கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 5,973 
 
 

முரளிக்கு வயது இருபத்திநான்கு. மிகவும் ஏழ்மையான குடும்பம். தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எழுதி பாளையங்கோட்டை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இளம் நிலை எழுத்தாளராக வேலை கிடைத்தவுடன், முதல்நாள் மிகுந்த ஆர்வத்துடன் அலுவலகம் கிளம்பிச் சென்றான்.

முரளி கெட்டிக்காரன். திறமையானவன். ஆனால் மிகவும் குள்ளம். அவனின் குள்ளத் தோற்றத்தினால் தாழ்வு மனப்பான்மை அவனை வதைத்தது. அதனாலேயே தான் மேலும் மேலும் முன்னேற வேண்டும் என்கிற வெறி அவனை ஆட்கொண்டது.

முதல்நாள் வேலைக்குச் சேர்ந்ததும்தான் அவனுக்குப் புரிந்தது. அவன் குள்ளம் என்பதால் மற்றவர்களைப்போல் நாற்காலியில் சாவகாசமாக அமர்ந்து வேலைசெய்ய முடியவில்லை. அவனது கால்கள் தரையில் படியவில்லை. டேபிள் தாடையை இடித்தது. இவனது சிரமத்தைப் புரிந்துகொண்ட ஹெட்கிளார்க், “முரளி நீங்க உங்க கால்களை வைத்துக்கொள்ள ஒரு உயரமான மரத்தினாலான முட்டும், நாற்காலியில் அமர்வதற்கு தடிமனான ஒரு சதுரமான தலையணையும் வாங்கிக் கொண்டால் நல்லது. நீங்க இந்த ஞாயிற்றுக்கிழமை பாளை மார்க்கெட் சென்று தேடிப்பாருங்க….எவ்வளவு ஆகும்னு மறுநாள் வந்து சொல்லுங்க, ஒரு கண்டிஜென்சி வவுச்சர் போட்டு அதுல வாங்கிக்குங்க. அந்தச் செலவை நம்ம ஈஈ (எக்சிகியூட்டிவ் இஞ்சினியர்) அப்ருவ் பண்ணுவாரு” என்றார்.

அடுத்த இரண்டு நாட்கள் முரளி சிரமப்பட்டு நின்றுகொண்டே வேலை செய்தான். பார்ப்பவர்கள் முரளிமீது பரிதாபப் பட்டார்கள்.

அந்த ஞாயிறு பாளை மார்க்கெட் சென்று பல கடைகளில் ஏறி இறங்கி, ஒரு சதுரமான மெத்தென்ற தலையணையும், கால்களுக்கு வைத்துக்கொள்ளும் மரத்தினாலான முட்டும் கண்டுபிடித்தான். தலையணை நாற்பது, கால்களுக்கு மரமுட்டு அறுபது ரூபாய் என்று பேரம்பேசி வைத்துக் கொண்டான்.

மறுநாள் திங்கட்கிழமை முரளி ஹெட்கிளர்க்கிடம் சென்று, “சார் தலையணை, மரமுட்டு ரெண்டும் சேர்த்து நூறு ரூபாய் ஆகுது…நீங்க நம்ம ஈஈ கிட்ட பேசி அவர் சரின்னு சொன்னதும், நூறு ரூபாய் கொடுத்தீங்கன்னா, இன்னிக்கி சாயங்காலமே நான் வாங்கிருவேன்” என்றான்.

ஹெட்கிளார்க் அன்று மதியம் ஈஈயின் மூடுபார்த்து விஷயத்தை பக்குவமாக எடுத்துச் சொன்னார்.

ஈஈ கடுப்புடன், “யோவ், ஒழுங்கா வேலைபார்த்து குடிநீர் குழாய்களை லே பண்ணதுக்கே சென்னை ஹெடாபீசில் இன்னும் பணத்தை அப்ரூவ் பண்ணபாடில்ல, இந்த லட்சணத்துல குண்டிக்கு அது வாங்கினேன், காலுக்கு இது வாங்கினேன்னு கணக்கு காமிக்க முடியாது. வேணும்னா அந்த பையனையே வாங்கிக்கச் சொல்லி, அவன் ரிடையர்ட் ஆகும்போது எடுத்துட்டுப் போகச் சொல்லு…அப்படி இல்லன்னா ஹெடாபீசுக்கு ஒரு ரிக்வெஸ்ட் மெமோ அனுப்பு, அவங்க அப்ரூவ் பண்ணட்டும், இதுல என்னிய மாட்டிவிடாதே” என்றார்.

ஹெட்கிளார்க் சோகத்துடன் வெளியே வந்தார்.

முரளியைக் கூப்பிட்டு, “ஈஈ ஹெடாபீசுக்கு எழுதி அப்ரூவல் வாங்கச் சொல்லிட்டாரு, உன்கிட்ட பணம் இருந்தா நீ உடனே வாங்கிரு…அப்ரூவல் வந்தப்புறம் நீ எங்கிட்டருந்து பணத்தை வாங்கிக்க” என்றார்.

முரளி வேதனையுடன், “சார் நான் இன்னும் முதல் சம்பளமே வாங்கல..எனக்கு நூறு ரூபாய் மிகப்பெரிய பணம்….பரவாயில்லை சார், நீங்க ஹெடாபீசுக்கு எழுதுங்க…அப்ரூவல் வர்ற வரையும் நான் அட்ஜெஸ்ட் பண்ணிக்கிறேன்” என்றான்.

அன்று மாலையே ஹெட்கிளார்க், ஹெட்டாபீசுக்கு ரிக்வெஸ்ட் மெமோ ஈஈ அப்ரூவலுடன் அனுப்பி வைத்தார்.

ஒரு வாரம் கழிந்தது.

அப்ரூவல் எதுவும் வராததால், ஹெட்கிளார்க் சென்னைக்கு போன்செய்து மென்மையாக ஞாபகப்படுத்த, அடுத்த இரண்டு நாட்களில் ஹெட்டாபீசிலிருந்து ஒரு மெமோ வந்தது.

அதை ஆர்வத்துடன் ஹெட்கிளார்க் பிரித்துப்பார்க்க, ‘தாங்கள் கடிதத்துடன் கொட்டேஷன் எதுவும் வாங்கியனுப்பவில்லை. எனவே கொட்டேஷன் வாங்கி அனுப்பவும்’ என்றிருந்தது.

உடனே ஹெட்கிளார்க் முரளியைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னார்.

அவனும் சிரத்தையுடன் பாளை மார்க்கெட் சென்று அவர்களிடம் கெஞ்சி தலையனைக்கு ஒன்றும், கால்முட்டுக்கு ஒன்றும் என தனித்தனியே இரண்டு கொட்டேஷன்கள் வாங்கிவந்ததும், அவைகளை அன்றே சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

நடுவில் பொங்கல், மாட்டுப்பொங்கல், தமிழர் திருநாள் என்று வரிசையாக ஒரு வாரத்திற்கு விடுமுறை வந்தது. அதை ஒட்டி அடுத்த மூன்று நாட்கள் ஊழியர்கள் தனியாகவேறு லீவு எடுத்து உல்லாசமாக இருந்தனர்.

அடுத்த மாதம் இறுதியில் பதில் வந்தது. அதில், ‘ஒரு கொட்டேஷன் மட்டும் அனுப்பியது தவறு, குறைந்தபட்சம் மூன்று கொட்டேஷன்கள் அனுப்பி வைப்பதுதான் முறை என்றும், அவைகளை கம்பாரிட்டிவ் ஸ்டேட்மென்ட் போட்டு உடனே அனுப்பிவைக்குமாறும்’ கேட்டிருந்தனர்.

அதைக் கேள்விப்பட்ட முரளி நொந்துபோனான்.

எனினும், மறுபடியும் அந்தக் கடைகளுக்குச் சென்று, நம் அரசாங்கம் மிகவும் கண்டிப்பானது என்றும், மூன்று கொட்டேஷன்கள் தேவையானது என்றும் எடுத்துச்சொல்லி அவர்களிடமிருந்தே (!) வேறு வேறு பெயர்களில் அந்த மூன்று கொட்டேஷன்களையும் வாங்கிவந்து நேர்மையைக் கடைபிடித்தான். கடைக்காரர்கள் தங்களுக்குள் நமட்டுச்சிரிப்பு சிரித்துக் கொண்டார்கள்.

மொத்தம் ஆறு கொட்டேஷன்களை – தலையணைக்கு மூன்று; மரமுட்டுக்கு மூன்று – ஹெட்கிளார்க் வரிசையாக அடுக்கி அவைகளை பத்திரமாக சென்னை ஹெட் ஆபீசுக்கு அப்ரூவலுக்கு அனுப்பி வைத்தார்.

பதில்வராது போகவே, அடுத்தவாரம் ஒரு ரிமைன்டர் அனுப்பினார்.

அதற்கு அடுத்தவாரம் பதில் வந்தது. அதில், முரளி நிரந்தர பணியாளர். எனவே வெறும் சதுர தலையணை உடம்புக்கு கேடு எனவும், வெங்காயச் சருகுடன் கூடிய தலையணையை உபயோகப் படுத்தினால் பைல்ஸ் கம்ப்ளையின்ட் வர வாய்ப்பில்லை எனவும், மேலும் மரமுட்டு எந்த மரத்தினால் ஆனது என்பது குறிப்பிடப்பட வேண்டுமென்றும், பதில் தெளிவாக இருப்பது அவசியம் எனவும்’ ஹெட்கிளார்க்கை குத்திக் காண்பித்து விலாவாரியாக எழுதியிருந்தார்கள்.

ஹெட்கிளார்க் அதிர்ந்து போனார். ‘தெரிந்தோ தெரியாமலோ புலி வாலைப் பிடித்தாகிவிட்டது. இனி அது தன்னைக் கடித்துவிடாது, புலிவாலை மெதுவாக கழற்றி விடவேண்டுமே’ என்று பயந்தார்.

மற்ற முக்கியமான வேலைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு இவரே நெல்லை ஜங்க்ஷனில் தேடித் தேடி வெங்காயச் சருகுடன் சதுரமான தலையணைக்கென மூன்றும், மற்றும் நல்ல மரத்தினாலான முட்டுக்களுக்கு மூன்றும் என மொத்தம் ஆறு கொட்டேஷன்கள் வாங்கி, அத்துடன் பவ்யமாக ஒரு நீண்ட பதில் எழுதி மிகவும் சிரத்தையாக அனுப்பி வைத்தார்.

இதனிடையில் முரளி மிகவும் வெறுத்துப்போய் பல தனியார் துறைகளுக்கு வேலைதேடி அடிக்கடி மனுக்கள் அனுப்பினான். அவனுக்கு உள்ளுக்குள் பயங்கரகோபம்.

மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றின…இந்தியாவிலுள்ள மாநில மத்திய அரசுகள் மிகவும் சோம்பேறித்தனமான அரசுகள். எங்கும் எதிலும் ஒரு தெளிவு கிடையாது. பெரும்பாலான முடிவுகள் அட்ஹாக் முறையில் எடுக்கப்பட்டு மக்களை வதைக்கிறார்கள். இந்த அரசுகளிடம் ப்ராசஸ் டாக்குமென்டேஷன் என்று ஒரு யழவும் கிடையாது. அதில் வேலை செய்பவர்களும் சோம்பேறிகள். புத்திசாலித்தனம், சுறுசுறுப்பு, திட்டமிடல் என்று துடிப்பில்லாத மந்தமான ஒரு வாழ்க்கை….

யாரேனும் ஒருமுறை போஸ்டல், பி.எஸ்.என்.எல்., எல்.ஐ.ஸி போன்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கு நேரில் சென்று பார்த்தால், அங்குள்ள பெரும்பாலோர் வீட்டுக்கதை பேசிக் கொண்டிருப்பார்கள். அல்லது மோட்டு வளையைப் பார்த்துக்கொண்டு பல்குத்திக் கொண்டிருப்பார்கள், அல்லது கேன்டீனில் காணப்படுவார்கள். இவர்களில் முக்கால்வாசி பேர்களை வீட்டுக்கு அனுப்பிவைத்தால் மீதம் இருக்கும் கால்வாசி ஊழியர்களுடன் அரசு திறமையாக சுறுசுறுப்பாக செயல்படலாம். திறமைக்கு உண்டான சவால்களையும், மரியாதைகளையும் நாம் நேரில் அனுபவிக்கலாம். ஆனால் யார் பூனைக்கு மணி கட்டுவது?

சமீபத்தில் நம் இந்தியன் ஏர்போர்ஸ் விமானம் ஒன்று இருபத்தி ஒன்பது பேருடன் காணாமல்போனது. இவர்களை உடனே தேடி கண்டுபிடிக்க நம்மிடம் ஒரு ப்ராசஸ்கூட கிடையாது. ஏற்கனவே இதேபோல் ஒரு மூன்றுபேர் இறந்துபோயும் நாம் பாடம் கற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. ஒவ்வொரு நாளும் ஒரு ஏஜென்சியை அனுப்பி கடலில் தேடச் சொல்வார்கள். ஏன் முதல்நாளே அத்தனை ஏஜென்சிகளும் சேர்ந்து தேடினால் என்ன? ஏனென்றால் விமானம் கானாமல்போனால் எப்படி தேடுவது என நம்மிடம் ப்ராசஸ் டாக்குமெண்டேஷன் கிடையவே கிடையாது. ஒவ்வொரு அசைவுக்கும் நாம் அரசியல்வாதிகளின் அல்லது அதிகாரிகளின் ஒப்புதலைப் பெறவேண்டும். காணமல்போன அந்த இருபத்தி ஒன்பது உயிர்களின் குடும்பத்திற்கு நம் அரசாங்கத்தின் மீது என்ன மரியாதை இருக்கும்? அல்லது புதிதாக இளைஞர்கள் இனி நம் விமானப் படையில் சேரத்தான் விரும்புவார்களா? நாம் அனைவரும் வாழ்வது அசிங்கத்தின் உச்சத்தில்.

அதெப்படி தனியார் துறைகள் திறமையாக செயல்பட்டு லாபம் அடைகிறார்கள்? அதன் ஊழியர்கள் மட்டும் எப்படி சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள்! அதுஏன் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட நம் அரசாங்கங்கள் மட்டும் மெத்தனமாக செயல் படுகின்றன? அதன் ஊழியர்கள் மட்டும் ஏன் கஸ்டமர் போக்கஸ் இல்லாமல் சோம்பேறிகளாக வலம் வருகிறார்கள்? இந்தக் கொடுமைகள் நம் முயற்சியால் மட்டும் நின்றுவிடாது.

இதிலிருந்து தப்பிக்க ஒரேவழி, வேறு வேலை. முரளி மும்முரமாக வேலை தேடுவதில் முனைந்தான்….

ஹெட்கிளார்க் இரண்டு நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பியபிறகு, அதைத் தொடர்ந்து நான்கு முறைகள் தொலைபேசியில் பேசியபிறகு, இரண்டு வருடங்களுக்குப் பிறகு அந்த அப்ரூவல் வந்தது. அதில், ‘ஒரு வெங்காயச்சருகு தலையணைக்கும், ஒரு மரமுட்டுக்கும் சேர்த்து நூறு ரூபாய் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும், அந்த நூறு ரூபாயை கண்டிஜென்சி பணத்தில் இருந்து எடுத்து செலவழிக்கலாம் எனவும், அதற்குண்டான கேஷ்பில் ஆடிட் தேவைக்காக அனுப்பி வைக்கவேண்டும் என்றும், மேலும் இவைகளை உபயோகிப்பவர் இத்துடன் இணைத்துள்ள யூசர் படிவத்தை பூர்த்திசெய்து கையெழுத்து போட்டு அனுப்ப வேண்டும்’ என்று கட்டளையிட்டிருந்தார்கள்.

முரளி கொதித்துப் போனான்.

கோபத்துடன் யூசர் படிவத்தில், ‘தனக்கு ஒரு வெங்காயமும் வேண்டாம் என்றும், அரசாங்க பணத்தை அனாவசியமாக செலவழிக்கத் தேவையில்லை எனவும், இதுசம்பந்தமாக இதுகாறும் எழுதப்பட்ட / பெறப்பட்ட கடிதங்களையும் கொட்டேஷன்களையும் சேர்த்து தன்னால் ஒரு பெரியதான பைல் உருவாக்கப்பட்டு, அந்த பெரிய பைல்தான் தன்னுடைய தற்போதைய சிம்மாசனம் எனவும் இதற்குமேல் இது சம்பந்தமாக கடிதப்போக்குவரத்து தேவையில்லை’ எனவும் எழுதி முறைப்பு காட்டினான்.

அடுத்த மூன்று மாதங்களில் ஒரு சிறப்பான தனியார் துறையில் ஒரு நல்ல வேலை கிடைத்ததும் தலைதெறிக்க அதில் ஓடிப்போய் சேர்ந்தான்.

அந்த தனியார்துறையின் குளு குளு ஏசியில், விலை உயர்ந்த, உயரத்தை ஏற்றி இறக்கி அமைத்துக்கொள்ளும் எர்கனாமிக் நாற்காலி முரளியை அன்புடன் வரவேற்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *