பாம்புக் கமத்தில் ஒரு வாரம் தங்கிவரலாமென்று சொல்லி நண்பன் கமலநாதன் என்னை அழைத்தபோது விருப்பமில்லாவிட்டாலும் எனக்கு மறுக்க முடியவில்லை. அவசரமான எழுத்து வேலைகள் இருக்கின்றன என்று சறுக்க முயன்றபோது அங்கேயே வந்திருந்து செய்யென்றுவிட்டான் நண்பன்.
மேட்டு நில அந்த வயல் வீட்டிற்கு நாங்கள் ஒரு மதியத்தில் வந்துசேர்ந்தோம். பத்தாண்டுகளுக்கு உட்பட்டதானாலும் வீடு நீண்டகாலம் புழக்கமற்றுக் கிடந்ததில் ஒரு இருண்மையில் கிடந்திருந்ததாய்ப் பட்டது. பாம்புக் கமமென்ற பெயரும், அப்போதைய அதன் இருண்மையும் மனத்துள் எனக்கு சௌகரியத்தை விளைக்கவில்லை. அந்த இடத்தை ஏன் பாம்புக் கமம் என்கிறார்களென கமலநாதனிடம் கேட்டபோது தெரியாதென்றுவிட்டான்.
அதுபற்றி மேலே எதுவும் யோசிக்காவிட்டாலும், இருளத் தொடங்குகிற வேளையில் பாம்புக் கம நினைவு எழுந்தது.
அதுமாதிரியான வயற் பிரதேசங்களோடு அதிகம் தொடர்பற்ற எனக்கு, அந்தப் பெயரிலிருந்து எழுந்த கற்பிதங்கள் நூறு நூறாக என் மனத்துக்குள்ளே பாம்புகளை நெளியவைத்துவிட்டன.
அதனால் பாம்புக் கமமென்ற பெயர்க் காரணத்தை அப்போதே அறிந்துவிடும் தவிப்பு எழுந்திருந்தாலும், றோட்டிலே போகிற ஒருவரிடம் ஓடிப்போய் இதைப்பற்றி நான் கேட்டுவிட முடியாது. ஒரு வாரம் வீட்டிலே நின்று சமைத்துத் தருவதற்காக கமலநாதனின் தூரத்து உறவுக்கார மனுஷியொன்று மறுநாள் காலை பத்து மணியளவில் வருவதாயிருந்தது. அவளிடம் கண்டிப்பாகக் கேட்கவேண்டுமென்று தீர்மானித்துக்கொண்டேன்.
அந்த மனுஷி சொன்ன நேரத்துக்கு தாமதமாகவே வந்திருந்தாலும் வந்தவுடன் விறுவிறுவென காரியங்களைப் பார்க்கத் தொடங்கிவிட்டது. அந்த வேகத்தில் அவளைக் குறுக்கிட முடியாதென தெரிந்த நான், சமையல் முடிக்கிற அளவில் சமையலறைக்குள் வந்து மெதுவாக என் ஐயத்தைக் கேட்டேன்.
அவள் புருவங்களை நிமிர்த்தி என்னை ஓர் ஏறுபார்வை பார்த்தாள். அப்போது அவள் தன்னின் பாதி வயது குறைந்தாள். நான் கமலநாதன் தெரிந்துவிடாதபடி ரகசியமாக அணுகியதற்கும், ஒரு சந்தர்ப்பத்திற்குப்போல் அதுவரை காத்திருந்ததற்கும் அதுவா காரணமென்ற இளக்காரமான பார்வைதான் அது. ஆனால் அதைவிட அவசியமாயிருந்த பதில் என் கவனத்தைச் சிதறவிடவில்லை. ‘சொல்லு, எதாவது உனக்கு இதைப்பற்றித் தெரியுமோ?’ என மறுபடி வற்புறுத்தினேன்.
அவள் சுதாரித்தாலும் கையலுவலில் கவனமாகியபடியே சொன்னாள்: ‘நானறிஞ்சு இந்த இடத்தை எல்லாரும் பாம்புக் கமமெண்டுதான் சொல்லுகினம். சின்ன வயசில இந்தப் பக்கத்தால போய்வரேக்க நானும் இந்த இடத்தைப் பாத்திருக்கிறன். எல்லைப் பக்கமெல்லாம் புதரா இருக்கும். இடையிடை நாலைஞ்சு பாலை மரம் நிண்டிது. எல்லா மரத்தோடயும் புத்துகள் சுத்தி எழும்பியிருந்திது. மேட்டுப் பக்கத்தில ஒரு காட்டுமா … தள்ளி ஒரு பாலை… அந்தப் பாலையோட இருந்ததுதான் பெரிய புத்து. அந்த ரண்டு மரத்துக்கிடையில மேல தகரம் போட்ட ஒரு சின்னக் கோயில் இருந்திது. அந்தக் கோயில்ல ஒரு சாமியாரை அடிக்கடி பாத்திருக்கிறன். அங்கயே தங்கிக்கொண்டு அப்பப்ப எங்கனயும் போட்டு வாற ஆள்போலத்தான் கிடந்திது.’
‘அந்தக் கோயிலுக்கு என்ன ஆச்சு? சாமியார் எங்க போனார்?’
‘என்னைக் கேட்டு வில்லங்கப் படுத்தாதயுங்கோ. சொன்னா, பயப்பிடுவியள். ஒரு கிழமை நிக்க வந்திருக்கிறியள். பேசாம வந்த அலுவலை முடிச்சிட்டு வீட்டை போற வழியைப் பாருங்கோ’ என்றபடி முந்தானையை இழுத்து முகத்தை அழுந்தித் துடைத்தாள். பின் முகத்தில் காற்று விழ விசிறியபடி வெளியே சென்றாள்.
‘நான் பயப்பிடமாட்டன். நீ சொல்லு’ என்றபடி நான் வெளியே வந்தேன். கேற்றடியில் ஓட்டோ ஒன்று நின்றிருந்தது. கிணற்றடியில் குளித்துக்கொண்டிருந்த கமலநாதன் வந்து வெளிக்கிட்டுக்கொண்டு தன்னை ஒரு உறவினர் அவசரமாய் சந்திக்க வரச் சொன்னதாய்ச் சொல்லிவிட்டு ஓட்டோவில் ஏறிப் போய்விட்டான்.
வெளியே சென்ற லீலாவதி வீட்டின் கிணற்றடிப் பக்க கதவுக்கூடாக உள்ளே வந்திருக்கவேண்டும். வெளியிலிருந்து அவள் வருவதை எதிர்பார்த்திருந்த நான் மறுபடி உள்ளே வந்தபோது அவளைச் சமையலறையில் திடீரெனக் கண்ட நான் கொஞ்சம் திடுக்கிட்டுத்தான் போனேன். பாம்புக் கமம்பற்றிய நினைப்பில் எத்தகையவொரு சடுதியான தோற்றமும் சத்தமும் என்னைத் திடுக்கிடுத்துவதை அப்போது நான் உணர்ந்தேன்.
மறுபடி அவளிடம் சென்றேன். அவள் சிறிது கவனமிழந்த தருணமாய் இருந்திருக்கவேண்டும். அடுப்பிலிருந்து கறிச் சட்டியை இறக்கிவைக்க எனது பக்கமாய்ச் சரிந்தபோது, வாயுள் அதக்கியிருந்த வெற்றிலையை மீறி அவள் மூச்சில் சாராய வாசம் அடித்தது. அவளது முகமும் அதுவரையிருந்த இறுக்கத்தை இழந்திருந்தது. இனி அவளாகவே தெரிந்த கதை சொல்லுவாளென்ற நம்பிக்கை எனக்கு வந்தது.
என் நினைப்பு பிழைக்கவில்லை. நான் கூடத்துள் வந்தமர, ‘கமலநாதன் தம்பி இப்ப வந்திடுமா?’ என்றபடி கிட்ட வந்தாள் லீலாவதி.
‘நான் கதையைச் சொல் எண்டிறன்; நீ அவனைக் கேக்கிறாய்.’ என் குரலில் திட்டமாய்ச் சிறிது எரிச்சலைக் காட்டினேன்.
அவள் என்னெதிரே சுவரோடு சாய்ந்து குந்தினாள். அவன் இல்லாதிருந்தபோதும், எங்கே பலமாகச் சொன்னால் அவனுக்குக் கேட்டுவிடுமோ என்று பயந்ததுபோல் மெதுவாகச் சொன்னாள்: ‘நீங்கள் இதை அந்தத் தம்பியிட்ட கேக்காம இருந்திருக்க மாட்டியள். அது சொல்லாம இருக்கேக்க நான் என்னெண்டு அந்தக் கதையைச் சொல்லேலும்?’
நான் அவளைப் பார்த்தபடியே பேசாமலிருந்தேன். கதை நான் எண்ணியதுபோல் சாதாரணமானதில்லையென அந்த மௌனங்களும், பதில் சொல்ல இழுத்தடிக்கும் காலத்தின் நீட்சியும் எனக்குத் தெரிவித்தன.
சிறிதுநேரத்தில் எழுந்து வெளியே சென்றாள். முற்றத்தினோரம் வெற்றிலை துப்பியது கேட்டது. பின் திரும்பிவந்து மௌனமாய் மறுபடி வெற்றிலை போட்டாள். அவள் கதை சொல்ல ஆரம்பிக்கிறாளென்பதை நான் புரிந்தேன்.
‘அப்ப கனக்க கனக்க பாம்புகள் இஞ்ச இருந்திதுகள். நானே கண்டிருக்கிறன். எல்லையோரமாய் மரங்களிலயும், மரங்களுக்கு கீழயும், புதர்களுக்கயும்… சுத்தினபடியும் பிணைஞ்சபடியும் கிடக்குங்கள். றோட்டிலயும் கண்டபடி ஊர்ந்துகொண்டு இருக்குங்கள். ராத்திரியில அறிஞ்ச தெரிஞ்ச மனிசர் ஆரும் இந்தப் பக்கம் வரமாட்டினம். அந்தளவு பாம்புகளும் விளைஞ்ச இடம் பாம்புக் கமம்தான். அதாலதான் இதுக்கு பாம்புக் கமமெண்டு பேர் வந்திது. கமலநாதன் தம்பிக்கு இந்தக் கதையெல்லாம் தெரிஞ்சிருக்குமெண்டு நான் நினைக்கேல்ல. அது படிச்சதெல்லாம் ரவுணிலதான். இருந்ததும் அங்க தாய் தேப்பனோட. பின்னால அங்கயிருந்தே வெளிநாட்டுக்கும் போட்டுது. கன காலத்துக்குப் பிறகு இப்பதான் நானே அதைப் பாக்கிறன்.’
‘பாம்புகள் கனக்க இருந்ததால பாம்புக் கமமெண்டு பேர் வந்ததெண்டது சரிதான். நானும் அப்பிடித்தான் நினைச்சன். ஆனா அதைச் சொல்லுறதுக்கு நீ தயங்கினதுதான் எனக்குப் புதினமாய் இருக்குது.’
‘காரணமிருக்கு. நீங்கள் பயப்படுறமாதிரிக் காரணம். அது கமலநாதன் தம்பியின்ர பரம்பரையோட சம்பந்தப்பட்டிருக்கு. அந்தக் குடும்பத்துக்குமேல இப்பவும் ஒரு பொல்லாப்பு இஞ்ச… இந்த கமப் பகுதியில… இருக்கு. அதைத் தெரிஞ்சவை கனக்கப் பேர் இப்ப இஞ்ச இல்லை. இருக்கிறவையும் அதைப் பெரிசா எடுத்துக்கொள்ளேல்லைப்போல. ஆயிரம் பிரச்சினையள் இருக்கு அதுகளுக்கு.’
என்னுள் இன்னும் கொஞ்சம் புதிர்… இன்னும் கொஞ்சம் திகைப்பு… இன்னும் கொஞ்சம் பயமென அதிகரித்துக்கொண்டு இருந்தது.
நெடுநேரத்தின் பின் லீலாவதி வந்து லைற்றைப் போட்டாள்.
நான் இன்னும் அந்த இறுக்கங்கள் தளராதிருந்தபடி எதிரே றோட்டைப் பார்த்தேன். றோட்டு இருண்டு கிடந்தது. வெளிச்சத்தை விசிறியபடி ஒரு வேன் போனது. சில சைக்கிள்கள் கடகடத்தபடி சென்றன. சில மனிதர்கள் அவசர அவசரமாய் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். பார்வை விரிந்த இடமெங்கும் நெல்வயல்களாயிருந்த அந்தப் பிரதேசத்தில் இறுதியாக இருட்டு விழுந்துவிட்டிருந்தது.
அப்போது கேற்றடியில் வந்து நின்ற ஓட்டோவிலிருந்து கமலநாதன் இறங்கிவந்தான்.
இரவுச் சாப்பாடெல்லாம் முடிந்த பின் படுக்கப் போகும்போது கமலநாதன் கேட்டான்: ‘கதை கேக்கிறாங்கள்; ரண்டொரு நாளைக்குள்ள அனுப்பவேணுமெண்டாய்; எதாவது யோசிச்சியோ… எழுதினியோ… என்னமாதிரி?’
‘புதிசா ஒண்டும் வரேல்லை. பாம்புக் கதையொண்டு மனசில இருக்கு. அதைத்தான் நாளைக்கு எழுதிப் பாக்கப்போறன்.’
‘பாம்புக் கதையோ? எங்க மேலால சொல்லு பாப்பம்; நான் சொல்லுறன் கதை எப்பிடி வருமெண்டு.’
பாண்டவர்களுக்கு அளிக்கப்பட்ட பூமியான இந்திரப்பிரஸ்தத்தின் பெரும் பகுதி ஆரம்பத்தில் அடர் வனமாகத்தான் இருந்தது. அதன் பெயராக காண்டாவனம் இருந்ததை மகாபாரதம் கூறுகிறது. விலங்குகளும் பறவைகளும் புற்று ஜந்துகளும் கொண்டிருந்த சரண பூமி அது. அதை ஒருநாள் களிபொங்கிய அர்ச்சுனனும் கிருஷ்ணனும் ஒரு மூர்க்கத்தில்போல் தீக்கணைகளை எறிந்து எறிந்து சாம்பராக்கினார்கள். காற்றின் வளமறிந்து எய்த தீக்கணைகளால் எழுந்த பெருந்தீ அதைச் சரணாலயமாக்கியிருந்த அனைத்துயிரையுமே குடித்து விடாய் தீர்த்தது. தப்பியோடிய சொற்ப உயிர்களில் ஐந்து சாரங்கக் குஞ்சுகளோடு நாகராஜனும் அடங்கியிருந்தான். அடர் வனத் தீயிலிருந்து தப்பிய நாகராஜன் தன் மனத்துள் எழுப்பினான் பழி எனும் பெருந்தீ.
பாண்டவர்களின் பிரஸ்தானம் முடிந்து நீண்ட காலத்தின் பின் குரு குலத்தின் ஐம்பத்தோராவது மன்னனாக அரசேறுகிறான் பரீட்சித்து. காண்டவ தகனத்தால் தன்னுள் எழுப்பியிருந்த தீயை தருணம் அமைந்திருந்த ஒருவேளையில் விஷமாய் அவனுள் பாய்ச்சுகிறான் நாகராஜனான தட்சகன். பரீட்சித்து இறந்துபோகிறான். கொண்ட பழி நிறைவேற்றியாயிற்று.
ஆனால் பழியின் நீட்சி அத்தோடு முடிந்துவிடவில்லை. குருகுலத்து அடுத்த வாரிசான பரீட்சித்தின் மகன் ஜனமேஜயன் தன் பதின்மூன்றாவது வயதில் அரசு கட்டிலேறுகிறபோது, அவன் போரிட எதிரிகளே இருக்கவில்லை. ஆனால் அவனுள் ஒரு தீ மூண்டிருந்தது. தந்தை பரீட்சித்து ராஜாவுக்கான பழி வாங்குகை அது. அவனை சர்ப்ப சத்ரா வேள்ளி நடத்தும்படி உத்தங்கரும் தூண்ட ஜனமேஜயன் வேள்வி தொடக்குகிறான்.
எண் திசையும் பரக்கிறது வேதவொலி. ஆயிரமாயிரமாய் சர்ப்பங்கள் ஆகுதியாய் ஓம குண்டத்தில் பலியாகின்றன. ஆஸ்தாகர் பழி தகாதென ஜனமேஜயனைத் தடுக்கிறார். தட்சகன் ஓம குண்டத்தில் வீழ்வதற்கிருந்த கடைசி விநாடியில் ஜனமேஜயன் யாகத்தை நிறுத்துகிறான்.
கதையை நான் விஸ்தாரமாகத்தான் சொன்னேன். கமலநாதன் சிரத்தையோடு கேட்டுக்கொண்டிருந்தான். கதை முடிந்து பார்த்தபோது கூடத்துள் படுக்கை விரித்திருந்த லீலாவதியும் பாயின்மேலிருந்து கதை கேட்டுக்கொண்டிருந்தாள்.
என் கவனத்தைக் கலைத்து, ‘பாரதத்தில வாற காண்டவன தகனம் எனக்குத் தெரியும். ஆனா நீ சொன்னமாதிரி ஒரு கதை அதிலயிருக்கிறத நான் அறியேல்லை. கதை நல்லாய் வரும். அதுசரி… இதில உன்ர புனைவெதுவும் இருக்கோ…’ என்றான்.
‘புனைவு வந்தாத்தான் கதை…’ நான் சிரித்தேன்.
‘என்ன தலைப்பு வைச்சிருக்கிறாய்?’
‘பழியின் சுழற்சி.‘
மறுநாள் மதியம்போல் தேடிவந்த நண்பர்களுடன் நீண்டநேரமிருந்து உரையாடிய கமலநாதன் மாலையில் அவர்களுடன் கிளம்பினான். ‘வர மாட்டனெண்டு நிக்கிறாய். இஞ்ச தனிய இருந்து என்ன செய்யப்போறாய்?’ என்றான் அப்போதும்.
‘உடம்பு ஒரே அலுப்பாயிருக்கு, கமல். வேலையும் கொஞ்சமிருக்குத்தான. நான் இருக்கிறன், நீ போட்டு வா’ என நான் சொல்ல, ‘அலுப்புக்கு சாராயத்தைவிட வேற மருந்தில்லை. என்ர றூமில போத்தில்ல கொஞ்சம் இருக்கு. அடிச்சுக்கொண்டிரு; நேரம் போயிடும். பேச்சுத் துணைக்கு லீலா இருக்கிறாள்தான. நான் வர பத்து பதினொரு மணியெண்டாலும் ஆகும்’ என்றுவிட்டு போனான்.
வாய்க்காலில் குளிக்கப் போயிருந்த லீலா வந்தபோது என்னில் ஓரளவு போதை ஏறியிருந்தது. இண்டைக்கு அந்தக் கதை முழுதையும் அறியாமல் விடுறேல்ல என்ற தீர்மானத்தோடு காத்திருந்தேன்.
அவள் வந்ததும், ‘லீலா, இஞ்ச வா, இதில இரு’ என்று முன்னாலிருந்த கதிரையைக் காட்டினேன். ‘நீ அந்தக் கதையை இன்னும் முடிக்கேல்ல. கமலும் இப்ப இஞ்ச இல்லை. இனியும் நீ எதாவது சொல்லி மழுப்பி அடிக்கக்குடாது. கதையைச் சொல்லு.’
சிறிதுநேரம் அந்த இடத்திலேயே லீலா நிலைகுத்தி நின்றாள். பின் கமலநாதனின் அறைக்குப் போய்வந்து சமையலறையிலிருந்த வெற்றிலைச் சரையை எடுத்து வெற்றிலை போட்டாள். அவள் கதிரையில் வந்தமர்ந்தபோது அவளிலொரு தெளிவு கண்டேன். அவள் கதையின் ரகசிய மூடியைத் திறக்கத் தயாராகிவிட்டாளென்று எனக்குத் தெரிந்தது.
‘இது எங்கட செல்லப்பாட்டி காலத்தில நடந்ததுதான்…’
‘செல்லப்பாட்டி…?’
‘அம்மாவின்ர ஆச்சி. என்ர அம்மம்மா.’
‘ம்.’
‘அவ சொல்லித்தான் எனக்கு இந்தக் கதை தெரியும். எண்டாலும் இந்தக் கதை இந்தச் சுற்றாடல்ல இருந்த எல்லா ஆக்களுக்கும்தான் தெரிஞ்சிருந்திது. ஆனா ஒருதரும் காட்டிக்கொள்ளேல்ல. பறையிறதுமில்லை. பாம்புக் கமத்துக் கோயில்ல ஒரு சாமியார் வந்து வந்து தங்குவாரெண்டு சொன்னனெல்லோ, உண்மையில அந்தக் கமமே அவற்றதான்.’
‘ங்ஆ…?.’
‘பாம்புக் கமத்து புத்திலயும், கோயில்லயும், மரத்திலயும், வேலியோரத்திலயும், றோட்டிலயும்… எங்கயும் பாம்புகளாய்த்தான் இருந்திது. றோட்டில வழிஞ்சு போகேக்க கன பாம்புகளை பாட்டியோட போய் வாற நேரத்தில நானும் கண்டிருக்கிறன்.’
‘சரி.’
‘அப்ப… உழவு வேலையள் செய்யிறதுக்கெண்டு பக்கத்துக் கமத்தில கமலநாதன் தம்பியின்ர தாத்தா குடும்பமாய் வந்து கமக் கொட்டில்ல தங்கியிருந்தார். ஒருநாள் முத்தத்தில நிண்ட அவற்ர மனுஷியை பாம்பு கொத்தியிட்டுது. மனுஷியும் கனநேரம் தாக்குப் பிடிக்கேல்லை. விஷகடிப் பரியாரியைக் கூட்டிவாறதுக்குள்ள செத்துப்போச்சு. கமலநாதன் தம்பியின்ர தாத்தா அப்ப நல்ல இளந்தாரி. நல்ல தண்டுதரமான ஆளும். மனுஷி செத்த துக்கத்தில வெறியைப் போட்டிட்டு அக்கம் பக்க வீடெல்லாம் போய், இனி அந்தக் கோயிலும் இருக்கக்குடாது, புத்தும் இருக்கக்குடாதெண்டு சொல்லியிட்டு, அண்டு பின்னேரம் சவம் சுடலைக்குப் போறதுக்குள்ள பாம்புக் கமத்திலயிருந்த அந்தளவு புத்துகளையும் ட்றாக்ரரைக் கொண்டுபோய் கிண்டிக் கிளறி இடிச்சுத் தள்ளிப்போட்டார்.’
‘கடவுளே!’
‘புடைச்சதும், நொடிச்சதும், குஞ்சும் குருமனுமாய்… ஆயிரம் பாம்பு அந்தாளின்ர விசரில துண்டு துண்டாய்க் கிடந்துதாம். காகம்கூட வந்து ஒரு துண்டைக் கொத்திப் பாக்கேல்லையாம். வேற கமத்து ஆக்கள் வந்துதானாம் மண்ணைப் புரட்டிப் புரட்டி பாம்புத் துண்டுகளை எடுத்து நெருப்பு மூட்டி எரிச்சினம்.’
‘…’
‘அதோட மனிசன் நிக்கேல்லையாம். கோயில்ல இருந்த சாமி கையெடுத்துக் கும்பிட்டு மண்டாடியும் கேக்காம கோயிலையும் இடிச்சுத் தள்ளி, அந்தாள் நட்டுவைச்சுக் கும்பிட்ட நாகதம்பிரான் கல்லையும் கிண்டி எறிஞ்சுபோட்டுதாம். சாமியும் மனமொடிஞ்சு போய் அங்கனயே கிடந்து கொஞ்சக் காலத்தில செத்துப்போனார்.’
நான் மௌனமாய் அல்ல, ஓர் உறைவில் இருந்திருந்தேன். காண்டவ வனம் தகனமாகியது என் மனத்துக்குள். ஆயிரமாயிரம் விலங்குகள், பறவைகள், ஊர்வனவென எல்லாம் எரிந்து நீறாகின்றன. தட்சகன் அந்த அனலிடையிலிருந்து தப்பியோடுகிறான். ஓடிய அவனுக்குள் தீ மூண்டிருக்கிறது.
லீலாவதி எழுந்து மறுபடி அறைக்குப் போனாள். பின் கதவோரம் நின்று, ‘உங்களுக்கும் கொண்டுவரட்டோ…?’ என்றாள்.
நான் தலையசைத்தேன்.
‘அதுசரி, என்னத்துக்கு நீ கமலநாதன் தம்பி வருத்தப்படுமெண்டு சொன்னனீ? இதில அவன் வருத்தப்பட என்ன இருக்கு?’
‘தாத்தா இப்பிடி பயித்தியம்மாதிரி நடந்தாரெண்டா, அதுக்கு மனவருத்தமாய் இருக்கும்தான?’
நான் எழுந்துபோய் அவளது பக்கத்துக் கதிரையில் அமர்ந்து அவளது முகத்தைப் பிடித்துத் திருப்பினேன். ஏதோவொரு சந்தர்ப்பத்தில் அப்படி நடந்துவிடவேண்டுமென்று உள்ளே ஒரு திட்டமிருந்திருந்ததோ எனக்குள்? ஆனால் அது என் இரண்டாவது கரிசனம்தான். நான் சொன்னேன்: ‘லீலா, இன்னும் நீ இந்தக் கதையை முழுசாய் முடிக்கேல்லையெண்டு எனக்குத் தெரியும். மறைக்காமல் சொல்லு. நான் ஒருதரிட்டயும் போய் இதைச் சொல்லப்போறேல்லை. கமலநாதனிட்டயும் சொல்லமாட்டன்.…’
நான் எழுந்தேன். அவள் தடுத்தாள். ‘நான் என்னத்தைச் சொல்ல?’ என்று சிறிதுநேரம் தடுமாறினாள். பின் சிறிது சுணங்கிவிட்டு, ‘அந்தளவில்லை கதை’ என்றாள். ‘கோயிலை இடிக்காமல் தடுத்த சாமியை, கமலநாதன் தம்பியின்ர தாத்தா வேணுமெண்டே ட்றாக்ரரை ஏத்திச் சாக்கொல்லிப்போட்டார்.’
‘வேணுமெண்டே…?’
‘அதுதான். சாமியின்ர தூரத்துச் சொந்தமெண்டிருந்த ரண்டு மூண்டு பேரைத் தேடிப்பிடிச்சு கொஞ்சக் காசைக் குடுத்து கமத்தை தன்ர பேருக்கு மாத்தியிட்டாராம் அவர். அவயின்ர இப்பத்த வாழ்க்கை அதுக்குப் பிறகுதானாம் துவங்கிச்சுது. ஒரு கமம், பிறகு இன்னொரு கமம்… இப்பிடியே அவற்ர காலத்திலயிருந்து அவை பெரிய காணிக்காறர் ஆயிட்டினம். பிறகென்னவோ உழைச்சுத்தான் சேர்த்திருக்கினம்போல. ஆனா முதல் கமத்தை விதம் எடுத்த பழியாய் இப்பவும் இருக்கு.’
நீண்டநேரமாயிற்று அந்த ஸ்திதி என்னில் கலைய. ஆனாலும் ஒரு வார்த்தை என்னில் துளிர்க்கவில்லை. கடைசியில் இன்னொரு ஐயம் என்னில் கிளர்ந்தது. ‘நான் பயப்பிடுவனெண்டு சொன்னியே, ஏன்?’
லீலா மௌனமாயிருந்தாள். பிறகு சளிந்து கதிரையில் கொள்ள இருந்தாள். ‘ஏனிண்டா… அந்தக் கோயிலும் புத்தும் இருந்த இடத்தில கட்டின வீட்டிலதான் இப்ப நாங்கள் இருந்துகொண்டிருக்கிறம்.’
என் உடம்பு பதறியது.
கதை எப்படியோ புற்றுகளை அழிப்பதில் தொடங்கி சாமி கொலையில் முடிந்திருந்தாலும், இவை எதனிலும் அது மையங்கொண்டு இருக்கவில்லையென எனக்குத் தோன்றியது. பாம்புகளின் அழிப்பிலேதான் அது இருந்திருக்கிறது. அதனால்தான் புற்றுகள் அழிக்கப்பட்டு, பாம்புகள் வதம் செய்யப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட வீட்டென்ற நினைப்பு என்னைப் பதறவைத்திருக்கிறது.
‘சுழல் வேட்கை’ கதையில் நாகராஜனான தட்சகன் காண்டவ தகனத்திலிருந்து தப்பியோடியதுபோலவே, சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னான கமலநாதனின் தாத்தாவின் அழிப்பிலிருந்தும் தட்சகன் தப்பியோடியதாகவே நான் உணர்ந்துகொண்டிருந்தேன்.
என் பதற்றத்தைக் கண்ட லீலா எழுந்து வந்து, ‘என்னைய்யா… என்ன செய்யுது?’ என என்னை உலுக்கினாள்.
அவளது ஸ்பரிசம் உணரும் நிலையில் நான் இல்லை. ‘ஒண்டுமில்லை. சாப்பிட்டிட்டு நீ போய்ப் படு.’
அப்போது கமலநாதன் வந்தான். பார்க்க வேண்டியிருந்த நண்பர்களையும், உறவினர்களையும் பார்த்தாகிவிட்டதாகச் சொல்லி ஆயாசமாய் கதிரையில் சாய்ந்தான்.
‘அப்ப… காலமை நாங்கள் கொழும்புக்கு வெளிக்கிடலாம்…’
‘ஏன்? யாழ்ப்பாணம் போகவேணும்… வேலையொண்டிருக்கு எண்டாய்.’
என்னால் எப்படி என் மனநிலையை அவனுக்கு விளங்கப்படுத்த முடியும்? பாம்புக் கமத்தைச் சூழ எங்கேயும் ஒரு புற்று அப்போது இருந்திருக்கவில்லை. ஒரு பாம்பை கண்ணால் கண்டதுமில்லை. இந்தக் கமத்தின் பெயருக்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது, ஒரு பழியை நிறைவேற்ற தட்சகன் இன்னும் உயிரோடு காத்திருக்கிறானென்றால் கமலநாதன் சிரிக்கமாட்டானா? அதனால், ‘அதுக்கு இப்ப அவசரமில்லை. ஆறுதலாய் வந்து அதை நான் பாத்துக்கொள்ளுறன்’ என்றேன்.
‘அப்ப… நாளைக்குப் பின்னேரம் பஸ்சுக்கு ரிக்கற் புக் பண்ணுவம்’ என்றுவிட்டு கமலநாதன் படுக்கப் போனான்.
மின் விளக்கு எரிந்தகொண்டிருந்தது. மேலே ஃபேன் சுழன்றுகொண்டிருந்தது. அப்போதுதான் கவனித்தேன், இன்னும் லீலா சுவரோடு சாய்ந்து என்னைப் பார்த்தபடி இருப்பதை.
காலையில் நேரஞ்சென்று எழுந்து வெளியே வந்து, லீலா கொடுத்த தேநீரை வாங்கிக் குடித்துக்கொண்டிருக்கையில் கமலநாதன் எழும்பிவிட்டானாவெனக் கேட்டேன். இன்னுமில்லை என்றாள்.
எழும்பி வரட்டுமென இருக்க முடியவில்லை. மனத்துள் சஞ்சலம் அடைந்து கிடந்தது. எழுந்துசென்று கதவைத் தட்டினேன்.
உள்ளே பூட்டப்படாதிருந்த கதவு தானாய்த் திறந்தது. கிழக்குப் பக்கத்திலிருந்த ஜன்னலூடு வெய்யில் கொளகொளவென உள்ளே பாய்ந்துகொண்டிருந்தது.
அப்போதைக்கு அவன் எழும்பும் அறிகுறியெதுவும் தோன்றாமல் போக, வாசலில் நின்றபடி கூப்பிட்டேன்.
அவனில் அசைவில்லை. மனத்தில் பதற்றம் விழுந்தது. அவசரமாய் உள்ளே சென்று அவனை உசுப்பி, ‘கமல்… கமல்…’ என அழைத்தேன். அசைவு தோன்றாதது மட்டுமில்லை, உடம்பில் உயிர்ச் சுரணையும் தென்படவில்லை. மோசம் நடந்துவிட்டது. நான், ‘ஐயோ…!’வென அலறினேன்.
உள்ளே வந்த லீலா கமலநாதனைப் பார்த்துவிட்டு, ‘ஐயோ, இப்பிடி நடந்திட்டுதே! தம்பீ…! தம்பீ…!’ என்று தலையிலடித்து ஓலமிட்டாள்.
நான் சிறிதுநேரத்தில் என் உறைவு தணிந்து ஜன்னலை நோக்கத் திரும்பினேன். தன்னை வளைந்த கம்பிகளில் சுற்றிக்கொண்டிருந்த ஒரு நாகம், நான் தன் பக்கம் திரும்புவது தெரிந்து படத்தை விரித்தது.
– நடு இணைய இதழ், மார். 2019