பருவ மழை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 4, 2015
பார்வையிட்டோர்: 10,832 
 
 

டெல்லி வெயில் காலையிலேயே உக்கிரமாக உறைக்க ஆரம்பித்திருந்தது. ப்ரொ·பசர் ராமசந்த்ரா வழக்கம் போல அரை மணி வாக்கிங், ஹிந்து பேப்பருடன் காபி, ஷவர் குளியல் பிறகு பிரெட் டோஸ்டுடன் ஆரஞ்சு ஜுஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அந்த போன் வந்தது. பிரதமரின் அலுவலகத்திலிருந்து.

மெடிராலஜி டிபார்ட்மென்டில் சேர்ந்து இரண்டு வருடம் ஆயிற்று. இது வரை ஒரு குட்டி உப மந்திரி கூட அழைத்ததில்லை. எப்பொழுதாவது யாராவது அன்டர் செக்ரடரியிடமிருந்து, பார்லிமென்டில் கேள்வி வந்தால் பைல் வரும். பிரதமருக்கு வானிலை பற்றி என்ன தெரிய வேண்டும் ? இன்னும் ரிடையர் ஆக ஒன்றேகால் வருடம் இருக்கிறதே, அதற்குள் எக்ஸ்டென்ஷன் எல்லாம் பற்றி யோசிக்க ஆரம்பித்திருப்பார்களோ என்று குறுகுறுத்தது. கூடவே தான் ஒன்றும் எக்ஸ்டென்ஷன் வாங்கும் அளவு யாருடனும் நெருக்கம் இல்லை என்று உரைத்தது. தவிர சஞ்சீவ் மல்ஹோத்ராவை அடிஷனல் டைரக்டராக கொண்டு வந்த போதே கிருஷ்ணமூர்த்தி ஜாக்கிரதை என்று சொன்னான்.

கிருஷ்ணமூர்த்தியையே கேட்டு விடலாமா, அவனுக்குத் தெரியாமல் எதுவும் இருக்காது.இப்போது சைன்டிபிக் அட்வைசர். எம் அய் டி யில் ப்ரொ·பசராக இருந்தபோது பாடம் சொல்லிக் கொடுத்த மாணவன். அவன் அடுத்த எலக்ஷனுக்குப் பிறகு விண்வெளி அல்லது அணுசக்தி கமிஷனில் சேர்மனாக கூட வரலாம் என்று பேச்சு. அவனுக்கு வேண்டிய இடத்தில் வேண்டிய சமயத்தில் தொடர்பு கேட்கலாம்.

சுமதி அவரையே சந்தேகமாக பார்த்துக் கொண்டிருந்தாள். இவளுக்கு எதிரே வேண்டாம். பிறகு மத்தியானமே கிளப்பில் “பாருங்க இவருக்கு, ஒரு நாளாவது நிம்மதியா சாப்பிட முடியாது. இன்னிக்கும் காலங்கார்த்தால, பி எம் ஒ விலேர்ந்து போன்” என்று ஏதோ தினமும் ப்ரெசிடென் ட் மற்றும் ப்ரைம் மினிஸ்டருடன் ப்ரேக் ஃபாஸ்ட் மீட்டிங்கிற்கு போகிற மாதிரி பேசுவாள். பாவம், வழக்கமாக மற்ற பெண்மணிகள் எல்லாம் அவரவர் கணவன்மார்கள் மந்திரியுடன் யு எஸ் கான்பரன்ஸ், சிங்கப்பூர் செமினார் என்று சொல்லும்போது இவள் மட்டும் பங்களாதேஷுக்கு மழைக்காலத்தில் பயணம் பற்றி பேச வேண்டியிருக்கும்.

ட்ரைவருக்கு ஃபோன் செய்து உடனே வரச் சொன்னார். இந்தியா வந்து இரண்டு வருடம் ஆகியிருந்தாலும், இன்னும் தானே ஓட்ட தைரியம் இல்லை. வந்த புதிசில் ஒரு முறை தானே ஓட்டிக் கொண்டு அடுத்த தெரு தாண்டுவதற்குள், குறுக்கே எதிர் பாராத ஒரு கிழவன் சைகிளில். லேசாக கார் பட்டு அவன் ரோடில் விழுந்து, கூட்டம் கூடி, அதற்குப் பிறகு தானே ஓட்டுவதில்லை. இன்று கார் சிறிது உற்சாகமாக செல்வதாக தோன்றியது. தினமும் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கும், ஞாயிற்றுக்கிழமை கிழமை மலை மந்திருக்கும் மட்டும் போய் வரும் அலுப்பிலிருந்து மாறுதல். ட்ரைவருடைய மனைவியும், மத்தியானம் மற்ற ட்ரைவர் மனைவிகளிடம் பிரதமர் அலுவலகத்தில் பார்க்கிங் வசதிகள் பற்றி பேசக் கூடும். ப்ரொ·பசருக்கு திடீரென்று ஒரு கலக்கம் அடி வயிற்றிலிருந்து கிளம்பியது. ஏதோ விவகாரம்தான்.

IMD_1084518e

புகைப்படம் நன்றி : தி ஹிந்து

போய்ச் சேர்ந்து, செக்யூரிட்டி செக் முடித்து உள்ளே செல்வதற்குள் ப்ரின்சிபல் செக்ரடரி அவசரப்படுத்தினான். உள்ளே ஒரு சின்ன கான்பரன்ஸ் அறையில் பிரதம மந்திரியுடன் நான்கு பேர். கிருஷ்ணமூர்த்தியும் இருந்தான். அடப்பாவி, உனக்கு முன்பே தெரிந்திருந்தால் சொல்லி இருக்கக்கூடாதா என்று நினைத்துக் கொண்டார். பிரதமர் டீவியில் பார்ப்பதை விட இளமையாகத் தோன்றினார். கூட இருந்த மற்றவர்கள் யாரும் அரசாங்க அதிகாரிகள் இல்லை. ஒருவர் கட்சியின் ப்ரெசிடென்ட்.

“ஆயியே ராம்சந்தர்ஜீ, இந்த அதிகாலை நேரத்தில் உங்களை முன் அறிவிப்பு இல்லாமல் அழைத்ததற்கு மன்னிக்கவும்,உங்களுடன் மிக முக்கியமான விஷயம் பேச வேண்டி இருக்கிறது ” ஏசியின் குளிர் ஊடுருவியது.

பாகிஸ்தானுடன் மறுபடியும் தகறாரா, எல்லைப்புற மலைச் சிகரங்களில் எப்போது பனி உருகும், எப்போது ராணுவம் முன்னேறலாம் என்று கேட்கப் போகிறாரா?

டிஃபென்ஸ் டிபார்ட்மென்டுடன் கூட்டு ப்ராஜெக்ட் ஆரம்பித்து இரண்டு வருடத்தில் எதுவும் சாதிக்கவில்லை.

” டீ சாப்பிடுகிறீர்களா ?” பிரதமர் ஊடுருவிப் பார்த்தார்.

” பரவாயில்லை, சொல்லுங்கள் “

சஞ்சீவ் வந்திருந்தால் “உங்களுடன் அமர்ந்து பேச வாய்ப்புக் கிடைத்ததே பாக்கியம்” என்றெல்லாம் இன்னும் நிறைய அளந்திருப்பான் ஹிந்தியில்.

பிரதமர் அதிகம் சுற்றி வளைக்கவில்லை.

“ராம்சந்தர்ஜி, அடுத்த மார்ச்சில் தேர்தலுக்கு போகலாமா என்று ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். ஜனங்கள் சந்தோஷமாக மறுபடியும் எங்களுக்கு ஓட்டுப்போட வேண்டுமானால், அதற்கு முன்பு நிறைய செய்ய வேண்டும், எலெக்ட்ரிசிடி குறைவில்லாமல் தர வேண்டும், குடிக்கத் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க வேண்டும். பயிர் விளைச்சல் சரியாக இருக்க வேண்டும். முக்கியமாக வெங்காயம்”

சிரிக்காமல் நிறுத்தி ஒருகணம் நேராகப் பார்த்தார். இல்லா விட்டால் அய்ந்து வருடம் நாங்கள் செய்ததை எல்லாம் மறந்து எதிர்க் கட்சிக்கு ஓட்டுப் போட்டு விடுவார்கள். எனக்கு உங்களிடமிருந்து தெரிய வேண்டியது இவ்வளவுதான் – இந்த வருடம் மழை எப்படி இருக்கும் ? சரியாக மழை இருக்காது, பஞ்சம்தான் என்றால்,இந்த ஜூனிலேயே மான்சூனுக்கு முன்பே எலெக்ஷனுக்குப் போகலாம் என்று இருக்கிறோம். அப்படியானால் அடுத்த வாரமே எலக்ஷன் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். இல்லை, நிறைய மழை வரும் என்றால் அக்டோபரில், விஜயதசமிக்கு ஒரு யாத்திரையுடன் ஆரம்பிக்கலாம். நீங்கள் டிபார்ட்மெண்டில் இப்போது சூப்பர் கம்ப்யூட்டர் எல்லாம் நிறைய உபயோகிக்கிறீர்களே,சொல்லுங்கள் .”

ப்ரொபசருக்கு என்ன பதில், எப்படிச் சொல்லலாம், எங்கே ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. கையில் மோதிரத்தை ஒரு தடவை தேய்த்து விட்டுக் கொண்டார்.

மிகச் சுலபமான கேள்வி, கேட்பதற்கு. பதில்தான் உண்டு இல்லை என்று திட்டவட்டமாகச் சொல்லமுடியாது. தற்போது இருக்கும் மாடல்களை வைத்துக் கொண்டு, இவ்வளவு முன்பாகவே எதுவும் சொல்ல முடியாது. நிலம், சமுத்திரம் எவ்வளவு வெப்பம் என்று அளந்து, மே மாதத்தில்தான் சுமாராக அறுபது சதம் சாத்தியத்தில் இவ்வளவு மழை வரலாம் என்று அறிக்கை கொடுக்க முடியும். இதெல்லாம் விளக்கினால் இந்த வயசான பிரதமருக்குப் புரியுமா என்று சந்தேகமாக இருந்தது. முன்பு ஒரு காலத்தில் இளம் பிரதமர் இருந்த போது, ஒரு வேளை மாடல் பற்றி, சூபர் கம்ப்யூட்டர் பற்றி ஒரு தனி லெக்சர் கொடுத்திருக்கலாம். இவருக்குத் தேவை ஒரு வார்த்தை பதில்தான்.

அப்படி ஒரு பதில் இல்லை என்று நேராக சொல்லி விடலாமா என்று ஒரு கணம் தோன்றியது. கிருஷ்ண மூர்த்தி கண்ணாலேயே எதோ சைகை காட்டினான். என்ன என்றுதான் புரியவில்லை. எல்லோரும் எதிர்பார்ப்புடன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அனாவசியமாக தொண்டையை கனைத்துக் கொண்டு,

” அவ்வளவு துல்லியமாக சொல்வது, தற்போது வழக்கத்தில் உள்ள மாடல்களை வைத்துக்கொண்டு சொல்வது சந்தேகம்தான்”

“சென்ற வருடம் கூட, புதிய கம்ப்யூட்டரில் முன்கூட்டியே சொல்ல முடியும் என்று பத்திரிகைகளில் அறிக்கை கொடுத்தீர்களே?”

“ஆமாம் அய்யா, வருடா வருடம் நாங்கள் மாடல்களை திருத்திக் கொண்டு வருகிறோம். ஆனாலும் நீங்கள் கேட்ட கேள்விக்கு தீர்மானமான பதில் இவ்வளவு முன்பே சொல்ல முடியாது “

பிரதமர் அவநம்பிக்கையுடன் ஏமாற்றமாக பார்த்தார்.

ஏசி ஓடும் சத்தம் தவிர, கனத்த மெளனம்.

கொஞ்சம் வியர்ப்பது போல இருந்தது. தண்ணீர் சிறிது குடித்து விட்டு, தொண்டையை மறுபடியும் செருமிக்கொண்டு,

” இருந்தாலும் ஒரு வாரத்தில், தற்போதைய மாடல்களை வைத்துக்கொண்டு எவ்வளவு சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு பதில் கொடுக்க முயற்சிக்கிறேன் ” குரல் மழுப்பலாக தனக்கே தோன்றியது.

அலுவலகத்தில் அறைக்குள் நுழையும்போதே ஃபோன் அடித்துக் கொண்டிருந்தது. கிருஷ்ண மூர்த்திதான்.

” ஏய்யா, இப்பதான் மொதல் முறையா, பி எம்மே நேர கூப்பிட்டிருக்கார், சரியா பதில் சொல்லக் கூடாதா? மாடல் எல்லாம் இருக்கட்டும், தைரியமா, அவருக்கு நம்பிக்கை கொடுக்கற மாதிரி, ஏதாவது ரெண்டு வார்த்தை பேசி இருக்கக் கூடாதா ?”

“இல்லப்பா, திடீர்ன்னு இப்படி ஒரு கேள்வி கேட்டு, எல்லாரும் என் முகத்தையே பார்த்தால், நான் என்ன பண்ணுவேன் ? ப்ராபபிலிடி தியரிப் படி பாத்தா…”

அதற்குள் கிருஷ்ணமூர்த்தி இடை மறித்தான்.

“என்னமோ, வலிய வந்த சான்ஸ இந்த மாதிரி கெடுத்துக்கற ஆசாமிகள் சிலபேர் உண்டு. ஒரு வாரத்துல
ஏதாவது நம்பிக்கையா பதில் சொல்லு. மறுபடியும் ப்ராபலிடி லெக்சர் கொடுக்க வேண்டாம். சரியா..”

நம்பிக்கையான பதில் கொடுக்க முடியும் என்று தோன்றவில்லை.

பருவமழை பற்றி ஆளாளுக்கு பேசுகிறார்கள். இவர்களுக்கு வேத காலத்தில் இருந்து கணிக்கப்பட்ட வழிபடப் பட்ட மழை பற்றி தெரியுமா? வராஹமிகிரரால் குறிக்கப்பட்ட, சாணக்கியரால் அர்த்த சாஸ்திரத்தில் அளக்கப்பட்டு நாட்டின் வருமானத்தை நிர்ணயித்த சரித்திர கால மழை பற்றி தெரியுமா? 1875இல் இந்தியாவில் மெட்டிபார்ட்மென்ட் ஆரம்பித்த பின்னணி? 1884இல் டிபார்ட்மென்டில் சேர்ந்த முதல் இந்திய விஞ்ஞானி? ஏதோ ஒரு ஸாட்டிலைட்டும் கம்ப்யூட்டரும் கிடைத்து விட்டால், ஜுன் 1ம் தேதி காலை 6 மணி முப்பத்தேழு நிமிடத்திற்கு கேரளக்கரையில் மான்சூன் பற்றிக் கொள்ளும் என்றும், நாடு முழுவதும் வயல்களெல்லாம் நீர் நிரம்பி வழிந்தோடும் என்றும் குடுகுடுப்பைக்காரன் மாதிரி பதிலை எதிர்பார்க்கிறார்கள். இன்றைக்கு நடந்ததைப் பார்த்தால், சோர்வாக இருந்தது. சுமதி நிறைய நாட்களாக சொல்லி வந்ததுதான். பேசாமல், இதெல்லாம் விட்டு விட்டு, ஊருக்குப் போய் விடலாம் என்று.

உடனே அவசர மீட்டிங் அழைத்து விவாதிக்கலாம் என்பதற்குள் சஞ்சீவ் மல்ஹோத்ராவிற்கு பொறுமை இல்லை. யாரோ அதற்குள் தெரிவித்திருக்க வேண்டும். நேரே வந்து விட்டான்.

” ப்ரொபசர், கேள்விப்பட்டேன். நம் டிபார்ட்மென்டிற்கே பெருமை, நல்ல சந்தர்ப்பம், அதை விட்டு விட்டீர்களே ,என்னை அழைத்துச் சென்றிருக்கலாமே, அடுத்த வாரம் நானும் வருகிறேன். என்ன பதில் கொடுப்பதாக இருக்கிறீர்கள்?”

அடுத்த ஒரு வாரத்திற்குள் பிரதமருடன் மல்ஹோத்ராவின் மீட்டிங், டிபார்ட்மென்டில் இன்னும் பிற விவகாரங்கள்…அதற்குப் பிறகு தேசிய தினசரி பத்திரிகைகளில் வெளி வந்த தலைப்புச் செய்திகள் …

” ஆளும் கட்சி அக்டோபரில் தேர்தலுக்குத் தயாராகிறது”

” பிரதமர் தேர்தல் ஆணையருடன் நாள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார் “

என்று முதல் பக்கத்திலும் ,

“சஞ்சீவ் மல்ஹோத்ரா புதிய டைரக்டர் ஜெனரலாக பதவி ஏற்றிருக்கிறார் ” என்று
நாலாம் பக்கத்தில் இரண்டு வரிகளும் வந்தது.

அதற்குப் பிறகு மழை பற்றிய அறிக்கைகள் சில நாட்களுக்கு முதல் பக்கத்தில் வந்தன.

” இந்த வருடம் மழை சரசரிக்கு அதிகமாகவே இருக்கும் “

” வரலாறு காணாத பயிர் விளைச்சல் எதிர் பார்க்கப் படுகிறது “

ப்ரொபசர் ராமச்சந்திரா ராஜினாமா செய்தது பற்றி வெளியில் எதுவும் வரவில்லை.

“இந்த வருடம் முதல் புதிய மாடல் உபயோகித்திருக்கிறோம் “

சஞ்சீவ் மல்ஹோத்ரா அட்டைப் படங்களில் மிகையாகச் சிரித்துக் கொண்டிருந்தான்.

“ஜூன் 1ம் தேதி கேரளத்தில் பருவ மழை ஆரம்பிக்கும், இவ்வளவு துல்லியமாக, பழைய மாடல்களை வைத்துக் கொண்டு சொல்ல முடியாது”

மழை வரும் நம்பிக்கையில் ஸ்டாக் மார்கெட் ஏற ஆரம்பித்தது

ப்ரொபசர் ராமச்சந்திரன் தஞ்சாவூருக்குப் பக்கத்தில் காவிரிக்கரை கிராமத்தில் பூர்வீக வீட்டில் ரிடையர்டு வாழ்க்கை அமைத்துக் கொண்டது பற்றியும் அரசாங்கத்தில் யாரும் அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை.

இந்தியா டுடேயில் மழை மாடல்கள் பற்றி நீள கட்டுரைகள் வந்தன.

” என்னதான் அமெரிக்கா போனாலும், டெல்லில இருந்தாலும் நம்மூர் போல ஆகுமா, ஏதோ நம்ம பசங்கள்ளாம் ஊரையும் ஜனங்களையும் சுவாமியையும் மறக்காம இருந்தா சந்தோஷம் ” என்று ராமச்சந்திராவின் பக்கத்து வீட்டு சுண்டுத்தாத்தா என்கிற சுந்தரேசன் மகிழ்ந்ததும் எந்தப் பேட்டியிலும் வரவில்லை.

இதன் பின் சில விசித்திர நிகழ்ச்சிகள் நடந்தன.

ஜூன் 10ம் தேதி ஆகியும் மழை ஆரம்பிக்காததால், மறுபடியும் மழை சில நாட்களுக்கு தலைப்புச் செய்தியில் வந்தது.

ராமச்சந்திரா கிராமத்தில் லைப்ரரியும் படிக்க புத்தகங்கள் வசதியும் இல்லாமல் சிறிது கஷ்டப்பட்டார். ஒரு நாள் அட்டத்தைக் குடைந்து கொண்டிருந்த போது ஒரு இரும்பு டிரங்குப் பெட்டி நிறைய பழைய புத்தகங்கள் கிடைத்தது.பிருஹத் ஜாதகம், சாதகாலங்காரம், ஜாதக சிந்தாமணி.. எல்லாம் அவர் தாத்தா சேர்த்து வைத்தது. படிக்க வேறு எதுவும் இல்லாமல், இந்தப் புத்தகங்களை ஆரம்பித்தார்.

அய்ந்து வருடம் முடிவதால், வேறு வழி இல்லாமல் ஆளும் கட்சி தேர்தலில் இறங்க வேண்டியதாயிற்று.

இடையே கிருஷ்ணமூர்த்தி வந்திருந்தான். பெண்ணிற்கு செவ்வாய் தோஷமாம். இரண்டு மூன்று இடத்தில் அமைவது போல வந்து கடைசியில் தட்டுப்பட்டு விட்டதாம். வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் போகச்சொல்லி யாரோ சொன்னார்களாம்.

தேர்தல் திருவிழா ஏற்பாடுகள் வழக்கம் போல பிரும்மாண்டமாக நடந்தன.

பேச்சு வாக்கில் ராமச்சந்திரா கிருஷ்ணமூர்த்தியிடம் அவர் பெண் ஜாதகம் கேட்டார். எல்லாப் புத்தகங்களையும் பார்த்து, சொன்னபடி ஜனவரியில் கல்யாணம் நடந்தது.

அதற்குப் பிறகு வாரா வாரம் அண்ணா அண்ணா என்று ·போனும், டெல்லியிலிருந்து உப மந்திரிகளும், அடிஷனல் செக்ரடரிகளும் வருவதும்..

பிரதமர் பயந்த படிதான் ஆயிற்று. மழை சரியாக இல்லை. பயிர் எல்லாம் நஷ்டம். பவர் கட். வெங்காயம் கிலோ நூறு ரூபாய் விற்றது.

ப்ரொஃபசர் ராமச்ந்த்ரா சொன்னபடி இன்னும் நிறைய திருமணங்கள் நடந்தன, வீடு நிலங்கள் வாங்கப்பட்டன, பையன்களுக்கு சகாயமாக பாரின் யூனிவர்சிடிகளில் அட்மிஷன் கிடைத்தது…

தேர்தலில் ஆளும் கட்சி படு தோல்வி. இன்னும் இரண்டு கட்சிகளை சேர்த்துக் கொண்டு கூட்டணி அரசு அமையலாம் என்று பேசப் பட்டது. அதில் ஒரு சிக்கல். யார் பிரதம மந்திரி என்பது ஒரு வாரத்துக்கு மேல் தீர்க்க முடியாமல் ஆகாமல் பத்திரிகைகளில் அடி பட்டது.

ராமச்சந்திரா நீசபங்க ராஜ யோகத்தில் ஆழ்ந்திருந்த ஒரு மாலையில் அந்த போன் வந்தது. பிரதமர் அலுவலகத்திலிருந்து. பழைய பிரதமர் அடுத்த நாள் ஒரு அவசர வேலையாக சென்னை வந்திருக்கிறாராம்.

என்ன அவசர வேலை என்று ஏற்கெனவே பத்திரிகைகள் யூகம் தெரிவித்திருந்தன. டெல்லி சென்று கூட்டங்களில் பங்கேற்க விருப்பமில்லாத ஒரு தலைவரை கூட்டணியில் சேர்க்க என்று. அவர் ராமசந்திராவை நேரில் பார்த்து ஜாதகத்தைக் காண்பித்து சில விஷயங்கள் பற்றி கேட்க வேண்டுமாம். கார் அனுப்புகிறானாம், சென்னைக்கு வந்து ஒரு அரை மணி நேரம் பார்க்க முடியுமா என்று ப்ரின்சிபல் செக்ரடரி கேட்டான். ராமசந்த்ரா? தவிர சென்னைக்குப் போவதை நினைத்தாலே சோர்வாக இருந்தது. பழைய நினைவுகள் கசப்பாக எழ, நேராகச் சொல்லாமல் ஏதோ விசேஷம் அதனால் வர முடியாது என்று ஃபோனை வத்து விட்டார்.

தமிழ்நாட்டுத் தலைவரை கூட்டணியில் சேர்த்தால், தலை வலிதான் அதிகம் என்று டீ வி சானல்கள் கருத்துத் தெரிவித்தன. கூட்டணி சேர்த்தாலும், நிலையான ஆட்சி அமைப்பது சந்தேகம் என்று தலைப்புச் செய்தி.

ப்ரொஃபசர் ராமசந்த்ரா மறு நாள் காலை பறவைகள் கீதம் பாடி எழுப்ப, கறந்த பால் காபி, மெதுவாக காவேரியில் திளைத்துக் குளியல், கால் மணலை உதறிக் கொண்டு மரத்தடிப் பிள்ளையாரை ஒரு சுற்று,வீட்டுக்கு வந்து வாழை இலையை சுட்டுக்கொண்டிருந்த பொங்கலை விரலால் தொட்டு ருசித்த வேளையில் வீட்டுக் கதவு தட்டப் பட்டது.

சுமதிதான் கதவைத் திறந்தாள். திறந்தால் கிருஷ்ணமூர்த்தி. தயவு செய்து பழசை எல்லாம் மறந்து, பெரிய மனதுடன் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு பிரதமரே வாசலில் காரில் அவர் காத்திருப்பதாகவும் சொன்னான். சுமதிதான் ராமச்சந்திராவுக்கு எடுத்துச் சொல்லி சம்மதிக்க வைக்க வேண்டும் என்று கெஞ்சினான். சுமதி இரண்டு பேரையும் உள்ளே வந்து அமரச் சொன்னாள்.

ராமச்சந்திரா நிதானமாக சாப்பிட்டு விட்டு ஊஞ்சலில் வந்து அமர்ந்தார். பிரதமர் முயற்சி செய்து எழுந்து ஒரு கும்பிடு போட்டார். சோர்வினால் இடுங்கிய கண்கள், தளர்ந்த உடல், வியர்வை, கசங்கிய ஆடைகள், உயரமே சற்று குறைந்த மாதிரி இருந்தது. “ராம்சந்தர்ஜீ, இந்த அதிகாலை நேரத்தில் முன் அறிவிப்பு இல்லாமல் தொந்தரவு கொடுப்பதற்கு மன்னிக்கவும்” , ராமச்சந்திரா இருவரையும் உட்காரச் சொல்லி சுமதியைக் காபி கொண்டு வரச் சொன்னார்.

கிருஷ்ணமூர்த்தி ஜாதகத்தை எடுத்து கொடுத்தான். ராமசந்திரா கண்ணாடியை மாட்டிக்கொண்டு ஜாதகத்தை வாங்கி பார்த்தார். அப்படி ஒன்றும் விசேஷ ஜாதகம் இல்லை. இத்தனை நாட்கள் எப்படி பிரதமராக தாக்குப் பிடித்தார் என்பதே சந்தேகம்தான்.

பிரதமர் தொண்டையைச் செருமி கொண்டு தயங்கி ஆரம்பித்தார், ” உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கும், கூட்டணி ஆட்சி…”

ராமச்சந்திரா கையை மறிக்க பிரதமர் சொல்ல வந்ததை நிறுத்திக் கொண்டார். ராமசந்திரா கண்களை மூடிக் கொண்டு ஒரு கணம் யோசித்தார். தீர்மானமாக ஒரு முடிவுக்கு வந்தவராக ” சரி, நான் சொல்ற மாதிரி செய்யுங்க…”

பழைய பிரதமர் ஆவலாக மேலே என்ன சொல்லப் போகிறார் என்று காத்திருந்தார்.

– சொல்வனம் (23-04-2014)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *