நிலம் எனும் நல்லாள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 16,612 
 

சைமன் கனடா வந்த நாலாவது நாளே தாயிடம் கேட்டான். ”அம்மா, உங்களிடம் துவக்கு இருக்கிறதா?”

”இல்லையே, இது என்ன கேள்வி?”

”அமெரிக்காவின் சனத்தொகையிலும் பார்க்க அங்கே துப்பாக்கிகளின் எண்ணிக்கை அதிகமாமே.”

”இது அமெரிக்கா அல்ல மகனே, கனடா.”

”பக்கத்து வீட்டுக்காரர்களிடம் துப்பாக்கி இருக்குமா?”

”ஏணி கடன் கேட்பதுபோலப் பக்கத்து வீட்டில் போய் இரவல் கேட்கப்போகிறாயா? யேசுவே, என்ன நடக்கிறது இங்கே?”

”இல்லை அம்மா, ஒரு பாதுகாப்புக்குத்தான்.”

”இங்கே உனக்கு எதிரிகள் இல்லை. நீ சுதந்திரமாக உலாவலாம். இது சமாதானமான நாடு.”

”அம்மா நான் இருபது வருடங்களுக்கு மேலாக கையிலேயோ, இடுப்பிலேயோ ஒரு துப்பாக்கியைக் காவியபடி அலைந்திருக்கிறேன். ஏதோபோல இருக்கிறது.”

”அது வேண்டாம் மகனே. அந்த நினைப்பையே விடு. கையிலே சுத்தியல் இருந்தால், எல்லாப் பிரச்னையும் ஆணிபோலவே தெரியும்.”

அன்றும் அவர்கள் பேச்சு திருப்தி இல்லாமல் நின்றது. எப்பொழுது மகனுடன் பேசத் துடங்கினாலும் அந்தச் சம்பாசணை அசாதாரணமானதாக உருவெடுத்து, வேறு திசையில் சென்று எதிர்பாராத முடிவுக்கு வருவதே வழக்கம்.

நிலம் எனும் நல்லாள்சைமன் இள வயதில் நன்றாகப் படித்தான். ஒரு நாள் காலை பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்டவன் பின்னர் திரும்பவே இல்லை. இயக்கத்தில் சேர்ந்துவிட்டான் என்று சொன்னார்கள். மகன் திரும்பி வருவான் என்று காத்திருந்து நம்பிக்கைபோன பின்னர், அவனுடைய பெற்றோர் கனடாவுக்குக் குடிபெயர்ந்தார்கள். அங்கே பிளாஸ்டிக் உதிரிப் பாகம் செய்யும் தொழிலை அவனுடைய அப்பா தொடங்கி வெற்றிபெற்றார். இலங்கைப் போர் முடிவுக்கு வந்தபோது நிறையப் பணம் செலவழித்து மகனைத் தேடிக் கண்டுபிடித்து, அவனை தாய்லாந்து வழியாக கனடாவுக்கு எடுப்பித்துவிட்டார்.

சைமன் கனடாவுக்கு வந்த அன்று அவன் பெற்றோர் வசித்த வீட்டைப் பார்த்துத் திகைத்து விட்டான். அரை ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்ட மாளிகை என்று சொல்லலாம். பளிங்குத் தரை. மர வேலைப்பாடுகள். சுழன்று ஏறும் படிக் கட்டுகள். சுவிட்ச் போட்டுத் திறந்து மூடும் திரைச் சீலைகள். தொலைக்காட்சியைப் பார்ப் பவர்கள் இருக்கும் தூரத்திலும் பார்க்க அகல மான டி.வி. அவனால் அத்தனை படாடோ பத்தைத் தாங்க முடியவில்லை. ”இத்தனை பெரிய வீடா?” என்று வாய்விட்டுச் சொன்னான். அவன் யாருக்காகப் போர் புரிந்தான். அவர்களுக்காகவும்தானே. ஆனால், அவர்களோ நாட்டை மறந்துவிட்டார்கள். போரை மறந்துவிட்டார்கள்.

”நீங்கள் என்னை மறந்துவிட்டீர்கள்” என்றான்.

”மகனே, உன்னை நினைக்காத நாள் ஏது? உனக்காகவே நாங்கள் இந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தோம். உனக்கென்று ஒரு நல்ல வாழ்க்கையை நீ இங்கே அமைக்க வேண்டும்.”

”எப்படி அம்மா அது முடியும்? என்னால் பழைய நினைவுகளில் இருந்து விடுபட முடியவில்லையே!”

”இந்த வீட்டுக்கு நாங்கள் குடிபெயர்ந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன. இன்றைக்கும் இடைக்கிடை பழைய வீட்டுக்கார ருக்குக் கடிதம் வருகிறது. அப்படித்தான் பழைய ஞாபகங்கள் தேடி வரும். பொருட்படுத்தக் கூடாது.

புதிய வாழ்க்கைக்கு நீ தயாராக வேண்டும்.”

”தயாராவதா? நான் எவ்வளவு இழந்துவிட்டேன். நான் போர் செய்துகொண்டு இருந்தபோது, கொசோவோ என்று ஒரு புதிய நாடு உண்டாகிவிட்டது. அது எனக்குத் தெரியாது. யாராவது 23.20 மணி என்று சொன்னால், அது புரியாது. இங்கே நாலு மணி என்றால், உலகத்தில் வேறு எங்கே எங்கே நாலு மணி. அதுவும் தெரியாது. ‘வண்ணத்துப்பூச்சி காலிலே ஒரு காட்டைக் காவுகிறது’ என்று ஓர் அருமையான கவிதை வரி நேற்று சொன்னீர்கள். நான் காலிலே எந்தக் காட்டைச் சுமக்கிறேனோ? இருபது வருடங்களுக்கு மேலாக ஒரு நிலத்துக்காகப் போராடிய பின்னர், என்னிடம் மிஞ்சி யது இரண்டு பழைய உடுப்புகள், ஒரு சோடி பழைய சப்பாத்து, ஓடாத பழைய கடிகாரம். புதிய எதிரிகள்.”

”இங்கே உனக்கு எதிரிகள் கிடையாது. உன்னுடைய அப்பாவின் தொழிற்சாலையில் 200 பேர் வேலை செய்கிறார்கள். நீ அப்பாவிடம் வேலை பழகு. உனக்கு ஒரு நல்ல பொம்பிளை பார்ப்போம்” என்றார் அம்மா.

நேற்றையைப் போலவும் நாளையைப் போலவும் இருக்கப்போகும் அந்த நாள் விடிந்தது. அம்மா றால் பொரியலும் கருவாட்டுக் குழம்பும் மஞ்சள் சோறும் செய்தார். சாப்பிடும்போது அவனுக்குக் கண்ணீர் வந்தது. இருபது வருடங்களுக்குப் பின்னரும் அம்மாவின் கை ருசி மாறவில்லை. ஒருமுறை சிங்கள ராணுவம் ஹெலியில் பறந்து தங்கள் பக்கம் வீசிய உணவுப் பொதி ஒன்று, காற்றுக்கு ஆடி ஆடித் தவறுதலாக இவர்கள் பக்கம் வந்து விழுந்தது. மஞ்சள் நெய்ச்சோறும் இறைச்சி பக்கட்டுகளும். போராளிகளுக்கு எப்பவும் பசி. அவனும் நண்பர்களும் அடித்துப் பிடித்துச் சாப்பிட்டார்கள். அந்த நண்பர்களை ஒவ்வொருவராகப் பெயர் சொல்லி நினைத்துப் பார்த்தான். இப்போது ஒருவர்கூட இல்லை.

அன்றிரவு யன்னலில் வாயினால் ஊதி விரலால் ‘மஞ்சுளா’ என்று எழுதினான். அப்படி எழுதி முடித்ததும் அது தானாக அழியத் தொடங்கியது. அவன் வாழ்வில் கிடைத்த சதா பிரமிப்பூட்டும் பெண். அவளைச் சந்தித்தபோது அவள் இறப்பதற்கு 1 வருடம், 2 மாதம் 14 நாட்கள் இருந்தன. அவளுடன் அவன் பேசிய எல்லா வார்த்தைகளின் கூட்டுத்தொகை நூறைத் தாண்டாது. அவள் அதிகம் கதைத்தது அவளுடைய அகலக் கண்களால்தான். அவளுக்குப் பயிற்சி கொடுத்த பிரதீப் மாஸ்டர் சொல்வார், அவளைப்போல ஒரு போராளியை அதற்கு முன்னர் அவர் காணவில்லையென்று. மெலிந்துபோய் இருப்பாள். ஆனால், முதுகிலே 50 கிலோவைக் காவிக்கொண்டு இரண்டு மைல் தூரம் நடப்பாள். சைமனுடைய துப்பாக்கி சுடும் திறனைக் கேலிசெய்வது அவளுடைய முழு நேரத் தொழில். ”நீ முதலில் சுட்டுவிட்டு, பின்னர் இலக்கு பார்க்கிறாய்!”

இயக்கத்தின் சங்கேத வார்த்தைகள் அவ ளுக்கு மனப்பாடம். ‘தேங்காய்’ என்றால், போரில் மரணம். ‘இளநீர்’ என்றால், போரில் காயம். ‘எறியல்’ என்றால், சாப்பாடு. இவளும் சில சங்கேத வார்த்தைகளை அவனுக்காக உண்டாக்கிவைத்திருந்தாள். ‘நுங்கு’ என்றால், உன்னைக் காதலிக்கிறேன். ‘பாளை’, உன் பிரிவு தாங்க முடியவில்லை. ‘ஓலை’, உடனே வா. இப்படிக் காதலித்தவள் இவனுக்குச் சொல்லாமல் ஒரு நாள் தற்கொலைப் படையில் சேர்ந்துவிட்டாள். தாக்குதலுக்குப் புறப்பட்டபோது தன் கைக் கடிகாரத்தைக் கழற்றி அவனிடம் கொடுத்தாள். அது ஓடாத கடிகாரம், அதைத் திருத்தக் கொடுக்கிறாள் என்று எண்ணினான். முதல் நாள் ”நீ பழகப் பழகப் புதுசாக இருக்கிறாய். உன் கடைசிப் பக்கத்தை என்னால் எட்டவே முடியாது” என்று சைமன் சொன்னான்.

”கடைசிப் பக்கமா? அதை நான் நாளைக்குத் தான் எழுதப்போகிறேன்” என்றாள் அவள். அப்போதும் அவனுக்குப் புரியவில்லை. கடிகாரத்தை அவளின் ஞாபகார்த்தமாகக் கொடுத்தாள் என்பது பின்னர் தெரிந்தது. அதைத்தான் கனடாவுக்குக் கொண்டுவந்திருந்தான்.

முள்ளிவாய்க்கால் சுற்றிவளைப்பில் அவனைப் பிடித்துவிட்டார்கள். செட்டிக்குளத்தில் அருணாச்சலம் திறந்தவெளி சிறையில் 50,000 பேருடன் அவனையும் அடைத்துவைத்தார்கள். உயரமான முள்ளுக் கம்பி வேலிகளும் இரண்டு அடுக்கு ராணுவக் காவலும்… தப்புவது என்பதை நினைத்தே பார்க்க முடியாது. ஒவ்வொரு நாளும் கண் விழிக்கும்போது ‘அட, நான் இன்னும் சாகவில்லை’ என்ற நினைப்பு வரும். தினம் அவனை அதிகாரியிடம் விசாரணைக்கு இழுத்துச் செல்வார்கள். பிலாத்து கை கழுவி சைகை காட்டியதும் யேசுவைச் சிலுவையில் அறைந்ததுபோல, அதிகாரியின் தலையசைப்பில் அவன் நெஞ்சில் எந்த நேரமும் குண்டு பாயும் அபாயம் இருந்தது. விசாரிப்பவர் குறிப்பு எழுதுவது இல்லை. ஒலிப்பதிவு செய்வதும் இல்லை. ஒரு விளையாட்டுபோலத்

தான். ஒவ்வொரு தடவையும் ஒரு புது அதிகாரி விசாரிப்பார். இடைக்கிடை முகத்திலே குத்துவார் அல்லது பொல்லால் அடிப்பார். கேள்விகள் அதே கேள்விகள். பதில்கள் அதே பதில்கள். ஒவ்வொரு நாளும் அதிகாரி புதிது. அடியும் புதிது.

அதிகாரி தனது வாயைத் திறந்துவிட்டார் என்பதை அவன் கண்டுபிடித்துத் தயாராகும்போது நாலு கேள்விகள் கேட்டு முடித்துவிடுவார்.

”நீதானே சைமன்?”

”ஓம் சேர்.”

”இயக்கத்திலே உன்னுடைய பெயர் செல்வகுமார்?”

”நான் இயக்கத்திலே இல்லை சேர்.”

”படத்திலே சின்ன தாடி வைத்து, சின்ன மீசை வைத்து நிற்பது நீ

தானே?”

”அது இன்னொரு சைமன் சேர்.”

”இந்த நாலு பேரில் கறுப்புக் கண்ணாடி அணிந்து இங்கே நிற்பது யார்?”

”அது இன்னொரு சைமன்.”

”மாங்குளம் போரிலே குண்டு எறிந்து பங்கர் பிடித்தது நீதானே? உன்னுடைய பெயரெல்லாம் பேப்பரில் வந்தது.”

”அது இன்னொரு சைமன்.”

அப்பொழுதுதான் உதை விழுந்தது. கதிரையுடன் சேர்ந்து நாலடி தூரம் போய் விழுந்தான். அறிவு மயங்கிவிட்டது. கண் விழித்தது ஆஸ்பத்திரியில்தான்.

மாங்குளம் அவனுடைய முதல் சமர். மூன்று மாதம் உடல் பயிற்சியும் மூன்று மாதம் ஜெகன் மாஸ்டரிடம் ஆயுதப் பயிற்சியும் பெற்று, முதன் முதலாக வரியுடுப்பு அணிந்து பங்குபற்றிய போர். அவனுடைய குழுவில் 15 பேர் இருந்தார் கள். குழு இலக்கை அடைந்தபோது நிலத்துக்கு அடியில் இருந்த பங்கர் ஒன்றில் இருந்து குண்டுகள் சரம்சரமாகப் பாய்ந்தன. அதை ஒருவரும் எதிர்பார்க்கவிலை. அவனுடன் வந்த 14 பேரும் போர் தொடங்கி 10 செகண்டுக்குள் இறந்துவிட்டனர். இவன் மட்டும் பள்ளத்தில் விழுந்துகிடந்தான். காயம் இல்லை. நெஞ்சு வேகமாக அடித்தது. கையிலே கிடந்த குண்டை வீசினான். அது குருட்டுவாக்கில் நேராகப் போய் பங்கருக்குள் விழுந்தது. பின்னர், அங்கிருந்து குண்டுகள் வரவில்லை. பங்கருக்குள் பாய்ந்து பதுங்கிக்கொண்டான். வெளியே சண்டை மும்முரமாக நடந்தது. 24 மணி நேரம் இரண்டு பிணங்களுடன் கழித்தான். மாங்குளம் போர் சரித்திரத்தில் அவனுக்கு ஓர் இடம் கிடைத்தது.

அம்மா அடிக்கடி அவனிடம் ஒரு பெண்ணைப் பற்றிப் பேசினார். இந்த வயதில் அவனுக்கு ஒரு கல்யாணமா? அவன் மனது சம்மதிக்கவில்லை. அந்தப் பெண் வந்தபோது அம்மா அறிமுகம் செய்துவைத்தார். ஒரு வேலைக்காரனுக்குக் கொடுக்கும் புன்னகை அவளிடம் இருந்து வெளியே வந்தது. வெள்ளை வெளேர் என்ற மெழுகுபோன்ற கால்களுக்கு மேல் உடம்பிலிருந்து எதிர்ப் பக்கமாக விரிந்த ஆடை அணிந்து, குதிக் கால் சப்பாத்தில் இடறி இடறி நடந்தாள். ஒரு கத்திபோலப் பற்கள் பளிச்சிட்டன. நல்ல உணவாலும் தேகப் பயிற்சியாலும் அடுத்த வேளை உணவு எங்கேயிருந்து வரும் என்ற கவலை இல்லாததாலும் தோலுக்கு அடியிலே ரத்தம் வேகமாகப் பாய்ந்து, அவள் சருமம் வர்ணிக்க முடியாதபடிக்கு ஒரு மினுமினுப்பை அடைந்திருந்தது. அவளுக்கு அவன் முன்னாள் போராளி என்பது தெரியாது. ஆனால், அவனிடம் கணக்கு இருந்தது. 17 கொலைகள். இரண்டு சிறைவாசம். 4 பயிற்சி முகாம்கள். மூன்று பெரிய போர்கள். 6 சிறிய போர்கள். 7 போர் வடுக்கள். ஒரு பங்கர் கைப்பற்றல். ஒரு காதல்.

15 நிமிடத்துக்கு ஒரு முறை சரிபார்த்துத் திருத்தப்பட்ட கூந்தல், 30 நிமிடத்துக்கு ஒரு முறை பூசப்பட்ட உதடுகள், 10 நிமிடத்துக்கு ஒருமுறை நேர்த்தியாக்கப்பட்ட புருவம். இந்தப் பெண்ணுடன் அவனால் வாழ முடியுமா?

முகம் கழுவு முன்னரும், முகம் கழுவிய பின்னரும், உணவு உண்ண முன்னரும் உணவு உண்ட பின்னரும், துப்பாக்கி கழற்றிப் பூட்ட முன்னரும், பூட்டிய பின்னரும் ஒரே சிந்தனைதான். ஒரு நாட்டை எப்படி உண்டாக்குவது? ஒரு நிலத்தை எப்படிச் சொந்தமாக்குவது? 20 வருடங்கள் அப்படி வாழ்ந்தான். அம்மா சொல்கிறார். ”நீ எங்கே இருக்கிறாயோ, அதுதான் உன் நாடு. எங்கே சம உரிமை கிடைக்கிறதோ, அதுவே உன் நிலம். அது உனக்குள்ளேதான் இருக்கிறது. ஒருவரும் பறிக்க முடியாது. நீ நல்லவன். உன் குணத்தை நீ கொன்றவர்களின் எண்ணிக்கையை வைத்துத் தீர்மானிக்க முடியாது. நீ கொல்லாதவர் களுடன் எப்படிப் பழகினாய் என்பதைவைத்துத் தான் தீர்மானிக்க வேண்டும்.”

அவனுடைய குழுவில் இருந்த ஒருவன் ஆயுதம் பறிப்பதில் வல்லவன். பால்ராஜ் அண்ணர் பொறுப்பாளராயிருந்த ஆனையிறவு சமரில் தனஞ்செயன் 11 ஆயுதங்கள் பறித்து ஒரு சாதனையை நிலைநாட்டினான். மகாபாரதப் போரிலே உத்தரகுமாரன் கௌரவ சேனையை எதிர்த்துப் போருக்குக் கிளம்பியபோது அவன் சகோதரி உத்தரையும் சேடிகளும் அவனிடம், இன்ன பட்டு உத்தரீயங்கள், இன்ன ஆபரணங்கள், இன்ன கிரீடங்கள் எதிரிகளை வென்று கொண்டு வரச் சொல்வார்கள். அப்படித் தினமும் தனஞ்செயனிடம், ‘அண்ணை… எனக்கு ஒரு எம்.70 கொண்டுவாருங்கள்’, ‘அண்ணை… எனக்கொரு ஏ.கே. 47’, ‘அண்ணை… எனக்கொரு ரி56’ என்று போராளிகள் தொந்தரவு கொடுப்பார்கள்.பேரா சைக்காரர் ஏ.கே.எல்.எம்.ஜி-கூடக் கேட்டது உண்டு. சகலவிதமான ஆயுதங்களையும் எதிரி களிடம் இருந்து லாகவமாகக் கைப்பற்றிவிடுவான். அன்றும் அப்படித்தான். எதிராளி குண்டுபட்டு சரியத் தொடங்கியதும் தனஞ்செயன் ஓடத் தொடங்கினான். ஆயுதத்தைக் கைப்பற்றி பாதி தூரம் கடந்தபோது, குண்டு முதுகைத் துளைத்துக் குப்புற விழுந்தான். ஆனால், பறித்த துப்பாக்கிப் பிடியை அவன் விடவில்லை. விழுந்த நண்பனை முதுகிலே காவிக்கொண்டு ஓட்டமும் நடையுமாக விரைந் தான் சைமன். துப்பாக்கிக் குண்டுகள் பக்கத்து பக்கத்தில் சீறின. சுற்றிலும் தீச் சுவாலைகள். நெஞ்சிலே வழிந்த ரத்தம் சைமன் முதுகை நனைத்து காலிலே சொட்டியது. ”சைமன், என்னைக் கைவிடாதே… காப்பாற்று” என்று அவனுடைய உற்ற நண்பன் மன்றாடினான். நண்பன் இறந்தது தெரியாமல், உடலைக் காவிக் கொண்டு ஒரு மைல் தூரம் அன்று ஓடியிருந்தான் சைமன்.

அவனைக் கனடாவுக்கு எடுப்பித்ததோடு தன்னுடைய கடமை முடிந்துவிட்டது என அப்பா நினைத்தார். உணவகத்து சேவகன்போலப் பின்பக்கமாக ஒரு கையைக் கட்டிக்கொண்டு அவன் கண் படும்விதமாக உலாத்துவார். தொழிற்சாலைக்கு வந்து தனக்கு உதவ வேண்டும் என எதிர்பார்த்தார். ஆனால், அவன் அவருடன் பேசுவதற்கு அகப்படுவது இல்லை. அடிக்கடி கதவைத் திறந்துபோட்டு வெளியே போய்விடுவான்.

ஒரு நாள் அம்மா அவனைத் தேடிக்கொண்டு தோட்டத்தில் வந்து பார்த்தபோது ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்து ஆகாயத்தைப் பார்த்தபடி இருந்தான்.

”மகனே, என்ன பார்க்கிறாய்?”

”அம்மா, ஏப்ரல் மாதத்தைக் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். பாருங்கள், மிகவும் வித்தியாசமாகக் கேட்கிறது.”

”ஓ… யேசுவே! ஏப்ரல் மாதம் சத்தம் போடுமா? உள்ளே வா மகனே. குளிரடிக்கிறது.”

”அப்ப இது ஏப்ரல் மாதம் இல்லையா?”

”முட்டாள்போலப் பேசாதே.”

”உலகிலே ஒன்றிரண்டு முட்டாள்கள் கூடுவ தால், பெரிய மாற்றம் ஒன்றும் ஏற்படப்போவது இல்லை.”

‘ஓய்வு நாளில் என்ன செய்வீர்கள்?’ என்று அம்மா ஒரு நாள் கேட்டார். அந்தக் கேள்வியை அவனால் தாங்க முடியவில்லை. ஒரு போராளிக்கு ஓய்வு நாள் கிடையாது என்பது அவனுடைய சொந்த அம்மாவுக்குகூடத் தெரியவில்லை. அவனுடைய குழு பத்து நாட்கள் காட்டிலே ஒளிந்திருந்து திடீர் தாக்குதல் நடத்த வேண்டிஇருந்தது. காவிக்கொண்டுவந்த உணவும் தண்ணீ ரும் தீர்ந்துவிட்டது. இரண்டு முழு நாட்கள் உணவோ, தண்ணீரோ இல்லாமல் பொறுத்திருந்து சமயம் பார்த்துத் தாக்குதலை நடத்திவிட்டுத் திரும்பினார்கள். அந்தச் சூழலிலும் ஒருவர்கூடப் ‘பசிக்குது’ என்றோ, ‘தண்ணீர் தாகம்’ என்றோ, ‘திரும்புவோம்’ என்றோ, ஒரு வார்த்தை சொல்ல வில்லை. அப்படி அர்ப்பணிப்போடு ஒருநாட்டை உருவாக்குவதற்கு அவர்கள் போராடினார்கள். அதே நேரம், அம்மா சமையலறைக்கு என்ன வர்ணம் பூசலாம் என்று மூளையைச் செலவழித் திருப்பார். அல்லது இரவு விருந்துக்கு இறைச் சியை வதக்குவதா, பொரிப்பதா என்று சமையல் காரிக்கு உத்தரவு கொடுத்திருப்பார். அவனுக்கு அவமானமாக இருந்தது. அங்கே தங்கும் ஒவ்வொரு நிமிடமும் நரகமாகவே பட்டது.

இரவு படுக்கப் போகும் முன்னர் அவன் தாய் வெளிக் கதவைப் பூட்டி திறப்பை வழக்கம்போல ஒளித்துவைத்தார். காலையில் பார்த்தால், முதல் நாள் சலவை செய்து இஸ்திரிபோட்டு, ஒரு சுருக்கம்கூட இல்லாமல் இழுத்துச் செருகப்பட்ட தூய வெள்ளை மெத்தை விரிப்பில் படுத்திருந்த மகனைக் காணவில்லை. ஆனால், ஒரு யன்னல் திறந்துகிடந்தது. வெளியே பனி தூறியது. இரவு எந்த நேரம் புறப்பட்டுப் போனானோ தெரியவில்லை.

அவன் அடிக்கடி பாதைகள் பழக்கம் இல்லா ததால் தவறிப் போகிறவன். கால நிலை அறிவிப் பாளர், அன்று நாலு அங்குலம் பனிப் பொழிவு இருக்கும் என்று அறிவித்துக்கொண்டு இருந்தார். உடனேயே பொலீசுக்குத் தெரிவித்ததுடன், பேப்பர்களிலும் தொலைக்காட்சிகளிலும் அறிவித்தல்கள்கொடுத்தார்கள். ஒரு வாரம் கழித்துதான் உடல் கிடைத்தது. சைமனுடைய முகம் பனி மூடி சிதையாமல் புன்னகையுடன் இருந்ததுபோலத் தோன்றியது.

சைமனுடைய அப்பா இரண்டு வருடங்களுக்கு முன்னரே சவ அடக்கத்துக்கான மூன்று நிலத் துண்டுகளை ரெஸ்தாவன் நினைவுத் தோட்டத் தில் அதிக விலை கொடுத்து வாங்கியிருந்தார். அவை மூன்றும் அருகருகாக இருந்தன. அந்தப் பனிக் குளிரிலும் சவ அடக்கத்துக்கு பன்னிரண்டு பேர் வந்திருந்தனர்.

பாதிரியார் ஜெபம் செய்தார். ‘எங்கள் தேவனாகிய கர்த்தாவே, வேலைக்காரரின் கண் கள் எஜமான்களின் கையை நோக்கி இருக்குமாப் போல, தேவன் எங்களுக்கு இரக்கம் செய்யும் வரைக்கும் எங்கள் கண்கள் உம்மை மெய்யாகவே நோக்கியிருக்கும். நீர் படைத்த ஜீவன் உம்மிடத் தில் வரும் நாளில் தீவிரமாய் உத்தரவு அருளிச் செய்யும். ஆமென்.’

யாழ்ப்பாணம் மயிலிட்டியில் பிறந்து, முள்ளிவாய்க்காலில் தப்பி, தாய்லாந்தில் உத்தரித்து, ரொறொன்ரோ வந்துசேர்ந்த சைமனின் பனி மூடிய உடல் ஸ்காபரோவில் அடக்கம் செய்யப்பட்டது. இனி, அந்த நிலம் அவனுக்குத்தான் சொந்தம். யாருமே பறிக்க முடியாது!

– நவம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *