பரம்பரைச் சொத்து

0
தின/வார இதழ்: தென்றல்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 5, 2014
பார்வையிட்டோர்: 8,526 
 

காதில் ஈயமெனப் பாய்ந்த கடிகாரத்தின் உசுப்பலை முனகியவாறே நிறுத்தினாள், பாரதி.

இரண்டு நாட்களாக, குளிரின் காரணமாக விடிகாலையில் எழுந்திருக்க முடிவதில்லை. சாதகமும் செய்ய முடியவில்லை. இன்று எழுந்தே ஆகவேண்டும்.

‘ஜில்’ என வந்தக் குழாய் நீரைத் திட்டிக்கொண்டே முகத்தை அலம்பினாள். அடுப்படியிலிருந்து டிக்காக்ஷன் வாசனை மூக்கைத் துளைத்தது. அந்தக் குளிரில் அம்மா சுடச்சுடத் தந்த நுறைத் ததும்பிய காப்பி தொண்டைக்கு இதமாக இருந்தது. தாமதிக்காமல் குளித்துவிட்டுக் கிளம்பினாள்.

“வரேம்மா”! பாட்டுப் புத்தகங்களை எடுத்துக் கொண்டாள். ஸ்கூட்டியில் சாவியை நுழைத்துக் கிளப்பினாள். குளிரின் கடுப்பில் அது சோம்பேரித் தனமாய்க் கிளம்பியது.

கணேஷ் நகருக்குள் நுழைந்து இரண்டாம் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தினாள். புத்தகங்களை திரட்டிக்கொண்டு மணிக்கட்டைப் பார்த்தாள். “6:02” இரண்டு நிமிடங்கள் தாமதம். அவசர அவசரமாக உள்ளே நுழைந்தாள். தம்பூரின் ஸ்வரங்கள் கம்பீரமாய் வந்துக் கொண்டிருந்தன. தம்பூரின் தந்திகளை மீட்டியவாறே சரஸ்வதியின் அம்சமாய், புன்னகையோடு அமர்ந்திருந்தார், மாமி. தயங்கிய வாறே மாமியின் எதிரில் அமர்ந்தாள். இருவரும் பாட ஆரம்பித்தனர்.

பாரதியின் குரல் நான்கைந்து இடங்களில், ஸ்ருதியுடன் சேராமல் படுத்தியது. மாமி பொருமையுடன் மீண்டும் பாடவைத்தார். இணையாத இடங்களை சரி செய்தார். ஸ்ரீரஞ்சனியில் புதியக் க்ருதி ஒன்றை ஆரம்பித்தார். ஒவ்வொரு சங்கதியையும் பிழை இல்லாமல்பாடுவது பெரும்பாடாய் இருந்தது. பாடம் முடிந்ததும் மாமியிடமிருந்து விடைப்பெற்றுக்கொண்டாள். மனதில் வெறுப்புத் தட்டியது.
“நான்கு வருடங்களாய் ஓயாமல் ஒவ்வொரு செவ்வாயும் வெள்ளியும் வந்துக் கொண்டிருக் கிறோம். இருந்தாலும் மாமி பாடுவதை சுத்தமாக அப்படியேப் பாடுவது இவ்வளவு கஷ்டமாய் இருக்கிறதே!” யோசித்துக்கொண்டே வண்டியைக் கிளப்பினாள். “சங்கீத ஞானம் பரம்பரைப் பரம்பரையாக வரவேண்டும். நமக்கு அந்த பாக்கியம் இல்லை. அப்பாவிற்கு பாட்டு என்றாலே பிடிக்காது. அம்மாவிற்கு அடுப்படியை விட்டால், அப்பாவையும், வீட்டில் உள்ள மற்றவரையும் கவனிப்பதற்குத் தான் நேரம். பாட்டிற்கும், பேச்சிற்கும் நேரம் ஏது?”

வீடு வந்ததும் அவசர அவசரமாக சாப்பிட்டு அலுவலகத்திற்குக் கிளம்பினாள்.

“இன்னிக்காவது அந்த 8:20 ரயிலைப் பிடிக்க வேண்டும்”. டிபன் டப்பியை நீட்டிய அம்மாவிடம், “சாயங்காலம் மைதிலியோட கொஞ்சம் கடைக்குப் போகணும். வர லேட்டாகும். கவலைப்படாதே.” என்று சொல்லிக்கொண்டே வண்டியைக் கிளப்பினாள். மைதிலியும் பாரதியும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தனர். மைதிலி மிக அருமையாகப் பாடுவாள். பாட்டில் பாரதியின் ஈடுபாட்டைக் கண்டு, “உனக்கு நல்ல குரல் வளம் இருக்கு. நீ பாடக் கத்துக்கலாமே” என்று கூறி, தன் தாயாரிடம் பரிச்சயமும் செய்து வைத்தாள்.

வண்டியை சைக்கிள் நிலையத்தில் வைத்துவிட்டு, ஓட்டமும் நடையுமாய் ரயில் நிலையத்தை அணுகிணாள் பாரதி. அன்றைக்குக் கற்றுக்கொண்ட பாட்டை முனகியவாறே மகளிர் கம்பார்ட்மெண்ட் பகுதியில் சென்று நின்றுக் கொண்டாள். “பல்லாவரத்தில் ஏதோ ஸிக்னல் ·பெயிலியராம். வண்டி லேட்டாத் தான் வருமாம்.” யாரோ சொல்லிக் கொண்டிருந்தார். “இன்னிக்கும் லேட்!” பெருமூச்சு விட்டாள். கையில் இருந்த குமுதத்தைப் புரட்டினாள். மனம் செல்லவில்லை. பாட்டுக் க்ளாஸில் சரியாகப் பாட முடியாதது மனதை ஏதோ செய்தது.

அதேப் பக்கத்தை எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டு நின்றாளோ தெரியாது. “பூம்” ரயில் சத்தம் அவளை உசுப்பியது. அடித்துப் புடித்துக் கொண்டு ஏறினாள். “உக்கும், ஏற்கனவே கும்பல்! இதுல நீ வேறயா?” எரிச்சலோடு ஒருத்தி, கண்ணில்லாத அந்தப் பிச்சைக் காரனைத் திட்டினாள். “கும்பல்ல தான அதுக்குப் பொழப்பு பாவம்”, கரிசனமாய் இன்னொருத்தியின் குரல். வண்டி கிளம்பியது. “இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே…” மக்களின் கூச்சலையும் மீறி கச்சிதமாய் வந்தது அந்தப் பிச்சைக் காரனின் குழலிலிருந்து பாட்டு. என்ன குழைவு, என்ன அனாயாசம்? மெய் மறந்து வாசித்தான். பாரதியின் மனதை வருடியது. “இவன் எந்த சங்கீதப் பரம்பரையில் பிறந்தான்?” யாரோ சாட்டையால் அடித்ததுப் போல் உண்மை உறைத்தது. “இன்று முதல் தவறாமல் சாதகம் செய்ய வேண்டும்”. மனதிற்குள் உறுதிப் பூண்டாள்.

– ஸ்ரீவித்யா நாராயணன் (ஆகஸ்டு 2002)

Print Friendly, PDF & Email

பகடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

சதிவிரதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *