கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 7, 2022
பார்வையிட்டோர்: 1,948 
 

குறு நில மன்னரான மங்குனி நாட்டு மன்னருக்கு இருப்பு கொள்ளவில்லை. தம்மிடமுள்ள காலாட்படை,குதிரைப்படை,யானைப்படையினர் போர் எதுவும் செய்யாமல் மூன்று வேளையும் உணவருந்தி விட்டு வெறுமனே கிடக்கின்றனர். பக்கத்து நாட்டினரும்,தன் நாட்டு மக்களும் தன்னை உயர்ந்த அதிகாரமிக்கவராக மதிக்க வேண்டுமென்றால் படைகளை அனுப்பி அருகிலுள்ள சிறு நாடான கொங்குனி நாட்டை பிடித்து விட வேண்டுமென மந்திரிகளை அழைத்து கேட்டார்.

மன்னர் பேச்சுக்கு மறுப்பு சொன்னால் மந்திரி பதவி போய்விடுமென்பதால் “அப்படியே ஆகட்டும் மன்னா” என்றனர் ஒருமித்த குரலில்.
படைகள் போருக்கு புறப்பட்டன. ஒருவாரம்,ஒரு மாதம் என நாட்கள் கடந்தும் சென்ற படைகள் திரும்பவில்லை. கவலையில் மன்னர் மூழ்கியிருந்த சமயம் ‘பரதேசி’ போன்ற கோலத்தில் அழுக்கு ஆடையுடன் ஒருவர் மன்னரைப்பார்க்க வந்தார். அரண்மணை காவலர் மன்னரிடம்” ஒரு பரதேசி உங்களைக்காண வந்துள்ளான். பார்த்தால் அன்னிய நாட்டவன் போல் தெரிகிறான்” என்றவுடன் பதட்டமான மன்னர், “அன்னியர் போல தெரியும் அவனை உடனே உள்ளே அனுப்பு. நம் படைகளைப்பற்றி செய்தி அவனிடமிருந்து கூட கிடைக்கலாம்”என உத்தரவிட்டார்.

‘பரதேசி’ காவலர்களால் அழைத்து வரப்பட்டு,குளிக்க வைத்து,புதிய ஆடை கொடுத்து,உணவு வழங்கப்பட்டு,நாற்றம் வராமலிருக்க வாசனைத்திரவியம் தெளிக்கப்பட்டு,மன்னர் முன் நிறுத்தப்பட்டான்.

“என்ன விசயமாக என்னைப்பார்க்க வந்தீர்…?எந்த நாட்டைச்சேர்ந்தவர்?” என கேட்ட மன்னரை பரதேசி மேலும் கீழும் பார்த்து விட்டு வினவினான்.

“மங்குனி நாட்டு மன்னா நான் ஒரு பரதேசி. கொங்குனி நாடு என் நாடு. உங்களது,அதிகார போதையாலும்,பேராசையாலும் நீங்கள் எங்கள் நாட்டைப்பிடிக்க அனுப்பிய ஐம்பதாயிரம் போர் வீரர்களையும்,பல்லாயிரம் யானை,குதிரைகளையும் எங்கள் நாட்டு படையினர் சிறை பிடித்து வைத்துள்ளனர்” என்றவுடன் அதிர்ச்சியடைந்த மன்னர் “எ…எ…எ…எ…எ..ன்…ன…என் படைகளை எதிரிகள் சிறை பிடித்து விட்டார்களா…?ந..நம்ப…முடியவில்லை. பொய்…பொய்…பொய் சொல்ல வந்தாயா…?” என்றார் ஆத்திரத்தில் இடுப்பிலிருந்த வாளை கையில் பிடித்தவாறு.

“ஆத்திரப்படாமல் பொறுமையாக கேளுங்கள். நாடு சிறிதென்று கொங்குனி நாட்டை குறைத்து மதிப்பிட்டு விட்டீர்கள். எங்கள் நாட்டு மன்னர் சாணக்யமாக தனது மூன்று மகன்களுக்கும் சுற்றிலுமுள்ள நாட்டில் பெண்ணெடுத்து,அந்த நாடுகளை தன்நாட்டுடன் இணைத்து ஒரே நிர்வாகத்தில் கொண்டுவந்து விட்டார். இதை அறியாமல் சிறிய நாடென்று போர் செய்ய துணிந்து விட்டீர்கள். எங்கள் கொங்குனி நாட்டு மன்னர் துறவியைப்போன்ற மனநிலை உள்ளவர்,நல்லவர். அடுத்த நாட்டை பிடிக்க கனவிலும் எண்ணாதவர். ஆன்மீகவாதி. அவர் நிர்வாகத்தில் நாடு சுபிட்சமாக உள்ளது. அவர் நினைத்திருந்தால் ஒரே நிமிடத்தில் உங்கள் நாட்டை பிடித்திருப்பார். ஆனால் இப்போது கடும் கோபத்தில் உள்ளார்” என்றார்.

“அ..அ..அ..ப்…ப…டி…யா……?” என்று மயக்கமடைந்த மங்குனி நாட்டு மன்னரை அரண்மனை வைத்தியர் சிகிச்சையளித்து குணமாக்கினார்.

“மன்னா நம் பலத்தை பற்றியே யோசிக்கும் நாம்,நம் பலவீனங்களைப்பற்றி யோசிப்பதில்லை. மற்றவர்களது பலவீனங்களைப்பற்றி யோசிக்கும் நாம் அவர்களது பலமான நிலைகளைப்பற்றி நினைப்பதில்லை. இது தான் தோல்விக்கு காரணம். இனிமேல் எந்த நாட்டினர் மீதும் போர் தொடுப்பதில்லை என்று நீங்கள் உறுதி சொன்னால் பிடித்து வைத்திருக்கும் உமது படைகளை இந்த பரதேசியால் விடுதலை செய்ய ஏற்பாடு செய்ய முடியும். வரும் வழியில் உங்கள் நாட்டு வீரர்களை காணாது தவிக்கும் அவர்களது பெற்றோரையும்,மனைவியரையும்,குழந்தைகளையும்,அவர்களது வேதனையையும் உங்கள் நாட்டில் கண்டு வேதனை கொண்டேன்.”

“……………………..”

“மன்னரால் நாட்டு மக்கள் நலமாக இருக்கவேண்டுமொழிய,வேதனையில் வாடக்கூடாது. பேராசை வீட்டையும்,போராசை நாட்டையும் அழித்து விடும்” என்ற பரதேசியின் அறிவுரையைக்கேட்ட மங்குனி மன்னர், “ஐயா உங்களை பரதேசி என்று நினைத்தேன். இப்போது தெய்வமாகவே பார்க்கிறேன். இப்படி அறிவுரை கூற எனக்கு யாருமில்லை. நீங்கள் விரும்பினால் இந்த அரண்மனையிலேயே எனக்கு குருவாக இருங்கள்” என்றார் அவரது காலைத்தொட்டு பணிவுடன் மங்குனி மன்னர்.

“முதலில் எங்கள் மன்னரிடம் கூறி உங்கள் படைகளை விடுவிப்போம். எல்லையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட நாளை சூரிய உதயத்தின் போது வந்து விடுங்கள்” என்று கூறியவர் வேகமாக சென்றுவிட, படைகளை அழைத்து வர முடிவு செய்த மங்குனி நாட்டு மன்னர் எல்லைக்கு புறப்பட்டார்.

மறு நாள் அனைத்து நாட்டு படைகளும் கூடியிருந்த நிலையில் தம்மை முறைப்படி வரவேற்க கொங்குனி நாட்டு மன்னர் வருவதை உற்று நோக்கிய மங்குனி நாட்டு மன்னர் ‘நேற்று பரதேசி கோலத்தில் அரண்மனைக்கு வந்தவர் இன்று கொங்குனி நாட்டு மன்னராக வருகிறாரே…?!! ‘என எண்ணி, அதிர்ந்து,பின் சுதாரித்து கைகுலுக்கினார், கையெழுத்திட்டார்.

மங்குனி நாட்டு படைகளைக்கண்ட அவர்களது உறவுகள் மகிழ்வதைக்கண்ட மன்னர் தானும் மகிழ்ந்து பேராசையையும்,போராசையையும் துறந்தவராய் தன் நாட்டு வீரர்களுடன் மகிழ்ச்சியுடன் அரண்மணைக்கு திரும்பினார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *