கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 28, 2013
பார்வையிட்டோர்: 7,990 
 

“வாங்கடா சீக்கிரம், படம் ஆரம்பிச்சிடப் போறாங்க” என்று தன் நண்பர்களான சிவா, பாபு, மணி ஆகியோரை கிளப்பிக்கொண்டு திரையரங்கத்திற்கு உள்ளே சென்றான் ரவி. படம் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருந்த்த போது இடைவேளை வந்தது. “சரிடா, சாப்படறதுக்கு ஏதாவது வாங்கிட்டு வரலாம் வா” என்று சிவாவை அழைத்தான் ரவி. மணி சற்றே பதற்றத்தோடு இருப்பதைக் கண்ட ரவி, “என்னடா ஆச்சு? டென்ஷனா இருக்க?” என்று கேட்டான். “என்னோட பர்ஸ காணோம்டா. அதுல நூறு ரூபா, என்னோட காலேஜ் ஐடி கார்டு எல்லாம் இருந்தது. அதான்” என்றான். “இந்த சின்ன விஷயத்துக்கா இப்படி இருக்க?” என்று கிண்டலாகக் கேட்டான் சிவா. அதற்கு மணி, “சின்ன விஷயம் இல்லடா. ஐடி கார்டு இல்லனா காலேஜ்ல உள்ள விடமாட்டாங்க” என்று ஒரு சின்ன பயத்துடன் கூறினான் மணி. “கவலைப்படாத மணி. நாளைக்கு காலேஜுக்குப் போன உடனே வேற ஐடி கார்டு வாங்கிடலாம்” என்று அவனைத் தேற்றினான் ரவி.

ரவி, சிவா, பாபு, மணி ஆகிய நால்வரும் பள்ளிக்காலத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். ஏழாம் வகுப்பில் இருந்து கல்லூரி வரை ஒரே வகுப்பில் படித்து வருகின்றனர். நால்வரும் படிப்பிலும், விளையாட்டிலும், குறும்புத்தனத்திலும் சிறந்து விளங்குபவர்கள். ரவியின் பெற்றோர் அரசாங்க வேலையில் பணிபுரிந்து வருகின்றனர். அவனுக்கு ஒரு அண்ணனும் ஒரு தம்பியும் இருக்கின்றனர். சிவாவின் பெற்றோரும் மணியின் பெற்றோரும் மருத்துவர்கள். சிவாவுக்கு ஒரு அக்கா இருக்கிறார். மணி அவன் பெற்றோருக்கு ஒரே பிள்ளை, மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டவன். பாபுவின் தந்தை ஒரு பெரிய மளிகைக்கடை நடத்திவருகிறார். அவனுக்கு ஒரு தம்பி இருக்கிறான்.

பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு, நால்வரும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் சேர்ந்தனர். ஹாஸ்டலில் இவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைகள் ஓரளவு சௌகரியமாக இருந்தன. விடுமுறை தினங்களில் ஒன்றாக ஊர் சுற்ற ஆரம்பித்தனர். அப்படித்தான் இன்று அந்த திரையரங்கிற்கு வந்திருக்கும் போது மணியின் பர்ஸைக் காண்வில்லை.

மணியைத் தேற்றிவிட்டு ரவியும் சிவாவும் சாப்பிடுவதற்கு ஏதாவது வாங்கிவர வெளியே சென்றனர். அப்போது ஒருவன் யாரையோ தேடுவது போல இவர்களை நோக்கி வந்தான். மணியிடம் வந்து, “இந்த பர்ஸ் உங்களுதா?” என்று கேட்டான். அதைப் பார்த்து, “ஆமா, இது என்னோட பர்ஸ் தான். ரொம்ப நன்றி. எங்க இருந்தது?” என்று கேட்டான். அதற்கு அவன், “கீழ பாத்தேன். உங்க ஐடி கார்டு ஃபோட்டோ பாத்து உங்கள தேடிட்டு வந்தேன்” என்றான். “ரொம்ப நன்றிங்க” என்று அவனிடம் நன்றி கூறிவிட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டான். சில நிமிடங்களில் ரவியும் சிவாவும் திரும்பினர். அவர்களிடம் நடந்த விஷயத்தைக் கூறி மகிழ்ந்தான் மணி. படம் முடிந்ததும் நால்வரும் ஹாஸ்டலுக்குத் திரும்பினர்.

நால்வரும் வகுப்பில் இரண்டாம் வரிசையில் அமர்ந்து, பாடங்களை உன்னிப்பாக கவனித்து, குறிப்புகள் எடுத்துக்கொள்வார்கள். பாபுவும், ரவியும் பரீட்சைக்கு ஒரு வாரம் முன்பு தான் படிக்க ஆரம்பிப்பர். சிவா ஒவ்வொரு வாரமும் படிப்பான். மணி தினமும் படிப்பான். இருந்தாலும், ஒவ்வொரு பரீட்சையிலும் நால்வரும் 85 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் எடுப்பது வழக்கம். இவர்களுக்குள் போட்டி இருந்தாலும் பொறாமை இருந்ததில்லை.

வகுப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு எல்லாம் சரியாகவும், பொறுமையாகவும் பதில் சொல்வதால், வகுப்பு ஆசிரியர்களுக்கு மணிதான் செல்லப்பிள்ளை. இவனைப்போலவே ரேகா என்று ஒரு மாணவி இருந்தாள். நன்றாக படிப்பவள். திறமைசாலியும் கூட. தினமும் அடையாறில் இருக்கும் தன் வீட்டிலிருந்து கிளம்பி, காலை எட்டரை மணிக்கெல்லாம் கல்லூரிக்கு வந்துவிடுவாள். வகுப்புகள் முடிந்த பிறகு, மாலை ஐந்து மணிக்கு தன் வீட்டிற்கு புறப்படுவாள்.

மணிக்கும், ரேகாவுக்கும் தான் வகுப்பில் ஒவ்வொரு பரீட்சையிலும் யார் முதல் மதிப்பெண் பெறுகிறார்கள் என்ற போட்டி இருக்கும். ஒரு முறை மணி முதலிடம் பிடித்தால், அடுத்த முறை ரேகா முதலிடம் பிடிப்பாள். இதனாலேயே ஒருவர் மேல் இன்னொருவருக்கு மரியாதையும், நன்மதிப்பும் உருவானது. ரவி, சிவா, பாபு இவர்களுக்கு அடுத்த இடங்களைப் பெறுவர். இதுவே அந்த வகுப்பின் எழுதப்படாத விதியாக இருந்தது.

ஒரு நாள், மணியின் அறையில், அன்று வகுப்பில் நடந்ததைப்பற்றி பாபுவும் மணியும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மணியின் செல்ஃபோனுக்கு ஏதோ ஒரு அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்று மணி “ஹலோ” என்று சொன்னதும், “ஹலோ, ஈஸ் இட் மணி?” என்று அந்தப்பக்கத்தில் இருந்து ஒரு பெண் குரல் கேட்டது. “ஆமா. நீங்க?” என்று மணி கேட்க, “நான்தான் ரேகா பேசறேன். எலெக்ட்ரானிக்ஸ்ல இன்னிக்கு நடத்தினதுல ஒரு சந்தேகம் இருக்கு. உனக்கு தெரிஞ்சிருக்கலாம், உன்ன கேக்கலாம்னு தான் ஃபோன் பண்ணேன்” என்றாள் ரேகா. அதற்கு மணி, “ஓ அப்படியா. சரி சொல்லு ரேகா” என்று கூற, ரேகா தன் சந்தேகத்தைக் கேட்டாள். அவள் சந்தேகத்தைத் தீர்த்து வைக்க அவனுக்கு ஒரு மணி நேரம் ஆனது. இதை பார்த்துக்கொண்டிருந்த பாபு, “அடப்பாவி, இந்த சந்தேகத்த தான் நானும் கேட்டேன். ஆனா, நீ உனக்கே சரியா புரியலன்னு சொன்ன. இப்பொ ரேகாவுக்கு மட்டும் எப்படிடா புரியவெச்ச?” என்றான். “அவளுக்கே பாதி தெரிஞ்சிருந்ததுடா. அதனால ரொம்ப சுலபமாப் போச்சு”, என்றான் மணி. அதற்கு பாபு, “ஒரு பொண்ணு கேட்டா உடனே பண்ணிடுவீங்களே! என்னடா நடக்குது இங்க?” என்று சொல்லும் போது, ரவியும் சிவாவும் உள்ளே வந்தனர். அவர்களிடம் நடந்த விஷயத்தை பாபு கூற, மூவரும் மணியை கிண்டலடிக்க ஆரம்பித்தனர். அன்று முழுவதும் இதே கச்சேரி தான்.

நாட்கள் ஓடின. மணியும், ரேகாவும் வகுப்புக்குறிப்புகளை பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர். கல்லூரி நூலகத்திலும், கேன்டீனிலும் சந்தித்து அன்றைக்கு வகுப்பில் நடத்தப்பட்ட பாடத்தைப் பற்றி பேசுவர். அவர்களுக்குள் நட்பு வளரத் தொடங்கியது. அவர்களின் சந்திப்புகள் அதிகமானது. ஒரு நாள் மணியிடம் ரேகா, “என் அப்பாவும், அம்மாவும் உன்ன பாக்கணும்னு சொன்னாங்க. இந்த சனிக்கிழமை எங்க வீட்டுக்கு வரியா?” என்று கேட்க, அதற்கு மணி, “அப்படியா? என்ன விஷயம்?” என்று கேட்டான். மணி இது வரை தன்னுடைய எந்த ஒரு தோழி வீட்டிற்கும் சென்றதில்லை, அதனால் அவனுக்கு சிறு தயக்கம். “ஒன்னும் இல்ல. சும்மாதான். பயப்படாம வா. எங்கப்பாவும் அம்மாவும் எதுவும் சொல்ல மாட்டாங்க” என்று ரேகா கூற, மணியும் அதற்கு சம்மதித்தான்.

சனிக்கிழமையும் வந்தது. “இன்னிக்கு மத்தியானம் ஒரு மணிக்கு, ரவியும், பாபுவும், நானும் படம் பார்க்க போறோம்டா. நீயும் வரியா?” என்று மணியைப் பார்த்து கேட்டான் சிவா. அதற்கு மணி, “இல்லடா. இன்னிக்கு ரேகா அவ வீட்டுக்கு கூப்பிட்டிருக்கா. அங்க போறேன். அடுத்த தடவ நீங்க போகும்போது வர்றேன்” என்றான். அதற்கு சிவா, “என்னடா உன்ன மட்டும் வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கா? லவ் பண்றீங்களா ரெண்டு பேரும்? சொல்லவே இல்ல” என்றான். அதற்கு சிவா, “அப்படி எல்லாம் இல்ல டா” என்று சற்று வெட்கத்துடன் கூறுவதைக் கண்ட சிவா, “டேய், வெக்கப்படாத டா. அதான் உன் முகத்தைப் பாத்தாலே தெரியுதே. நல்லா இருந்தா சரி தான்” என்றான். “நன்றிடா. இன்னும் அவ கிட்ட லவ் சொல்லல. அவகிட்ட சொன்னதுக்கு அப்பறம் உங்ககிட்ட சொல்லலாம்னு இருந்தேன்” என்றான் மணி. “நான் அவங்ககிட்ட சொல்லிக்கறேன். நீ போய்ட்டு வா. குட் லக்” என்று கூறி அவனை வாழ்த்திவிட்டு கிளம்பினான் சிவா.

மாலை ஆறு மணி ஆனது. படம் பார்த்துவிட்டு மூவரும் நேராக மணியின் அறைக்குச் சென்றனர். “என்னடா மணி, எப்பொ வந்தே? சொல்லவே இல்ல. சிவா தான் எல்லாத்தையும் சொன்னான். கங்க்ராட்ஸ் டா. அவ கிட்ட சொல்லிட்டியா? என்ன சொன்னா ரேகா?” என்று கேட்டான் ரவி. அதற்கு மணி, “நான் நாலு மணிக்கே வந்துட்டேன்டா. அவங்க வீட்டுல இருந்து கிளம்பும் போது அவ கிட்ட என் லவ்வ சொன்னேன். ஆனா அவ சம்மதிக்கலடா. ரொம்ப கோவப்பட்டா. இனிமே நாம பேசக்கூட வேணாம்னு சொல்லிட்டா” என்று கூறினான். மேலும், “கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும் அழுதுட்டு இருந்தேன். அப்பறம் தான் யோசிச்சேன். நான் ஏன் அழனும்? அவள உயிருக்குயிரா காதலிச்ச ஒருத்தன அவ தான் இழந்துட்டா. அதனால இழப்பு அவளுக்கு தான். என்ன காதலிச்ச யாரையும் நான் இழக்கல. அதனால நான் அழக்கூடாதுன்னு நினைச்சேன்டா” என்றான் மணி. அவனை மூவரும் கட்டியணைத்து, அவனை எண்ணி பெருமைப்பட்டனர்.

“நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க. நானும் சிவாவும் கொஞ்சம் வெளியே போய்ட்டு வர்றோம்” என்று பாபுவிடம் கூறிவிட்டு சிவாவை அழைத்துக்கொண்டு வெளியே சென்றான் ரவி. சிவாவால் மணியின் செயலை நம்ப முடியவில்லை. “நம்ம மணியாடா இது? சாதாரணமாவே அவன் ரொம்ப பயந்தவன். எப்படி இவ்ளோ தெளிவா பேசறான்? இந்த மாதிரி நடந்தா அவனால தாங்க முடியாது, ஏதாவது தப்பான முடிவு எடுத்துடுவான்னு நினைச்சேன். நல்ல வேளை, என்ன ஆனாலும் பரவாயில்லை, வாழ்க்கையை சந்திக்கலாம்னு தைரியமான முடிவு எடுத்திருக்கான். ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றான் சிவா. அதற்கு ரவி, “அவன் அப்படி யோசிச்சிருக்க மாட்டான்னு நினைக்கிறேன்டா. அவன் தப்பான முடிவு எடுத்து இருந்தான்னா, அவனுக்கு அப்புறம் அவனோட அப்பா, அம்மாவ பாத்துக்க யாரும் இல்ல. அவங்க நிலைமையை யோசிச்சு பாத்து, அந்த பயத்துலதான் இந்த முடிவுக்கு வந்திருக்கான்னு நினைக்கிறேன்” என்றான். “அப்படியும் இருக்கலாம். எது எப்படியோ, நம்ம மணி நல்லா இருக்கான்டா. அது போதும்” என்று சிவா கூற, “ஆமாம்டா. பயமும் சில விஷயத்துல, சில நேரங்கள்ல நல்லதுதான்” என்றான் ரவி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *