மனு சாஸ்திரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 30, 2021
பார்வையிட்டோர்: 4,523 
 

(இதற்கு முந்தைய ‘கிளியோபாட்ரா’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது).

மதுரை மருதன் இளநாகனார் பாடிய இன்னும் ஒரு பாடலில் பெண்ணின் கற்பு தெய்வத் தன்மை உடையது என்றும், அவள் பெறும் மகனால் குடி முழுதும் ஒளி பெறுகிறது (அகம் 184) என்றும் போற்றுகிறார்.

“கடவுட் கற்பொடு குடி விளக்காகிய புதல்வர் பயந்த புகழ்மிகு சிறப்பின்” என்பன அந்த வரிகள். இது மனுவின் கருத்தை எதிரொலிப்பதாக உள்ளது.

இந்தியாவின் முதல் ஜனாதிபதியாகிய ராஜேந்திர பிரசாத் நிகழ்த்திய சொற்பொழிவு ஒன்றில் “ஒரு பெண் கல்வி கற்றால், ஒரு தீபத்திலிருந்து ஆயிரம் தீபங்களை ஏற்றுவதைப் போல ஏராளமானோர் அறிவு பெறுவர்” என்று பேசியிருக்கிறார். இது எவ்வளவு உண்மை என்பதை மாவீரன் சிவாஜி, அஹிம்ஸா வீரர் காந்திஜி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தவர்களுக்கு நன்கு தெரியும்.

சிவாஜியின் தாய் ஜீஜாபாயும்; காந்திஜியின் தாய் புத்லிபாயும் சொன்ன பல புராண மற்றும் ராமாயண, மஹாபாரதக் கதைகள்தான் அவர்களை சமுதாயத் தலைவர்களாக உருவாக்கின.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும் பெண்ணின் ஞானத்தை விளக்கும் ஒரு அருமையான நிகழ்ச்சியைக் கூறுகிறார்.

ஒரு கணவன் மனைவி ஜோடி இல்லற வாழ்வை முடித்துக்கொண்டு வயதான காலத்தில் ‘வான ப்ரஸ்தாச்ரமம்’ புக விரும்பினார்கள். (கானக வாழ்க்கை). இருவரும் ஆசைகளைத் துறந்து காடு மேடுகளைக் கடந்து செல்கின்றனர். போகும் வழியில் மணலில் ஒரு வைரத்தோடு கிடக்கிறது. அதைப் பார்த்த கணவன் அவசர அவசரமாக காலால் மணலைக் கிளறி அதை மூட முயற்சி செய்கிறான். தன் மனைவி அதைப் பார்த்துவிட்டால் மீண்டும் ஆசை வயப்படுவாள் என்று எண்ணி அவன் அப்படிச் செய்தான்.

மனைவி, “என்ன செய்கிறீகள்?…” என்று கேட்டு அதைப் பார்த்து சிரித்தாள். அவளுக்கு ஞானம் அதிகம். கணவன் ஏன் அப்படிச் செய்கிறான் என்பது சொல்லாமலே அவளுக்கு விளங்கியது.

“என்ன கணவரே இன்னுமா உங்களுக்கு கல்லுக்கும் வைரக் கல்லுக்கும் வித்தியாசம் தெரிகிறது?” என்று வியந்தாள். இதனால்தான் ஞானம் வந்தவர்களுக்கு ‘மண்ணுக்கும் பொன்னுக்கும் வித்தியாசம் தெரியாது’ என்று இந்துக்கள் பாடி வைத்தனர்.

இதை கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் ‘சமலோஷ்டன காஞ்சனம்’ என்று இரண்டு இடங்களில் சொன்னார். ‘ஓடும் இரு நதியும் ஒன்றாகக் கண்டவர்கள்’ என்று தாயுமானவரும்; ‘கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார், ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்’ என்று சேக்கிழார் பெருமானும் கூறினர்.

இவ்வாறு பெண்ணுக்கு கூடுதல் ஞானம் இருப்பதை வைத்தே பாரதியும், ‘பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்’ என்றான்.

மனு சாஸ்திரம், “யார் நலம் பெற விரும்புகின்றனரோ, அவர்கள் எல்லாம் பெண்களை ஆராதிக்க வேண்டும். தந்தையர்; சகோதரர்; கணவன்; மைத்துனர் ஆகியோர் பெண்களை மரியாதையாக நடத்த வேண்டும்.” (மனு 3.54). “எங்கே பெண்கள் மதிக்கப் படுகிறார்களோ, அங்கே கடவுள் ஆனந்தம் அடைகிறார். எங்கே பெண்கள் மதிக்கப்படுவது இல்லையோ, அங்கே செய்யப்படும் புனிதச் சடங்குகள் பலன் இல்லாமல் போகும். (மனு 3.55); “உறவுக்காரப் பெண்கள் எங்கே கண்ணீர் வடிக்கின்றனரோ, அங்கே அந்தக் குடும்பம் அடியோடு நாசமாகும். எங்கே பெண்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அந்தக் குடும்பம் செழித்துத் தழைத்து ஓங்கி வளரும் (மனு 3.56). எந்த வீடுகளில் பெண்கள் சரியாக நடத்தப் படவில்லையோ அந்த இடங்களில் பெண்களின் சாபம், மந்திர மாயா ஜாலத்தில் பொருட்கள் மறைவதைப் போல வீடுகளை முற்றிலும் அழித்துவிடும். (மனு 3.57).

“எங்கே பெண்கள் பெருமைப் படுத்தப் படுகிறார்களோ, அங்கேதான் இறைவன் மகிழ்ச்சி அடைகிறான். எங்கே பெண்கள் பெருமைப் படுத்தப் படவில்லையோ அங்கே நடைபெறும் பூஜைகள் வீணாகப் போகும். (மனு 3.58; மஹாபாரதம் 13-4-5

ஒரு குரு (ஆசார்யா) பத்து ஆசிரியர்களை (உபாத்யாயா) விடச் சிறந்தவர்; ஒரு தந்தை நூறு குருக்களை விடச் சிறந்தவர்; ஆனால் ஒரு தாயோ ஆயிரம் தந்தையரைவிடச் சிறந்தவள். (மனு 2-145).

“ஆகையால் யாரெல்லாம் நலம் பெறவும், வளம் அடையவும் விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாம் பெண்களை விழாக் காலங்களிலும் விடுமுறைக் காலங்களிலும் ஆராதிக்க வேண்டும். துணிமணிகள், நகைகள், அறுசுவை உணவு படைத்துப் போற்ற வேண்டும். (மனு 3-59).

பெண்கள் பற்றி மனு கூறிய ஸ்லோகங்கள் பல அத்யாயங்களில் பரவிக் கிடப்பதைப் பார்க்கையில் அவர் மீண்டும் மீண்டும் பெண்கள் மீது அதிகமான கவனம் செலுத்தியது தெரிகிறது.

மனு தர்ம சாஸ்திரம் பெண்களுக்கு எதிரானது அல்ல. நாலாயிரம் ஸ்லோகங்களில் ஒரு ஸ்லோகத்தை மட்டுமே வைத்து ஒருவரை எடை போடுவதும் சரியல்ல. மேலும் மனு நீதியை வரிக்கு வரி அப்படியே பயன் படுத்தியதற்கான சான்றும் இல்லை.

பிராமணர்கள் கடல் கடந்து போகக்கூடாது என்று மனு சொல்லியிருக்கிறார். ஆயினும் இரண்டாவது நூற்றாண்டிலேயே அகஸ்தியர், கவுண்டின்யர் போன்ற பிராமணர்கள் கடல் கடந்து போய், தென் கிழக்கு நாடுகள் அனைத்திலும் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு இந்து மதக் கொடியைப் பறக்க விட்டனர். தமிழ்ப் பெண்கள் வெளிநாடு போகக்கூடாது என்று தொல்காப்பியர் தடை விதித்தார். ஆனால் இன்று தமிழ்ப் பெண்கள் வெளிநாட்டுக்கு அடிக்கடி பயணிப்பதில் முன்னணியில் இருப்பதைக் கண்கூடாகக் காண்கிறோம்.

மேலும் மனுவே தன்னுடைய நூல் பிரம்மாவர்த்தம் பகுதிக்கு மட்டுமே எழுதப் பட்டதாகவும், காலதேச வர்த்தமானம் ஆகியவற்றைப் பொறுத்து சட்டம் மாறுபடும் என்றும் சொல்கிறார்.

ஆக மொத்தத்தில் கூட்டிக் கழித்துப் பார்த்தோமானால் மனுவைப் போல பெண்களை ஆதரித்து எழுதிய பழங்கால நூல் எதுவுமே இல்லை என்று அடித்துப் பேசி, அடிக்கோடு இட்டு எழுதலாம்.

சாதாரணப் பெண்கள்கூட சுதந்திரமாகவும் வியாபாரத்தில் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருந்தனர் என்பது சங்ககாலப் பாடல்களில் இருந்து தெரிகிறது. காதலன் வராத நாட்களை சுவரில் கோடுபோட்டு எண்ணும் கணித அறிவு படைத்த பெண்களை பல பாடல்கள் வர்ணிக்கின்றன.

அவர்களுக்கு காலம் பற்றிய சிந்தனையும் கணிக்க வேண்டிய அவசியம் இருந்ததையும் இது காட்டுகிறது. தினமும் பால், தயிர் போன்ற பொருட்களை வீடுகளுக்கு வந்து பெண்கள் விற்பது சமீப காலம் ரை நடந்தது. அப்போதெல்லாம் சுவற்றில் வெற்றிலைக் காம்பால் கோடு போட்டு மாதம் தோறும் பணம் வழங்கும் வழக்கம் இருந்தது.

கடற்கரையில் நின்றுகொண்டு போகும் வரும் கப்பல்களையும் படகுகளையும் எண்ணும் சிறுமியரையும் சங்கப் பாடல்களில் காண்கிறோம். ஒருவேளை இதை அவர்கள் ஒரு விளையாட்டாக விளையாடி இருக்கலாம்.

பெண்கள் பாடுவதும் ஆடுவதும் உலகம் முழுதும் இருந்துள்ளது. அதில் வியப்பு ஏதும் இல்லை. நிறைய பாடல்களில் இது வருகிறது.

ஆனால் பூ வியாபாரம்; உப்பு வணிகம்; பால், மோர், தயிர், நெய், எண்ணை போன்றவைகளை விற்கும் பெண்களையும் காண்கிறோம். இவைகளுக்கெல்லாம் முத்தாய்ப்பு வைப்பது போல் ஒரு செய்தியை சங்ககால நூலான பெரும்பாணாற்றுப் படை (வரிகள் 154-165) அளிக்கிறது.

ஒரு ஆயர் மகள், அதாவது இடைக்குலப் பெண் தயிரிலிருந்து வெண்ணை கடைந்து எடுத்துவிட்டு மோரை விற்கிறாள். அவளே வெண்ணையைக் காய்ச்சி நெய்யாகவும் விற்கிறாள். அந்த நெய்க்கு பண்ட மாற்றாக பொற்காசு ஒன்றை ஒருவர் கொடுக்க முன் வருகிறார். ஆனால் அதை ஏற்க அவள் மறுக்கிறாள்.

‘பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்’ என்பது பழமொழி; தங்கம் என்றால் பெண்கள் சொக்கிப்போய் மயங்கி விடுவார்கள். ஆனால் இந்தப் பெண்ணோ எனக்கு பொற்காசு வேண்டாம். அதற்கு பதிலாக ஒரு எருமை, ஒரு பசு, ஒரு கன்றுக்குட்டி கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறாள். அந்த புத்திசாலிப் பெண்ணைக் கண்டு வியக்கிறோம். அவளுக்கு தங்கக்காசை வாங்கி நகை போட்டுக் கொள்வதைவிட, தன்னுடைய வருவாயை மறு முதலீடு செய்வதில் ஆர்வம் மிகுதியாக இருந்தது. அவளுடைய அறிவு இக்காலத்தில் எம்பிஏ எம்காம் படித்த பெண்ணுக்கு நிகர் என்று சொல்லத் தோன்றுகிறது… இதை விவரித்து ஒரு பாடலும் உள்ளது.

அந்தப் பெண் செய்யும் பண்டமாற்று வணிகத்தில் நெல் கிடக்கிறது. அதைக்கொண்டு தன் உற்றார் உறவினர்க்கெல்லாம் உணவிடுகிறாள் என்ற செய்தியும் அப்பாடலில் வருகிறது. ஆக தன்னுடைய சுய சம்பாத்தியத்தின் மூலம் ஒரு பெரிய குடும்பத்தையே நடத்திய புத்திசாலிப் பெண் அவள் என்பதையும் அறிகிறோம்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *