நானும் ரிக்ஷாக்காரனும்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 28, 2022
பார்வையிட்டோர்: 32,919 
 

அப்பொழுது நான் பொரளை மின் வண்டி (ட்ரேம் கார்) தரிப்பிடத்திலீருந்து ஒரு மைலுக்கு மேல் தூரமில்லாத ஒரு இடத்தில் அமைத்திருத்த புத்தம் புது வீடொன்றில் தங்கியிருந்தேன். தினசரி காலையில் மீன்வண்டி தரிப்பிடத்துக்கும், மாலை வேளையிலோ இரவிலோ கந்தோரிலிருந்து வேலை முடிந்து வீடு திரும்பும் போது தரிப்பிடத்திலிருந்து வீடுவரைக்கும் நடந்து செல்வது எனது வழக்கம். மழை நாளில் இரவாகி, அதன் பின் வீடு திரும்ப நேர்ந்தால் மட்டுமே நான் ரிக்ஷோவில் செல்வேன். ரிக்ஷோவில் நான் இருந்து விட்டே சென்றேனாயினும், பொரளை சந்தியிலிருந்த ரிக்ஷோக்காரர்களுள் ஒருவன் எனது நண்பனாகி விட்டான்.

பணத்தை எவ்வளவு அதிகமாகக் கொடுத்தாலும் போதாது எனப் பழி வாங்குவதும், சிலவேளைகளில் குத்துக் கதைகள் சொல்வதும் ரிக்ஷோக்காரர்களது வழக்கம். எனவே, கூலியை முற்கூட்டியே பேசிக்கொள்ளாமல் எக்காலத்திலுமே நான் ரிக்ஷோவில் போவதில்லை. இதைப் பழக்கமாகக் கொண்டிருந்தேன்.

NanumRick-picஇயன்றவரை கூலியைக் குறைவாகப் பேசிச் சென்று, பேசியதைக் காட்டிலும் ஐந்து சதமோ, பத்து சதமோ கூடுதலாக ரிக்ஷோக்காரனுக்குக் கொடுப்பது எனது பழக்கமாகி விட்டது. மேலே குறிப்பிட்ட ரிக்க்ஷோக்காரனது ரிக்ஷோவிலும் முதன் முதலில் இப்படித்தான் கூலியைப் பேசிக் கொண்டு பயணம் சென்றேன்.

அன்று மழைநாள். நான் அவனது ரிக்ஷோவில் வீட்டுக்குச் சென்றதும் அவனிடம் பொருந்திய கூலிப்யைக் காட்டிலும் பத்துசதம் கூடுதலாகவே செலுத்தினேன். அன்று முதல் ரிக்ஷோவில் செல்லும் நாட்களில் நான் கொடுக்கும் காசு குறைவாக இருந்தாலும் கூட, அதை ஏதும் கூறாது எடுத்துக் கொள்வது அவனது தொழிலாகிவிட்டது.

அவனது இச்சுபாவம் அவனைப் பொறுத்தவரை லாபகரமானதாக விருந்தாலும். எனக்கோ பெரும் நஷ்டத்துக்குக் காரணமாகிவிட்டது. நான் கொடுக்கும் பணத்தை மறுப்புக் கூறாமல் வாங்கும் எவருக்கும் குறைந்த பட்சம் ஐந்து சதமாதல் நான் அதிகமாகக் கொடுக்காவிட்டால் எனது மனம் நிம்மதியடைவதில்லை. அவனது ரிக்ஷோவில் சென்ற எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நான் கூலியுடன் ஐந்து சதமோ பத்து சதமோ மேலதிகமாகவே கொடுத்து வந்தேன்.

ஆரம்பத்திலேயே அவன் எனது சுபாவத்தை அறிந்து கொண்டு, நான் கொடுத்த கூலியைப் பதில் ஏதும் கூறாமல் பெற்றுக் கொள்வதால் என்னிடமிருந்து மேலதிகமான தொகையைப் பெற முடியும் என எண்ணி அப்படிச் செய்தானோ என என்னால் கூறுவதற்கில்லை. எனினும் அவன் எனது பழக்கவழக்கத்தை நன்கு எடையிட்டு அறிந்து கொண்ட சாமர்த்தியசாலி என்பதை நான் பிற்பாடுதான் உணர்ந்தேன்.

இந்த ரிக்ஷோக்காரனது அறிமுகம் எனது மேலதிகச் செலவுக்கு ஏது வாயும், ஆரோக்கியத்துக்குத் தடையாயும் அமைந்தது. நாள் முழுவதும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் எனக்கு வீட்டிலிருந்து மின் வண்டி தரிப்பிடத்துக்கும், மின் வண்டி தரிப்பிடத்திலிருந்து வீட்டுக்கும் நடந்து போவது உடற்பயிற்சியாகலாம். மாலையில் மின் வண்டியிவிருந்து இறங்கிய மாத்திரத்தில் அவன் ரிக்ஷோவைக் கொணர்ந்து என்னருகே நிறுத்தி விடுவான். அவனது நம்பிக்கையைச் சிதைத்து நடந்து போக மனம் இடந்தராது. அவன் ரிக்ஷோவைக் கொண்டு வந்து நிறுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் ரிக்ஷோவில் ஏறிக் கொள்வேன்.

படிப்படியாக நானும், அவனும் நண்பர்களாகி விட்டோம், ஆகையால் ஒரு நாள் ரிக்ஷோவில் போகும் போது அவனைப் பற்றி விசாரித்தறிய வேண்டுமென்று எனக்குத் தோன்றியது.

‘நீ கலியாணம் கட்டி விட்டியோ?”

“கலியாணம்?”

அவன் சிரிப்பொன்றை உதிர்த்தவாறு இன்னும் வேகமாக ஓடலானான்.

“ஓம். நான் அப்பிடிக் கேட்டது ஏனென்றால் உனக்குப் பிள்ளைகள் இருக்குதா என்று தெரிஞ்சு கொள்ளத்தான்”

“எனக்கு விளங்குது துரை. நான் சொல்ல வந்தது அதைத்தான்” அவன் பயண வேகத்தைக் குறைத்தான்.

“என்ர முந்தின பெண் சாதி வேத்து மனுசன் ஒருத்தனோட ஒளிஞ்சு ஓடிப் போயிட்டா. அதுக்குப் பிறகு நான் வேற பொம்பிளை ஒருத்தியோட கூடிக்கொண்டு வந்திட்டேன். அவளுவ இல்லாம ஏலாது தொரை”

“ஒனக்குப் பிள்ளைகள் எத்தினை பேர் இருக்காங்க?”

நான் அவனது விவாகம், வாழ்வு, ஆகிய குப்பைகளைக் கிளற விரும்பாதவனாக வினாவினேன்.

“புள்ளைங்க பதினாலு பேர் கெடச்சாங்க. நாலு பேர் உயிரோடை இருக்காங்கோ.”

“உன்ர வயசு?”

“என்ர வயசு அறுவது. ஓம் தொரை. இளந்தாரி ஒருத்தனுக்குச் சமமாகப் பாரமான வேலை எதயும் என்னால இன்னமும் செய்ய ஏலும்”

அவன் மீண்டும் வேகமாக ஓடலானான்.

அன்று என்னை வீட்டுக்குக் கொண்டு போய் இறக்கிய இந்த ரிக்ஷோக்காரன் நான் தந்த கூலியை ஏற்காமல் வேண்டுகோள் ஒன்றை விநயமாக விடுத்தான்.

“நாளைக்கு நான் ரிக்ஷோக்கு லைசன்ஸ் அடிக்கோணும் தொரே. எங்கிட்டச் சல்லி கிடையாது. எனக்கு ரெண்டு ரூவா தாங்கோ. நான் அதை நாலு தடவையிலை திருப்பித் தந்துடுறேன். எனக்கு இண்டைக்கு தொரேக்கிட்ட கூலி வாணாம்”

“இல்லை-இல்லை, கூலியை எடுத்துக்கோ”

நான் அவனது கைக்குள் இருபது சதத்தைத் திணித்தேன்.

சற்றே சிறிது நேரம் யோசித்த நான் வீட்டுக்குள் சென்று, முகப்புக்கு மீண்டும் வந்தேன். அவனுக்கு இரண்டு ரூபா கொடுக்கலாமா என்ற கேள்விக்கு முடிவு காண முடியாததாலேயே நான் உள்ளே சென்றேன். நான் முகப்புக்கு வந்தவுடன், அவன் மீண்டும் என்னிடம் விண்ணப்பம் விடுத்தான்.

“தொரே வீட்டுக்கு வாறப்போ நான் எந்த நாளும் கொண்டார்து விட்டுடறேன். அதுக்குக் கூலி தேவையில்லை. எனக்கு இண்டைக்கு ரெண்டு ரூவா தாங்கோ”

“இந்தா ரிக்ஷோவுக்கு லைசன்ஸ் வாங்கு”.

நான் அவனுக்கு இரண்டு ரூபாய் கொடுத்தேன். இரண்டு ரூபாவைப் பெற்றுக் கொண்டு பெரும் நன்றியறி தலுடன் என்னை வணங்கிவிட்டு அவன் விரைந்து சென்றான்.

இவ்வளவு காலமும் நாளாந்தம் நான் மின் வண்டியிலிருந்து இறங்கியதுமே ரிக்ஷோவைக் கொணர்ந்து நிறுத்தும் அந்த ரிக்ஷோக்காரனை நான் கடன் கொடுத்தபின் என்னால் காண முடிந்ததே இரண்டு நாட்கள் கழித்துத்தான். மூன்றாம் நாள் அவன் என்னைக் கண்டவுடன் ரிக்ஷோவை அருகில் கொண்டு வந்து நிறுத்தினாலும், அவனிடம் முன்பெல்லாம் என்னைக் கண்டதும் எழும் ஆர்வத்தைக் காண முடியவில்லை. நான்காம் நாள் அவன் ரிக்ஷோவை என்னருகே கொண்டு வந்து நிறுத்தினான். ஆனால் அதற்குக் காரணம் மழைநாளான படியால் அவனைக் குரல் கொடுத்து நானே அழைத்திருந்தேன். ஐந்தாம் நாள் என்னைத் தூரத்தில் கண்ட மாத்திரத்தே அவன் ரிக்ஷோவை வேறொரு பக்கமாக இழுத்துக் கொண்டு மறைந்து விட்டமையை நான் நன்கு அவதானித்தேன். ஏழு நாளைக்குப் பிறகு அவன் அந்த ரிக்ஷோத் தரிப்பிடத்தையே கைவிட்டு வேறொரு பிரதேசத்துக்குப் போய் விட்டான். அது கூட ஏனைய ரிக்ஷாக்காரர்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.

“சிங்கள ரிக்ஷோக் காரனாக இருக்க வேண்டும் அவன்”

இப்படி நான் கூறிய இக்கதையைக் கேட்டுக் கொண்டிருந்தவரான குத்துக் கதைகளையே பேசுவதில் வல்ல எனது பண்டித நண்பர் கூறினார்.

“அவன் யாராக இருந்தாலும் இரண்டு ரூபா திருப்பக் கிடைக்காததை நான் பெரிய நஷ்டமாகக் கருத வில்லை”

எனது பண்டித நண்பரிடம் நான் தெரிவித்தேன்.

மனிதத்துவம் பற்றி நான் அறிந்திருந்தது சொற்பமே. அவனது மனதைப் புண்படுத்த விரும்பாமல் அவனது ரிக்ஷோவில் சென்றதால் எனக்கு மாதமொன்றிற்குக் குறைந்த பட்சம் ஐந்து சிலிங் (ஒரு சிலிங் 53 சதம்) ஆவது செலவாகி விட்டது. உடற்பயிற்சியும் இல்லாமற் போய் விட்டது. அவன் இரண்டு ரூபாவை எடுத்துக்கொண்டு அவ்விடத்திலிருந்து போய் விட்டமையால் மீண்டும் நான் முன் போலக் கால் நடையாக வீடு திரும்ப வழியும் பிறந்தது. மாத மொன்றுக்கு ஐந்து சிலிங் செலவாவதும் எனக்கு மிஞ்சியது.

நன்றி: ‘பாவிக்குக் கல்லெறிதல்’ – (சிறுகதைத் தொகுதி) – மார்ட்டின் விக்ரமசிங்ஹா – தமிழில்: எஸ்.எம்.ஜே.பைஸ்தீன்

– அஞ்சலி மாத சஞ்சிகை – மார்ச் 1971

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *