புதை பிரதேசம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 6, 2012
பார்வையிட்டோர்: 8,121 
 

நேற்றே இவன் வந்திருந்தான்.

திருத்தமாய் முடியமைத்து பார்த்தவுடன் பிடித்து போகிற மாதிரி இருந்தான். ஒரு கால் மட்டும் சூம்பி பாதம் சரிந்து மடங்கி நடக்கும் போது இடுப்பில் கையை ஊன்றி அதிகம் சரிந்தான்.

வேலப்பனைப் பார்க்க வந்திருந்தான். ஒலிபெருக்கி வாடகைக்கு கேட்டு வந்திருந்தான். அவன் பெயர் டோனி என்று சொன்னான்.

ஒரு வார காலத்திற்கு சைக்கிளை விட்டிறங்காமல் ஓட்ட போகிறானாம். தொடர்ந்து பல சாகசங்களும்.

அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஒற்றை ஆளாய், நொண்டி காலுடன் அவ்ன் இயங்குவதைப் பார்க்க ஆச்சரியமாயிருந்தது.

இரவல் வாங்கிய மண்வெட்டியைக் கொண்டு அந்த மைதானத்தை வெட்டி சமமாக சீரமைத்தான்.சின்ன சின்ன கற்களைக்கூட பொறுமையாய் பொறுக்கி தூர எறிந்தான். ஒரு பெரிய மூங்கிலை அந்த மைதானத்தின் உத்தேச மையத்தில் நட்டான். பிறகு சைக்கிள் சுற்றி வர வசதியாக ஐந்து மீட்டர் சுற்றளவுக்கு கம்பு நட்டு கயிறு கட்டினான். வியர்வை வழிந்தது. துடைத்து விட்டு சுற்றிலும் நோட்டம் விட்டான். திருப்தியாயிருந்தது.

வேலப்பன் மூங்கிலைச் சுற்றி குழல் விளக்குகள் கட்டினான். ஒலிபெருக்கி வைத்தான்.

இன்று இதோ தன் சகாக்களுடன் தயாராகிவிட்டான் டோனி.. இவனுடன் இவன் தங்கை என்று சொல்லப்படும் மேரியும் வந்திருக்கிறாள். இவள்தான் சைக்கிளை விட்டு கீழே இறங்காமல் தொடர்ந்து ஏழு நாட்கள் மிதிக்கப் போகிறாளாம். ஆம்பிள்ளைப் போலவே விண்ணென்று இருந்தாள். நடனம் ஆடுவதற்கென்று சலீமாவும் பிரதாபனும்.

இனி ஒரு வாரத்திற்கு கிராமத்தில் மாலை நேரம், கொண்டாட்டம்தான்.

சரியாக ஆறு மணிக்கு வேலப்பன் பக்தி பாடல்கள் போட்டான். சிறுசுகள் ஓடி வந்து முதல் வகுப்பு இடம் பிடித்தார்கள்.தாவணிகளும், அரும்பு மீசைகளும் தோதான இடங்களில் நின்று கொண்டார்கள்.மூதாட்டிகள் துண்டு துணி விரித்து கால் நீட்டி அமர்ந்து வெற்றிலை மென்றார்கள்.

சுற்றி நின்ற தலைகளுக்கு மேலாக பார்வையை செலுத்தினால்… நடுவில் டோனி ஆகாயம் பார்த்து கும்பிட்டுக் கொண்டிருந்தான்.

பின் கூடி நின்றவர்களில், தோளில் துண்டு போட்டிருந்தவர்களில் சிலரை [ஊருக்கு பெரியவர்களாம்!] அழைத்து நடுவுக்கு கூட்டி வந்தான். அவர்கள் கையால் ஊதுபத்தி கொழுத்தச் செய்தான். அவர்கல் காலைத் தொட்டு வணங்கி அந்த ஊதுபத்தியை பயபக்தியுடன் வாங்கிக்கொண்டான். அதில் நின்ற பெரிய மனிதர் செல்லையாவுக்கு உடனே மனம் இரங்கிப் போனது. மடியிலிருந்து பத்து ரூபாய் நோட்டை உருவி நீட்டினார். டோனி நன்றி பெருக்குடன் கண்களில் ஒற்றி வாங்கிக் கொண்டான்.

இப்போது பக்கத்தில் நின்ற ஜிப்பாகாரருக்கு ரோஷம் வந்தது. அவர் ஐம்பது ரூபாய் எடுத்து எல்லோர் பார்வையில் படும்படியாக நீட்டினார்.

மேரியும் விழுந்து கும்பிட்டாள் .’சே. இது தெரியாம போச்சே. இவகிட்ட ரூபாய கொடுத்திருக்கலாமோ’ பெருசுகள் நினைத்துக் கொண்டன.

மேரி ஊதுபத்தியை வாங்கிக் கொண்டு ஏதோ ஒலிம்பிக் தீபத்தை பிடித்தமாதிரி சுற்றி வந்தாள். சைக்கிளில் போய் அதை செருகி வத்தாள். விழா தலைவரிடம் வந்து மீண்டும் ஒருமுறை வணங்க ,ஜிப்பாகாரர் அவள் கையை பற்றி தோளை அழுத்தி ‘பரிவுடன்’ தட்டிக் கொடுத்தார்.

எல்லோரும் கைதட்ட சைக்கிளில் ஏறி அனாயசமாக மிதிக்கத் தொடங்கினாள். ஜிப்பாகாரர் அவள் தொடையை முறைத்தார். வேலப்பன் சினிமா பாட்டு போட்டான்.

டோனி பாட்டை நிறுத்தச் சொல்லிவிட்டு ‘மைக்’கை கையிலெடுத்தான். “தம்பிகளே” என்று கூச்சலிட்டான். கிராமத்து தம்பிகள் “ஓoooooo” என்று பதிலுக்கு கத்தினார்கள்.

“சகோதரன்மாரே.. அக்காமாரே.. இதா.. ஒரு ஜாண் வயிற்றுக்காக.. உங்களை நம்பி வந்திருக்கி/றேன். திருடவில்லை ஏமாற்றவில்லை, உயிரை பணயம் வைத்து நாங்கள் செய்யும் வித்தைகளுக்கு நன்கொடைகளை அள்ளி அள்ளி தாருங்கள்..” மலையாளம் கலந்த தமிழில் வினயமாகப் பேசினான்.

யாரெல்லாமோ ஐந்தும் பத்துமாகக் கொடுத்தார்கள். எல்லாருக்கும் நன்றி சொன்னான். கடைசியில் எண்ணிப் பார்த்துவிட்டு “ ஆறு பேர் தந்தாச்சி. இன்னும் யாராவது ஒருத்தர் தாங்க. இரட்டையாக இருக்கக் கூடாது “ என்றான்.

ஒரு சிறுமி கையில் நாணயத்துடன் விரைந்தாள். இவன் திரும்பவும் சொன்னான் “ இன்னும் ஒரு ஆள் தாங்க. இப்போது ஒத்தையாகிவிட்டது.”

“இந்த மாதிரி விசயங்களுக்கு நம்ம ஊர் ஆதரவு கொடுக்கிறது சந்தோசமாயிருக்கு” கல்லூரிக்கு போய்வந்து கொண்டிருக்கிற பெண், கூட நின்றவளிடம் பரிமாறிக் கொள்கிறாள்.

“சே. பாவம்பா.. இந்த காலையும் வச்சிட்டு என்னமெல்லாம் பண்றான் பாரு. பரிதாபமாயிருக்கு”

“ஆமாடி அவன் இன்னிக்கு மண்ணுக்குள்ள அரைமணி நேரமா இருக்கப் போறானாமே.”

“மண்னுக்குள்ளயா? அது எப்படி? மூச்சி எப்படி விடுவான். ஏதாவது ‘டியூப் கியூப்’ வச்சிருப்பானோ”

“ஒரு இழவும் கிடையாது.முகத்தில துணியைக்கட்டி தலை குப்புற நட்டு மண்ணைப் போட்டு மூடிடுவாங்க. எல்லாம் சர்வீசுப்பா.. ”

எல்லோருக்கும் பின்னால் சாலையோர பாலத்தில் எறி நின்று கொண்டு எட்டிப்பார்த்த மணிக்கும்,பழனிக்கும் பயங்கர சந்தேகம். “லேய்.. அந்த டான்ஸ் ஆடறாளே அவ பொம்பளை இல்ல…. நீ என்ன சொல்ற.”

“அப்படிதான் தெரியுது. கையை பாரு முறுக்கா இருக்கு. முன்னால மரக்கட்டைமாதிரி….”

“ அதை விடு மக்கா. இவ ஆடற ஆட்டத்தைப் பாரு. தேவையா இவனுக்கு.”

இதற்குள் டோனி அன்பளிப்பாக வந்த ஒரு வாழைப்பழத்தை முப்பத்து நான்கு ரூபாய்க்கு ஏலம் போட்டு விட்டான்.

சைக்கிள் சுற்றிக் கொண்டேயிருக்க, நடனம் ஆடிக்கொண்டேயிருக்க, இவன் ஓரத்தில் சதுரமாக ஒரு குழி தோண்டினான். தலைமை தாங்கிய ஜிப்பா மீண்டும் அவனை ஆசிர்வதித்து ஊதுபத்தி கொழுத்தி கொடுத்தார். கூடவே பத்து ரூபாய் நோட்டை எடுத்து கொடுத்து “—— கட்சி சார்பாக” என்றார்.

உடனடியாக மைக்கில் அலறினான் “ ——- கட்சித் தலைவரின் அன்புதம்பி தங்கராசு அன்பளிப்பு பத்து ரூபா. ஆயிரம் பொற்காசுகள்.”

தங்கராசுவுக்கு நெஞ்சு குளிர்ந்தது.

டோனி பவ்யமாக வேண்டிக்கொண்டான் “சகோதரன்மாரே, சகோதரிகளே இதோ இந்த மண்ணுக்குள் மூச்சடக்கி அரை மணி நேரம் இருக்கப் போகிறேன். உங்களுக்கு இது சிரிப்பாக இருக்கும்.ஆனால் அந்த வேதனை எனக்குதான் தெரியும். வயிற்றுப் பிழைப்புக்காக என் உயிரை பணயம் வைத்து இதை செய்யப்போகிறேன். உங்கள் உடன் பிறவா சகோதரனாக நினைத்து அன்பளிப்புகளை அள்ளித்தாருங்கள்.”

ஒவ்வொருவரும் மனம் இளகி பச்சாதாபம் கொண்டார்கள்.

இவன் கூட்டத்தை சுற்றி வந்து கும்பிட்டான்.வெட்டப்பட்ட குழிக்கு முன் முழங்கால் போட்டு பிரார்த்தனை செய்வது போல் இருந்தான். பிரதாபன் இவனது கைகளை பின்னால் இழுத்து கட்டினான். தலையோடு முகத்தை மூடி துணியை சுற்றினான். பின் அப்படியே இருந்தவாக்கில் குழிக்குள் தலையை கவிழ்த்து மண்ணைப் போட்டு மூடினான்.

பிரதாபன் மைக்கை எடுத்து அறிவிப்பு செய்தான். “பாருங்கள் அன்பு சகோதரிகளே.. நீங்கள் பெற்றெடுக்காத பிள்ளையை பாருங்கள்.உங்கள் முன்னால் தன் உயிரை பணயம் வைத்து பிரயாசை படுகிறார். எல்லாம் எதற்காக. ஒரு ஜாண் வயிற்றுக்காக. உங்கள் நன்கொடைகளை நம்பிதான் இந்த பாடுபடுகிறார். உங்களால் இயன்றதைத் தாருங்கள். அள்ளிதாருங்கள்.”

கூட்டத்திலிருந்து சுந்தர்ராஜ் “ ‘அந்த’ கட்சி சார்பா பத்து ரூபாதானே. இந்தா ‘இந்த’ கட்சி சார்பா இருபது ரூபா.” என்று கொடுத்தார்.

உடனே பிரதாபன் கத்தினான். “ ——- கட்சி தலைவரின் உண்மைத் தொண்டன் சார்பாக இருபது ரூபாய்..”

ஜிப்பாகாரருக்கு இப்போது கௌரவப் பிரச்சனையாயிற்று. நம்மைவிட இன்னொருவன் அதிகமாகவா.. இது கட்சிக்கே ஏற்பட்ட அவமரியாதை என்று நினைத்தாரோ என்னவோ “இந்தா அம்பது ரூபா .. ‘இந்த’ கட்சி சார்பா” என்றார்

பிறகு ‘இந்த இந்த’ கட்சி, ‘அந்த அந்த’ கட்சி எல்லாம் அள்ளி அள்ளி கொடுக்க டோனியின் சாகசத்திற்கு வசூல் குவிந்தது.

பழனிக்கு இந்த போட்டியில் தானும் கலந்து கொள்ளலாம் என்று தோன்றியது. ஐந்து ரூபாயைக் கொடுத்து ‘—–‘ ரசிகர் மன்றம் சார்பாக அன்பளித்தான்.

உடனே ‘—–‘ரசிகர்கள் புது யுத்தியை கையாண்டார்கள். பணத்தை மாலையாகக் கட்டி டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த மேரியின் கழுத்தில் கொண்டு போட்டார்கள். போட்டா போட்டி தொடர்ந்தது.

ஜிப்பாகாரர் கொடுத்து கொடுத்து கடைசியாக பாக்கெட்டில் கைவிட்டபோது அது காலியாக இருந்தது. சரி.போகட்டும். இன்னும் பத்து நிமிடத்தில் புதைத்து வைத்தவன் எப்படி எழுந்து வருகிறான் என பார்த்துவிடலாம் என்று பொறுமையாய் நிற்கவும் முடியவில்லை. ‘என்ன இவனுக. நான் இதுவரை 500 ரூபாய்க்கு மேல் கொடுத்திருக்கிறேன். அதையெல்லாம் மறந்துவிட்டு மற்ற கட்சி தலைவனையும், நடிகர்களையும் புகழ்ந்து பேசிட்டு இருக்கானே’ அவருக்கு கோபம் வந்தது.

‘அனௌன்ஸ்’ பண்ணிக் கொண்டிருந்த பிரதாபனை நெருங்கி, “ எலேய். நீ என்ன. இன்னும் அந்த பயலுகளைப் உசத்தி பேசிட்டு இருக்க. நான் எவ்வளவு ரூபாய் தந்திருக்கேன். வேற எந்த நாயாவது தந்திருக்கா.” என்று கத்தியது மைக் வழியாக ஒலிபெருக்கியில் கேட்டது.

அதை கேட்ட எதி கட்சிக் காரர்களுக்கு கோபம் வந்தது. “ பணம் இல்லேன்னா பொத்திகிட்டு போயேண்டா பிச்சைக்கார பயலே” என்று எதிர் குரல் கொடுத்தது.

“எதுக்கு போணும். கூத்தாடி பயலுகளுக்கு ஒரு கூட்டம். பொறுக்கி பயலுக .”

அங்கும் இங்குமாய் ஆவேசக் கூச்சல்கள்.

பிரதாபன் பயத்தில் அலறினான். “ அண்ணே .. அண்ணே.. உங்க கால்ல விழுந்து கும்பிடறேன். தயவு செய்து கலாட்டா பண்ணாதீங்க. உங்களை நம்பிதான் வந்திருக்கோம்..”

“அப்படீன்னா ஏன் ஒவ்வொருத்தனையும் உசத்தி பேசற..”

“அண்ணே அதெல்லாம்….” என்று சொல்ல வந்தவனை விலக்கிவிட்டு ஜிப்பாகாரரை எவனோ குத்தினான். உசாரான எதிர்தரப்பு அவனை பிடித்து நையபுடைக்க.. மெல்ல மெல்ல அது கூட்டமெங்கும் பரவியது. யாரை, எதற்கு என்றில்லாமல் மோதிக் கொள்ள… சைக்கிள் மிதித்துக் கொண்டிருந்த மேரியை சிலர் துரத்த…. பெண்கள் சிதறி ஓட…
சகஜ நிலை திரும்ப ஒருமணி நேரத்துக்கு மேலாகி விட்டது

[குறிப்பு: இந்த கதை www.tamiltheru.blogspot.in என்ற எனது பிளாக்கிலும். தமிழ்மன்றம்.காமிலும் வெளியாகியுள்ளது]

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *