பெரிய மனசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 21, 2014
பார்வையிட்டோர்: 7,842 
 
 

“பெரிய மனசு பண்ணுங்க மண்ட!”

பினாங்கு துறைமுக நகரத்தில் அதிக நடமாட்டம் இல்லாத ஒரு கோடி. அதில் இருந்தது பழைய உலோகப் பொருட்களை வாங்கி அடைக்கும் அந்த இடம். கடையென்று சொல்ல முடியாது. உயர்ந்த சுவற்றுக்குள் ஒரு பெரிய வளாகம். அவ்வளவுதான். அதன் நடுவே ஒரு சிறு அலுவலகம்.

அதனுள்ளே அகன்ற நாற்காலியில் உட்கார்ந்திருந்த நடுத்தர வயதினரைக் கெஞ்சிக் கொண்டிருந்தான் வாட்டசாட்டமாக இருந்த அந்த பதின்ம வயதுப் பையன்: “பெரிய மனசு பண்ணுங்க மண்ட!”

`ஏண்ணே அவரை மண்டன்னு கூப்பிடறீங்க?’ அவன் பத்து வயதிலேயே அந்த குண்டர் கும்பலில் சேர்ந்து, அப்போது மூன்று ஆண்டுகள் கழிந்திருந்தன. அன்றுதான் தலைருடன் முதன் முதலான சந்திப்பு. அவனைப் புல்லரிக்க வைத்த தருணம். அவ்வளவு சுலபமாக யாரும் அவரைப் பார்த்துவிட முடியாதாமே!

`அவருதாண்டா நம்ப பாஸ். ஆனா, அப்படிக் கூப்பிட்டா, நாம்ப என்ன இங்கிலீஷ்காரங்களான்னு சத்தம் போடுவாரு. அதான்..`

புரிந்துகொண்ட பாவனையில், சிறுவன் தலையை ஆட்டினான், மேலும், கீழுமாக. தலைவரைத் தலை என்று அழைக்காமல், மண்டை என்கிறார்கள்.

`நீதான் புதுப் பையனா?` குரலைப் போலவே உருவமும் பெரிதாக இருந்தது. கரகரத்த குரல் இயல்பானதா, இல்லை, பிறரை நடுங்க வைக்கவென அவர் சுயமாகப் பழகிக் கொண்டதா என்று அவன் யோசனை போயிற்று. தமிழில்தான் பேசினார் என்றாலும், அவருடைய தாய்மொழியான ஹக்காவைப்போல் ஒலித்தது.

`பேரு என்ன?’ தெரிந்திருந்தும் கேட்டார்.

“ஜோ –ஜோசப்,” சற்று பெருமையுடன், தலையை நிமிர்த்தி அவன் சொன்ன விதம் அவருக்குப் பிடித்திருந்தது.
`என்ன படிக்கிறே ஜோ?`

`ஃ பார்ம் ஒன்!

`இவனைப் பாத்தா பதிமூணு வயசுப் பையனாட்டாமாவா இருக்கு? பதினேழு, பதினெட்டு சொல்லலாம். இல்ல?` பக்கத்திலிருந்தவனைப் பார்த்துக் கேட்டார்.

அவனும் தலையாட்டி வைத்தான்.

`ஒன்னோட வேலை என்ன தெரியுமா?’

மெய்மறந்துபோய், அவர் முகத்தையே பார்த்தான் சிறுவன்.

` நம்ப கும்பலுக்கு புதுப் புது ஆளுங்க சேர்க்கறது!` அவர் பக்கத்திலிருந்தவன் முந்திரிக்கொட்டையாய் பதிலளித்தான்.

`இருடா. பையன் பயந்துக்கப் போறான்!’ என்று எச்சரித்துவிட்டு, சின்னப் பிள்ளையிடம் பேசுவதுபோல, கொஞ்சலாகப் பேசினார்: `எல்லாம் ஒங்கூடப் படிக்கிறவங்கதான் ஜோ. படிப்பில நாட்டம் இல்லாதவங்க, வீட்டில சுகமில்லாதவங்க, ஏழைங்க — இப்படி இருப்பாங்கல்ல?’

`என்னைப்போல!` பையன் சிரித்தான். அவனுக்கு அப்பா இல்லை. அழுமூஞ்சியான அம்மா மட்டும்தான். இருப்பிடமோ, பன்றிகளும், நாய்களும் சர்வசாதாரணமாகப் புழங்கும் புறநகர்ப் பகுதி.

`புத்திசாலிப் பையன்!’ என்று பாராட்டிவிட்டு, `அவங்ககிட்டே காசு கேளு. கொடுக்க மறுத்தா, அடி. நம்பளோட சேர்ந்தா அவங்களும் மத்தவங்களை அடிக்கலாம்னு ஆசை காட்டு!’ உசுப்பேற்றினார். `எல்லாம் சொல்லிக் கொடுக்கிறோமில்ல, அதுக்கு சம்பளமா, மாசாமாசம் கொஞ்சம் காசு கட்டணும், அவ்வளவுதான்!’

ஜோ பெரிதாகத் தலையாட்டினான். தன்னை நம்பி ஒரு வேலை கொடுக்கிறார். அதை எப்படியாவது செய்து காட்ட வேண்டும் என்ற துடிப்பு பிறந்தது அவனுள்.

ஓரிரு முறை அவர் சொன்னமாதிரி செய்து, மாட்டிக் கொண்டான். பள்ளியின் வாராந்திர பொதுக்கூட்டத்தின்போது, எல்லா மாணவர்களின் முன்னாலும் பிரம்படி வாங்கினான்.

தலைவரிடம் போய், `அடிக்கிறாங்க மண்ட!’ என்று பரிதாபமாகச் சொன்னபோது, அவர் பெரிதாகச் சிரித்தார். `மத்தவங்க முன்னால அடி வாங்கினா, வெக்கமாடா ஒனக்கு?’ என்று இன்னும் பலக்கச் சிரித்தார்.

`இல்ல, மண்ட. எல்லாரும் கூட்டாளிங்கதானே!’

அவர் யோசித்தார். `நீதான் அடிச்சேன்னு அவங்க காட்டிக் கொடுத்தாதானே மாட்டிக்குவே? இப்படிச் செய் — மொதல்ல அவங்க தலைமேல ஒரு பிளாஸ்டிக் பையைக் கவுத்துடு. பாக்கெட்டிலேருந்து பணத்தை எடுத்துட்டு, ஓடியே போயிடு!’

தான் அப்போதே பெரிய வீரனாகி விட்டது போன்ற உணர்வு ஏற்பட, சந்தோஷமாகச் சிரித்தான் ஜோ.
அப்படியும், செய்த குற்றத்தைச் சரியாகச் செய்யத் தெரியாதுபோக, அல்லது அவன்மேல் சந்தேகம் ஏற்பட, தண்டனை பெற்றான். ஆனால், தான் திரட்டிய பணத்தைத் தலைவரிடம் கொடுத்து, அவருடைய ஆரவாரமான பாராட்டுதலுக்கு ஆளானபோது, எல்லாம் மறந்துபோயிற்று.

`ஒங்கப்பாமாதிரி தறுதலையா போகப்போறியாடா!’ பெற்றவள் புலம்பினாள். `நீயாவது நல்லாப் படிச்சு, கடைசிக் காலத்தில என்னை வெச்சுக் காப்பாத்துவேன்னு நம்பிக்கிட்டு இருந்தேனேடா! ஒங்க பள்ளிக்கூடத்திலே என்னைக் கூப்பிட்டு, ஒன்னைப்பத்தி ஏதேதோ சொல்றாங்களே!` என்றவள், ‘தவமிருந்து, நாப்பது வயசில பெத்த பிள்ளை! இப்படியா சீரழிஞ்சு போவணும்! யாரு குடுத்த சாபமோ!` என்று தனக்குள்ளேயே முனகியபடி, மேல் துண்டால் கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

அவளை, அவளுடைய கண்ணீரை, நம்பிக்கையை அலட்சியப்படுத்தினான்.
பதின்மூன்று வயதே ஆகியிருந்த அவனை `பெரிய மண்ட’ சரிசமமாகப் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு, இருவருமாக பியர் குடித்தபோது, அவனுக்கும் அவருடைய பராக்கிரமத்தில் பங்கு கிடைத்ததுபோல பெருமிதம் உண்டாயிற்று.

`என்னடா இப்படி நேரங்காலமில்லாம தூங்கறே! படிக்கக்கூடாது?’ என்ற அம்மாவின் அரற்றலைத் தாங்க முடியாது, இன்னும் குடித்தான். வயதுக்கு மீறிய பழக்கத்தால், தலையே வெடித்துவிடும்போல வலி பிறக்க, அதனை மறக்க, அதற்குக் காரணமாக இருந்த மதுவையே மேலும் நாடினான். அடியும், குடியுமே வாழ்க்கை என்று ஆகிப்போனது.

அவர் கொடுத்த விலாசத்தில் உள்ள நபர்களை அடித்துத் துன்புறுத்தி ஏதாவது சமாசாரத்தைக் கறப்பது, இல்லை, ஒரேயடியாகப் `போட்டுத் தள்ளுவது` என்று பதினாறு வயதுக்குள் முன்னேறியபோது, இதுவரை சமூகத்தில் அவனுக்குக் கிடைக்காத மரியாதை, அந்தஸ்து, இல்லை ஏதோ ஒன்று கிடைத்தது விட்டதாகப் பெருமிதம் கொண்டான். எல்லாவற்றையும்விட, அவன் அரிவாளை ஓங்கியபோது, எதிரே நிற்கும் நபரின் கண்ணில் தெரிந்த மரணபயம் அவனுக்குப் போதை ஊட்டுவதாக இருந்தது.

படிப்பை விட்டு விடலாமா என்றுகூட நினைத்தான் ஆனால், படிக்காமலே ஒவ்வொரு வருடமாக அடுத்த வகுப்புக்குச் சென்றதால், `ஸ்கூலுக்குப் போகாம, வீட்டிலேயே இருந்தா தினமும் கிழவியோட அழுகையைக் கேட்டுக்கிட்டில்ல இருக்கணும்,’ என்ற எண்ணமெழ, அந்த யோசனையைக் கைவிட்டான்.

ஒவ்வொரு நாளும், முதலிரண்டு பாடங்களுக்குப்பின் சுவரேறிக் குதித்து, `பெரிய மண்ட`யைப் பார்க்கப் போய்விட்டு. பள்ளி இறுதி மணி அடிக்கும்போது, மீண்டும் வந்துவிடுவது என்பதை வழக்கமாக வைத்துக் கொண்டான். நாற்பது, ஐம்பது மாணவர்களில் ஒருவன் குறைந்தால், யார் கவலைப்படப் போகிறார்கள்!
பள்ளியை விடாததும் நல்லதிற்குத்தான் என்று பிறகு தோன்றியது. இல்லாவிட்டால், அந்தப் பாதிரியாரின் உரையைக் கேட்டிருக்க முடியுமா!

`சுய முன்னேற்றம்’ என்ற தலைப்பில் உரையாற்ற வருகை புரிந்திருந்தார் அந்தப் பாதிரியார்.
பள்ளி இறுதியாண்டுப் பரிட்சைகள் முடிந்திருந்தன. ஆனாலும், விடுமுறை ஆரம்பிக்க இன்னும் சில வாரங்கள் இருக்க, மாணவர்கள் அந்தப் பொழுதை உபயோகமான முறையில் கழிக்கவென, கல்வியதிகாரிகள், காவல்துறையினர் என்று பல தரப்பினரின் கலந்துரையாடல்களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர் பள்ளி நிர்வாகிகள்.

`இளமைப் பருவம் ஒருவரின் வாழ்வில் மிக முக்கியமானது. இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள், எப்படி யோசிக்கிறீர்கள் என்பதுதான் உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு — இளமை என்பது முட்டாள்தனம், நடுத்தர வயது — தாங்க முடியாத இடர்கள், முதுமை — தன்னைத்தானே நொந்துகொள்ளல் என்று. `இப்படி நடந்திருக்கலாமோ?` என்று காலங்கடந்து யோசிப்பதால் எந்தப் பயனுமில்லை,’ என்று வெள்ளாடை அணிந்த பாதிரியார் சொல்லிக்கொண்டே போனபோது, அவனுக்குள் எதுவோ அசைந்தது. தாயின் கண்ணீருக்கு மசியாதவனை பிற உயிர்களை ஆழமாக நேசித்தவரின் சுயநலமற்ற அறிவுரை தடுமாறச் செய்தது.

எப்போதும் இல்லாத அதிசயமாக, வாரத்திற்கு ஒருமுறை மாதா கோயிலுக்குப் போனான். பாதிரியாருடன் தனிமையில் பேசினான்.

`நான் நிறையத் தப்பு பண்ணியிருக்கேன், ஃபாதர்!` என்று தலை குனிந்தபடி ஒத்துக்கொண்டபோது, அவனுக்குத் தன்மேலேயே வெறுப்பு வந்தது.

எது சொன்னாலும் புன்னகை மாறாது அவர் கேட்டுக் கொண்டிருந்து, உடனுக்குடன் அவன் தப்பைச் சுட்டிக் காட்டாதது அவனை மனந்திறந்து பேச வைத்தது. தன் கடந்த காலத்தை அலசினான்.
பாவ மன்னிப்பு என்றில்லை. தான் தேர்ந்தெடுத்திருந்த பாதை சரியானதுதானா என்ற சந்தேகம்.

ஒருவரைக் கொல்லும் தருணத்தில், அவர் முகத்தில் தென்படும் மரண பயத்தைக் கண்டு முன்போல தன்னால் ஆனந்தப்பட முடியாதது ஏன் என்ற குழப்பம்.

குழப்பம் ஏற்பட்டபோது, எடுத்துக்கொண்ட காரியத்தில் தெளிவு இல்லை. பிடிபட்டு, சிறைக்குப் போனான். `பெரிய மண்ட’யின் தலையீட்டால் விரைவிலேயே வெளியே வந்தவன், மீண்டும் பாதிரியாரை நாடிப் போனான்.

`ஒங்கப்பாவைப்போல நீயும் தறுதலையா ஆகிடாதேடான்னு சொல்லிச் சொல்லியே எங்கம்மா என்னைக் கெடுத்துட்டாங்க, ஃபாதர்!’ என்று பழியை வேறு பக்கம் திருப்பினான்.

பாதிரியாரின் பழுத்த முகத்தில் மென்மையான முறுவல்.

‘நீ நல்லா இருந்தா யாருப்பா அவங்களைவிட அதிகமா சந்தோசப்படப் போறாங்க! நீ தப்பான வழியில போறேன்னு அவங்க உள்ளுணர்வு சொல்லி இருக்கு. ஆனா, அதை எப்படித் தடுக்கிறதுன்னுதான் தெரியல,’ என்று விளக்கினார். பிறகு, ஏதோ தோன்றியவராய், ` ஆமா, ஒங்கம்மா எப்பவாவது ஒன்னை அடிச்சிருக்காங்களா?’ என்று வினவினார்.

சற்றும் எதிர்பாராத அந்தக் கேள்வி அவனை யோசிக்கவைத்தது.

அம்மா!

படிப்பறிவு அறவே இல்லாததால், பிறர் வீட்டில் வேலை செய்து பிழைக்க வேண்டிய நிலை. அதில் கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் தன் தேவைகளைக் குறுக்கிக்கொண்டு, மகனுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்தவள்!
மகனைப் பற்றிய நடத்தையில் சந்தேகம் எழுந்த பின்னரும், அன்றுவரை அவனை அடித்ததோ, திட்டியதோ கிடையாது! கெஞ்சலுடன் சரி.

கூடாத சகவாசமே அப்பாவின் உயிருக்கு யமனாக வந்திருந்தது என்றவரை அவனுக்குத் தெரியும். தானும் அதே வழியில் செல்லக்கூடாது என்று எச்சரிக்கையாக இருந்திருக்கிறாள், பாவம்!

இது ஏன் தனக்கு இதுவரை புரியவில்லை?

அந்த அம்மாவையா மிரட்டிப் பணம் பறித்தான், தனது ஆடம்பரச் செலவுகளுக்கு? அவனது சுய வெறுப்பு அதிகரித்தது. அவனது ஒவ்வொரு மூச்சும் மன அதிர்வுக்கு ஏற்ப பெரிதாக வெளிவந்தது.

`நீ நல்லாப் படிச்சாதானே கைநிறைய சம்பளம் கிடைக்கும், சௌகரியமா வாழ்க்கை நடத்தலாம்? எல்லாரையும் மாதிரி கல்யாணம் கட்டி, ஒனக்குப் பிறக்கப்போற பிள்ளைங்களை நல்லபடியா வளர்த்து — இன்னும் நீ செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்குப்பா. ஒன் எதிர்காலத்தை முளையிலேயே கிள்ளி எறிஞ்சிடாதே!’ அவனுடைய நல்வாழ்வுக்காக பாதிரியார் கெஞ்சினார். `இப்படியே போனா, இன்னும் பத்து வருஷத்திலே எப்படி இருக்கப் போறோம்னு கொஞ்சம் யோசிச்சுப் பாரு! நாளைக்கு வீடும், நாடும் ஒன்னால பெருமைப்பட வேண்டாம்?’ ‘
கத்தி எடுத்தவன் கத்தியாலதான் சாவான்!

பல முறை கேட்டிருந்ததுதான் என்றாலும், பாதிரியாரின் கம்பீரக் குரலில் கேட்டபோது, அதில் பொதிந்திருந்த உண்மை அவனை அதிர வைத்தது. உடல் பின்னோக்கிப் போயிற்று.

தான் நன்றாக இருக்க வேண்டும் என்பதில்தான் எத்தனை பேருக்கு உண்மையான அக்கறை! அது புரியாது, `பெரிய மண்ட`யுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதும், குடிப்பதும், கெட்ட ஜோக் சொல்லிச் சிரிப்பதுமே பிறவி எடுத்ததன் பயன் என்று இருந்து விட்டோமே! இப்படியே காலத்தைக் கடத்தினால், பத்து வருடங்கள் என்ன, அதற்கு முன்பே காவல் துறையினரிடமோ, அல்லது எதிரிகளின் கும்பலிடமோ அகப்பட்டு, அல்பாயுசில் சாகப்போவது நிச்சயம்.

அப்போது அம்மாவின் கதி? தானும் அம்மாவை நிர்க்கதியாக ஆக்கிவிடுவோமோ?
அவன் மனக்கண்முன் எதிர்காலக் காட்சி ஒன்று விரிந்தது — உடலும், மனமும் தளர்ந்து, ‘தறுதலையான மகனைப் பெற்றவள்’ என்ற அக்கம் பக்கத்தினரின் ஏளனத்தைப் பொறுத்துக்கொண்டு, அம்மா யார் யார் வீடுகளிலோ துணி துவைக்கிறாள், நாற்றமடிக்கும் கழிப்பறைகளைக் கழுவுகிறாள்.

அதுவரை எதற்குமே பயப்படாதவனுக்கு, மரணம் நிச்சயம் என்று புரிந்து போன பிறர் அடைந்த பயத்தைக் கண்டு குரூரமான மகிழ்ச்சி பெற்றவனுக்கு, அன்று முதன்முதலாகப் பயம் வந்தது.

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதையும் பாதிரியாரே சொல்லிக் கொடுத்தார்.
அதன் விளைவுதான்,` பெரிய மனசு பண்ணுங்க மண்ட,’ என்ற கெஞ்சல்.
தன் காதில் விழுந்ததை நம்ப முடியாதவராக அவனைப் பார்த்தார் அந்த கும்பலின் தலைவர். “என்னை விட்டுப் போகணுமா? ஏண்டா? ஒனக்கு நான் என்ன கொறை வெச்சேன்?” சிறிய நயனங்கள் மேலும் சிவந்தன.
அவன் வாளாவிருந்தான், தனக்கு அடுத்த இடத்தை அவர் அவனுக்குக் கொடுத்திருந்தது உண்மைதான் என்பதை ஒத்துக்கொள்பவனாக.

‘பாத்துக்குங்கடா. என் வாரிசு இவன். எனக்கப்புறம் ஒங்க பெரிய மண்ட! பயம்னா என்னான்னே தெரியாது இவனுக்கு!` என்று அவனே வெட்கத்தால் கூசிப்போகும் அளவுக்கு, பிசுபிசுவென்று முடி வளர்ந்திருந்த அவனுடைய முகவாயைத் தன் கையில் பிடித்துக்கொண்டு கொஞ்சி இருக்கிறார்.

உடனே, பாதிரியாரின் குரல் அவன் செவிகளில் அப்போதுதான் ஒலிப்பதுபோலக் கேட்டது. `நீ உன் இளமையைத் தொலைத்துச் சம்பாதித்துக் கொடுத்த பணத்தில், உன் தலைவர் பாங்கிலே பல லட்சமும், பென்ஸ் காரும் வைத்திருக்கிறார். நீயோ..!`

நான் யார்?
யோசித்தான்.

உள்மனம் அளித்த பதில் பயங்கரமாக இருந்தது.
அவன் —
கொலைகாரன். வெறும் குப்பை, சமூகத்தின் சாக்கடை.
தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தான். “எனக்கு எங்கப்பாமாதிரி போலீஸ் கையால, துப்பாக்கி குண்டு பட்டு சாக விருப்பமில்லீங்க, மண்ட. படிச்சு, எங்கம்மாவை நல்லபடியா வெச்சு காப்பாத்தணும். அவங்க என்னால சுகப்பட்டதே இல்ல, மண்ட!” குரல் தழுதழுத்தது.

“நீ என்னா கேக்கறேன்னு புரிஞ்சுதான் பேசறியா?” ஆத்திரத்துடன் கத்தினார். “என்னை பத்து தடவை தூக்கில போட வைக்கற அளவுக்கு ஒனக்கு நாம்ப செஞ்சதெல்லாம் தெரியும்,” என்றவரின் சுருதி இறங்கியது.

“சே! ஒன்னை என் மகனாவே நினைச்சு பாசம் வெச்சிருந்தேனே!” என்று தன்னைத் தானே நொந்துகொண்டார்.
மனதைக் கட்டுப் படுத்திக் கொண்டான் ஜோ. “மண்ட! நானும்.. ஒங்களை..,” குரல் தழுதழுத்தது. “என்னோட அப்பாவையே நான் காட்டிக் கொடுப்பேனாங்க?”

சுலபமாக எதற்கும் அதிராத அவர், திடுக்கிட்டவராக அவனைப் பார்த்தார். திருமணமே செய்துகொள்ளாது, பெரும்பொருளை மிகக் குறுகிய காலத்தில் எவ்வழியிலாவது ஈட்டுவதே பிறப்பின் லட்சியம் என்று அன்றுவரை நினைத்திருந்தவரை எதுவோ உலுக்கியது.

தனக்கும் ஒரு மகன் இருந்திருந்தால், அவனுடைய நல்வாழ்வுக்காக எது வேண்டுமானாலும் செய்யத் துணிய மாட்டோமா?

சிறிது யோசிப்பவர்போல் பாவனை செய்துவிட்டு, தனது வலக்கரத்தை நீட்டினார்.
வாய்கொள்ளாச் சிரிப்புடன் தன் கரத்தால் அதைப் பிடித்துக் குலுக்கினான் ஜோ.
“நீ என்னைப் பாக்க வர்றது இதுவே கடைசித் தடவையா இருக்கட்டும். என் மனசு மாறுகிறதுக்குள்ளே இங்கேயிருந்து ஓடிடுறா, தடிப்பயலே!”

ஒரு வினாடி இருவரின் கண்களும் கலந்தன. தத்தம் பலத்தில், ஆண்மையில், கர்வம் கொண்டிருந்த இருவரும் ஒருவர் கண்ணீரை மற்றவர் பார்த்துவிடக் கூடாது என்று அவசரமாக முகங்களைத் திருப்பிக் கொண்டனர்.
மௌனமாக வெளியே நடந்தவன் காதில் பின்னாலிருந்து வந்த குரல் அசரீரி போல் ஒலித்தது. “நீ எதுக்கும் கவலைப்படாதே, ஜோ. நல்லாப் படிச்சு, முன்னுக்கு வரணும், என்ன!”

திரும்பினால், மனம் தளர்ந்துவிடுவோமோ என்ற அச்சம் ஏற்பட, தலையை மட்டும் ஆட்டிவிட்டு நடந்தான் ஜோ.

– தென்றல் அமெரிக்கத் தமிழ் மாத இதழ் (www.tamilonline.com/thendral) சிறுகதைப் போட்டியில் சிறப்புத் தேர்வு பெற்றது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *