பைத்தியங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 23, 2022
பார்வையிட்டோர்: 5,260 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“நான் இனிமேல் இந்த ஊரிலேயே இருக்கப் போவதில்லை. நான் பிறந்து வளர்ந்து, வாழ்ந்து வந்த இந்த ஊருக்கு நான் இனிமேலும் வடுவை தேடிவைக்க போவதில்லை. குழந்தைப் பருவத்தில் உருண்டு புரண்டு விளையாடிய மண்ணில் நான் இனிமேல் மிதிக்கப் போவதேயில்லை.

“என்னை நீங்கள் ஒரு பைத்தியக்காறணெண்டு நினைக்கலாம். நான் உண்மையிலை ஒரு பைத்தியக்காரன் தான். ஒரு பொருளிலை அளவுக்கு மீறி ஆசை வைத்து, அந்தப் பொருளையே நினைத்து, அந்தப் பொருளையே பேசி, அந்தப் பொருளையே மனதில் வைத்து வழிபட்டுக் கொண்டிருக்கிறவர்கள் எல்லோரும் பைத்தியக்காரர்கள் என்றால் நானும் பைத்தியக்காரன் தான்.

“நான் இந்த மண்ணில், எனது சொந்த ஊரில் இனிமேல் மிதிக்கப் போவதில்லை…?

சிறுவனாக இருந்த காலத்தில் என்னைப் போன்ற சிறுவர்களுடன் நான் விளையாடிய இடங்களையெல்லாம் நான் இனிமேல் பார்க்க முடியாது. பள்ளிக்கூடம் போகிறேன் என்று ஐயனார் கோவில் ஆலமரத்தடியில் ஏறி விளையாடிய விளையாட்டுகள்; பள்ளிக்கூடச் சுவரில் வாத் திமாரின் படங்களைக் கீறிவிட்ட சேட்டைகள், தலையாட்டித் தம்பரின் வளவில் இரகசியமாக புகுந்து மாங்காயும், விளாங்காயும் திருடித் தின்ற நினைவுகள், மாங்காயிலும், விளாங்காயிலும் மற்றவர்களுக்கு பங்கு கொடுப்பதற்காக அவற்றைக் குத்திய, சந்தியிலிருக்கும் சுமை தாங்கி…இவற்றையெல்லாம் நான் இனிமேல் மறந்துவிட வேண்டுமா? ஐயனார் கோவில் ஆலமரத்தையும், ஊரின் மத்தியில் அடக்கமாக இருக்கும் நான் படித்த பள்ளிக் கூடத்தையும் தலையாட்டித் தம்பரின் சோலை போன்ற வளவையும் எனது ஊரில் கலகலப்பான சந்தியில் சாந்த மாக நிமிர்ந்து நிற்கும் சுமைதாங்கியையும் நான் இனி மேல் காணமுடியாது. அந்தச் சுமைதாங்கியில் ஏறி என்னை மறந்த நினைவுகளில் நான் இனிமேல் இலயிக்க முடியாது?

“நான் இந்த ஊரை விட்டே செல்கிறேன்…?

“என்னை இந்த ஊரில் உள்ளவர்கள் பைத்தியம் என்கிறார்கள். நீங்களும் என்னைப் பைத்தியக்காரன் என்று தான் சொல்லுவீர்கள். உண்மையில் நானும் ஒருவகைப் பைத்தியக்காரன் தான், மற்றவர்களின் கவனத்தை ஈர்க் காத நிகழ்ச்சிகள் என் கவனத்தை ஈர்க்கின்றன. நான் அவற்றில் மூழ்கி என்னை மறந்து விடுவேன். ஆனால் எனது உல் நான் வளர்ந்த மண்ணில் நான் இருக்கும் போது தான் பைத்தியக்காரனாய் இருப்பேன். வேறு இடத்துக்குச் சென்றால்…?

அதைப் பற்றி நான் கற்பனை செய்து பார்த்ததே இல்லை.

எனது ஊரில் எனக்கு நல்லாய் பிடிச்ச இடம் ஒன்றே யொன்றுதான் அது தான். சந்தியிலிருக்கும் சுமைதாங்கி. இதில் உனக்கு ஏன் அளவற்ற பிடிப்பு என்று நீங்கள் கேட்கு முன்னரே நான் சொல்லுகிறேன்.

“நான் என்னை மறந்த நிலையில், எனது கற்பனாலோ கத்தில் சஞ்சரிக்கும் போது, அந்தச் சுமைதாங்கியிலேயே இருப்பேன். காலை, மாலை நேரங்களில் டாண்: டாண்: என்ற ஆலயமணி ஓசை என் காதில் ஏதோ வந்து ஓதும். அந்த ஒலி மெதுவாகக் கிளம்பி பரவி, ரீங்காரித்து….அதைப்பற்றி, வர்ணிக்க எனக்கு தெரியாது. ‘வாழ்க்கை என்பது ஒரு சோகமயமான கீதம் போன்றது’ என்று அந்த ஓசை எனக்கு சொல்லாமல் சொல்லும்.

“நான் பைத்தியக்காரன் தானே. நான் சொல்லு றதை நீங்கள் ஏன் கேட்கப் போறியள். நான் சொல்லுகிறதையெல்லாம் நீங்களும் கேட்டால், ஒரு வேளை நீங்களும் பைத்தியங்கள் ஆகலாம்.

“ஆனால்…? இனிமேல் நான்… இந்த ஊரிலே இருக்க முடியாது…?

“நான் இருக்கிற அந்தச் சுமைதாங்கிக்கு முன்னாலை, நெளிந்து வளைந்து போகிற அந்த தண்டவாளத்தை நீங்கள் கண்டிருப்பீர்கள். அதில் பின்னேரம் அஞ்சு மணிக்கு ஒரு ரெயில் வரும். தண்டவாளக் கேற்டைக் கடக்கும் போது, அது ஒருமாதிரிக் குரலெடுத்துக் கூவும். எனது மனோநிலைக்கேற்ப அந்தக் கூவல் என் மனதில் ஒரு உணர்ச்சியை ஏற்படுத்தும். சில வேளைகளில் நெடுந்தூரம் அலைந்த அலைப்பினால் களைத்துச் துவளும் பெண்ணின் குரல் போல அந்த ஒலி கேட்கும். சில வேளைகளில் வீரம் மிக்க வாலிபனின் அறை கூவல் போலவும், சில வேளைகளில் மழலை மொழி பேசும் குழந்தையின் குரல் போலவும் சில வேளைகளில் கொலையாளி ஒருவனின் முன் பயந்து நடுங்கி அவலக்குரல் எழுப்பும் அப்பாவி மனிதனின் குரல் போலவும் அது எனக்குக் கேட்கும்.

“இதையெல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்டால் எந்த ஒரு சம்பவமும் அந்த அந்த மனிதனின் மனோ நிலைக்கேற்பத்தான் நல்லதாகவோ, தீயதாகவோ கணிக் கப்படுகிறதென்பதற்காகத்தான். இது எனது வாழ்க்கை அனுபவத்தின் மகத்தான கண்டுபிடிப்பு. இதை ஒரு பைத்தியத்தின் முணுமுணுப் பென்று நீங்கள் ஒதுக்கி விடக் கூடாது. அப்படி ஒதுக்கினால் நீங்களும் பைத்தியங்களாகிவிடுவீர்கள்.

“ஆனால் இனிமேல் நான் இந்த ஊரில் இருக்க முடியாது…?

“ஒவ்வொரு நாளும் காலமை அஞ்சு மணிக்கெல்லாம் நான் சுமை தாங்கியில் வந்து குந்திவிடுவேன். என்னை மறந்து நிலையில் நான் இருக்கும் போது ‘கிட்டதட்ட’ எட்டு மணியாளவில் அவள் வருவாள். முழங்கால் தெரிந் தும் தெரியாத அளவுக்கு, நவீன பாணியில் வெள்ளைப் பாவாடை கட்டி, அதற்கேற்ற சட்டையும் போட்டு அழகாக நடந்து அவள் பள்ளிக்கூடத்துக்கு போவாள். தண்டவாளத்தைக் கடக்கும் தறுவாயில், அவள் என்னைத் திரும்பிப் பார்த்து ஒரு புன்னகை பூப்பாள். அந்தப் புன்னகை…!

“அவளாலை தான் எனக்குப் பைத்தியம் என்று ஊரிலை உள்ளவையள் சொல்லுகினம். ஆனால் உண்மையில் அவளாலைதான் எனக்குப் பைத்தியம் தெளியும். அவளை கண்டவுடன் தான் எனக்குப் பள்ளிக்கூடம் போக வேணுமெண்ட நினைவு வரும். என்ன முழிக்கிறியள்…? நானும் பள்ளிக்கூடத்திலை படித்தவன் தான்…!

“ஆனால் நான் இனிமேல் இந்த ஊரிலை இருக்க முடியாது. அந்த மணியோசையை, அந்த றெயிலின் கூவலை, அவளின் புன்னகையைக் காண முடியாது. நான் இங்கு தொடர்ந்து இருந்தாலும் அவளின் புன்னகையைக் காண முடியாது. அவள் ஒரு துரோகி! ஒரு வஞ்சகி!

“நீங்கள் எதிர்பாராத அளவுக்கு நான் என்னைப் பற்றி ஒரு இரகசியத்தைச் சொல்லப் போகிறேன். திடுக்கிட்டுவிடாதீர்கள். நான் ஒரு கொலைகாரன். என்ன திடுக்கிடுறீர்களா? நான் உண்மையைத்தான் சொல்லுகிறேன். நான் ஒரு கொலைகாரன். அந்த றெயிலின் கூவல் கூட சில வேளைகளில் நான் கொலை செய்த அந்த அப்பாவி மனிதனின் அவலக்குரல் போல…?

“ஐயோ! அதை இப்ப நினைச்சாலும் நெஞ்சு நடுங்கு கின்றது.

“இந்தப் பைத்தியத்தோடை – கொலைகாரறனோடை எமக்கென்ன கதையெண்டு நடையைக் கட்டுகிறீர்களா? உண்மையில் நீங்களும் பைத்தியங்கள் தான்; நீங்களும் கொலைகாரர்தான். இதென்னடா அநியாயமெண்டு நினைக்கிறீர்களா? நான் உண்மையைத்தான் சொல்லுகிறேன். நான் ஒருபோதும் பொய் பேசுவதில்லை.

“எவன் விபசாரம் செய்ய வேண்டுமென்டு நினைக்கிறானோ, அவனும் விபசாரி ஆகிறான் என்று யாரோ சொன்ன மாதிரித்தான் நானும் சொல்கிறேன். நீங்கள் ஒரு நாளும் பைத்தியக்காற நினைவுகள் நினைப்பதில்லையா? நீங்கள் ஒரு நாளாவது உங்கள் மனச்சாட்சியையாதல் கொல்லவில்லையா? அப்படியானால் நீங்கள் மிக நல்லவர்கள். உங்களைப் பைத்தியங்கள், கொலைகாரர்க ளெண்டு சொல்வதற்காக உங்களிடமிருந்து மன்னிப்புக் கேட்கின்றேன்.

“இவனேன்னடா தன்ரைபாட்டுக்குச் சிரிக்கிறா னெண்டு நினைக்கிறீர்கள் போலை. சில பைத்தியங்களை நினைத்து இந்தப் பைத்தியம் சிரிச்சது; அவ்வளவுதான்.

“சரி, நான் எப்படி கொலைகாரனாய் மாறினேன் தெரியுமா? வழக்கம் போல ஒரு நாள், சுமைதாங்கியிலை குந்தியிருக்கேக்கை, அவள் பள்ளிக்கூடம் போகின்றாள். அவளுக்குப் பின்னாலை ஒரு ஆசாமி வந்து, அவள் கூந்தலை முரட்டுத்தனமாய் பிடிக்க அவள் அலற …என்…னை மறந்து நிலையில் நானெழுந்து, ஓடிப்போய் அவன் கையிலிருந்த கத்தியைப் பறித்து அவனை வெட்டி குத்திக்…கிழித்து..?

ஏன் காதைப் பொத்துறியள்?…நான் இனிமேல் இந்த ஊரிலேயே மிதிக்கப்போவதில்லை.

என்ன போகப்போகிறீர்களா? நான் ஏன் இந்த ஊரைவிட்டு போகப்போகிறேன் என்ற ஒன்றை மட்டும் கேட்டுவிட்டுப் போங்கள். அதைக் கேட்டால் தான் நீங்கள், இந்தப் பைத்தியத்தைப் பற்றிப் பூரணமாக அறிந்திருப்பீர்கள்.

எவள் என்னைப் பார்த்துப் புன்னகைப் பூத்தாளோ, எவள் நான் பைத்தியம் என்று ஊர் கதைக்க வைத்தாளோ, எவளுக்காக நான் கொலைகாரனாக மாறினேனோ, அவளுக்கும், நான் கொலை செய்த அந்த அப்பாவி மனிதனின் தம்பிக்கும் நாளைக்குக் கலியாணம் ஐயா கலியாணம்.

அந்தக் கலியாணம் நடக்கும் போது இந்த ஊரிலை இருந்தால் நான் இன்னும் ஒரு கொலையைச் செய்ய வேண்டி வரும்.

என்ன நடுங்குகிறீர்கள் போலை. ஆனால் நான் இனி ஒரு கொலையும் செய்யமாட்டேன். நான் பிறந்த ஊரை நான் வளர்ந்த ஊரை நான் என்னை மறந்திருக்க எனக்கு உதவிய ஊரை நான் ஒரு கொலைக்காற ஊர் ஆக்கமாட்டேன். என் உயிரினும் மேலாக நான் போற்றிய ஊருக்கு, என்னை பைத்தியமாக்கிய ஊருக்கு நான் இனி மேலும் வடுவைத் தேடித்தர மாட்டேன்.

இவ்வளவு நேரமும் என்ரை கதையைக் கேட்ட உங்களிடம் ஒரே ஒரு வேண்டுகோளை மட்டும் விடுகிறேன். என்ரை கதையை ஆதாரமாக வைத்து நீங்கள் ஒவ்வொரு வரும் உங்கள் வாழ்க்கையை அலசிப் பாருங்கோ. நீங்களும் பைத்தியக்காறர்தான் என்பதை அறிவீர்கள். ஆனாலொன்று, நீங்களும் உங்கள் மனச்சாட்சியைக் கொன்று கொலைகாறராகி விடாதீர்கள்.

சரியான பைத்தியமெண்டு நீங்கள் முணுமுணுப்பது என் காதில் விழுகிறது. அதற்காக நான் கவலைப்படவில்லை. ஏனெண்டால், நீங்களும் பைத்தியங்கள் தானெண்டு நீங்களே உணரவில்லை. ஆனால் நான் பைத்தியமெண்டு நானே உணர்ந்துவிட்டேன்.

உண்மையில் உங்களிலும் பார்க்க நான் ஒரு படி மேலானவன் –

என்ன சிரிக்கிறீர்கள்?

சரி நான் வாறேன். நான் இனிமேல் இந்த ஊரிலேயே இருக்கப் போவதில்லை. நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்துவந்த இந்த ஊருக்கு நான் இனிமேலும் வடுவைத் தேடிவைக்கப் போவதில்லை.

– 1969, சாதாரணங்களும் அசாதாரணங்களும், முதற் பதிப்பு: அக்டோபர் 1983, நர்மதா பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *