சுற்றுப்படிகளனைத்தையும் மூழ்கடித்துக் கிடந்த மரகத நீர்ப்பரப்பு திகைக்க வைத்தது. மெல்லிய அலைகளில் தெறிக்கும் இளம் வெயிலின் மினுமினுப்பில் கண்கள் கூசின. படிகளில் உட்கார்ந்து மீன் கூட்டங்களையோ கோபுரச் சிற்பங்களையோ இன்றைக்கு ரசிக்க முடியாது. கரை விளிம்பில் நழுவி அசையும் நீரின் சுவடுகள் நீண்ட கல் தரையெங்கும் கோலமிட்டிருந்தன. வழக்கத்திற்கு மாறான நெரிசல். கண்கள் அனைத்தையும் ஒன்றுபோல் கட்டிப் போட்டிருந்தது பொற்றாமரைக் குளம். நிறைகுளம் வியந்து நிற்கும் கும்பலைப் பிளந்து குளத்தைச் சுற்றிவிடலாம் என்ற தீர்மானத்தில் எதிர்படுபவர்களை மெல்ல விலக்கியும் மோதி உரசியும், கடந்து நடந்தேன். எவர் கைகள் என்னை குளத்தின் கரைக்கு ஒதுக்கித் தள்ளியிருந்தன என்று தெரியவில்லை. விளிம்பில் தத்தளிக்கும் விரிகடலின் அழைப்பில் கவனம் கொள்ளாது சுதாரிக்கும் முன்பே உடல்களின் மேலுமொரு மோதலில் நிலை குலைந்து விழுந்தேன். ஒரு கணம் கோபுரங்கள் கலைந்து சரிய நீர்ப்பரப்பு கரம் விரித்து என்னை அள்ளிக் கொண்டது. உயிர் பயம் கிளைத்து உடலெங்கும் பரவியது. பற்றுதல் தேடி பதட்டத்துடன் அலையும் கைகளெங்கும் நழுவி அலையும் நீர்க் கிளைகள். தழுவி உள்ளிழுக்கும் ரகசிய ஆவேசம் தன் வசம் இருத்தியபின், துள்ளலின்றி துடிப்பின்றிக் கிடந்தேன். நீரின் கைகளில் சாதுவாய் கிடந்தது உடல். தொலைவைக் கடந்த களைப்பில் கண்கள் மூடியிருந்தன. எக்கரையொதுக்கிச் செல்லும் என்னை இந்த நீரோட்டம்? உத்தேசங்களின்றி மிதந்தவனை அந்தப் பாடல் அள்ளியெடுத்தது. விநோத சஞ்சாரத்துடன் குதூகலம் பொங்க என்னை அது வழி நடத்தியது. தளிர் பச்சையின் கைங்கரியப் பிரதேசம் போல் செழுமைபூண்ட பாதையது. பசும்புல் வெளியின் இளவெயில் கோலங்களில் மான்களில் மேய்ச்சல்கள். பர்ணசாலையின் நாணல் கூரைகளில் தத்தும் வெண்புறாக்கள். திசையொளி குவிந்த ஒற்றைத் தடத்தில் அவன் நடந்து கொண்டிருந்தான்.
அவனைக் கண்டதும் பாடல் எனை விடுத்து அவனையடைந்தது. பாதுகையணிந்த கால்களின் கம்பீர நடையில் இணக்கத்துடன் அசையும் உடல் அவனது குரலுக்கு செறிவூட்டிக் கொண்டிருந்தது. நிர்வாணத் திமிர் மின்னும் அவன் உடலை மையம் கொண்டு சுழன்றது காற்று. உடன் நடந்தவன் சற்றும் பொருத்தமற்றவன். முழங்கால் உயரமே இருந்த அவன் தலையில் பெரும் பாரமாய் பிச்சைப் பாத்திரம். பாடி நடக்கும் அவனைத் தொடர்ந்து இவன் ஓடிக் கொண்டிருந்தான். நடன லாவகம் கொண்ட அவன் நடைக்கு முரணாய் இவனின் குலுங்கல்கள். கந்தர்வம் குழையும் கீதம் காற்றில் மிதந்து பர்ணசாலைக் கதவுகளைத் தட்டின. பசிக்கென உணவு வேண்டிப் பாடிய பாடலின் வரிகள் அவனது சாதுர்யத்தில் நனைந்து முனிபத்தினியரை அத்துமீறி தீண்டியழைத்தது. அன்னமேந்தி வந்தவர்கள் நிற்கும் நெடிய உடல் கண்டு நின்றார்கள்; மின்னல் அறைந்தவர்களாய் மிரண்டார்கள்; சாம்பல் தசைகளின் முறுக்கம் கண்டு நாணித் தலை கவிழ்ந்தார்கள். பாடலின் தொடுகைகள் உடல் தசை இறுக்க… நாணம் துறந்து பண்ணிசைப்பவன் பாதையில் நடந்தனர். ஆடைகள் தளர்ந்தன; அணிகள் கழன்றன. விம்மும் அங்கங்கள் தீண்டும் வேண்டுதலுடன் திசையதிரத் தவித்தன.
நிலை பிறழ்ந்திருந்தேன் நான். பிரதேசமெங்கும் காற்றில் கனன்ற காமப் பெருமூச்சின் தகிப்பில் கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தேன். நாணம் கரைந்தொதுங்கிய கரையில் தடுமாறினேன் நான். அவனருகில் நின்ற குறபூதம், பாவம், என்னைவிடத் தடுமாறிக் கொண்டிருந்தான். விழிவரைக்கும் மேலே ஆர்ப்பரிக்கும் பேரழகின் அதிர்வுகளையும், விம்மல்களையும் காணப் பொறுக்காது கண் பிதுங்க நின்றிருந்தான். தன் தலை பாரம் இறக்கிடத் தடம் பார்த்துத் தவித்து சுற்று முற்றும் பார்த்தவன் கண்களில் நான் பட்டுவிட, குடுகுடுவென்று நெருங்கி வந்தான். சிவந்த அவன் கண்களில் தங்காத காட்சிகளின் தத்தளிப்பைக் கண்டு கொள்ள முடிந்தது.
‘ஒரு நிமிஷம் இதப் படிங்க… நான் போயிட்டு வந்தர்றேன்’ என்று சுண்டு விரல் காட்டிவிட்டு, என் பதிலை எதிர்பார்க்காதவனாய், ஓடினான். கைகளில் பிச்சைப் பாத்திரம் கனத்தது. அவனது கட்டையுடல் துரிதமாய் புல்வெளி கடந்து பெருமரம் ஒன்றையடைந்து மறைந்தது. தலை சுமந்தத் திருவோட்டுடன் பாடும் அவன் காலடி அடைந்தேன் நான். முனிபத்தினியர் மேனிவருடும் அப்பாடல் இன்னும் சில்மிஷத்துடன் விளையாடியிருந்தது. அவனை மிக நெருங்கியிருந்த அந்த ரிஷிபத்தினி கலையாத இளமையுடன், கொப்புளிக்கும் மோக முத்திரைகளுடன் இருந்தாள். கற்பின் நிறம் மங்கி காமச் சிவப்பேறிக் கிடந்த அவள் அவன் உடல் மொத்தமும் அள்ளிப் பருகும் கண் கொண்டு அளந்தவள் பாதுகைக் கால்களில் சரணடைந்து நெளிந்தாள்.
நெளியும் அவள் உடல் அசைவுகளைப் பார்த்திருக்க முடியாதவளாய் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தேன். பாதி மூடிய கண்களில் சாந்தம் உறைந்திருக்க… பாடலின் லயத்தில் ஆழ்ந்திருந்தான். ஒரு முறை அவன் தீண்டிட வேண்டி காலடி வந்து விழும் பாவையர் தவிப்பும் தகிப்பும் எட்டாதவனாய் நிற்கும் அவன் கோலம் மேலும் அவர்களை வெறி கொள்ள வைத்தது. தாருகாவனத்தின் அந்த விநாடிகள் இன்னும் கொஞ்சம் நீண்டிருந்தால் பச்சை மரங்களனைத்தும் பற்றியெரிந்திருக்கும் இலை கொடிகள் உருகியுதிர்ந்திருக்கும். அனைத்தையும் மௌனத்தில் ஆழ்த்தி அப்பாடல் நின்றது. கண் திறந்தான் அவன். காணப் பொறுக்காது நான் தவித்தேன். இந்தக் குள்ளனை வேறு இன்னும் காணவில்லை?
காமம் கரையுடைந்த அக்கணத்தில் பலி கொள்ளும் பெருங்கூச்சலொன்று வெறிபூண்டு வந்தது. தாருகாவனத்து முனிவர் கூட்டம் நெற்றிக்கண் நெருப்பேந்தி அவனைச் சூழ்ந்தனர். நடுங்கி நின்றேன் நான். கொதிக்கும் முனி முகத்தில் தோல்வியின் ஆற்றாமைத் துடித்து நின்றது. தவத்திருக்களின் உடலிச்சையை உற்சவமாக்கி, பிறன்மனை நோக்கா பேராண்மை தலை கனத்தை விஷ்ணு மோகினியின் முலை நர்த்தனத்தில் அடகு வைத்த வெட்கமும் பொறுமலும் விரட்டியடித்திருந்தன. மோகினி அஸ்திரம் எய்திய சுடுகாட்டு சித்தன் பண்ணிசை வித்தையில் பத்தினியர் தொட்டு விளையாடக் கண்டதும் முனிகோலம் மறந்தனர். பெயரழித்தவன் உயிர்குடிக்க முனைந்தனர். ஆவிசார வேள்வியமைத்து ஆயுதமனைத்தும் ஏவினர். ஏவிய பூதப் படையும்… பாம்பும், முயலகனும்… மகு, மான், வெண்டலையும்… புலி, அங்கி, பேய், சூலம் யாவையுமே பண்ணிசைத்தவன் விரிகரத்தில் அடைக்கலமாயின!
தோற்றுப் போய் திரும்பிய முனிவர்கள் கண்ணில் அவன் தொட்ட பத்தினியர் பட்டதும் கொள்கலன் காணா கோபம் திரண்டு சாபமாகி வெடித்தது. போர் நெருப்பும், சினம் திமிறும் சாபமும் நின்றெரிக்கும் அந்நிலத்தில் நிற்கத் தாளாமல்… ஓட முனைந்த என்னை என் தலைபாரம் காலடியிருக்க கட்டளையிட்டது. குள்ளனைத் தேடினேன் _ எங்கு போய்த் தொலைந்தான் இவன்? சுற்றிலும் தேடினேன். குள்ளனை திசையெட்டிய வரையும் காணாமல் திரும்பினேன்.
அவன் சற்று தொலைவில் நடந்து கொண்டிருந்தான். தோளில் தொங்கிக்கிடந்த நீண்ட துணிப் பையிலிருந்து நிற ஜாலங்களை இறைத்த வளையல்களின் சிணுங்கலோசை தெருவை நிறைத்திருந்தது. தலைபாரம் கூடியிருந்தது. முனிகணங்களின் சாபத்தீட்டுக்களில் வனம் துறந்து நகர் பிறந்த பத்தினியர், கண் நிறைந்த அழகனின் கைவளையல்அணிந்திடக் காத்திருந்தனர். கை வளை நுழைந்து அவன் கை நீங்க, கரம் மெலிந்து வளை கழன்றன. இன்னும் சிறிதென வளையல் சுற்றுவட்டம் சிறுத்துக் கொண்டேயிருக்க… என் கால்கள் கடுத்தன. குறபூதமே… வந்துவிடப்பா! இவன் காம விளையாட்டை இனியும் காணப்பொறுக்காது…
கோபுரங்கள் உயர்ந்த வானத்து நீலம் பிரகாசமாயிருந்தது.
குள்ளனை தரதரவென்று இழுத்துக் கொண்டு வந்தார் அவர். தொங்கிப் போன முகமும்… அழுத கண்களுமாய் அவனைப் பார்க்கவே பரிதாபமாயிருந்தது. ‘வாங்கு அதை…’ கனத்த குரலில் அவர் கட்டளையிட… என் தலை பாரத்தை குதித்து வாங்கிக் கொண்டான். நீண்ட வெண்தாடி முகத்தையே கண்கள் வெறித்திருந்தன. ‘நீ வா…’ என்று என் கையைப் பற்றினார் அவர். சட்டென்று கரம் பற்றியிழுத்ததில் தடுமாறி விழுந்தேன் நான். கையை ஊன்றி எழ முயன்றேன். ஊன்றிய கை நழுவி நனைய நீர்ப்பரப்பில் முழுகிச் சுழன்றேன். தவிப்புடன் நீரில் அலைந்த கைகளை மறுபடி அத்திடக்கரம் பற்றியிழுக்க… விடுபட்ட உடல் தரையில் கிடந்தது. தடையற்ற சுவாசம் நடுக்கத்தைக் குறைத்திருந்தது. நாசியெங்கும் எரிச்சல். கண்களில் இருள் மயக்கம் முழுமையாய் விலகியிருக்கவில்லை. அந்த வெண்தாடி முகம் என் கண்களைக் கடந்து மறைந்தது. தண்டவாள மணியொலித்ததும் பையன்கள் எல்லோரும் என்ன செய்வதென்று தெரியாமல் ஆசிரியரின் முகம் பார்த்தார்கள். அவருக்கும் அந்த நேரத்தில் மணியொலிப்பதின் பொருள் புரியவில்லை. மணிக்கட்டு கடிகாரம் ஓடிக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். தலைமை ஆசிரியர் ஒவ்வொரு வகுப்பறையாய் சொல்லிக் கொண்டே வந்தார்.
‘காவிரியில வெள்ளம்… எச்சரிக்கை அறிவிப்பு வந்திருக்கு… பசங்களையெல்லாம் நேரத்தோட அனுப்பிடுங்க…’
அவரின் பதற்றம் ஆசிரியருக்கும் பற்றிக் கொண்டது. ‘பசங்களா…. சீக்கிரமா வீட்டுக்குப் போங்கடா… ஆத்துப் பக்கமா யாரும் போயிறாதீங்க… நேரா வீடு போய் சேருங்க…’
நொடியில் சிதறினார்கள். காவிரி வெள்ளம் பற்றி ஆளாளுக்கு கற்பனை விரித்து ஓட்டமாய் நடந்தார்கள். ஒருக்கை கிராமத்திற்கு வேகமாய் நடந்து கொண்டிருந்த மூன்று பேர்களில் பெரியவனாயிருந்தவன்…’ வெள்ளத்தைப் பார்த்துட்டுப் போலாமா’ என்றான். பொடியன் அவசரமாய்…. ‘வேண்டாம்… சீக்கிரமா வீட்டுக்குப்போகலாம்…’ என்றான். குரலில் பயம் தெரிந்தது.
‘வீட்டுக்குத்தாண்டா போறோம்… வழியில பாலத்துக்கும் கொஞ்சம் முன்னாடி… புள்ளையார் கோயில் பக்கத்துல… ஆத்தங்கரையோரமா நின்னு பாத்துட்டு ஓடிரலாம்…’ நம்பிக்கையுடன் சொன்னான் சாந்தாராம். மறுபேச்சில்லாமல் அவனைத் தொடர்ந்தார்கள் இருவரும். வேறு வழியில்லை. நாலரை கிலோ மீட்டர் சேர்வதற்குள் இருட்டத் தொடங்கிவிடும். சாந்தாவோடுதான் வந்தாக வேண்டும் என்பதும் கட்டளை.
வெயில் மழுங்கடிக்கப்பட்டு பலவீனமாய் கிடந்தது. காற்று சீற்றத்துடன் மோதிக் கொண்டிருந்தது. பத்திரப்படுவதற்கு எல்லோரும் பதட்டமாய் ஓடத் தொடங்கியிருந்தார்கள். கோயிலை நெருங்கும் போதே நதியினி ஆக்ரோஷ சத்தத்தை கேட்க முடிந்தது. கரையுடைத்துப் பெருக்கெடுத்திருந்தது காவிரி. ஆற்றின் விகார முகம் மூவரையும் அச்சம் கொள்ள வைத்தது. காவிரியை இதுவரை இந்தக் கோலத்தில் பார்த்ததில்லை. குழையக் குழைய செம்மண் பூசி கதம்பமாய் குப்பைகளை சுழற்றியடித்துக் கொண்டு பாய்ந்தோடிக் கொண்டிருந்தது. நடுங்கும் கால்களுடன் ஓடினார்கள். சந்திரநல்லூர் மொத்தமும் பாலத்தை நோக்கி விரைகிற மாதிரி நெரிசலாய் இருந்தது. பாலத்தில் போலிஸ் தொப்பிகள் தென்பட்டன. குறுக்குச் சட்டம் இறக்கிவிடப்பட்டு சிவப்புக் கொடி காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது.
‘தண்ணி பாலத்தைத் தொட்டுப் போயிட்டிருக்கு… திடீர்னு வெள்ளம் வந்தா பாலம் நிக்கறது சந்தேகம்… அதனால தண்ணி வடியற வரைக்கும் அந்தப் பக்கம் போக வுடமாட்டாங்க…’
சுந்தரமும் பொடியனும் அழத் தொடங்கிவிட்டார்கள். சாந்தாராம் என்ன செய்வதென்று புரியாமல் நின்றான்.
நன்றாக இருட்டிவிட்டது. காவிரி துள்ளும் ஓசையும் காற்றின் இறைச்சலும் பயத்தைக் கூட்டின. பெருத்தத் துளிகளாய் மழை விழத் தொடங்க… கிடைத்த இடத்தில் ஒதுங்கத் தொடங்கினார்கள். அம்புலிச் சத்திரத்தில் கால் வைக்க இடமில்லாத நெரிசல் லாந்தர் விளக்குகளின் மஞ்சள் ஒளியில் முகங்கள் மழை ஓயும் தருணம் பார்த்திருந்தன.
புலம்பியழும் சிறுவர்களுக்கு சாந்தாராமின் சமாதானங்கள் போதுமானதாய் இருக்கவில்லை. வீடு போய்ச் சேர முடியுமா என்கிற பயம் அவனையும் தொட்டிருந்தது. வெள்ளம் வடியும் வரைக் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஊரிலும் மூவரும் வந்து சேராதது குறித்த பயமும், வெள்ளம் பற்றிய அபாய அறிவிப்பின் பதட்டமும் கூடுதலாயிருக்கும். உதவிக்கு வருவதும் முடியாத காரியம். பாலத்தின் அக்கரையிலும் கட்டாயம் போலிஸ் காவல் இருக்கும். யோசிக்க யோசிக்க பயம் அதிகரித்தது.
அழுகை சிணுங்கலாகிக் கசந்து சாய்ந்திருந்தார்கள் சுந்தரமும் பொடியனும்.
தலையை யாரோ தடவியதை உணர்ந்தவனாய் கண்களைத் திறந்தான் சாந்தாராம். தூணில் சாய்ந்திருந்தார் அந்த சாமியார். சுந்தரமும் பொடியனும் அவர் மடியில் சாய்ந்திருந்தார்கள். கட்டான உடல்வாகு. நீண்டு தொங்கும் கருந்தாடி… தாடிக்குள் அசையும் ருத்ராட்ச மாலை… நெற்றியில் சுடரும் நெருப்புப் பொட்டு. அவருடைய அருகாமை சாந்தாராமுக்கு ஆறதலாயிருந்தது. ‘கண்ணுங்களா… எழுந்திருங்க…’ அவர் குரலின் அழைப்புக்கு மறுப்பு சொல்ல முடியாமல் மூவரும் எழுந்தார்கள். கண்களைக் கசக்கிக் கொண்டார்கள். சுந்தரமும் பொடியனும் சாமியாரைப் பார்த்து விழித்தார்கள். தான் இன்னும் வீடு போய் சேரவில்லையென்று தெரிந்ததும் பொடியன் விசும்பத் தொடங்கினான்.
‘அழாதம்மா… அம்மாகிட்ட நான் கூட்டிட்டு போறேன்…’ சாமியார் பொடியனின் முகம் துடைத்துவிட்டு தூக்கிக் கொண்டார். சுந்தரமும் சாந்தாராமும் பின்னால் நடந்தார்கள்.
விடிவதற்கான அடையாளங்கள் வசீகரமாயிருந்தன. ஈரக்காற்று இரவின் மழையை தேக்கியிருந்தது. காற்றின் பேயாட்டத்தில் ஓய்ந்து நின்ற மரங்கள் இலையுதிர்த்துக் களைத்திருந்தன. மாந்தோப்பை யொட்டி இருந்த மண்பாதை வழியே ஆற்றங்கரையை அடைந்தனர். காவிரி ஆரவாரம் அடங்கி நகர்ந்து கொண்டிருந்தது. நேற்றைய அடாவடிக் காவிரியென்று சொன்னால் நம்ப முடியாதது போல்… ஆனால்… நிறைந்து புரண்டோடியது. தூரத்தில் இருட்டுக் கோடாய் தெரிந்த பாலத்தில் நடமாட்டம் தெரியவில்லை. ஒற்றை விளக்கின் அசைவு மட்டும் விளிம்பில் மின்னியது.
பொடியனை கீழே இறக்கிவிட்டார். நதியை நெருங்கி…. நீரைக் கையில் அள்ளிப் பார்த்துவிட்டு… ‘ஆறு தூங்கிட்டுதானிருக்கு வாங்க போயிரலாம் என்றார்.’
சாந்தாராம் சிரித்தான். பொடியன்களுக்கு அவரின் அழைப்பும், சாந்தாராமின் சிரிப்பும் புரியாமல் நின்றார்கள்.
‘என்ன சாமியாரே… இந்தத் தண்ணியில போறதா… ஒரேயடியா போயிர வேண்டியதுதான்.’ சாந்தாராம் சொன்னதும் லேசாகச் சிரித்தார் சாமியார். மரக்கிளை குருவிகள் படபடத்து அடங்கின.
‘வெள்ளம் வடியறதுக்கு மத்தியானத்துக்கு மேல ஆயிடும் அதும் நிச்சயமா சொல்ல முடியாது… இப்பவே உங்கம்மாவுக்கெல்லாம் உசுரு போயி வந்திருக்கும்… நான் சொல்றதக் கேட்டீங்கனா… பத்தரமா வீடு போய் சேரலாம்.. ஆறு முழிச்சிக்கிருச்சின்னா அப்புறம் கஷ்டம்…’
அம்மா என்றதும் பொடியனின் அழுகை பற்றிய எண்ணம் கவலையைத் தந்தது. மூவரும் சம்மதித்து தலையசைத்தார்கள்.
‘இதப்பாருங்க… அந்தப் பக்கமா போய் சேர்ற வரைக்கும்… யாரும் ஏதும் பேசக்கூடாது… புரியுதா… ஏதும் சத்தம் வந்துச்சுன்னா ஆறு முழிச்சிக்கும்…’ என்றவர் பொடியனைத் தூக்கித் தோளில் உட்கார்த்தினார். சுந்தரத்தை இடது கையில் இருத்திக் கொண்டவர்… நிதானித்துப் பின்… வலது கையில் சாந்தாராமையும் தூக்கிக் கொண்டார். மூவரும் நம்ப முடியாதவர்களாய் அவரைப் பார்த்தார்கள். மூன்று பேர்களை சுமந்து நிற்பவராய் தெரியவில்லை.
‘சொன்னது ஞாபகமிருக்கட்டும்… எந்த சத்தமும் வரக்கூடாது…’ மீண்டும் எச்சரித்துவிட்டு கண்களை நிலைப்படுத்தினார். உடல் இறுகியது… மூச்சை உள்ளிழுத்தார். முதலடியை நிதானத்துடன் வைத்தார். இரண்டொரு நொடிகள் தாமதித்து பின் ஊன்றினாற்ப் போல் வலது காலைத் தாங்கி… இடது காலை நதிப் படுகையில் வைத்தார். நான்கைந்து அடிகள் நடந்து நகரும்வரை மூவருக்கும் எதுவும் புரியவில்லை. நிறைந்த நதி அவர்களை நனைக்கவில்லை. சாந்தாராம்தான் முதலில் கவனித்தான். நம்ப முடியாதவனாய் கண் சிமிட்டிப் பார்த்தான். சாமியார் உறுதியாய், நிதானமாய் நடந்து கொண்டிருந்தார். பயம் தொண்டையை அடைத்தது. கைகால்கள் வெடவெடத்தன. சுந்தரத்திற்கு கனவில் மிதப்பது போலிருந்ததது. சாமியாரின் கால்களையே தாழ்ந்த கண்களில் வெறித்திருந்தான். பொடியன் கண்களை இறுக மூடி… அவர் கழுத்தை இறுகப் பற்றி உட்கார்ந்திருந்தான். அவன் முகம் பொங்கியிருந்தது.
ஓங்கிக் கத்த வேண்டும் போலிருந்த ஆர்வத்தை சாமியாரின் எச்சரிக்கை தடை செய்தது. பொன்னிற இளம் கதிரொளியில் மின்னத் தொடங்கியிருந்த நதி அவரின் காலடியில் கம்பளமாய் விரிந்து கிடந்தது. அவசரமற்ற கால்கள் ஓடும் நதி மீது பிசகாது அடியெடுத்து நடந்தன. காற்றில் அசைவற்று நீந்திக் கொண்டிருந்த பறவைக்கூட்டம் சாமியாரைப் பார்த்ததும் படபடத்து மறைந்தன.
மறுகரையடைந்ததும் சாந்தாராம்தான் முதலில் கரை மணலில் குதித்தான். சுந்தரமும் பொடியனும் இறங்குதவதற்குள், சாந்தாராம் நதியை நெருங்கி… அதன் மீதுநடக்கும் உத்தேசத்துடன் கால் வைத்தான். நழுவி குபீரென்று விழுந்து நனைந்தான்.
‘ஆறு முழிச்சிக்கிச்சு…’ நனைந்த உடல் தடவிச் சிரித்தான். சுந்தரமும் பொடியனும் இமைக்க மறந்து சாமியாரையும் நதியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
சாந்தாராம் அவரை நெருங்கி பாதங்களைத் தொட்டான். லேசான ஈரமும் குளிர்ச்சியும் கைகளைச் சுட்டன.
அப்பாவும் நானும் மௌனமாய் உட்கார்ந்திருந்தோம். அவரவர் பயணங்களில் கால் நனைத்த நதியின் ஈரம் பாதங்களில் மிச்சமிருந்தது. சொற்களுக்குள் சிக்காத அனுபவச் சரடுகளை அதனதன் சிமிழ் பரப்பில் இருத்திவிட்ட மௌனம் ரீங்கரித்து அலைந்தது. காலப் பெருவெளியின் காட்டுத் தருணமொன்றில் தூசியைத் துடைத்தெறிந்துவிட்டு, எதிரெதிர் கரை நின்ற அவ்வுருவங்கள் இரண்டும்… கரைந்து ஒன்றிணைந்தன. பிறிதொரு கரையில் காத்திருக்கும் அவனைக் கண்டடையும் முனைப்பில் நீரலைத் தொட்டு மறைந்த அந்நொடியில் அப்பா என் முகம் பார்த்தார். ‘பத்து வயசில் நான் பார்க்க வாய்ச்சதை நீ முப்பது வயசுல பாத்திருக்க… இடைவெளியில் துடிக்கும் நொடிப் பொழுதுகள் ஆழங்களை நிரப்பும் அவசரத்திலிருந்தன… ஒரு வேளை… உன் மகன் ஆயுசு முழுக்கக் காத்திருக்கணுமோ என்னவோ…’ பொங்கியெழும் காவிரி மேல் நடந்த கால்களும், பொற்றாமரைக் குளத்தில் என் கைப்பற்றியிருந்த கரங்களும் கொண்டவரின் முகம் காண கண் மூட நினைத்தவன், அப்பாவைப் பார்த்தேன். அவரது கண்களும் முகம் தேடி மூடியிருந்தன.