கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 14, 2017
பார்வையிட்டோர்: 7,715 
 

அண்ணாச்சியின் அட்டகாசம் ஆரம்பித்து விட்டது. காது செவிடாகும்படி இரண்டு கூம்பு ஒலிபெருக்கியைத் தரையில் எதிரெதிர்த் திசையைப் பார்த்த வண்ணம் வைத்து ரிக்கார்டைப்
போட்டு விட்டான். முதல் பாட்டு எம்.ஜி.ஆர். பாட்டு. `நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகியென்பேன்..நல்ல அழகியென்பேன்! நான் கேட்டதிலே அவள் ஒருத்தியைத்
தான் நல்ல கவிதை என்பேன்.. நல்ல கவிதையென்பேன்..’

அண்ணாச்சி, வாடகைக்கு சைக்கிள் விடும் கடை வைத்திருந்தான். கூடவே, திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற வைபவங்களுக்கு ஒலி, ஒளி அமைத்துத் தரும் சைடு பிசினஸும்
நடத்தி வந்தான். குள்ளமான ஆனால் குண்டான உருவம். ஐயனார் வைத்திருப்பது போல பெரிய மீசை. கண்கள் எந்நேரமும் சிவந்திருக்கும். கைலியும் பனியனும் அவனுடைய டியூட்டி டிரஸ். வேறு இடங்களில்தான் அவன், மேல் சட்டை போட்டு யாரும் பார்க்க முடியும். வேலப்பனூரில் பெரிய தாதா என்று சொல்லும் அளவுக்கு அவனுக்கு இமேஜ் உண்டு.

அவன் வம்புக்கு யாரும் போக மாட்டார்கள். ஆனால் அவன் எல்லோரிடமும் வம்புக்குப் போவான். நமக்கெதுக்கு வம்பு என்று மற்றவர்கள் ஒதுங்கிப் போடீநுவிட வேண்டும். இல்லாவிட்டால், அண்ணாச்சியும் அவன் கடையில் வெட்டியாடீநு உட்கார்ந்து கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கும் ஒரு கும்பலும் சேர்ந்து வம்புக்கு வந்தவர்களை அல்லது நியாயம் கேட்டவர் களைத் தூக்கிப் போட்டு மிதித்து விடுவார்கள்.

`கண்டாங்கி.. கண்டாங்கி’ பாடல் ஒலிக்க ஆரம்பித்தபோது பக்கத்துப் பள்ளிக்கூடத்திலிருந்து ஐந்தாம் வகுப்பு டீச்சர் கோதை வெளியில் வந்தார். அண்ணாச்சி, தரையில் உட்கார்ந்து ஒரு சைக்கிள் சக்கரத்துக்கு வளைவுகளை நீக்கியபடியே, தம் நண்பர் குழாத்துடன் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தான்.

“அண்ணாச்சி, இது ஒங்களுக்கே நாயமாப் படுதா?” கோதை டீச்சர் கேட்டார்.

“இன்னாம்மா அஞ்சாப்பு டீச்சர், இன்னா நாயத்தைப் பத்திக் கேக்க வந்துட்டே நீயி?” என்றான் அண்ணாச்சி.

“இன்னும் ரெண்டு நாள்ல பிள்ளைங்களுக்கு எக்ஸாம் ஆரம்பிக்கப் போவுது அண்ணாச்சி. அதுக்கு ரிவிஷன், அது இதுன்னு நிறையாச் சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கு. இந்தச்
சமயம் பார்த்து ரிக்கார்டு போட்டு டிஸ்டர்ப் பண்றீங்களே, ப்ளீஸ், பாட்டுப் போடறதை நிறுத்துங்க!”

“தோ பார்டா, கண்ணகி நியாயம் கேக்க வந்துப்புட்டாங்க. அண்ணாச்சி ஒரு வேலைல இறங்கிட்டான்னா, அதை யாரு வந்து தடுத்தாலும் நிறுத்த மாட்டான், தெர்யுமா? சும்மா வெட்டியாப் பேசாம, போயிக்கினே இரு!”

கூட இருந்த வெட்டிகள் `ஹோ ஹோ’வென்று சிரித்து, “ஆமாம் அஞ்சாப்பு டீச்சர், நீ கௌம்பு, கௌம்பு!” என்று மிரட்டலோடு சொன்னார்கள்.

கோதை டீச்சர் வேதனையோடு திரும்பி நடந்தார். `ஆஹா மெல்ல நட, மெல்ல நட, மேனி என்னாகும்?’ என்ற பாட்டு ஒலிக்க ஆரம்பித்தது. பின்னால் சிரிப்புச் சத்தம் உரக்க ஒலித்தது.
“டீச்சர் நியாயமாத் தானே அண்ணாச்சி, சொல்லுது. பரீச்சை சமயத்துல பள்ளிக்கொடத்துக்கு முன்னாலே லவுட் ஸ்பீக்கர் போடலாமா? நம்ம ஊரு புள்ளைங்க நல்லாப் படிச்சா
நமக்குத்தானே நல்லது?” என்று அங்கே நின்று கொண்டிருந்த சொக்கப்ப பாகவதர் கூறினார். தெருக்கூத்துக் கலைஞர் அவர். அவருக்கு ஊருக்குள் ரொம்ப மரியாதை உண்டு.

அண்ணாச்சியின் ஆள் ஒருத்தன் எழுந்து வந்து சொக்கப்ப பாகவதரின் வயிற்றில் காலை வைத்து எற்றி உதைத்தான். “அம்மாடீ!” என்று நடு வீதியில் போடீநு அலங்கோலமாக
விழுந்தார். `ஐயோ!’ என்று முனகிப் புரண்ட அவரைத் தூரமாக நின்று பார்த்தவர்கள் எவரும் அவரைத் தூக்கக் கூட முன்வரவில்லை.

“அஞ்சாப்பு டீச்சர் வந்து சொன்னாங்க. நாங்க சொன்னதை ரீஜண்டாக் கேட்டுக்கினு திரும்பிப் போவலை? நீ இன்னா ஊருக்கு நாயம் கேக்கற வஸ்தாதா? மருவாதியா ஓடிப் போயிடு கெழவா? இல்லீன்னா அடிச்சே ஒன்னியக் கொண்னுப் புடுவோம்!” என்றான் அவரை அடித்த ஒல்லித் தோற்ற தாதா.

முனகியபடியே எழுந்து மெல்ல நடந்தார் சொக்கப்ப பாகவதர்.

பள்ளியில் தலைமை ஆசிரியர் வேதராஜ் தலைமையில் ஸ்டாஃப் மீட்டிங் போடப்பட்டது. “ஹெச்.எம்.ஸார், இந்த சைக்கிள் கடைக்காரன் எப்பவுமே இப்பிடித்தான். போலீசுக்கு போன்
போட்டுச் சொல்லலாமா?” என்றார் ட்ரில் மாஸ்டர் சம்பத்.

“நோ, நோ, அது சரியா வராது. பக்கத்து வீட்டுக்காரன் மாதிரி அந்த அண்ணாச்சி. அக்கம் பக்கத்து மனுசங்களை எப்பவும் பகைச்சிக்கக் கூடாது. அதுவும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.
சொரியப்பனுக்கு ரொம்பவும் தோஸ்த்து இவரு. அதனால் போலீஸும் நடவடிக்கை எடுக்காது” என்றார் ஹெச்.எம்.

“சரியாச் சொன்னீங்க ஸார். வேற உபாயத்தைத்தான் கடைப்பிடிக்கணும்..” என்றார் சயின்ஸ் ஆசிரியர் சம்பூரணம்.

“என்ன செடீநுயலாம்?” ஆளுக்கு ஆள் மூளையைக் கசக்கி யோசித்தார்கள்.

முற்பகல் இடைவேளை பெல் ஒலித்தது. ஹெச்.எம்.எழுந்தார். “நான் பள்ளியின் ஹெட் மாஸ்டர் என்கிற முறையில் பணிவா அண்ணாச்சியிடம் பேசிப் பார்க்கிறேன். அப்புறம் கர்த்தர் விட்ட வழி…” என்று சொல்லியபடியே அவர் வெளியே கிளம்பினார். மற்ற ஆசிரியர்களும் அவரைப் பின்தொடர்ந்தனர்.

`பார்த்த ஞாபகம் இல்லையோ.. பருவ நாடகம் தொல்லையோ..?’ என்று பழைய, புதிய பறவை படப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

ஹெச்.எம்.வேதராஜ், சைக்கிள் கடை வாசலுக்குப் போனார். கைகளைக் கூப்பினார். “வணக்கம் அண்ணாச்சி. ஒரு ரெண்டு வாரம் பொறுத்துக்குங்க. எல்லாப் பரீட்சைகளும் பிள்ளைகளுக்கு முடிஞ்சுடும். அப்புறம் நீங்க எவ்வளவு சத்தமா வேணும்னாலும் பாட்டுப் போட்டுக்கிடலாம். தயவுசெடீநுது, இப்ப அதை நிறுத்திப்புடுங்க அண்ணாச்சி!” என்று பணிவாகக் கோரிக்கை வைத்தார் வேதராஜ்.

அண்ணாச்சி தரையிலிருந்து எழுந்தார். “ஓஹோ அம்புட்டு தூரத்துக்கு ஆயிப் போச்சா? அண்ணாச்சிக்கு ஊர்ல மதிப்பு மருவாதி எதுவும் இல்லாமப் போயிடுச்சு. ஆமாம் தானே
வாத்தியாரே?”

“அப்பிடி இல்லீங்க அண்ணாச்சி. பிள்ளைங்க எக்ஸாமுக்குப் படிச்சுத் தயார் பண்ணுற சமயம். அதான் ஒங்களை ரிக்வெஸ்ட் பண்ணிக்கலாம்னு நானே வந்துருக்கேன்…”

கடகடவென்று சிரித்தான் அண்ணாச்சி. “யோவ் வேதராஜ் வாத்தி, திரும்பிப் பாக்காம ஓடிப் போயிடு! இங்கே நின்னு சட்டம் கிட்டம் பேசிகினு இருநதியானா, சொக்கப்ப பாகவதனுக்கு
நேர்ந்த கதிதான் ஒனக்கும். அடி, ஒதை வாங்கி அசிங்கப் படறதுக்குள்ள ஓடிப் போயிடு!”

சுற்றிலும் நின்ற ஆசிரியர்கள், “ஹெச்.எம்.ஸார், வாங்க, போகலாம்!” என்று பயத்துடன் தலைமை ஆசிரியரை அழைத்தார்கள்.

ஏன் அண்ணாச்சி கோவிக்கிறீங்க? இப்ப நான் என்ன சொல்லிப்புட்டேன்? ஒரு ரெண்டு வாரம் பொறுத்துக்குங்கன்னுதானே…” ஹெச். எம். வேதராஜ் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அண்ணாச்சி அருகில் வந்தான். தலைமை ஆசிரியரின் சட்டைக் காலரை இடது கையால் பலமாகப் பிடித்தான். “நானும் சொல்லிக்கினே கீறேன். நீ இன்னுமோ தர்ம நாயம்லாம்
என்கிட்டே பேசிக்கினே கீறே? இன்னிக்கு அண்ணாச்சி கையால அடி துண்ணாமப் போவ மாட்டியா?” என்று கோபத்துடன் கத்தியபடி வலது கையால் அவரை அடிக்கக் கையை ஓங்கினான்.

அந்தச் சமயத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. சரேல் என்று ஒரு கருங்கல் எங்கிருந்தோ சீறி வந்து அண்ணாச்சியின் நெற்றியில் தாக்கவும், “ஐயோ, அம்மா!” என்று கத்தியபடி கீழே விழுந்தான் அண்ணாச்சி.

நெற்றியிலிருந்து ரத்தம் குபுக்கென்று புறப்பட்டு வழியவே, “ஐயோ, ஹெட்மாஸ்டர் ஆள் வச்சு என்னை அடிச்சுப் புட்டானே?” என்று கத்தினான்.

சுற்றிலும் பார்த்தான். இடைவேளை மணி அடித்தபோது வெளியே வந்த பள்ளிக்கூட மாணவ மாணவிகள் தலைமை ஆசிரியருக்கும் அண்ணாச்சிக்கும் நடந்த தகராறை வேடிக்கை
பார்க்கும் ஆவலில் அங்குக் கூடியிருந்தார்கள். தங்கள் பள்ளித் தலைமை ஆசிரியரை அண்ணாச்சி அடிக்க முற்பட்டதைப் பொறுத்துக் கொள்ள இயலாத யாரோ ஒரு சிறுவன் கருங்கல்
வீசிப் பழகி, அண்ணாச்சியின் நெற்றியில் ஓட்டை போட்டான்.

திரும்பிப் பார்த்த அண்ணாச்சிக்கும், அவன் கூட்டாளி களுக்கும் பீதியில் வயிறு கடமுடவென்றது. ரோடு போடுவதற்கென்று நகராட்சியினர் கொட்டி வைத்திருந்த கருங்கல் குவியலிலிருந்து எல்லோரும் கருங்கற்களை எடுத்து அண்ணாச்சி கும்பலை நோக்கி வீசக் குறி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்னால் நின்ற ஒரு சிறுமி துணிச்சலாகவும் ஆத்திரத்தோடும் கத்தினாள். “யோவ் சைக்கிள் கடைக்காரா! எங்க ஹெச்.எம். மேல ஒரு அடி பட்டுது, நீயும் இருக்க மாட்டே, ஒன் கடையும் இருக்காது.. ஒன் கூட்டாளிங்களும் இருக்க மாட்டாங்க! மொதல்ல ஸ்பீக்கர் செட்டை நிறுத்திப்புட்டு எங்க ஹெச்.எம். கிட்ட மன்னிப்பு கேளுடீநுயா!”

படபடவென்று சுற்றி நின்ற பொதுமக்கள் கைதட்டினார்கள். வழியும் ரத்தத்தை அழுத்திப் பிடித்தவாறு தடுமாறியபடியே போடீநு, ஒலிபெருக்கியை நிறுத்தினான் அண்ணாச்சி.

“அண்ணாச்சி, டௌன், டௌன்!” என்று தெருவே அதிரும் வண்ணம் மாணவ மாணவியர் போட்ட கோஷத்தில் அண்ணாச்சியும் அவன் கும்பலும் தலை குனிந்து நின்றார்கள்.
துடிப்புடன் போர்க்கோலம் பூண்டிருந்த மாணவ மாணவியரை ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் சமாதானப்படுத்தி பள்ளிக்குள் அழைத்துப் போவது சிரமமாக இருந்தது.

பள்ளியுள் நுழைந்ததும் தலைமை ஆசிரியர் மாணவ மாணவிகளிடம் கேட்டார். “பிள்ளைகளா, உங்களுக்கு அந்தத் துணிச்சல் எங்கிருந்து வந்துச்சு?”

“நீங்கதானே சார், சொல்லிக் கொடுத்தீங்க, பாதகம் செடீநுப வரைக் கண்டால் பயம் கொள்ளலாகாது பாப்பா. அவர்களை மோதி மிதித்து விடு பாப்பா, அவர்கள் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா!ன்னு பாரதி பாட்டைச் சொல்லிக் கொடுத்தது நீங்கதானே ஸார்?” என்று பதில் சொன்னார்கள் அவர்கள்.

தம் மாணவச் செல்வங்களைப் பெருமிதத்துடன் பார்த்தார் ஹெட் மாஸ்டர் வேதராஜ்.

(தினமணி கதிர் வார இதழ்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *