கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 2,353 
 
 

(1996 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விண்ணாங்குப் பற்றைகளும், காவிளாய்ச் செடிகளும் – சுண்டம் புதர்களும் மண்டிப் பரட்டைக் காடாய்க் கிடந்த அந்தப் பிராந்தியத்திலே, அந்தப் பாலை மரம் மட்டும். மொட்டை வெளியில் தலை நிமிர்ந்து தோன்றும் இராஜகோபுரம் போல் ஆழத்தில் வேரோட விட்ட இறு மாப்பில் சடைத்துக் கிளை பரப்பி நின்றது. வரண்ட கச்சான் காற்றுச் சுழற்றியடித்து சுற்றுப்புறத்தையே சருகாய் உலர்த்திக் கலகலக்க வைத்துச் சுள்ளிகள் உராயத் தித்தோன்றும் அருங்கோடையில்கூட., அந்தப் பாலை மரம் மட்டும் ‘கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவாய்’ ஊருக்குளளே தலை நிமிர்ந்து பச்சை ஓலைகளை விரித்து தென்னை மரங் களின் பசுமைக்குப் போட்டியாக அப்பாலை மரம் மட்டுமே அப்பிராந்தியத்தில் காம்பீரித்தது.

பதினைந்து வருடங்களுக்கு முன்னே … உள்ளூர் மஷன் பாடசாலையிலே ஏழாம் வகுப்புப் படித்துக்கொண்டு இருந்த சிவஞானத்திற்கு அன்று சித்திரை விடுதலை, சித்திரை வருடப் பிறப்பிற்காக வீட்டு முற்றங்களில் பரப்பப்பட்டு இருந்த குருத்து மண் இன்னமும் கோலம் மங்கவில்லை. சிறியவர்களும் பெரிய வர்களும் உடுத்த புத்தாடைகள் இன்னமும் புதிது மங்கி வண்ணான் சலவைக்குப் போகவில்லை. ஏன்? புது வருடப் பிறப்பன்று விலை மலிவான வடிசாராயத்தை மாந்திய சிலரால் ஊருக்குள்ளே ‘கசமுச’ என்று ஏற்பட்ட பூசல்களின் நிலையற்ற தன்மை’கூட- இன்னமும் செத்து விடவில்லை. ஆனால் அதற்குள் ‘ இளக்கந்தை வெளி’ விளைந்து அறுவடைக்குத் தயாராகிவிட்டது. சிவஞானத் தின் தந்தையாரும் அந்த வெளியில் தனக்குச் சொந்த மான ஐந்து ஏக்கர் நிலத்தையும் செய்கை பண்ணி இருந் தார்!

‘ஆமாம்! தென்கைலை நாதரான கோணேசரின் பூசனைக்காகச் சந்தனக் கட்டைகளைக் கடல் வழிக் கொண்டு கொடுப்பதற்காக அக்கிராமத்தார் அங்கு குடி யேற்றப்பட்டார்கள்’ என்று கல்வெட்டுக் கூறலாம். ஆனால் குளக்கோட்டன் மூட்டிய திருப்பணியைப் பறங்கி பிடித்து, அதற்குப் பின்னால் அது பூனைக் கண்ணன், புலிக்கண்ணன் கைக்கு மாறிய பிறகு, சந்தனக் கட்டை விவகாரம் பொய்யாப் பழங்கதையாய்ப் போயிற்று. புராண காலத்தின் பிரக்ஞையே அற்றுப் போய் விட்ட இடைக்காலத்தில் ‘நாங்கள் எல்லோருமே வல்வெட்டித் துறையிலிருந்து வந்த குருகுலத்தவர்’ எனப் பெருமை பேசிக்கொண்டு சிவபெருமான் மீனுக்கு வலை வீசிய படலத்தைப் பாராயணம் செய்வதில் ஊரவர்கள் எல்லா ருக்குமே ஒரு திருப்தி. ஆயின் அந்த வல்வெட்டித் துறைத் தொடர்பும் சீவிய காலத்தில் ஒரு தடவையோ, மிஞ் சினால் இரண்டு முறையோ செல்வச் சந்நிதியானைத் தரிசிப்பதோடு மட்டும் நின்று இப்போதெல்லாள்ளுர் வருண குலப் பிள்ளையாருக்கு ஆடித் திருவிழா எடுக் கையில் சின்ன மேளம்’ என்ற நாட்டியக்காரிகளை யாழ்ப்பாணத்திலிருந்து வரவழைத்து ஆட்டுவிப்பதோடு மட்டும் இருக்கின்றது. இப்படிப் புராண, இடைக் காலக் குருகுலப் பெருமை பேசுவதைத் தவிர, சிராமவாசிகள் அத்தனை பேருமே மண்ணை நம்பி வாழும் விவசாயிகள்! ஆகவே வேளாளர்கள்!

அலர்கள் கொட்டியாபுரக் குடலையடுத்த மணல் மேட்டிலே குடியேறி இருந்தாலும், காவும் பொழலும் கழிமுகமும் புள்ளணிந்த ஏரியும் மல்கிய கொட்டியாபுரப் பற்றிலே, மாவலித்தேவி செவிலியாய்ப் புரக்கும் கழனி களிலே கணிசமான பகுதிக்குச் சொந்தக்காரராக இருந் தார்கள். அக்காணிச் சொந்தக்காரர்களின் வீட்டு முற்றத் திலே நெற்பட்டறை’ இருக்கும்! இப்பெரிய புள்ளிகளை விட்டு விட்டால் மற்றவர்க்கெல்லாம் கிராமத்தைச் சூழ விருந்த காடுகளும், அக்காடுகளைத் திருத்திய ‘மானம் பார்த்த’ பூமிகளும் பிதிரார்ஜிதம்!

இளக்கந்தை வெளி அந்த இரண்டிலும் அடங்காத இரண்டுங் கெட்டான்’ பூமி. மாவலித் தேவி மகவாய்ப் புரக்கும் தாயாகிய தண்ணளியை, கட்டைபறிச்சான் கிராமத்தின் தெற்கு எல்லையாய் குடாக் கடலிலிருந்து உள்வாங்கி நீண்டு நெளியும் உப்பங்கழிக்கு அப்பால் செய்து கொண்டு இருக்கையில், கிராமமும் அதன் வட பகுதியும் கங்காதேவியின் கருணைக் கரங்கட்டு அப்பாற் பட்டதாய் வரண்டே இருந்தது. வரண்டு கிடந்த அந்தக் காட்டிலே, ஊரிலிருந்து பத்து மைலுக்கு அப்பால் எப்போதோ கட்டப்பட்ட அணைகளின் நடுவே குளம் என்ற பேரில் ஓர் பள்ளம். ஆவணி மாதத்திற் பிலமாய் வெடிதது வான் மழைக்காக ஆவென்று வாயைப் பிளந்து கொண்டே இருக்கும். வாடை யூதத் தொடங்கி மழை பெய்கையில் மார்கழி மாதத்தில் அப்பள்ளம் குளம் என்ற அந்தஸ்தைப் பெற்று நீர் நிரம்பி வழியத் தொடங்கி விடும். அந்த நீரை நம்பிக்குளத்தின் அயலிலே இருக்கும் ஐம்பது ஏக்கர் வெளியில் தைமாதம் விதைப்புத் தொடங்கிவிடும்! குளம் நிரம்பாவிட்டால் ‘மேற்கே பத்துப் பன்னிரண்டு மைல் தூரத்தில் ஓடும் கங்கையில் இருந்து வாய்க்கால் எடுத்து இந்தக் குளத்தை நிரப்ப எந்தப் பகீரதன் பிறக்கப்போகிறான்? என்ற பெரு மூச்சோடு குளக்கட்டின் மேலே கோயில் கொண்டிருக் கும் அம்மனுக்குப் பட்டுச் சார்த்துவதோடு, அந்நிலத்தை நம்பி வாழ்பவர்கள் திருப்தி அடைய வேண்டி இருக் கிறது.

சென்ற வருடம் வானம் பொய்க்கவில்லை. இளக் கந்தைக் குளம் நிரம்பியது, வழிந்தது. சிவஞானத்தின் தந்தையாரும் மற்றவர்களும், இளக்கந்தை வெளியைச் செய்கை பண்ணினார்கள். இப்போது அறுவடைக்குத் தயாராகி விட்டது.

வெள்ளை மாடுகள் பூட்டப்பட்ட கோணாமலையின் வண்டி கிராமத்தின் மணல் ஒழுங்கைக் கூடாகப் போய்க் கொண்டிருந்தது. வண்டிக்குள்ளே சமைப்பதற்கும் தண்ணீர் எடுப்பதற்குமான பாத்திரங்கள், ஒரு பையிலே கறிக்கான காய் வகைகள், உப்பு-புளி அடுத்தது அரிசிச் சாக்கு’ வண்டியோட்டிச் செல்லும் தன் தந்தையாருக்குப் பக்கத்திலே, அரிசிச் சாக்கின் மேலே சிவஞானம் தூக்கக் கலக்கத்தோடு குந்திக் கொண்டிருந்தான்.

சித்திரை மாதமான தால் இலை அசையவில்லை. காற்றாடவில்லை. அட்டமி கழிந்த தேய்பிறை பின் திராணியற்ற ஒளி கிழக்கு வானத்தின் வெளுப்பிற்குப் போட்டியாக அப்பிராந்தியத்தையே அமுதப்பிரவாக மாக்க முயன்று தோல்வியடைந்து கொண்டிருந்தது. வண்டி மாடுகளின் சதங்கை ஒலிக்குப் போட்டியாக ஊர்ச் சேவல்கள் நீளக் குரலெடுத்துக் கூவிக்கொண்டி ருந்தன. பாலைமரத்திலே அப்போதுதான் துயிலுணர்ந்த காகம் ஒன்று மெதுவாகக் கரையத் தொடங்கிற்று. .

ஊரின் எல்லையைத் தாண்டிப் பழக்கப்பட்ட பாலை யின் வழியே நடந்து, வண்டி பாலைமரத்தடியை அடைந்தபோது கோணாமலை காளைகளின் மூக்கணாங் கயிற்றை இழுத்துப் பிடித்து அதை நிறுத்தினார். சிவஞானம் அதற்கான காரணத்தை அறியாதவனாய் ‘வண்டிக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தான். வைகறையின் மங்கலான ஒளியில் விண்ணாங்குப்பற்றைகளும் காவி ளாய்ச் செடிகளும் சுண்டம் புதர் கரும் பூதங்களாகக் காட்சியளித்தன. இடையிடையே காட்டுக் கிழங்கு கல்லிய குழிகளிலிருந்து பறிக்கப்பட்ட சருத்து மண் வெண்மை கலந்த பழுப்பு நிறத்தில் மினுங்கிக் கொண்டி ருந்தது.

‘அருவி வெட்ட என்று வர இருப்பவர்கள், சொந்தக் காரராகவே இருப்பினும் கூலிக்கே வருபவர்கள். அப்படி வருபவர்கள் நாம் என்னதான் அவசரப்பட்டாலும், தங்கள் சித்தந் திரும்பி’ ஆறுதலாகப் பொழுது நன்றாக விடிந்த பின்னர் தான் வீட்டிலிருந்து கிளம்புவார்கள் என்ற நடை முறை உண்மை கோணாமலைக்த நன்கு தெரியும் ஆயினும் நேற்று வருகிறேன் என்றவர்கள், இன்று வராமலே இருந்து விடுவார்களோ என்ற சந்தேகம் அவருக்குக் கிளம்பவே. தான் புறப்பட்டு விட்டதை அவர்கட்கு அறிவிக்கும் முகமாகத் தன் இரு கைகளையும் கூட்டிப் பாம்பு விரல்களின் நுனியை மூக்கடி யிற் சேர்த்து கூவென்று நீளக் குரலெடுத்துக் கூவினார். அவர் கூச்சத்தம் அந்தப் பிராந்தியம் முழுவதையுமே நிறைத்து எதிரொலித்தது.

அவர் கூவலைக் கேட்டதும் சிவஞானத்துக்கு அவனு டைய அம்மா ‘பாலைமரத்திலே இரவிலே போய் கூப் போடுது’ என்று தன்னைப் பயமுறுத்தியது ஞாபகத்திற்கு வந்தது.

‘ஆம்; சென்ற ஆண்டு வைகாசி மாதத்திற் பாலை மரம் பழுத்திருந்தது. மஞ்சள் மஞ்சளாய்க், கொத்துக் கொத்தாய்க் கண்ணைப் பறித்துக் கொண்டிருந்த பழங் களைப் பறிக்கச் சிவஞானமும் அவன் தோழர்களும் வந்தி ருந்தார்கள். ஒரு பெரிய ஆள் உயரத்திற்குக் கப்பும் கவரும் இன்றி நெடுத்து மேலே கிளை பரப்பி நிற்கும் பாலை மரத்திற் வேலிக்கதியாற் தடிகளாற் கட்டிய ஏணியைச் சார்த்திக் கந்துகளில் ஏறிக் கொண்ட விசுவம் கிளைகளை ஒடித்து ஒடித்துக் கீழே போடச் சிவஞான மும் மற்றவர்களும் பழங்களை ஆய்ந்து வயிறு கொள்ளு மட்டும் சாப்பிட்டார்கள். பழத்தின் பால் உதடுகளிற் பசையாக ஒட்டிக் கொண்டது. வயிறு முட்டி விக்கல் எடுத்தது. தண்ணீர்த் தாகம் நாவை வரட்டியது. அந்தக் கோலத்தில் வீடு போய்ச் சேர்ந்தபோது தான் அம்மா சொன்னா.

“பாலை மரத்துக்காடா போனா, அங்கே பேய்நின்று இரவிலே கூப்போடுது இனிமேற் போகாதடா” அம்மா -வின் பேச்சுக்குப் பின்னால் அவனுக்குப் பாலை மரத்துப் பக்கம் வரவே பயமாக இருந்தது. ஆனால் விசுவலிங்கம் துணிச்சற்காரன்!

தந்தையாரின் கூச் சப்தத்திற்குப் பதிலாக ஊருக்குள் ளிருந்து இரண்டு மூன்று குரல்கள் கேட்டன. சிவஞானம் எண்ணிக் கொண்டான்.

அம்மா சொன்னது போல பாலைமரத்திலே இரவிலே பேய்கள் கூப் போடுவதில்லை. தன் தந்தையாரைப் போன்ற வழிப்போக்கர்கள் தான் கூச் சத்தம் போடு கிறார்கள்.

தன் குரலுக்கு எதிர்க் குரல்கள் கேட்டதும், “அவர்கள் வெளிக்கிட்டு விட்டார்கள். நாம நேரத்தோட போய் எல்லாத்தையும் அடுக்குப் பண்ணவேணும்” என்று தன் பாட்டிற் சொல்லிக் கொண்டே காளை களைத் தட்டி விட் டார் கோணாமலை.

சதங்கைகள் ஒலிக்க வண்டிக் காளைகள் நகரத் தொடங்கின. கிழக்கே வான் வெளுப்பிற் செம்மை படரத் தொடங்கிற்று.

காம்பீரித்து நின்ற பாலைமரத்தைக்கடந்து அதற்கும் அப்பால் உள்ள புதர்களினூடே மணற் தடத்தில் இறங்கி அதற்கும் அப்பால் உள்ள சதுப்பு நிலத்திற் சளசள வென்று பாய்ந்து மேட்டிலேறி, வீரையும் முதிரையுமாக நெருங்கி நின்ற காட்டுமரங்களினூடே. கல்லிலும் மரவேர் களிலும் ஏறி விழுந்து, சுதாரித்து நிமிர்ந்து சவாரி செய்த வண்டி, காலைச் சூரியன் கிழக்கு வானத்திலே இரண்டு பாகங்கட்கு ஏறித் தன் வசிக்கிரணங்களை முகத் திற் சுள்ளென்று குத்துகையில் இளக்கந்தைக் குளக் கட்டை. அடைந்து விட்டது.

கோணாமலை வண்டியை விட்டிறங்கி, மாடுகளை அவிழ்த்து அவைகளை ஒரு வீரை மரத்திலே கட்டி வைற்கோற் கற்றைகளைப் பிரித்து அவைகட்கு முன்னால் விசிறிப்போட்டபின், அரிசிச் சாக்கைத் தலையிலே வைத்தவாறு, சட்டிபானைகள் அடுக்கப்பட்டிருந்த வாளி யைக் கையில் எடுத்துக் கொண்டு தன் வயலின்குடிசையை நோக்கி நடக்கத் தொடங்கினார். முழங்காலின் கீழே குதிரைச்சதை முறுக்கேறிக் கிடக்கும் வலிமை மிக்க தன் கால்களை கல்லிலும் கலட்டியிலும் அனாயாசமாய்த் தூக்கி, கருங்காலியாய் உருண்டு திரண்டிருக்கும் தன் ஆகிருதியின் கனத்தில் நிலமடைந்தையே அதிரவைத்துக் கொண்டு நடக்கும் தன் தந்தையரின் பின்னாற் சிவ ஞானம், அவர் நடைக்கு ஈடு கொடுக்க மாட்டாதவனாய் காய்கறிகள் இருந்த பையைத் தூக்கிக் கொண்டு ஓட வேண்டியிருந்தது.

அப்படி ஓடுகையில், குளக்கட்டிலே மாட்டுக் குளம்பு கள் பட்டுப் பிதுங்கிப் பிதிர்ந்து காய்ந்திருந்த மண் பொருக்குகள் அவன் உள்ளங்கால்களைப் பதம் பார்த் தன. எனினும் தன் ஆற்றாமையை வெளிக்காட்டாதவ னாய்ச் சிவஞானம் தன் தந்தையின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தான். –

குளக்கட்டிற் சிறிது தூரம் சென்றபின் செங்குத்தாய்க் கீழிறங்கி பசும் புற்களூடே மலட்டித்துப் போய்க்கிடந்த ஒற்றையடித் தடத்தில் இறங்கிச் சில கவடுகள் வைத்தபின் ளர் வயல் வேலியின் ‘ஏறு கடப்பு’த் தென்பட்டது. சேற் றிலே நடப்பட்டிருந்த வேலிக்க தியாலை இடக்கையாற் பிடித்து, வேலியின் இந்தப் பக்கத்திலே நிலத்தில் ஊன்றப் பெற்று இடுப்பளவு உயரத்திலே வேலிக்கதியாலோடு சார்த்தப்பட்டுக் கட்டப்பட்டிருந்த கவர்க்கம்பிலே வலக் காலை ஊன்றி, இடக்காலை முட் கம்பிக்கு மேலாக வேலி யின் உட்பக்கத்தில் இருக்கும் கம்பிற் தூக்கி வைத்து வேலி யைக் கடந்து, வலக்காலை நடை. வரம்பிலே ஊன்றி இறங்கி வயல் வரம்பிலே நடக்கத் தொடங்கினார் கோணாமலை. தந்தையார் நொடிப் பொழுதிலே இலாவகமாகச் செய்த இந்தக் கடத்தலை சிவஞானம் வெகு சிரமப்பட்டுச் செய்து நடைவரம்பிலே இறங்கிய போது கோணாமலை நடை வரம்பிலே வெகு தூரம் சென்று விட்டார். சிவஞானம் தன் தந்தையைப் பிடித்து விடுவதற்காக வயல் வரம்புகளிலே வேகமாக-மிகவும் வேகமாக நடக்கையில் வரம்பிலே தலைசாய்த்துப் படுத் திருந்த நெற்குலைகள் அவன் கால்களிற் சர சரவென்று உராய்ந்தன. புது வேளாண்மையின் ‘சொர சொர’த்த தாள்கள் காலிற்பட்டு முழங்கால்வரை சுணைத்து அரிக்கத் தொடங்கியது. சிவஞானம் நடந்து கொண்டே யிருந்தான்.

முன்னே சென்ற அவன் தந்தையார் சற்றுத் தரித்து நின்றார். தன் வருகைக்காகத்தான் அவர் காத்து நிற்கிறார் என்றெண்ணிய சிவஞானம் தன் நடையை இன்னமும் வேகமாக்கி ஓடினான். ஆனாற் கோணா மலையோ வயல் வரம்பிலே நின்று கொண்டு, தாள் பழுத்துச் சரிந்து, நிலத்திலே வீழ்ந்து அலை அலையாகப் படிந்து, கொத்துக் கொத்தான தன் குலைகளைக் காலைச் சூரியனின் மஞ்சட் கிரணங்களில் மினுக்கிக் கொண்டிருக்கும் தன் வயலை — அதன் விளைச்சலை நெஞ்சம் பெருமிதமடையப் பார்த்துக் கொண்டேயிருந் தார்.

இந்தமுறை அம்மன் கண்பார்த்தே விட்டாள். புதிதாக வந்த ‘கம இன்ஸ்பெக்டர்’ விதைக்கும்படி வற்புறுத்திக் கூறிய ‘முருங்கைக்காயன்’ நன்றாகத்தான் குலை தள்ளியிருக்கிறது. எந்தக் குலையிலும் ஒரு பதரோ நீர்ச்சாவியே, பூச்சி குடியனோ இல்லாமல் அத்தனையும் கலீர் கலீர் என்னும் தங்கக் கட்டிகளாய்……

‘விதைநெல், மாட்டு விசக்களை’ வெட்டுக்கூலி,. சூட்டிப்புக் கூலி, சில்லறைச் செலவுகள் எல்லாம் போகப் பத்து அவணமாவது மிஞ்சும்.’

என்ற அவர் சிந்தனை ஓட்டத்தின் முடிவிலே, “தாயே, கந்திலும் களத்திலுமாக இருப்பது நல்ல படியாக வீடு வந்து சேர்ந்து விட வேண்டும்”, எனப் பிரார்த்தித்துக் கொண்டார். அவர் கைகள் அவரை அறி யாமலே கூம்பிக் கொள்ள கண்கள் பரவசநிலையிற் கண்ணீ ருகுத்தன. . தந்தையாரின் மோனப் பிரார்த்தனை முடிவடைகை யில் சிவஞானமும் அருகே வந்து சேர்ந்து விட்டான். கோணாமலை தன் மகனைக் கையிற் பிடித்தபடி வயல் நடுவே களத்து மேட்டிலே சடைத்து வளர்ந்திருந்த ஆத்தி மரத்தின் கீழிருந்த குடிசையை நோக்கி நடந்தார்.

குடிசை யை அடைந்த தந்தையும் மைந்தனும் தலைச்சுமையைக் கீழே இறக்கி வைத்தனர். கோணாமலை அடுப்பிலே கள்ளிகளைக் கூட்டி இடையே தேங்காய்த் தும்பைச் செருகி, மடியில் இருந்த தீப்பெட்டியைத் தட்டி நெருப்புமூட்டினார். காலையாக இருப்பினும் சித்திரை மாதத்து இலையசையாப் பம்மலிலும் பொருமலிலும், பிரயாணத்தின் அலுப்பினால் வேர்த்துக் கொட்டத் தொடங்கியது. சிவஞானம் தலையிலே கட்டியிருந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டே குடிசைக் கப்பிற் சார்ந்து கொண்டான். நெருப்பை மூட்டித் தண்ணீர் கொதிக்க வைத்த கோணாமலை சுடச் சுடத் தேநீர் தயாரித்து முடித்தபோது குறுக்கு வழியாக வந்த வெட்டுக்காரர்களின் தலைக்கறுப்பு ஏறு கடப்பிலே காணப்பட்டது.

அவர்கள் எல்லாரும் வந்துசேர்ந்ததும் சிரட்டைகளில் ஊத்தப்பட்டிருந்த தேநீரை இரசித்துக் குடித்தார்கள்.. குடித்து முடிந்ததும் – தங்கள் உடைகளை மாற்றிக் கொண்டு அருவி வெட்டுவதற்காக வயலிலே இறங் கினார்கள். சிவஞானமும் அவர்களோடு சேர்ந்து கொண்டு ‘தாள்க்கத்தி’யுடன் வயல் ‘வரவை’க்குள் இறங் கினான். 1

“நீயும் வெள்ளாம வெட்டப் போறியா?” என்ற தந்தையின் கேள்விக்குச் சிவஞானம் சிரிப்பை பதிலாகச் சிந்து கையில், வேளாண்மை வெட்ட. வந்தவர்களில் ஒரு வரான சிவராசா சொன்னான்.

‘என்ன அத்தான் இப்படிக் கேக்கிறீங்க, இந்த வேலை யெல்லாம் இப்பவே, நம்மோட. இருந்து பழகாட்டாத் தம்பி எப்ப பழகப் போறான்’

கோணாமலை இதற்குப் பதிலே சொல்லவில்லை. வெட்டுக்காரர்கள் எட்டுப்பேருடனும் சேர்ந்து சிவஞான மும் அருவி வெட்ட ஆயத்தமானான். – வயலில் இறங்கிய எல்லோரும் நெற்கதிர்களை இரு கைகளாலும் தொட்டு மானசீகமாக நமஸ்கரித்துவிட்டு கிறு கிறென அரிவாளை வீசத் தொடங்கினார்கள். கிழக்கிலே சூரியக்கோளம் கிறு கிறென மேலேறித் தன் கொடுங்கிரணங்களால் அவர்களின் கன்னங்களைப் பொசுக்கியது. புது வேளாண்மையின் கோரமான சுணைக்குப் பாதுகாப்பாக அவர்கள் எல்லாருமே தரித் திருந்த பழைய முழுக்கைக் காக்கிச் சட்டைக்குள்ளே. அவர்கள் உடல்கள் சித்திரைப் புழுக்கத்தில் 2-ரூகிக் கொண்டிருந்தன. சற்று நேரத்திலேயே அவர்கள் அணிந் திருந்த சட்டைகள் தெப்பமாக நனைந்து உடலோடு ஒட்டிக்கொண்டு விட்டன. சுணையையும் தினவெடுத்துச் சொறியச் சொல்லும் அரிப்பையும் சட்டை செய்யாமல் குனிந்த குனிவில், கத்தியின் வளைவுக்குட் கதிர்த்தாள் களைக் கோதி, கத்திக்குள் அடங்கிய தாள்களை இடககை யின் பிடிக்கும். சிக்க வைத்து ஒவ்வொரு பிடியும் நிரம் பியதும் கத்தியோடு அதை அணைத்துப் பின்னால் திரும்பிக் கதிர்த் தாள்களை ‘ உப்பட்டி’யாகப் போட்ட வாறு, அணி அணியாய் அருவி வெட்டிக் கொண்டு அவர்கள் முன்னேறினர். ‘வெட்டும் வெட்டை மதியம் திரும்புவதற்குள் வெட்டிவிட வேண்டும். மதியந் திரும்பிச் சாப்பிட்டு விட்டால் அதன்பின் வேலை ஓடாது’

என்ற எண்ணத்தில் அவர்கள் மூசுமூசு என்று வெட்டிக் கொண்டேயிருந்தார்கள். கதிர்த் தாள்கள் அறு படும் ‘கறார் கறார்’ என்ற ஓசையைத் தவிர அந்த வயல் வெளியலே வேறு எந்த ஓசையும் இல்லை. வெதுவெதுப் பும், இறுக்கமுமான சித்திரையின் நிச்சலனம் மதியந் திரும்பினால் கொண்டலின் அசைவில் சற்று இளகலாம். அதுவரை ஒரே வெப்பம்… புழுக்கம்.

கதிர் அறுத்துக் கொண்டிருந்த சிவஞானம், திடீ ரெனக் கையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு ‘ஐயோ’ என அலறினான். இடக்கை உள்ளங்கையின் கீழ்ப்பகுதி யில் சின்னி விரலுக்குக் கீழுள்ள சதை மேட்டில் கருக்கரிவாள் வெட்டியதினால் இரத்தம் ஓடிக்கொண்டு இருந்தது. வேளாண்மைச் சுணையின் அரிச்சலோடும்’, சித்திரைப் புழுக்கத்தின் அகோரத்தோடும் வெட்டுக் காயம் ஏற்படுத்திய எரிச்சலில் சிவஞானம் துடிதுடிட் பதைக் கண்ட அவன் தந்தையார், தன் சமையலைப் போட்டது போட்டபடியே விட்டுவிட்டு வயலுக்குள் ஓடி வந்தார்.

சிவஞானத்தின் கையைத் தூக்கிப் பார்த்துக் “கள்ள வெட்டுக் காயம் அத்தான்” என்று சர்வ சாதாரணமாகச் சொன்ன சிவராசா, விரைந்து சென்று நீர்க்கரையிலே செழித்து வளர்ந்திருந்த ‘கையறுப்பான்’ என்ற தொடக் கறுத்தான் இலைகளைப் பிடுங்கி வந்து சொட்டுத் தண்ணீர்விட்டுக் கசக்கிக் காயத்தில் வைத்துக் கட்டிக் கொண்டே “இதுதானா இளந்தாரிர கெட்டித்தனம்” என்று கேட்டபோது சிவஞானம் அவமானத்தாற்குன்றிப் போனான். ஆயினும் அதற்குமேல் அவனால் வேலை செய்ய முடியவில்லை. மெதுவாகத் தந்தையோடு வயலை விட்டுக்கரையேறிக் குடிசையை அடைந்தபோது கோணா மலை சொன்னார்

‘இதுக்குத்தான் நான் சொல்றன் கவனமாகப் படி. நாங்க இந்தக் காட்டிலயும் கரம்பிலயும் கஷ்டப்பட்டு என்ன சுகத்தைக் கண்டம். நீயெண்டான படிச்சு ஒரு வாத்தியாரா வந்திரு.’

வெட்டுக்காயத்தின் வேதனையோடு சிவஞானம் தன் தந்தையார் சொன்னதைக் கேட்டபோது, நான்கு மாதங் கட்கு முள்னால் நடந்தவைகள் ஞாபகத்திற்கு வந்தன.

‘தை மாதம் பிறக்கப் போகின்றது. பொங்கலுக்கு இன்னமும் ஏழே ஏழு நாட்கள் தான் இருந்தன. இளக் கந்தைக்குளம் நிரம்பி வான்போடத் தொடங்கி விட்டது. அக்குளத்தை நம்பிப் பயிரிடத் தயாராக இருந்த கமக் காரர்கள் எல்லாரும் கடாப்பிணையல்களோடு ‘வயல் அடிக்க’ வந்து விட்டாாகள். பொங்கலுக்கு முன்னாற் வெருமிதியாவது மிதித்து விடவேண்டும் என்ற அவசரம்.

சிவஞானமும் தன் தந்தையாரோடுகூட வயலுக்கு வந்திருந்தான். கூலியாட்கள் வேறு மூன்து பேர்!

ஒவ்வொரு வரவைக்குள்ளும் படம் புதைய நீரைக் கட்டி வைத்து, அந்தச் ‘சிலுவு’ தண்ணீரில் கடாப்பிணை யல்களை விட்டு வயலை உழக்கத் தொடங்கினார்கள்.

ஹேஹே என்ற கட்டைக் குரலுக்கு முன்னே நடந்து, *ஹோஹோஹோ’ என்ற நீளக் குரலுக்கு வலம்வளைந்து திரும்பி நடப்பது சிவஞானத்திற்குப் புதுமையாகவும் வேடிக்கையாகவும் இருந்தது. ஓரோர் நாளையில் தனக்குப் பாடம் நன்கு விளங்காவிட்டால் ‘கிடா மாடு’ என்று தன்னைத் திட்டும் மிஷன் பாடசாலை ஞானமுத்து வாத்தியாரின் உலக அநுபவத்தையிட்டு அவனுக்குச் சந்தேகமாக இருந்தது. இந்த மாடுகட்கா அவர் அறி வில்லை என்கிறார்!

ஆனால் உற்சாகத்தோடு மாடு வளைத்துக் கொண்டு இருந்த சிவஞானத்திற்குச் சில மணி நேரத்துள் அலுப்புத் தட்டத் தொடங்கிற்று. கட்டிய நீரின் அடியிலே தரை யோடு தரையாகப் படர்ந்திருந்த தொட்டாச் சிணுங்கி யின் முட்கள் அவன் கால்களை நன்றாகப் பதம் பார்த்து விட்டன. கீறிக் கிழிபட்ட அக்கால்களைத் தூக்கி மேலே ஒரு அடிகூட வைக்க அவனால் முடியவில்லை. எனவே மாடு வளைப்பதை விட்டு விட்டு வெளியேறினான். ஆனால் அவன் தந்தையாரும் மற்ற இருவரும் எவ்விதச் சிரமமுமின்றி மாட்டைவளைத்துக்கொண்டேயிருந்தனர். காட்டிலே இராமரின் பாதங்கள் பட்டபோது ‘காயெரி கனலுங் கற்கள் கள்ளுடை மலர்கள் போல்” குழைந்து தோன்றிற்றாம் என்று அவன் • இராமர் கதை’ என்ற கதை நூலிலே படித்திருந்தான். அதைப் போலவே *விவசாய ராமர்களின்’ கால்பட்டதும் – தொட்டாச் சிணிங்கி முட்கள் பூக்களாகி விடுகின்றனவா? என்று எண்ணியபடியே வயல்வரப்பில் இருந்து கொண்டு – முட்கள் கீறிக் கிழித்த தன் பாதங்களைத் தடவிக் – கொண்டிருந்தான். அப்போதும் தந்தையார் சொன்னார்;

‘இதுக்குத்தான் நான் சொல்றன் கவனமாப்படி. நாங்க எல்லாம் மா டெண்டும் வயலெண்டும் திரிஞ்சு என்ன சுகத்தைக் கண்டிற்றம். நீயெண்டான நல்லாப் படிச்சு ஒரு வாத்தியாரா வந்திடு’

ஆம்; அப்பாவின் வாழ்க்கை இலட்சியமே நான் நன் றாகப் படித்து ஒரு வாத்தியாராக வந்து விட வேண்டும் என்பது தானா? என்று எண்ணிக் கொண்ட சிவஞானம் அலுப்பிலும், வேதனையிலும் அப்படியே அரிசிச் சாககிற் தலைவைத்துப் படுத்தபடியே நித்திரையாகிவிட்டான். மதியச் சாப்பாட்டிற்கு அவனை எழுப்பச் சிரமப்பட வேண்டியிருந்தது.

நாட்கள் உருண்டன. பிரபஞ்சத்தை நிறைத்து நின்ற இலையசையாப் பம்மலும் பொருமலும் திரிந்து தலைக் கச்சான் வீசத் தொடங்கையில் மழையும் பெய்தது.. ஆயினும் அந்த வருடம் பாலை மரம் பழுக்கவில்லை. இரண்டு ஆண்டுகட்கொரு தடவை முறை வைத்துத்தான் பழுக்கும் என்ற விவகாரம் சின்னவனான விசுவத்துக்கும் தெரிந்திருந்தால் அம்மரத்திற் பழம் பிடுங்கவோ, அல்லது பழந்தின்ன வரும் புறாக்களைச் சுண்டு வில்லாற் குறி வைத்துத் தெறித்துக் கொல்லவோ சிறுவர்கள் எவரும் * பாலைமரத்துப் பக்கம் வரவில்லை. ஆயின் கச்சான் காற்று அனற்காற்றாய் முற்றி அங்கிருந்த பற்றைகளும் ‘பறுகுகளும் சருகாக உலர்ந்து காயத் தொடங்கியபோது அப்பாலை மரம் மட்டுமே ஊரவர்க்கெல்லாம் கோடை – யிலே இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் – தருவாய் கம்பீரித்தது. விறகு பொறுக்கிய பெண்கள் அதன் நிழலிலே பொறுக்கிய விறகுகளை ஒன்று சேர்த்துக் கட்டினார்கள். வயலிற்கும் காட்டிற்கும் சென்ற ஆண்கள் அம்மரத்தின் குளிர் நிழலிலே இளைப்பாறிச் சென் றார்கள் பக்கத்திலே காவலின்றி இருந்த தென்னந் தோட்டங்களில் திருட்டுத்தனமாக இளநீர் பிடுங்கிய சிறுவர்கள், விராலிப் பற்றை மறவிலே இளநீர் களைக் குடித்துவிட்டுப் பாலைமர நிழலிலே சுவாவபூதியாகப் படுத்துறங்கினார்கள். இளக்கந்தை வயலிலிருந்து நெல் ஏற்றி வந்த கோணா மலையும் அம்மரத்தின் கீழே வண்டியை நிறுத்தித் தன் வெள்ளை மாடுகளை ஆதுரத் தோடு முதுகில் தட்டிக் கொடுத்தார்!

அந்த ஆண்டு இளக்கந்தை வயல் நன்றாகவே விளைந்திருந்தது. அதன் பலனாக, இரண்டு அறை களோடு விசாலமான முன் மண்டபமும் கொண்டிருந்த கோணாமலையின் வீடு, வெளிப்புறத்திலும் நீறு பூசி வெள்ளையடிக்கப்பட்டது. அவரது பழைய வண்டி செப்பனிடப் பட்டுப் புத்தம் புதியதே போலத் திருத்தப் பட்டது. அது மட்டுமல்ல. மாவலி நீர் பாயும் இறையால் தீவு” வெளியிலே அவர் குத்தகைக்குக் கொடுத்திருந்த மூன்று ஏக்கர் நிலத்தையும் கடன் படா மலே விதைக்க முடிந்தது. எல்லாவற்றிற்கும் மேலாகக் கந்தசாமி கோவிலன் ஆடி உற்சவத்தில் அவரதும் அவரது சகோதரர்களதும் உபயமான நாலாந் திருவிழா வில் வல் வெட்டித் துறையிலிருந்து சின்ன மேளம் எடுப் பித்த செலவையும் வாண வேடிக்கை காட்டிய செலவை யும் தன்னந்தனியனாக அவராற் பொறுப்பேற்க முடிந் தது! இதுவரை கோணாமலையாக இருந்த தன் தந்தை யார், அந்தத் திருவிழாவின் பின் கோணுமலையார் ஆகி விட்ட பெருமையைச் சிவஞானத்தால் உணர முடிந்தது!

அடுத்த வருடம் தை மாதம் சிவஞானம் இளக்கந்தை வயலுக்குப் போகவில்லை. ஏழாம்வகுப்புச் சித்தியடைந்த அவன் பக்கத்துப் பட்டினமான மூதூர்ப் பாடசாலை ஒன்றிலே சேர்ந்து எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டு இருந்தான். காலையில் எழுந்து மூன்று மைல் தூரம் நடந்து பாடசாலைக்குச் சென்று மதியந் திரும்ப மீண்டும் ஆயாசத்தோடு. வீட்டுக்கு மீளும் தன் மைந்தனின் சிரமத்தை உணர்ந்த கோணுமலையார் சிவஞானத்திற்கு “ இரண்டாங்கையான்’ துவிச் சக்கர வண்டி ஒன்று வாங்கிக்கொடுத்தார். சிவஞானமும் மாப்பிள்ளைபோலத் துவிச்சக்கர வண்டியிற் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்தான்

அவன் அப்படிச் சென்று கொண்டிருந்தது ஊரவர் பலருக்கு எரிச்சலாக இருந்தது. அருவருப்பாகவும் இருந்தது. கோணாமலையின் நெருங்கிய உறவினனான சிவராசா,

“என்னத்தான்! உனக்கு இவன் மட்டுந்தானா ஒரே ஒரு பிள்ளை ? இவனுக்குக் கீழ நாளைக்குக் குமராட போறதுகளே இரண்டு இருக்கு. கைக்குதவியான பயலை இப்படிச் செல்லங் கொடுத்து வளர்த்தால் எப்படி உருப் படப் போறாய்? நாம என்ன படிச்சு ஏசுண்டு வேலையா பாக்கப் போறம். பயலத் தன் போக்கில விடாமல், பிடிச்சு உன்னோட காலக் கையை ஆட்டப் பழக்கு.’ என்று உரிமையோடு ஆனால் மனத்துள் சூயையோடு கடிந்து கொண்டான்.

‘இவன் படிச்சிக் கிழிக்கத்தான் போறான்’ வேறு சிலர் ஏளனமாகப் பேசிக் கொண்டார்கள். செய்யத் தகாத ஒன்றைக் கோணாமலையார் வலிந்து செய்வதாக ஊரிலே எல்லாருமே குறைபட்டுக் கொண்டார்கள்.

ஆனால் தன்னில் உக்கிரமாக மோதும் அலைகளைந் தன் மடியிலே வாஞ்சையோடு ஏற்றும், பின் தள்ளியும் கலங்காமலும் கரையாமலும் நிற்கும் கடற்கரையைப் போலக் கோணாமலையாரும் ஊரவர் கருத்தை ஏற்றும் ஏற்காததுமாய்த் தன் போக்கிலே நிலை கொண்டு இருந் தார்.

கால ஓட்டத்தில் சிவஞானம் கிணற்றங்கரையில் நிமிர்ந்து வளர்ந்து புதுப் பாளையை வீசத் தயாராக இருக்கும் இளங்கமுகைப் போல நெடுத்து வளர்ந்து ‘விட்டான். ‘, வேஷ்டியைச் சண்டிக்கட்டுக் கொண்டு தெம்மாங்கு பாடியபடி மாடுபிடிக்கச் செல்லும் கிராமத் துப் பையனாக இல்லாமல் நாகரீகமாக உடுக்கவும், தனக்கு வயதில் மூத்தவர்களோடு மரியாதையாகப் பேசவும்–ஏன் தர்க்கம் செய்யவும் தெரிந்திருந்தான். கிராமத்தில் நடக்கும் நல்லதும் கெட்டதுமான காரியங் களில் கலந்துகொண்டு தேவாரமும் திருவாசகமும் பாடிய போது அவன் மதிப்பு உயரத்தான் செய்தது. அவ்வப் போது அரசாங்கக் காரியாலயங்களிலிருந்து வரும் கடிதங் களைப் படித்துச் சொல்லவும் அதற்குப் பதில் எழுதவும் ஊரவர் பலருக்கு அவன் உதவி தேவையாக இருந்தது. இந்த நிலையிலே பெருமையும் பெருமிதமும் கொண்டி ருந்த கோணாமலையார், நான்காம் வருடத் தொடக்கத் தில், சிவஞானம் “நான் எஸ். எஸ். ஸி. சித்தியடைந்து விட்டேன்” என்ற செய்தியைத் தெரிவித்தபோது செயற் கரிய செயலைச் சாதித்து விட்ட பெருமிதத்தில் ஆனந்தக் கண்ணீரோடு தன் மைந்தனை அணைத்துக் கொண்டார். அன்றைய தினத்தைப் பெருவிழாவாகவே தன் வீட்டிற் கொண்டாடினார்.

அன்று உள்ளூர் மிஷன் பாடசாலைத் தலைமை ஆசிரியரும் கோணாமலையாரின் வீட்டுக்கு வந்திருந்தார். பால்ய வகுப்புகளில் தன்னிடம் கல்விகற்ற சிவஞானத் திற்குத் தன் வாழ்த்து தல்களைத் தெரிவித்த ஞானமுத்து வாத்தியார் தான் ஆசிரியரான தன் பயனையே அடைந்து விட்டதைப் போலப் பெருமைப்பட்டுக் கொண்டார்.

ஆமாம் மட்டக் களப்பிலிருந்து வந்து, கடந்த பத்து வருடக் காலமாக அந்தக் கிராமத்தையே தன் சொந்த பர் போல ஆக்கிக்கொண்டு வாழும் அவர் பாடசாலைக் கும் கிராமத்திற்குமாகச் சாதித்துவிட்ட சாதனை தான் என்ன? கிராமத்தவர் பலருக்கு அவர் எழுத்தறிவித்த இறைவனாக இருக்கலாம். ஆனால் அவரிடம் படித்த எவனாவது அந்தக் கிராமத்திலோ அல்லது வெளியிலோ ஒரு சின்ன உத்தியோகத்திற்கூட இல்லையே என்பது அவர் மனதில் நீண்ட நாளாகவே இருந்து கொண்டி ருந்தது. இன்றைக்குத்தான் அந்த ஊரிலே அவர் மாணவன் என்று சொல்லக்கூடிய ஒருவன் எஸ்.எஸ்சி.. சித்தியடைந்து கொண்டிருக்கிறான்!

அந்தப் பெருமையில் திளைத்திருந்த ஞானமுத்து வாத்தியார் கோணாமலையாரிடம் சொன்னார். .

‘நம்ம பாடசாலையிலே இந்த மாதத்தில் ‘அனுவல்’ நடக்கும். அதிலே இன்னும் ஒருவருக்குச் சராசா வரும். அந்த இடத்துக்குச் சிவஞானத்தைத்தான் எடுக்க வேணும். நான் ஒரு கடிதம் தருவேன். அதை கொண்டு போய் மட்டக்களப்பில் மானேஜரிடம் கொடுத்தால் அவர் உடனேயே உங்க மகனுக்கு உத்தியோகப் கொடுப் பார்.”

கோணாமலையாருக்கு ஆனந்தம் தாங்க முடிய வில்லை. தன் மைந்தன் அப்பழுக்கற்ற வெள்ளை வேட்டி யும் நீளக்கைச் சட்டையும் அணிந்து, காற் செருப்புக்கள் தாளமிசைத்துக் கட்டியங் கூறப் புத்தகங்களைக் கையில் எடுத்துக் கொண்டு கிராமத்துக் கிரவல் ரோட்டிலே தன் வீட்டிலிருந்து பாடசாலைக்கு செல்வது போன்ற பொய்ம் மாயத் தோற்றத்தை மனதிலே கற்பித்துக் கொண்டார். ஊரவர்கள் எல்லாரும் -வயது முதிர்ந்தவர்கள் கூடத் தெருவாற் தன் மகன் நடந்து செல்கையில் தோளிலிருந்த சால்வையைக் கையில் எடுத்துக் கொண்டு மரியாதையாக ஒதுங்கி நடப்பது அவர் மனக்கண்ணில் பளிச்சிட்டது. அரிவரி வகுப்பு மாணவர்கள் தன் மகனைச் சூழ்ந்து கொண்டு ‘புது ஐயா, புது ஐயா’ என்று கத்துவது மான சீகமாக அவர் காதுகளிற் கேட்டது. அந்தச் சொர்ப்பனா சுகத்தை அவரை அனுபவிக்கும்படி விட்டுவிட்டு ஞானமுத்து வாத்தியார் போய்விட்டார்.

ஆயினும் அவர் அவ்விஷயத்தை மறந்தே விட வில்லை. பாடசாலையின் வருடாந்தத் திரட்டு முடிந்த அடுத்த நாளே, இப்பாடசாலையில் இன்னும் ஒரு ஆசிரியருக்குச் சராசரி இருக்கிறதெனவும், அவ்விடத் திற்கு உள்ளூரிலேயே எஸ். எஸ். சி. சித்தியடைந்திருக்கும் சிவஞானத்தை நியமிப்பது பாடசாலையின் வளர்ச்சிக்கு அத்தியாவசியம் எனவும் அது ஊரவர்க்கும் திருப்தியாக இருக்கும் எனவும் மானேஜருக்குக் கடிதம் எழுதி, அக் கடிதத்தைக் கொண்டு போய்க் கோணாமலையாரிடம் கொடுத்து, உடனே சிவஞானத்தை மட்டக்களப்பிற்கு அனுப்பி மானே ஜரிடம் கடிதத்தைச் சேர்ப்பிக்க வேண்டு மெனக் கேட்டுக் கொண்டார்.

சிவஞானமும் கடிதத்தை எடுத்துக்கொண்டு மனதிலே இன்பக் கனவுகளோடு அடுத்த நாட்காலையிலேயே மட்டக்களப்பிற்குப் புறப்பட்டான்.

யமன் திக்கான தென் திசையை நோக்கிச் சிவனே’ என்றோடிய ‘ஈஸ்ரண்பஸ்’ தன் கடகடப்பையும் தட தடப்பையும் நிறுத்தித் தன் பயணத்தை முடித்துக் கொண்டபோது மட்டக்களப்பு நகரின் தெருவிளக்குகள் ஏற்றப்பட்டு விட்டன! சரிக மாமபா, மபத நீ நிசா எனப் பாடலைப் பாடும் நீரர மகளிர் வாழ்வதாக விபுலானந்த அடிகள் குறிப்பிடும் மட்டக்களப்பு வாவியின் நிர்ச்சலன மான நீர்ப்பரப்பில் மின்விளக்குகளின் ஒளி பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

பஸ்ஸிவிருந்து இறங்கிய சிவஞானம் வாவிக்கரை ஓர மாகக் கண்வைத்த தொலைவுக்குத் தொடர்ந்து செல்லும் மின் விளக்குகளின் வரிசையையே வைத்த கண்வாங்காமற் பார்த்துக் கொண்டிருந்தான்!

‘ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்’ என்ற வாக்கியம் என்ன காரணத்திற்காக வழங்கி வருகின்றதோ, ஆனால் பெரு நிலத்திலிருந்து புளியந் தீவைப் பிரித்து ஆலவாயை வளைத்த அரவமாய் வளைந்து கிடக்கும் வாவி மட்டக் களப்புப் பட்டினத்தை அழகு செய்ய அந்த அழகே அதன் சுயமாய், அந்தக் கீழைக்கரைத் தலை நகர் அந்தி மயக்கத் தின் மஞ்சள் ஒளியில் காவிய காலத்துப் பூம்புகார் அப்பட்டினத்தை முதன் முறையாகத் தரிசித்த சிவஞானத் தின் கண்களிற் தோற்றமளித்தது அந்த அழகு மயக்கில் சிலநேரம் தன் கண்களை லயிக்கவிட்டிருந்த சிவஞானம் தீவையும் பெரு நிலத்தையும் இணைத்த பாலத்தைப் பார்த்தான். பாலத்தின் மதகுகளில் திரைப்பட விளம் பரங்கள் ஒட்டப் பெற்றிருந்தன. சிவஞானம் விளம்பரங் களைப் படித்தான்.

‘காலம் மாறிப் போச்சு’ என்ற படம் இம்பீரியல் பட மாளிகையில் ஓடிக் கொண்டிருப்பதாக ஒரு விளம்பரம் சொல்லிற்று!

அவ்விளம்பரத்தைக் கண்டதும் மூதூர்ப் பாடசாலை யிலே அவனுக்குச் சரித்திர பாடங் கற்பித்த பொன்னம் பலம் மாஸ்ரரின் ஞாபகம் வந்தது. அவர் ஒருநாள் ஆவேசத்தோடு சொன்னார்.

“பொருளற்ற புராணக் குப்பைகளைப் படமாக்கிக் கொண்டிருந்த தமிழ் சினிமாக்காரர்கள், அதன் பின்னால் சரித்திரப் படங்கள் என்ற நினைப்பில் சரித்திரமும் அல்லாத புராணமும் அற்ற இரண்டுங் கெட்டான் கதை களைத் தயாரித்து அக்கதைகளிடையே கனகவிசயன் தலையிலே கல் சுமத்திய கதையையும், இமயத்திலே மீன் ‘பொரித்த’ கதையையும் கதாபாத்திரங்களின் வாயிலாகப் பேச வைத்துத் தமிழனுக்கும் தமிழுக்கும் பெருமை தேடிக் கொண்டு விட்டதாகச் சுயதிருப்தி கொள் கிறார்கள். இன்னும் சிலர் ‘கோட்’டிலே அர்த்தமற்ற அடுக்குத் தொடர்களைப் பொழிந்து தள்ளுவதுதான் சமூகக் கதை என்று எண்ணித் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்கள். இந்த நிலையிற் சமூகத்தின் பரிணாம வளர்ச்சியை-அவ்வளர்ச்சி மூலம் அடைய வேண்டிய சமுதாய மாற்றத்தை விளக்குவதாய், ‘காதல் கூதல்,’ என்று’ தமிழ்ப் படத்திற்கே மட்டும் சொந்தமான அசட்டுத்தனங்கள் ஏதுமின்றி ஓர் தெலுங்குக் கதையைச் ‘துணிச்சலோடு படமாக்கியிருக்கிறார்கள். சந்தர்ப்பம் – கிடைத்தாற் ‘காலம் மாறிப் போச்சு’ என்ற அந்தப் – படத்தை நீங்கள் எல்லாரும் பார்க்க வேண்டும்.”

அவர் பேச்சு ஞாபகம் வரவே மானேஜரிடம் சென்று தான் வந்த வேலையை முடித்துக்கொண்டது இரண்டாங் காட்சிக்காவது படம் பார்க்கச் செல்ல வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டவனாக, ஞானமுத்து வாத்தியார் கற்பித்திருந்த குறிப்புகளின் பிரகாரம் மானேஜரின் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

புளியந்தீவுப் பாலத்தின் இரு கரைகளிலும் வாழ்க்கை யின் பல்வேறு நிலைகளில் இருந்த பலர் ‘காற்று வாங்கு வதற்காக’க் கூடி நின்றார்கள். இளைஞர்களான சிலர் பாலத்தின் கம்பிகளிற் பிருஷ்டகாலை ஊன்றி தங்கள் நிலையைச் சமனப்படுத்திக் கொள்வதற்காக முதுகைக் கூனாக்கி முன்வளைந்து சர்க்கஸ் வித்தை செய்து கொண் டிருந்தார்கள். அந்திக் கருமை படர விழித்துக்கொண்டு ‘விடும் பட்டினத்து அழகு, முகப்பூச்சுகளின் இலவச விளம் பரமாய் பாலத்துக் கம்பிகளிற் குந்திக் கொண்டிருக்கும் இளைஞர்களை அருவருத்து ஒதுங்கிக்கொண்டு பாலத் ‘தின் இரு கரைகளிலும் வழிந்து கொண்டிருந்தது!

சிவஞா னம் நடந்து கொண்டேயிருந்தான். சற்று முன்னே பூம்புகாராகக் காட்சியளித்த மட்டக்களப்பு ‘நகரின் துர்க்கந்தம் அவன் மூக்கைத் துளைக்கத் தொடங்கியது. நகருக்கு அழகூட்டும் இந்த வாவிக் கரையா, நகரின் குப்பைகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியாக வும் அமைய வேண்டும்? என்று மனம் வெதும்பியவனாய் நடந்த சிவஞானத்திற்கு பாலத்திலே வெள்ளை வேட்டி யும் சட்டையும் அணிந்து நிற்கும் பலர் உடையிலே மட்டும் அல்ல; பாலையும் நீரையும் பிரித்துப் பாலையே குடிக்கும் அன்னத்தைப்போல குப்பைக் குழியிலே இருந்து வரும் காற்றைப் பிரித்து வாவி நீர்ப் பரப்பிலிருந்து வரும் ‘சுத்தக் காற்றை மட்டுமே சுவாசிக்கும் அமானுஷய சாதனை படைத்தவர்கள் என்றெண்ணிக் கொண்டே அந்த எண்ணம் அவனுக்கே சிரிப்பைத் கர மானேஜர் வீட்டை நோக்கி நடந்தான். அவன் மானே ஜரின் இருப் பிடத்தைத் தேடிப்பிடித்த போது, மாதா கோயிலிலே செத்தவர்களை நினைத்து பிரார்த்திப்பதற்காக அடிக்கப் படும் இளைப்பாற்றி மணி ஒலித்தது.

அவன் மானேஜர் வீட்டை அடைந்தபோது’ செத்த வர்களை நினைந்து பிரார்த்திப்பதற்காக ஒலிக்கும் இளைப்பாற்றி மணிவிட்டு விட்டு ஒலித்தது!

அந்த ஒலி அடங்கியபோது, தன் அறையின் ‘முன்னாற் தாழ்வாரத்திலே கையிற் செபப் புத்தகத்தோடு உலாவிக் கொண்டிருந்த, சுவாமியாரிடம், சிவஞானம் அடக்க ஒடுக்கமாக ஞானமுத்து வாத்தியார் கொடுத்த கடிதத்தை நீட்டினான் சிவஞானத்தை ஏற இறங்கப் பார்த்த பாதிரியார் கடிதத்தைப் பிரித்துப் படித்தார்.

சிவஞானத்தின் இதயம் வேகமாக – அடித்துக் கொள்ளத் தொடங்கிற்று.

கடிதத்தைப் படித்த பாதிரியாரின் முகத்தில் எந்தச் சலனமுமே ஏற்படவில்லை. நியம நிஷ்டைகளால் பழக்கப்படுத்திக் கொண்டுவிட்ட பற்றற்ற தன்மையே!

சிவஞானம் ஆவலோடு அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். கடைசியாகப் பாதிரியார் சொன்னார்.

“தம்பி விஷயம் பிந்திப் போய் விட்டது. நான் அந்த இடத்திற்கு ஏற்கனவே ஒருவருக்கு வாக்குப் பண்ணி விட்டேன், இப்போது ஏதும் செய்ய முடியாது.”

அவர் கூறிய வார்த்தைகள் சிவஞானத்தைக் கல்லாய்ச் சமைத்து விட்டனவோ! அவன் உள்ளுணர்வு கள். மனத்துடிப்புகள் எல்லாவற்றையுமே ஸ்தம்பிக்கச் செய்து விட்டனவோ! சிவஞானம் அடித்து வைத்த சிலை யாக அப்படியே நின்றான்!

இருவரும் நின்றனர்.

அறைக்குள்ளே மேசை மணிக்கூட்டிலிருந்து வந்த டிக்டிக் என்ற சப்தம் மட்டும் அவர்கள் இருவரது மௌனத்திற்குப் பகைப் புலமாக மோனத்திருந்த அந்த நிமிடங்களை வினாடித் துண்டுகளாக வெட்டி வெட்டி வைத்துக் கொண்டிருந்தது. அம்மௌனத்தைக் கலைத்த பாதிரியார் மீண்டும் சொன்னார்.

“தம்பி ஏன் நிக்கிறாய்? இப்போது ஒன்றுமே செய்ய முடியாது. இன்னமும் இரண்டு மூன்று மாதங்களில் திரிகோணமலைப் பகுதியிலே வேறு பாடசாலைகளில் புதிய இடங்கள் வரலாம். அப்போது உம்மைக் கவனித் துக் கொள்கிறேன். இப்போது நீர் போகலாம்.”

இப்படிச் சொன்ன பாதிரியார் மீண்டும் தன் செபப் புத்தகத்தை விரித்துக்கொண்டு உலாவத் தொடங்கினார். உலகக் கவலைகளிலிருந்து விடுபட்டு நினைத்த மாத்திரத் தில் கடவுளோடு உறவாடவும் பேசவும் அவர் பயிற்சி அளிக்கப்பட்டவர்!

ஆனால் அவர் வார்த்தைகளினால், ஓங்கி உயர்ந்து நின்ற கோயில் கோபுரம் அப்படியே வீழ்ந்து நசுங்கி விட்டது போலவும், காலடியிலே நிலம் பிளந்து அப்படியே தன்னை விழுங்கிவிட்டது போலவும் இருந்தது சிவஞானத்திற்கு. மனக்கோட்டைகள் நொறுங்கி வீழ்ந்த அதிர்ச்சியில் அடுத்து என்ன செய்வது என்ற பிரக்ஞையே அற்றவனாக மீண்டும் வந்த வழியில் நடக்கத் தொடங் கினான். மின்சார விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் முக் குளித்துக் கொண்டிருந்த பட்டினத்துத் தெருக்களில் அவன் சென்ற வழி மட்டும் இருட்டாகவே இருந்தது.

செல்லும் இடமும் இருட்டாகவே இருந்தது. சிந்தையே இருண்டு விட்டதே.

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *