அனுமன் வால் போல் நீண்டது அப்பயணம். தொடங்கியது யார் தொடங்கி வைத்தவர்கள் யார்? என்று யாருக்கும் தெரியாது. ஆனால் தொடர்ந்து கொண்டுள்ளது முடிவில்லாத அப்பயணம்.
அப்பயணத்தை நான் எங்கிருந்து ஆரம்பித்தேன் என்று சரியாக இப்போது நினைவில்லை. ஆனால் வானைத் தொட்டு நின்ற அந்த மலையில் வெண்மேகம் தவழ்ந்து கொண்டிருந்த அந்த காட்சிதான் எனக்கு இப்போது நினைவில் உள்ளது.
அந்த அழகிய காட்சியில் இருந்துதான் என்னுடைய பயணம் தொடங்குகிறது. அப்படின்னா அதுதான் என்னுடைய துவக்கப் புள்ளி என்று நினைக்கிறேன்.
அழகிய அந்த மலையிலிருந்து அருவி பால்போல் துள்ளி குதித்து ஓடிக் கொண்டிருந்தது. மலர்கள் காற்றில் மணத்தைத் தூவிக்கொண்டிருந்தன. எங்கும் பசுமையாகக் காட்சியளித்தது. அங்கு ஒரு இளைஞனைப் பார்த்தேன். அவன்தான் என்னுடைய கண்ணில் பட்ட முதல் ஆண்மகன்.
அழகாய் இருந்த அவன் நடந்து சென்று கொண்டிருந்தான். தென்றல் காற்று அவனைத் தழுவிச்சென்றது. வேங்கை மலர் அவனை வரவேற்றது. பூத்துக்குலுங்கிய குறிஞ்சி மலரைக் கண்டு ஆனந்தமடைந்தான். காற்றில் அசைந்து கொண்டிருந்த தென்னை மரத்தை உற்றுப் பார்த்தான். இருப்புக்கொள்ளாமல் ஓடிச்சென்று பசுமையான தென்னங்கீற்றின் இலைகளைக் கிழித்தெறிந்தான். அதன் ஈர்க்குகளைக் கொண்டு விளையாட ஆரம்பித்தான்.
பார்க்க அது வேடிக்கையாய் இருந்தது. நான் மெல்ல அடியெடுத்து வைத்து அவனைக் கடந்து நடக்க ஆரம்பித்தேன்.
சற்றுத் தொலைவில் ஒரு பெருங்கூட்டம் வந்துகொண்டிருந்தது. கூட்டத்தின் தலைவன் பார்க்க அறிவாளி போல் தெரிந்தான். அவன் கூட்டத்தை வழிநடத்திய அழகு என்னை மிகவும் கவர்ந்தது. கூட்டத்திலிருந்தவர்களில் சிலர் பாட்டுப்பாடினார்கள். சிலர் யாழிசைத்தார்கள். இன்னும் சிலர் வேடமிட்டு நடிகராகவே மாறினார்கள். அவர்களின் ஆடலும் பாடலும் அற்புதமாக இருந்தன.
ஆட்டத்தின் நடுவில் ஒருவன் வாழைப் பூவைக் கையில் உருட்டி விளையாடிக் கொண்டிருந்தான். விநோதமான ஆட்டத்தின் புரியாத பொருள் அதன் பிறகு ஐந்து நானூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஒளி ஒலியில் பார்த்து கேட்டு ரசித்த போது நன்கு புரிந்தது எனக்கு.
அதனிடையே என்னுடைய பயணம் தொடர்ந்தது.
திடீரென்று நான் சென்றுகொண்டிருந்த பாதை தடைப்பட்டது. என்ன செய்வது என்று யோசித்து நின்றேன். என்னுடைய பயணம் இவ்வளவு தானா? என்று தோன்றியது எனக்கு. உலகமே இருளில் மூழ்கியது போல் இருந்தது. எதுவுமே கண்ணில் படவில்லை.
செய்வதறியாது திகைத்து நின்ற போது ஒரு குரல் கேட்டது. உற்றுப் பார்த்தபோது தான் தெரிந்தது அது ஒரு வயதான பெரியவர் குரல் என்று. அவர் வயலில் உழுதுகொண்டிருந்தார். நன்றாக விவசாயம் செய்பவர் போல் தெரிந்தார் அவர்.
அவருக்குத் துணையாக ஒரு சிறுவனும் இரண்டு நல்ல நண்பர்களும் இருந்தார்கள் என்று பிறகு தெரிந்தது எனக்கு.
அவரைக் கண்ட போது எனக்குக் கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது. நம் பயணம் அவ்வளவு தானா? என்று தவித்த என் மனம் சற்று அமைதி அடைந்தது. திருப்தியாக ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த போது கனவு என் அமைதியைக் களைத்தது. கனவில் கண்டவற்றை பற்றிப் பலமுறை யோசித்த போதும் எதுவும் நினைவுக்கு வரவில்லை.
அது பற்றிச் சிந்தித்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தேன். இடையே வழியில் ஒரு துறவியைக் கண்டேன்.
தலை நறைத்திருந்த அவர் பார்க்க அனைத்தையும் துறந்தவர் போல் காணப்பட்டார். அப்படிப்பட்டவர் மைதானத்தில் இறங்கித் தனியாய் பந்து விளையாடிக் கொண்டிருந்தார். வியப்பாய் இருந்தது எனக்கு. ஒரு துறவியால் விருப்பமில்லாமல் பந்து வியைாட முடியுமா? அவரிடம் அக்கேள்வியைக் கேட்கலாமா? என்று நினைத்தேன்.
அதற்குள் அதை உணர்ந்தவராய் “துறவியால் தனியாக விளையாட முடியும்” என்றார். அவரது அந்தப் பதில் சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை அப்போது.
அந்த நினைவோடு சென்று கொண்டிருந்த போது “சொக்கத் தங்கம்…. “ என்று பக்திப் பரவசத்தில் பாடிக்கொண்டிருந்த பாடல்கள் என் காதுகளுக்கு விருந்தாய் அமைந்தது.
அதை ரசித்துக்கொண்டிருந்த போது அப்பாடலைப் பாடியவர்களில் ஒருவன் பருத்த தென்னங்குலையை வாய்ப்பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவனது வாயில் இருந்து எச்சில் வழிந்துகொண்டிருந்தது. அதைப் பற்றி அவன் கலைப்பட்டதாகத் தெரியவில்லை.
அவனுக்குப் பக்கத்தில் இருந்தவன் பார்ப்பதற்கு முனிவனைப் போல் இருந்தான். அவன் பரந்து விரிந்திருந்த தடாகத்தைக் கண்களால் பருகிக்கொண்டிருந்தான். தடாகத்து நீர் அவன் தாகத்தைத் தணிக்கப் போதுமானதாக இல்லைப் போலும், அதனால் அவன் மலைகளை வெச்ச கண் வாங்காமல் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் பார்த்துக்கொண்டிருந்த மலைகளைக் கடந்து செல்ல முயன்றபோது ஒரு அழகிய கிராமம் என் கண்ணில் பட்டது.
ஒளியூர் என்பது ஊரின் பெயர். நிலவொளியை ஆடையாக உடுத்துவது அங்குள்ள திருமணமான பெண்களின் வழக்கமாக இருந்தது. இரவுப்பொழுதில் கதவு சன்னல்களைச் சரிசெய்யும் வேலையைச் செய்யும் அவர்கள் அப்படியே உறங்கிவிடுவார்கள். அவ்வாறு உறங்கும் பெண்களை விடியற்காலையில் எழுப்புவதற்கென்று அங்குச் சிலர் வேலையில் அமர்த்தப்பட்டிருந்தார்கள். அவர்கள் அதிகாலைப் பொழுதில் சென்று ஒவ்வொரு வீட்டுக் கதவினைத் தட்டிக் களைப்பில் அசந்து உறங்கும் பெண்களின் தூக்கத்தைக் கெடுப்பார்கள். அதுதான் அவர்கள் வேலை.
அதற்காக அவர்களுக்கு நல்ல சம்பளமும் கிடைக்கும்.
அந்த ஊரில் நடக்கும் வினோதமான செயலைப் பார்த்து விழி பிதிங்கி நின்றேன். ஒன்றும் புரியவில்லை எனக்கு. அப்போது அவ்வூரைப் பற்றி நன்கு அறிந்த ஒருவர் சொன்னார் “தம்பி உனக்கு இதைப் புரிந்துகொள்ள வயது போதாது. ஆனால் ஒன்று உனக்கும் ஒரு நாள் இது புரியும் என்று”. அவர் அவ்வாறு சொன்னபோது ஏதோ கொஞ்சம் புரிவது போல் தோன்றியது. பிறகு பிரம்மையாகக் கலைந்தது
சரி புரியும்போது புரியட்டும் என்று அங்கிருந்து புறப்பட்டேன். அதன் பின்னர் நெடுந்தூரம் கால் கடுக்க நடந்ததாக நினைவு.
ஆனால் எதுவும் எனக்கு நினைவில் இல்லை.
– சிற்றேடு (ஜனவரி – மார்ச் 2017)