பரிவில்லிக் கோட்டைப் பனங்கிழங்கு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 13, 2024
பார்வையிட்டோர்: 1,290 
 
 

‘பனங்கிழங்கு என்றால் போதுமே..?’ அதென்ன பரிவில்லிக் கோட்டைப் பனங்கிழங்கு என்று யோசிப்போருக்கு ஒன்று சொல்ல வேண்டும். .நாம் இருப்பது இரண்டாயிரத்து இருபத்துநான்கு! நமக்கு எப்படி ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தேழின் மகிமை தெரியாதோ அது மாதிரிதான் பரிவில்லிக் கோட்டை அடைமொழி தாங்கிய பனங்கிழங்கு சுவையும் சுவைக்காதவர்க்குத் தெரியாது!.

ஒரு கல்யாண நிச்சயதார்த்தத்திற்குப் போனவள், தன் உடன் பிறப்பிடம் சொல்லி, ஊருக்கு வரேன். தோட்டம் பார்க்கவும், பனங்கிழங்கு எடுக்கவும் என்று சொல்லி விவசாயம் பார்ப்போரிடம் முன்னமே ரெடி பண்ணி வைக்கச்சொல்லிப் புறப்பட்டாள்.

பரிவில்லிக் கோட்டை ஒன்றும் செஞ்சிக்கோட்டையோ சூரக் கோட்டையோ அல்ல..! தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் ஒரு சிற்றூர். பித்தவெடிப்புக்கு ஆளான குதிங்க்காலாய் பாளம் பாளமாக வெடித்து வெயிலில் உலர்ந்து காய்ந்தா நிலம்தான் என்றாலும் இருக்கும் நாலு ஏக்கரில் இறந்து போன அப்பாவின் நினைவாய் குத்தகைக்கு நிலத்தைவிட்டு விவசாயம் பார்த்துவருகிறார்கள் அவளின் அன்பு உடன் பிறப்புகள். அப்பா வெட்டிய கிணறு அவர் உழைப்பு நீரைத் தாங்கிய குளமாய் ஆனாலும் இளநீர்ச் சுவையோடு!

நிலம் பார்க்கப் புறப்பட்டார்கள்.! பஸ், வண்டிவாகன வசதிகள் கிடையாது. நெல்லையிலிருந்து கடம்பூர் ரயிலில் போய் அங்கிருந்து ஆட்டோவோ ஊர் வழியே போகும் ஒற்றை பஸ் ‘செப்பறையிலோ’ ஏறி அயிரம்பட்டி முச்சந்தில் இறங்கி மூணு கிலோமீட்டர் நடந்து போனால் அவர்கள் நிலம். கடந்த ஆண்டுபெய்த புயல் மழை வெள்ளத்தில் தலைநிமிர்ந்த குளக்கரையில் நாலாபக்கமும் பறக்கும் நாரைகளை ரசித்தபடி போகணும்.

‘இப்படி நடந்து வந்து பனங்கிழங்க்கு வாங்கித் திங்கணுமா? ஐம்பது ரூபா கொடுத்த அள்ளிக் கொடுக்கப் போறாணுக கேட்டால், சிரிப்பார்கள்’ என்று சொல்லி பரிகசித்தபோது அவள் சொன்ன பதிலில்தான் அந்த பரிவில்லிக் கோட்டை புகழ் புரிந்தது. ‘ஊர்ல ‘உலகத்துல எங்கன்னாலும் பனங்கிழங்கு கிடைக்கலாம்!. ஆனால், எங்க அப்பா கால்மிதிச்ச, கஷ்டப்பட்டு ஊத்துவெட்டிய கிணற்றுநீர் பாய்ந்த கிழங்கை ருசித்துப் பார்த்தால்தான் தெரியும். இந்த மணமும் சுவையும் வேறு மண் கிழங்குகளுக்கு வராது!’ என்றாள். சுவைத்துப் பார்த்த போது எனக்கும் அது உண்மை என்றே பட்டது. ‘வயசாச்சே பனங்கிழங்கு தின்ன முடியாதே!’ என்றபோது, அவள் செய்து தந்த பக்குவம் ஒரு உண்னையை உணரவைத்தது.

பனங்கிழங்கை மஞ்சள் உப்பு அளவாய்க் கலந்து அவிச்சு எடுத்து தோலைச் சீவி, துண்டு துண்டாய் நறுக்கி மிக்ஸியில் வரமிளகாய், பூண்டு வைத்து ஓட்டி எடுத்து ஸ்பூனில் எடுத்துச் சாப்பிடும்போதுதான் தெரிந்தது

‘எங்கள் தந்தையர் நாடென்னும் பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே!’ என்று பாரதி சொன்னதுபோல், அவள் அப்பா காலும் கையும் வியர்க்க உழைத்த உப்பின் மணம் உசுப்பிவிட்டது தேசப்பற்றை பரிவில்லிக் கோட்டை ஊர்ப்பற்றை. இப்படித்தானே ஆயிரத்துத் தொள்ளாயிரங்களில் தேசத்தையும் நம்மவர்கள் நேசித்தார்கள்??!!.

உலகில் எந்த நாட்டுக்கும் இல்லாத மண்மணம் இந்திய மண்ணுக்கு மட்டுமே உண்டு! என்பதைப் பரிவில்லிக்கோட்டை பனங்கிழங்கு உணர்த்தியது. ‘எத்தனை ஜென்மம் எடுத்தாலும், இந்திய மண்ணிடை வேண்டுவனே! என்று பாடியதன் பொருள் புரிந்தது லேசாக!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *