கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 10, 2014
பார்வையிட்டோர்: 14,311 
 
 

இரவு இரண்டு மணி.நல்ல தூக்கம்.

திடீரென்று “…….சத்தியமா எனக்குத் தெரியாதுங்க!….எனக்குத் தெரியாமலேயே அவங்க செய்திட்டாங்க!…..” என்று தூக்கத்தில் உளறிக் கொண்டே எழுந்து உட்கார்ந்தார் அருணாசலம்!

மனைவி மணிமாலா எழுந்து லைட் போட்டு, கணவனின் அருகில் வந்து ஆறுதலாகக் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

கொஞ்ச நாளாவே அருணாசலம் அடிக்கடி இரவு தூக்கத்தில் இப்படி செய்கிறார்.

“நீ படுத்து தூங்கடி!….ஏதோ கெட்ட கனவு…..” என்று மனைவிக்கு ஆறுதல் சொல்லி விட்டு, அருணாச்சலம் பித்துப் பிடித்தவர் போல் சோபாவில் உட்கார்ந்து கொண்டார்.

இனி அவருக்கு தூக்கம் ஏது?

காலை ஐந்து முப்பது. …போன் மணியடித்தது. பயந்து கொண்டே போய் போனை எடுத்தார்.

நல்ல வேளை. ஊரில் தங்கைக்கு குழந்தை பிறந்திருக்காம்! அப்பாடா!….நிம்மதியாகப் பெருமூச்சு விட்டார்.

மணி ஏழு. “அருண்!….உனக்கு விஷயம் தெரியுமா?….” என்று கேட்டுக்கொண்டே வந்தான் அவருடைய நெருங்கிய நண்பன் மோகன சுந்தரம்.

“ என்ன?….என்ன?…” என்று பதறியபடியே எழுந்து வந்தார் அருணாசலம்.

“ நம்ம சச்சினுக்கு ‘பாரத ரத்னா’ விருது கொடுத்திருக்கிறாங்களாம்!…..”

“ அப்படியா?……” என்று தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டே சோபாவில் உட்கார்ந்தார் அருணாசலம்.

காலை பேப்பர் வந்தவுடன் எடுத்து விரித்தார். தலைப்புச் செய்தியே ‘திடீர் மாற்றங்கள்!..’..என்னவோ ஏதோ என்று அவசர அவசரமாகப் படித்தார் அருணாசலம்.

அமெரிக்காவில் எதிர்பாராத பொருளாதார நெருக்கடியாம்! ‘சே!’ என்று பேப்பரை கீழே வீசி எறிந்தார்.

காலை மணி 7-30. டி.வி. யில் காலைச் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார்கள்.

‘முதல்வரின் முக்கிய அறிவிப்பு…மாநிலத்தில் இடைத் தேர்தல் முடியும் வரை மந்திரி சபையில் எந்த மாற்றமும் செய்யப் பட மாட்டாது!’

“அப்பாடா!….இந்த முறையும் தப்பித்தோம்!..” என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு நிம்மதியாக உட்கார்ந்தார் மாநில அமைச்சர் அருணாசலம்!

– 5-5-2014 இதழ்

கடந்த 60 ஆண்டுகளில் கதை, கட்டுரை, நாவல்கள், தொடர்கதைகள் என 600-க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியிருக்கும் துடுப்பதி ரகுநாதன், 80 வயதைக் கடந்த நிலையில் இன்னும் சுறுசுறுப்பாய் எழுதிக்கொண்டிருக்கிறார். தற்போது கோவை நஞ்சுண்டாபுரம் சாலை நேதாஜி நகரில் வசித்து வரும் துடுப்பதி ரகுநாதனை சந்தித்தோம். “பூர்வீகம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள துடுப்பதி. பெற்றோர் செல்லப்பன்-செல்லம்மாள். ஜவுளி வியாபாரம். பெருந்துறை உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி முடித்துவிட்டு, கோவையில் தங்கி கூட்டுறவில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *