரத்திற்குப் போய், பெரியவாளை தரிசித்துவிட்டு வர, காலமும் நேரமும் இடம் தரவில்லை. அது அதற்கு நேரம் வரவேண்டும் போல என்று ஏங்கிக் காத்திருந்தார்.
அனந்துவுக்கு பக்தி ரொம்ப அதிகம். தினமும் அதிகாலையில் குளித்துவிட்டு ஆறு மணிக்கு அருகிலுள்ள மீனாட்ஷி அம்மனை தரிசனம் செய்துவிட்டுத்தான் ஏழு மணிக்கு ஹோட்டலைத் திறப்பார். இரவு ஒன்பது மணிவரை சுறுசுறுப்பாக இயங்குவார். வருகிற வாடிக்கையாளர்களிடம் மரியாதையாகப் பேசி அன்புடன் பரிமாறுவார்.
தினமும் மாலை நான்கு மணிக்கு சுடச்சுட தயாராகும் அக்காரவடசல் அந்த ஹோட்டலில் மிகப் பிரபலம். அக்காரவடசல், பூரிக் கிழங்கு காம்பினேஷனுக்காக மாலை நான்கு மணிக்கு அங்கு கூட்டம் அம்மும். வாசனை தூக்கும். அனந்து பரபரவென வந்திருக்கும் கூட்டத்தை அக்கறையுடன் கவனித்து அனுப்பும் அழகைக் காணக் கண்கோடி வேண்டும்.
பரம பக்தரான இவரது பக்திக்கு தீனி போடுவது போல, அந்த வருடம் மீனாட்ஷி அம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதுவும் காஞ்சிப் பெரியவர் தலைமையில்தான் கும்பாபிஷேகம் நடக்கப் போகிறதாம்… அனந்துவுக்கு இதில் ஏகப்பட்ட சந்தோஷம். ஆனால் தினமும் காலை அம்மனை நமஸ்கரித்து தரிசனம் செய்துவந்த அவருக்கு, கும்பாபிஷேக நாள் நெருங்க நெருங்க வைதீகக் கட்டுப்பாடுகள் அதிகமாகி, கெடுபிடி அதிகமானது. கும்பாபிஷேகத்திற்கு ஒருவாரம் முன்பிருந்தே பொதுமக்கள் உள்ளே செல்வதில் பல தடைகள் விதிக்கப்பட்டன.
அதில் நம் ஏழை சர்வர் அனந்தராமனும் ஏகத்திற்கும் பாதிக்கப்பட்டார்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்களே! கும்பாபிஷேகத்தையும் மனங் குளிரப் பார்த்து; மஹா பெரியவாளையும் தரிசனம் பண்ணப் போவதில் மனசு ரசித்து திளைக்கத் தொடங்கிவிட்டது.
ஆனால் கடுமையான கட்டுப்பாடுகளால் பெரியவாளை தரிசிப்பதும்; கும்பாபிஷேகத்தைக் கண்குளிர பார்ப்பதும், தன் வரையில் அசாத்தியமான விஷயம் என்பது புரிய ஆரம்பித்தது. மாசி வீதிகளில் ஏதாவது ஒரு வீட்டின் மாடிக்குச் சென்று பார்க்கலாம் என்றால் ஒரு ஹோட்டல் சர்வரை யார் மொட்டை மாடிக்கு அனுமதிப்பார்கள்?
இந்த நிலையில், முதல் நாளே கோயிலுக்குள் சென்றவர், பொற்றாமரைக் குளத்தின் படிகளில் பலபேர் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து இவரும் அவர்களுடனேயே உட்கார்ந்துகொண்டு விட்டார். குளத்தில் தண்ணீர் நிரம்பியிருந்தது. ஜில்லென்ற காற்று இதமாயிருந்தது. கண்களைக் கவர்ந்த விளக்கு வெளிச்சம் பிரமாதப் படுத்தியது. பொற்றாமரைக் குளம் வெளிச்சத்தில் மின்னியது. விடிய, விடிய கோயிலும் திறந்திருந்ததால் எவரையும் வெளியே துரத்தவில்லை.
ஆனால் பொற்றாமரைக் குளத்தின் படிகளில் அமர்ந்துகொண்டு என்ன சாதிக்க முடியும்? கண்ணுக்குத் தெரியும் தெற்கு கோபுரத்தை மட்டும் வேண்டுமானால் எட்டிப் பார்க்கலாம்…
குளத்தின் படிகளில் இவரைப் போன்ற பல ஏழை வைதீகப் பிராமணர்களும் அடக்கம். அவர்களின் நடுவே அனந்தராமன் சர்வருக்கு உண்டான அழுக்கு உடையுடன் வித்தியாசமாகக் காணப்பட்டார். காலை இரண்டு மணிக்கே குளத்தில் இறங்கிக் குளித்தார். ஈர வேட்டியுடன் மடியாக இருந்தார்.
இந்தக் கும்பாபிஷேக தரிசனமும், கூடவே பெரியவாளின் தரிசனமும் மட்டும் கிடைத்துவிட்டால், தனக்கு விமோசனம் கிடைத்த மாதிரி என்று எண்ணிக் கொண்டார்.
விடியற்காலை பிரம்ம முஹூர்த்த வேளை. அப்போது படிகளில் உட்கார்ந்திருந்த பலர் திடீரென எழுந்து நின்று மரியாதையுடன் வழிவிட்டனர். அங்கே சற்றும் எதிர்பாராத விதமாக மஹா பெரியவா படிகளில் மெதுவாக இறங்கி வந்து கொண்டிருந்தார். அவரோடு மடத்தைச் சேர்ந்த சிலர் பெரியவாளைச் சுற்றிப் பாதுகாப்பாக வந்தனர்.
சர்வர் அனந்தராமனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.
காஞ்சிக்குப் போய் தரிசனம் செய்ய வேண்டிய பெரியவா, இதோ எனக்கு மிக அருகில். அனந்துவுக்குப் புல்லரித்தது.
இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், கோயிலைச் சார்ந்த எவருக்கும் பெரியவா இப்படித் திடீரெனக் கிளம்பி வந்துவிட்டதே தெரியாது!!
அப்போது கோவில் நிர்வாகத் தலைவராக இருந்தவர் மறைந்த முன்னாள் அமைச்சர் பழனிவேல் ராஜனின் தந்தை பி.டி.ராஜன். அவர் தலைமையில்தான் அந்த கும்பாபிஷேகத்திற்கு எல்லா மடாதிபதிகளையும் அழைத்திருந்தார்கள். அதில் காஞ்சி பரமாச்சாரியாரும் ஒருவர். இதில் ஒரு மடாதிபதி மட்டும் தனக்கான முக்கியத்துவம் குறைந்து போகுமோ என்று கவலைப் பட்டிருக்கிறார். அவர் அப்படிக் கவலைப் பட்டது மஹா பெரியவர் கவனத்துக்கும் சென்றது.
ஆனால் பெரியவரோ, “தனக்கு எந்தவித முக்கியத்துவமும் தேவையில்லை. நடக்க இருப்பது ஆகம விதிப்படியான ஒரு தேவ காரியம். அதில் குறையில்லாமல் இருக்க வேண்டுமேயன்றி, என் போன்றவர்களில் யார் பெரியவர் சிறியவர் என்று கவனித்து அதன்படி நடப்பதெல்லாம் கூடாது” என்று பவ்யமாகக் கூறிவிட்டார்.
அப்படிக் கூறியதோடு மட்டும் நில்லாமல், எவருக்கும் சிரமம் தராதபடி, ஒரு பக்தன் தன் வீட்டைவிட்டு காலார நடந்து கோயிலுக்கு வருவது போல வந்தும் சேர்ந்துவிட்டார். அவருடைய இந்த எளிமையினால்தான் மஹா பெரியவா என்று பக்தர்கள் அவரை இன்றும் மரியாதையுடன் அழைக்கிறார்கள்…
அப்படி வந்தவரைத்தான் அனந்து போன்றவர்கள் கண் குளிர தரிசனம் செய்தனர். காலிலும் விழுந்து ஆசி பெற்றனர். தள்ளிப் போ; விலகிநில் என்று அதட்டவும் ஆளில்லை. மஹா பெரியவரும் தன்னைச் சுற்றி நின்றவர்களிடம் மிக சகஜமாகப் பேச ஆரம்பித்து விட்டார்.
பெரியவா கண்களில் ஒரு தேஜஸான ஒளி மின்னியது. சர்வர் அனந்துவைப் பார்த்துக் கனிவுடன், “என்ன உத்தியோகம்?” என்றார்.
“ஹோட்டலில் சர்வர் சுவாமி…”
பெரியவாளிடம் உடனே உற்சாகம்… “பசியாத்தற உத்தியோகமா? பலே பலே… உற்சாகமா பிரியத்தோட பண்ணு… நாம படற கஷ்டத்துக்கு திருப்தி உடனடியா கிடைக்கிறது இந்த உத்தியோகத்துல மட்டும்தான். நான் ஒருமுறை திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலுக்கு போனபோது அங்க இருக்கிற பார்த்தசாரதி ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டிருக்கேன்… உன்னோட ஹோட்டல்ல எந்த ஐட்டம் பிரசித்தம்?”
“அக்காரவடசல் சுவாமி…”
“அடிசக்கை, முடிந்தால் வருகிறேன்…”
சர்வர் அனந்துவுக்கு கண்களில் நீர் திரண்டு உடம்பு சிலிர்த்தது.
அதைவிட, சர்வர் என்னும் பதத்தை மிக அருமையாக ‘பசியாத்தற உத்தியோகமா?’ என்று மஹா பெரியவர் மொழி பெயர்த்ததில், தன் மேலேயே ஒரு மரியாதை கூடியது அனந்துவுக்கு…
பெரியவர் இப்படி சகஜமாய் பொற்றாமரை குளத்தங்கரையில் நின்றபடி பேசிக்கொண்டு இருப்பது மிகவும் தாமதமாய் பி.டி.ராஜனுக்குத் தெரியவர, ஆடிப்போய் விட்டார். மற்ற மடாதிபதிகள் எல்லாம் அவர்களுக்கான வாசல் வழியாக மேளதாளம் முழங்க வந்து இறங்கிவிட்ட நிலையில், பெரியவரைக் காணவில்லையே என்று தேடி அங்கேயே வந்துவிட்டார்.
அவசர அவசரமாக பெரியவரை பூர்ண கும்பத்துடன் தரிசனம் செய்து, கும்பாபிஷேகம் கோபுரம் நோக்கி மரியாதையுடன் அழைத்துச் செல்லத் தொடங்கினார். அந்த நொடிவரை பெரியவரோடு தங்களை மறந்து உரையாடிய அனந்து போன்ற சாமானியர்களுகெல்லாம் ஒரே திகைப்பு!
ஆனால் பெரியவரோ அந்தச் சாமானியர்களையும் தன்னைப் பின் தொடரச் சொன்னார். அவர்களும் ஆர்வத்துடன் பின் தொடர்ந்தனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு நடுவில் பெரியவருக்கு மட்டும் வழிவிட்டனர்.
பெரியவாளை ஒட்டியபடியே உடன் வந்த அனந்து போன்றவர்களுக்கும் பாதை கிடைத்தது. அதிகாரிகளால் எதுவும் செய்ய முடியவில்லை. அனந்துவும் பெரியவருடன் கும்பாபிஷேகக் கோயில் கூரை மேல் ஏறிச் சென்றார். ஜில்லென குளிர் காற்று அடித்தது. மஹா பெரியவர் தன்னை சொர்க்கத்துக்கே அழைத்துச் செல்வது போன்ற ஒரு பிரமை…
ஆனந்தக் கண்ணீர் அவர் கண்களில் பெருகி ஓடியது. இறை பக்தியுடன் அடி மனதில் இருந்து எழும்பும் பவித்ரமான ஆசைகள் நிச்சயம் ஒருநாள் ஈடேறும் என்பதை அனந்து அன்று அனுபவப் பூர்வமாகப் புரிந்து கொண்டார்.
ஹர ஹர சங்கரா என்னும் தெய்வீக கோஷம் ஓங்கி ஒலித்தது. அனந்துவுக்கு உடம்பு சிலிர்த்தது…