தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 6, 2013
பார்வையிட்டோர்: 8,063 
 
 

கதிர்வேலு பரங்கிமலை ரயில் நிலையத்தில் இறங்கியபோது மாலை மணி ஐந்தரை. சாம்பார் வடை, டீ சாப்பிட்டார். சீக்கிரம் வீட்டிற்குப் போய் ஆகப்போவது ஒன்றுமில்லை. சாவகாசமாக பத்திரிகைகள் விற்கும் கடை முகப்பில் மாலை தினசரிகளின் போஸ்டர்களைப் படித்தார்.

குட்ரோவிச்சி நிரபராதி! போஃபர்ஸ் பீரங்கி கொள்முதல் விஷயத்தில் அவரை இந்தியா வரவழைத்து விசாரிப்பது தேவையற்றது-பிரதமர் திட்டவட்டம்

2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டால் தமிழனின் பெருமை உலக அளவில் உயர்ந்துள்ளது- கட்சிப் பிரமுகர் பெருமிதம்

நாடாளுமன்றத்தை குண்டு வீசித் தகர்க்க முயன்றவரின் மரண தண்டனை ரத்து பற்றி ஜனாதிபதி பரிசீலனை…

பல்லிஅவ்வளவு தான் இன்றைய செய்திகள் என்று ரயில் நிலைய பிளாட்பாரத்தில் நடக்க ஆரம்பித்தார் கதிர். ரயில்நிலையத்துக்கு வெளியில் வாகனப் பாதுகாப்பு கீற்றுக் கொட்டகையில் இவரின் டூ வீலர். தினமும் அவர் பணி முடிந்து வீடு திரும்ப இரவு எட்டு மணி ஆகும். இன்று தான் மஞ்சள் வெயில் மறையும் நேரத்தில் வருகிறார்.

“”ஐநூறு ரூவா பணம் கட்றியா? ஜெயிலுக்குப் போறியாங்கிறத நீயே முடிவு பண்ணிக்க…”

டூட்டி ஸ்டேஷன் மாஸ்டர் அறையைக் கடக்கையில் அங்கே சிறு கூட்டம். கதிர்வேலு நின்று பார்த்தார்.

“”அய்ய! இது இன்னா அநியாயமா கீது? நா பெரிய கொல குத்தமாப் பண்ணீட்டேன்? இனிமே இது மாதிரி செய்யாதடி, போடின்னு என்னை எச்சரிக்கைப் பண்ணி விரட்டி விடு சாரு. அய்நூறு, ஆயிரம்கற?”

“”நீ தப்புப் பண்ணிட்டு எங்க கிட்ட வாக்குவாதம் வேறயா? கூச்சல் போடாம இந்த ரூம்லயே இரு. போலீஸ் வரும் உன்னை இட்டுனு போவ”

பொங்கலுக்கு அரசாங்கம் தந்த இலவச சேலை உடுத்திய ஐம்பது வயதுப் பெண். நெற்றியின் உச்சியில் குங்குமம். கறுப்பு நிறம். நடுத்தர உடல்வாகு. வெற்றிலைக் காவிப் பற்கள். அவள் கையில் மஞ்சள் துணிப்பை ஒன்று.

“”சாரூ, காளிகாம்பா தரிசனத்துக்குப் புறப்பட்டேன். என் மருமவ மாசமா இருக்கா. அவளையும் அவ ஆத்தாளையும் கோயில்ல வெயிட் பண்ணச் சொன்னேன். அவங்க எனக்காகக் காத்திருப்பாங்க. போய் ஒரு அர்ச்சனைப் பண்ணி வரக் கிளம்பியவளை இப்படி மடக்கிப் போட்டுட்டியே!”

டிக்கெட் கலெக்டர்கள் இரண்டு பேர் அவளைச் சுற்றி நின்று கேலியாகச் சிரித்தனர். “”சாமி கும்பிட வந்ததா ஏன் புளுகறே? சாமி கண்ணைக் குத்திடும். பக்தி உள்ளவ இப்படி தப்பு செய்யலாமா?”

“”அக்காங், பொல்லாத தப்பு கண்டுபிடிச்சுட்ட! தினோம் ரயில்ல டிக்கட் வாங்காம நூறு பிச்சக்காரன் பாட்டுப் பாடி நம்ம காதை அறுக்கறான், அவனைப் புடிக்க மாட்டீங்க. நா ஒயுங்கா டிக்கெட் வாங்கினேன். என்னை இங்க உக்காத்தி பேஜார் பண்றியே!”

“”நீ எந்த கிளாஸ் டிக்கட் வாங்கி எந்த கிளாஸ்ல ஏறின? உன் அப்பன் வூட்டு ரயிலா?”

“”பிளாட்டுவாரத்ல நுழைஞ்சேன். ரயில் வந்திட்டுது. கிளம்பிடுங்ற பயத்துல ஒரு பொட்டீல ஏறினேன். பாத்தா அது ஃபஸ்ட்லாசு. சரி அடுத்த ஸ்டேசன்ல மாறிடுவோம்னு…”

“”நாங்க உன்ன செக் பண்ணலேன்னா பீச் வரை குசாலா ஃபஸ்டு கிளாஸ்லயே போயிருப்ப!”

“”சத்தியமா நா அப்படிப்பட்டவ இல்ல சாரு. என்னைப் போக விடு”

“”நீ பணம் கட்டாம இங்கேந்து போக முடியாதும்மா. ஜட்ஜ் வருவாரு. போலீஸ் வரும். அதுவரை இங்கேயே சத்தம் போடாம இரு”

“”சார், என் சுருக்குப் பைல இருபத்தி அஞ்சு ரூவா இருக்குது. அர்ச்சனைத் தட்டுக்குப் போக அஞ்சு ரூபா மீறும். அத சூடத் தட்டுலப் போட்ருவேன்”

“”நல்லதாப் போச்சி! எடு! எல்லாரும் டீ சாப்டுவோம். இவ்வளவு நேரம் உன்னோட கத்தி எங்க தொண்டையும் வறண்டு போச்சு. வேண்ணா ஃப்ரீயா ஒரு ஃபோன் பண்ணிக்க. உன் வீட்லேர்ந்து இங்க வந்து பணம் கட்டி உன்னை மீட்டுட்டு போவட்டும்”

“”அநியாயம் சார் இது. இவன்களுக்கு கேஸ் புடிக்க துப்பு இல்ல. கிடைச்ச ஒரு படிப்பறிவு இல்லாத பொம்பளையை இப்படி வாட்றாங்களே! பல்லி நாக்குல பூச்சி விழுந்தா அது கதி அவ்வளவுதான்” என்றார் வேடிக்கை பார்த்த ஒருவர்.

“”நீங்க வேறங்க! இதுங்களுக்கு இதே வேலை. மாட்டிக்கிட்டதும் நீலிக் கண்ணீர் விடுதுங்க. இதுகளை இப்படி ஒரு தடவையாது தண்டிச்சாதான் புத்தி வரும். முழியையும் மோரையையும் பார்! சரியான திருட்டுக் களை” என்றார் கதிர்வேலு.

நடந்தார்.

மறுநாள் காலை பத்து மணி.

கிண்டி ரயில் நிலையம் எதிரே பேருந்து நிறுத்தம். ஒரு மாநகரப் பேருந்து வந்து நின்றது. முன்புறம் இறங்கும் வாசலில் இருவர், பின்புறம் ஏறும் வாசலில் இருவர் சீருடை அணிந்த செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் நின்றனர்.

“”ஆமா! இவங்க இப்பத்தான் முகூர்த்தம் பாப்பாங்க. ஏற்கெனவே மூணு எடத்துல நிறுத்தி நிறுத்தி டிக்கெட் போட்டதுல கட்டை வண்டி மாதிரி ஊருது. ஆபிசுக்கு நாம் லேட் இல்லாமப் போய் சேர்ந்த மாதிரிதான்” பஸ்ஸின் உட்புற நெரிசலில் பிதுங்கி மனம் வெதும்பிய ஒரு நிற்கும் பயணி எரிச்சல் பட்டார்.

“”அது என்னவோ செக்கருங்கன்னாலே உயரமும் குண்டுமா வஞ்சனை இல்லாத உடம்புக்காரங்களாத்தான் இருக்காங்க. அப்படிப்பட்டவங்களைத்தான் செக்கிங் இன்ஸ்பெக்டரா எடுப்பாங்க போல! பாத்தாலே வயித்தக் கலக்கி நம்பர் டூ வந்துடும் சங்கட உணர்வு…” என்றார் மற்றொரு பயணி.

“”ரைட் போ, போ. ஓ.கே. உம், உம், சரி”, எட்டுப் பேர் தங்கள் டிக்கெட்டுகளை ஒழுங்காகக் காண்பித்து நகர, சிக்கினான் அய்யா ஒரு சிறுவன் வசமாக! சட்டைப் பையில் கை விடுறான். அரை டவுசர் பாக்கெட்டில் தேடுறான். நெளிகிறான்.

“”வாங்கினேனே எங்கே பூட்டுது?”

“”இப்படி இரு” என்று அந்தப் பையனின் சட்டை பின் காலரை இழுத்து ஒருபுறம் நிறுத்துகிறார் ஓர் இன்ஸ்பெக்டர்.

“”என்னடா, திருட்டுப் பயலே, உன்னைக் கவனிச்சிட்டுத்தான் வரேன். தினமும் ஓசி பயணம் செய்ல. இன்னிக்கு மாட்ன. எவ்வளவுடா துட்டு வச்சிருக்க?”

“”சார், நான் அப்படி செய்றவன் இல்ல. இஸ்கோல்ல படிக்றேன். வாங்கின டிக்கட் எங்கயோ தாரவாந்துப் போச்சி…” கை கூப்பினான்.

“”ஜீப்ல ஏறுடா! மூஞ்சில போக்கிரிக் களை! பொய் வேற. போலீஸ்ல ஒப்படைச்சாத்தான் திருந்துவ”

பின் கழுத்தில் பொளேர் அறை. பையனின் ட்ரவுசர் பையில் கை விடுகிறார் செக்கிங் இன்ஸ்பெக்டர் கதிர்வேலு.

“”தோ வெச்சிருக்கியே ரூபா”

“”அய்யா, அந்த ஐநூறு என்னது இல்ல. எங்க ஆத்தா வேல செய்ற வூட்டம்மா ஏதோ ரெண்டு பக்திப் பொஸ்தகம் வாங்கியான்னு குடுத்த துட்டு. அவங்க குறிச்சிக் குடுத்த துண்டுச் சீட்டு வேணாலும் காட்றேன்…”

“”கத விடாதடா கழுத! பிக்பாக்கெட் அடிச்சியோ?” இன்னும் ரெண்டு அறை.

“”திரும்பிப் பார்க்காம ஓடு! அறைஞ்சே கொன்னுடுவேன்”

“”கதிர்வேலு, கவனம் அந்தப் பையன் ஏமாத்திட்டு ஓடிருவான்!” என்று ஒரு இன்ஸ்பெக்டர் குரல் கொடுத்தார்.

சிறுவனிடம் பறித்த ஐநூறைப் பத்திரமாக தன் சட்டைபாக்கெட்டில் பதுக்கிய கதிர், “”ஒழிஞ்சுப் போறான்யா அறியாப் பையன். டே! ஓடுடா, அடிபட்டுச் சாவாத…” என்று பையனை கழுத்து கை வைத்துத் தள்ளினார்.

அன்று பிற்பகல்

சதீஷ் வடபழனி முருகன் கோவில் அருகில் பேருந்தில் செல்கையில் “டாடி, மம்மி வீட்டில் இல்ல…’ என்று அவன் அலைபேசி பாடியது.

“”…ஹாங் வந்துகிட்டிருக்கேன்டா. இன்னும் நிமிஷம்”

சதீஷ் ஒரு தனியார் நிறுவன மென்பொறியாளர். வேலையில் சேர்ந்து ஒரு மாதம்தான் ஆயிற்று என்பதால் இன்னும் இரு சக்கரம் வாங்கவில்லை.

அன்று அவன் ஆபிஸ் செல்லவில்லை. ஸ்டெர்லிங் சாலை முனையில் அவன் நண்பர்கள் நால்வர் காத்திருப்பார்கள். நல்ல ஓட்டலில் சாப்பாடு. தியேட்டர் ஒன்றில் மேட்னி என்று குதூகலம் தொடரும்.

மறுபடி செல்போன். மறுபடி,மறுபடி.

“”அடடா! என்னடா இப்படி பொறுமையில்லாத பசங்களா இருக்கீங்க? வந்துகிட்டிருக்கேன்ல?”

பேருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் நின்றது. “ஏன் அதிக நேரம் நிற்கிறது? ஓ! செக்கிங்கா! பத்து நிமிடம் பயணத் தடையா! எத்தனை கால் கொடுப்பான்களோ? அலைபேசியை சைலன்ட் மோடில் வைப்போம்…’

“”மிஸ்டர் டிக்கெட்!”

“”தோ சார்”

சதீஷ் தன் பாக்கெட்களில் கைவிட்டு, விட்டு, விட்டு…

“”இருக்கா இல்லியா தம்பி?”

சட்டைப் பையில் இருந்து திரும்பத் திரும்ப அலைபேசியை எடுப்பதும், வைப்பதுமாக இருந்ததில் எங்கோ காற்றில் பறந்தோடி விட்டது போலும்.

“ஐயோ இப்ப என்ன செய்ய?’

“”எந்திரிடா! பெரிய லாடு கணக்கா சீட்ல உக்கார்ந்திருக்கான். நடடா!” சட்டை பின்காலரில் இன்ஸ்பெக்டரின் கை.

“”சார், அடாபுடாங்காதீங்க. நான் படிச்சி, நல்ல வேலை…”

“”மொத இறங்குடா”

சதீஷுக்கு அவமானமாக இருந்தது. ராட்சசர்கள் போன்ற இந்த செக்கிங் இன்பெக்டர்களிடம் மேலும் ஏதாவது பேச முயன்றால், பொது இடம் என்றும் பாராமல் அவர்கள் கெட்ட வார்த்தையால் வசை மழை பொழியலாம். பேருந்தைவிட்டு இறங்கி நின்றான்.

“”டே, உன்னத்தான்டா, ஜீப்ல ஏறு…”

“”சார், ரெண்டே நிமிஷம் வெயிட் பண்ணுங்க. என் நண்பர்கள் வந்திடுவாங்க பணத்தோட…”

“”நீ ஜீப்ல ஏறுடா” இரண்டு பேர் அவனைத் தூக்கி ஜீப்பில் திணித்தனர். “”ஏழுமலை, உம் போ!”

“”சார், நீங்க ரொம்ப ஓவரா போறீங்க. நான் ஒரு என்ஜினியர்”

“”டேய், ஒனக்குப் பேசவே தகுதி கிடையாது. குற்றவாளி, குற்றவாளிதான். நீ என்ஜினியரா? ரெüடிப் பய மாதிரி இருக்க, பொய் வேற…”

“”சார், ப்ளீஸ்…”

ஜீப் விரைந்தது. நான்கு இன்ஸ்பெக்டர்கள் தங்கள் இலாகா பற்றி தங்களுக்குள் ஏதேதோ பேசினர்.

“”சார், என்னை எங்கே கொண்டு போறீங்க?”

“”போனதும் தெரிஞ்சுப்படா”

“”சார், என்னை ஏன் ரெட்ஹில்ஸ் பக்கம் கூட்டிப் போறீங்க?”

“”கவர்னர் மாளிகைக்கு கூட்டிப்போய் உன்னை மாதிரி ஆள்களுக்கு விருந்து வைப்பாங்களா?”

“”சார், நான் யாருனு தெரிஞ்சா வருத்தப்படுவீங்க. எங்கப்பா…”

“”போடா! உன் அப்பன் ஜில்லா கலெக்டரா? எங்க தலையை சீவிடுவானோ?”

“”சரி, உங்ககிட்ட மரியாதையை எதிர்பார்க்க முடியாது. என்னை முழுசாப் பேசவும் விட மாட்டேங்கறீங்க”

“”டேய், போலீஸ் கிட்டேயும் எங்க கிட்டேயும் மாட்டாத வரைதான் மரியாதை, கிரியாதை எல்லாம். மாட்டினா எவனா இருந்தாலும் அவ்ளோதான்”

ஜீப் நின்றது

“”சரி, சரி இருக்கிற பணத்தை எடு!”

“”முந்நூத்தி அம்பதுதான் சார் இருக்குது. ரசீது கொடுப்பீங்க இல்ல?”

“”ஒத தான் கொடும்போம்”

“”நான் போகலாமா சார்?”

“”டே, அந்த செல்போன்”

“”இதுவுமா! தரமாட்டேன்”

“”மரியாதையா குடுத்திடு…”

சதீஷ் ஒரு போக்குவரத்து போலீஸ்காரரைக் கண்டு அவரிடம் ஓடினான்.

“”சார், இந்த அநியாயத்தக் கேளுங்க”

“”பணம் தான் வாங்கீட்டீங்க இல்ல? எதுக்கு செல்போனைக் கேக்குகிறீங்க?” என்றார் போலீஸ்காரர்.

“”மவனே, இன்னக்கி நீ முழிச்ச முகம் நல்ல முகம்டா!”

ஜீப் கடுப்புடன் புறப்பட்டுச் சென்றது.

கோபத்துடன் செல்போன் பட்டனை அழுத்தி செக்கிங் இன்ஸ்பெக்டர் கதிர்வேலுவை அழைத்து அழும் குரலில் சதீஷ் சொன்னான், “”அப்பா, நீ எல்லாம் இந்த இலாகால வேலை செஞ்சும் எனக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்தியா?”

– ரா.கண்ணன் மகேஷ் (ஜூன் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *