நீலவர்ணத்திலிருந்து தப்பித்தல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 15, 2013
பார்வையிட்டோர்: 10,026 
 
 

குரோதம் மட்டுமே கொண்டிருந்த கடலினோடு எந்தப் பரிச்சயமுமற்ற நைஷாபோல் புனித ராயப்பரின் வருகைக்காகக் கடலுக்குச் சற்றும் பொருத்தமற்ற மிகச்சிறிய பைபர் படகில் காற்று ரீங்கரிக்கும் நடுக்கடலில் காத்திருந்தான்.

பயணியைப்போலவோ மீன்பிடிப்பவனைப்போலவோ தோற்றம் தந்திராத நைஷாபோலை பலகாலம் கரையொதுங்கி கிடந்த படகு நீலவர்ணத்திற்குள் அழைத்துவந்திருந்தது. பெரும் அலைக்குத் தாங்காத இற்றுப்போன பைபர் படகென்றாலும் மிதக்கும் தன்மை கொண்டிருந்ததால் அது கடலில் மிதந்துகொண்டிருந்தது.

பாதை மாறாத சரக்குகப்பல்களுக்கான நீர்வழித்தடத்திற்கு வெகுதொலைவில் அப்படகு மிதந்துகொண்டிருந்ததால் எந்த ரடாரிலும் ஒரு புள்ளியைக்கூடக் காண்பித்திருக்கவில்லை. படகிலிருந்து குதித்து இறங்கிய நைலான் கயிற்றில் மிககனங்குறைந்த நங்கூரத்தை நைஷாபோல் கடலுக்குள் இறக்கியிருந்தான். நீளங்குறைந்த நைலான் கயிற்றில் தொங்கிகொண்டிருந்த நங்கூரம் பதினைந்து கிலோவிற்கு மேல் எடையில்லாத கான்கிரீட் பிளாக் தானென்றாலும் அது கடலின் ஆழத்திற்குள் இறங்கியிருக்கவில்லை. நங்கூரமாகப் பயன்படுத்த அதுதான் அவசரத்திற்குக் கிடைத்திருந்தது. கடல்நீரால் ஒவ்வாமை கொண்டிருந்த கான்கிரீட்டால் செய்யப்பட்டிருந்த பிளாக் உதிரும்தன்மையை அடைந்திருந்தது.

நீர் விளையாட்டு பயிற்சிக்காகப் பயன்பட்டு வந்த படகு பேரலையில் திசைமாறி நண்பனின் கைக்கு அதிர்ஷ்டம்போல வந்தடைந்திருந்தது. கரை ஒதுங்கி கிடந்த படகை சொந்தம் கொண்டாடி யாரும் வந்திருக்காததால் நெடுங்காலம் கைவிடப்பட்டிருந்த அப்படகை மிகசொற்ப விலைக்கு நைஷாபோலின் தலையில் தென்னாட்டைச் சேர்ந்த நண்பன் கைமாற்றியிருந்தான். படகின் நீர்கசிவு பிரதேசங்களில் எம் ஸீலைக்கொண்டு அடைத்திருந்ததால் கடலில் மிதக்கும் தன்மையை அப்படகு மிச்சம் வைத்திருந்தது. தென்னாட்டைச் சேர்ந்தவனும் பல பெயர்களைக் கொண்டிருந்தவனுமான நைஷாபோலின் நண்பன் சவுதி அரேபியாவிலிருந்து வெளியேறுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் கச்சிதமாகச் செய்திருந்தான்.

பிளாஸ்டிக் கூடுகளில் கட்டப்பட்ட உணவுபொட்டலங்களும் காலி பெட்ரோல் கேன்களும் படகின் உள்பரப்பை விழுங்கியிருந்தன. தலையில் ஒரு கனமான தொப்பியை எலாஸ்டிக் வாரின் உதவியில் நிறுத்தி சுற்றுலாதனத்தை உருவாக்கும் கற்பனைகளை நைஷாபோல் கொண்டிருந்தான். தொப்பிக் கச்சத்திலிருந்து தலையைப் பாதுகாக்கும் தகுதியை அவன் படகில் ஏறிய துர்பாக்கியம் நிறைந்த அக்கணத்திலேயே கைவிட்டிருந்தது. கச்சத்தால் படகின் உள்கூட்டில் நிறையும் தண்ணீரை வெளியேற்ற எந்தக் கைப்பம்பும் பொருத்தப்பட்டிருக்காத அப்படகு நீண்ட பயணத்திற்கான எந்தச் சௌகரியங்களையும் கொண்டிருக்கவில்லை.

நைஷாபோலின் படகு மிதந்துகொண்டிருந்த கடல்பரப்பை அடைய புனித ராயப்பருக்கு அதிகக் காலம் எடுக்காதென்றாலும் அதிக விபத்துக்களால் சிதைந்திருந்த கடல்பிரதேசத்தில் அவர் மட்டுமே கடலோடிகளுக்கு உதவிக்கொண்டிருந்தார். ஏற்பாடு செய்திருந்த தென்னாட்டைச் சேர்ந்த நண்பன் மூன்று நாட்களுக்கு ஒருமுறையேனும் புனித ராயப்பர் அப்பிராந்தியத்தினுள் வந்துசெல்லும் வழக்கம் உண்டென்று நம்பிக்கையூட்டியிருந்தான்.

சவுதி அரேபிய பாலையில் நைஷாபோலுக்குத் தெரிந்த ஒரே முகம் அவன் தானென்பதால் நம்புவதைத் தவிர வேறுவழி தென்பட்டிருக்கவில்லை. தென்னாட்டைச் சேர்ந்த நண்பன் நெடுங்காலம் சவுதியில் வாழ்ந்து வந்திருந்தாலும் அதிகத் தொடர்புகளைக் கொண்ட அவனுக்கும் எந்தக் காதலியும் அப்பாலையில் இருந்திருக்காதது நைஷாபோலை ஆறுதல்படுத்தியிருந்தது. சவுதி அரேபியாவிற்கே நைஷாபோலின் நண்பன் மாத்திரம்தான் நம்பிக்கைகளை ஏற்றுமதி செய்துகொண்டிருந்ததால் அப்பாலை நம்பிக்கைகளால் நிரம்பியிருந்ததைக் கவனித்திருந்தான்.

நெடும்பயணம் வந்த வழியெங்கும் பூப்பெய்திய மீன்கள் இயந்திரம் உந்திக்கொண்டிருந்த படகை கடந்து போனது அவனைத் தற்செயலான பிரம்மைக்குள் தள்ளியிருந்தது. பலவர்ணங்களைகொண்டிருந்த அவைகள் நீலவர்ணத்திற்குள் நீந்திக்கொண்டிருப்பதைக் கவனிக்கும் வாய்ப்புகளைக் கடல்நோய்பீடித்திருந்த உடம்பு தந்திருக்காதது அவனைத் துரதிர்ஷ்டத்திற்குள் தள்ளியிருந்தது.

வலங்கம்பாறை மீன்களும் வழியெங்கும் தென்பட்டிருந்தாலும் அவைகளிடம் புயலுக்கான எந்தப் பதட்டமும் இருந்திருக்கவில்லை. பெட்ரோல் தீர்ந்த படகு ஜீவனை இழந்து நீரோட்டத்தில் இழுபடும்வரை பொறுமைகொண்டிருந்த உடம்பு வாந்தியை துவக்கியிருந்தது.

தனிமையைக்கொல்ல ஒரு மண்புழுக்கூடக் கோர்க்கப்பட்டிராத தூண்டிலை கடலில் வீசியிருந்தான். பிளாஸ்டிக்பொம்மையிலிருந்து திருடப்பட்ட மினுங்கும் துணியைத் தூண்டிலில் கட்டியிருந்தானென்றாலும் பரந்தகடலில் அது தன் பொருத்தத்தை இழந்திருந்தது. மினுங்கும் துணி மீன்களை வசீகரிக்கப்போதுமான குணங்கொண்டிருந்தாலும் மீன்களின் பரிதாபப்பார்வையைச் சகிக்கும் பக்குவம் அவனுக்கு இருந்திருக்கவில்லை. தூண்டிலைசுற்றி நீந்திக்கொண்டிருந்த திருக்கை மீன்கள் அவனது சாமர்த்தியங்களுக்கு வெளியே இருந்தன.

வளைகுடாவின் கடற்பரப்பில் தாக்கும் திறன்கொண்ட திருக்கை மீன்களே பலகுறும்புகளையும் செய்து புனித ராயப்பரின் அன்பை இழந்திருந்தன. பதட்டங்கொண்டு நீந்திக்கொண்டிருந்த திருக்கை மீன்கள் இந்தியப்பெருங்கடலில் உருவாகியிருந்த கோனுபுயலின் திசையை உணர்ந்திருந்ததால் இடம்பெயர்வதற்கான ஆலோசனையில் இருந்தபோதுதான் நைஷாபோலின் கேணத்தனமான வருகையைக் கண்டு கவலையடைந்திருந்தன.

கையடக்க ஜிபிஎஸில் அடிக்கடி பரிசோதித்துகொண்டிருந்த நைஷாபோல் அப்பொருட்களை அடைய அதிக விலையைக் கொடுத்திருந்தான். சரியான பாகையில் பயணித்திருந்தாலும் அவனுக்குச் சொல்லப்பட்ட இடத்தை அடையுமுன்னே பெட்ரோல் தீர்ந்திருந்தது. மிககுறைவான திறனுள்ள இயந்திரத்தை படகில் பொருத்த கழுத்தில் கிடந்த மூன்றுபவுன் தங்கசங்கிலியை கொடுத்திருந்தான்.

அவனது நிச்சயார்த்தத்திற்காகப் பெண்வீட்டிலிருந்து தங்கசங்கிலியை அணிவித்திருந்தார்கள். சவுதி அரேபியாவிற்குக் கிளம்பிக்கொண்டிருந்த அவனுக்கு அவசரம் நிரம்பிய நிச்சயதார்த்தம் பெருங்கூச்சத்துடன் நடந்திருந்தது. பொறாமையுடன் வழியனுப்ப வந்த சொந்தங்களிடையே அப்பெண்ணும் நின்று கொண்டிருந்ததை நைஷாபோல் கவனித்திருந்தான். தன் காதலிக்கு கொண்டுவந்த கடைசி முத்தத்தை விமானத்தில் பறந்தபடி வெளியே வீசியெறிந்ததை யாரும் கவனித்திருக்காதது பயணத்தைச் சௌகரியமாக்கியிருந்தது. கர்ப்பம் கலைக்கப்பட்டிருந்ததால் உடல் சோர்வுற்றிருந்த அவனது காதலி வழியனுப்ப வந்திருக்கவில்லை.

பயணத்திற்குப் போதுமான பெட்ரோல் நிரப்பியிருந்தானென்றாலும் கடற்பயணத்திற்குப் பொருத்தமற்ற அவனைப் போலவே இயந்திரமும் இருந்தது. அதிகமான பெட்ரோலை செலவழித்திருந்த இயந்திரம் அவனைப் பெருவழியில் கொண்டாக்கியிருந்தது.

அதிர்ஷ்டத்தைத் தருவிக்கும் கோல்மீன்களை வேட்டையாட வருபவர்களே அப்பிரதேசத்தினுள் வந்துபோவது வழக்கத்தில் இருந்ததை அவனது நண்பனுங்கூட அறிந்திருக்கவில்லை. அபாயகரமான வேட்டைபிரதேசமாக அறிவிக்கப்பட்டிருந்த கோல் கிரவுண்டை வந்தடைய வேட்டையர்கள் பெரும்பாலும் விரும்புவதுண்டென்றாலும் கோனுபுயலின் திசையிலிருந்து விலகிக்கொள்வதற்காக அப்பிரதேசத்தைவிட்டு வெளியேறியிருந்தார்கள். ஓமானின் தெற்கே பல நாட்டிக்கல் மைல் தொலைவில் கோல் கிரவுண்ட் இருந்தது.

இரவிலும் பகலிலும் தண்ணீரின் ஏக்கத்தை வாரியிறைத்த காற்றை எதிர்கொள்ளச் சதா ஜெபித்துகொண்டிருந்த அவனைநோக்கி புனித ராயப்பர் வந்துவிடுவாரென்ற நம்பிக்கை நீலவர்ணத்தைபோல எல்லாப் பரப்பிலும் இருந்தது. வளைகுடாவிலிருந்து தப்பித்து வருபவர்களை அவரவர் நாட்டிற்குகொண்டு சேர்ப்பிக்கும் வெட்கங்கெட்ட வேலையையும் புனித ராயப்பரே செய்து கொண்டிருந்ததால் அவரது நேரமின்மையைகுறித்துக் கடலோடிகளிடையே முணுமுணுப்பு இருந்தது. மனிதர்கள் நீந்துவதற்குத் தோதற்ற அப்பிரதேசத்தில் பிணங்களுக்குக் கவனிப்பு கிடைத்துவந்ததை யாரும் விரும்பியிருக்கவில்லை.

வழிதவறிய யாத்திரீகனின் தோற்றத்தில் உலவிய புனித ராயப்பரை கப்பலின் தலைமை அதிகாரிகள் அறிந்துவைத்திருந்தார்கள். புனித ராயப்பரின் பயணதிசையோடு எந்தக் கப்பலும் குறுக்கிடுவதில்லையென்பதால் தங்குதடையற்ற பயணியான அவரால் கடலின் எல்லாப்பரப்பிலும் யாத்திரை செய்ய முடிந்தது. கடலில் மிதக்கும் பிணங்களை மீட்கவும் அடக்கம் செய்யவும் பிரார்த்திக்கவும் எந்தத் துணையுமில்லாமல் அவராகவே செய்துவந்தார். அதற்கான பிரத்தேக அனுமதிக்கு சவுதி அரேபியாவோடு எந்த ஒப்பந்தமும் செய்திருக்கவில்லையென்றாலும் புனித ராயப்பர் அனுப்பிய விண்ணப்பம் நிலுவையில் இருந்தது. வளைகுடாவில் மரிக்கும் வேலையாட்களைக் கடலில் வீசும் வழக்கத்தை மாற்றிக்கொள்ள வேறுமார்க்கங்கள் வளைகுடாவாசிகளுக்குத் தென்பட்டிருக்காததால் பிணங்களைக் கடலில் வீசிக்கொண்டிருந்தார்கள்.

சவுதி அரேபியாவிலிருந்து வெளியேறும் மனித உடல்கள் பொதுவே அக்கடல் பரப்பை வந்தடைவதற்குள் உருகுலைந்துவிடுவதால் அப்பரப்பில் எந்தப் பிணங்களும் அதிககாலம் மிதப்பதில்லை. மிதக்கும் பிணங்களைக் கைப்பற்றி அடக்கம் செய்வது சரிவர நடந்து வந்ததால் அக்கடல் பிரதேசத்தில் கைவிடப்பட்ட பிணங்களை வளைகுடாவாசிகள் வீசுவதற்கு எந்த முணுமுணுப்பும் எழுந்திருக்கவில்லை.

புனித ராயப்பர் அக்கடலில் மிதக்கும் உடைந்த பொருட்களைக் கரையேற்றும் ஆட்களோடு எந்த ஒப்பந்தமும் செய்திருக்காததால் அவர்களுக்குள் லேசான வாக்குவாதங்கள் நிகழ்வதுண்டு. அவர்கள் கப்பல்களிலிருந்து கசிந்த கச்சாஎண்ணைய் கழிவுகளை மாற்றுவதிலேயே பெருங்கவனங்கொண்டிருந்தார்கள். மனித உடல்களை அவர்கள் மிதக்கும் பொருளாகக் கருதியிருக்காததால் ஆங்காங்கே வீசப்பட்ட உடல்கள் புனித ராயப்பரை நம்பியே மிதக்கும் வழக்கத்தை வைத்திருந்தன.

கச்சாஎண்ணைய் கழிவுகளால் எரிச்சலுற்ற கூட்டமான மீன்கள் தற்கொலை செய்வது அடிக்கடி நிகழ்ந்து வந்த அப்பிரதேசத்தில் அவைகளைக் கரையேற்ற யாரும் ஒப்பந்தங்கள் செய்திருக்கவில்லை. சுயபாதுகாப்பிற்காகத் தற்கொலை செய்யும் மீன்களைப்போலத் தற்கொலை செய்யும் மனிதர்கள் அக்கடல் பிராந்தியத்தினுள் வராதது புனித ராயப்பருக்கு ஆறுதலை தந்திருந்தது.

கொடுப்பினைபோல வழங்கப்பட்டிருந்த படகில் நைஷாபோல் அதிரும்காற்றைப் புறங்கையால் விலக்கியபடி பெருங்கடலில் நுழைந்திருந்தான். கோனுபுயலின் அதிர்ஷ்டம்கெட்ட முகத்திற்குப் பயந்து சரக்குக் கப்பல்கள் வளைகுடா பிரதேசத்திலிருந்து வெளியேறியிருந்தன. சரக்குகப்பல்களின் நீர்வழிதடத்திற்குள் நுழையும் படகுகள் கவிழ்ந்துவிடுவது சகஜமாயிருந்த வளைகுடா பிரதேசத்தில் அச்சிறிய படகு எச்சேதமும் இல்லாமல் மிதந்துவந்திருந்தது. சரக்குக் கப்பல்கள் கிளப்புகிற அலைகளில் சிறிய படகுகள் தாக்குபிடிக்க முடியாதென்றாலும் அவனது படகு தளும்பி தளும்பி நகர்ந்து வந்திருந்தது. சரக்குகப்பல்கள் புயல் திசையிலிருந்து வெளியேறியிருந்ததால் எந்தத் தொந்தரவுகளும் இல்லாமல் அவன் பயணப்பட்டிருந்தான்.

ஈரானின் கிஷ் தீவின் அருகே பயணிக்கும்படி நண்பன் வற்புறுத்தியிருந்ததால் நைஷாபோல் ஜிபிஎஸ் நேவிகேட்டரில் பாகையைக் கவனமாகக் கையாண்டிருந்தான். சரக்குகப்பல்களின் தொந்தரவுகளிலிருந்து தப்பிக்கவே உயிர் பயமற்றவர்கள் அவ்வழியைப் பயன்படுத்தும் வழக்கமிருந்தது. பாகிஸ்தானின் கடற்பிரதேசங்கள் வழி இந்தியாவை அடைவது அவ்வளவு எளிதல்லவென்றாலும் சவுதியிலிருந்து கடலில் குதிப்பவர்கள் அவ்வழியைப் பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

நட்சத்திர ஒளிக்கு அவசியமற்ற அப்பிராந்தியத்தில் நீரோட்டத்தில் இடம்பெயர்ந்துகொண்டிருந்த மீன்களின் செதில்களிலிருந்து கிளர்ந்த ஒளியே போதுமானதாயிருந்தது. சுருட்டி மீன்களைப்போன்ற தோற்றம் கொண்டிருந்த அவைகள் மருத்துவகுணங்கொண்ட கணவாய்மீன்வகையைச் சார்ந்தவை.

பரிபூர்ண சுதந்திரம் கொண்டிருந்த அவைகளும் கோனுபுயலுக்குப் பயந்து இடம்பெயர்ந்து கொண்டிருந்தன. புயல்கொண்டு வரப்போகிற அதிமழைக்குப் பயந்து அல்ஹலானியத் தீவிலிருந்து ஆட்கள் வெளியேறியிருந்தார்கள். மசீரா தீவில் மிச்சமிருந்தவர்கள் காற்றுத் தங்களைத் தூக்கிப்போகாமல் இருக்க மரங்களோடு தங்களைக் கயிறுகளால் பிணைத்திருந்தார்கள்.

அப்பிரதேசத்தைக் கடந்த நீரோட்டங்கள் எல்லாக் கடல்பரப்புகளையும் கண்டங்களையும் சுற்றி வந்ததைப் புனித ராயப்பரும் ஆமைகளுமே பயன்படுத்துவது வழக்கத்தில் இருந்தது. பல நீரோட்டங்கள் மோதிக்கொண்ட அவ்விடத்தில் கொடூரமற்ற மீன்களும் வாழிடத்தை வைத்திருந்தன. முடிவற்றதும் தொடக்கமற்றதுமான நீரோட்டத்தில் ஆமைகளும் பயணதடங்களை வைத்திருந்ததால் கனத்த ஹிருதயங்கொண்ட வேட்டையர்கள் புனித ராயப்பருக்குத் தெரியாமல் அப்பிரதேசத்தினுள் அடிக்கடி வந்துபோகும் வழக்கமிருந்தது.

சொற்ப வழிகாட்டி தன்மைகொண்ட அவனது ஜிபிஎஸ் நேவிகேட்டர் எந்நேரத்திலும் தன் இரக்கத்தை இழந்துவிடும் நிலையை அடைந்திருந்தது. ஒருபகலும் ஒரு இரவும் உயிரை தக்கவைத்திருந்த அதன் குணத்தைப் பாராட்ட தன் சுயநினைவை தக்கவைத்திருந்தான். கடலும் அடிவானமும் மணல்திட்டுக்களோடு முடிவடைவதான அவனது நம்பிக்கைகளை நீரோட்டம் குலைத்திருந்தது. எந்த மணல் திட்டுக்களுமே அக்கடலில் இருந்திருக்கவில்லை. தூரத்தில் தெரியும் மணல்திட்டுகளெல்லாம் கானல் என்பதை நம்பப் போதுமான மனப்பக்குவத்தையும் உடற்பலத்தையும் நைஷாபோல் இழந்திருந்தான்.

புனித ராயப்பர் சாதாரணமாய்ப் பயணிக்கும் திசைக்கும் அவனுக்கும் பல நாட்டிக்கல் மைல் தொலைவிருந்தது. அத்தொலைவை எரிபொருளற்ற அப்படகால் கடக்க முடியாததை நைஷாபோல் அறிந்தேயிருந்தான். கைகளால் துளாவியும் அடைந்துவிட முடியாத நீரோட்டத்தில் அவன் சிக்கிகொண்டதை கடவுள் மட்டுமே அறிந்திருந்தார்.

நீல நிறமென்பது கடலையும் காற்றையும் போல ஆறாவது பூதமென்று வழியனுப்பும் போது நண்பன் சொன்னதை நைஷாபோல் நம்பியிருக்கவில்லை. இருளிலும் நீலநிறம் அலையடித்துகொண்டிருந்தது. அவனைசுற்றியிருந்த நீலவர்ணத்தையும் தண்ணீரையும் பார்த்தபடியிருந்தான்.

ஒட்டகப்பண்ணைப்போல நிர்வகிக்கப்பட்டிருந்த கம்பனியில் இணைந்துகொள்ள இந்தியாவிலிருந்து நைஷாபோல் கிளம்பி வந்தபோது அதிசயம் நிரம்பியதாய் நம்பப்பட்டிருந்த அரேபிய பிரதேசம் மணற்புயலில் சிக்கியிருந்தது.

பணிவும் அதிஅக்கறைகளும் கற்றிருந்த அவனை ஒட்டகமாய் மாறப்போதுமான அவகாசத்தைக் கம்பனிக்குள் உலவிக்கொண்டிருந்த சகஒட்டகங்கள் வழங்கியிருக்காததால் நைஷாபோல் ஒட்டகமாக மாறும் படலத்தைத் தவறவிட்டிருந்தான்.

ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எண்பதில் பிறந்த நைஷாபோலின் மேல் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி நாற்பத்தி ஏழிலிருந்து தீர்க்கப்பட்டிராத கம்பனி வழக்குகள் சுமத்தப்பட்டிருந்தன. ஒரு எலக்ட்ரிக்கல் இன்ஜினியராகச் சவுதி அரேபியாவிற்குள் வந்திறங்கியபோது இருந்த மிடுக்கை ஒருசில நாட்களிலேயே தொலைத்திருந்தான். இரக்கமற்ற வார்த்தைகளும் விற்றுதின்னே சுவாசிக்கும் மிருகங்களும் கம்பனியில் உலாவந்தன. அவ்வுலகத்தின் பொருத்தமற்ற நபராகத் தோற்றம்கொண்டிருந்த நைஷாபோல் தாக்குபிடிப்பதற்காகப் பல குழறுபடிகளையும் பொற்காசான வார்த்தைகளையும் செலவழித்திருந்தான். நைஷாபோலின் ஒவ்வொரு அசைவுகளுக்கும் கம்பனி அவனுக்கான சவக்குழியின் ஆழத்தை அதிகமாக்கிகொண்டிருந்தது.

ராக்காவில் வாடகை கட்டடத்தில் கடைப்பரப்பியிருந்த அவனது கம்பனி ஒட்டகம் மாத்திரம் வளர்த்துவந்த சவுதிகளின் கட்டுப்பாட்டில் இயங்கிக்கொண்டிருந்தது. பாஸ்போர்டை பிடிங்கிக்கொண்ட கம்பனி தப்பிக்கும் வாய்ப்புள்ள வழிகளையெல்லாம் தன் அகலகரங்களால் அடைத்திருந்தது. பச்சைக்குழந்தையைபோல அல் கோபாரில் இருந்த வெட்கங்கெட்ட நண்பர்களை நோக்கி ஓடுவதைதவிர நைஷாபோலுக்கு வேறுவழி தென்பட்டிருக்கவில்லை.

இந்தியாவிற்குப் போவதற்கான சாத்தியமுள்ள வேறுவழிகளைத் தெரிவிக்க எந்த மனிதனும் அவனிடம் வந்திருக்கவில்லை. நிலம்வழி இந்தியாவை அடையும் திட்டத்தைக் கற்பனைசெய்வதற்கு முன்னமே கைவிட்டிருந்தான். நிலம்வழி இந்தியாவை அடையும் சவால்களைப் பயமுறுத்தும் குரங்குகளாய் உலவவிட ஆட்கள் இருந்தார்கள். மரணப்பள்ளத்தாக்குகள்போல் வர்ணிக்கப்பட்டிருந்த வழியில் ஈரானின் நிலப்பரப்பும் ஆப்கானிஸ்தானின் மிருகங்களும் மனிதர்களைப் பயமுறுத்தப்போதுமான குணங்கொண்டிருந்தன. எல்லோரையும் நம்பும் இயல்பை கொண்டிருந்த நைஷாபோல் தன் குணங்களை உதறிவிடும் பருவத்தை அடைந்திருக்கவில்லை.

இந்தியாவிற்குப் போவதற்கான எல்லாப் பாதைகளையும் பிடிவாதம் மட்டுமே கொண்டிருந்த அவனது கம்பனி கண்காணித்துக்கொண்டிருந்தது. காவல் நாய்களாய் ஜெனித்திருந்த சவுதிகள் எல்லாக் கதவுகளின் அருகிலும் தெருவோர விளக்குகம்பங்களிலும் இருந்தார்கள். பிச்சையெடுக்கப் பயிற்றுவிக்கப்பட்டிருந்த பெண்கள் எல்லாச் சிக்னலிலும் தகவல்களைத் திரட்டிக்கொண்டிருப்பதாக நம்பிக்கொண்டிருந்தவர்கள் வளைகுடாவில் உலவிக்கொண்டிருந்தார்கள்.

பரிச்சயமற்ற பாலையைப்போலக் கடலும் இருந்தது. பாலையோடும் கடலோடும் உறவற்ற ஒருவனின் கதி எந்த விசித்திரங்களுக்குள்ளும் போய்ச் சிக்கிவிடாமல் தடுக்கப் பிரபல ஏஜென்றுகள் பாலை முழுவதும் சுற்றிவந்தார்கள். மனிதர்களையும் ஒட்டகங்களையும் கடல்வழியே வெளி உலகுக்கு அனுப்பும் கெட்டிக்காரதனம் கொண்டிருந்த ஏஜென்றுகளிடம் நைஷாபோலும் அடைக்கலமாகியிருந்தான். சொற்ப விலைக்கு நண்பனாகியிருந்த ஏஜென்றிடம் தன்னைக் கையளிக்க நைஷாபோல் எந்தத் தயக்கமும் கொண்டிருக்கவில்லை.

தேனீக்களாய் மாறிவிட்டிருந்த நீர்துளிகள் காற்றில் வந்தன. அவைகள் எந்தக் கொடூரத்தையும் கொண்டிருக்கவில்லையென்றாலும் நீர்துளிகள் தொடர்ந்து அவனைச் செதுக்கிகொண்டிருந்தன. கடலின் வர்ணத்தைக் குலைக்கும் வலு காற்றிற்கு இல்லாததால் அது தொடர்ந்து நைஷாபோலின் முகத்தில் வர்ணங்களை வீசியடித்தது.

கடற்திரவியங்களைத் தேடும் குழுக்களே வரத்தயங்கும் தண்ணீர் பாலையினுள் நைஷாபோல் ஒரு உல்லாசப்பயணியைப்போலக் கடல்நோயிலிருந்து தப்பிக்கும் மாத்திரைகளுடன் மிதந்துகொண்டிருந்த ஆச்சரியத்தை மீன்கள் எட்டிப்பார்க்க விரும்பாதது அவனைப் பெருஞ்சாபத்தினுள் தள்ளிவிடும் வலிமைகொண்டிருந்தது.

அவன் வீசியிருந்த தூண்டிலை சுற்றி மிதந்த மீன்களின் பளபளப்பு வெறுப்பை மட்டுமே மிச்சம் வைத்திருந்த காதலியின் சருமத்தை நினைவூட்டியிருக்கவில்லை. அருவெறுப்பான பரப்பில் அவன் மிதந்துகொண்டிருப்பதிலிருந்து விடுவிக்கும் முயற்சியை அக்காட்சி கொண்டிருக்கவில்லை.

நிலைகொள்ளாத அலைகளும் நினைவுகளும் கடல்நோயின் உச்சத்தில் அவனைத் தள்ளியிருந்தன. தான் ஒரு வாந்தியெடுக்கும் இயந்திரமாக மாறிவிட்டிருந்த நிலையில் புனித ராயப்பரை சந்திக்கும் கூச்சம் அவனிடம் அதிகமாகிகொண்டிருந்தது.

நீரோட்டங்களில் மாத்திரமே பயணிக்கும் புனித ராயப்பர் கண்டங்களைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலங்களை நைஷாபோல் அறிந்துகொள்ளும் விருப்பத்துடன் செவிமடுத்திருக்கவில்லை. அனேக படிப்பினைகளைத் தென்னாட்டைச் சேர்ந்த நண்பன் தூவியிருந்தாலும் ஜீரணிக்கத்தக்க அவைகளின் சுவாபத்தை வெறுக்கும் பருவத்தை நைஷாபோல் அடைந்திருந்தான். மனங்களுக்கு வெளியே இருந்த கடவுளோடு அடிக்கடி பேசும் சந்தர்ப்பத்தைக் கடல்பரப்பு தந்திருந்தபோதும் அவன் எல்லாச் சந்தர்ப்பங்களையும் வாந்தியெடுக்கவும் மீன்களைக் கவனிக்கவும் செலவழித்திருந்தான். நேரமற்ற கடவுள் நைஷாபோலுக்காகத் தன் நேரங்களை ஒதுக்கி நீலவர்ணமாக மாறியிருந்ததாக நம்பிக்கொள்வதைத் தவிர அவனுக்கு வேறுவழி தென்பட்டிருக்கவில்லை.

நீலவர்ணம் அவனது சுவாசத்தினுள்ளும் நுழைந்து புதிய அவஸ்த்தைகளை உருவாக்கியிருந்தது. கடலில் இருந்தும் நீலவர்ணத்திலிருந்தும் தனிமையிலிருந்தும் தப்பித்துக்கொள்ளத் தற்கொலையைத் தவிர வேறுமார்க்கங்கள் மிதக்கும் அப்பிராந்தியத்தில் இருந்திருக்கவில்லை.

சவுதிக்குள் வந்திறங்கிய சொற்ப காலத்தில் நைஷாபோலுக்குக் கிடைத்திருந்த நண்பர்களும் பொருத்தமானவர்கள் இல்லையென்பதை நிரூபிக்க ஓடிஒளிந்திருந்தார்கள். கேடுகெட்ட தூதரகத்தை அடையும்முன்னம் அவன்மேல் சுமத்தப்பட்டிருந்த வழக்குகளுக்காகப் போலீஸ் தேடிவந்திருந்தது.

மரணம்வரை ஜீவிக்கப்போதுமான நைன்டிஒன் சிறையை விவரித்த நண்பர்களின் உடம்பு சிலிர்த்துகொள்வதை நைஷாபோல் கவனித்திருந்தான். மளமளவென்று தகவல்களை விரிக்கும் வளைகுடாவின் ஜாம்பவான்கள் கம்பனியினுள் இருந்ததால் குறுகிய காலத்தில் சவுதி அரேபியாவை அரைகுறையாக அறிந்துகொண்டிருந்தான். துன்புறுத்தலற்ற வாழிடம்போல இருந்த நைன்டிஒன் சிறை தமாமின் சுற்றுலாதலங்களில் ஒன்றாக மாறிவிட்டிருந்தாலும் அரைக் குப்பூசும் கப்சாசோறும் கைதிகளுக்கு வழங்குவதை அவர்கள் நிறுத்தியிருக்கவில்லை.

நைஷாபோலின் உயிர்நீட்சியைக் கைப்பற்ற கம்பனி பகீரத முயற்சிகளைத் துவக்கியிருந்தது. உதவும் மனிதர்களற்ற அவ்வெளியில் அனேக மனிதர்கள் முகங்களைத் திருப்பியபடி அவனைக் கடந்துபோனார்கள். புணர்ச்சிக்கு ஒட்டகமும் குடிப்பதற்குப் பெப்சியும் தாராளமாய்க் கிடைத்து வந்த பாலையில் எந்தப் பொருத்தனையுமற்ற மனிதர்களே அப்பிரதேசமெங்கும் உலவிக்கொண்டிருப்பதாக முணுமுணுப்புகள் இருந்தன. ஏற்றுமதி முட்டைகளாய் உருமாறியிருந்த மனிதர்கள் வந்திறங்கிய அப்பிரதேசம் வாழ்வதற்கான எல்லாச் சௌகரியங்களையும் கொண்டிருந்ததால் அவனிடம் தப்பிக்கும் எந்தத் தகவலையும் யாரும் கையளித்திருக்கவில்லை.

ஒரு முழு இரவை கடந்திருந்த அவனைப் பகல்பொழுதை ரம்மியமாக்க வீசியிருந்த வெயிலோடு கதகதப்பும் கௌவியிருந்தன. கச்சத்தில் நனைந்து துருப்பிடித்திருந்த கொடிமரமாய் அவன் படகில் சாய்ந்திருந்தான். நெடுநாளாய்க் கொண்டு நடந்த கச்சித உருவத்தைக் கடல் உருகுலைத்துவிட்டிருந்ததை அவன் அறிந்திருக்கவில்லை.

காதலியைப்போல மாறிவிட்டிருந்த ஜிபிஎஸ் நேவிக்கேட்டர் தன்னைப்பழிவாங்கப்போகும் தருணத்தை அவன் எதிர்பார்த்துகொண்டிருந்தான். மயங்கிவிடாமல் இருக்கக் கடலோடு புதிய ஒப்பந்தங்கள் செய்திருக்காத அவனுக்கு விழித்திருந்து செய்யவும் ஒன்றுமிருந்திருக்கவில்லை.

நகரும் மணல்திட்டுக்கள் அந்நீரோட்டத்தில் இருப்பதான நம்பிக்கைகளை விதைத்தவர்கள் நீலவர்ண தண்ணீர் பரப்புக்கு வெளியே இருந்தார்கள். சர்வதேச எல்கைகளுக்கு வெளியே இருந்த நீரோட்டத்தில் மிதந்த படகில் நைஷாபோல் ஒரு பரதேசியின் முழுகுணங்களையும் அடைந்திருந்தான். தோற்றத்திற்கும் குணங்களுக்கும் சம்மந்தமற்ற மனிதர்களோடு மட்டுமே பரிச்சயம் கொண்டிருந்த அவனைக் கடல் தன் பரலோகராஜ்யத்தின் கடைசிப் படியில் கொண்டு சேர்த்திருந்தது.

கர்ப்பத்தைக் கலைத்திருந்த நைஷாபோலின் காதலி சீந்தியெறிந்த அழுகை அவனது ஸ்பரிசத்தின் அவசியம் அவளுக்குத் தேவைப்பட்டிருக்காததை அறிவித்திருந்தது. அவளைப்பிரிந்திருக்கவே சவுதிக்கு வந்ததாக அவளிடமே நாக்குக் குழறியிருந்தான். அவனது உறவினர்களுக்கு அவள் கர்ப்பமாய் இருந்ததை யாரும் அறிவித்திருக்கவில்லை. காதலை தொலைத்திருந்த அவனைசுற்றி எல்லா வகை மீன்களும் மனநோய்களும் வலம் வந்தன. காதலைப்போல நீலவர்ணமும் எல்லாவற்றிலும் கலந்திருந்தது. காத்திருப்பின் வர்ணத்தை அவன் விசித்திரமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். ஆறாவதுபூதமாய் மாறியிருந்த நீலவர்ணத்தின் குணம் வியாபித்திருந்த கடலோடு அவன் பேச முயன்றாலும் வாந்தியால் சுருண்டிருந்த உடலில் குரல் ஜெனித்திருக்கவில்லை. கடலோடு பேசுவதற்குக் குரலுக்கான அவசியமில்லையென்றாலும் தன் குரலில் பேச விரும்பிய அவனுக்குக் குரல்யெழும்பியிருக்கவில்லை.

அழகான பெண்களைக் காதலித்துக்கொண்டிருந்த உலகத்தில் ஜெனித்திருந்த அவன் அழகற்ற விசித்திர குணங்கொண்ட கடலோடு மன்றாடிக்கொண்டிருக்க ஏதுவற்ற உடல் நிலையால் புதிய வெறுப்பை உற்பத்தி செய்யத் துவங்கியிருந்தான்.

கடல்நீரோட்டத்தில் நகர்ந்துவரும் மணல்திட்டுக்களைப்போலவே பெண்களும் அவனைக்கடந்து போயிருந்தார்கள். மிதக்கும் குணங்கொண்டிருந்த மணல்திட்டுக்கள் வலிமையான மனிதனையும் கவிழ்ந்த படகுகளையும் தாங்கும் திறன்கொண்டிருந்தன. மணற்திட்டுக்களைத் திருடிவரும் திறன்கொண்டிருந்த நீரோட்டத்திலேயே அவனது படகும் இழுபட்டிருந்தது. அவன் பார்க்க விரும்பியிருந்த மணல்திட்டுகளைப்பற்றி நண்பனிடம் சேகரித்த தகவல்கள் போதுமானவையல்லவென்றாலும் அவனுக்குள்ளிருந்த மணல் திட்டுக்கள் மிதந்து வரப்போகிற மணல்திட்டுக்களை எதிர்நோக்கியிருந்தன.

காதலியின் ஹிருதயம்போல நம்பப்பட்டிருந்த மணல்திட்டுக்கள் அந்நீரோட்டத்தில் மிதந்துவருவது அபூர்வமாக நிகழ்வதுண்டு.

மணற்திட்டுகள் நகர்ந்து வருவதைக் காணும் பாக்கியம் அவனுக்குக் கிடைக்குமென நண்பன் சொன்னதின் அர்த்தத்தைப் பரிசீலிக்கத்தொடங்கியிருந்தான். காதலியின் ஹிருதயம்போல உயிரற்றுப்போன மணல்திட்டை கண்குளிர பார்க்கும் பெருவிருப்பம் அவனைச் சுற்றியலைந்தது.

கடல்பரப்பிலும் மீன்கள் கொத்தியிராத உடல்களிலும் நீலவர்ணங்களைப் புனித ராயப்பர் தூவிக்கொண்டிருந்ததாக ரகசியமாக உலவிக்கொண்டிருந்த புரளியை நண்பன் தெரிவிக்க மறந்திருந்தான்.

மூழ்கும் கப்பலில் உள்ள ஆட்களைக் கரையேற்ற அவருக்குப் பிரத்தேக அனுமதியிருந்தாலும் மரணத்திற்குப் பின்னேதான் உடல்கள் புனித ராயப்பரை தரிசிக்கும் பாக்கியத்தை அடைந்திருந்தன. வானத்து நட்சத்திரங்களோடு சதா பொருதிக்கொண்டிருக்கும் அவரைக் கண்காணிக்கச் சவுதி புதிய கடலோடிகளை அனுப்பியிருந்தது. கண்காணிக்க அனுப்பபட்டிருந்த படகுகளின் ரடார்களில் ஒரு புள்ளியாய்கூடப் புனித ராயப்பர் தென்பட்டிருக்கவில்லை.

நீலவர்ணம் மட்டுமே பெருந்துணையாய் படகை பின்தொடர்வதை அவன் அனிச்சையாககூடத் திரும்பி பார்த்திருக்கவில்லை. கடலெங்கும் பிரம்மைபோலப் பரவியிருந்த நீலவர்ணத்திற்கும் அவனுக்கும் எந்தத் தொடர்புமில்லையென்றே அவனும் தொடர்ந்து நம்பிக்கொண்டிருந்தான்.

பூமிப்பந்தை சுழன்றுவரும் விசித்திர நீரோட்டத்தில் இழுபட்டிருந்த படகு புனித ராயப்பரின் தரிசனத்திற்காக மிதந்துகொண்டிருந்த தகவல் கடவுளை அடைவதற்காக அவன் ஓய்வில்லாமல் வாந்தியெடுத்துகொண்டிருந்தான். கடல்நீரையே கடலினுள் மறுபடியும் மறுபடியும் வாந்தியெடுப்பதான பிரமை விலகாததால் பெருஞ்சோர்வை அடைந்திருந்த அவனுக்கு நீண்ட மயக்கம் தேவைப்பட்டது. ரத்தவாந்தியெடுக்கும் அளவிற்கு அவனது நிலைமை மோசமடைந்திருக்கவில்லை.

கடலோடு ஒவ்வாமைகொண்டிருந்த அவனது ஹிருதயபலஹீனத்தைப் பரிசோதிக்கப் புனித ராயப்பர் வந்துவிடுவாரென்ற நம்பிக்கை அவனிடம் மிச்சமிருந்ததால் பறிபோக இருந்த சுரணையைக் கெட்டியாகப் பிடித்திருந்தான். நீண்ட மயக்கத்திற்குத் தயாரான உடல் இயந்திரமாய் மாறி கடலைநோக்கி வாந்தியெடுத்துக்கொண்டிருந்ததை மீன்கள் கவனித்து விலகிப்போயின. அதிக நாகரீகம் கொண்டிருந்த திருக்கைமீன்களே அவ்வேட்டை பிரதேசத்தில் அவன் வாந்தியெடுத்துக்கொண்டிருந்ததை விரும்பியிருக்கவில்லை. சவக்களைமிக்கக் கடல் ஹிமோகுளோபின் அதிகமுள்ள ரத்தமனிதர்களோடு மட்டுமே உறவுகளைச் சதா புதுப்பித்துகொண்டிருந்ததை யாரும் கசியவிட்டிருக்காததால் அவன் வாந்தியோடு மன்றாடிக்கொண்டிருந்தான்.

உண்ணப்பட்டிராத உணவுவகைகளைக் கண்திறந்து பார்க்கும் விருப்பங்களைத் தேனீக்களாய் மாறியிருந்த நீர் துளிகள் அவனிடமிருந்து திருடிவிட்டிருந்தன. எந்த அதிசயங்களையும் நிகழ்த்தியிராத படகோடு ஓங்கரிப்பின் சகல குணங்களும் வதைப்பதை தாங்கிகொண்டிருந்த உடலோடு காத்திருக்க விரும்பினானென்றாலும் மணிக்கு நூற்று எழுபது கிலோமீட்டர் வேகங்கொண்டிருந்த கோனு புயல் அக்கடல் பிராந்தியத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது.

நீரோட்டத்திலிருந்து நகர்ந்து தப்பித்துக்கொள்ளப் பயனற்றுப் போயிருந்த படகை கெட்டியாகப் பிடித்திருந்த நங்கூரத்தை வெட்டிவிடகூடத் திராணியற்றுப்போயிருந்த தன் உடல் நிலையை நினைத்து வெட்கப்பட அவனுக்குச் சந்தர்ப்பம் வாய்த்திருக்கவில்லை.

கைவிடப்பட்ட சவப்பெட்டியின் கதியை அடைந்துவிட்டிருந்த படகு நீரோட்டத்தில் பயணித்தபடியிருந்தது. சவுதி நகர வீரர்கள் நிரம்பிய கப்பலொன்று உதிர்த்துவிட்டுபோன இந்திய வேலையாட்கள் மூழ்கி மரித்தஇடத்தைப் படகு அடைந்தபோது நைஷாபோல் அரைமயக்கத்தைக் கடந்திருந்தான். கண்திறந்து பாகைமானியில் பரிசோதிக்கும் முன்னே அவனது படகு அப்பிரதேசத்தைச் சுலபமாகக் கடந்திருந்தது. அவனைப் பயமுறுத்தும் குணங்கொண்டிருந்த மூழ்கி மரித்தவர்களின் சவக்களையைத் தக்கவைத்திருந்த அப்பிரதேசத்தில் ஜீவித்த மீன்கள் வாழிடத்தை நிரந்தரமாக மாற்றிவிட்டிருந்தன.

நீலவர்ணத்தைப் புனித ராயப்பர் தன்னுடைய அடையாளமாக எல்லா இடங்களிலும் விட்டுப்போயிருப்பதாகக் கடலோடிகளின் நம்பிக்கைகளை நண்பன் நைஷாபோலுக்குக் கைமாற்றியிருந்தான். வெளிறிய நீலவர்ணத்தோடும் நம்பிக்கைகளோடும் இடைவிடாமல் பொருதி கொண்டிருந்த அவனுக்குப் புயலைப்பற்றிய எந்தத் தகவலையும் சவுதியிலிருந்து கிளம்பும்பொழுது நண்பன் கைமாற்றியிருக்கவில்லை.

சவுதி அரேபியாவிலிருந்தும் ஒட்டகவாசிகளிடமிருந்தும் வெளியேறியிருந்தாலும் நீலவர்ணத்திலிருந்தும் நீரோட்டத்திலிருந்தும் அவனால் வெளியேற இயலவில்லை. அதற்கான எந்த முயற்சியையும் நைஷாபோல் செய்திருக்காததால் படகு ஒவ்வொரு கணத்திலும் அதற்கான வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்தது. கோனுபுயல் வடமேற்காக நகர்ந்து ஓமன் நாட்டின் கிழக்கிலுள்ள சூர் கடற்கரையைநோக்கி உக்கிரமாய் வந்துகொண்டிருந்த தகவல் அவனுக்குத் தேவைப்பட்டிருக்கவில்லை. எந்தப் பிரதேசமும் சொந்தம் கொண்டிராத நீலவர்ணத்திலும் புயலின் பாதையிலும் நைஷாபோல் மிதந்துகொண்டிருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *