கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 2, 2019
பார்வையிட்டோர்: 23,764 
 
 

காலையிலிருந்து மொபைல் போன் அழைத்துக் கொண்டிருந்தது.

அது புதிய நம்பராக இருந்தது. இது நிச்சயம் நரேஷ் கிடையாது என்று எடுத்துப் பேசினான். ஓர் இளம் பெண்ணின் இனிய குரல் அவனுடைய தூக்கத்தை கலைத்தது.

‘‘ஸார், ரொம்ப நாளாக உங்ககிட்டே பேசணும்னு துடிச்சிட்டிருக்கேன். நான் உங்களுடைய தீவிர ரசிகை. நீங்கள் எழுதிய எல்லா நாவல்களையும் படித்திருக்கேன்.

எல்லாமே சூப்பர். யூ ஆர் கிரேட் ஸார். இன்றைக்கு எழுதுகிறவர்களிலேயே நீங்கள்தான் நம்பர் ஒன். இப்ப நீங்க எழுதிட்டிருக்கிற ‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’ தொடர்கதையை ஒரு அத்தியாயம் விடாம படித்துக் கொண்டிருக்கிறேன். அசத்துறிங்க ஸார்…’’ மூச்சுவிடாமல் பேசினாள்.

‘‘ரொம்ப நன்றி!’’

‘‘உங்களை ஒரு முறை… ஒரே ஒரு முறை நேரில் பார்க்கணும் ஸார். இதுவரை உங்க போட்டோவைக்கூட பார்த்தது கிடையாது. இவ்வளவு புகழ்பெற்ற பிறகும் பணிவுடன் இருக்கும் உங்கள் இயல்பு பிடித்திருக்கிறது. ப்ளீஸ் ஸார். உங்களைச் சந்திக்க ஒரு வாய்ப்பு கொடுங்க…’’ சக்கரவர்த்தி கொஞ்ச நேரம் யோசித்தான்.

இதுவரை ரசிகர்கள் என்று சொல்லி அவனை வயதானவர்கள் சந்தித்திருக்கிறார்கள். அதுவும் அவனுடைய கதைகளைப்பற்றிப் பேச ஆரம்பித்து பஸ் கட்டணம், பால் விலை, கரண்ட் பில் என்று பேசி கழுத்தறுப்பார்கள். இவளுடைய குரலைக் கேட்டாலே இசையைப் போல் இருக்கிறது.

பார்ப்பதற்கும் அழகாக இருக்கலாம். ஒரு முறை நேரில் பார்க்கலாம் என்று தோன்றியது.

‘‘உங்க பெயர்?’’

‘‘பிரியா!’’

‘‘ஓகே. பிரியா, அடுத்த வாரம் போன் பண்ணுங்க. இப்ப நான் ஒரு கூட்டத்திற்காக ஒரிசா போறேன். திரும்பி வர ஒரு வாரமாகும்…’’

‘‘தாங்க்ஸ் ஸார்…’’ என்று மகிழ்ந்தாள். அவளிடம் அப்படி பொய் சொல்லியிருக்கக்கூடாது என்று நினைத்தான் சக்கரவர்த்தி. ஒருவாரம் வரை பொறுத்திருக்க அவனால் முடியாது. அவனுக்கு பெரிதாக வேலையும் எதுவுமில்லை.

திருவல்லிக்கேணி மேன்ஷன் அறையை விட்டால் ஏதாவது சினிமா பார்க்க போவான். அதைவிட்டால் ஹோட்டல், பீச் என்று சுற்றுவான். அவ்வளவுதான். ஒரிசாவில் மீட்டிங்காவது!

அவன் கும்மிடிப்பூண்டியைத் தாண்டியது இல்லை.

தானும் அப்படி பொய் சொல்லியிருக்கக் கூடாது என்று நினைத்த பிரியாவும் சக்கரவர்த்தியை நேரில் பார்க்க தவித்துக் கொண்டிருந்தாள்.

ஒரு வாரம் என்பது அவளுக்கு ஒரு ஆயுளைப் போலத் தெரிந்தது. ஒவ்வொரு நாளையும் அவனை எண்ணியே கழித்தாள். தன்னை இன்னும் நினைத்துக் கொண்டிருப்பானா? இல்லை சுதாகர் என்கிற பெயரை சக்கரவர்த்தி என்று மாற்றிக் கொண்டவன் தன் மனதையும் ஒருவேளை மாற்றிக் கொண்டிருந்தால்…!

அவளை எப்படி அவனால் மறக்க முடியும்? அவள்தானே அவனது முதல் ரசிகை. கல்லூரியில் படிக்கும்பொழுது ‘மலர்ச்செண்டு’ என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தியபோது அதைப் படித்து அவள் பாராட்டியிருக்கிறாள். அதில் வரும் அவனது கதைகளைப் படித்து மகிழ்ந்து போவாள்.

ஒவ்வொரு படைப்பையும் படித்து முதல் ஆளாய் அவனைத் தேடிச் சென்று பாராட்டுவாள் பிரியா.

‘‘உங்களுடைய திறமையான எழுத்துக்கு நிச்சயமாக நல்ல எதிர்காலம் இருக்கு சுதாகர். பத்திரிகைகளில் உங்கள் கதைகள் வரும் நாள் தொலைவில் இல்லை…’’ என்பாள். ‘‘ரொம்ப நன்றி பிரியா. நான் எழுதிய நாவல்கள், தொடர்கதைகள், கையெழுத்துப் பிரதியாக இருக்கின்றன. அதைப் படிச்சிட்டு உங்க அபிப்பிராயம் சொன்னா நல்லது…’’ பிரியா சம்மதித்தாள்.

அவன் கொடுத்த படைப்புகளைப் படித்து இவனிடம் இவ்வளவு திறமையா என்ற பிரமித்துப் போனாள். ஒரு மனிதனைச் சிரிக்க வைக்கவும், அழவைக்கவும், அவர்களுடைய எண்ணங்களையே மாற்றிவிடும் வலிமையும் எழுத்திற்கு இருப்பதை உணர்ந்தாள்.

கையெழுத்துப் பிரதியை அவனிடம் திருப்பித் தந்தபோதுதான் முதல்முறையாக பிரியாவிடம் தனது காதலை அவன் சொன்னான்.

இன்ப அதிர்ச்சியில் என்ன சொல்வது என்று தெரியாமல் அங்கிருந்து நகர்ந்தாள். அவளுக்கும் அவனைப் பிடித்திருந்தது. அவனுடன் சேர்ந்து சுற்றத் தொடங்கினாள். இது அவளுடைய வீட்டிற்கும் தெரிந்தது. காதலையும், காய்ச்சலையும் மறைக்க முடியாது.

‘‘கதை, கவிதை எழுதுவது எல்லாம் படிக்க நல்லா இருக்கும் பிரியா… ஆனா, அதை வைத்து சம்பாதிக்க முடியாது…’’ என்றார் அரசு ஊழியரான அப்பா.

தன்னைப் போலவே ஓர் அரசு ஊழியனுக்கு அவளைக் கட்டிக் கொடுத்தால், அவள் சந்தோஷமாக வாழ்வாள் என்பது அவரது நினைப்பு.

‘‘பணம் மட்டும் வாழ்க்கையில்லை…’’ என்று மறுத்துப் பேசினாள். அப்பா கோபத்தின் உச்சிக்குச் சென்றார். அவரது கோபம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடும் என்று அப்போது அவள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

வெளிநாட்டில் பணிபுரிந்துகொண்டிருந்த தூரத்து சொந்தமான அருண்குமாருக்கு அவளை வலுக்கட்டாயமாகக் கட்டி வைத்தார். அவளுடைய படிப்பும் நின்றது. சென்னையிலிருந்த அருணுடைய வீட்டிற்குச் சென்றாள். அங்கிருந்து தபால் மூலம் படித்து முடித்தாள்.

நேரம் நிறைய இருந்தது. பள்ளிக்கூட பிள்ளைகளுக்கு டியூசன் எடுத்தாள். அருண் பெரும்பாலும் வெளிநாட்டிலேயே இருப்பான்.

எப்பொழுதாவதுதான் வருவான். அவள் மீது அவனுக்கு காதல் கிடையாது. வெறும் காமம் மட்டுமே. அது தீர்ந்ததும் அவளிடமிருந்து விலகிவிடுவான். எதுவும் பேசமாட்டான். அவசரப்பட்டு அப்பாவிடம் தன் காதலுக்காக சண்டை போட்ட தவறை உணர்ந்தாள்.

முதலில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பிறகு, தன் காதலை அவர் ஏற்கும்படி நடந்து கொண்டிருக்க வேண்டும்… பாவம் சுதாகர்… எப்படி துடிக்கிறானோ… அவனைப் பார்க்க ஆசைப்பட்டவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

பத்து வருடங்கள் ஓடிவிட்டன. எட்டு வயதில் பிரியாவிற்கு ஒரு மகளும் இருக்கிறாள். கடந்த ஒரு வருடமாகத்தான் சுதாகருடைய கதைகள், நாவல்கள் சக்கரவர்த்தி என்ற பெயரில் பத்திரிகைகளில் பிரசுரமாகி வருகின்றன.

புனைப் பெயரில் எழுதலாமே என்று அவள்தான் அவனுக்கு முதலில் யோசனை சொன்னாள். எல்லாம் அவள் எப்பொழுதோ படித்து ரசித்த கதைகள். ஆனால் மறக்க
முடியாத கதைகள். அவனைச் சந்திக்கப் புறப்பட்டபோது ஒரு முறை தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். இன்னும் அழகாகத்தான் இருக்கிறாள்.

அவனும் அப்படியே இருப்பானா..? ‘சுதாகர்’ என்று அழைத்தால் எப்படி சந்தோஷப்படுவான்… ஹோட்டலுக்குள் சென்றதும் சுதாகரைத் தேடினாள். அவனைக் காணவில்லை.

அவளை நோக்கி நடுத்தர வயதுள்ள ஒரு புதியவன் நெருங்கினான்.

‘‘ஹாய், நான்தான் சக்கரவர்த்தி…’’ அவள் அதிர்ந்துவிட்டாள்.

‘‘நீங்களா?’’

‘‘யெஸ் நான்தான் பிரபல எழுத்தாளன் சக்கரவர்த்தி.நீங்க இவ்வளவு அழகான எழுத்தாளரை எதிர்பார்க்கலையா?’’

பிரியாவுக்கு குமட்டலாக வந்தது. அழகா..? வழுக்கைத் தலையும், தொப்பையும், கீழே பேண்ட்டை அவன் இழுத்து விடுவதும், கறை படிந்த பற்களும்… யார் இந்த கோமாளி? இவனை சுதாகருடன் பார்த்திருக்கிறோம்.

அவனுடைய நண்பனல்லவா?

‘‘ஓகே பிரியா என்ன சாப்பிடறீங்க? ஆர்டர் கொடுத்துட்டு பேசுவோமே…’’ என்ற சக்கரவர்த்தி, சப்ளையரை அழைத்தான். அவரிடம் ஏதோ முணுமுணுத்துவிட்டு
பிரியாவைப் பார்த்துச் சிரித்தபடி

‘‘என் கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?’’ என்றான்.

‘‘உங்கள் கதைகளிலா? நீங்க கதைகூட எழுதுவீங்களா..?’’

சக்கரவர்த்திக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சிரித்தான்.

‘‘ஜோக்கிங்…’’ ‘

‘நோ… ஐ ஆம் சீரியஸ். சுதாகர் எங்கே?’’ பிரியா கேட்டதும் நிலைகுலைந்தான் சக்கரவர்த்தி.

‘‘யார் சுதாகர்?’’

‘‘இந்தக் கதைகளை உண்மையில் எழுதியவர்!’’

‘‘அதெல்லாம் கிடையாது. எல்லாம் நான் எழுதிய கதைதான்…’’

‘‘அப்படி நீங்க உலகத்தை ஏமாற்றலாம். என்னையில்லை. ஏன்னா சுதாகருடைய முதல் ரசிகை நான்தான். உண்மையை சொல்லுங்க…’’ சக்கரவர்த்தி பயந்து போனான்.

தன் முகத்தில் படர்ந்த வியர்வையை கைக்குட்டையால் துடைத்தான்.

‘‘அவன் இல்லை…’’

‘‘பொய்…’’

‘‘நிஜம். அவன் தற்கொலை செஞ்சு செத்துட்டான்… நீதான் அவனைக் கொன்ன…’’

‘‘நானா?’’

‘‘ஆமா…’’ பிரியாவுக்கு அழுகை வந்தது.

கட்டுப்படுத்திக் கொண்டவள் சட்டென்று எழுந்தாள்.

‘‘அவர் தன் எழுத்துக்கள் மூலமா வாழ்ந்துட்டுதான் இருக்கார். அதுக்கு நீங்கதான் காரணம். இந்த ரகசியம் நமக்குள்ள இருக்கட்டும்…’’

திரும்பிப் பார்க்காமல் வெளியேறினாள்.

சக்கரவர்த்தி அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

– மே 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *