பஞ்சவர்ணக்கிளிகள் பேசுமா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 24, 2023
பார்வையிட்டோர்: 2,663 
 
 

(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அது கிளிகளின் சரணாலயம். பஞ்சவர்ணக்கிளிகள் எங்கும் பறந்து திரிந்தன. அவற்றைப் பார்க்கப்பார்க்க எனக்குக் கிளிகளில் இத்தனை நிறங்களா என்று இருந்தது. பல வண்ண இறக்கைகளுடன் அவை தத்தித்தத்தி நடப்பது அழகாய் இருந்தது. சிவப்புக் கிளிமூக்குகள் நன்கு வளைந்திருந்தன. எங்கும் கீச் கீச் கீச் கீச்சென்று சத்தம் காற்றில் பரவியது. ‘ஹலோ’ என யாரோ என்னை அழைப்பதுபோல இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன் யாருமில்லை. பிரமையாய் இருக்கக்கூடும் என நினைத்தேன்.

சரியாகப் பத்து மணிக்கு காட்சி ஆரம்பித்தது. பஞ்சவர்ணக்கிளிகள் பல வண்ணங்களில் வலம் வந்து வித்தைகள் காட்டி மகிழ்வித்தன. காட்சி முடிந்ததும் அவற்றுக்குக் கொட்டைகளும் பழங்களும் வாரியிறைக்கப் பட்டன. அவை உண்டு மகிழ்ந்தன. அவை பறந்து போனபின் அந்த இடம் கிளிகளின் எச்சங்களாலும், மிச்சமிருந்த கொட்டைகளாலும் அசுத்தமாயிருந்தது.

கூட்டம் கலைந்தது. நானும் எழுந்து கொண்டேன். வாசற்படியைக் கடக்கையில் மீண்டும் ‘ஹலோ ஜோ’, ‘யார் என்னை கூப்பிட்டது?’ ஆச்சரியமாய் இருந்தது. சற்று நேரம் அங்கே இருக்கலாம் எனத் தீர்மானித்து ஒரு காலி இருக்கையில் போய் உட்கார்ந்து கொண்டேன். கையில் இருந்த பாப்கார்னைக் கொறித்துக் கொண்டிருந்தேன். யாராவது ஏதாவது சொல்வார்களோ என்று இருந்தது.

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. இரண்டு பெரிய கூண்டுகள் அங்கே இறங்கின. அவற்றின் எஜமானர் கூண்டைத்திறந்துவிட்டார். உள்ளிருந்து நான் காட்சிகளில் பார்க்காத பச்சைக்கிளிகள் தத்திக் கொண்டு வெளியே வந்தன. எஜமானர் அந்த இடத்தைச் சுத்தம் செய்யப் பணித்தார்.

பச்சைக்கிளிகள் ‘நான், நீ’ என்று தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டன. அந்த இடத்தை அவை வேகமாகச் சுத்தம் செய்தன. நான் பிரமித்துப்போய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு கிளி என்னருகே பறந்து வந்து “ஹலோ ஜோ” என்றது. நான் ஆச்சரியத்தோடு “உனக்கு என் பெயர் எப்படித்தெரியும்?” என்றேன். “எல்லாம் தெரியும்” என்றது. “நானும் உன் நாட்டைச் சேர்ந்தவன்” என்றது. “ஓ அப்படியா?” என்றேன். “நன்றாகப் பேசுகிறாயே?” என்றேன். “என் நண்பர்கள் பிரசங்கமே செய்வார்கள்” என்றது. “ஓ… இங்கு எப்படி? திசைமாறிய பறவைகளா நீங்கள்?” என்றேன். “பிழைப்புத் தேடி” என்றது. “சந்தோஷமாய் இருக்கிறாயா?” என்றேன். “பரவாயில்லை, சுகஜீவனம் இல்லாவிட்டாலும் பசியில்லை. வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் பணி செய்யப் பறந்து போனது.

அந்த அரங்கம் அடுத்த காட்சிக்குத் தயாராகி விட்டிருந்தது. எஜமானர் பச்சைக்கிளிகளைக் கூண்டுக்குள் போகும்படி கூறினார். எல்லாம் கூண்டுக்குள் வரிசையாகப் போயின. அவற்றுக்கு தலா ஒரு கொட்டை கொடுத்தார். என்னிடம் பேசிக்கொண்டிருந்த கிளி கூண்டின் கம்பிகளின் வழி அலகை நீட்டி “இங்கே பார், இது தங்கம்” என்றது. அப்போதுதான் கவனித்தேன். அந்தக் கூண்டின் கம்பிகள் மஞ்சளாகப் பளபளத்தன. என் கிளி “பைபை” சொன்னது. நானும் ‘பைபை’ சொல்லிவிட்டுக் கிளம்பினேன். அப்போது எஜமானரிடம் கேட்டேன் “பஞ்சவர்ணக்கிளிகள் பேசுமா?” அவர் சொன்னார்:

“இப்போதுதான் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.”

– திண்ணை, புன்னகைக்கும் இயந்திரங்கள் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: 2008, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

புன்னகைக்கும் இயந்திரங்கள் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: 2008, மணிமேகலைப் பிரசுரம், சென்னை. இந்நூலாசிரியர் திரு.இராம.வைரவன் தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் பிறந்தவர். இவரின் பெற்றோர் இராமநாதன் செட்டியார், நாச்சம்மை ஆச்சி. சிங்கப்பூரில் 10 ஆண்டுகளாகக் கணினி துறையில் பணியாற்றி வருகிறார். இது இவரின் முதல் சிறுகதைத் தொகுதி. எழுத்துலகம் சிறுகதை, கவிதை என விரிகிறது. படைப்புகள் இணைய இதழ்களிலும், சிங்கை, பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. இவரது க கவிதைகளும் பல பரிசுகளை வென்றுள்ள…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *