பாலித்தீன் பை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 6,817 
 

மழை, வானத்திற்கும் பூமிக்குமாக கிருஷ்ணன் அவதாரம் எடுத்தது. மூட்டையை அவிழ்த்து பச்சை அரிசியை மேலிருந்து கொட்டினால் எப்படி இருக்குமோ அப்படி கொட்டியது அந்தப் புது மழை.

“டேய்… டேய் சன்னலை சாத்துடா…”

ஆலங்கட்டி மழையுடன் வந்த புயல் காற்றால் கதவுகள் அதுவாகவே அறைந்து கொண்டது.

“மெழுகுவர்த்தியைத் தேடுடா…”

“எங்கேண்ணே வச்சீங்க…”

கருணாகரனுக்கு வந்தது மூக்கின் மேல் கோபம்.

விருட்டென்று கல்லாவைத் திறந்தார்.சில்லரைக் காசுகள் சிரித்தன. பழைய விருந்தாளியாக இருந்த அந்த இரண்டு ரூபாய்த் துட்டை எடுத்து நீட்டினார்.

“டேய் குமரா…”

மழை இரைச்சலுக்கிடையில் அந்த அழைப்பு குண்டூசியாக காதிற்குள் நுழைந்தது.

“இதோ வந்திட்டேன் அண்ணே…

“ஓடிப் போய் மெழுகுவர்த்தியும் தீப்பெட்டியும் வாங்கிக்கிட்டு வா”

சட்டைப் பொத்தான்களை அவிழ்த்தான். காலரைத் தூக்கி விட்டான். தோள்ப்பட்டைகளை உசத்திக் கொண்டு கில்லி விஜய் பாணியில் ”கபடி கபடி” என்று ஓடி சாலையைக் கடந்தான்.

குமரன் கடைக்குத் திரும்பும் போது அவனுக்கு இன்னொரு வேலை காத்திருந்தது.

முதலாளி கருணாகரன் மகன் சினுங்கிக் கொண்டிருந்தான். வழக்கமான பசி நேரம் அது. கூடவே மழையின் சாரல். போதாக்குறைக்கு வானத்திற்கும் பூமிக்குமான மின்னல் கம்பி ”பளிச் பளிச்” என்றது.

ஒரே தும்மலில் மூக்கு அசடுகள் துண்டைக் காணம்; துணியைக்காணம் என ஓடுமே அப்படி ஓடி மின்னலில் மின்சாரம் மறைந்து கொண்டது.

அரக்க இருட்டு மிரட்டியது. தான் மிரட்டுவது போதாதென்று தனது பட்டாளம் இடி, மின்னல் என திரட்டிக் கொண்டு வந்து மிரட்டியது.

குமரன் கண்களை மெதுவாக மூடித் திறந்தான். எந்த வித்தியாசமும் அவனுக்கு தென்படவில்லை. சரளைக்கற்கள் கொட்டினால் எழுமே இரைச்சல் அப்படியொரு இரைச்சல் வானத்திற்கும் பூமிக்குமாக.

முதலாளி கருணாகரன் மகன் வாயை மூடியும் அளவிற்குத் திறந்து அடிவயிற்றிலிருந்து அழுகையை குமட்டிக் கொண்டு வந்து கொட்டினான்.

“குமரன்…”

“என்னன்னே…?”

“தம்பியைக் கொண்டு போய் வீட்ல விட்டுட்டு வாரியா?”

“ம் .விட்டுட்டு வாரேண்ணே”

“மழை பெய்தேடா…”

“ஆமாண்ணே!”

“என்னடா செய்யலாம்?”

“குடை எங்கேண்ணே… ?”

“வீட்ல இருக்கேடா!”

“பின்னே என்னண்ணே செய்யலாம்?”

“புதுசா எதையாவது யோசியேடா”

குமரன் இஸ்திரிப் பெட்டியை ஓரங்கட்டினான். தேய்த்துச் சப்பாத்தி போல அடுக்கி வைத்திருந்த ஆடைகளை ஒரு வேட்டியில் அடுக்கி, “சரட் சரட்” டென்று ஆட்டுக்கால் முடிச்சைப் போட்டான்.

மேஜையின் மீது விரிக்கப்பட்டிருந்த போர்வையை எடுத்து உதறினான்.

“தம்பியை இப்படிக் கொடுங்கண்ணே”

காயத்திற்கு கட்டுப் போடுவது போல போர்வையை குழந்தை மீது சுற்றினான்.

“சரி சுற்றிட்டே, தலை நனையுமேடா…”

“பொறுத்திருந்து பாருங்கண்ணே”

“என்னடா செய்யப்போறே?”

ட்ரவுசர் பாக்கெட்டிலிருந்து பாலித்தீன் பையை எடுத்தான். ஒரே ஊதலில் அந்தப் பை பிள்ளைத்தாச்சி உருவமெடுத்தது.

“தம்பி தலையைக் காட்டுங்கண்ணே”

“டேய் குமாரு. நீ இப்படி வா. தம்பியை பிடி.”

பையை வெடுக்கென பிடுங்கினான் கருணாகரன்.

“பையை தலையில நல்லா மாட்டுங்கண்ணே.”

“நீ தம்பியை மட்டும் நல்லா பிடிடா”

“அண்ணேன்னே… இறுக்கிக் கட்டாதீங்கண்ணே” “தம்பியை இப்படிக் கொடு”

மார்போடு அணைத்தான். தலை விசும்பாத அளவிற்கு ஒரு கையால் இறுகிப் பற்றினான். உச்சி முதல் பாதம் வரை முத்தமிட்டான்.

முறிந்து விழும் மரக்கிளையைப் போல மீண்டும் ஒரு மின்னல். மரம் சரியும் ஓசையில் இடி முழக்கம்.

“குமரா! நீ கடையைச் சாத்திட்டு வீட்டுக்கு மழை விட்டப்பறம் போ”

“தம்பியை நீங்க கொண்டுக்கிட்டு போகப் போறீங்களாண்ணே”

“ம்…”

“பாத்துண்ணே”

“ம். நீ பார்த்துப் போ”

“சரிண்ணே”

கங்காரு, தன் குட்டியை சுமந்து கொண்டு செல்வது போல மழை, மின்னல், இடி என்று மூன்று தெருக்களைக் கடந்து கருணாகரனின் பயணம்.

குமரன் கிளம்புவதற்கு தயாராகிக் கொண்டிருந்தான். பாலீத்தீன் பை ஒன்றை பாக்கெட்டிலிருந்து எடுத்து தொப்பியாக கவிழ்த்தான். கடையின் வாயைச் சாத்தினான். கதவு சாத்தப்படவில்லை. “இந்த பாச்சா என்னக்கிட்டே பலிக்காது“ என்றவாறு கையை உள்ளே விட்டு வெளியே இழுத்தான். பின் மழையின் இடைவேளை தருணத்தை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தான்.

புற்றுக்குள் நல்லபாம்பு நுழைவது போல அவனது காதிற்குள் தூரத்திலிருந்து வந்த ஒரு செய்தி நுழைந்து கொண்டிருந்தது.

அந்த செய்தி அவனது இதயத்தை முள் கம்பி இறுக்குவது போல இறுக்கியது.

“என்னண்ணே சொல்றே?”

“யாரப்பா குமாரா? உண்மைதாம்பா”

தலையில் கவிழ்த்திருந்த மெல்லிய பாலித்தீன் தொப்பியைக் கசக்கி மிதித்து விட்டு நூல் அறுந்த பட்டமாக அங்கும் இங்குமாக ஓடி கருணாகரன் வீட்டை அடைந்தான். மக்கள் கூடி இருந்தனர்.

“தம்பி குமரா! வந்து தம்பிய பாரேன்டா”

எட்டிப்பார்த்தான். அவனது கண்கள் தண்ணியில்லாத குட்டையில் தத்தளிக்கும் கெண்டை மீனைப்போல அலை பாய்ந்தது.

குமரனுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.

“ஒரு வினாடி தாமத்திருந்தால் புள்ள எனக்கில்லடா”

“எங்கேண்ணா அந்த பாலிக்கவரு?”

“அதோ கிடக்குடா”

தனக்குத்தானே விசிறிக் கொண்டும் பறக்கவும் தயாராகிக் கொண்டிருந்தது. குனிந்து எடுத்தான்.

“என்ன செய்யப்போறே?”

“அடுப்பில போடப்போறேன் அண்ணே.”

“வேண்டாமடா”

“பின்னே…?”

“புதைச்சிரு”

குமார் மண்வெட்டியுடன் கிளம்பினான். அவனது ஆழ்மனது துடித்தது. பாலித்தீன்கள் கருணாகரன் பிள்ளை போன்று பூமிப்பிள்ளையையும் இறுக்கவே செய்கின்றன. யார்தான் அதற்காக கவலைப்படுவது?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *