கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 2, 2021
பார்வையிட்டோர்: 2,879 
 
 

(1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குமாரசாமி மாஸ்டர் அற்புதமான சங்கீத ஞானம் மிக்கவர். கர்நாடக இசையென்றாலுஞ் சரி, ஹிந்துஸ் தானி இசை என்றாலுஞ் சரி, மெல்லிசை என்றாலுஞ் சரி அவை எல்லாம் அவருக்கு மிக அற்புதமாகக் கைவரும்.

சங்கித பூஷணம் என்றும், சங்கீதத்தில் டிப்ளோமா என்றும் சோடிவிக்கட்டுகள் பெற்ற மிகப் பலர் எவ்வித கலாஞானமும் அற்ற ஞான சூனியர்களாகவே இருக்கிறார்கள்.

எந்தத் துறையிலுஞ் சரி ஒருவனுக்குக் கலாஞானம் என்பது இயற்கையாகவே அமைந்த வித்துவத்தின் விசாலத்தால் ஏற்படமுடியுமே தவிர சேர்டிவிக்கட் படிப்பினால் மட்டும் ஏற்பட இயலாதல்லவா?

குமாரசாமி மாஸ்டரின் சங்கீத ஆற்றல் என்பது அவருக்கு இறைவன் அளித்த கொடையாகும்.

அவர் நெஞ்சிலே கோகிலவாணி குடியிருந்தாள். அவர் அற்புதமான தன் குரலினால் தியாகராஜர் கீர்த்தனைகளை இராமலிங்க சுவாமிகள் பாடல்களை, சுத்தானந்தர் சாஹித் தியங்களைப் பாடினால் கேட்பவர்கள் ஆனந்தக் கனவுலகில் சஞ்சாரம் செய்வார்கள்.

இத்தகைய திறன் இருந்தும் குமாரசாமி மாஸ்டருக்கு ஒரு பெருங்குறை – ஆம். அவருக்கு வாரிசாக விளங்கக் கூடிய சிறப்புடைய ஒருவன் – ஆத்ம சீடனாகச் சுடர்விடக் கூடிய ஆற்றல் மிக்க ஒருவன் இன்னமும் அமையவில்லை.

ஒரு நாள் –

மருதனார் மடத்துச் சந்திக்கருகில் அமர்ந்திருந்து வேண்டுவார்க்கு வேண்டுவன ஈந்தருளும் பல்லப்பை வைரவர் கோவிலுக்கு ஆராதனைக்குப் போனார் குமாரசாமி மாஸ்டர், அங்கே –

இருபது வயது மதிக்கத்தக்க லாவண்ய மூர்த்தியான ஒரு இளைஞன் தன்னை மறந்து இராமலிங்கர் அருட்பாவிலிருந்து “உனக்கும் எனக்கும் இசைந்த பொருத்தம்” என்று தொடங்கும் பாடலை உணர்ச்சியோடு பாடிக்கொண்டிருந்தான்.

குமாரசாமி மாஸ்டர் அப்படியே மெய்சிலிர்த்துப் போனார்.

“ஆஹா, என்ன நேர்த்தியான குரல்… எத்துணை திவ்யமான பாவம்…”

குமாரசாமி மாஸ்டர் அந்த இளைஞனின் இன்பகானத்தில் இதயமிழந்து நின்றார்.

அந்த மனமோகன குரலுக்குரியவனின் தேவசங்கீதம் ஓய்ந்தது.

“தம்பி நீ யார்?…இத்துனை சிறப்பாகப் பாடுகிறாயே?”

பாடிய இளைஞனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இத்தகைய பாராட்டைப் பெற்ற அவன் பணிவோடு குமாரசாமி மாஸ்டரை வணங்கினான்.

அன்றே அவரின் ஆத்ம சீடனானான் அந்த இளைஞன். அவன் பெயர் ஜெகன்.

***

குமாரசாமி மாஸ்டரிடம் ஜெகன் வந்து சேர்ந்து இரு வருடங்கள் ஆகிவிட்டன. அவர் நிழலில் தன் கலாஞானத்தைப் பூரணமாக மெருகிட்டுக் கொண்டான் அவன்.

கோவில் திருவிழாக்கள், மெல்லிசை நிகழ்ச்சி அரங்குகள் எங்கணும் ஜெகனின் மதுரக்குரல் ஒலித்தது.

ஜெகனுக்கு எத்துணை பாராட்டுக்கள் குவிந்தென்ன – செல்வாக்குப் பெருகியென்ன? அவனுக்கு இதயசாந்தி அவனுடைய குன்றாத அன்புத் தெய்வமான பல்லப்பை வைரவரைத் தினசரி வணங்கிய போது தான் கிடைத்தது.

அவன் குமாரசாமி மாஸ்டருக்குச் சீடன் மட்டுமல்ல பாரதிக்குக் கண்ணன் சீடனாய் – நண்பனாய் – சேவகனாய் தெய்வமாய் இருந்தது போல அவனும் அவருக்கிருந்தான்.

வைரவர் கோவில் வருடாந்தத் திருவிழா வர இன்னமும் இரு வாரங்களே இருந்தன.

ஜெகன் இந்த முறை வைரவர் திருவிழாவை மிகச் சிறப்பாகச் செய்யக் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தான்.

ஒரு நாள் –

கொழும்பிலிருந்து வந்த ஸ்கைலைட் இசைக்குழுவினரின் கார் குமாரசாமி மாஸ்டர் வீட்டுக்கு முன் நின்றது.

பிரமாண்டமான அந்தக் காரிலிருந்து ‘மத்தியானச் சாப்பாட்டுக்கு ஆட்டுக் கறியா, மாட்டுக் கறியா?’ பாட்டுப் புகழ் ‘பஞ்’சும் அவனைப் பெற்ற படுபாவிகள் ‘பஞ்சலிங்கம்’ என்று தான் அவனுக்குப் பெயரை வைத்தார்கள். நவீன இசைத்துறையில் நுழைந்த பின்பு அவன் தன் பெயரை ‘பஞ்’ என்று சுருக்கிக் கொண்டான். அவனுடைய சகபாடிகளும் இறங்கிக் குமாரசாமி மாஸ்டர் வீட்டுக் ‘கேட்’டைத் திறந்து உள் நுழைந்தார்கள்.

“நீங்கள் தான் பாடகர் ஜொனா?”

“ஆம்” என்றுரைத்த ஜெகன். “வாருங்கள்; அமருங்கள்” என்று சொல்லியபின் இராமலிங்கரின் ‘அருட்பா’ நூலில் லயித்திருந்த குமாரசாமி மாஸ்டரை ‘மாஸ்டர்’ என்று அழைத்தான்.

வந்தவர்களை அமைதியாகப் பார்த்துக் கைகூப்பினார் அவர்.

“மிஸ்டர் ஜெகன், உங்கள் குரல் மிக அற்புதம். கடந்த ஞாயிறு ‘பாட்டு முடியும் முன்னே’ என்ற கவிஞர் கம்பதாஸன் பாடலை நீங்கள் உள்ளூர் மெல்லிசை அரங்கொன்றில் அற்புதமாகப் பாடியுள்ளீர்கள். அந்தப் பாடல் என் நண்பன் ஒருவன் ‘டேப்’ பண்ணி எனக்குப் போட்டுக்காட்டினான். நீங்கள் நினைத்தால் ஈழத்தின் சிறந்த நவீன இசைப் பாடகராக வரமுடியும்…”

ஜெகனும், குமாரசாமி மாஸ்டரும் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

பஞ் தொடர்ந்தான்…

“நீங்கள் கொழும்பு வந்தால் ஒரு நாளைக்கு இரண்டாயிரம் வரைகூடச் சம்பாதிக்கலாம்…பேர், புகழ் உங்கள் காலடியில் குனியும்…”

‘பஞ்’சின் வார்த்தைகள் ஜெகனை வியப்பிலாழ்த்திய வண்ணமே இருந்தன. இவ்வளவு காலமும் தன் குரல் இனிமையைக் கொண்டு ஒருசில நூறு ரூபாய்களைத்தான் அவன் உழைத்தான். அவனுக்கு ‘ஒரு நாளைக்கு இரண்டாயிரம்கூடச் சம்பாதிக்கலாம்’ என்று பஞ் சொன்னதை நினைக்க நினைக்க ஆனந்த சுகமாய் இருந்தது.

இந்தக் கணமே கொழும்பு போகவேண்டுமெனத் துடி துடித்தாள் அவன்.

ஆர்வமுடன் தன் குருநாதர் குமாரசாமி மாஸ்டரின் முகத்தைப் பார்த்தான்.

அவர் முகம் மலர்ச்சியற்றுக் கிடந்தது. என்ன இது?..மாஸ்டர் என் முன்னேற்றத்தை விரும்பவில்லையா?

“மிஸ்டர் ஜெகன்; உங்கள் முடிவென்ன? ஒரு குறுகிய உலகத்திலிருந்து வாழ்வின் பிரகாசத்தைச் சந்திக்காது சாகப்போகிறீர்களா? அல்லது வெற்றியின் ராஜபாட்டையில் வீறு நடைபோடப் போகிறீர்களா?”

ஜெகன் குழம்பினான்…

அவன் கொழும்பு போய் முன்னேறுவதைத் தன் குருநாதர் விரும்பவில்லை.

ஜெகனோ ஒரு முடிவுக்கு வந்து விட்டான்.

“பஞ், நான் தங்கள் இஷ்டப்படி கொழும்பு வருகிறேன். தங்கள் குழுவினருடன் சேர்ந்து கொள்கிறேன்”.

ஜெகனின் வார்த்தைகள் குமாரசாமி மாஸ்டரை அதிர்ச்சியில் ஆழ்த்தின.

“ஜெகன், அபூர்வமாக ஒருவனுக்குக் கிடைக்கக்கூடிய கலா ஞானத்தைப் பெற்ற நீ, ஒரு மலிவான பகட்டு உலகின் முன் உன் ஞானத்தைப் பலியிடத் துணிந்து விட்டாயா?”

குமாரசாமி மாஸ்டரின் கண்கள் கடலாகின.

ஜொன் அதனைச் சட்டைசெய்யாதவனாக “பஞ், நான் எப்போது கொழும்பு வரவேண்டும்”என்றான். வெற்றிப் பூரிப்பிலிருந்த மிஸ்டர் பஞ் “இன்றே – இப்போதே” என்றான்.

ஜெகன் தனது உடைகளை அவசர அவசரமாகச் சிறிய பழைய சூட்கேஸில் அடைத்துக்கொண்டு கிளம்பத் தயாராகிவிட்டான்.

குமாரசாமி மாஸ்டர் கல்லாகி நின்றார்.

ஜெகன் அவரை வணங்கிவிட்டு பஞ்சினதும் அவன் குழுவினரதும் பின்னால் நடந்தான்.

***

ஜெகனின் வாழ்க்கைப் பாதை புதிய திசையில் சுழன்றோடியது. ஈழத்தின் முன்னணி நவீன இசைப்பாடகனாக அவன் புகழ்பெற்றான். பணம் குவிந்தது.

அவனுடைய வழிபாட்டுத் தெய்வமான மருதனார் மடத்துப் பல்லப்பை வைரவரின் ஞாபகங்கள் – அவனை ஒரு மனிதனாக்கிய-கலைஞனாக வளர்ச்சிகாண வைத்த குருநாதர் குமாரசாமி மாஸ்டரின் நினைவுகள் எல்லாம் அவன் வரைவில் மறக்கப்பட்ட விஷயங்களாகிக்கொண்டு வந்தன.

இடைக் காலத்தில் தன் குருநாதருக்கு ஏதோ ஒரு உந்துதலால் இரண்டாயிரம் ரூபா பணம் அனுப்பினான்.

அவன் அனுப்பிய பணத்தைக் குமாரசாமி மாஸ்டர் உடனே திருப்பி அனுப்பியதோடு கீழ்வரும் குறிப்பையும் எழுதியிருந்தார். “உனது ஆத்மாவை விற்று – கலாஞானத்தைத் துவம்சம் செய்து நீ உழைத்த காசு எனக்குத் தேவையில்லை.”

செய்தியைப் படிக்கப் படிக்க குமாரசாமித் மாஸ்டர் தன் வாழ்வின் மிகப்பெரிய எதிரி என்ற எண்ணம் ஜெகனுக்கு ஏற்பட்டது.

அவன் கொழும்பிலே நல்ல வீடு, பெறுமதியான சார், அழகுரம்பைகளின் நட்புகள் இப்படியான வாய்ப்புகளைப் பெற்று உல்லாஸ உலகின் உச்சிக்கே போனான்.

மதுப் பழக்கம் வேறு அவனைப் பலமாகப் பற்றியிருந்தது. அன்று ஒரு திங்கட்கிழமை காலை பத்தரை மணி ஆகியும் அவன் படுக்கையைவிட்டு எழும்பாதவனாக முதல் நாள் நடந்த இசை நிகழ்ச்சியில் ‘கவிச்சக்கரவர்த்தி கம்பரையே தன் கவித்துவத்தால் வீழ்த்தக்கூடிய கவிஞர் குதிரைக் கொம்பன்-(அவர் புதுமைக் கவிஞர் அல்லவா? அதனால் தான் அப்படியான ஒரு புரட்சிப் பெயரை சூட்டிக்கொண்டார்) எழுதிய ‘ஹலோ டார்லிங் ருக்மணி’ பாடலைத் தான் பாடி ஆடிய போது அதைக் கண்ட ஆவேஷத்தில் தன்னைக் கட்டியணைத்த இளம் பெண்களின் அழகிய முகங்களை எண்ணியவாறு இருந்தான்.

“ஐயா, ஐயா” வேலையாள் கூப்பிட்டான்.

“கதவைத் திறந்து கொண்டு வா”

“ஐயா உங்களுக்கு தந்தி வந்திருக்கு”

தந்தியை வாங்கிப் பிரித்தான் ஜெகன்,

குமாரசாமி மாஸ்டர் மரணம். உடன் வருக
– நல்ல முத்துப் பாடகர்.

சில நிமிஷங்கள் ஜெகனுக்கு என்னவோபோல் இருந்தது. நிச்சயம் யாழ்ப்பாணம் போகவேண்டும் எனத் துடித்தான்.

ஆனால்,

“இன்றிலிருந்து தொடர்ந்து மூன்று தினங்கள் அவன் கொழும்பில் நடக்கும் மாபெரும் இசை நிகழ்ச்சிகளில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும். அதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு ஐயாயிரம் ரூபா அட்வான்சும் வாங்கிவிட்டான்.

என்ன செய்வது?

இசை நிகழ்ச்சிகளைப் புறக்கணித்தால் கௌரவ பங்கம், ரசிக எதிர்ப்பு, பணக் கஷ்டம் எல்லாம் ஏற்படும்.

ஜொன் ஒரு முடிவுக்கு வந்தவனாக இரண்டாயிரம் ரூபா குருநாதரின் அந்திமக் கிரியைகளுக்காக நல்ல முத்து பாடகர் – அவர் குமாரசாமி மாஸ்டரின் உறவினர் – பேருக்கு அனுப்பிவிட்டு மனத்தின் துயரை மறைக்க ஜின் அருந்தத் தொடங்கினான்.

***

இருவருடங்கள் ஓடுகின்றன. காலம் ஒரு விசித்திரக் கோமாளி, அவன் விளையாட்டை யார் அறிவார்?

பிரமாதமாக விளம்பரம் செய்யப்பட்ட ‘ரேகா மியூசிக் நைட் நிகழ்ச்சியில் பாடகர் ஜெகன் கலந்து கொள்ளாதது அவன் பக்தகோடிகளுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

“பாடகர் ஜெகன் தொண்டை வலியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்”.

இந்தச் சேதி எல்லாரையும் திகைக்க வைத்து விட்டது.

***

“மைடியர் மனத்தைத் தேற்றிக் கொள்ளுங்கள் – உங்களுக்கு தொண்டையில் புற்றுநோய் கடுமையாகப் பரவ ஆரம்பித்திருக்கிறது”

“டொக்டர்…!”

ஜெகனுக்கு உலகம் இருண்டது போலிருந்தது.

ஜெகன் புற்று நோயிலிருந்து விடுபட மஹரகம தொடக்கம் வேலூர் வரையும் போய் ஸ்பெசலிஸ்டுக்களைக் கலந்தான், பலன் தான் பூஜ்யம்.

செத்த பிணத்தின் தலையிலிருந்து பேன்கள் இறங்கி விடுவதைப்போல அவனுடைய பக்த கோடிகள் – இலையுலக சகபாடகர்கள் எல்லாரும் விலகி வெகுதூரம் போய் விட்டார்கள்.

ஜெகன் ஏகாந்த உலகின் பிரஜையானான்.

கடந்த சில வருடங்களாகக் காணப்பட்ட அவனுடைய புதிய பாதையின் வெற்றிகளும், பெருமிதங்களும் மரணித்து விட்டன.

தன் இஷ்ட தெய்வமான பல்லப்பை வைரவரை வணங்கி வாழ்ந்த நாட்கள்…குருநாதர் குமாரசாமி மாஸ்டரின் அன் பின் நிழலில் வாழ்ந்த இதமான நாட்கள் – ஆத்மபாவத் தோடு பல்வேறு சாஹித்தியங்களை மதுரமாகப் பாடிக்களித்த இணையற்ற நாட்கள் அவன் நினைவில் மின்னின.

தன் குருநாதருக்குச் செய்த துரோகத்திற்கு – இஷ்ட தெய்வத்தைப் புறக்கணித்த அநியாயத்திற்கு – கலாஞானத்தை அங்காடி ரசிகர்களின் திருப்திகளுக்காகப் பலியிட்ட பாவத்திற்கு உரிய பரிசு ஜெகனுக்குக் கிடைத்து.

அவன் ஆத்மா விழித்துக்கொண்டது. இனி அவன் தன் சீவியம் கொஞ்ச காலமே என்ற போதும் – யாழ் நகரிலே தன் குருநாதர் குமாரசாமி மாஸ்டர் நினைவாக மாபெரும் இசை மண்டபம் எழுப்புவான். அவன் இஷ்ட தெய்வமான பல்லப்பை வைரவர் கோவிலைக் கலை மெருகோடு புதுக்கிக் கட்டுவான். போலிக் கலைமயக்கிலே தறி கெட்டுப் போகும் புதிய தலைமுறையினர் உண்மைக் கலையின் உயர்வைத் தரிசிக்க வழி செய்வான்.

அவன் நெஞ்சின் மேடையிலே பல்லப்பை வைரவர் ஆசீர்வதிக்கும் காட்சி தெரிகிறது. குருநாதர் குமாரசாமி மாஸ்டர் வாழ்த்துச் சொல்லும் கோலம் மலர்கிறது.

அவன் விழிவெடித்த ஆனந்தக் கண்ணீர்த்துளிகள் கன்னங்கள் வழியாகப் பெருக்கெடுத்தோடுகிறது.

– விஜயேந்திரன் கதைகள், முதற் பதிப்பு: ஜனவரி 1976நயினார் பிரசுரம், மாவிட்டபுரம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *