(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நான் மருதானைச் சந்தி வழியாக வந்து பஞ்சிகாவத்தை ரோட்டில் திரும்பிக்கொண்டிருந்தேன். பகல் முழுவதும் ஓயாது ஓடும் ‘ட்ராலி’ பஸ்கள் இப்போது ஓய்ந்துவிட்டன. தெருவில் ‘கார்’களோ ‘பஸ்’ களோ ஒன்றையும் காணோம்.‘லாபாய் லாபாய்’ என்று கத்திக் கொண்டிருக்கும் வியாபார தந்திரிகள் தங்கள் கடைகளை மூடிவிட்டார்கள். இரவு பகல் இருபத்துநான்கு மணிநேரமும் சேவை செய்யும் ஒரு தேநீர்க்கடை மட்டுந்திறந்திருந்தது. முன்பகுதியிலுள்ள மேசையருகே முதலாளி தூங்கி வழிந்து கொண்டிருந்தார். அவரைத் தவிர வேறு ஒருவரையுமே கடையில் காணவில்லை. அருகிலுள்ள புகையிரத நிலையத்தின் ‘குட்செட்’டில் இயந்திரங்களின் ஒலிகள் இடையிடையே கேட்டுக் கொண்டிருந்தன. வெகு தூரத்தில் மங்கலாக இரு உருவங்கள்…. மனிதர்களாகத்தான் இருக்கவேண்டும். அவர்களைத் தவிர அத்தெருவில் மனிதசஞ்சாரமே அற்றுப்போயிருந்தது.
புகையிரத நிலையத்தின் மணிக்கூண்டுக் கோபுரத்தை நிமிர்ந்து பார்த்தேன். இரவு ஒன்று ஐம்பத்தைந்தாகிவிட்டது. எனது நடையில் வேகம் கூடியதை உணர்ந்தேன். சட்டைப் ‘பாக்கெட்’டில் இருந்த ரூபா நோட்டுக்கள் பெருஞ் சுமையாய்க் கனத்துக்கொண்டிருந்தன.
ஒன்றரை மாத காலமாகத் தியேட்டர் ஒன்றில் கடமை யாற்றியதில் இன்றுதான் சம்பளம் கிடைத்தது. தினமும் இரவு இரண்டாங் காட்சி முடிந்து வீடு திரும்புவதற்கு எப்படியும் நேரமாகிவிடும். முன்பெல்லாம் நான் இவ்வழியாக வரும்பொழுது அதிகம் பயப்படுவதில்லை. இன்று ஏனோ எனது மனதைப் பயம் கௌவிக் கொண்டுவிட்டது.
மருதானை வீதிகளில் இரவில் நடமாடுவது கவனமாக இருக்கவேண்டும். இங்கு வழிப்பறிகள் நடப்பதுண்டு. அத்தோடு வேறுவிதமான கொள்ளைகளும் நடக்கும். மருதானை நகருக்கு இரவெல்லாம் பகல் தான். வெறியர்களின் கூத்துகளும், கும்மாளங்களும், வேறு பல கேளிக்கைகளும் இங்கு நடைபெறும். வாழ் நாள் முழுவதும் உழைக்கும் பணத்தை நொடிப் பொழுதில் தீர்த்துக் கட்டக்கூடிய பணம்விழுங்கிகளின் சுவர்க்க பூமியிது. அவர்களின் வலைக்குள் அகப்பட்ட எத்தனையோ அப்பாவிகளின் கதைகளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
சிறிது காலத்துக்கு முன் எனது ஏழை நண்பன் ஒருவன் என்னிடம் வந்தான். தனது சகோதரிக்கு ஏதோ பண இடைஞ்சலாம். சம்பளப் பணம் முழுவதையும் அவளிடம் கொடுத்துவிட்டானாம். கைச்செலவுக்குப் பணம் வேண்டுமென்று என்னிடம் கடன் கேட்டான். ஏதோ கையிலிருந்த பணத்தைக் கொடுத்து அனுப்பினேன். நான்கைந்து நாட்களின் பின்தான் உண்மை வெளிப்பட்டது. அவன் சினிமாவுக்குச் சென்று திரும்புகையில் தனது சம்பளத்தைப் பறிகொடுத்து விட்டான் என்பதை வேறுசிலர் கூறத்தான் கேள்விப்பட்டேன். அவனிடம் உண்மையை விளக்கமாகக் கூறும்படி கேட்டால் வெட்கமும், வேதனையும் அடைவானேயென்று பேசாமல் இருந்துவிட்டேன். பாவம், அவன்மேல் எனக்கு அனுதாபந்தான் ஏற்பட்டது.
அருகிலிருக்கும் தியேட்டரில் இரவு இரண்டாங்காட்சியாக ஏதோ பயங்கரமான படம் காட்டுகிறார்கள் போலிருக்கிறது. இடையிடையே அலறும் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன.
மிகவும் சமீபத்திலிருந்து ஏதோ துர்நாற்றம் மூக்கைத் துளைத்தது. விரல்களால் மூக்கை அழுத்திப்பிடித்துக்கொண்டே நடந்தேன். சில நாட்களுக்கு முன் தெருவோரத்தில் ஒரு காகம் செத்துப்போய்க் கிடந்தது. அதன் அழுகிய நாற்றமாகத்தான் இருக்குமோ….? அப்படியும் நினைத்துவிட முடியாது. ஏனெனில், வெகு காலமாகவே இத் துர்நாற்றம் இவ்விடத்தில் இருக்கின்றது. சிறிது தூரத்தில் சாக்கடை நீர் தேங்கி நிற்கின்றது. அதன் நாற்றமாகத்தான் இருக்க வேண்டும்.
தெருவின் வளைவை அடைந்துவிட்டேன். வரிசையாகத் தொழிலாளர்களின் குடிசைகள் தென்படுகின்றன. அவற்றைத் தாண்டிவிட்டால் நான் குடியிருக்கும் வீட்டை அடைந்துவிடலாம்.
நான் கண்களைக் கூர்மையாக்கிக்கொண்டு பார்த்தேன். அதோ ஒரு பெண்ணின் உருவம் தெரிகிறது. குடிசையொன்றின் முன்வாசலில் அவள் நிற்கின்றாள்.
வழக்கமாக, எதிர்ப் பக்கத்திலுள்ள கட்டிடத்தின் மேல்மாடியில் அமைந்திருக்கும் விளம்பரப் பலகையில் மின்சார ‘பல்ப்பு’கள் எரிவதும் அணைவதுமாகவிருக்கும். அதனால் அவ்விடத்தில் யார் நின்றாலும் துலக்கமாகத் தெரியும். ஆனால், இன்று அந்த இடம் இருள் கவிந்து இருக்கின்றது. மின்சார ‘பல்ப்பு’கள் பழுதடைந்திருக்க வேண்டும். தூரத்திலுள்ள மின்சாரக் கம்பத்தின் வெளிச்சம் அவ்விடத்தில் சிறிது மங்கலாகத் தெரிகிறது.
நான் அவ்விடத்தைச் சமீபித்துக்கொண்டிருந்தேன். இப்போது அவளின் உருவம் தெளிவாகத் தெரிகிறது. இளம் பெண்ணாக இருக்கின்றாளே …..! அவள் தெருவின் இரு பக்கங்களையும் பார்த்து விட்டுக் குடிசையின் வாசலை அடைகிறாள். அவளுடைய பார்வையில் ஏன் ஏக்கம் தெரிகிறது? அவள் யாருடைய வரவை எதிர்பார்த்து நிற்கின்றாள்?
அவள் தன்னை அலங்கரித்திருப்பது நன்றாகத் தெரிகிறது. இந்த அகால வேளையில் அப்படி என்ன அலங்காரம் வேண்டிக்கிடக்கிறது? தலைவாரிப் பூச்சூடி அழகாக உடையணிந்திருக்கிறாள். ஒருவேளை இவளும்….? அப்படித்தான் இருக்கவேண்டும். தனது காதலனை… இல்லைக் காதலர்களை எதிர்பார்த்து நிற்பவளாக இருக்க வேண்டும்.
நான் அவளைச் சமீபித்து விட்டேன். ‘க்கும்’- ஒரு செருமல் ஒலி அவளது அடித் தொண்டையிலிருந்து கிளம்புகின்றது.
எனது தலை நிமிரவேயில்லை. நான் நடந்துகொண்டிருந்தேன். ஆனாலும் நடையின் வேகம் குறைந்துவிட்டது. அவளின் செருமலுக்கு அவ்வளவு சக்தியா? கடைக்கண்ணால் அவளைப் பார்த்தேன்.
அவள் சிறிது சத்தமாகச் சிரிக்கின்றாள். ஜலதரங்கத்தின் நாதமல்லவா கேட்கிறது. என்னையும் மீறிக்கொண்டு எனது தலை நிமிர்கின்றது. அவள் புன்னகை புரிந்தவண்ணம் தன்னிடம் வரும்படி கையால் அழைத்தாள்.
ஏன் எனது நடை தடைப்பட்டுவிட்டது? கால்கள் இயங்க மறுக்கின்றன. நான் நகராமல் நின்றுவிட்டேன். என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. எனது இதயம் வேகமாக அடித்துக்கொள்ளு கின்றது. இந்தத் தருணத்தில் பயத்தைக் களைந்தெறிந்து விட்டுப் புத்திசாலித்தனமாகவல்லவா நடந்துகொள்ள வேண்டும். ஏன் என் புத்தி மழுங்கிவிட்டதா?
இதோ அவள் என்னைநோக்கி வந்துகொண்டிருக்கிறாள். ‘நெருங்காதே’ என்று கத்தவேண்டும்போலத் தோன்றுகிறது. எனது தொண்டை ஏன் அடைத்துக்கொண்டுவிட்டது? உமிழ்நீரைக்கூட விழுங்க முடியவில்லையே! இந்த இடத்தைவிட்டே ஓடிவிடுவோமா? ஆம், அதுதான் சரியான யோசனை. ஆனால் எனது கால்களை நகர்த்தக்கூட முடியவில்லையே! கால்களுக்கு இவ்வளவு கனம் திடீரென்று எப்படி வந்தது.
அவள் என்னருகில் நிற்கின்றாள். இதழ்களிலே புன்னகை அரும்பி நிற்கின்றது. அப்பப்பா அவளது வதனத்திலே எவ்வளவு கவர்ச்சி! நாகபாம்பின் உடலிலே ஒருவகை வழவழப்பான அழகு தோன்றுமே அதேபோலத்தான்.
ஐயோ, அவள் என் கைகளைப் பற்றுகின்றாளே! ஏன் என் தேகமெல்லாம் வியர்த்துக் கொட்டுகின்றது? எனது உரோமக் கால்கள் குத்திட்டு நிற்கின்றன. நான் மரக்கட்டை போலாகிவிட்டேன். எனது கைகளை விடுவித்துக் கொள்ளக்கூடிய சக்தி எங்கே ஓடி மறைந்து விட்டது. இந்நிலையில் யாராவது பார்த்துவிட்டால்…? நான்கு பக்கங்களையும் கவனிக்கிறேன். நல்லவேளை ஒருவருமே இல்லை.
“உள்ளே வாருங்கள்” என்று கூறிக்கொண்டே எனது பதிலையும் எதிர்பாராது அவள் குடிசைக்குள் என்னை அழைத்துச் சென்றாள்.
நாம் செய்யக்கூடாதென்று திடசங்கற்பம் செய்திருக்கும் செயல்களைச் சிலவேளைகளில் சந்தர்ப்ப வசத்தால் நம்மையும் மறந்து செய்து விடுகின்றோமே…. …. இதே நிலையில்தான் நானும் இருந்தேன்.
அவளது குடிசை சிறியதுதான். பலகைத்துண்டுகளினாலும், தகரத்தினாலும் அமைக்கப்பட்டிருந்தது. குடிசைக்குள் நுழைவதற்கு நன்றாகக் குனிய வேண்டியிருந்தது. முன் பகுதியில் அதிக வெளிச்சம் இல்லை. எதிலோ என் கால்கள் இடறி நிலை தளருகின்றது. அவள் என்னைத் தாங்கிக்கொண்டாள். குடிசையின் மூலையில் ஒரு சிறு கயிற்றுக்கட்டில் போடப்பட்டிருந்தது. அதிலே என்னை அமரும்படி கூறிவிட்டுக் குடிசையின் முன் கதவைச் சாத்தினாள்.
அப்பப்பா, சிறிது நேரத்திற்குள் எனது உடைகளெல்லாம் வியர்வையால் நனைந்துவிட்டதே!. சே! ஏன் எனது உடம்பெல்லாம் இப்படி நடுங்குகின்றது? நான் மிகவும் தென்புடன் அல்லவா இருக்க வேண்டும். எனது பயந்தாங்கொள்ளித்தனத்தை இவள் அறிந்து கொண்டால் மிகவும் சாதுரியமான முறையில் எனது பணத்தைப் பெற்றுக் கொண்டு விடுவாளே!
எனது சிறுதொகைப் பணத்தைச் செலவு செய்வதற்கு நான் போட்டுவைத்திருந்த திட்டங்கள் மனக்கண்முன் வந்தன. எனக்கு வேலை கிடைத்தவுடன் முதற் சம்பளத்தில், ஊர்ப்பிள்ளையாருக்கு ஒரு தீபம் வாங்கிக் கொடுப்பதாக எனது அன்னை நேர்த்திக்கடன் செய்திருந்தாள்; முக்கியமாக அதனை நிறைவேற்றவேண்டும். எனது ஏழைத் தங்கைக்கு ஒரு சேலை வாங்கியனுப்ப வேண்டும். பாடசாலைக்கு வசதிச்சம்பளம் கட்டுவதற்குப் பணம் வேண்டுமென்று தம்பி கடிதத்துக்குமேல் கடிதமாக எழுதியிருந்தான். இவற்றை யெல்லாம்விட வேறும் பல சில்லறைச் செலவுகள்.
நான் மிகவும் சாதாரணமாக இருப்பவனைப்போல நடித்துக் கொண்டு நான்கு பக்கமும் நோட்டம் விட்டேன். எதிர் மூலையில் பாத்திரங்கள் உருண்டு கிடந்தன. அறையின் நடுவே ஒரு பிரம்புத்தட்டி தொங்கிக்கொண்டிருந்தது. மறுபக்கத்திலேதான் சமையலறை போலிருக்கிறது. உள் வளைமரங்களில் புகை ஒட்டறைகள் படிந்திருந்தன. எதிரேயிருந்த கதிரையொன்றில் இரும்புப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. எதிர்ப்பக்கத்தில் சேலைகளும் வேறு உடைகளும் இருந்தன. இவைகளைப் பார்த்தால் அக்குடிசையில் அவளைத்தவிர வேறு ஒருவரும் வசிப்பதில்லைப் போல் தெரிகின்றது. இவள் தனியாகவா இங்கு இருக்கின்றாள்.
மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் மேற் கூரையில் ஏதோ மின்னியவாறு தெரிந்தது. உற்றுக்கவனித்தேன்.
ஒரு சிலந்தி, வலை பின்னியிருந்தது; அது வட்டம் வட்டமாக எவ்வளவு அழகாக இருக்கின்றது. அதன் நடுவே சிலந்தி! அந்த வலையில் பூச்சியொன்று விழுந்து துடித்துக்கொண்டிருந்தது.
அவள் திரும்பி வந்தாள். விளக்கு வெளிச்சத்தில் அவளின் தோற்றத்தை நன்கு கவனித்தேன். எவ்வளவு அழகாக இருக்கின்றாள்! அவளது தோற்றத்தில் நாரீமணிகளின் அதிமித அலங்காரம் இருக்கவில்லை. குடும்பப் பெண்ணுக்குரிய அலங்காரத் தோற்றந்தான் இருந்தது. அவளைப் பார்க்கும்போது அவளின்மேல் எனக்கு அனுதாபந்தான் ஏற்பட்டது.
இவள் தனது வாழ்வைச் சரியான பாதையிலே செலுத்தி யிருந்தால் நிச்சயம் ஒரு சிறந்த குடும்பப் பெண்ணாகியிருப்பாள் என்று எண்ணத் தோன்றியது.
ஏன் இவ்வளவு கீழ்த்தரமான வழியில் இறங்கியிருக்கிறாள்? ஒருவேளை வறுமையாக இருக்குமோ? நிச்சயம் அப்படியிருக்க முடியாது. வறுமையைப் போக்கிக்கொள்ள எவ்வளவோ கண்ணியமான தொழில்கள் இருக்கின்றனவே. படுகுழியில் விழவேண்டியதில்லையே! பின் இந்நிலைக்கு இவள் வருவதற்குக் காரணந்தான் என்ன?
அவர்கள் வாழும் கீழ்த்தரமான டாம்பீக வாழ்க்கை முறையாகத்தான் இருக்க வேண்டும். குடிக்கும், கும்மாளத்திற்கும் கண்ணியமாகப் புரியும் தொழில்களின் வருமானங்கள் போதுவதில்லை. அதனாலேதான் குறுக்கு வழியை நாடுகின்றார்கள் போலும். ஆனாலும் இந்த முடிவை என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. அவளுடன் கதைத்து ஏதாவது கிரகித்துக்கொள்ளலாம் போலத் தோன்றியது.
இதோ அவள் எதையோ நீட்டுகிறாள். கிண்ணத்துடன் பாலை வாங்கிச் சுவைத்தேன். அவள் என்முன் அடக்கமாக நின்று கொண்டிருந்தாள். நான் இங்கு வந்தபோது அவளிடம் காணப்பட்ட கலகலப்பு எங்கே ஓடிமறைந்து விட்டது?. கிண்ணத்தைக் கட்டிலின் ஓரத்திலே வைத்தேன்.
விம்மும் ஒலி கேட்கின்றதே!
அவளை உற்றுக் கவனித்தேன். கண்ணீர்! … இது என்ன தொந்தரவாக இருக்கின்றது. எதற்காக இவள் அழுகின்றாள்? அழவேண்டுமானால் தனிமையிலிருந்து அழுது தொலைக்கலாமே. என்னை இங்கு அழைத்துக் கொண்டுவந்து வைத்து ஏன் அழவேண்டும்? வரவர அழுகை அதிகரிக்கின்றதே. எனக்கு அவளைப் பார்ப்பதற்கு அனுதாபமாகவும், சங்கடமாகவும் இருந்தது.
“ஏன் அழுகின்றாய்?”
அவள் அதிகமாக விம்மினாள். எனக்குப் பொறுமை குறைந்துகொண்டு வந்தது. கேட்பதற்குப் பதில் கூறாமல் இப்படி அழுதுகொண்டிருந்தால்……..? ஆத்திரந்தான் பொங்கியது. ஆனாலும் அடக்கிக்கொண்டு அவளின் அழுகைக்குக் காரணத்தைக் கண்டிப்புடன் கேட்டேன்.
இப்போது அவள் ஒருவாறு தனது அழுகையைக் குறைத்துக்கொண்டாள்.
“நான் ஒரு அனாதை. சிறு வயதிலே தாய்தந்தையரை இழந்த எனக்கு அண்ணா ஒருவர் துணையாக இருந்தார். ஆனால் அவரும் சிறிது நாட்களுக்கு முன் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். நான் தனியனாகி விட்டேன். எனது துன்பத்தை நினைக்கும்போது அழுகை வந்துவிட்டது.” என்று கூறிக்கொண்டே அவள் நிலத்தில் அமர்ந்தாள்.
என் மனம் சிறிது வேதனைப்பட்டது. பாவம், இந்த இளம் வயதில் அவளுக்கு இவ்வளவு கொடுமையா? விதி யாரைத்தான் விட்டு வைத்தது!
ஆனாலும் அவள் புரியும் இழிவான தொழிலை நினைக்கும் போது மனதிலே கசப்புத்தான் ஏற்பட்டது. ஒருவேளை தனியாக விடப்பட்ட அவள் வயிற்றை நிரப்புவதற்குத்தான் இத்தொழிலைப் புரிகின்றாளா?
“ஏன் ஏதாவது கண்ணியமான தொழிலைச் செய்து சம்பாதிக்கலாமே” என்று மெதுவாகக் கேட்டு வைத்தேன்.
“நேற்றுவரை என்னிடமிருந்த நகைகளை விற்றுக் கண்ணியமான முறையில் சீவனத்தை நடத்திவிட்டேன். என்னிடமிருந்த பணமெல்லாம் கரைந்துவிட்டது. தனிமையில் விடப்பட்ட ஒர் இளம்பெண் எந்தக் கண்ணியமான தொழிலைச் செய்யலாம்? அவளைச் சுற்றியிருக்கும் சிலர் எப்படியும் அவளை இழிநிலைக்குக் கொணர்ந்து விடுவார்கள். அப்படியொரு நிலை பிறரால் ஏற்படுமுன் நானே இந்நிலைக்கு வந்துவிடுவதெனத் தீர்மானித்தேன். நீங்கள் தான் முதன் முதல் என்னிடம் வந்திருக்கிறீர்கள். ”
நான் அவளை நிமிர்ந்து பார்த்தேன். புதுமலரின் வருணிக்க முடியாத ஒருவித வனப்பு அவளிடம் மறைந்திருப்பதை என் உள்மனம் உணர்ந்துகொண்டது. நுகரப்படாத மலரா அவள்? நமது சமுதாயத்தில் தேவையற்ற முறையில் எவ்வளவு மலர்கள் அநியாயமாகக் கசங்கி விடுகின்றன.
அவள் தொடர்ந்தாள் “…. ஆனால் உங்களைக் கண்டவுடன் நான் அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டேன். என் சகோதரனை உங்கள் உருவத்தில் பார்க்கின்றேன். என் அண்ணாவின் அதே கனிந்த பார்வை, தோற்றம் யாவும் உங்களிடம் அமைந்திருக்கின்றன….. அண்….ணா !” விம்மியபடியே அவள் என்னை அழைத்தாள். உணர்ச்சி இழையோடிய அவளது அன்புக்குரலின் சக்தி என் உள்ளத்தை இளகச் செய்தது.
எனது கண்கள் குளமாகின. அவளின் நிலைகண்ட எந்த மனித இதயமும் கலங்காமல் இருக்கமாட்டாது.
அவள் தனது உள்ளத்தைத் திறந்து எல்லாவற்றையுமே கூறிவிட்டாள். இந்த உத்தமப் பெண்ணுடன் உடன் பிறக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லையே என்று எனது மனம் அழுதது. ஆனாலும் நான் அவளுக்கு என்ன உதவியைச் செய்யப் போகின்றேன்? எனது குடும்பத்தில் எனக்கு இருக்கும் பொறுப்பே சுமக்க முடியாமல் கனக்கின்றதே.
எனது சட்டைப் ‘பாக்கெட்’ டில் கிடந்த பணத்தில் நூறு ரூபாவை எடுத்து அவளிடம் நீட்டினேன். அவள் தயங்கினாள்.
“ஓர் இளம்பெண் தனியாக வாழமுடியாதென்று நினைத்துக் கொள்ளாதே. மனத்திடமும், துணிவுங்கொண்ட எந்தப் பெண்ணும் துன்பமில்லாது வாழலாம். கண்ணியமான ஏதாவது தொழிலைச் செய்து வாழக் கற்றுக்கொள். அதற்கு இந்தப்பணம் மூலதனமாகவாவது உதவட்டும்” என்று கூறி அவளது கையில் பணத்தைத் திணித்தேன்.
நான் அவளுக்குக் கூறிய வார்த்தைகளும், செய்த சிறு உதவியும் எனது மனதிற்குத் திருப்தி அளிக்கவில்லை. ஆனாலும் என் நிலைமையில் அதைத்தான் என்னால் செய்ய முடிந்தது.
நன்றிப் பெருக்கால் அவளது கண்கள் கலங்கின. நான் புறப்படும் பொழுது. “போய்வாருங்கள் அண்ணா” என்று கூறி அன்புடன் விடை தந்தாள்.
வாழ்விலே நல்ல காரியம் ஒன்றைச் சாதித்த மனநிறைவுடன் எனது அறையை அடைந்தேன்.
வழக்கம்போல் அடுத்தநாள் இரவு அவ்வழியாக வந்து கொண்டிருந்தபொழுது என்னையறியாமலே எனது பார்வை அவளது குடிசையின் பக்கம் திரும்பியது. அங்கே நான் கண்ட காட்சி! – ஓர் இளம் வாலிபனை அணைத்தபடியே அவள் குடிசைக்குள் நுழைந்து கொண்டிருந்தாள்.
– கலைச்செல்வி 1964.
– கால தரிசனம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஏப்ரல் 1973, கணேச சனசமூக நிலையம், புன்னாலைக்கட்டுவன்.