கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 13, 2023
பார்வையிட்டோர்: 3,065 
 
 

இரவு சரியாக எட்டு மணி, கொழும்பு, கோட்டைப் புகையிரத நிலையத்தின் முதலாவது `பிளாட் பாரத்’தை அநாயாசமாக உதறி எறிந்து விட்டு, `ஜம்’மென்று புகையைக் கக்கிக்கொண்டு புறப்பட்டது மட்டக்களப்பு மெயில் வண்டி.

வண்டி என்றும் போல் அன்றும் பொங்கி வழிந்தது. இந்த அம்பாறை நீர்ப்பாசன `இராட்சத அணைத் திட்டம்’ மட்டக்களப்புக்கு வந்தாலும் வந்தது மட்டக்களப்பு மெயிலின் நிலையே ஒரு பூரண கர்ப்பிணியின் நிலைதான்.

புறப்பட்ட ஐந்து நிமிஷங்களில், கொழும்பு நகரின் அடுத்த பெரிய ஸ்டேஷனான மருதானையை `நொறுக்கி’க் கொண்டு கடந்து சென்றது வண்டி.

கோட்டையிலிருந்து மருதானே வரையும், கழுத்தை வெளியே நீட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்து வந்த நான் இப்பொழுது தலையை உள்ளுக்கு இழுத்துக் கொண்டு என் இருப்பிடத்துக்குத் திரும்பினேன்.

இந்த வண்டியில், இரண்டாம் வகுப்பு `சிலீப்பிங் காரி’ல் நான் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன்.

எனது `படுக்கை’ எண் பதினான்கு. எனது `படுக்கை’க்குச் சரிநேராக மேலே இருந்தது பதின்மூன்றாம் இலக்கப் `படுக்கை’. அது வெறுமையாகவே இருந்தது. இரண்டே இரண்டு `படுக்கை’களே உள்ள அந்தத் தனிப் பெட்டியில், ஏகாங்கியாக நான் மட்டும் பிரயாணம் செய்வது என்னவோ போலத்தான் இருந்தது.

‘தடதட’வென்று யாரோ கதவை இடிக்கும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுக் கண் திறந்தேன்.
தூக்கக் கலக்கத்தில் ஒன்றுமே புரியவில்லே, மின் விசிறிதான் சுழன்று கொண்டிருந்தது.

‘லைட்’டைப் போட்டுவிட்டுக் கதவைத் திறந்தேன். எதிரே `பெளத்த பிக்ஷ’ நின்றிருந்தார். அவருடைய ஒரு கையில் அடக்கமான ஒரு தோல்பையும் மறுகையில் விசிறியோன்றும் காணப்பட்டன. பாதத்தை உயர்தர `சிலிப்பரும்’ தேகத்தைத் தூய மஞ்சன் அங்கியும் அணி செய்தன. முகத்தில் காந்தியும் சாந்தியும் போட்டியிட்டன. கண்களில் ஒரு கனிவு, மூக்கில் ஒரு கம்பீரம். இதழ்க் கடையில் ஒரு குறுகுதுப்பு நெளிந்தது. மஞ்சள் அங்கியின் தழுவலுக்குத் தப்பியிருந்த திருவதனத்தில், தேகத்தின் சந்தனவர்ணம் பளிச்சிட்டது.

‘ஆய்போவன்’ என்று சிங்களத்தில் வணக்கம் கூறிக் கொண்டு நிதானமாக உள்ளே நுழைந்தார் `பிஷு’. பதிலுக்கு நானும் மரியாதையுடன் கைகூப்பி அவருக்கு அஞ்சலி செலுத்தினேன்.

“மன்னிக்க வேண்டும், உங்கள் தூக்கத்தைக் கெடுத்து விட்டேன், இல்லயா?” என்று ஆரம்பித்தார் பிக்ஷ.

“அப்படியொன்றுமில்லே” என்று சம்பிரதாயமாய் சொல்லி வைத்தேன் நான்.

தொடர்ந்து நானே கூறினேன்,

“தங்களைக் கொழும்பிலேயே நான் எதிர்பார்த்தேன்: படுக்கை `புக்’ பண்ணியிருக்கிறது. ஆனால் ஆளைக் காணோமே என்று!”

“ஆமாம்! இங்கு றாகமையில் `படுக்கை’ `புக்’ பண்ணுவது மிகவும் சிரமமானதால், கொழும்புக்கு `டெலிபோன்’ பண்ணி அங்கிருந்தே படுக்கைக்கு ஒழுங்கு செய்து விட்டேன். இப்படிச் செய்திராவிட்டால் இன்று இந்த ரயிலில் பொலநறுவைக்குப் போன மாதிரித்தான்! அப்பப்பா! என்ன கூட்டம்; என்ன நெரிசல்” என்று அலுத்துக் கொண்டார் பிக்ஷ.

“நல்ல காரியம் செய்தீர்கள்” என்று அவருக்கு ஒரு பாராட்டுக் கொடுத்துவிட்டு, மேற்கொண்டு பேசுவதற்கு விஷயம் ஒன்றும் இல்லாதலால் மெளனமாயிருந்தேன் நான்.

“தம்பி! தூக்கம் வருகிறதா?”

“இல்லை; தாங்கள் பேசிக்கொண்டே வரலாம்.”

“நல்லது. அப்படியானுல் உங்களிடம் ஒன்று கேட்டுத் தெரிந்து கொள்ளவேணுமே?”

“கேளுங்கள்.”

“சிங்களவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

அமைதியாகத்தான் கேட்டார் கேள்வியை,

ஆனால் அவர் காட்டிய அமைதியை என்னால் கடைப்பிடிக்க முடியவில்லை.

கண் இமைக்கும் நேரத்தில், கடந்தகாலக் கறை படிந்த புண்ணான நிகழ்ச்சிகள் என் மனத்திரையில் சினிமாக் காட்டின. மொழி வெறித் திரையால் விழிகள் மறைக்கப்பட்ட சிங்களவரின் குரூர நிகழ்ச்சிகள் என் நெஞ்சில் ஊழிக் கூத்தாடின. அன்பையும் அஹிம்சையையும் போதித்த புத்தபிரானின் `புத்திரர்கள்’ பூதகணங்களாக மாறி மனிதக் குருதியில் நீச்சலடித்த பேய்க்காட்சி பூதாகாரமாக என் முன் தோன்றியது. நாடு முழுவதும் பரந்து கிடந்த தமிழர் கூட்டம், நாதியற்று நடுத் தெருவில் நலிவுற்று நின்ற கோரக் காட்சி என் இளம் ரத்தத்தில் சூடேற்றியது.

“தம்பி! நான் கேட்ட கேள்வி அநாதையாக நிற்கிறதே!” என்று என் சிந்தனையை முறித்தார் பிக்ஷ,

“கேள்வி மட்டும்தானா அநாதையாக நிற்கிறது? இந்த நாட்டில் வாழும் தமிழர் நிலையும் இன்று அநாதரவாகத்தானே இருக்கிறது” இந்தப் பதிலிலேயே அவருடைய கேள்விக்குரிய பதிலையும் அவர் கண்டிருக்க வேண்டும். தொடர்ந்த அவருடைய பேச்சிலிருந்து இந்த உண்மை நன்கு விளங்கியது.

“தம்பி இப்படி ஏகமாக நீங்கள் சிங்களவர்கள் மீது பழி சுமத்துவது ஒரு தலைப்பட்சமானது. உதாரணமாக கலவரகால நிகழ்ச்சிகளை எடுத்துக் கொள்ளுங்கள்….”

நான் சற்று `உஷார்’ அடைந்தேன். நானே தொடங்சிச் சிங்களவர்களின் அட்டூழியத்தை பிக்ஷவுக்கு உணர்த்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த கலவரகால நிகழ்ச்சிகளை, இவரும் உதாரணத்துக்கு எடுக்கிறாரே, என்பதை எண்ணும்போது சற்று வியப்பாக இருந்தது. என்றாலும் அவரிடம் கூறினேன்.

“இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம் சிங்களவர்களுக்கு என்றும் நீங்காத-நீக்கவொண்ணாத – கறை ; வடு!”

“அப்படிச் சொல்லிவிட்டுக் தமிழர்கள் ஒதுங்கிக் கொள்வதால், உண்மை மறைக்கப்பட்டு விடுமா?”

“தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?”

“உண்மையைச் சொல்லுகிறேன். சுசப்பாக இருக்கிறது என்பதற்காக உண்மையை ஏற்றுக் கொள்ளாமல் இருந்துவிட முடியுமா?”

“அப்படியென்றால்?..”

“சிங்களவர்கள் மிருகங்கள்தான் ஒத்துக்கொள்கிறேன்; ஆனால், தமிழர்களும்….”

நான் வாய்மூடி மெளனியாகும் அளவுக்குப் பிக்ஷ பேசிக்கொண்டு போனார். வண்டியும் தன்பாட்டில் ஒடிக் கொண்டிருந்தது.

துங்கும் நுரையுமாகக் கலுகங்கை பதினாயிரம் சுழி போட்டுப் பெருகி ஒடிக்கொண்டிருந்தது. நீர்ச்சுழிகளில் சிக்கிய காய்ந்த மூங்கிற் சருகுகள் படாத பாடுபட்டுப் பல்லாயிரம் கரணங்கள் அடித்து நீரோட்டத்தோடு அள்ளுண்டு கொண்டிருந்தன. கங்கையின் இருமருங்கிலும் வரிசைப் பிசகாக ஒழுங்கற்று நின்ற காட்டுமரங்களின் இலைகள், ஆற்றின் சிற்றத்தால் பெயர்த்தெறியப்பட்டு நீரோடு உருண்டு கொண்டிருந்தன. அதற்கு முந்திய தினம், சிவனொளிபாதமலைச் சாரலில் கொட்டிய கோர மழையின் காரணமாக,அம்மலையில் பிறக்கும் கலுகங்கை, பொங்கிப் பிரவாகமெடுத்துக் கம்பீரத்தோடு அவசரப் பிரயாணத்தை மேற்கொண்டிருந்தது.

`ஹோ’ என்ற பேரிரைச்சலோடு நதி சென்ற காட்சி, பார்ப்பதற்குப் பயங்கரமாகவும் இருந்தது; பசுமையாகவும் இருந்தது.

இந்த நதிப் பெண்ணுக்கு இன்று என்ன நேர்ந்தது? என்றுமில்லாத உக்கிரத்தோடு இன்று அவள் போர்க்கோலம் பூணக் காரணம் என்ன? தண்மைக்கும் சாந்திக்கும் பெயர் பெற்ற பெண்களோடு ஒப்பிடும் இந்தக் கங்கைக் கன்னிக்கு, இன்று மட்டும் அப்படி என்ன ஆவேசம் வந்தது? மலைப் பாறைகளேயும் மண்மேடுகளையும் கிழித்துத் துவம்ஸம் பண்ணி இப்படி ஒரே ஒட்டமாக ஒடுகிறாளே! ஊழிக்காலம் நெருங்கி விட்டதா? அல்லது. சற்று நேரத்தில் இந்நதிப் படுகையில் அசாதாரண நிகழ்ச்சியொன்றுக்குக் கட்டியம் கூறுகிறாளா? பின் ஏன் இத்துணை துள்ளல் ஏன் இத்தனே துடிப்பு?

ஆற்றைக் கடந்து அக்கரை செல்ல வேண்டும் அருணாசலம். அந்த அக்கரைச் `சீமை’யில்தான் அவனுடைய பாடசாலை, மட்டக்களப்பிலிருந்து நூற்றுக்கணக்கான மைல்களைத் தாண்டி ஆசிரியத் தொழில் புரிய வந்திருக்கிறான் அவன்,

இடம் புதிது; இனம் புதிது இயம்பும் மொழி புதிது. இதற்கு முன் மலைநாட்டுப் பக்கம் தலை காட்டக்கூட இல்ல அவன். தான் மட்டக்களப்பு ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில், `பயிற்சி ஆசிரிய’ராகப் பயின்ற போது, ஆசிரிய மாணவர்களெல்லாம் ஒரு தடவை இலங்கை முழுவதும் சுற்றுப் பிரயாணம் போனார்கன். அப்பொழுது கூட அவன் போனதில்லை. 1சிவனே’ என்று கல்லூரியிலேயே இன்னும் சில மாணவர்களோடு இருந்து விட்டான். அந்தக் `கிணற்றுத் தவளே’ மனப்பான்மையை இன்று அவன் தனக்குள்ளாகவே கடிந்து கொண்டான்.

“பேசாமல் `மானேஜ்மென்ட்’ பாடசாலை ஒன்றில் இடமெடுத்திருந்தால், ஊரோடேயே, வீட்டுக்குப் பக்கத்திலேயே ராஜா மாதிரிப் படிப்பித்துக் கொண்டிருக்கலாமே!” என்ற `கட்டுப் பெட்டி’ மனப்பாங்கான எண்ணமும் தலை நீட்டத்தான் செய்தது.

“பேசாமல் வந்த வழியே திரும்புவோமா?” என்று அவன் தீர்மானிப்பதற்குள், அக்கரைக்குச் செல்லவேண்டிய இன்னும் சில பிரயாணிகள் அங்கு வந்து சேர்ந்தனர். அத்தனேபேரும் சிங்களவர்கள்!

வந்தவர்கள், “சிரியோ சிரியோ” என்று `ஒறுவ’க்காரனுக்குக் (தோணிக்காரன்) குரல் கொடுத்தனர்.

“கொஞ்சம் இருங்கள். இதோ வருகிறேன்” என்று சிங்களத்தில் குரல் கொடுத்துக்கொண்டு, அக்கரையிலிருந்த தன் சின்னஞ் சிறு குடிசையிலிருந்து வெளிப்பட்டான் தோணிக்காரன்,

வெளிப்பட்டவன் ஐந்து நிமிஷத்தில் தன் தோணியைச் செலுத்திக்கொண்டு இக்கரைக்கு வந்து சேர்ந்து விட்டான்.

அடித்துப் புரட்டிக்கொண்டு ஆங்காரத்தோடு ஒடிக் கொண்டிருந்த நதியை ஊடுருவி அவன் வந்த அநாயாசத்தைக் கண்டபோது அருணாசலத்துக்குக் குலை நடுக்கம் எடுத்தது.

தோணியில் எல்லாரும் பக்குவமாய் ஏறிக்கொண்டதும், அதைச் செலுத்தத் தொடங்கினான் தோணிக்காரன். நதியின் மத்தியில் தோணி வந்ததோ இல்லையோ எங்கிருந்தோ ஒரு பூதாகாரமான சுழி தோன்றி, தோணியையும், தோணிக்குள் இருந்தோரையும் வலம் புரியாய்ச் சுழற்றி நீருக்குள் குப்புறக் கவிழ்த்து விட்டது! எல்லாம் மின்வெட்டும் நேரம்தான்.

அருணாசலத்தின் மூக்கின் வழியாக நீர் என்ற மின்னல் ஒன்று புகுந்து அவன் மூளையைத் தாக்கியது. மூச்சுத் திணறிய அருணாசலம், நீச்சல் தெரியாத காரணத்தால், நீரின் போக்கோடு அள்ளுண்டு சென்றான் .அவனுடைய அவஸ்தை, அவனுடைய தவிப்பு இவை எவற்றையுமே லட்சியம் செய்யாத அந்தப் பயங்கர ஆறு, தன் சுழிக்கரங்களால் அவனை உருட்டி அடித்துக் கொண்டு ஒடிக் கொண்டிருந்தது.

கண் விழித்த அருணாசலத்துக்கு இன்னுமொரு `மூச்சுத் திணறல்’ காத்திருந்தது. நீரில் மூழ்கியபோது ஏற்பட்ட மூச்சுத்திணறலைவிட, இந்த மூச்சுத்திணறல் அவனை மிகவும் திக்குமுக்காட வைத்துவிட்டது.

“சற்றுமுன் தான் கங்கையின் மடியில் கிடந்துபட்ட அவஸ்தையைப் பார்க்கச் சகிக்காமல், கங்காதேவியே நேரில் தோன்றி என்னை மீட்டுவிட்டு இதோ நிற்கிறாளா?” என்ற பிரமை தோன்றியது அருணாசலத்துக்கு.

உலகத்து அழகெல்லாம் ஒன்று திரண்ட ரூபலாவண்யத்தோடு, ஒரு மோகனாங்கி அவனெதிரே சொட்டச் சொட்ட நனைந்தபடி நின்றுகொண்டிருந்தாள்.

ஆற்றின் முத்துநீர் அவளின் தங்க மேனியிலிருந்து இன்னமும் உலரவில்லை. பல பளிங்கு நீர்த்திவலைகள் அவளின் சுருட்குழலில் எண்ணெய் தடவி, அவள் வனப்புக்குப் பட்டைதீட்டின. முகம் எனும் செங்கமலத்தில் சிந்திய நீர் மணிகள், அவள் கதுப்புக் கன்னங்களில் `கிரீம்’ தடவி ஒப்பனை செய்தன. அவள் தேகத்தில் உறவாடிய நீரோ, அவளுக்குப் பட்டு `வாயி’லாக அணி செய்தது.

அருணாசலம், சுற்றுப்புறச் சூழலை ஒரு தடவை பார்த்துக் கொண்டான். கங்கைக் கரையோரமாக உள்ள ஒரு கரும்பாறையில் தான் நனைந்தபடி படுத்திருப்பது தெரிந்தது. பக்கத்தில் அந்தப் பெண்ணத் தவிர, வேறு மனித வாடையே தெரியவில்லே.

அருணாசலத்துக்குச் சற்று முன்னால் நடந்த நிகழ்ச்சிகள் ஒன்றொன்றாக நினைவுக்கு வந்தன. தன் எதிரில் நின்ற பெண்ணை நிமிர்ந்து நோக்கினான் அருணாசலம்.

பீதியும், பரபரப்பும் முகத்தில் நெளிய அவள் அவனேயே பார்த்துக் கொண்டு நின்றாள். படபடத்த அவள் கண்கள் பதினாயிரம் கதைகள் பேசின.

“தெங் கோமத மாத்தையா?” தனிச் சிங்களத்தில் தேன் வதையை அருணாசலத்தின் காதுகளில் பிழிந்தாள் அந்த மோகனாங்கி.

`இசையைப் பருக மொழி அவசியமே இல்லை!” என்ற ஒரு புது உண்மை அருணாசலத்துக்கு அப்போதுதான் வெளிச்சமாகியது.

“எனக்குச் சிங்களம் தெரியாது. இந்த இடமே எனக்குப் புதிசு. வந்த இடத்தில்….” நிறுத்தி நிறுத்திப் பேசினான் அருணாசலம். அப்படிப் பேசினால் தமிழ் அவளுக்குப் புரிந்துவிடும் என்ற நினைப்பு அவனுக்கு!

என்ன விந்தை அவன் நினைத்தது சரியாகவே இருந்தது. அவளுக்குத் தமிழ் புரிந்தது! கொச்சைத் தமிழில் கொஞ்சினாள்.

“அது பத்திக் காரியம் இல்லே: எனக்குக் கொஞ்சங் கொஞ்சங் தமில் வரும்!”

“பரவாயில்லையே! நீங்கள் நன்றாகவே தமிழ் பேசுகிறீர்கள். இந்தச் சிங்களப் பகுதியிலிருந்து கொண்டு நீங்கள் எப்படித் தமிழ் பேசப் பழகினீர்கள்!”

“அதெல்லாம் பொறகு சொல்றேன். இப்பெ ஓங்களுக்கு எப்படி இரிக்கி? அதைச் சொல்லுங்க” என்றாள் அவள்.

“ஒருவிதக் குறையுமில்ல. அது சரி, ஆபத்திலிருந்து என்னைக் காப்பாற்றினது யார்?”

“ஏன் என்னெப் பார்த்தாத் தெரியலே?”

“தெரிகிறது. தெரிகிறது. ஆனால்….”

“இந்தப் பொம்பிலேப் புள்ளயாலே தண்ணியிலே நீந்த முடியுமோ என்று சமிசயப் படுறிங்க. இல்லேயா, மாத்தயா?”

அவள் கஷ்டப்பட்டுக் கூறியதிலிருந்து பல உண்மைகள் புரிந்தன அருணாசலத்துக்கு.

கங்கையில் அள்ளுண்டு சென்ற அவனை நந்தாவதி – அதுதான் அவள் பெயர் – கண்டிருக்கிறாள். உடனே நீரில் குதித்து நீந்திச் சென்று அருணாசலத்தை எமன் வாயிலிருந்து சாமர்த்தியமாக மீட்டுக் கொண்டு வந்திருக்கிறாள்! அவள் தரையில் மான்! தண்ணீரில் மீன்! பொதுவாகக் கங்கைக்கரையை அடுத்த கிராமங்களில் வாழுகின்ற ஆண்கள் – பெண்கள் குழந்தை- குட்டிகளுக்கு நீச்சல் தண்ணீர் பட்டபாடு. நதி பஞ்சணை மெத்தை.

அருணாசலம், நந்தாவதியின் குடிசைக்குச் செல்வதற்கிடையில், நந்தாவதியின் குடும்பவிவரம் முழுவதையும் தெரிந்து கொண்டான்,

அப்புஹாமி – புஞ்சிநோநா தம்பதிகளின் ஒரே பெண் நந்தாவதி. இறந்த காலத்தில் சிறப்பாக இருந்த குடும்பம். இடையில் ஏற்பட்ட கால மாற்றத்தால், நிகழ்காலம் இருள் சூழ்ந்ததாகிவிட்டது. இரத்தினக்கல் வியாபாரத்தில் `டால்’ வீசிக் கொண்டிருந்த அவர்கள் குடும்பம், அதில் ஏற்பட்ட பாரிய நஷ்டத்தால் இன்று வறுமைக் குழியில் தள்ளப்பட்டுக் கிடந்தது. நந்தாவதி பக்குவமடைந்த பத்தாம் நாளிலேயே அவள் அன்னை புஞ்சிநோநா பரலோக யாத்திரையை மேற்கொண்டு விட்டாள். இத்தனையும் போதாதென்று, சிவனொளிபாதத் தெய்வம், அப்புஹாமியின் கால் ஒன்றைக் குரூரமாகப் பறித்துக் கொண்டு அவரை நொண்டியாக்கிவிட்டது. கடந்த வருஷம் வைகாசிப் பெளர்ணமியன்று தன் இரு கால்களாலும் சிவனொளிபாத மலைக்கு ஏறிய அப்புஹாமி உச்சிக்குச் சமீபத்திலுள்ள `கரமிட்டிப்பான’ என்ற இடத்தில் கால் தடுக்கி விழுந்து, தன் ஒற்றைக் காலைக் கடவுளுக்கு அர்ப்பணித்துவிட்டு முடமாகத் திரும்பினார். உயிர் பிழைத்ததே ஆச்சரியம்! இன்று அந்தத் துரதிஷ்டம் பிடித்த குடும்பத்துக்குத் தீனி போடுவது நந்தாவதி பின் துணிச்சலே!

அவர்கள் கிராமத்துக்குப் பக்கத்திலுள்ள `எலுபுளுவ’ ரப்பர்த் தோட்டத்தில் கூலியாகச் சேர்ந்து, இரத்தத்தை வியர்வையாக்கி, அந்த வியர்வையை உணவாக்கும் `ஜால வித்தை’யைச் செய்து கொண்டு வருகிறாள் நந்தாவதி!

இந்த விவரங்களை இத்தோட்டத்தில் வேலே செய்யும், `மலை நாட்டுத் தமிழர்’களிடமிருந்து பெற்ற தன் `கொஞ்சங் கொஞ்சங் தமிலால்’ கூறி முடித்தாள் நந்தாவதி.

அருணாசலம், திமியாவையிலுள்ள அரசினர் சிங்களப் பாடசாலையின், தமிழ் `செக்‌ஷனு’க்கு வந்து இப்பொழுது ஐந்து வருடங்களாகி விட்டன. இந்த ஐந்து வருடங்களில் அவனிடத்தில் எத்தனேயோ மாற்றங்கள். சிங்களம் அவனுக்கு இப்பொழுது தண்ணீர் பட்டபாடு! நீச்சலில் அவனை மிஞ்ச அந்த வட்டாரத்திலே இப்பொழுது ஆள் கிடையாது!

இவற்றில் மட்டுமன்றி, தோற்றத்திலும் அருணாசலத்திடத்தில் ஒரு புதுமை பொலிந்தது; அவன் இங்கு வரும்போது, அவனுடைய மூக்குக்கும் மேலுதட்டுக்கும் இடைப்பட்ட பாகம் `மழுமழு’வென்று இருந்தது. இப்பொழுது அந்த இடத்தில் `கருகரு’ என்று அரும்பு மீசை அணி செய்தது. மட்டக்களப்பின் `கருக்கும்’ வெயிலில் கருமையாகியிருந்த அவன் மேனியில் மலைநாட்டுச் சீதளச் சுவாத்தியம், சந்தன வர்ணத்தைச் சீதனமாய் வழங்கியிருந்தது. நவரத்தினங்கள் பிறக்கும் கலுகங்கையில் நீச்சலடித்து நீச்சலடித்து அவன் மேனியே வைரம் போல் மாறியிருந்தது.

இத்தனை மாற்றங்களுக்கு மத்தியில், அவன் உள்ளத்திலும் ஒரு பெரிய மாற்றம். தன் ஒரே தங்கையும் மற்றும் அவனது தாய் தந்தையரும் இடம் பெற்றிருந்த அவனது உள்ளத்தில், நான்காவது பேர்வழியாக நந்தாவதியும் வந்து, நெருக்கியடித்துக் கொண்டு உட்கார்த்திருந்தாள்.

அவள் போக்கிலும் கூடச் சில மாற்றங்கள்:

முன்னர், கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசத் தெரிந்தவள். இப்பொழுது நிறைய நிறையத் தமிழ் பேசக் கற்றிருந்தாள். திருக்குறளில் கூட இரண்டொன்று மனப்பாடம்! முன்னரெல்லாம் எத்தனைதான் கஷ்டம் தொடர்ந்தும், கண்ணீர்விடத் தெரியாதிருந்தவள். இப்பொழுது அடிக்கடி கண்ணீர் சிந்தப் பழகியிருந்தான். அநேகமாகச் சித்திரையும் ஆவணியும் மார்கழியும் அவள் கண்ணீர் சிந்துவதற்கென்றே பிறந்து கொண்டிருந்தன. இந்த மூன்று மாதங்களிலும்தான் அருணாசலம், விடுமுறைக்காக மட்டக்களப்புக்குச் செல்வது!

பட்ட கடன், தொட்ட கடன், `பாவியர் வயிற்றில் பிறந்த’ கடன் என்று எல்லாக் கடன்களையும், இந்த ஐந்து வருடங்களில் நீர்த்து விட்டான் அருணாசலம்.

சென்ற தையில்தான் அவனுடைய தங்கையின் திருமணம் ஒருபடியாகக் `கல்வில் நார் உரித்தது போல’ நடந்துவிட்டிருந்தது. மாப்பிள்ளையும் அவனேப் போல் ஆசிரியன்தான். வெலிமடையில் வேலை பார்க்கிறான். திருமணம் முடிந்த அடுத்த மாதமே மனைவியை அழைத்துக் கொண்டு போய் விட்டான். இனித் தொல்லை இல்லை. எந்த நிமிஷத்திலும் தன் நெஞ்சைக் கவர்ந்த நந்தாவதியை முறைப்படி தனக்குரியவளாக்கிக் கொள்ள வேண்டியதுதான்!

இந்தச் சுமுக நிலையில்தான் இலங்கையில் இனக்கலவரத் தீ பற்றிக் கொண்டது நெருப்புக்கும் இலங்கைக்கும் ஒரு நீங்காத உறவு போலும்! முன்னர் ஒரு தடவை அனுமான் சுட்டுப் பொசுக்கினான், அவன் வழித் தோன்றலான மனிதர்கள் இன்று சுட்டுப் பொசுக்குகிறார்கள்!

இத்தருணத்தில் அருணாசலத்துக்கு ஊரிலிருந்து ஓர் அவசரத் தந்தி வந்தது:

`அன்னையின் நிலை ஆபத்து. உடனே புறப்படு!’

தந்தியை நந்தாவதியிடம் படித்துக் காட்டினான் அருணாசலம்.

“இந்திலையில் நீங்கள் எப்படிப் போக முடியும்? வழியெல்லாம் வெறியர்கள் சவக்குழி தோண்டுகிறார்களே!”

“நான் இங்கு இருப்பதும் ஆபத்துத்தானே! தவிரவும், நான் ஊர் செல்லாவிட்டால் அம்மா பிழைக்கவே மாட்டாள். நான் எப்படியும் போயே தீரவேண்டும். தங்கைகூட இல்லை, மாப்பிள்ளையும் அவளும் வெலிமடையில் என்ன ஆனார்களோ?” என்று குமைந்தான் அருணாசலம்,

நந்தாவதிக்கு ஒன்றுமே ஓடவில்லை.

“நான் எப்படியும் இன்று போயே தீரவேண்டும்” என்று வெறி பிடித்தவன்போல் கத்தினான் அருணாசலம்.

அவரைத் தடுப்பதில் பயனில்லையெனக் கண்ட நந்தாவதி, மெல்ல அவனை அணுகி, “உங்களோடு நானும் வருகிறேன்!” என்றாள்.

அவள் கோரிக்கையை ஏற்கக் கண்டிப்பாக மறுத்து விட்டான் அருணாசலம்.

அவன் உறுதியை அசைக்க முடியாதெனக் கண்ட நந்தாவதி, ஒரு முடிவுக்கு வந்தவளாய், அவன் காதுக்குள் எதையோ `குசுகுசு’த்தாள். அதைக் கேட்ட அருணாசலத்தின் முகத்தில் நம்பிக்கை ஒளி படந்தது.

அருணாசலம் இப்பொழுது அருணாசலமாகவே இல்லை! ரத்த வெறி பிடித்த ராசஷனாக மாறியிருந்தான்.

மனித இனத்தின் ஊன் குடிக்கும், `ஊத்தைக் குடியனாகத் தோற்றமளித்தான். மட்டக்களப்பு – பதுளைச் சாலையில், கரடியனாற்றுக் காட்டின் மத்தியில், பல குண்டர்களைத் துணை சேர்த்துக் கொண்டு மனித வேட்டைக்காகப் பதுங்கியிருந்தான்.

தூரத்தே, பதுளைப் பக்கமிருந்து இருளைக் கிழித்தபடி ஒரு கார் மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்தது. இதைத் கண்டுவிட்ட அருணாசலம், சாலேயின் குறுக்கே கட்டையைப் போட்டு மறிக்கும்படி தன் குண்டர்களுக்குக் கட்டளை பிறப்பித்தான்.

இமைக்கும் நேரத்தில் கட்டளை நிறைவேற்றப்பட்டது. துப்பாக்கியைத் தயார் பண்ணியபடி எல்லாரும் காட்டுக்குள் பதுங்கிக் கொண்டனர்.

இதோ கார் நெருங்கி விட்டது.

கரும் பூதம்போல் சாலையின் குறுக்கே கிடந்த கட்டைக்குச் சமீபமாக வந்த கார், `கிரிச்’ என்று `பிரேக்’கோடு நிறுத்தப்பட்டுவிட்டது.

“காருக்குள் இருப்பது, `சீனாப் புள்ளி’யா? `தானாப் புள்ளி”யா? என்று பார்த்துவர இரண்டு குண்டர்களை அனுப்பிவிட்டு, துப்பாக்கியை நீட்டியபடி `ரெடி’யாக நின்றான் அருணாசலம்,

மோப்பம் பிடிக்கச் சென்றவர்கள், “காருக்குள் இருப்பவர்கள் `சீனாப் புள்ளி’கள் தான்” என்பதற்கு அடையாளமாகச் சீழ்க்கையடித்தார்கள். அடுத்த கணம்….. `டுமீல், டுமீல்’ என்று துப்பாக்கி முழங்கி ஓய்ந்தது. எல்லாக் குண்டர்களும், `தட, தட’ என்று காருக்குச் சமீபமாக ஒடினார்கள்.

அருணாசலம் `டார்ச்’சை அடித்துக் காருக்குள் பார்வையைச் செலுத்தினான்.

உள்ளே..?

ஒரு கிழவர்; ஒரு பெண்; டிரைவர் – மூவரும் இரத்த வெள்ளத்தில் நீச்சலடித்தார்கள்.

அந்த மூன்று ஜீவன்களும் முக்கி முனகியபடி மரண ஒலமிட்டுக் கொண்டிருந்தன. அந்த மயானச் சூழலின் மத்தியிலும் அவர்களில் யாரோ எதையோ கூற முயல்வதும் வெளியில் நின்ற அருணாசலத்துக்குத் தெளிவாய்க் கேட்டது.

“துவே! மகே ரத்ரங் துவே! நந்தா! நந்தாவத்தீ…. ” பழக்கப்பட்ட ஒரு கிழக்குரல் முனகியது.

காதக் கூராக்கினான் அருணாசலம்,

“தாத்தே! மகே தாத்தே! தமிஸ தமிஸ” என்று குரல் கொடுத்தது இனிய குரல்,.

அந்தக் குரலைக் கேட்ட அருணாசலத்தின் உரோமங்கள் குத்திட்டு நின்றன. சருமத்தைக் கிழித்துக்கொண்டு வெளியே பாய்வதற்கு ஆயத்தமானது அவன் குருதி.

“நந்தாவதி என் அன்பே” என்று அலறி விட்டான் அருணாசலம். காருக்குள் அலங்கோலமாகக் கிடந்த அவள் ரத்தமேனியை வாரி எடுத்துத் தன் மார்பில் அணைத்துக் கொண்டான்.

நந்தாவதி அவன் அணைப்பில் மெய்ம்மறக்கக்கூடிய நிலையில் இல்லை. உயிர் பிரிவதற்கிடையில், தான் வந்த நோக்கத்தைக் கூறத் தொடங்கினாள்:

“அன்பரே! விதியின் பிரகாரம் விஷயம் நடந்து விட்டது. இப்பொழுது உங்கள் நாட்டை நெருக்கிக் கொண்டிருக்கும் இன்னொரு விதியை நீங்கள் உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் உங்கள் நாட்டைத் துவம்சம் பண்ணுவதற்கு, இரத்தினபுரியிலிருந்து லாரிகள் மூலும் புறப்பட்டுள்ள நரசோரக் கோஷ்டி, இதற்குள் கொழும்பு மார்க்கமாகப் பொலநறுவைக்கு வந்து சேர்ந்திருக்கும். அங்கு பொலநறுவைக் கோஷ்டியைi ஜோடி சேர்த்துக் கொண்டு மட்டக்களப்புக்குள் புகுவது அதன் திட்டம். இந்தச் சதித் திட்டத்தை ரகசியமாக அறிந்து கொண்டு, நானும் தந்தையும் உங்களைப் பார்க்க விரைந்து கொண்டிருந்தோம். இடையில் இப்படி ஆகிவிட்டது. என்னைப் பற்றியோ, என் தந்தையைப் பற்றியோ நீங்கள் இனிக் கவலைப்பட நேரம் இல்லை, போங்கள்….. போய் உங்கள் நாட்டு மக்களை எச்சரிக்கை செய்யுங்கள்.” `மளமள;வென்று கூறி முடித்தாள் நந்தாவதி. அணையப் போகும் விளக்கின் பிரகாசம் மின்னியது அவள் பேச்சில்.

அருணாசலத்தின் மூளைக்குள் துப்பாக்கி வெடித்தது; மின்னல் மின்னியது இடி இடித்தது; சமுத்திரம் பொங்கியது. செயலிழந்து நின்ற அவன் மார்பில் துவண்டு கிடந்த தந்தாவதியின் மூச்சும் செயலிழந்தது! அவள் தந்தையும் கார் டிரைவரும் அப்பொழுதே விறைத்து விட்டார்கள்.

பிக்ஷ கதையைக் கூறி முடிப்பதற்கும், வண்டி `ஹூய்’ என்ற பேரிரைச்சலுடன் பொலநறுவையை வந்து அடைவதற்கும் சரியாக இருந்தது.

அதுவரையில் கதையில் ஒன்றியிருந்த நான் மணியைப் பார்த்தேன். பின் ஜாமம் 3-30. புறப்பட எழுத்த பிக்ஷவிடம், “அன்னையைப் பார்க்க ஊருக்குச் சென்ற அருணாசலம், திடீரென்று அத்தனை கொடிய வெறியனாக எப்படி மாறினான்? கலவரம் உச்சநிலையை அடைந்திருந்த அந்தப் பயங்கர வேளையில் அவன் எப்படி ஊருக்குச் சென்றான்?” என்று இயற்கையாகவே என்னுள் எழுந்த கேள்விகளைக் போட்டு வைத்தேன்.

அவர் பதிலே பேசவில்லை. மெதுவாகக் கீழே இறங்கி `விருட்’டென்று நடந்து விட்டார்! ஆனால், அவர் அமர்ந்திருந்த இடத்தில் கிடந்த `டயரி’ ஒன்று என்னேப் பார்த்துச் சிரித்து நின்றது!

அவசரம் அவசரமாக அதை எடுத்து அவரிடம் கொடுப்பதற்கு முயன்றேன். அதற்குள் அவர் மறைந்தே விட்டார்!

என்னை மீறிய ஆவலொன்று அந்த `டயரி’யைப் புரட்டிப் பார்க்கத் தூண்டியது. புரட்டினேன். என்ன விந்தை! முத்து முத்தான தமிழில் அந்த `டயரி’ எழுதப்பட்டிருந்தது.

‘என்னதான் எழுதப்பட்டிருக்கும்?’ என்று படிக்கக் தொடங்கினேன்:

‘புத்தர் பிரானே! போதிமர நிழலில் மோனத் தவமியற்றும் புனிதத் தலைவனே! கருணைப் பெருங்கடலே! என்னே மன்னித்துவிடு ஐயனே! அன்று நான் அத்தனை வெறியாட்டமாடி மனித ரத்தம் குடித்ததற்கு என் ஒரே தங்கையை இழந்து தவித்ததே காரணம். அன்னையைப் பார்க்க ஓடோடிச் சென்ற என்னை வரவேற்றது, வெலிமடையிலிருந்து வந்த அந்தப் பயங்கரச் செய்தி. கருவுற்றிருந்த என் தங்கையைக் கண்ட துண்டமாக வெட்டி எறிந்து விட்டார்கள் சிங்களவர்கள். அதனால் ஏற்பட்ட பழி உணர்ச்சி. என் உயிரை நீரிலிருந்து மீட்ட – என் நாட்டைப் பயங்கர ஆபத்திலிருந்து காத்த என் உயிரினும் இனியவளேயே பலி கொண்டு விட்டது! இதைவிடத் தண்டனை எனக்கு வேண்டியதில்லை, தேவா! அன்று என் அன்னையைக் காண, அந்த உத்தமி சொன்ன ஆலோசனைப்படி புனித மஞ்சளங்கி தரித்துத் தற்காலிக பிக்ஷவாகி, ஒர் ஆபத்துமின்றி ஊர் போய்ச் சேர்ந்தேன். இன்று அதே புனித அங்கி தரித்து நிரந்தரமாகவே உன் பக்தனாகி விட்டேன். உன் நிழலில் ஒதுங்கியுள்ள என்னே நீ ஏற்றுக் கொள்ள வேண்டும், ஞானதேவா! – அருணாசலம்’

– 1960

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *