நோன்புக் கஞ்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 24, 2022
பார்வையிட்டோர்: 949 
 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(இந்தக் கதையின் பாத்திரப் படைப்பு கற்பனையே)

(எந்த ஒரு மனிதர் அந்த வினாடியில் தனக்கு மிக மிக அவசியத் தேவையான ஒன்றை அதே தேவையுடைய இன்னொருவருக்குத் தந்துவிட்டு எவரிடமும் சொல்லாமல் தனிமையில் சகித்துக் கொள்கிறாரோ அவருக்கு மறுமையில் நபி பெருமானோடு இருக்கும் பாக்கியமும் அல்லாஹ்வின் தரிசனமும் கிடைக்கும் என்பது நபிகள் பெருமானாரின் வாக்கு )

பதின்மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிங்கப்பூரின் புராதனச் செல்வம்தான் டன்லப் தெருவில் இருக்கும் அப்துல் கபூர் பள்ளிவாசல். தினம் தினம் வெளிநாட்டவர்கள் இந்த பள்ளிவாசலைக் கண்டு களித்து தன் புகைப்படக் கருவியில் அதைப் பொத்திக் கொண்டும் செல்கின்றனர். அந்தப் பள்ளிவாசலில் ரமலான் மாத நோன்புக் கொண்டாட்டங்கள் எப்படி இருக்கின்றன? பார்ப்போமா?

இந்தப் பள்ளிவாசலின் நோன்புக் கஞ்சி பிரசித்தி பெற்றது. நான்கு பேர் முடங்கிப் படுக்கக் கூடிய பெரிய பெரிய அலுமினிய அண்டாக்கள் ஆறில் நோன்புக் கஞ்சி காய்ச்சும் வேலை காலையிலேயே துவங்கிவிடும். சீராக நறுக்கப்பட்ட இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், மல்லித் தளை, ஆட்டிறைச்சி துண்டுகளில் கலை நுணுக்கம் தெரியும். பன்னிரெண்டு மணிக்கு கஞ்சி கொதிக்கும்போது அந்தச் சாலையின் எறும்புச் சாரிகள் கூட கொஞ்சம் நின்றுவிட்டுத்தான் பயணிக்கும். தினமும் எழுநூறு பேர் இங்கு வந்து கஞ்சி வாங்கிச் செல்கிறார்கள். ஊருக்கே காய்ச்சக்கூடிய பணக்காரர்கள் கூட பள்ளிவாசல் கஞ்சியில்தான் அல்லாஹ்வின் அருட்கொடை இருக்கிறது என்று நம்புகிறார்கள். நூற்றுக்கணக்கான உணவு வகைகளை வீட்டிலேயே செய்து நோன்பு திறக்கும் செல்வந்தர்கள்கூட பள்ளிவாசலில் நோன்பு திறப்பதில்தான் அல்லாஹ்வின் விருப்பம் இருக்கிறது என்று நம்புகிறார்கள். அதனால்தான் எழுநூறுக்கும் மேற்பட்டோர் இங்கு நோன்பு திறக்கக் கூடுகிறார்கள்.

சரி. இந்த கஞ்சி பகிரும் வேலை எப்படிச் செய்யப்படுகிறது. சில சம்பள ஆட்கள் இருந்தாலும் தொண்டூழியர்கள் பலர் முன்னின்று செய்வதால்தான் இந்தக் காரியங்கள் மடமடவென்று நடக்கின்றன.

இஸ்மாயில் ராவுத்தர். டன்லப் தெருவில் நாற்பது ஆண்டுகளாக தேநீர்க் கடை நடத்தி வருபவர். தொடர்ந்து தொண்டூழியம் செய்பவரும் மூத்த தொண்டூழியரும் இவர்தான். இன்று எழுபது வயது. அதனாலென்ன? பிள்ளைகள் கடையை கவனித்துக் கொள்கிறார்கள். நான்கு மணிக்கெல்லாம் ஊழியத்திற்கு தயாராகிவிடுவார். அவரின் வேகத்தில் சுழலும் பம்பரம் வெட்கப்படும். தர்மவான்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்கும் பப்பாளி, தர்ப்பூசணிப் பழங்கள் முதலில் நறநறவென்று தோல்சீவி சீராக துண்டு போட்டு தாம்பாளங்களில் சேர்ப்பார். ஈரான் பேரீட்சம்பழ டப்பாக்கள் மடமடவென்று பிரிக்கப்பட்டு சிறு சிறு தட்டுக்களில் தட்டுக்கு எட்டாக பிரிக்கப்படும். அதில் பழத் துண்டுகளும் சேர்க்கப்படும். பெயர் சொல்ல விரும்பாத சில என்ற அளவில் கொடையாளிகள் அறுநூறு எழுநூறு இடியப்பம், புரோட்டா பொட்டலங்களைக் கொண்டுவந்து இறக்குவார்கள். அதுவும் சீராக பகிரப்படும். ஆளுக்கு ஒரு கோப்பை என்ற கணக்கில் நூற்றுக் கணக்கான கோப்பைகளில் கஞ்சி சீராக ஊற்றப்படும். அத்தனையும் அந்தந்த மேசைகளுக்கு அனுப்பப்படும். முன்னமேயே இந்த மேசை நாற்காலிகளை சீராக விரித்துப் போடும் வேலையும் இவர்களுடையதுதான். மேலேகீழேயென்று எங்கு பார்த்தாலும் நோன்பு திறப்போரின் கூட்டம்தான். கஞ்சி வாங்கிச் செல்ல வருவோரும் சாரை சாரையாய் அமைதியாக நகர்ந்து நகர்ந்து வாங்கிக் கொண்டு செல்கிறார்கள். இத்தனை வேலைகளில் ஒரு பாதி வேலைகளை இஸ்மாயில் ராவுத்தர் ஒருவரே செய்கிறார். மறுபாதி வேலைகளைத்தான் மற்ற அனைவரும் செய்கிறார்கள்.

இத்தனையும் செய்யும் இஸ்மாயில் ராவுத்தர் தனக்கென நோன்பு திறக்க ஒரு கஞ்சிக் கோப்பை, ஒரு பேரீட்சை கனி தவிர வேறு எதையும் எடுத்துக் கொள்ளமாட்டார். ஓர் ஓரமாக உட்கார்ந்து கொண்டு ஆளோடு ஆளாக நோன்பு திறந்துவிட்டு தொழுகைக்கு புறப்பட்டு விடுவார்.

அன்று ஞாயிற்றுக் கிழமை. சரியான மழை. பங்களாதேஷ், பாகிஸ்தான், இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான இஸ்லாமியச் சகோதரர்கள் பள்ளிவாசலில் நோன்பு திறக்க கூடிவிட்டார்கள். இஸ்மாயில் ராவுத்தருக்கு அன்று இடுப்பொடியும் வேலை. ஞாயிற்றுக்கிழமையல்லவா? உணவுப் பொட்டலங்களுடன் வண்ண வண்ண குவே தட்டுக்களும் பலர் அனுப்பி யிருந்தார்கள். அத்தனையும் பகிர்ந்தே ஆகவேண்டும்.

நாளைக்கென்று எதையுமே வைக்கமுடியாது. மணி ஆறு தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. சுழன்று சுழன்று இயங்குகிறார் இஸ்மாயில் ராவுத்தர். மணி இப்போது ஏழு. எல்லாருக்கும் ஒரு வழியாக பகிர்ந்து முடிந்துவிட்டது. வழக்கம்போல் தனக்கென ஒரு கோப்பை கஞ்சியையும் ஒரு பேரீட்சம்பழத்தையும் எடுத்துக் கொண்டு வாசல் கேட்டின் அருகே தரையிலேயே உட்கார்ந்து கொண்டார் அப்போதுதான் அந்த தொன்னூறு வயது மலாய்க் கிழவர் நோன்பு திறக்க வென்று பள்ளிவாசலுக்குள் நுழைகிறார். மணி 7.13. இன்னும் இரண்டு நிமிடங்களில் நோன்பு திறப்பதற்கான வசனம் சொல்லப்படும். இஸ்மாயில் ராவுத்தர் சுற்றுமுற்றும் பார்த்தார். யாரும் அந்தக் கிழவரை சட்டை செய்வதாக இல்லை. சுழன்று விழுவதுபோல் உணர்கிறார் இஸ்மாயில் ராவுத்தர். நோன்பு திறப்பதற்கான அந்த நேரத்தை வினாடி வினாடியாக எண்ணிக் கொண்டிருந்தார் அவர். ஒரு மொடக்கு கஞ்சி உள்ளே இறங்கினால் மயக்கம் தெளிந்துவிடும். இதோ மணி 7.14. நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அட! நோன்பு திறக்கும் வசனமும் ஆரம்பித்து விட்டார்கள். அந்தக் கிழவர் வெறுங்கையுடன் அப்படியே நின்றுகொண்டிருக்கிறார்.

தன் கஞ்சியை அப்படியே அந்தக் கிழவரிடம் கொடுத்து அங்கேயே அமர்ந்து குடிக்கச் சொல்லிவிட்டு விடுவிடுவென தொழுகைக்காக கைகால்களை சுத்தம் செய்யும் குழாயடிக்கு விரைந்தார் இஸ்மாயில் ராவுத்தர். கையிலிருந்த பேரீட்சையால் நோன்பைத் திறந்தார். மடக்மடக்கென்று குழாய்த் தண்ணீரைக் குடித்து விட்டு கைகால்களை கழுவிக் கொண்டு தொழுகைக்கான வரிசைக்கு விரைந்துவிட்டார்.

அந்தத் தண்ணீரிலேயே அவருக்கு அத்தனை வலிமையும் திரும்பி புத்துணர்ச்சியுடன் அவர் தெளிந்துவிட்டது ஆச்சரியமாகத்தான் இருந்தது. பள்ளிக் குள்ளிருந்து அவர் எட்டிப் பார்த்தார். அந்தக் கிழவர் இன்னும் ரசித்து ருசித்து சுவைத்துக் கொண்டிருந்தார். அவரை அப்படிப் பார்த்ததில் இஸ்மாயில் ராவுத்தருக்கு வயிறு நிரம்பிவிட்டது. இதோ தொழுகைக்கான பாங்கு சொல்லிவிட்டார்கள். எல்லாரும் தொழுகைக்கு விரைந்தார்கள்.

அன்று இரவு தராவீஹ் தொழுகையில் தொழுகை நடத்திய இமாம் தன் பிரசங்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘தியாகம் என்பதில் எத்தனையோ படிகள் உண்டு. வசதி படைத்த செல்வந்தர்கள் தன் உபரிச் செல்வத்தை வாரி வாரிவழங்குவதும் தியாகம்தான். நடுத்தர வர்க்கத்தினர் செலவுகளை சிக்கனமாக்கிக் கொண்டு கிள்ளிக் கொடுத்தாலும் தியாகம்தான். எந்த ஒரு மனிதர் அந்த வினாடியில் தனக்கு மிக மிக அவசியத் தேவையான ஒன்றை அதே தேவையுடைய இன்னொருவருக்குத் தந்துவிட்டு எவரிடமும் சொல்லாமல் தனிமையில் சகித்துக் கொள்கிறாரோ அவருக்கு மறுமையில் நபி பெருமானோடு இருக்கும் பாக்கியமும் அல்லாஹ்வின் தரிசனமும் கிடைக்கும். ஆம். அதுதான் ஒப்பற்ற தியாகம்.’

அடேங்கப்பா! அல்லாஹ்விடத்தில் எத்தனை பெரிய பதவி காத்துக் கொண்டிருக்கிறது இஸ்மாயில் ராவுத்தருக்கு.

– கட்டை விரல் ஆகட்டும் கல்வி, முதற் பதிப்பு: 2012, தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *