நாசகாரக் கும்பல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 10, 2021
பார்வையிட்டோர்: 4,447 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அம்பி, வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். எதிரே சேறும் சகதியுமாயிருந்த வராகக் குளத்தை தூர்த்துக் கொண்டிருந்தார்கள். எதற்காகத் தூர்க்கவேண்டும், சேறும் சகதியுந்தானே வராகருக்கு ஏற்றதொரு இடம் என்று நினைத்தான் அம்பி. ஆனால் பாசி படர்ந்த அவ்விடத்திலிருந்து புறப்பட்டு ஊரில் வியாதியைப் பரப்பும் கொசுவுக்கு வராகர் ஒரு வழி செய்வாரானால், அவர் உவக்கும் இடத்தை அப்படியே விட்டு வைத்திருக்கலாம்… “கொசு ஓர் அரக்கன்; அவனை அழிக்க ஒரு புது அவதாரம் தேவை…’ அம்பியின் கற்பனை அவனுக்கே சிரிப்பைத் தந்தது.

“என்னடா, காலங்காத்தாலே திண்ணையிலே உட்கர்ந்திண்டு காலை ஆட்டிண்டிருக்கே?”

கிட்டு, கையில் பட்டமும் நூற்கண்டுமாக நின்று கொண்டிருந்தான். அவனுக்கு அம்பியைக் கண்டால் கொஞ்சம் பொறாமை… வாத்தியார் மகனாக இருந்தாலும், படிப்பில் அம்பியை மிஞ்ச முடியவில்லை. இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சையில் அம்பி ராஜ்யத்திலேயே முதலாவதாக வருவான் என்று அவன் அப்பாவே சொல்லிக் கொண்டிருந்தது. கிட்டுவுக்கு எரிச்சலைத் தந்தது.

“பட்டம் விடப் போறயா, நானும் வரட்டுமா?” “உனக்கு என்ன பட்டம் விடத் தெரியும்?… நாலு பாடத்தைப் பொட்டை நெட்டுரு போட்டு மார்க் வாங்கத் தெரியும்… அவ்வளவுதானே?”

“அம்பிக்கு அவமானமாக இருந்தது. அவனை யாருமே விளையாடச் சேர்த்துக் கொள்வதில்லை. விளையாட வேண்டுமென்ற ஆர்வமிருந்தாலும், விளையாட்டில் அவனுக்குத் திறமை போதாது. படிப்பில் கெட்டிக்காரனாக இருந்து என்ன பயன்? இந்த வயதில், விளையாட்டில் சூரனாக இருந்தால்தான் எல்லாரும் மதிக்கிறார்கள். பள்ளிக்கூட விளையாட்டுப் போட்டி ‘சாம்பியன்’ கதிர்வேலுவைத்தான் எல்லாருக்கும் தெரியும்.

அம்பியை யாருக்குத் தெரியும்? வயசான வாத்தியார்கள் வேண்டுமென்றால், அவனைத் தட்டிக் கொடுக்கலாம்… ஆனால்?. கதிர்வேலுக்கு. அந்த வெறுந்தடியனுக்கு, ராதா காதல் கடிதம் எழுதினாளே, தன்னை ஒரு தடவையாவது பார்த்துப் புன்னகை செய்திருப்பாளா? ‘அம்பி கெட்டிக்காரப் பையன், நல்ல மாதிரி சே… இந்தப் பட்டங்களைச் சுமந்து கொண்டிருப்பதினால் அவனுக்கு என்ன பிரயோஜனம்?

கிட்டு போய்விட்டான்… அம்பிக்கு அழுகை வரும் போலிருந்தது…

அப்பொழுது ஒரு பஸ் வரும் சப்தம் கேட்டது. அம்பி உட்கார்ந்தபடியே தலையை நீட்டித் தெருக்கோடியை நோக்கினான். கருணுடூரிஸ்ட் பஸ். ஏன் இந்தப் பக்கம் வருகிறது? அவனுக்கு ஞாபகம் வந்தது. வழக்கமான பாதையில் குழி தோண்டி வைத்திருக்கிறார்கள்.

டூரிஸ்ட் பஸ்… பேர்தான் டூரிஸ்ட் பஸ்… அது டூரிஸ்ட் பஸ்ஸே இல்லை. தினசரி இரவு வெளியூர்களுக்கும், வெளியூர்களிலிருந்தும் பிரயாணிகளை ஏற்றிக் கொண்டு போய் வருகிறது. நடத்துகிறவர், ஆளுங்கட்சிப் பிரமுகர். அரசாங்கம் காந்திஜிக்குப் பிடித்த குரங்கு; தீமையைப் பார்க்காது. கண்ணை மூடிக் கொள்ளும். -ஒருவேளை இரவு வேளைகளில் அரசாங்கம் தூங்கி விடுகிறதோ என்னவோ? அம்பிக்குத் தான் கெட்டிக்காரன் என்று பட்டது. தன்னை ஒத்த மற்றவர்களுக்கு இந்த வயதில் இந்த மாதிரியெல்லாம் தோன்றுமோ? கெட்டிக்காரனாக இருப்பதோடு மட்டுமல்லாமல், விளையாட்டிலும் புலியாக இருந்தால்?… ஒரு ராதா என்ன, ஒன்பது ராதாக்கள் கடிதம் எழுதலாம்.

பஸ் அருகில் வந்துவிட்டது. சிகப்பு நிற பஸ். அம்பியின் வீட்டருகே வந்ததும் பஸ் சற்று யோசிப்பது போல், தயங்கி நின்றது. அவன் வீட்டெதிரே, குளத்துக்கும், கோயிலுக்குமிடையே இடைவெளியில் போகிறானோ?…

தான் நினைத்தது சரிதான்… “ரிவர்ஸ் செய்யத்தான் பஸ்ஸை இங்கு கொண்டு வந்திருக்கிறான். பூதாகாரமான பஸ். இந்தச் சிறிய இடைவெளி போதுமோ? கண்டெக்டர் பஸ்ஸை விட்டுக் கீழே இறங்கவில்லை. பின்புறத்துக் கண்ணாடி வழியாகப் பார்த்துக்கொண்டே ‘எஸ்…எஸ்…எஸ்’ என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

பஸ் பின்பக்கம் நகர்ந்தவாறு திண்ணையருகே வந்தது. அம்பி காலைத் தூக்க வேண்டுமா என்று ஒரு கணம் நினைத்தான்… அப்படிப் பார்க்காமலேயா இருந்துவிடப் போகிறான், கண்டக்டர்?

அம்பியின் அலறல் தெரு முழுவதும் கேட்டது. கண்டக்டரின் ஹோல்ட் ஆன் என்ற கத்தலும், அம்பியின் அலறலும் ஒரே சமயத்தில் ஒலித்தன.

பஸ் நின்றது… வண்டியிலிருந்து பிரயாணிகள் அவசர அவசரமாகக் கீழே இறங்கினார்கள்.

“ஐயோ பாவம், கால் சட்னியாயிடுத்தேய்யா?”

“முதல்லே ரத்தத்தை நிறுத்துய்யா… ஃபஸ்ட் எய்ட் பாக்ஸைக் கொண்டா சீக்கிரம்.”

“நோ… நோ… ஆஸ்பத்திரிக்கு எடுத்துண்டுதான் போகணும்… சின்னப்பையன்… என்னய்யா அநியாயம்…!”

கண்டக்டர் அம்பியின் கால்களை மெதுவாக விடுவித்தான். அம்பி அழவில்லை. அவனுக்கு நினைவு தப்பிவிட்டது.

அப்பொழுது திடீரென்று எல்லாருடைய நெஞ்சையும் பிழிந்தெடுக்கும்படியாக ஓர் ஓலம் கேட்டது. கண்டக்டர் பையனைத் தூக்கிப் பஸ்ஸில் வைத்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகலாமா என்று யோசித்தவன், திடுக்கிட்டு நின்றான்.

“அம்பி… அம்பி… நான் என்னடா செய்வேன்… உன்னைத்தானேடா நான் நம்பிண்டிருந்தேன்…”

“யாரு இவங்க?… பையனோட அம்மாவா?”

“ஆமாம்…”

“பெரியம்மா, கொஞ்சம் நகருங்க. ரத்தம் போய்கிட்டே இருக்கு… பஸ்ஸிலே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கிட்டுப் போறோம். மத்ததெல்லாம் அப்புறம் பேசிப்போம்…”

“எங்கேய்யா அவசர அவசரமா ஓடறே? பையன் பேரிலே பஸ்ஸை ஏத்திட்டுத் தப்பிச்சுக்கலாம்னு பாக்கறயா? தோப்பணில்லாத பிள்ளை, ஒரு ஏழைக் குடும்பத்தோட வயத்தலே அடிச்சிட்டியே, உருப்படுவியா?…”

“ஐயரே, நீங்க என்னய்யா வேணும் இந்தப் பையனுக்கு? சொல்லறத்தை கேளுங்க… உங்களுக்குப் பையன்தானே முக்கியம்?… சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கிட்டுப் போவோம்; அப்பறம் சத்தியமா சொல்றேன், நீங்க என்ன சொல்றீங்களோ அதைச் செய்யறேன்… நானும் பிள்ளை குட்டிக்காரன்… வேணும்னு இந்தப் பச்சைப் புள்ளை மேலே பஸ்ஸை ஏத்தலே…”

“பையன் திண்ணையிலே உட்கார்ந்திண்டிருந்ததை நீ பாக்கலே? கண் அவிஞ்சா போச்சு? காலைச் சட்னியாக்கிட்டியே… இந்த அம்மாவுக்கு ஒரு வழி சொல்லிவிட்டுப் போ…” –

டிரைவருக்குக் கோபத்தினால் முகஞ் சிவந்தது. நன்றாக அடிபட்டுக் கிடக்கும் பையனை வைத்துக் கொண்டு வியாபாரம் பேசுகிறாரே, இவர் யாராக இருக்கும்?

“இந்தப் பையனுக்கு நீங்க என்ன வேணும்?”

“நான் பக்கத்து வீட்டிலே குடியிருக்கேன்… நான் யாராயிருந்தா உனக்கென்ன?”

டிரைவர் கண்டக்டரிடம் சொன்னான், “ராஜா, பையனைத் தூக்கி வண்டியிலே எடுத்துட்டுப் போவோம் வா… டைம் வேஸ்ட் ஆகிகிட்டிருக்கு…”

அம்பியின் அம்மா அவன் உடம்பைக் கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தாள்.

“பெரியம்மா… சொல்றத்தைக் கேளுங்க. நானும் பிள்ளை குட்டிக்காரன்… தெரியாத்தனமா வண்டியை ஏத்திட்டேன்… முதல்லே குழந்தையை ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப்போவோம். தயவு செய்து பையனை விடுங்க… நீங்களும் கூட வாங்க…”

“ஏதாவது பொய் ஸ்டேட்மெண்ட் கொடுத்து கையெழுத்து வாங்கிக்கலாம்னு பாக்கறயா? கனகாமாமி, போகாதீங்க…”

புதுக்குரல் கேட்டதும் டிரைவர் திரும்பினான். நெற்றியில் திருநீறு சந்தனப்பொட்டு, நாற்பது வயதிருக்கும் அவருக்கு. குழந்தை துடித்துக் கொண்டிருக்கிறான். சட்டம் பேசுகிறார்களே படுபாவிகள்! டிரைவர் சிறினான். “ராஜா, பையனைத் தூக்கு… ஹீம் சீக்கிரம்.”

“அட நீங்கதானா சட்டம் பேசறது…? இவர் யாரு தெரியுமில்லே அண்ணே, வக்கீல் குமாஸ்தா பாலு அய்யர்” என்றான் ராஜூ.

“அவர் யாரா வேனுமானாலும் இருக்கட்டும், குழந்தையக் கொஞ்சம் பிடி…”

“போலீஸ் வந்தப்புறம் போகலாம்…” என்றார் பாலு அய்யர்.

“பையன் செத்துப் போயிடுவான்யா, ஈவு இரக்கமற்ற படுபாவியா இருக்கியே!”

“வண்டியை ஏத்தரச்சே, இந்த ஈவு இரக்கமெல்லாம் எங்கே போச்சு…? நியாயம் பேசறான், நியாயம்… நான் சட்டம் தெரிஞ்சவன், என்னை ஏமாத்த முடியாது…”

“பெரியம்மா… பையன் உங்க பையன்… என்னை நம்புங்க… நான் திரும்பி வரேன்… எவ்வளவு ஸ்டேட்மெண்ட்லே வேனுமானாலும் கையெழுத்துப் போடறேன்… பையனுக்கு ரத்தம் போய்கிட்டே இருக்கு. ஆஸ்பத்திரிக் கேஸ். போலீஸ் எப்பொ வர்றாங்களோ, காத்துக்கிட்டிருக்க முடியுமா? சீக்கிரம் சொல்லுங்க…”

அழுது கொண்டிருந்தவள் அவனை ஏறிட்டு நோக்கினாள். “சரி, எடுத்துண்டு போ… நானும் வரேன்..”

டிரைவர் பையனைத் தூக்கி ராஜூவின் உதவியைக் கூட எதிர்பார்க்காமல், வண்டிக்குள் கொண்டுபோய் சீட்டில் கிடத்தினான். அம்பியின் அம்மாவும் வண்டிக்குள் ஏறினாள்.

“ராஜூ! வாப்பா சிக்கிரம்…” என்றான் டிரைவர்.

பாலு அய்யரும் ராஜூவும் தனியாகப் போய் ஏதோ இரகஸ்யமாகப் பேசுவது போல், கீழ்க் குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். டிரைவரின் குரல் கேட்டதும், ராஜூ அவசர அவசரமாக வந்து வண்டியில் ஏறினான்.

“என்னப்பா எங்களையெல்லாம் ‘அம்போ’ன்னு விட்டுட்டே…” என்றார் பஸ்ஸில் வந்த பிரயாணிகளில் ஒருவர்.

“அதுதான் கும்பகோணம் வந்தாச்சேய்யா… டவுன் பஸ்லே போங்க… ஒரு உசிரு மன்றாடிகிட்டிருக்கு… வீட்டிலே ஏன் கொண்டு விடல்லேன்னு கேக்கறாரு, இவரு…”

“இதுக்கு நாங்கதானா பொணை ? நீ செஞ்ச தப்புக்கு யார் மேலே கோவிச்சிக்கறே?”

“சரிதான், வண்டியை விட்டு இறங்குங்க. ஸ்டார்ட் பண்ணனும்…”

“நான் உங்க முதலாளி கிட்டே கம்ப்ளெயின்ட் பண்ணிக்கிறேன்… திமிராவா பேசறே?”

டிரைவர் ஆசனத்தை விட்டு எழுந்து அந்தப் பிரயாணியிடம் வந்தான்.

‘நீ மனுஷன்தானே, இல்லாட்டி மிருகமா? அதோ அந்தப் பச்சைப்புள்ளை கிடக்கிறது உன் கண்ணுக்குத் தெரியலே… கோபத்திலே நான் என்ன செய்வேன்னு தெரியாது.”

அவர் முணுமுணுத்துக் கொண்டே கீழே இறங்கிவிட்டார்.

பஸ் புறப்பட்டது. ராஜூ சொன்னான். “வேலு அண்ணே, நான் செய்யறது தப்புத்தான்… திண்ணையிலே இடிச்சதினாலே ‘டெயில்லைட்’ நொறுங்கிப் போயிடிச்சி. இதைத் தவிர இன்னும் ‘பாடி’க்கு வேற ‘டாமேஜ்’… முதலாளிக்குப் பதில் சொல்லியாகணும்… போலீஸ் வர்றதுக்குள்ளே நாம் புறப்பட்டு வந்தது அவ்வளவு சரியில்லே.”

“நீ வாயை மூடிக்கிட்டு இரு… எல்லாப் பொறுப்பையும் நான் ஏத்துக்கறேன்…”

“குழந்தை பொழைப்பானா டிரைவர்?” “நிச்சயமா. பொழைப்பான், கவலைப்படாதீங்க… என்னோட போறாத காலம்…” டிரைவரின் குரல் கம்மியது.

“சன்னரத் தாழ்வான் கோயிலை ஒரு கத்து சுத்திட்டு வருவோம்னுதான் போனேன்… அதுக்குப் பலன் இப்படியா இருக்கணும்?” அம்பியின் அம்மா சிறிது நேரம் மெளனமாக இருந்தவள், மறுபடியும் புலம்பத் தொடங்கிவிட்டாள்.

“பெரியம்மா, அழுவாதிங்க… எல்லாம் நல்லபடியா சரியாயிடும்.” இதை வேலு சொன்னானே தவிர, அவன் சொன்னதில் அவனுக்கே நம்பிக்கையில்லை… எப்படிச் சரியாயிடும்? இரண்டு பாதங்களும் நசுங்கிவிட்டன. விரல்கள் இல்லை. பையன் எப்படி நடக்கப் போகிறான்? தகப்பன் இல்லாத பிள்ளை, இவனைத்தான் நம்பிக் கொண்டு இருப்பதாகத் தாய் புலம்புகிறாள்!

“பெரியம்மா, உங்களுக்கு வேறு குழந்தைங்க இல்லையா?” என்று கேட்டான் வேலு.

அம்பியின் அம்மா பதில் கூறவில்லை. கண்களை மூடிக்கொண்டு ஜபித்துக் கொண்டிருந்தாள். பதில் வராததைக் கண்டு வேலு திரும்பிப் பார்த்தான். அவள் என்ன செய்கின்றாள் என்றறிந்ததும் தன் கேள்வியை மீண்டும் வற்புறுத்தவில்லை.

ராஜூ சொன்னான். “பையனை ஆஸ்பத்திரியிலே சேத்தப்புறம் முதலாளிக்கு அங்கேயிருந்து ஃபோன் பண்ணி விஷயத்தைச் சொல்லிடுவோம். போலீஸை அவர் பாத்துப்பாரு… என்னன்னே?”

வேலு பேசாமலிருந்தான். இந்த அம்மாவுக்கு வேறு குழந்தைகள் இல்லையோ? அப்படி இல்லையென்றால், இதைக் காட்டிலும் துயரம் இந்த அம்மாவுக்கு வேற என்ன வேண்டும்? முதலாளியிடம் சொல்லி நஷ்ட ஈடு வாங்கித் தரமுடியுமா? “ஒண்னாம் நம்பர் கஞ்சன், குடிக்கும் கூத்திக்கும் செலவழிப்பான், நஷ்டஈடா தரப்போகிறான்?

தானும் ‘பிள்ளை குட்டிக்காரன்’ என்று வேலு சொன்னது வாஸ்தவந்தான்… ஒன்பது குழந்தைகள்… பெரியவளுக்குப் பதினெட்டு வயது. கல்யாணம் செய்தாக வேண்டும். ஆறு பெண்கள், மூன்று பிள்ளைகள். கடைசிக் குழந்தை பெண்; இரண்டு வயதாகிறது…

ராஜூவையே தன்னுடைய மூத்த பெண்ணுக்கு வளைத்துப் போடலாமென்பது வேலுவின் திட்டம். பிச்சுப் பிடுங்கலில்லை. ஒரே பிள்ளை… அம்மா கிடையாது, அப்பாதான். அவரும் வைப்பாட்டியோடு தஞ்சாவூரில் இருந்து வருகிறார். ஆனால் இந்தக் காலத்து வாலிபர்களைப் போல், ராஜூவுக்கும் நெஞ்சில் ஈரம் இல்லையே என்ற சந்தேகம் வேலுவுக்கு உண்டு. இன்று உறுதியாகிவிட்டது. முதலாளி, போலீஸ், முதலாளி, போலீஸ்! என்று அரற்றிக் கொண்டிருக்கிறானே தவிர, ஒரு சின்னப் பையனுக்கு அடிபட்டுவிட்டதே என்ற வருத்தம் அவனுக்குக் கொஞ்சம் கூட இல்லை…

ஆஸ்பத்திரி வந்துவிட்டது… ராஜூ இறங்கி உள்ளே போய் ஸ்டெரச்சருடன், இன்னொரு ஆளையும் கூட்டிக்கொண்டு வந்தான், அம்பியின் அம்மா வீறிட்டு அழுதாள். .

வேலு அவளருகில் போய் நின்றான். “பெரியம்மா, உங்களுக்குத் தைரியம் இல்லேன்னா, வண்டியிலேயே இருங்க… நான் உள்ளே போய் டாக்டரைப் பாத்துட்டு வந்து சொல்றேன்…”

அவள் அவன் சொன்னதைக் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. கீழே இறங்கி ஸ்டெரச்சரைத் தொடர்ந்து மிக வேகமாக ஆஸ்பத்திரிக்குள் சென்றாள்.

உள்ளே நர்ஸ் ராஜூவிடம் கூறிக் கொண்டிருந்தாள்; “இது போலீஸ் விவகாரம். நாங்க எப்படி ‘அட்மிட்’ பண்ணறது?”

ராஜூ வேலுவைத் திரும்பிப் பார்த்தான். “நான் தான் அப்பவே சொன்னேண்ணே, போலீஸ் வரக் கொள்ள நாம் வந்திருக்கக்கூடாது…”

வேலு நர்ஸிடம் மிக நிதானமாகத் தான் பேசினான். “முதலில் பையனை ஆபரேஷன் தியேட்டருக்கு எடுத்துட்டு போங்கம்மா, அதான் முக்கியம்… நான் போலீசுக்கு இதோ ஃபோன் பண்றேன்.”

நர்ஸ் புன்னகை செய்தாள். “நோ…ரூல்படிப் பார்த்தா…” அவள் சொல்லிக் கொண்டிருந்ததை முழுவதும் வேலு கேட்கவில்லை. டாக்டர் அறையை நோக்கி மிக வேகமாகச் சென்றான்.

நர்ஸ் கூப்பிட்டாள். “டிரைவர்.டிரைவர்.”

அந்த டாக்டர் இளைஞன். பெயர் ரவி. முப்பது வயதுக்குள் தானிருக்கும். குறுந்தாடி வைத்திருந்தான். வேலு சொன்னதை அவன் அமைதியாகக் கேட்டான். சொல்லப் போனால், கேட்பது போலிருந்தான். அவன் கை வேறொரு நோயாளிக்கு மருந்து எழுதிக் கொண்டிருந்தது.

“நர்ஸைக் கூப்பிடுங்க…” என்றான் ரவி. அதற்குள் அவளே வந்துவிட்டாள்.

“பையனை ஆபரேஷன் தியேட்டருக்குக் கொண்டு போங்க.”

“டாக்டர். இது போலீஸ் கேஸ்…”

“ஐ நோ… டிரைவர், நீங்க போய் போலீசுக்குப் ஃபோன் பண்ணுங்க…”

“போலீஸ் பையனோட கண்டிஷனைப் பார்த்தப்புறம் ஆபரேஷன் பண்ணறது நல்லது டாக்டர்.”

“மிஸ் தாமஸ், கைன்ட்லி டு வாட் ஐ ஸே…”

டாக்டர் எழுந்தான்…

ஆபரேஷன் தியேட்டருக்குள் அம்பி இருந்தபோது, போலீஸ் வந்தது. ராஜூ ஃபோன் செய்து, முதலாளியையும் வரவழைத்துவிட்டான். இன்ஸ்பெக்டர் முதலாளி வந்ததும் கேட்டார்; “நம்ம வண்டிதானுங்களா?”

“ஆமாம். என்ன வேலு இப்படிச் செய்திட்டே?”

வேலு பதில் சொல்லவில்லை. அவனுக்கு முதலாளியைக் கண்டால் பிடிக்காது. முப்பத்தைந்து வயதுக்குள், கட்சி செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு, திருட்டுத்தனமாக ஏழெட்டு டூரிஸ்ட் பஸ் விடுகிறான்… கேள்வி முறையில்லை… தன் தலையெழுத்து, வேறு வேலை கிடைக்கவில்லை. இந்தத் திருட்டுக்குத் தானும் உடந்தை… சைக்கிளுக்குக் காற்று அடித்துக் கொண்டிருந்த பயல், இவனுக்கு வந்த அதிர்ஷ்டம் இன்று தன்னைக் கேள்வி கேட்கும் நிலைக்கு வந்துவிட்டான்!.

இன்ஸ்பெக்டரும், முதலாளியும் ஆஸ்பத்திரியின் பின்பக்கம் சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். ராஜூ வேலுவிடம் கிசுகிசுத்தான்; “முதலாளி சமாளிச்சிடுவாரு, பயப்படாதீங்க…”

“சமாளிக்கிறதுக்கு என்ன இருக்குது?”

“யார் யாருக்கு எங்கெங்கே கை ஊறுதுண்ணு முதலாளிக்குத் தெரியும்…” இதைச் சொல்லிவிட்டு ராஜூ புன்னகை செய்தான்.

இந்தப் பயலுக்கா தன் பெண்னைக் கொடுக்க வேண்டுமென்று ஒரு கணம் யோசித்தான் வேலு.

தம்பியின் அம்மா ஓரமாக ஒரு பெஞ்சியில் உட்கார்ந்து கொண்டு கண்கள் மூடிய நிலையில் இருந்தாள். வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

இன்ஸ்பெக்டர் வேலுவிடம் சொன்னார். “என்ன நடந்ததுன்னு முதலாளி எழுதித் தருவாரு… கையெழுத்துப் போட்டு என்கிட்ட கொடு.”

“சம்பவம் நடந்த இடத்திலே முதலாளி இல்லே… நான்தான் இருந்தேன்… ஆக்ஸிடென்டுக்கும் நான்தான் காரணம்.”

முதலாளி வேலுவை முறைத்துப் பார்த்தான்… அவனுடைய கோபம் முகத்தில் தெரிந்தது.

“வேலு. இப்படி வா என்னோட…”

இருவரும் ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தார்கள். வைச்சான்னா, நீ ஜெயிலுக்குப் போகும்படியா ஆயிடும்… புரிஞ்சுதா… நான் சொல்றபடி கேளு…”

“அதைப்பத்தி நான் கவலைப்படலிங்க… நான் செஞ்ச தப்புக்கு…”

முதலாளி சீறினான். “மூளை இருக்குதா, இல்லியா உனக்கு? ஒம்பது குழந்தைகளை வைச்சிகிட்டு அரிச்சந்திரனா இருக்க முடியுமா உன்னாலே? சொல்வதைக் கேளு. நான் இப்படி எழுதித்தரேன், கையெழுத்துப் போடு…”

“என்ன எழுதித் தருவீங்க?”

“கால உசர வைச்சிக்கிட்டிருந்த பையன் திடீர்னு தொங்கப் போட்டுட்டான்… மற்றபடி கோர்ட்லே கேஸ் வந்திருச்சின்னா, வக்கீல் பார்த்துப்பாரு. பையனுக்கும், அம்மாவுக்கும் சண்டை, அது இதுன்னு… எத்தனையோ வழி இருக்குது… வக்கீலுக்கு சொல்லியா கொடுக்கணும்? கோர்ட் கேஸ் ஆகாமப் பார்த்துக்கறேன். பையனோட அம்மாவுக்குக் கையிலே கொஞ்சம் வைச்சு அழுத்தினா சரிம்பாங்கன்னுதான் நினைக்கிறேன்… ஏழைக் குடும்பந்தான் போலிருக்குது…”

“நான் பொய் சொல்லமாட்டேன்.”

“அட சீ, சொல்றத்தைக் கேப்பியா? உன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக்கிறத்திலே என்ன லாபம்? இன்னொண்ணு நினைவு வச்சுக்க, போலீஸ் நான் சொல்லறதைத் தான் கேக்கும்…”

“உங்களுக்கு இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி கொடுத்துடப் போறாங்க… நான் தான் ஜெயிலுக்குப் போகப்போறேன். என்னைக் காப்பாத்தணும்னு உங்களுக்கு என்ன இவ்வளவு தீவிரம்?”

“கோர்ட் கேஸ் ஆகக் கூடாதுண்ணுதான் பாக்கறேன். உன்னைப் பத்தி எனக்குக் கவலையில்லே…”

“ஓ! கோர்ட்லே ஆயிரத்தெட்டுக் கேள்வி கேட்பாங்க… டூரிஸ்ட் விவகாரம் எல்லாம் அடிபடும்… அதுக்காகச் சொல்றீங்களா?” –

“ஏன் நடுரோட்லே நின்னுகிட்டு கத்தறே? மெதுவாய் பேசேன். எனக்கென்ன காது செவிடா?”

“அந்தப் பையன் செத்துப் போயிட்டா என்ன செய்வீங்க?”

“அதைப்பத்தி நீ கவலைப்படாதே… நான் சொல்றபடி கையெழுத்துப் போட்டுத் தா… சீக்கிரம், ஹீம்… அந்த அம்மா கிட்டே பக்குவமாப் பேசி இன்ஸ்பெக்டர் ஒரு “ஸ்டேட்மெண்ட் வாங்கிப்பாரு.” –

“என் மனசக்குச் சரியா படலே, நீங்க செய்யறது.”

“இது என்னடா கஷ்ட காலம்? அரிச்சந்திரனையெல்லாம் டிரைவரா வெச்சுக்கிட்டு, ரோதனையா போச்சு… நீ, நான் சொல்றபடி செய்யப் போறயா இல்லையா? உன் குடும்பத்தைத் தூக்கிக் கிணத்திலே போடணும்னா, உன் விருப்பப்படி செய்… என்னதான் ஆனாலும், கடைசியிலே நான்தான் ஜெயிக்கப் போறேன், அதை நினைவு வெச்சுக்க…”

வேலுவுக்கு என்ன செய்வதென்று விளங்கவில்லை. முதலாளி மந்திரிகளுக்கு நெருங்கியவன் என்பது அவனுக்குத் தெரியும். அவன் சொல்லுவதுபோல் நிச்சயமாக அவன் ஜெயிக்கத்தான் போகிறான். உண்மைக்காகப் போராடி ஒருவன் ஜெயிலுக்குப் போவதினால், யாருக்கு என்ன பிரயோஜனம்? அவன் குடும்பம் அவனை காந்தி என்றோ, ஏசு என்றோ ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. வாழ்நாள் முழுவதும் தூற்றிக் கொண்டு இருக்கப் போகிறார்கள். அந்த அம்மாவுக்குத்தான் என்ன பயன்? அந்தப் பையனோட கால் திரும்பியா வரப்போகிறது. அந்த அம்மாவுக்கு எவ்வளவு தரப் போகிறான். இந்தப் படுபாவி? தனக்கும் ஏதாவது கொடுத்தானானால், அதையும் சேர்த்து அந்த அம்மாவிடம் கொடுக்கலாம். இந்த அளவுக்குத் திருப்திப்பட்டுக் கொள்ளுவதைத் தவிர அவனால் வேறு என்ன செய்யமுடியும்?

“அவங்களுக்கு எவ்வளவு தரப் போறீங்க?’ என்று கேட்டான் வேலு.

“எவங்களுக்கு?”

“அந்த அம்மாவுக்கு…”

“அதைப்பத்தி உனக்கென்ன கவலை?”

“நானும் பிள்ளைகுட்டிக்காரன்…”

“வாய்யா வா… பெரிய நியாயம், அநியாயமில்ல பார்த்துக்கிட்டிருந்தீங்க இத்தனை நேரம்? இதுக்குத்தானா? சரி ஏதானும் தரேன், வாங்கிக்க…”

“ஏதானும்னா எவ்வளவு?”

“குழந்தை மேலே வண்டியை ஏத்திட்டு பேரம் வேற பேசறியா? ஒரு பச்சை நோட்டுத் தரேன், ஒளிஞ்சி போ…”

“பத்தாது.”

“அடச் சீ!… உன் விருப்பப்படி என்ன ‘ஸ்டேட்மெண்ட்” வேணுமானாலும் கொடுத்துக்க… இதுக்கு மேலே ஒரு பைசா கிடையாது.”

வேலு பதில் கூறாமல் திரும்பினான்.

“அவ்வளவு திமிரா உனக்கு?… உனக்கு அழுவறது தெரிஞ்சா, ராஜூ சும்மா விடுவானா? அவனுக்கு வேற அழுதாவணும். சரி, இரண்டு வாங்கிக்க… போ… அதுக்கு மேலே பிச்சுப் பிடுங்காதே…”

வேலு யோசித்தான். இதற்குமேல் இவன் தரமாட்டான். தான் வாங்கிக் கொள்வது தப்புதான்… என்ன செய்ய? அரிச்சந்திரனுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும், தான் கடைசி மட்டும் உறுதியாக நின்றால், கத்தி மாலையாக விழுமென்று, ஆனால் இந்தக் காலத்தில் கத்தி கத்தியாகத்தானிருக்கும்; மாலை போட்டுக் கொள்கிறவர்கள் நட்சத்திரேயர்கள்.

“என்ன, சரியா? சிக்கிரம் சொல்லு.” என்றான் முதலாளி.

“சரிங்க.”

இருவரும் உள்ளே சென்றபோது, இன்ஸ்பெக்டர் யாரோ இருவரிடம் பேசிக் கொண்டிருந்தார். அந்தப் பையனுக்கு உறவுக்காரர்களாக இருக்க வேண்டுமென்று நினைத்தான் வேலு.

இன்ஸ்பெக்டர், “இவங்க அந்தப் பையனோட அக்காவாம், ஸ்கூல் டீச்சரா இருக்காங்களாம், இவரு அவங்க ஹஸ்பெண்ட், தாலுக்கா ஆபீஸ்ல இருக்காரு.”

அவர்கள் கூட ராஜூ குறிப்பிட்ட, வக்கீல் குமாஸ்தா பாலு அய்யரும் வந்திருந்தார். அவர் ஓர் ஓரமாக நின்று கொண்டிருந்தார்.

“ஏதோ தவறு நடந்துட்டுதுங்க… பையன் திடீர்னு காலைத் தொங்கப் போடுவான்னு டிரைவர் எதிர்பார்க்கலே…”

ஓரமாக நின்று கொண்டிருந்த பாலு அய்யர் அப்பொழுது அங்கு வந்தார். முதலாளி சொன்னது அவர் காதில் விழுந்திருக்க வேண்டும்.

“பையன் திடீர் என்று காலைத் தொங்கப் போடலை, தொங்கப் போட்டிருந்த கால் மேல்தான் பஸ் மோதிட்டு… அவ்வளவு தூரம் ரிவர்ஸ் செய்ய வேண்டிய அவசியமே இல்லை” என்றார் அவர்.

“நீங்க யாரு?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.

“வக்கீல் குமாஸ்தா.”

இன்ஸ்பெக்டர் முதலாளியைப் பார்த்து புன்னகை செய்தார்.

அந்தப் பெண்ணின் கணவன் பேச ஆரம்பித்தான். “இதோ பாருங்க… என்னோட மாமியாருக்கு இந்தப் பையன் ஒரே பிள்ளை. ஒரு பொண்ணு, ஒரே பிள்ளை அவ்வளவுதான்… அவளை நம்பித்தான் அவ இருக்கா, படிப்பிலே மகா கெட்டிக்காரன், பள்ளிக்கூடத்திலே விஜாரிச்சுப் பாருங்க…”

“இன்னி சாயங்காலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வாங்களேன்… எல்லாம் பேசிக்கலாம்…” என்றார் இன்ஸ்பெக்டர்.

ரவி அப்பொழுது ஆபரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்தான்.

“எப்படி இருக்கு டாக்டர்?” என்று கேட்டான்.

ரவி, பையனோட அம்மா யாரு?” என்று வினவியவாறு சுற்றுமுற்றும் பார்த்தான்.

அம்பியின் அம்மா எழுந்து வந்தாள்.

“நன்னாத்தான் அடிபட்டிருக்கு… நான் என்னாலே முடிஞ்சதைச் செய்யறேன்… இரண்டு காலும் ரொம்ப மோசமாத்தான் இருக்கு…” என்றான் ரவி.

“உயிருக்கு ஆபத்தில்லையே?” என்று கேட்டான் முதலாளி.

“அதில்லே… பட்… போத் லெக்ஸ் மே கோ அவுட் ஆஃப் ஆக்ஷன். திஸ் ஈஸ் டு பாட்! ஆல்ரைட் இன்ஸ்பெக்டர், நான் என் ரிபோர்ட்டைத் தரட்டுமா?”

இன்ஸ்பெக்டர் முதலாளியைப் பார்த்தார். முதலாளி டாக்டரிடம் சொன்னான்; “நான்தான் வண்டியோட ப்ரொப்ரைட்டர்… வந்து…வந்து…கொஞ்சம் தனியா பேசலாமா உங்களோட?”

“என்ன பேசணும்?.ஐ ஹாவ் நதிங் டு டு வித் யு.

“சரி, உங்க ரிபோர்ட்டைக் கொடுங்க… உள்ளே போகலாமா?” என்றார் இன்ஸ்பெக்டர்.

அவர்கள் இருவரும் உள்ளே சென்ற பிறகு, முதலாளி ராஜூவைத் தனியாக அழைத்துக் கொண்டு போய்க் கூறினார். “பாலு அய்யர்கிட்டே பேசிப் பாரு…”

”பேச வேண்டாம்… ஒத்துக்கிற ஆள்தான்.” என்று முணுமுணுத்தான் ராஜூ”

“எவ்வளவு?”

“பெரிய ஒண்ணுக்குக் குறைஞ்சு வாங்கமாட்டார்னு தோணுது… பேசிப் பார்ப்போம்.”

“உனக்குண்டா இதிலே கமிஷன்”

“என்னங்க முதலாளி இப்படிப் பேகறீங்க? பாலு அய்யர் அங்கே இல்லேன்னு பொய்ச் சொல்லச் சொல்றீங்களா? அது நியாயமில்லே…”

“வேலுவுக்கு ரெண்டு, உனக்கு ரெண்டு, பாலு அய்யருக்கு அஞ்சு… வக்கீல் குமாஸ்தா பார்ப்பான், இதுக்குக் குறைஞ்சு வாங்கமாட்டான், சீக்கிரம் கேட்டுச் சொல்லு.”

“எட்டு மட்டும் போலாங்களா? அவரையே கொண்டு அந்தப் பையனோட அக்காவையும் அவங்க புருஷனையும் சமாளிக்கச் சொல்றேன்…”

“சரி. எதை வேணுமானாலும் பண்ணு. போய்த் தொலை!” முதலாளிக்கு எரிச்சல் அதிகமாகிக் கொண்டு வருகிறது என்பதை உணர்ந்த ராஜூ, அந்த இடத்தை விட்டு அகன்றான்.

அம்பியின் அம்மா திடீரென்று சிரிக்க ஆரம்பித்தாள். எல்லோரும் திடுக்கிட்டு அவள் பக்கம் திரும்பினர்.

“அம்பி… என்னடா விளையாட்டு இது… அம்பி…அம்பி…” என்று பலமாக, சப்தம் போட்டுக்கொண்டே குறுக்கும், நெடுக்குமாக ஓடத் தொடங்கிவிட்டாள்.

நாலைந்து பேராக அவளைக் கட்டிப் பிடித்து உட்கார வைத்தனர். அம்பியின் அக்கா அவளருகே சென்ற, “அம்மா, அம்மா, என்னம்மா இது” என்று அழாக் குறையாகக் கேட்டாள். வேலு, அவள் கைகளை இறுக்கப் பற்றிக் கெண்டே சொன்னான். “பெரியம்மா! என்னை நம்புங்க, உங்க பையன் பொழைச்சிடுவான்.”

“ஆமாம் பொழைச்சிடுவான், நிச்சயமா பொழைச்சிடுவான்” வறுை தலையை ஆட்டிக் கொண்டே அவள் சொல்லிவிட்டு, உரக்கச் சிரிக்கத் தொடங்கினாள்.

ரவி வெளியே வந்தான். ‘வாட் ஈஸ் திஸ்?…”

நர்ஸ் அவரிடம் விரைவாக வந்து சொன்னாள்: ‘ஷி ஹாஸ் பிகம் இன்ஸேன்.”

ரவி கேட்டான்: “இவங்களுக்க வேண்டியவங்க யாரானும் இருக்காங்களா?…ஓ ! நீங்கதானா? கைண்ட்லி டேக் ஹர் ஹோம்… மிஸ் தாமஸ். கிவ் ஹர் ஸம் ஸேடேட்டிவ் இன்ஜெக்ஷன். நாங்க இதுக்கு ட்ரீட் பண்ண முடியாது. நோஃபெஸிலிட்டீஸ்…”

இன்ஸ்பெக்டர் முதலாளியிடம் சொன்னார்: “டாக்டர் ரிப்போர்ட்டைக் கொடுத்திட்டாரு… உங்க டிரைவர், கண்டெக்டர் ரெண்டு பேரோட ஸ்டேட்மெண்ட் வேணும்… சம்பவத்தைப் பார்த்தவரு அந்த அய்யரு… அவரோட ஸ்டேட்மெண்ட்டும் வேணும். எல்லோரும் ஸ்டேஷனுக்குப் போவோம் வாங்க…”

அம்பியின் அத்திம்பேரோடு பேசிக் கொண்டிருந்த பாலு அய்யர் சிரித்துக் கொண்டே சொன்னார்: “சரி நானும் வரேன். இவரையும் வேணும்னா கூட்டிண்டு வரேன்.”

வேலு அவரை உற்று நோக்கினான். பாலு அய்யர் அவரையும் சரிக்கட்டி விட்டாரென்று அவனுக்குப் புரிந்தது. அவர் முதலாளியருகே வந்து நின்றார்.

“அந்த அம்மாவை யார் கூட்டிக்கிட்டுப் போவாங்க?” என்று கேட்டான் முதலாளி.

நர்ஸ் கொடுத்த இன்ஜக்ஷனின் காரணமாக அம்பியின் அம்மா மயக்கமுற்றிருந்தாள்.

“ஜானகி, நீ அம்மாவை.” என்று ஆரம்பித்த அம்பியின் அத்திம்பேர் முதலாளியைக் கேட்டார்: “அவ எப்படி அழைச்சிண்டு போக முடியும்? கார் இருக்குதா உங்ககிட்டே?”

இன்ஸ்பெக்டர் சொன்னார்: “நாம் போலீஸ் ஜீப்லே போவோம். இவரோட கார்லே உங்க வொய்ஃபும், அவங்க அம்மாவும் போகட்டும், டிரைவர் அவங்களைக் கொண்டு போய்விட்டுட்டு, ஸ்டேஷனுக்கு வரட்டும்…”

“வேலு, ஐயா சொல்றபடியே செய்” என்றான் முதலாளி. எல்லாரும் வெளியே வந்தார்கள். இன்ஸ்பெக்டர் முதலாளியிடம் சொன்னார்: “டாக்டர் ரிப்போர்ட் தான் சாதகமா இல்லே.”

“நான் யாரு, என்ன செய்ய முடியும்னு சொன்னீர்களா அந்த மடையன்கிட்டே?”

“சொன்னேன், அவன் கேக்க மாட்டேங்கிறான். கத்துக் குட்டி ராஸ்கல்…”

ரவி அப்பொழுது வெளியே வந்தான். “எல்லோரும் இப்படிப் போயிட்டிங்கன்னா யாரு இங்கே இருப்பாங்க, பையனைப் பாத்துக்க!”

“கொஞ்ச நேரம் கழிச்சு என் வொய்ஃப் இங்கே வருவா.” என்றார் அம்பியின் அத்திம்பேர்.

”என்னய்யா டாக்டரே! ரிபோர்ட் இப்படிக் கொடுத்திருக்கீங்க?” என்று கேட்டான் முதலாளி.

“உங்க இஷ்டப்படி ரிபோர்ட் கொடுக்கணும்னா நான் எதுக்காக டாக்டராக இருக்கணும்?”

“நான் டி.எம்.ஓ.வைப் பார்த்துப் பேசிக்கிறேன். உங்க அதிஷ்டம், தண்ணி இல்லாத காட்டுக்குப் போகணும்னா போங்க…”

“நீங்க யாருன்னு நினைச்சிண்டிருக்கீங்க, இப்படி பேச?” என்று சீறினான் ரவி. .

“நான் நினைச்சிக்கிட்டிருக்கேன், சுரக்காய்க்கு உப்பு இல்லேன்னு. போய்யா தெரியும்… நானும் யாருன்னு உனக்குத் தெரியாமலேயா இருக்கப் போவுது…?”

“கேவலம். இந்த வேலைக்காக, நீ விட்டெறியப் போற காசுக்கு இந்தக் கும்பல் மாதிரி, காக்கா கணக்கா காத்திண்டிருக்கப் போறேன்னு நீ நினைச்சியா…? யு கான் ஜாலி வெல் கோ டு தி சீஃப்மினிஸ்டர் ஃபார் ஆர் ஐ கோ… நான் என் ரிப்போர்ட்டை மாத்தப் போறதில்லை… எவ்வளவு தைரியம் இருந்தா ஆஸ்பத்திரி வாசல்லியே நீ இப்படிப் பேசுவே, உனக்காக இந்த இன்ஸ்பெக்டர் பேரம் பேச வரான்… கோர்ட்லே கேஸ் வந்து ஜெயிச்சா, பத்தாயிரக் கணக்கிலே அழனுமேன்னு, சாமார்த்தியமா சமாளிக்கப் பாக்கறிங்களா?”

இன்ஸ்பெக்டர் குறுக்கிட்டார்: “டாக்டர்… கொஞ்சம் மரியாதையா பேகங்க…”

“என்னடா மரியாதை வேண்டிக் கிடக்குது உங்களுக்கு? ஒரு உசிரு உள்ளே மன்றாடிக்கிட்டு இருக்குது… எப்பொடாப்பா பஸ்ஸை ஏத்தப் போறேன்னு காத்துக் கிட்டிருந்தாப்பலே, எல்லாரும் பொணத்தைக் கொத்தித் தின்ன வந்துட்டீங்களே, படுபாவிகாளா? இதோ பாருய்யா முதலாளி… உன் பிச்சைக் காசு எனக்கு வேண்டாம். நான் உண்மையைச் சொல்றேன்… பஸ்ஸை ஏத்தினது நான்தான்… கோர்ட்லே கேஸ் வரட்டும்… நாட்டை நாற அடிச்சிட்டு இருக்கிற கும்பல் யார் யாருன்னு எல்லாருக்கும் தெரிய வேணாம்? டாக்டரய்யா, வாங்க, பையனைக் கவனிச்சுக்க நான் இருக்கேன்…” என்று கூறிக்கொண்டே உள்ளே சென்றான் வேலு.

இந்திரா பார்த்தசாரதி

தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் பிறந்த ஆர். பார்த்தசாரதி எழுத்துக்காக ‘இந்திரா’ வை இணைத்துக்கொண்டவர்.

மாறிவரும் சமுதாய அமைப்பில் பழைய மரபின் பிரதிநிதிகள் வீழ்ந்துபடுவதும், குடும்ப உறவின் வலிய பந்தங்கள் விலகி விடுவதுமான உறவுமுறைச் சிக்கல்கள் – சிதைவுகள், தனக்குத்தானேயும், தனக்கும் சமூகத்திற்கும் முரண்பட்டு அந்நியப்பட்டுப் போகின்ற தனிமனிதர்களின் பிரச்சனைகள், பாலியல் விவகாரங்கள் முன்னிருந்த கட்டுதிட்டுக்களிலிருந்து சுதந்திரமாகிய நிலைமைகள்… வாழவேண்டி இருப்பதால் மனிதன் போடவேண்டியதைப் போட்டுக் காட்டுகிற போலி வேஷங்கள் எத்தனையோ?

புதிய மாறுதல்களுக்கு இடங்கொடுத்த பழம்மரபின் கட்டுக்களை உடைத்தெறிககின்ற கிளர்ச்சித் தன்மைகள், அரசியல் பொய், பித்தலாட்டங்களுக்கு உரிய இடமா மாறிவிட்ட வருந்தத்தக்க தன்மை நகர நாகரிகத்தின் மதிப்புக்கள் நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களின் நடைமுறை வாழ்க்கையிலும் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் போன்ற நகர்ப்புறச் சமுதாய மாற்றங்கள் அடிப்படையாகக் கொண்டுள்ள சில பிரச்சனைகளை இந்திரா பார்த்தசாரதி கையாண்டுள்ள முறைமையைப் பற்றி மிகத்தெளிவான ஒரு ஆய்வு நூல் வெளிவந்துள்ளது.

இதுபோன்ற ஆய்வு நூல்கள் எல்லா எழுத்தாளர்களுக்கும் வரவேண்டும் என்ற ஆசை இந்த தமிழ்ச் சூழலில் நிறைவேறுமா என்பது கேள்விக்குறியே…

சாகித்திய அகாதமி விருது பெற்ற ‘குருதிப்புனல்’ கீழத்தஞ்சை மாவட்டத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விவசாயிகளின் பிரச்சனைகளையும் சமூகச் சூழலையும் மையம் கொண்டு எழுதப்பட்டு இருப்பதாகக் காட்டியிருப்பது போலியானது முழுமையானது அல்ல. அவர் வெளிப்படுத்தியிருக்கும் களமும் சரி மக்களும் சரி அவர் தூரத்தில் நின்று பார்த்த சாயல்கள் மட்டுமே நிழலாக…

– தஞ்சைச் சிறுகதைகள், தொகுப்புரிமை: சோலை சுந்தரபெருமாள், முதற் பதிப்பு: டிசம்பர் 1999, காவ்யா வெளியீடு, பெங்களூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *