கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 442 
 

“யோவ்… இன்னுமா போவலே” காலி டீ கிளாஸ் தம்ளர்களுடன் வந்தவன் கேட்டான்.
பெரியவர் அரைத் தூக்கத்திலிருந்து விழித்தவர் போல அவனைப் பார்த்தார்.

“முதலாளி வரச் சொன்னாரா”

முருகையன் கேலியாகச் சிரித்தான். “ஆமா..”

பெரியவர் வேகமாக எழுந்தார். மெல்ல நடந்து அறைக்கதவைத் திறக்கப் போனார். முருகையன் ஓடி வந்து தடுத்தான்.

“கதையைக் கெடுத்தே போ. உன்னை உள்ளே விட்டா, நா இப்படியே வெளிய போக வேண்டியது தான்..”

பெரியவர் நகரவில்லை. “போ… போய்ச் சொல்லு..: என்றார்.

“நீ வெளியே போ.. உன்னைப் பார்க்க முடியாதுன்னு அப்பவே சொல்லிட்டாரு”

பெரியவர் அவனைச் சந்தேகமாய்ப் பார்த்தார். “நெசமாத்தான் சொல்றேன்..”என்றான் கண்களில் ஏமாற்று இருக்குமோ என்ற பார்ப்பவர் போல அவனையே பார்த்தார்.

“பெரியவரே.. உங்கிட்ட பொய் சொல்வேனா, அந்தாளுக்கு வேற வேல இல்ல.. போவச் சொல்லுன்னாரு”

பெரியவர் சற்று நேரம் மெளனமாய் நின்றார். இதே ஆபீசில் போன வருடம் அவர் வைத்ததுதான் சட்டம். காக்கி உடுப்பை மாட்டி டுட்டிக்கு வந்துவிட்டால் எதோ ராணுவ அதிகாரி போல அலட்டல். வாட்ச்மேன்தானே” என்று இளக்காரமாகக் கேட்டுவிடக் கூடாது. வாபஸ் வாங்குகிற வரை விடமாட்டார்.

அதெல்லாம் அந்தக் காலம்.

கம்பெனி பொறுப்பு பெரிய முதலாளி கையில் இருந்தது. பெரியவரை வேலைக்கு வைத்ததே பெரிய முதலாளி தானே. இன்று நிர்வாகப் பொறுப்பு சின்ன முதலாளி கையில். வயசானவங்க வேண்டாம்.என்னாவோ இளரத்தந்தான் வேணுமின்று சொல்றாராம்.

வீட்டில் போய்ச் சொன்னால் பேத்தி சிரிக்கிறாள். “நம்மூரு முனீஸ்வரங் கோவில்ல கேட்கிறாப்ல இல்லே சொல்றாங்க” போகட்டும். மகனுக்கு இப்படி ஒரு விபத்து நேர வேணாம். வலது கைக்கு பெரிய மாவுக்கட்டு. இடது காலில் லேசான பிராக்சர்.

“ஆறு மாசம்.. மூச்.. நவுரக் கூடாது. அப்புறம் நா பொருப்பில்லேன்னு” டாக்டர் அய்யா சொல்லிட்டாராம். படுத்துக் கிடக்கிறான். மருமகள் வீட்டு வேலைக்குப் போகிறாள்.

“எங்கிழவி உசுரோட இருந்தா நடக்கிற கதையே வேற…” பெரியவருக்கு இத்தனை வேதனையிலும் உள்ளூர பெருமிதம்.

“இப்படியா குடும்பம் கெடக்கும்.. அவ புத்தியிலே எதுனாச்சும் யோசனை வந்துருமே”

எத்தனை நாள்தான் இந்த போராட்டத்தில் இருப்பது. வாட்ச்மேன் வேலைக்கு முயற்சித்தால் என்ன என்று தோன்றியது.நான்கு நாட்களாய் அலைந்ததில் இன்று முதலாளியைப் பார்க்காமலேயே ஏமாற்றம்.
வெறுங்கையோடவா வீட்டுக்குப் போவறது… பேத்தியிடம் பெருமை அடித்து வைத்திருந்தார்.

“என்னைய பார்த்தா போதும். என்ன பெரிய சாமி… நல்லாருக்கியான்னு நின்று விசாரிப்பாரு..”

“அப்ப வேலை கெடச்சிருமா”

பேத்தி கண்களில் எதிர்பார்ப்பும் தாத்தாவின் மீதான நம்பிக்கையும்.

“பின்னே..”

இப்போது என்ன சொல்வது. இந்த நான்கு நாட்களில் விதவிதமாய் மழுப்பியாகி விட்டது.

பேத்தி சும்மாயிராமல் அம்மாவிடம் போய்க் கேட்டுவிட்டது.

“போவியா.. உனக்கு வேற வேலை இல்லே” என்ற எரிந்து விழுந்திருக்கிறாள்.

“நெசமாத்தானே வேலை கிடைக்கும்..” என்று வந்து கேட்டதும் பெரியவருக்கு சங்கடமாகிப் போய் விட்டது.

விஸ்தாரமாய் தாம் வேலை பார்த்த அழகைப் பற்றிக் கதைகள் சொன்னதும் தப்பாகிப் போய்விட்டது.

“ஒருநா நடுராத்திரி எவனோ களவானிப்பய உள்ளே பூந்து, சத்தம் கேட்டவுடனே பாஞ்சுட்டேன் என்னாமா திமிர்றாங்கிற.. நா வுடலியே. மடக்கிப் போட்டு அப்பறம் பெரிய முதலாளி வந்து பார்த்து..ஏயப்பா பாராட்டி பணமில்லாம் கொடுத்தாரு…”

பேத்தி ஆவென்று அவரையே பார்ப்பதில் ஒரு பெருமை.

“ஆங்… அப்புறம்…”

“சொல்றேன்.. சொல்றேன்” என்று பிகு பண்ணிக் கொள்வதில் பெரியவருக்கு ஒரு சந்தோஷம்.

என்ன பதில் சொல்வது! வேலை இல்லை என்று பேத்தியிடம் சொல்வது கிடக்கட்டும். ஒண்டியாய் அவதிப்படுகிற மருமகளுக்கு உதவ முடியாமல் போகிறதே என்கிற வருத்தம்.

தெருவில் இறங்கி நடக்கிற போதும் அதே யோசனை.

“கிழவி இருந்தா என்ன சொல்லும்..”

அடிமனசில் கெழவி ஞாபகம் அலையடித்துக் கொண்டிருந்தது. பார்க்க அப்பாவி போல இருப்பாளே தவிர புத்தியெல்லாம் பெரிய வீட்டுக்காராங்க மாதிரிதான்.

நீ நம்ம சாதியிலே தப்பி பொறந்துட்டேன்னு சொன்னா மட்டும் ஏத்துக்க மாட்டா. “நம்மா சாதிக்கு என்ன குறையக் கண்டீங்கன்னு சண்டைக்கு வந்துருவா. போய் நின்னா போதுமே. அந்த எடத்தையே கலகலப் பாக்கிருவாளே. யோசனைக் கேற்ப நடை மட்டுப் பட்டது.

மெல்ல நடந்த படி கடைவீதிக்கும் வந்து விட்டார். கடை வீதியின் அமைப்பே மாறிப்போய் விட்டிருந்தது. பழைய கடைகள். கண்ணாடிப் பொருட்கள், வியாபாரப் பொருட்கள். வியாபாரிகள் கூட புது ஆட்களாய். தகப்பன் இடத்தில் மகள்.
தகப்பன்! மனசுக்குள் பளீரென்று ஒரு யோசனை.

“பெரிய முதலாலியைப் போய்ப் பார்த்தால் என்ன?”

கெழவி நிச்சயம் கூடவேதான் இருக்கா. இல்லாட்டி இந்த யோசனை வந்திருக்குமா. கூடவே சிலாகிப்பும்.

பெரிய முதலாளியை வீட்டுல போய் பார்த்திர வேண்டியதுதான்..

பெரியவருக்கு நடையில் வேகம் கூடியது. வீட்டு வாசலில் வரவேற்ற நபரும் புதுசு.
“யாரு..?” என்றான் அதட்டலாய்.

“பெரியசாமி..”

“என்னா?”

“பெரிய முதலாளியை பார்க்கணும்..”

“பெரிய முதலாளிய…”

“போ.. ஆசுபத்திரில போய்ப் பாரு”

என்ன சொல்கிறான்.. புரியாமல் விழித்தார்.

“அட.. நெசமாத்தான் சொல்றேன்.. அய்யா உடம்பு சொகமில்லாம ஆசுபத்திரில கெடக்கிறாரு.. போ.. அங்கெ போய்ப் பாரு”

“எந்த ஆசுபத்திரி”

டவுனில் பெரிய கிளினிக் பெயரைச் சொன்னான்.

கடவுளே.. அந்த நல்ல மனுசனையா படுக்கப் போட்டே. பெரியவர் மனசுக்குள் விம்மல்கள். போய்ப் பார்த்திர வேண்டியதுதான். சாப்பிடாத நினைவு கூட இல்லை. பெரிய முதலாளியை உடனே பார்க்கிற பரபரப்பு.

கால்களில் வேகம் கூடிக்கொண்டது. ரிசப்ஷனில் இருந்த நர்ஸ் இவரைப் பார்த்ததும் அதட்டுகிற குரலில் கேட்டாள். “என்ன…?”

முதலாளி அய்யாவ பார்க்கணும்” பெரியசாமிக்கு குரல் கம்மியது.

“யாரு”

“அதாங்க… மாணிக்கம் கம்பெனி முதலாளி”

“ரும் நம்பர் 113,. மாடியிலே. ஆனா இப்ப பார்க்க முடியாது. விசிட்டிங் அவர்ல வாங்க”

“என்னங்க ” பெரியவருக்குப் புரியவில்லை.

“இப்ப பார்க்க முடியாது. சாயங்காலம் ஆறு மணிக்கு வாங்க”

பெரியவருக்குத் திணறிப் போனது.

“அம்மா… தாயி. கொஞ்சம் தயவு பண்ணும்மா. வயசானவன்.. தொலைவுலேர்ந்து வரேன்..ரெண்டே நிமிஷம்.. பார்த்துட்டு ஓடியாந்துடறேன்..” கெஞ்சினார்.

“இங்கே பாருங்க. உங்களுக்காக எங்க ஹாஸ்பிடல் ரூல்ஸை மாத்த முடியாது. அப்புறம் வாங்க” கறாராய் சொல்லிவிட்டாள்.

பெரியவர் தெம்பிழந்து போய்விட்டார். கால்கள் நடுங்க ஒரு நிமிஷம் வருகிற மனிதர்களை உற்றுப் பார்த்தார். எத்தனை அலட்சியமாய் போய் வருகிறார்கள். இவர்களுக்கு இருக்கிற சுதந்திரம் எனக்கு இல்லையா.

பொருமித் தீர்த்த மனசுக்கு கண்ணெதிரில் நின்ற மனிதர் தெரியவில்லை. இடித்துக் கொண்டதும் புரிந்தது.

“அம்மா… நீங்களா”

மகராசி. பெரிய முதலாளி வீட்டம்மா. கும்பிடப் போன தெய்வம் போல.

“என்ன… பெரியசாமி”
குரல் தான் எத்தனை அனுசரணை.

“அய்யா உடம்பு சொகமில்லேன்னு கேட்டு பதறிப்போய் ஓடி யாந் தேன்..”

“வா.. எங் கூட”

அவள் கையில் பிடித்திருந்த சாப்பாட்டுக் கூடையை பெரியசாமி வாங்கிக் கொண்டார். என்னைப் போக வேணாம்னு எப்படித் தடுக்க முடியும். உடம்பு குறுகி நடந்தாலும் நெஞ்சு நிமிர்ந்து இருந்தது.

அறைக்குள் போனதும் கட்டிலில் படுத்திருந்தவரைப் பார்த்தார். “அய்யா.. நீங்களா”
என்ன கம்பீரமாய் பார்த்த உருவம். எலும்பு கூடு மட்டும். கெளரவமாய் தோல் போர்த்திய தினுசில் இருந்தார்.

“வா… எப்படி இருக்கே”

பெரியசாமிக்கு வார்த்தை வரவில்லை.

முதலாளியம்மாதான் சொன்னாள்.

கீழே நின்னுகிட்டிருந்தார்.. நாந்தான் பார்த்துட்டு கூட்டிக்கிட்டு வந்தேன்.”

“உனக்கு ஒரு பேத்தி இருக்குதானே”

எவ்வளவு ஞாபகம் வைத்திருக்கிறார். சிலிர்த்துப் போனது பெரியசாமிக்கு.
“எனக்குத்தான் ஆளே இல்லே. எப்படி கெடக்கேன் பாரு”

முதலாளியம்மா அதட்டினாள். “என்னது… என்ன பேசறோம்னு புரியாமே”

“அட.. இவன் யாரு.. எங்கம்பெனில எத்தனை வருஷம் வேலை பார்த்தவன்.. அவனுக்குத் தெரியாத விஷயமா”

பெரியசாமி கைகளைக் கட்டிக் கொண்டார். “அய்யா.. நான் என்ன செய்யணும்.. சொல்லுங்க”

“இவ ஒருத்தி தான் அலையறா. வீட்டுக்கும்.. ஆசுபத்திரிக்குமா, என்னை வேற தனியா விட்டுட்டு போறாளா . நர்ஸ் இருக்காங்க.. ஆனாலும் ஒரு பயம்..”

முதலாளி சொல்லச் சொல்ல பெரியசாமிக்கு ஜுரம் போலத் தகித்தது. “நா இருக்கேன்யா ஒங்க கூட”

“அது போதும். ஏய் அப்புறம் என்ன. புள்ளைங்க கைவிட்டாலும் நான் செஞ்ச தர்மம் கைவிடலே”

பெரிய முதலாளியின் எலும்புக்கூடு ஒரு தரம் நடுங்கியது.

“உன்னால முழு நேரமும் இருக்க முடியுமா..”

“அட .. இருப்பான்னு சொல்றேன்.. போவியா.. சும்மா வளவன்னு கிட்டு” அதட்டினார் முதலாளி.

“அய்யா… ஒரே ஒரு வார்த்தை வீட்டுல சொல்லிட்டு வந்திடறேன். அதுக்கு அனுமதி கொடுங்கய்யா “

“போ.. சீக்கிரம் வந்துரு”

ஹாஸ்பிடல் வாசலை விட்டு வெளியே வரும்போது பெரியசாமிக்கு ஒருவித கர்வம் அப்பியிருந்தது மனசுக்குள்.

இனி தைரியமாகக் சொல்லலாம்.” அய்யாவ பார்த்துக்கிற வேலை கிடைச்சிருக்குன்னு”
ஒரு வாரம் ஓடிப்போனது.

முதல் ரெண்டு நாட்கள் முதலாளியம்மாவே சாப்பாடு கொண்டுவந்தாள். அப்புறம் டிரைவர் கொண்டுவந்தான். முதலாளி முகம் இருண்டு போனதைப் பார்த்து விட்டார் பெரியசாமி.

ஒவ்வொருத்தரா வேணாம்னு உதறித் தள்ளறாங்க போல இருக்கு…”

முதலாளி முனகியது புரிந்தது. “பெரியசாமி.. எப்பவும் அடுத்தவங்க தயவுல நிக்கிராப்ல நம்மள வச்சிக்கக் கூடாது.. வயசாச்சுன்னா பட்டுன்னு போயிரணும்.. புரியுதா”

பழைய கதைகளை நினைவு கூர்வதில் பெரிய முதலாளிக்கு ஒரு சந்தோஷம் அறை மூலையில் கீழே அமர்ந்திருந்தவரைக் கூப்பிட்டார். “இங்கே வா..”

அருகில் வந்ததும் தலையணை அடியிலிருந்து ஒரு பர்ஸை எடுக்கச் சொன்னார். “இந்தா.. வச்சுக்க” நாலைந்து நூறு ருபாய் நோட்டுகளை எடுத்துக் கொடுத்தார்.

“எதுக்குய்யா..”

“அட.. புடி.. நாளைக்கு நா உசுரோட இருக்கேனோ, இல்லியோ.. எங்கையால கொடுத்துட்டா ஒரு திருப்தி”

கைகள் நடுங்க வாங்கிக் கொண்டார் பெரியசாமி.

“நல்லா இரு..”

முதலாளிக்கு அதற்கு மேல் பேச்சு ஓடவில்லை. கண் மூடிப் படுத்துக் கொண்டார். நர்ஸ் வந்து பார்த்த போது முதலாளியின் உடம்பில் அசைவில்லை.

“எதாச்சும் கேட்டாரா”

“இல்லீங்களே.. நா இப்படி ஓரமா படுத்திரு ந்தேன்…”பெரியசாமிக்குக் குழறியது.

“தூக்கத்திலே போயிட்டாரு..”

நர்ஸ் முனகலாய் சொல்லிவிட்டு வெளியே போனாள். எலும்புக் கூடு அசை வற்றுப் படுத்திருந்தது.

“முதலாளி..”

வீட்டுக்குள் வந்த தாத்தாவை பேத்தி திகைப்புடன் பார்த்தது.

“என்ன… வேலை போச்சா”

“ஆமாம்மா.. பெரிய முதலாளியே போய்ட்டாரு..”

“சின்ன மொதலாளி இருக்காரில்லே..”

“அவருக்கு நா இப்ப தேவையில்லெம்மா”

பெரியவரின் பதில் பேத்திக்குப் புரியவில்லை.

(பயணம் – சிற்றிதழில் பிரசுரம்)

– ஜூன் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *