பாவம் கடவுள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 20, 2023
பார்வையிட்டோர்: 2,041 
 
 

என்றோ ..ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக நீர் நிரம்பித் ததும்பிய ஆறுகள், பசுமைபோர்த்த மலைப்பள்ளத்தாக்கு வழி வடிந்து வளம் பெருக்கிய பூமிதான்,..மனிதர்கள் வாழ இலட்சிய பூமிதான்… இதனால் மனித எச்சங்கள் பலவற்றைத் தன்னுள்ளே புதைத்தபடி கிடந்த பூமிதான் …

ஆனால் இன்று பாலை வனம்போன்று வறண்டு மலை மருவிக் குன்றுக்கூட்டமாய்க் காட்சிதருகிறது. ஆனாலும் பழமையான தன் வாழிடத்தை விட்டு மனிதக்கூட்டம் விலகிச்செல்லவில்லை. எல்லா சூழலுக்கும் தன்னை இயைவாக்கிக் கொண்டு அக்கூட்டம் அந்தப்பூமியில் வாழ்வதைப் பெருமையெனக் கருதிவருகிறது,

அந்தக் குன்றுக்கூட்டத்தில் மிகப்பெரியதாய் ஒரு குன்று….

அதில் ஆலயம் ஒன்று… பொற்கூரை வேயப்பட்டதாய்…மயனின் கனவின் வடிவமாய் ..அழகு சொட்டச் சொட்ட தலைநிமிர்ந்து நிற்கிறது .

அந்த ஆலயத்தினை இருப்பிடமாய் கொண்டுவிட எண்ணி அங்கு வந்து தங்கியிருந்த ஒரே ஒரு கடவுள், இன்று பெரும் சங்கடத்தில் நெளிந்து கொணடிருந்தார்

அவரது இல்லத்திற்கு வெளியே ஒருசில நூற்றாண்டு காலமாய் ஒரே மனிதக் கூக்குரல்கள்

மதப்பேய் பிடித்த மனிதரின் கூக்குரல்களை கேட்கக் கடவுளால் சகிக்கக் கூடவில்லை… சிந்தையைச் சிதைத்த கூக்குரல் சிலசமயம் ஓனாயின் ஊலைச் சத்தமாய்..சிலசமயம் அடிவாங்கிய நாயின் குரைப்பாய்,,, சிலசமயம் இரத்தக் காட்டேரியின் பேய்க்கத்தலாய் …… செவிப்பறை வெடித்து இரத்தக்கசிவு ஏற்படுமோ என்று பயம் மேலிடுகிறது கடவுளுக்கு…

மூன்று மதவாதப் பேய்கள் அந்தக் கோயிலை உரிமை கொண்டாடித் தமக்குள் முரண்பட்டுக்கொண்டதனால் உண்டான சலசலப்பு அவ்வப்போது கைகலப்பாக மாறி போர்வடிவம் கொள்வது அந்த இடத்தில் புதிதல்லத்தான்.

கடவுள் இன்று ஒரு முடிவுக்கு வந்திருந்தார்.

இந்தச் சனக்கூட்டத்தின் அறியாமையைக்கண்டு பரிதாபப் படுவதோடு நின்றுவிடாது அவர்களை நேரில் கண்டு உண்மையை விளக்குவது என்று….

அவர் தமது கோயிலில் இருந்து மக்கள் முன்னே பிரசன்னமானார்.

கடவுளின் பக்தசிகாமணிகளால் தம்மைப்போலவே தோற்றம் தந்த கடவுளை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

“‘உண்மை மிக மிக எளிமையானது ,தூய்மையானது’ என்பதை இந்த மனிதக்கூட்டம் உணராதது ஏன்? தனது கருத்துக்களை ஏன் மற்றவனிடமும் திணிக்க வேண்டும்? அவர் அவர், தாம் தாம் கருதும் கொள்கைகளோடு சமாதானமாக வாழமுடியாதா?தனது அயலான் துன்பப்படும்போது கை கொடுக்காத ஒருவன் அவன் தனது கொள்கையையே பின்பற்ற வேண்டும் என எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? ”

என எண்ணமிட்டபடி அவற்றை மக்களிடம் புரிய வைப்பதற்காக வாய் எடுத்த கடவுளின் தலையைப் பக்தன் ஒருவன் எறிந்த கல் பதம் பார்த்தது. இரத்தம் சொட்டுவதைப் பொருட்படுத்தாது

”அமைதி அமைதி”

என தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சத்தமாகச் சொன்னார் கடவுள்.

“கடவுள் ஒருவரே . உங்கள் மூன்று மதங்களுக்கும் நான் ஒருவனே கடவுள் “

இவ்வாறு சொன்ன கடவுளை அங்கு கூடியிருந்த மக்களில் சிலர் கோமாளி என எண்ணிச் சிரித்தார்கள்.

சிலரோ பைத்தியம் ஒன்று மனநோய் விடுதியிலிருந்து தப்பிவந்து விட்டதாக எண்ணிப் பரிதாபப்பட்டார்கள் .

சிலர் தமது கடவுள்கொள்கையைப் பரிகசிக்க ஒரு நாத்திகன் கிளம்பிவிட்டதாகக் கோபம் கொண்டார்கள்.

கடவுளோ அவர்களைப் பொருட்படுத்தாது தொடர்ந்தார்.

“நீங்கள் மூவருமே கடவுள் ஒன்றுதான் என்கிறீர்கள் .ஆகவே ஒருகடவுள்தான் உலகைப் படைத்திருக்க வேண்டும் -அந்த ஒருவன் நான்தான்.”

சற்று அழுத்தமாகவே கடவுள் சொல்லுகிறார்.

“இல்லை…மூன்று மதங்களுக்கும் பொதுவான கடவுள் என்று ஒருவரும் இல்லை.எனது கடவுளே உண்மையாக உள்ள ஒரேகடவுள்”

என்றான் தத்துவாதி எனத் தன்னைப்பிரகடனப் படுத்திய ஒருவன் .

அவன் அருகில் இருந்த மற்றைய மதக்காரனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது,,,

“நீங்கள் இந்த தேசத்தில் கால் கொள்ள முதல் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் இத்தேசத்தில் வாழ்ந்தோம் எமது

முன்னோருக்கு கடவுள் அளித்த கட்டளைப்படி நாம் இன்றும் வாழ்கிறோம் .. என்வே எமது தெய்வமே உண்மையான தெய்வம் …”

மூன்றாவது மதத்தைச் சேர்ந்தவன் பெரிதாய்ச் சிரித்தான் ,

“ மடப்பயல்களே! எமது கடவுளே உண்மையான கடவுள் என்றதாலேயே உலகில் பலரும் எமது மதத்தைப் பின் பற்றுகிறார்கள்”

என்றான்.

கடவுளுக்கு இவர்களது விதண்டாவாதத்தைக் கேட்கத் தலை சுற்றியது.

“உங்கள் நாடுகளில் நடத்தப் படுவது போல தேர்தலை கடவுளர் பலர் பரலோகத்தில் இருந்து நடத்துகிறார்களா என்ன?அதற்கு உங்களைப் பிரசாரகராக கடவுள் நியமித்துள்ளாரா என்ன?”

மதவாதப் பேய்களை மடக்கிவிட்டதாக எண்ணி மனதுக்குள் தம்மையே தட்டிக்கொடுத்தார் கடவுள்.

அவர் கையை சிறுவன் ஒருவன் பற்றினான். கடவுளின் உடல் சிழிர்த்து ஒரு பரவசநிலைக்கு அவர் ஆளானார்.

கடவுளைப் பார்த்து சிறுவன் இவ்வாறு கேட்டான்.

“நீங்கள் கடவுள் என்றால் எல்லாம் வல்லவர்தானே.?”

“இதில் என்ன சந்தேகம் உனக்கு?”

“அப்படியாயின் உலகில் உள்ள எல்லாரது மனதிலும் நீங்களே கடவுள் என்ற எண்ணத்தை ஏன் உருவாக்கக்கூடாது? “.

அவனது கேள்வி கடவுளின் நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல் இருந்தது .

இத்தனை காலமும் இப்படி ஒரு சிந்தனை தோன்றாதது அவருக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.

அவர் சிறிது நேரம் தியானத்தில் தனது மனதை ஒருமுகப் படுத்தியவராய் எல்லோரது மனதிலும் தன்னைப்பற்றிய எண்ணத்தை உருவாக்க முயன்றார்.

பாவம் கடவுளால் அது கை கூடவில்லை… மீண்டும் மீண்டும் முயற்சித்தார்… தோல்விதான் மிஞ்சியது….

எப்பொழுது அவர் தனது இடத்திலிருந்து கீழ் இறங்கி வந்தாரோ அப்பொழுதே அவரது ஆற்றல் குறைந்து மனிதர் போலாகிவிட்டாரா ? .

“ஓ எனக்கு மேலும் ஒரு பேராற்றல் உண்டா என்ன …? “

கடவுளால் இதனை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. . அவர் இப்பொழுது மனப் பிரமை பிடித்தவர் போல் சிரித்தார்…. பின் அச்சிரிப்பே அழுகையானது.

மதவாதிகள் இவரைப் பயித்தியம் என உறுதி செய்தவரா ய் மீண்டும் தமது சண்டையைத் தொடர்ந்தனர்.

ஆனால் அந்தச் சிருவனோ அவரைப் பார்த்து காந்தப் புன்னகை ஒன்றை உதிர்த்தான்.

கடவுளுக்கு எல்லாம் புரிந்துவிட்டது அவர் மீண்டும் கோயிலுக்குள் தம்மை ஒடுக்கிக் கொண்டார்,

சிறுவன் பிரபஞ்சமயமானான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *