புற்றுச் சாமியும் உண்மையின் விளக்கமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 933 
 
 

நல்லதம்பி ஆசிரியருக்கு அது நம்பிக்கை அவநம்பிக்கை என்பவைகளுக்கு அப்பால், புற்றுச் சாமியைக் காண்பதிலுள்ள அந்தப் பின்னடிப்பு நேரமின்மையின் காரணமாகவே இருந்தது. இல்லாவிட்டால் மனைவி அஞ்சனாதேவியின் விருப்பத்தை மீறுகிறவரல்ல நல்லதம்பி. அவரறிந்தவரையில் புற்றுச் சாமியைத் தேடிக் கண்டுபிடித்ததொன்றும் யாருக்கும் சுலபத்தில் இருந்துவிடவில்லை. மதியத்தில் தேடத் தொடங்கினால்தான் மாலைக்குள்ளாகவாவது அந்த அடர் பனங்கூடற் பற்றைக்குள் அவரைக் கண்டுபிடிக்க வாய்ப்பிருக்கிறது. அதுவும் நிச்சயமில்லாதது. தியானம் கூடும்வரை மனித சஞ்சாரமற்ற அப் பனங்கூடலுள் அங்கிங்காய் நடந்து திரியும் புற்றுச் சாமி, எந்த அயற் கிராமத்தையும் எது தேவைக்காகவும் அணுகுபவரில்லை. தன் காரியமாய் அவர் வெளியே செல்வதற்கு ஒரேயொரு நாள்தான் உண்டு. பூமியை இருள் கவியும் மாதத்தின் அந்த ஒரேயொரு நாளான அமாவாசையாகவே அது இருந்தது. சாமி அன்று தன் விருப்ப தரிசனம் கொடுப்பதும் அவிநாசிக்கு மட்டுமாகவே இருந்ததென்பதும் பலரறிந்த ரகசியம். அது இரண்டு சக்திகளின் சங்கம காலமாகவன்றி வேறல்லவெனவே அறிந்தவர்கள் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். சாமிபோலவே அவிநாசி. சாமிக்கு தன் சக்தியை வெளிப்படுத்த சமயங்கள் கிடைத்ததோடு, தந்திரங்களும் தெரிந்திருந்தன. அவிநாசி அவை கைவரப்பெறாதவள். ஆனால் சக்தி உள்ளவள். அதை திரிபட்ட சடையிலும், சிவந்த கண்களிலும், கறுத்த பற்களிலும், குறைச் சுருட்டின் புகைப்பிலும் ஒருவரால் தெளிவாகக் கண்டுகொள்ள முடியும். சாமி பேசுவார் இரண்டொரு வார்த்தையேனும். அவிநாசி பேசா நாட்களே அதிகமிருந்ததெனச் சொல்வார்கள். அது சக்தியின் திளைப்பில்லாமல் வேறென்னவென கிராமங்கள் திகைப்போடு சொல்லிக்கொண்டன. அருகிலிருந்து கண்ட கிராமங்களிலிருந்து பரவிய தகவல்களை நகரமும் நம்பத் தொடங்கியிருந்தது. சிறிது சிறிதாக ஓட்டு வீடுகளின் மேல் நள்ளிரவுகளில் விழும் மாயக் கல்லெறிகள், காரணமின்றித் தோன்றி மருந்துக்கும் அடங்காதிருக்கும் வயிற்றுப் போக்குகள், தூக்கத்தை இடையறுத்துக்கொண்டு பலத்த கதறல்களை உண்டாக்கும் பயங்கரக் கனவுகளென அதுவும் சாமியை அணுகத் துவங்கியது. அதற்கும் நேரமின்மையென்ற பெருங்குறை இருந்தது. நல்லதம்பி ஆசிரியருக்குப்போல அடிக்கடி லீவுபோட்டு சம்பளப் பிடித்தமாகும் நிலைமையில் எத்தனை பேர் அவர்களில் இருந்தனரென்பது சொல்லமுடியாதது. ஆனால் நல்லதம்பி ஆசிரியரின் நிலை அதுதான். அவரது தயக்கம் நியாயமானதாகவே இருந்தது. ஆயினும் அஞ்சனாதேவியின் ராத்திரிக் கனவுகளின் பயங்கரத்தால் விளையும் அவளதும் தனதும் தூக்க இடர்ப்பாட்டினாலும், அக்கம் பக்கத்தின் முறைப்பாட்டினாலும் ஒருநாள் புற்றுச் சாமியைத் தேடிக் கண்டு தன் குறை சொல்வதென அவர் தீர்மானித்துக்கொண்டார்.

ஒருநாள் இரண்டு மணிக்கு பள்ளி முடிந்த நேரத்தில் புற்றுச் சாமி இருக்கிற இடத்தைக் காட்ட அந்தச் சூழலில் குடியிருக்கும் ஒரு மாணவனையும் அழைத்துக்கொண்டு சைக்கிளில் புறப்பட்டார் நல்லதம்பி. பனங்கூடல் தெரிகிற இடத்தில் சைக்கிளிலிருந்து குதித்துக்கொண்ட மாணவன், தூரத்தில் நின்றுகொண்டே அதைச் சுட்டு விரலால் காட்டிவிட்டு திரும்பிப் போய்விட்டான். சைக்கிளை ஒரு வீட்டு வாசலில் நிறுத்தி அங்கிருந்த ஒரு முதியவரிடம் சாமிபற்றி விசாரித்து அனுகூலமற்ற தகவலுடன், சைக்கிளை அங்கேயே சொல்லி நிப்பாட்டிவிட்டு அவர் பனங்கூடலை நோக்கி நடந்தார்.

வழியற்றுக் கிடந்த பற்றையைக் கண்டபோதே அன்றைக்கு சாமியைக் கண்டுவிடலாமென்ற நம்பிக்கை நல்லதம்பியிடம் விடைபெற்றுக்கொண்டது. ஆயினும் திரும்ப இன்னொரு தடவை வருகின்றதற்கான வாய்பின்மையையும், யாரையும் கூட்டிவரும் சாத்தியமின்மையையும் யோசித்து கால் தடம் கிடந்த ஓர் ஒற்றையடி வெளியில் நல்லதம்பி உள்ளே நுழைந்தார். சிறிதுநேரமாக குனிந்தும் ஒதுங்கியும் நடந்தவர் திடீரென பனைகள் மட்டுமாயிருந்த ஒரு வெளியை வந்தடைந்தார்.

அங்கே ஒரு பெரும்புற்று ஓரிரு பனைகளைக் கவ்வியபடி பரந்து விரிந்து எழுந்திருந்தது. ஆளுயரத்திற்கு மேலிருந்த புற்று. புதுக் களி மண்ணால் பூசியதுபோன்று செம்மை செழித்திருந்த புற்றில் ஆயிரம் கண்களும் புதியதாய்த் தென்பட்டன. சாமியை அவ்விடத்தில் காணலாகுமென ஏனோ நம்பிக்கை பிறந்தது நல்லதம்பிக்கு. பயம் விளைந்ததாயினும் அவர் மேலும் நடந்து புற்றின் மறுகரையடைய மண் நிறத் துண்டு கட்டி புரிசடை, நீள் தாடியுடன் ஒரு கரிய உரு அங்கேயிருப்பதைக் கண்டார். அதுதான் சாமியென்பதை அறிய வேறு ஊகங்கள் வேண்டியிராத நல்லதம்பி, கண்மூடியிருந்த சாமியை நெருங்கினார். திடீரென, ‘வாரும், என்ன விஷயம்?’ எனக் கேட்டார் சாமி. நல்லதம்பிக்குத் திகைப்பாகப் போய்விட்டது. கண்மூடிய நிலையிலிருந்த சாமிக்கு தன் வரவு எப்படித் தெரிந்ததென அவரால் எதுவும் நினைக்க முடியவில்லை. வாய் வார்த்தையிழந்து அவர் முன்னால் நின்று கும்பிட்டார். பின் சுதாரித்து, ‘சாமி…’ என்றார்.

‘சொல்லும்.’

தன் மனைவிக்கு நள்ளிரவுகளில் சவ ஊர்வலங்கள், மரண வீடுகளின் ஒப்பாரி, கொலைகளும் வெட்டுண்ட அங்கங்களுமாய் கனவுகள் தோன்றுவதையும், அவள் விழிப்பும் உடனடியாகக் கொள்ளாமல் படுக்கையில் உருண்டு புரண்டு கதறுவதையும் நல்லதம்பி சொன்னார். தன் அயலில் சிறிதுகாலத்திற்கு முன் நள்ளிரவில் ஒரு வீட்டுக்கு கல்லெறி விழுந்த கதையைக் குறிப்பிட்டு, தான் குடியிருக்கும் சூழலின் கனதியைத் தெளிவாக்கவும் அவர் தவறவில்லை. சாமி வந்துதான் அவளுக்கு என்ன வருத்தமென்பதை அறிந்து பரிகாரம் செய்யவேண்டுமென இரங்கினார்.

சிறிதுநேரம் மௌனமாயிருந்த சாமி கண் விழித்து அவரைப் பார்த்தார். ‘வீடெங்க?’

‘ரவுணில. ஆஸ்பத்திரிக்குக் கிட்ட.’

‘கிட்டவாய் சவக்காலை எதுவுமிருக்கோ?’

‘இல்லை, சாமி.’

‘நீர் வேதமோ, சைவமோ?’

‘சைவம்தான், சாமி.’

‘ம்… மைபோட்டுப் பாக்கலாம். பிறகுதான் பரிகாரம் சொல்லேலும்.’

‘சரி, சாமி.’

‘சாமிக்கு காணிக்கை வைக்கவேணும், தெரியுமெல்லோ?’

‘தெரியும், சாமி.’

‘என்ன குடுக்கவேணுமெண்டு….?’

‘சொல்லிச்சினம். சுட்ட கருவாடும், சாராயமும்….’ தயங்கியபடிதான் சொன்னார்.

‘நல்லது. அதுகள் உண்மையில எனக்கில்லை. என்னோட வரப்போற ஆக்களுக்குத்தான்.’

‘கூட வேற ஆக்களும் வருவினமோ, சாமி?’

‘வருவின. ஆனா நீர் காணமாட்டிர். சாமியின்ர வீட்டை எப்பிடி வரவேணும்?’

நல்லதம்பி விளக்கமாகச் சொன்னார்.

‘நல்லது. வாழையிலை, எலும்பிச்சம் பழம், வெத்திலை, குங்குமம், சாம்பிறாணிக் குச்சி, சூடம் எல்லாம் வேணும். குத்துவிளக்கு புதுத் திரியளோட இருக்கவேணும். ஒரு புது ஓலைப் பாய் இல்லாட்டி ஓலைத் தடுக்கு கட்டாயம்.’

‘வாங்கி வைக்கிறன், சாமி.’

‘வாற செவ்வாய்க் கிழமை ராத்திரி வருவன். கொழும்பு றயில் வாற நேரம்… சாமான் றயில் போற சாமம்… எந்தநேரமெண்டாலும் வருவன்.’

நல்லதம்பிக்கு அவர் சொன்ன நேரங்கள் திகைப்பாயிருந்தன. ஆனாலும் தன் சம்மதத்தைத் தெரிவித்தார்.

அன்று செவ்வாய்க் கிழமை. சாமி அதிசயிக்கும்படிக்கு காலையிலிருந்தே புற்றரவெல்லாம் வெளிப் போந்து ஒரு கலகத்துக்குப்போல் எங்கெங்கும் ஊர்ந்து திரிந்துகொண்டு இருந்தன. கோள்கள் இடம்பெயரும் காலங்களில் பொய்களுக்கும் உண்மைகளுக்குமான மோதல் இடம்பெறுமென்றும், அக் காலங்களில் அவற்றின் வேஷம் மாறி உண்மை பொய்யிடத்திலும், பொய் உண்மையிடத்திலுமாய்த் தவிசேறிவிடுமென்றும் அவர் அறிந்தவர். அது அவரிலேயே அனுபவமாகியிருந்த அறிவு. தன் கோலமும் கொள்கையும் மாறிய அக் காலத்தை அவரால் எங்ஙனம் மறந்துவிட முடியும்?

புற்றுச் சாமியாக அவர் ஆவதற்கு முன்னால் அவரலைந்ததும் அமைந்திருந்ததும் மிகவும் பவுத்திரமான இடங்களாயிருந்தன. காசி ராமேஸ்வரம் கதிர்காமம் சிவனொளிபாதமலையென யாத்திரித்து திரிந்தவர் அவர். அவற்றையெல்லாம் யாரோவின் கட்டளைக்குப்போல் தான் பணிந்து செய்ததை சாமி சிலவேளை எண்ணுவதுண்டு. அப்படியான காலத்தில்தான் ஒருநாள் ‘கீரிமலை தீர்த்தக் கேணி உப்பேறப் போகிறது, போ அங்கே’ என்ற உத்தரவு அவருக்கு கனவில் பிறந்தது. அதுவொரு கோள் நிலை பெயரும் காலமாயிருந்ததை சாமி கணித்தார். சாமிக்கு தயக்கமாயிருந்தது. ஆயினும் கீரிமலை சென்றார். ஒரு முன்னிராப்போதில் தீர்த்தக் குளமடைந்தவர் யாருமறற்ற தனிமையில் ஏகாங்கியாய் எவ்விடமும் நோக்கிநின்றார். கால்களற்ற சில மனிதர் ஒருபால் மறைந்திருந்தது கண்டார் சாமி. அவற்றினாலேயே தீர்த்தக் கேணி நன்னீருக்கு கேடு விளையப்போகிறது என்பதையறிய சாமிக்கு கனநேரம் பிடிக்கவில்லை. இலைகள் சரசரத்து அருகில் நின்ற அரசமரமொன்று தன்னடி கிடந்த ஒரு தேங்காயை அவருக்குக் காண்பித்தது. தெய்வம் காட்டியது வழியென தேங்காயை எடுத்துவந்து துஷ்ட ஆவிகளை வித்தையால் தன்மயமாக்கும் எண்ணத்தோடு அதை வான்நோக்கி சாமி எறிந்தார். மேகம்வரை தன் முடியோடு சுழன்று பறந்த தேங்காய், தன் விசை தணிந்த எல்லையில் புவியீர்ப்புக்கு ஆட்படத் தொடங்கியது. பின் புவிநோக்கி கீழிறங்கத் தொடங்கிய தேங்காய் ஓரிடத்தில் அவ்வீர்ப்பினை எதிர்த்து அந்தரத்தில் நின்று சுழன்றது. துஷ்ட ஆவிகளெல்லாம் தம் மறைவிடம்விட்டு வெளிவந்து திகைத்து நின்று அது கண்டன. அவைகளை வசப்படுத்த பெருவாய்ப்புண்டென்று நம்பிய சாமி, ஒருபோது தீர்த்தக் கேணிப் பக்கம் திரும்ப, அங்கே சில துஷ்ட ஆவிகள் ஏற்கனவே நீராடிக்கொண்டு இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். அப்போது சாமி நினைத்தார், அவை தன்னையே ஏமாற்றிச் செல்லும் விசேஷ வல்லமைகொண்ட ஆவிகளென்று. அது தன் வித்தையில் தானுமே ஒரு கணம் மயங்கிய தன் தவற்றின் விளைவென்பதையும் அவர் அறியாமலில்லை. ஆனாலும் அவற்றை அங்கிருந்து விலகவைக்க அவருக்கு மார்க்கமிருந்தது. அவர் நீர் நிலையில் இறங்கியதும் தன் துண்டை உரிந்து கரையில் வீசினார். தன் ஆண்மையின் பிரவேசம் அவை பெண் துஷ்ட ஆவிகளாயிருந்தால் நாணி கலகலத்து அவற்றைச் சிதறியோட வைக்குமென்ற அவரது எண்ணம் பிழைத்துப்போனது. ஆவிகள் நாணிக் கலகலத்தாலும் சிதறியோடாது கேணிக்குள்ளேயே தங்கியிருந்தன. சாமி நீருக்குள் முங்கி எழுந்தார். நாவில் நீரின் உப்பு கரித்தது. இனி செய்ய ஒன்றுதான் உண்டு. அவ்வாவிகளின் கெட்ட அம்சங்களின் கலப்பை தனது நல்லம்சங்களின் உதிர்ப்பால் ஈடுசெய்யவேண்டும். அவர் அது செய்யத் தயாரானார். இரும்பைப் பொன்னாக்கும் வித்தை, தன்னுரு மறைத்தல், வருவது ஓர்தல் ஆதியாம் நற்கலைத் திறன்களை அந்நீரில் விருப்பார்வத்தோடு கலந்தார். மறுபடி சாமி நீருள் மூழ்கியெழுந்து நீரின் சுவையைப் பரிசீலித்தபோது அது மீண்டும் நன்னீராகியிருந்தது. நகுல முனியின் கீரிமுகத்தைப் போக்கிய புனிதமான ஜலம் அதுதான். அப்போது சாமி கண்டார், கேணியில் நீராடியிருந்த துஷ்ட ஆவிகள் கேணியைவிட்டு வெளியேறிப் போய்க்கொண்டிருப்பது. வெளியில் திரிந்துகொண்டிருந்த ஆவிகளும் காணாமலாகியிருந்தன. தான் அந்தரத்தில் மிதக்கவைத்த தேங்காயும் எங்கேயென்று தெரியாமல் போயிருந்தது. தன் விஜயத்தின் பூர்த்தியை நிச்சயித்த சாமி தன் அலைவைத் தொடங்கினார். சிறுதெய்வக் கோயில்களெல்லாம் திரிந்தார். அதையும் அவரால் தொடரமுடியாது போன நிலைமையில்தான் அந்தப் பனங்கூடற் பற்றைக்கு வந்துசேர்ந்தார். புற்றின் அரவங்கள் அவர் பிரசன்னத்தில் வெகுண்டெழாமல் சாந்தரூபங்கொண்டு திரிந்தன. அந்த இடம் வாலாயமாய்ப் பட அங்கேயே சாமி தங்கிவிட்டார். அன்றிலிருந்து சாமி புற்றுச் சாமியுமானார். சாமிக்கு காலம் மறந்திருந்ததில் அதுவொரு நூற்றாண்டுக்கு முந்திய சம்பவமாக தோன்றிக்கொண்டிருந்தது. அதுபோலொரு கோள் நிலை திரியும் காலமே அப்போதும் உற்றுள்ளதென்பதை அறிந்துகொண்டாலும், சாமி நல்லதம்பி வீடுநோக்கிய புறப்பாட்டை நிறுத்திக்கொள்ளவில்லை. ஊரடங்கி நிலா வெளிக் கிளம்ப சாமி நடக்கத் தொடங்கினார்.

அப்போது வீதிகள் எல்லாவற்றிற்கும் மின்சார விளக்குகள் போடப்பட்டிருக்கவில்லை. தன் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளுக்கும் வீடுகளுக்கும் மின் உற்பத்தி எந்திரங்கள்மூலம் பட்டணசபையின் மின் விநியோகம் இருந்தது. வீடுகளுக்கு முழு நேரமாயும், வீதிகளுக்கு மாலை 6 மணி முதல் காலை 6 மணிவரையும் அந்த விநியோகம். சாமி பட்டணசபை எல்லைக்குள் நுழைந்து மின்சார பல்புகளின் மங்கிய மஞ்சள் வெளிச்சமுள்ள பிரதான வீதியொன்றில் நடக்கத் தொடங்கினார். வீதிகளில் ஆளரவமும் வீடுகளில் அரவமும் அடங்கியிருந்தன.

அவர் நல்லதம்பி சொல்லியிருந்த குறிப்பின்படி சங்கத்தானை தெரு கண்டிவீதியில் ஏறும் சந்தியில் ஆஸ்பத்திரி பக்கமாகத் திரும்பிச்சென்று ஒற்றைச் சிறகுள்ள நீலநிற தகரக் கேற்றை அடைந்தார். யாரையும் அழைக்கும் சிரமம் சாமிக்கு இருக்கவில்லை. கேற்றுக்கு முன்னால் சாமியைக் கண்டதுமே ஓடிவந்து கேற்றைத் திறந்து நல்லதம்பி அவரை உள்ளே அழைத்துச் சென்றார். விறாந்தையில் ஏறியதுமே, ‘எல்லாச் சாமனும் வாங்கி வைச்சிருக்கெல்லோ?’ என குரலடக்கிக் கேட்டார் சாமி.

‘எல்லாம் வாங்கி வைச்சிருக்கு. சாமி’ என்றார் நல்லதம்பி அடக்கமாக.

‘முதலிலை காணிக்கை வையும்’ என சாமி சொல்ல, உள்கூடத்துள் சாமியை அழைத்துச் சென்ற நல்லதம்பி, சுட்ட கருவாட்டுத் தட்டையும் சாராயப் போத்தல் கிளாஸ்களையும் மேசைமேல் கொண்டுவந்து வைத்தார். சாமி மை பார்ப்பதன் முற்கிரியைகள்போல் சாராயத்தை வார்த்துக் குடித்து, சுட்ட பாரைக் கருவாட்டையும் புசிக்க ஆரம்பித்தார். எல்லாவேளையிலும் அவரது செங்கண்கள் அந்த வீட்டின் நாலாபுறங்களையும் நோக்கியபடியே இருந்தன. சுவரில் கொளுவப்பட்டிருந்த குடும்பப் போட்டோக்கள், சாமிப் படங்களையும் உற்று உற்று நோக்கினார். பின் உறவினர்களின் போட்டோக்களைச் சமீபித்து மிகக் கூர்ந்து பார்த்தார். ஒவ்வொருவரது கண்களின் ஊடாகவும் அவரவரது இதய ஆசைகள் விருப்பங்கள் வேட்கைகளை பிரித்தெடுப்பவர்போல் அவரது அத் தீட்சண்யம் தோன்றியது.

சாமி விறாந்தையில் ஏறும்போதே உள்கூடத்திலிருந்து அவரது தோற்றம் கண்ட அஞ்சனாதேவிக்கு அந்தக் கோலமும், உள்ளே வந்ததும் சாராயம் குடித்து கருவாடு தின்ற விதமும் பிடிக்கவில்லையென்றே தெரிந்தது. தன் வீட்டில் சரி, பிற வீடுகளில் சரி அவள் யாரும் சாராயம் குடித்து நேரில் கண்டவளில்லை. அப்படியானவளுக்கு தன் வீட்டிலேயே சாராயம் வாங்கி குடிக்க அனுமதி கொடுத்த நிலைமை உவப்பில்லை. வேறு செய்ய இயலாமல் பேசாதிருந்தாள். ஆயினும் கூடத்துள் நின்று அவற்றைப் பார்க்கும் மனத் திண்மை அற்றவளாய், அடிக்கடி அறைக்குப் போய் சுழன்று மறுபடி வெளியே வருபவளாகவே அவள் இருந்தாள்.

பாதிப் போத்திலுக்கு மேல் சாராயமும் முடிந்துவிட்டது. சுட்ட கருவாட்டில் ஒரு சில துண்டுகளே தட்டில் மீதியாயும் இருந்தன. சாமி இன்னும் வந்ததற்கு இருக்கக்கூடச் செய்யவில்லை. மை பார்த்து பரிகாரங்கள் செய்து முடிப்பதானால் எவ்வளவு நேரமாகுமோவென எண்ணி அலுப்படைந்தார் நல்லதம்பியும். தப்பான ஒரு ஆளை தன் வீட்டிற்கு, அதுவும் அந்தநேரத்தில், வரவழைத்துவிட்டோமோ என்றுகூட அவருக்குத் தோன்றியது.

அப்போது சாமி, ‘சாமி, இஞ்ச வாரும்’ என்றார். நல்லதம்பி கிட்டவாய்ச் சென்றார். ‘இந்தப் போத்திலையும் தட்டையும் முதல்ல உள்ள கொண்டுபோய் வைச்சிட்டு வாரும்‘ என்று சாமி சொல்ல, நல்லதம்பி அவ்வண்ணமே செய்தார். அவர் திரும்பி வந்ததும், ‘உம்மட மனிசியை கொஞ்சம் இப்பிடி வந்துநிற்கச் சொல்லும்’ என்று சாமி கூற அதையும் செய்தார். அறைக்குள் நின்றிருந்த அஞ்சனாதேவி வெளியே வந்தாள். கொஞ்சம் உடம்பு தள்ளாடத் துவங்கியிருந்த சாமி அவளை நெருங்கி அவளது கண்களை ஊடறுத்து நோக்கினார். நெஞ்சுக் குவட்டுக்குள்ளும் பார்வை தடுமாறி சிலசமயம் விழுந்தெழுந்துகொண்டு இருந்தது. அஞ்சனாதேவிக்கு உடல் கூசத் தொடங்கியது. அவள் சமாளித்து நின்றுகொண்டிருந்தாள்.

‘பிள்ளையள் எத்தினை?’

‘எங்களுக்குப் பிள்ளையளில்லை’ என்றாள்.

பிறகு சுவரிலிருந்த ஒரு படத்தை கையினால் சுட்டிக்காட்டி, ‘அந்தப் போட்டோவில இருக்கிறவை ஆர்?’ என்றார்.

‘அது என்ர மாமாவின்ர குடும்பம்.’

போட்டோவை அண்மித்து அதிலுள்ள ஒரு வாலிபனைச் சுட்டிக்காட்டி, ‘இது ஆர்?’ என்றார்.

‘அது என்ர மாமாவின்ர மோன்.’

‘எப்ப எடுத்தது?’

‘அது கனகாலம் ஆச்சு. எப்பவெண்டு ஞாபகமில்லை.’

‘உமக்கு கலியாணம் ஆக முந்தியோ, பிந்தியோ?’

‘அது… கலியாணம் ஆக முந்தித்தான்.’

‘இவற்ர வேற படமெதாச்சும் உங்களிட்ட இருக்கோ?’

‘அவற்ர கலியாணப் போட்டோ ஒண்டு இருக்கு. எல்லாருமாய்ச் சேந்தெடுத்த படம். அது அந்த அறைக்குள்ள இருக்கு.’

‘அதை எனக்குக் காட்டும் பாப்பம்.’

‘அது சுவரில உயரமாய்க் கொளுவியிருக்கு, சாமி’ என்று நல்லதம்பி தலையிட்டுக் கூறினார்.

‘கழட்டாமல் பாக்கலாம்தான.’

நல்லதம்பி கூட்டிப்போய்க் காட்டினார். படம் உயரத்தில் கொளுவியிருந்தது. ஸ்ரூல் கொண்டுவரச் சொல்லி சாமி ஏறிநின்று அஞ்சனாதேவியின் மைத்துனன் முகத்தை சிறிதுநேரம் பார்த்தபடியே நின்றார். பிறகு வலமும் இடமுமாய் தலையை அசைத்தபடி இறங்கி முந்திய போட்டோவின் முன்னால் வந்தார். பின் தனது முடிவை உறுதிப்படுத்துபவர்போல் தலையை மேலும் கீழுமாய் ஆட்டினார். பிறகு அஞ்சனாதேவியைப் பார்த்து, ‘உம்மட உடம்பில இருக்கிற பவுண் நகை, தலைக்குக் குத்திற கிளிப்பு எல்லாத்தையும் கழட்டி வைச்சிட்டு வாரும்’ என சொன்னார். அஞ்சனாதேவி தன் கணவனின் முகத்தைப் பார்த்தாள். அவர் பரவாயில்லை, அறைக்குள் போய் கழற்றிவைத்துவிட்டு வரும்படி தலையில் சைகை பண்ணினார்.

அஞ்சனாதேவி அறைக்குள் போய் நகைகளைக் கழற்றி வைத்துவிட்டு வெளியே வந்து, சாமி என்ன நினைத்தாலும் நினைக்கட்டுமென, தன் அதிருப்தியின் வேகமும் சேர்த்து அறைக் கதவை சற்று சத்தமெழ சாத்தினாள். ‘அது நல்லது. அப்பிடித்தான் செய்யவேணும்’ என்றார் சாமியும். அவளில், தன் மனத்தைப் படித்ததுபோல் சாமி சொன்ன வார்த்தைகள் இடியாய் இறங்கின. திடுக்கிட்டதுபோல் நல்லதம்பியைத்தான் அப்போதும் பார்த்தாள். அவர் சொல்ல ஒன்றுமிருக்கவில்லை.

வெளியில் வந்தவளை, கைகளைப் பக்கங்களில் விறைப்பாய்த் தொங்கவிட்டபடி மாமனின் குடும்பப் போட்டோவின் முன்னால் நிற்கப் பணித்தார். சாமி ஏன் அவ்வாறு சொல்கிறாரென தெரியாவிட்டாலும், ஒரு கட்டளையில்போல் அவ்வண்ணமே செய்தாள் அஞ்சனாதேவி.

சிறிதுநேரம் கழிய, ‘சதிரத்தில என்னமும் செய்யுதோ? நடுங்கிறமாதிரி…. தலை சுத்திறமாதிரி… எதாச்சும்…’ என்று கேட்டார் சாமி.

‘அப்பிடியொண்டும் செய்யிறமாதிரித் தெரியேல்லயே எனக்கு.’

‘சரி. இப்ப உம்மட மச்சான்ர கண்ணை நல்லாய் உற்றுப்பாரும் பாப்பம். ஆட அசையக்குடாது.’ சாமியின் மேலுமான கட்டளை ஒலித்தது.

டிக்… டிக்… என்ற சுவர் மணிக்கூட்டின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. எத்தனை டிக்… டிக்…களை அது உதிர்த்திருக்குமோ? மேலும் சில டிக்… டிக்…கள் கழிய அஞ்சனாதேவியின் உடம்பு மெல்ல நடுங்கத் துவங்கியது.

‘என்ன செய்யிது? என்ன செய்யிது?’ என்றபடி முன்னே பாய்ந்துவர முயன்றார் நல்லதம்பி. ‘அங்கயே நில்லும்’ என்றதிர்ந்தார் சாமி. பிறகு திரும்பிக்கொண்டு சொன்னார்: ‘எனக்கு இப்ப எல்லாம் விளங்கியிட்டுது. இனி நீர் இஞ்சால வாரும்.’

அஞ்சனாதேவி சுவரோடு வந்துநின்று தன் நடுக்கம் தணிந்தாள்.

பின் பாயை எடுத்து வடக்குத் தெற்காய் விரிக்க நல்லதம்பியிடம் சொன்னார். அவர் பாயை எடுத்து விரித்ததும் கிழக்குப் பார்த்து அமர்ந்தார். கண்களை மூடிய சாமியின் நிஷ்டை கலைய சிறிதுநேரமாயிற்று. அதுவரை அஞ்சனாதேவியும் நல்லதம்பியும் மௌனமாய் காத்து நின்றிருந்தனர்.

கண் விழித்த சாமி எழுந்தார். சுவரிலிருந்த போட்டோவில் அஞ்சனாதேவியின் மைத்துனன் முகத்தைப் பார்த்து, ‘இனியொண்டும் சரிவராது. நான் எல்லாத்தையும் கண்டுபிடிச்சிட்டன்…’ என்று தனக்கேபோல் முணுமுணுத்தார். பின் அவளை உள்ளே செல்ல பணித்துவிட்டு நல்லதம்பியின் பக்கம் திரும்பினார். ‘உம்மட மனிசியும் இந்தளவு நாளாய் படாதபாடெல்லாம் பட்டிருப்பாவெண்டு நெக்கிறன். சாமி, ஒண்டுஞ் செய்யவேண்டாம். இந்தப் போட்டோவின்ர சட்டங்களைக் கழட்டியிட்டு படத்தை துண்டு துண்டாய் நறுக்கி ஒரு துண்டு தவறியிடாம எல்லாத்தையும் போட்டு எரியுங்கோ. பிறகு எரிச்ச சாம்பலை எடுத்துக்கொண்டு போய் எங்கயாச்சும் குளத்தில கரைச்சாப்போதும். அதை சூரியன் காலிக்கிறதுக்குள்ள செய்யவேணும். அவ்வளவுதான்.’

‘அப்ப… மை பாக்கிறது…?’ என்று இழுத்தார் நல்லதம்பி.

‘எல்லாம் தெரிஞ்சிட்டுது. இனி அது தேவையில்லை.’

‘பரிகாரம்…?’

‘நான் இப்ப சொன்னதுதான் பரிகாரம்.’

சாமி புறப்படத் தயாரான நிலையில், அஞ்சனாதேவி அவசரமாய் கதவைத் திறந்துகொண்டு வந்து, நல்லதம்பியின் காதோரம் போய் ஏதோ முணுமுணுத்தாள். நல்லதம்பி ஆச்சரியப்பட்டு அறைக்குள் போய் மேசை நிலமெல்லாம் குனிந்து தேடிவிட்டு மீண்டும் வெளியே வந்தார்.

‘என்ன சிக்கல்?’ நிதானமாய்க் கேட்டார் சாமி.

நல்லதம்பியால் சொல்ல முடியவில்லை.

நகைகளைக் கழற்றி அஞ்சனாதேவி அறைக்குள் வைத்துவிட்டு வந்தாள்; மட்டுமன்றி, அறைக் கதவைத் திடமாகச் சாத்தவும் செய்தாள்; இப்போது தோடு தாலிக்கொடி எல்லாம் இருக்க மோதிரம்மட்டும் காணாமல் போயிருக்கிறது. அதற்கு என்ன விளக்கம் காணமுடியம்? ஆனாலும் அவர் தட்டுத்தடுமாறி, ‘கழட்டி வைச்ச நகைகயளில மோதிரத்தைமட்டும் காணேல்லை, சாமி’ என்றார்.

சாமி லேசாகச் சிரித்தார். ‘நூல் சுத்தியிருந்த அந்த மோதிரம்தான?’ என்றார். ‘அது உங்கடயும் இல்லையெல்லோ? அது காணாமப்போயிருக்கும்’ என்று தொடர்ந்து சொன்னார்.

அஞ்சனாதேவி நல்லதம்பி இருவருமே அதிர்ந்தனர். அதில் நூல் சுற்றப்பட்டிருந்ததை சாமி கண்டிருக்க எந்த முகாந்திரமும் இல்லை. அதுபோல அந்த மோதிரமும் அவர்களால் போன சிவன்கோவில் திருவிழாவிலே கண்டெடுக்கப்பட்ட து என்பதும் அவரறிய வாய்ப்பில்லை. இந்தநிலையில் அவர்கள் அதிராமலிருக்க முடியாது.

ஆனால் நல்லதம்பியிடம் ஒரு தர்க்கம் இருந்தது. ஓரிடத்தில் வைக்கப்பட்ட ஒரு பொருள் காணாமல் போயிருக்கிறதென்றால், அதை யாராவது எடுத்திருக்கவேண்டும் என்பதே அது. அதை அவர் சொன்னார்.

சாமி இன்னும் தன் சிரிப்பு அகலாமலே, ‘அது மறைஞ்சு போகிற வாய்ப்பும் இருக்கு, சாமி. அந்தமாதிரி நடந்திருக்கு முந்தி’ என்றார்.

‘அது தானாயே மறைஞ்சுபோச்சு எண்டிறியளா, சாமி.’

‘பின்னை? இஞ்ச இருக்கிற மூண்டு பேரில நான்தான் வெளியாள். நான் அறைப் பக்கமே போகேல்லயெண்டது உங்களுக்கு நல்லாய்த் தெரியும். பின்ன மோதிரம் எப்பிடி காணாமப் போகும்? இப்ப பாரும், திண்மமாயிருக்கிற ஐஸ் கட்டி உருகி திரவமாகிது. அதுமாதிரி அந்தத் திரவமும் கொஞ்சநேரத்தில வாயுவாய் காணாமப்போயிடுது. இஞ்ச நடந்த படிப்படியான உரு மாற்றம், மோதிர விஷயத்தில அடுத்த கட்ட மாற்றத்தில திடீரெண்டு நடந்திருக்கு, அவ்வளவுதான்.’

சாமி உள்கூடத்தைவிட்டு வெளியே வந்து விறாந்தையில் சிறிதுநேரம் தரித்து நின்ற பின் விறுவிறுவென படியிறங்கினார். நல்லதம்பி கேற்வரை ஓடிவந்தார். ‘சாமி, எல்லாம் சரிதான். எனக்கு ஒண்டுதான் விளங்கேல்லை.’

‘என்ன விளங்கேல்லை?’

‘போட்டோவை எரிக்கச் சொன்னியளே, ஏன் சாமி?’

‘அவன்ர நெஞ்சில ஆசை இருந்திது. அது பொல்லாத ஆசை. எதுக்கும் அடங்காது; நன்மை தின்மை, ஞாயம் அநியாயம் பாராது. அடங்காத தாபம் அவன்ர கண்ணில சாபமாய் வெளிவந்துகொண்டிருந்திது. அதாலதான் போட்டோவை எரிக்கச் சொன்னன்.’

‘அவர் கலியாணமான கொஞ்சக் காத்தில செத்தும்போனார், சாமி. இப்ப ஆள் இல்லை.’

‘அதிலயொண்டும் வித்தியாசமில்லை. நீர் நான் சொன்னபடி போட்டோவை எரிச்சு சாம்பலை எங்கயாச்சும் கொண்டுபோய் தண்ணியில கரைச்சுவிடும். எல்லாக் கஸ்ரமும் முடிஞ்சுபோகும்.’

சாமி தெருவில் இறங்கி விரைந்து நடந்தார். வந்தபோதில் இல்லாதிருந்த அந்த வேகத்துக்கு ஒரு விசித்திரமானதும் முக்கியமானதுமான காரணம் இருந்திருக்க வேண்டும். அவர் முகத்தில் ஒரு சந்தோஷத்தின் எறிகையும் அப்போதிருந்தது. நடந்துகொண்டிருக்கையில் விநாசியை அவர் நினைத்துக்கொண்டார். தன்போலவே சக்தியுள்ள பெண் சாமி; தன்போலவே தாபங்களை உடம்பில் அடக்கித் தேக்கிய ஒரு மானுடத்தியும். அவளது சந்தோஷங்களும் மாதத்தின் ஒருநாளான அந்த அமாவாசைகளின் கூடற் காலங்களாக மட்டுமே இருந்தன. அவளை முடிந்தால் அந்த நூல் சுற்றிய மோதிரத்தின் மூலம் அவரால் வேறு காலங்களிலும் சந்தோஷப்பட்டிருக்க வைக்கமுடியும். அது அவளுக்கு எவ்வாறு பயனாகுமென அவருக்குத் திண்ணமில்லை. அவள் அவருடனான ஒரேயொரு பொழுதிலேயே பெண்ணாவாளென்றாலும் அவளை அந்த மோதிரம் சந்தோஷப்பட வைக்கும்.

தன் வித்தைகளின் பெரிய சொத்தை கீரிமலைக் கேணியிலே உருக்கி விட்டதற்கு ஈடாக அவர்கொண்ட துஷ்ட ஆவிகளின் துணையில் அந்த மோதிரத்தை அவரால் எடுக்க முடிந்திருந்தது. அது அவர்களது உடைமையல்லவெனத் தெரிந்த கணத்தில் திடீரென எழுந்த விருப்பமும், திட்டமும் அது. ஆனாலும் அவரின் ஒரு மன மூலையில் உறுத்தலொன்று அப்போதும் அகலாமல் இருந்துகொண்டே இருந்தது. சடத்தின் உருமாற்றங்களை விளக்குவதன்மூலம் ஒரு உண்மையை, நல்லதம்பிக்கு மட்டுமில்லை தனக்குமே, அவர் மறைத்திருக்கிறார். தன் தந்திரத்தால் வாதத்தை அவர் வென்றிருக்கலாம். ஆனால் உண்மை வலிதானதும், சாசுவதமானதும் ஆகும். ஆவியாகிப் போனாலும் திடத்தின் அம்சம் பிரபஞ்சத்தில் இருந்துகொண்டுதான் இருக்கும். உண்மையும் அதுபோலவே.

அவர் விநாசி துயிலும் ஊர்ப் புறத்துக் காளி கோவிலை அடைந்து, அவளிடம் மோதிரத்தைக் கொடுத்துவிட்டு, பனங்கூடலை அடைந்தபோது விடிந்து கொண்டிருந்தது.

படர்ந்துயர்ந்து நின்ற புற்றின் முன்னால் சப்பணிக்க அமர்ந்தார். சூரியன் வான மூலையில் எழுந்தது. நிலம் வெளித்தது. கண் மூடிய ஸ்திதியில் இன்னும் தன் அபகரிப்பின் புளகம் மாறாத சாமி. புற்றிலிருந்து பாம்புகள் ஒவ்வொன்றாய் வெளிவந்தன. சில அப்பால் நகர, சில புற்றைச் சுற்றியே சுழன்றுகொண்டு இருந்தன. சிறிதுநேரத்தில் சில சாமியின் மேலிலேறி ஊரத் துவங்கின. ஸ்பரிசத்தில் தன்னில் பாம்புகள் ஊர்வதை உணர்ந்தார் சாமி. அவை தன்னை அழுத்தமாய்ப் பற்றி இறுக்குவனபோலும் தெரிந்தார். அப்போது மேனியில் சில இடங்களில் சுள்ளென்று தீயால் சுடும் உணர்வெழுந்தது.

சிறிதுநேரத்தில் அவருக்கு எல்லாம் புரிந்தது. ஒருவகையில் அதை அவர் எதிர்பார்த்தே இருந்தார். இன்றில்லாவிடின் நாளையாக.

விஷம் உடம்புள் மெல்ல மெல்லச் சுவற சாமி நீலம் பாரித்து புற்றோடு சாய்ந்தார்.

அப்போது காற்று சற்று பலமாக அடித்தது. உண்மையின் ஓங்கிய குரல்போல அது இருந்தது. அது காணும் நிலையில் சாமி இருந்திருக்கவில்லை. அவரது கண்கள் மூடியிருந்தன; உடல் அசலனித்திருந்தது.

– திண்ணை.கொம், ஜுலை 19, 2020

Print Friendly, PDF & Email
தேவகாந்தன் (பிறப்பு: 1947) ஒரு குறிப்பிடத்தக்க கனேடிய-ஈழத்து எழுத்தாளர். இவர் ‘கனவுச் சிறை’ என்ற மகா நாவலின் மூலமாக தமிழ்ப் பரப்பில் கவனிப்பைப் பெற்றவர். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை ஆகிய துறைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் பிறந்த இவர் டிறிபேக் கல்லூரியில் உயர்கல்வியை முடித்தவர். 1984 முதல் 2003 வரை தமிழ்நாட்டில் வாழ்ந்தார். தற்போது புலம்பெயர்ந்து கனடா, தொராண்டோவில் வதிகிறார். 1968-1974 வரை ஈழநாடு நாளிதழில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *