பூனைக் கண்ணன் கடத்திய அம்மன்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 26, 2014
பார்வையிட்டோர்: 19,739 
 
 

நினைத்ததுபோல் அம்மன் சிலை அவ்வளவு கனமாக இல்லை. உள்ளே கோயில் கருவறையில் இருப்பது கற்சிலை. அதைக் கிளப்பத்தான் பொக்லைன் வேண்டும். ஆனால், கோயில் உக்கிராண அறையில் பூவரச மரப் பத்தாயத்தில் காலம் முழுக்கக்கிடந்த அம்மன் சிரமம் தரவில்லை. ஐந்து கிலோ இருப்பாள். சின்ன உரச் சாக்கில் அடக்கஒடுக்கமாக நட்டக்குத்தறக் கிடக்கிறாள். மாசி, பங்குனி மாதக் கொடை நாட்களில் வெளியே எடுத்து, புளி போட்டுத் தேய்த்து, மற்றொரு முறை திருநீறு போட்டுத் துலக்கி, தயாராக உள்கோயிலில் அம்மனின் கற்சிலைக்கு இடது பக்கம் வைத்திருப்பார்கள்.

நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு வில்லுப்பாட்டுக்காரர் அம்மன் வரத்துப் பாடி, முரசு எகிறிக் குதிக்க, கோமரத்தாடிகளுக்கு ஆராசனை வந்து ஆடிப் பூ எடுத்து, சுற்றுபாடுத் தெய்வங்களுக்குப் பலி முடிந்து, சாமிக் கொண்டாடிகள் கோயில் நடைக்கு இறங்கும்போது, கோயில் முன் வாசலில் மான் வாகனம் ஜோடிக்கப்பட்டு பீடத்தின் மேல் அம்மன் சிலையை இருத்தி, மணிக்கயிற்றால் வரிந்துகட்டி, சர்வ அலங்காரியாகச் சற்றுக் கர்வத்துடன், கனிந்த பார்வையுடன் வீற்றிருப்பாள் அம்மன். அவளுடைய கையில் அவள் தோள் உயரத்துக்கு முச்சூலம் பொன்னே போல் ஒளிரும்.

பூனைக் கண்ணன் கடத்திய அம்மன்

சற்றுப் பயமாகவே இருந்தது பூனைக் கண்ணனுக்கு. எத்தனையோ குற்றங்கள், பாவங்கள் செய்திருக்கிறான். என்றாலும், தினமும் அம்மனின் மஞ்சள் காப்பைப் பூசித் திரிபவனுக்கு அவளையே களவாடுவதில் அச்சம். அன்ன விநாயகம் அடியாளான பூனைக் கண்ணனுக்குப் பலதரப்பட்ட வேலைகள். நாகரிக உலகத்தில் பல நிறுவனங்களில் சமூக விரோத வேலைகளுக்கு என்றே, நல்ல சம்பளத்தில் கார் வசதியுடன், செல்போன் சகிதம் அலுவலர் ஒருவர் இருப்பார். லஞ்சம் பேசி, அதை எவ்விடம், யாரிடம் கொடுப்பது; மது விருந்துகள் ஏற்பாடு செய்வது; சட்ட விரோதமாக உதவிகள் செய்வோருக்கு வெளிநாட்டுப் பயணங் கள் ஏற்பாடுசெய்வது; கேளிக்கைகளுக்கு அழகிகளைக் கூட்டிக்கொடுப்பது என ஏகமான பணிகளை அவர் பார்ப்பார். இவற்றை சின்னத் தோதில், ஊர்ப்புறத்துத் தோட்ட உரிமையாளருக்குச் செய்துகொடுப்பது பூனைக் கண்ணனின் வேலை. பண்ணை வீடுகளுக்கு இரவு விருந்தாட வரும் சின்னச் சின்னப் பெரும்புள்ளிகளுக்கு, அவர் சொல்லும் கேளிக்கைக்காரிகளை டிரைவருடன் சென்று பாதுகாப்பாகக் கொணர்ந்து, அதிகாலை திரும்பக்கொண்டுவிடுவது; சில்லறை வெட்டுக் குத்துக்களுக்கு ஆட்களை அடையாளம் காட்டுவது; எதிர்க் கட்சிக் கூட்டங்களில் சாரைப் பாம்பு அவிழ்த்துவிடுவது; தேர்தல் காலங்களில் சாக்குமூட்டைகளில் ரூபாய் நோட்டுகளைக் கொண்டுசேர்ப்பது… சின்னத் தோதில் அரசியல் கட்சிக்கு ஆதரவாக இருப்பவரின் அடியாளாக இருப்பது என்பது லேசுப்பட்ட காரியமா என்ன?

அன்னவிநாயகம் மத்திய-மாநில அமைச்சராக, நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினராக, மாநகர-பெருநகரத் தந்தையாக, மாநில ஆளுநராக எல்லாத் தகுதிகளும் உடையவர். இன்றெல்லாம் பணம் அலையும் காற்றில், உறைந்த மலையில், சலிக்கும் மணலில், பொடியும் கரியில் காய்க்கிறது. தவிரவும் பெரும்புள்ளி ஒருவரின் பினாமி ஆகவும் தனது மனைவியை, மக்களை, மைத்துனர்களைத் தயாரித்திருந்தார். முன்னால் போனால் கடிக்கும்… பின்னால் போனால் உதைக்கும் என்பதால், ‘சட்டம் ஒரு கழுதை’ என்றானாம் அறிஞன் ஒருத்தன். ஆனால், மேதைகள் வடிவமைத்த இந்தியச் சட்டம் இல்லாப்பட்டவனைத்தான் கடிக்கும், உதைக்கும்.

அன்னவிநாயகத்தின் பண்ணை வளாகத்தில்தான் பூனைக் கண்ணனின் இருப்பு. கூட இரண்டு நாட்டு நாய்களின் கூட்டு. செல்லும், செலவும், உணவும், துணியும் கிடைக்கும். கட்சிப் பேரணிகள், எழுச்சி மாநாடுகள், பொன்மொழி மாநாடுகள் என்று வெள்ளை ஸ்கார்ப்பியோவில் அன்னவிநாயகம் போகும்போது செந்நாய்ப் படைபோல, ஓட்டுநருக்குப் பக்கத்து இருக்கை, பூனைக் கண்ணனுக்கு. ஸ்கார்ப்பியோ நிற்க யத்தனிக்கும்போதே கதவு திறந்து குதித்து, அன்னவிநாயகத்துக்குக் கதவு திறந்துவிடுவது, அவர் நடக்கும்போது, ‘விலகு விலகு’ என்று ஆள் ஒதுக்குவது, தங்கும் இடங்களில் எடுபிடி வேலைகள் செய்வது என்று ஏகப்பட்ட மக்கள் பணி அவனுக்கு. பூனைக் கண்ணன் சின்னத் தோதில் செய்த வேலைகளைப் பெரிய தோதில் செய்தார் அன்ன விநாயகம்.

அம்மனைத் தலையிலும் தூக்க முடியாது, தோளிலும் போட முடியாது. சாக்கின் வாயைச் சுருட்டிப் பிடித்து, புத்தகப் பையைத் தோளில் மாட்டுவதுபோலப் பற்றி இருந்தான் பூனைக் கண்ணன். அருள் பாலிக்கும் கமலக் கால்களாலும், மூவுலகின் பசியாற்றும் பொற்கிண்ண முலைகளாலும், அபயம் அளிக்கும் கருணைக் கரங்களாலும், திரிசூலத்தாலும் முதுகில் குத்திக்கொண்டே இருந்தாள் அம்மன்.

பூனைக் கண்ணன் கடத்திய அம்மன்2

பூனைக் கண்ணனுக்குத் தலைவர் உத்தரவு வேறாக இருந்தது. ‘ஊர் முதலடி’ எனும் பதவி நிலவுடமையாளர், ஆள்கட்டு உடையவர், அதிகாரம்கொண்டவர், பணம் போட்டுப் பணம் எடுப்பவருக்கு ஊர் ‘மனமுவந்து’ அளிப்பது. இந்து அறநிலையத் துறை ஆலயங்களின் தக்கார்போல. தக்கார் என்பவர் பெரும்பான்மையும் தகவிலர்தானே! ஆனால், அரசாங்கக் கெடுபிடிக்குள் வராத ஊர்க் கோயில்களுக்கு, ஊரே முதலடியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும். கோயில் நிலங்களைப் பாட்டம் கொடுத்து நெல் அளந்து வாங்குவது; அல்லது தானே பாட்டமாக வைத்துக் கொள்வது; நெல்லைப் பத்தாயப் புரையில் போட்டுவைத்திருந்து, சமயம் பார்த்துக் கூடுதல் விலைக்கு விற்று, குறைந்த விலையில் கணக்கை எழுதிக்கொள்வது; வரி வசூலித்துக் கொடை விழா நடத்துவது; கோயில் பிரசாதங்களில் முதல் மரியாதை பெறுவது; கோயில் சாவி, அம்மன் சிலை, வெள்ளி அங்கிகள், உருப்படிகள் பாதுகாக்கப்படும் பத்தாய சாவி, நெல்புரை சாவி, செம்பு -உருளி-நிலவாய் -அண்டா- போணி – குட்டுவம் எனக் கிடக்கும் பாத்திரப் புரைச் சாவி, கணக்கு வழக்கு கள் எல்லாம் முதலடியின் பொறுப்பில் வரும்.

சரிகைக் கரை வேட்டி, மாரில் சந்தனம், நெற்றியில் திருநீறு, மஞ்சள் காப்பு, குங்குமம் என்றொரு தோரணை உண்டு கோயில் காரியங்களில். சுய மரியாதைக் கட்சி, இந்திய தேசியக் கட்சி, ஊர் முதலடி, எல்லாம் முரண்பாடான கூட்டணி அல்லவா என்று உமக்குத் தோன்றக்கூடும். இன்றைய சமூகப் பின்நவீனத்துவம் அது. நள்ளிரவில், கோயில் சாவியை எடுத்துக் கொடுத்து, உக்கிராணப் புரைச் சாவியை அடையாளம் காட்டி, பத்தாய சாவியைத் தெரியக்காட்டிச் சொன்னார் முதலடி.

”உருப்படிகளைத் தொடப்படாது. அங்கிகள்ல கை வைக்கப்படாது. அம்மன் சிலைய மட்டும் இந்தச் சாக்கிலே போட்டுக் கட்டிக்கொண்டாந்திரு. ஒரு குருவி அறியக் கூடாது. வீட்டுக்குக் கொண்டாராண்டாம். வயக்காட்டோட பம்மிப் போய், இலுப்பாத்தங்கரையிலே ஏறு… அங்க நம்ம கட்டைப் பூலிங்கம் நிப்பான். அம்பாசடர் காரு இருட்டிலே ஒதுங்கி நிறுத்திக்கெடக்கும்… நேரே கும்பகோணம் போயிருங்கோ. விடிஞ்ச பெறவு நான் ஸ்கார்ப்பியோவில் பொறப்பட்டு வாறன்… என்னா? சூதானமாச் செய்யணும்… அம்புட்டேனு வையி, கொரவளையை அறுத்தாலும் என் பேரு வெளியில வரப்படாது. கோயிலைப் பூட்டி, சாவியை மட்டும் நம்ம மாட்டுத் தொழுவிலே வெச்சிட்டுப் போ. செலவுக்குப் பணம் கட்டப் பூலிங்கத்துக்கிட்டே இருக்கு… போ… பாத்துச் செய்யி.”

ஆனால், பணிக்கப்பட்ட திசைக்கு எதிர்த் திசையில் ஓடிக்கொண்டிருந்தான் பூனைக் கண்ணன்.

போன கொடைக்கு அம்மன் சிலையைத் துடைத்துச் சுத்தப்படுத்த வெளியே எடுத்தபோது, அன்னவிநாயகத்தின் இரண்டாம் மருமகன் தொல்லியல் துறை அதிகாரியாக இருந்தான். கொடை பார்க்க மாமனார் வீட்டுக்கு வந்தவன், பொழுது போகாமல் கோயிலுக்குள் நுழைந்தான். இரவு வாகனத்தில் வைத்துக் கட்ட, புளிபோட்டுத் துலக்கிவைத்திருந்த அம்மன் சிலையைத் தூக்கிப் புரட்டிப் புரட்டிப் பார்த்தான். முகத்தில் வியப்பு ரேகைகள் அடர்ந்தன.

அன்னவிநாயகம் சொன்னார் ”என்ன மாப்பிள? வெறும் பித்தளைதான். சவம் கறுத்துப் போயிக் கெடந்து…”

மருமகன் ஒன்றும் சொல்லவில்லை. திங்கள் இரவில், கோயிலில் ‘குடி அழைப்பு’ முடிந்த பிறகு, அன்னவிநாயகம் வெற்றிலை போடும்போது மெதுவாகப் பேசினான்.

”மாமா, அம்மன் சிலை பித்தளை இல்ல.”

”பின்னே?”

”ஐம்பொன்னாக்கும்…”

”ஓகோ! அப்படின்னா மதிப்புக் கூடுதல்லா?”

”ம்… இந்த உசரம், எடைக்கு ஐம்பொன்னுன்னா உள்ளூர் மார்க்கெட்ல பத்துப் பதினஞ்சு லகரம் போகும். ஆனா, சங்கதி அது இல்ல. சிலையோட பீடத்தில் ஒரு லச்சினை இருக்கு, கவனிச்சேளா?”

”லச்சினைன்னா?”

”அரச முத்திரை. என் கணக்கு சரியா இருந்தா… ஆயிரத்தி நூறு வருஷத்துக்கு முந்தினது. உங்க ஊர்ப் பெயரைவெச்சுப் பாத்தா வீரநாராயணன் சடையன் காலமாட்டு இருக்கும்.”

”அதாரது மாப்பிளை?”

”இரண்டாம் வரகுண பாண்டியன்.”

”எனக்கு ஒரு எளவும் மனசிலாக மாட்டங்கு. விலை இன்னும் கூடுதலாட்டு இருக்குமா?”

”உள் நாட்டுல கோடி பெறும்… கண்டம் தாண்டிப் போயிட்டா பல கோடி.”

”அது எப்பிடி மாப்ள?”

”அது அப்படித்தான். ரகசியமா வெச்சுக்கிடுங்கோ… உங்க ஊரு சோத்துமாடனுகளுக்குத் தெரியாண்டாம்.”

அன்ன விநாயகத்துக்கு அதன் பிறகு உட்கார்ந்து கிடக்க மனமில்லை. தோது பார்த்து, அம்மன் சிலையை வெளியே எடுத்து கும்பகோணம் கொண்டுபோய், அதே போல் பித்தளைச் சிலை ஒன்று செய்து வாங்கி, அதைக் கோயிலுக்குள் வைத்துவிடலாம். மருமகன் நல்ல விலைக்கு ஐம்பொன் அம்மனை விற்றுத்தருவார்.

அம்மனுக்குச் சற்று நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது. ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் கொடைக்கு வெளியே வந்து, சுத்தக் காற்றைச் சுவாசித்து, களபம்- சந்தனம்- பன்னீர்- சூடம்- சாம்பிராணி வாசம் மோந்து, பிச்சி-அரளி-கமுகம் பூக்கள் சூடி, ஊரை உலா வருவதோடு சரி. பிறகு, அல்லும் பகலும் அறுபது நாழிகையும் பத்தாயத்துக்குள் காற்று இறுக்கம், வவ்வால் வாசம், எலி நடமாட்டம் புழுங்கிய சிவப்புப் பட்டுச் சொரசொரப்பு. பூனைக் கண்ணன் மீது கொஞ்சம் நன்றி உணர்ச்சியும் ஏற்பட்டது. நட்டக்குத்தற அம்மனைச் சாக்கினுள் நிறுத்தி, சணல் கொண்டு சாக்கைக் கட்டி, பத்தாயத்தைப் பூட்டி, உக்கிராணப் புரையைப் பூட்டி, கோயில் நடை சாத்தி, முதலடி வீட்டு மாட்டுத் தொழுவத்தின் மாடக்குழியில் சாவியை வைக்கப்போனபோது… விரல் நீளப் பாம்பு ஒன்று துள்ளி ஓடியது. நல்ல காலம்தான் என்று எண்ணினான். அம்மன் தனக்குள் மெள்ள நகைத்துக்கொண்டாள்.

ஊர் எல்லைக்கு வந்தான். பிள்ளை நிலா வெளிச்சம் கூட இல்லை. பூனைக் கண்ணன் என்பதே அவனுக்குக் காரணப் பெயர்தான். இருட்டிலும் அவனுக்குக் கண் பார்வை அப்படி. புழுதியில்கிடக்கும் நாலணாகூடத் தெரியும். ஊர் எல்லை வந்து, கிழக்குப் பக்கத் தடத்தில் வயற்காட்டு வரப்பில் இறங்கி நடக்கணும் மருதமரங்களை அடைய.

”மேக்கே போலே மயிராண்டி” என்றது மனக்குரல். சற்றுத் திடுக்கிட்டான். காரணம் இல்லாது மனது சொல்லாது. பல நேரங்களில் மனக் குரலைச் செவி மடுத்து, அவன் தோற்றதில்லை. மேற்கு நோக்கி, ஓடைக் கரையில் அஞ்சல் ஓட்டமாக ஓடத் தொடங்கினான். காதோரம் கால் சலங்கை சிணுங்கினாற் போல் நகை ஒலி. பேருந்து சடாரென இறக்கத்தில் இறங்கும்போது ஏற்படும் மூலாதாரக் கூச்சம். சாக்கு மூட்டையைத் தோளில் சுமக்கும்போது அம்மனின் செப்பு முலைக் காம்புகள் முதுகில் குத்துகின்றனவோ என்றொரு மருள். இலக்கு ஏதுமின்றி ஏவப்பட்ட கணைபோல் நெட்டோட்டமும் அஞ்சல் ஓட்டமுமாகப் பூனைக் கண்ணன் வந்து சேர்ந்த இடம் பத்மனாறு. புறப்பட்ட இடத்தில் இருந்து மேற்குத் திசையில், மலைஅடிவாரத் தில் அறுத்துக்கொண்டு ஓடும் பத்மனாற் றைத் தாண்டினால் மேற்கு மலை ஏறும் தடம் பிரியும்.

சளசளவென்று ஊற்றியது வியர்வை. ஆற்றைக் கடக்க பாலமும் ஆற்றில் இறங்கப் படிக்கட்டும் இரண்டு மைல் தெற்கே இருந்தன. தொண்டை வறண்டது பூனைக் கண்ணனுக்கு. ஆற்றில் மாடு இறங்கும் தடம் ஒன்று தென்பட்டது. ஆனி-ஆடிச் சாரல் தெளிந்து இறங்கிய மலை வெள்ளம் இடுப்புக்கு மேல் ஓடியது. குனிந்து மாடு குடிப்பதுபோல் ஆற்றைப் பருகினான். திரும்பவும் கரையேற முயன்றபோது, ‘மேலக் கரைத் தடத்திலேதான் ஏறேன்… மூதி’ என்றது மனக் குறளி.

கோயிலைப் பூட்டி இறங்கியபோது ஒரு மனத் தைரியத்துக்காக, உள்நடை வாசல் ஓரம் தொங்கிக்கிடந்த மரக் கொப்பரையில் கைவிட்டு நெற்றி நிறையத் திருநீறு பூசியிருந்தான் பூனைக் கண்ணன். இப்போது, ஆற்றில் நின்றவாறு எட்டி சாக்கைக் கரை யில் வைத்துவிட்டு, அம்மனையே திருடிய குற்றத்தைக் கழுவிவிடுவதுபோல முங்கிக் குளித்தான். சிவந்தெரியும் கண்கள் தணிந்தன.

மருத மூட்டில் ரொம்ப நேரமாகக் காத்திருந்த கட்டைப் பூலிங்கம் காரைக் கிளப்பிக் கொண்டுபோய் அன்னவிநாயகத்திடம் சொல்லி இருக்கக்கூடும். தேளாகக் கடுக்கத் தொடங்கியிருப்பார்.

”எங்க போயிருவான்? மப்புல மாடுகளுக்கு இடையிடுல தொழுவத்துல விழுந்துகிடப்பான். மசணை மாடன்… நீ போய்ப் படுடே பூலிங்கம்… காலம்பற பாப்போம்” என்றார் முதலடி.

பூனைக் கண்ணன் மோசக்காரனல்ல. கோவணம் கட்ட அரைஞாண்கொடிகூட இல்லாமல் வந்தவன். ‘மூதி சுருட்டுப் பிடிக்கும். கள்ளோ, சாராயமோ மாந்தும். ரெண்டாளம் சோறு திங்கும். வயசு நாப்பதா இருக்கும். இதுவரைக்கும் பொம்பளைக்காகக் கோவணம்கூட அவுத்திருக்க மாட்டான்…’ என்று பாய்ந்தது முதலடியின் சிந்தனை. ஏழெட்டு வயதில் எங்கிருந்து வந்தானோ? ஊராரோ, உற்றாரோ யாரும் அவனைத் தேடி வரவில்லை.

ஆற்றில் குளியல், புறவாசலில் சோறு, பத்தாயப் புரையில் உறக்கம். எதையும் ஏவினால் செய்து முடித்திருப்பான். கழுத்தறுத்தாலும் காட்டிக்கொடுக்க மாட்டான். அது பற்றிய பயம் இல்லை அன்னவிநாயகத்துக்கு. மேலும், அம்மன் சிலை யைத் தானே அடித்து மாற்றச் சொல்லிவிட்டு, அரசு வல்லாண்மைத் துறையிடம் புகார் கொடுக்க இயலுமா? எதுவானாலும் விடிந்து பார்த்துக்கொள்ளலாம் என்று படுக்கப்போனார்.

பூனைக் கண்ணனை, சித்தமோ, சிவமோ, சிவசக்தியோ, ஏதோ ஒன்று உள்ளிருந்து செலுத்திக் கொண்டிருந்தது. சிலையை மடை மாற்றி விற்கவோ, கடத்தவோ அவனுக்கு அவ்வளவு கருத்தில்லை. ஆற்றின் மறுகரை ஏறி, சிலை இருந்த சாக்கை அலுங்காமல் சற்று மாற்றிவைத்து, ஈரத் துணியை உரிந்து முறுக்கிப் பிழிந்து, உதறிக் கட்டினான்.

‘இருட்டில் எவம் பார்க்கக் கெடக்கு?’ என்றோடியது மனக் குரங்கு.

‘ஏண்டா… இங்கொரு பொம்பளை இருக்கது ஓர்மை இல்லையா?’ என்றொரு குரல் குறுக்கு வெட்டியது. யார் பேசியது? அம்மனா… அசரீரியா? மனக் குறளியா? திரும்பத் திரும்பக் கேட்க… சிறுவரி சிலை எந்தக் காலத்திலடா பேசியது?

அன்னவிநாயகம் அதிகாலையில் குளித்து, திருநீறு அணிந்து, சாமிப் படங்களுக்குத் தூப தீபம் காட்டி, நானாவிதப் பரிமள புஷ்பங்கள் சாத்தி, மணி அடித்துப் பாடும் பாட்டொன்று மனத்துக்கண் ஓடியது. ‘அம்மையே… அப்பனே… ஒப்பிலா மணியே…’

ஈரத் துணியுடன், காடடைந்து கிடந்த தலைமயிர் காற்றாட, அம்மனைத் தூக்கித் தோளில் சாத்தினான். கும்மிருளில் சிறு விலங்குகளின் அசைவுகூட இல்லை. எல்லாம் உணவெடுத்து ஓய்வும்கொண்டனபோலும். காட்டு வெருதுப் பூனை ஒன்று ஓடியது குறுக்கே. கெட்ட சகுனம் என்று தோன்றியது. ‘கடவுளையே சுமப்பவனுக்குச் சகுனம் என்னடா பூனைக் கண்ணா?’

‘போச்சுடா’ என்றான் பூனைக் கண்ணன்.

ஆற்றங்கரை தாண்டி, புறம்போக்கு வெட்டித் திருத்திப் போட்டிருந்த கடலை விளை, காணம் விளை, எள்ளு விளை, மரச்சீனி விளை தாண்டி, பனந்தோப்பு, மா… குழை மரங்கள் காடடைந்து கிடந்த தோப்புகள் தாண்டி… விறுவிறுவென்று மலையேறிக்கொண்டிருந்தான் பூனைக் கண்ணன். விறகு பொறுக்கப்போகும், ஆடு மேய்க்கப்போகும், தடம் ஒன்று தெரிந்தது இருட்டினுள். தெரிந்ததா… இல்லை அம்மன் காட்டினாளா? இளநிலா எட்டிப் பார்த்தது ஏளனத்துடன். எனினும் காடு அடர்ந்துகொண்டும், இருண்டுகொண்டும் போனது. அரவங்களோ, ஓணானோ, எலிகளோ சரசரத்தன புதரினுள். மரத்தின் மறைவில் சிவந்த இரு கண்கள் தெரிந்தன. நாட்டைக் குரங்கோ, முள்ளம் பன்றியோ, காட்டுப் பூனையோ? எடையற்றுப்போயிருந்தாள் அம்மன். வாலைச் சிறுமி ஒருத்தியைத் தோளில் சாத்தி, மலையேறுவதுபோல் சுகமாகவும் இருந்தாள்.

நீண்டு நகர்ந்தது இரவு… மலைச் சர்ப்பம்போல. விடிவுக்கு எத்தனை நாழிகைகளோ? அல்லது விடியாமலேயே போய்விடுமோ? மலையேறும்போது மூச்சு மூக்கு முனைகளிலிருந்து வெப்பமாக, வேகமாகச் சீறிச் சுழன்று வந்தது. ஈரத் துணிகள் உலர்ந்துவிட்டன.

வலது பக்கம் காட்டு ஓடை ஒன்று வளைந்து, சரிந்து ஓடியது. புதர்களை ஒதுக்கி, ஓடையில் இறங்கி, கால் நனைத்துச் சற்று நேரம் நின்றான் பூனைக் கண்ணன். சிரிப்பு பீறிட்டுக் கிளம்பியது. ‘என்ன வேலை செய்ய வந்து, என்ன வேலை செய்துக்கிட்டு இருக்கேன்?’ சுற்றிலும் புதர்களும் கொடிகளும் முட் தாவரங்களுமாகக் காடு பற்றிக் கிடந்தன. வானத்துக் கருமையுளும் சில நட்சத்திர ஒற்றாடல்கள்… அம்மனை இறக்கி ஓடைக் கரையில் வைத்தான். சாக்கு வாயை அவிழ்த்தான்.

”தண்ணி சில்லுனு இருக்கு… குளிக் கியாட்டிகுட்டி?” என்றான். அவள் முகத்தில் எஞ்ஞான்றும் மங்காத மாய முறுவல். உரச் சாக்கை உரித்து புதர் மேல் எறிந்துவிட்டு, ஓடையில் நிறுத்தி, இரு கரங்களாலும் தண்ணீர் கோரிக்கோரி அம்மன் மேல் ஊற்றினான். கைவிரல்களால் தண்ணீரை வழித்துத் தடவினான். பாதங்களும், கால்களும், துடைகளும், வரியோடிய வயிறும், நாபிச் சுழியும், ஒடுங்கிய இடையும், கழுத் தும், கரங்களும், கன்னமும், உதடுகளும் கண்களும், நெற்றியும், உச்சியின் மணிமுடியும்.

மறுபடியும் யாத்திரை. இருமுடி கட்டி சபரிமலை ஏறுவதுபோல். ‘தேக பலம் தா… பாத பலம் தா… தாது பலம் தா… மோக பலம் தா…’! மலை மேல் யாரோ விருந்தினர் விடுதி கட்டிவைத்திருப்பதுபோலவும், போனவுடன் வெந்நீரில் குளித்து, சட்டமாகச் சாப்பிட்டு, பஞ்ச சயன மெத்தையில் கால் நீட்டிப் படுக்க வேண்டியதுதான் என்பதுபோலவும் வேகமாக நடந்துகொண்டிருந்தான். களைப்பில்லை, சோர்வில்லை, பயம் இல்லை, துன்பம் இல்லை. மலையின் தோள் பகுதியில் நடந்துகொண்டிருந்தான். கிழக்கு வெளுத்துவருவதுபோல் இருந்தது. பறவைகள் சிலம்பின. கருமையின் கட்டுக் குலைந்து, காடு கண் விழித்துச் சோம்பல் முறித்தது. எந்த மாற்று யோசனையுமின்றி, ஏதோ கோயில் சந்நிதிக்குச் சென்று தேவ தரிசனம் செய்ய இருப்பவன் வேகத்துடன் பூனைக் கண்ணன் நடந்தான்.

தெய்வத்தைக் கீழே இறக்கிவைத்துவிட்டு, சூரியனைக் கை தொழுதான். புதிய காட்சி, புதிய உதயம் என்றாலும் தோள்பட்டை வலித்தது. கால்கள் கடுத்தன. இரவு முழுக்க முழித்த கண்கள் காந்தின. பல் விளக்கிவிட்டு, பின் வாசலில் நின்றால் பெரிய நாச்சியார் தேநீர் ஊற்றித் தரும் நேரம். எங்காவது படுத்து உறங்கினால் போதும் என்றிருந்தது. வயிறு, குடல் முறிப் பண் பாடியது.

என்ன இது பைத்தியக்காரத்தனம்? திரும்ப மலை இறங்கி, தலைவர் வீட்டுக்குப் போய்…. ‘தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே!’ எனலாம். இவளை இங்கோர் புதரிடைப் போட்டுவிட்டுத் தேசாந்திரியாகப் போய்விடலாம். அல்லது எங்காவது கொண்டு விற்று விடலாம்.

‘கடவுளை விற்கவோ வாங்கவோ முடியுமாடா மூடா?’

‘எல்லாம் இந்த இவளால்தானே!’ சமுண்டித் தள்ளிரலாமா’ என்று காலைத் தூக்கினான். முதுகு, பாறை மீது மளார் என அடிக்க, சறுகி மல்லாக்க விழுந்தான். நல்ல வேளை பிடறியில் அடிபடவில்லை. கலகலவெனச் சிரித்தது யார்! கானுயிர் களா? சிரிப்பு, வலி மறைத்து இனித்தது.

‘என்னட்டி? சிரிப்பா இருக்கா? ஆளைப் போட்டுப் பதங்குலைக்கியே!’

‘நானாடா… என்னை இங்கே தூக்கியாரச் சொன்னேன், பைத்தியாரா? பாட்டு கேட்டிருக்கியா – ‘விதி ஒன்றது பிடர் பிடித்து உந்த நின்றது!’

‘ஆமா! இதுல பாட்டு வேற! இப்பம் என்ன செய்யலாம்? கடவுளைக் கள்ள மொதலாட்டு விக்க மனசில்லே!’ ‘கடவுளை விக்கத்தாண்டா நாயே, கண்டம் விட்டுக் கண்டம் கள்ள மொதலு வருது…’

கனத்த மௌனம். சூரியன் வெப்பக் கதிர் வீச்சைத் தொடங்கினான். பெற்ற பிள்ளையை வாரி அணைப்பதுபோல், நெஞ்சோடு அம்மனைச் சேர்த்து பிடித்தபடி மலையேற ஆரம்பித்தான். தடம் என்று ஒன்று இல்லை. கனத்த புதர் மண்டிய காட்டினுள் கால் போன வழி எல்லாம் தடம்தான். ஏறியேறிக் களைத்து மொட்டைப் பாறையன்று முட்ட, அதன் காலடியில் நின்றான். மழைக்கும் வெயிலுக்கும் ஓராள் ஒதுங்கத் தோதாகச் சாய்ந்து நின்றது பாறை. வெடிப்புகளில் குற்றுச் செடிகள் முளைத்துக்கிடந்தன.

‘என்னா… இங்கினா, குத்தவெச்சிரலாமா?’ என்று கேட்டான் பூனைக் கண்ணன். குத்துச் செடிகள் சிலவற்றைப் பிடுங்கி, வாருகோல் போலச் சேர்த்துப் பிடித்து, பாறை மீது பரவிக்கிடந்த விலங்கின விட்டைகள், புழுக்கைகளைப் போக்கினான். புதர்களைப் பிடுங்கி ஒதுக்கினான். கொஞ்சம் படுக்க வேண்டும் என்று தோன்றியது. துண்டை உதறிப் பாறை மேல் விரித்து, வலக் கையை மடித்துத் தலைக்குவைத்துப் படுத்தான். அவனை வெறித்தவாறு நின்றிருந்தாள் அம்மன். நல்ல நிழல், தண்காற்று. உறக்கம் அள்ளிக்கொண்டுபோனது. தன்னை மறந்த உறக்கத்தில் நெடுநேரம் உறங்கினான். கண் விழித்தபோது, சூரியன் மேற்கில் சாய்ந்திருந்தது.

எழுந்து, சடைவு முறித்து அம்மனை அமர்த்த வாகான இடம் தேடினான். நின்ற பாறையும் கிடந்த பாறையும் சந்திக்கும் இடத்தில், உட் சரிவில் தளம் நிரப்பாக இருந்தது. நட்டமாக நிறுத்தினான். லேசாகப் பீடத்தில் ஆட்டம் இருந்தது. பாறைச் சில்லு எடுத்து அண்டக்கொடுத்தான்.

கொடும் பசி. அவளுக்கும் பசிக்கும்தானே! சலசலத்து ஓடியது சிற்றோடை. படுத்தவாக்கில் குளித்தான். ஓடைக் கரையில் அகன்று விரிந்து ஆடிய சேம்பு இலையில் தண்ணீர் முகர்ந்து அம்மனைக் குளிப்பாட்டினான். காற்று அவள் மேனியைத் தழுவித் துடைத்தது. பூத்திருந்த மஞ்சணத்தியைத் தழையுடன் பறித்து, சூட்டினான்.

பூனைக் கண்ணன் கடத்திய அம்மன்3

தின்னக் கிடைக்குமா ஏதும் என்று தேடினான். சற்றுத் தொலைவில் காட்டுப் பலா, சிறு கோட்டுப் பெரும்பழங்கள். மந்திகள் பழம்பறித்துக் கையால் பிளந்து, கை நுழைத்துச் சுளை எடுத்து, கொட்டை வீசி, சாறொழுகத் தின்றுகொண்டிருந்தன. குரங்குகளுக்கு ஒதுக்கமாக நடந்து… தாழ்ந்து தொங்கிய பலாப்பழம் ஒன்றைப் பறித்துவந்து பாறையில் மோதி, இரண்டாக இரணியன் மார்பைப் பிளப்பதுபோல் பிளந்து, முதல் பாதியை அம்மனுக்குப் படைத்துவிட்டு, மறு பாதியைச் சுளை எடுத்துத் தின்னத் துவங்கினான். காட்டு எலிகள், காட்டு அணில்கள், காட்டு முயல்கள் எட்டிப்பார்த்தன. கூட்டமாகப் பெரிய ஈக்கள் வந்து மொய்த்தன. அவனுக்கு ஏதோ ஒன்று கிடைத்தது தினமும் தின்பதற்கு. சமைக்காத உணவுதான். அம்மன் சைவம். தேடும்போது அவளே முன்நின்று காட்டுவாள். தீ முட்ட அவனிடம் ஒன்றும் இல்லை.

தாயும் மகனுமா? தகப்பனும் மகளுமா?

குறுமுயல், காட்டுப் பன்றி, முள்ளம் பன்றி, பெருச்சாளி, அணில், ஓணான், நச்சரவங்கள், விஷமற்ற பாம்புகள், கருடன், செம்போத்து, கருங்காகம், வால் நீண்ட கருங்குருவி, புறா, கிளி, குருவி, சிட்டு, மயில் எனப் புள்ளினங்கள் முறைவைத்துப் பார்த்துப்போகும். புலியும் வெங்கரடியும் வாழும் காடு அல்ல அது. எதுவானாலும் அவனுக்குப் பகை இல்லை. அவனும் எவற்றுக்கும் பகை இல்லை என ஆகிப்போயிற்று.

மா காய்த்தது, புளி உதிர்ந்தது, அன்னாசிப் பழம் மணத்தது. காட்டு எலுமிச்சை, நாரத்தை, வள்ளிக் கிழங்குகள்… எதுவானால் என்ன? குரங்குகள் காட்டித் தந்தன. அம்மனுக்கு குங்கும நிறத்துக் கொமுஞ்சி மலர் ஒருநாள், காட்டுப் பிச்சி ஒருநாள், மாம்பூ ஒருநாள், உண்ணிப் பூங்கொத்துகள் ஒருநாள்.

தலைமயிர் அடர்ந்தது. தாடியும் வளர்ந்தது. உடுத்த வேட்டி கிழிந்து கோவணம் ஆயிற்று. கோவணம் நைந்து காற்றோடு பறந்தது. தாய் ஒருநாள் சிவ மூலிகை காட்டிக் கொடுத்தாள். நறுமலரை அவளே சூடிக்கொண்டாள். இலை கசக்கித் தின்று பாறை மேல் கண்டம் கிடத்திக் காட்டில் மேகம் போல மிதந்தான். மாடு மேய்ப்பவர், சுள்ளி பொறுக்க வந்தவர், விறகுக்கும் சுக்கு நாறிப் புல்லுக்கும் வந்தவர், மின்னல் போல் தோன்றி மறையும் சடைமுடிச் சாமியாக அவனைக் கண்டு அஞ்சினர். மாடு மேய்க்கும் சிறுவர் சிலர் கூடி ஒருநாள் ஏறி வந்து பார்த்தபோது, பாறை மீது, தன் பெயரையே மறந்துபோன பூனைக் கண்ணன் நிர்வாணமாகக் கண்ணயர்ந்திருந்தான். கண்ணில்பட்ட அம்மன் சிலையின் சிரசில் கருநாகம் ஏறிச் சுருண்டு படமெடுத்து நின்றது. ஒவ்வொருத்தராக வரத் தொடங்கினார்கள். காலடித் தடம் பதிந்தது. சிலர் சேர்ந்து, பனையோலைக் குடில் ஒன்று வேய்ந்து கொடுத்தனர். அம்மன் குடிலாயிற்று. சிலர் வந்து அரிசிப் பாயசம் வைத்து வழிபட்டுப்போனார்கள். நிழலில் படுத்திருந்த சாமி முன்பும் அம்மன் சிலை முன்பும் தேக்கிலையில் படைத்தார்கள்.

நள்ளிரவுகளில் தூக்கம் வராமல் அம்மனும் பூனைக் கண்ணனும் தனித்திருந்து உரையாடிக்கொள்வார்கள். சீவராசிகள் கவனித்துக் கேட்டுக்கொண்டிருக்கும், சிதானந்தம் பாடம் கேட்பதுபோல.

பூனைக் கண்ணன் ஒருநாள் அம்மனிடம் கேட்டான், ‘கெட்டவன்னு தெரிஞ்சும் தண்டிக்கலேன்னா, நீயெல்லாம் என்ன சாமி?’

அம்மன் சொன்னாள், ‘நல்லவன்னா யாரு? கெட்டவன்னா யாரு?’

‘போட்டீ… புத்தி கெட்டவளே!’ என்றான் பூனைக் கண்ணன்!

– ஜூன் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *