நண்பன் ஐ.பி.எஸ்.

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 19, 2022
பார்வையிட்டோர்: 10,803 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பேசி முடித்து ரிசீவரை தொலைபேசியில் பொருத்தினேன். என் விரல்களில் மெலிதான அதிர்வுகள் இருப்பதைக் கவனித்தேன். பார்த்துக் கொண்டிருந்த கோப்பை மூடி வைத்துவிட்டு எழுந்தேன். தொப்பியை அணிந்தேன், அறையை விட்டு வெளி வந்தேன்.

எதிர்ப்பட்ட இளம் அதிகாரிகளின் சல்யூட்களை மென்மையாகத் திருப்பியவாறு காருக்கு நடந்தேன். டிரைவர் கதவை விறைப்பாகத் திறந்து பிடித்தான், “திருவல்லிக்கேணி” என்றேன்.

அரசாங்க வாகனம் உறுமி விட்டுப் புறப்பட்டது.

என் நண்பனைச் சந்திக்கப் போகிறேன்! அதுவும் எத்தனை காலம் கழித்து!

இருபத்து நான்கு வருடங்களாகிவிட் டன், அரவிந்தனைக் கடைசியாகப் பார்த்து, மாநிலக் கல்லூரியின் மர நிழலில் அவனுடன் பகிர்ந்து கொண்ட சிகரெட்டின் வாசத்தை, இப்போது கூடத் தொண்டையில் அனுபவிக்க முடிந்தது.

அரவிந்தனைக் கல்லூரி நாட்களில் நீங்கள் பார்த்திருக்க வேண்டும். அபாரமாயிருப்பான். நெற்றியில் வந்து விழும் முடிக்கற்றையை அலட்சியமாக ஒதுக்கிக் கொண்டே அவன் பேசும் ஆங்கிலத்துக்கு மயங்காத பெண்களே இல்லை. ஏதாவது காரணத்தை வைத்துக் கொண்டு, அவனிடம் நோட் புத்தகத்தை வாங்குவதற்கு ஒரு தடவை, திருப்பித் தருவதற்கு ஒரு தடவை என்று பெண்கள் வந்து நிற்பதைக் கவனிக்கலாம்.

ஆங்கிலத்தில் மட்டுமல்ல, கொட்டிக் கிடக்கிற நட் சத்திரங்களைப் போலக் குழப்பமாகத் தெரியும் மற்றப் பாடங்களைக் கூட அவன் மிரட்சியுடன் பார்த்ததில்லை. வகுப்பு இல்லையென்றால், நூலகத்தில் அட்டை கிழிந்த தடிமனான புத்தகங்களைப் புரட்டி எதையோ எழுதிக் கொண்டிருப்பான். அவன் எழுதி வைத்த நோட்ஸ்களை அப்படியே பார்த்து எழுதிக் கொள்வேனே தவிர, அந்த வரிகளுக்கு எல்லா நேரங்களிலும் எனக்கு அர்த்தம் புரிந்ததில்லை. – அரவிந்தனுக்கும் எனக்கும் கிரிக்கெட்டால் நட்பு இறுகிப் போனது. ஞாயிற்றுக் கிழமைகளில் இருவருமாக மைதானத்துக்கு ஒரே சைக்கிளில் போய், வெள்ளை உடைகளை அழுக்குப் பண்ணிக் கொண்டு திரும்புவோம்.

வருடத் தேர்வுகள் ஆரம்பித்தபோது, எனக்கு வந்த கனவுகளில் பெரும்பாலும் தான் கணக்குப் பரீட்சையில் மட்டும் தோற்றுப் போய், என் அப்பாவால் வீட்டை விட்டுத் துரத்தப்பட்டேன்.

கனவுதானே என்று அலட்சியப் படுத்த முடியாதபடி நிஜத்திலும் கேள்வித் தாளை வாங்கியதும், என் அத்தனை நாடிகளும் ஒடுங்கின, சரிபாதி கேள்விகள் புரியவில்லை. எனக்கு முன்னால் உட்கார்ந் திருந்த அரவிந்தன் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருந்தான். என் சட்டையெல்லாம் வியர்வையில் நனைந்து, கேள்வித் தாளை மூன்று நான்கு முறை புரட்டி விட்டேன். முதலில் தெரிந்ததாகத் தோன்றிய கேள்விகளும், பயத்தில் இப்போது அந்நியமாகிவிட்டன.

கிட்டத்தட்ட நாற்பது நிமிடம் வீணடித்தபின், எனக்கு அடி வயிற்றில் கலக்கம் வந்து விட்டது. காலை முன்னால் செலுத்தி அரவிந்தனின் பாதத்தைத் தொட் டேன். திரும்பினான். என் முகத்தைப் பார்த்ததும் புரிந்து கொண்டான். ‘கவலைப்படாதே’ என்று கண்களால் சைகை செய்தான். கூடுதல் தாள்களை வாங்கித் தன் மேஜையில் பரப்பிக் கொண்டான். ஏற்கெனவே எழுதியதை மிக நேர்த்தியாகக் கீழே தள்ளினான். என் தாள்களையும் இயல்பாகக் கீழே தவறவிட்டேன், பொறுக்கிக் கொள்ளும்போது, அவனுடையதையும் சேர்த்து எடுத்துக் கொண்டேன்.

‘தப்பு இல்லையா’ என்று மனசாட்சி ஒரு புறம் குத்தியது. ‘மூட்டாள். இது வாழ்க்கைப் பிரச்னை, தயங்காதே’ என்று புத்தி இன்னொரு பக்கம் தட்டிக் கொடுத்தது.

அவன் எல்லாக் கேள்விகளையும் முடித்துவிட்டாலும், எதையோ எழுதுவது போல் பாவனை செய்து, எனக்காக எழுந்து கொள்ளாமல் இருந்தான்.

ஒவ்வொரு பதிலையும் வெட்கமில்லாமல் அவனுடைய பேப்பரிலிருந்து பார்த்து எழுதினேன். எல்லாவற்றையும் எழுதி முடித்து அவன் தாள்களைத் தள்ளினேன். அப்படித் தள்ளிய போது, தவறுதலாக என் விடைத்தாளும் சேர்த்து நழுவிவிட்டது.

குனிந்த நிலையில் அவன் அவசரமாகப் பொறுக்கிக் கொண்டு நிமிர்ந்தபோது, பக்கத்தில் கண்காணிப்பாளர் நின்றிருந்தார். அவனிடமிருந்து எல்லாத் தாள்களையும் வாங்கிப் புரட்டினார்.

அச்சத்தில் என் உடை நனைந்தது.

”அரவிந்தன் என்ற ஞானியின் பெயரை வைத்துக் கொண்டு தில்லுமுல்லு பண்ணுகிறாயே, வெட்கமாயில்லை” என்று உறுமினார்.

என் பக்கம் திரும்பினார். “நெருக்கமான நண்பனாயிருந்தால் கூப்பிட்டு சோறு போடு, இப்படி உன் பேப்பரைக் காப்பியடிக்கத் தந்து, அவன் எதிர்காலத்தைப் பாழடிக்காதே” என்று என் விடைத் தாளை என் மேஜை மீது போட்டார்.

‘ஐயோ, இல்லை…அவனைப் பார்த்து நானல்லவா காப்பியடித்தேன்’ என்று தைரியமாகச் சொல்ல வார்த்தைகள் இன்றி, தொண்டையடைக்க நின்றேன். அரவிந்தனும் மறுத்துச் சொல்லாமல் கண்களில் கண்ணீர் தளும்ப அவரைப் பார்த்தான்.

“உன்னை பரீட்சையே எழுத விடாமல் செய்ய முடியும். ஆனால், உள் அப்பா அம்மாவிற்காக மன்னிக்கிறேன்” என்று அரவிந்தனிடம் சொல்லிக் கொண்டே அவர், அவனுடைய விடைத்தாள்களைக் கிழித்தார்.

“உனக்குத் தெரிந்ததை மட்டும் எழுது, கிடைக்கும் மார்க் கிடைக்கட்டும்” என்று அவனிடம் புதிதாக விடைத்தாள்களைக் கொடுத்தார். “ஆனால், மணியடிக்கும் வரை தான் உனக்கு நேரம்”

மரத்தடியில் நகங்களைக் கடித்துக் கொண்டு, அரவிந்தனுக்காகக் காத்திருந்தேன்.

அவனைப் பார்த்ததும், ‘ஸாரிடா’ என்று சொல்வதற்குள் என் கண்களில் கண்ணீர். “முடிக்க முடிந்ததாடா?”

“இல்லை ” என்று தலை அசைத்தான். “அறுபது மார்க் வரும், விடு”

முடிவுகள் வெளியானபோது, நான் தொண்ணூற்றியெட் டும், அவன் ஐம்பத்து தான்கும் வாங்கியிருந்தோம்.

அப்புறம் ஆறு மாதங்களுக்கு வேலைகளுக்கான விண்ணப்பங்கள் கூட இரண் டிரண்டாகத்தான் வாங்கினோம். தினமும் ஒரு முறையாவது சந்தித்து, தேரடி முனையில் ரகசியமாக சிகரெட் புகைத்தோம்.

திடிரென்று அவன் மாமாவின் கம்பெனியில் வேலை கிடைத்துவிட்டதாகக் கூறி பம்பாய்க்குப் புறப்பட்டுப் போனான், அடுத்த இரண்டு வருடங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டோம்.

இடையில் நான் ஐ.பி.எஸ். தேர்வு எழுதித் தோவாகி, தமிழ்நாட்டிற்கே வந்தேன், அப்புறம் இருவருக்குமான தொடர்பு அறுந்து போய், அவனைக் கிட்டத்தட்ட மறந்து விட்ட நிலையில் இப்போது மீண்டும் அவனிடமிருந்து அழைப்பு!

ஏறத்தாழ கால் நூற்றாண்டுக்குப் பிறகு சந்திக்கப் போகிறேன்.

கார் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தின் வாசலில் நின்றது. காவலர்கள் மரியாதையுடன் சல்யூட்களை வழங்கினர். என் கவனம் அவர்களைத் தாண்டி உள்ளே பாய்ந்தது.

அரவிந்தனா இது! டிப் டாப்பான சட்டை மடிப்புக் கலையாத பாண்ட், பெல்ட்டில் செல்போன் உறை, கால்களில் ஷூக்கள் என்று கச்சிதமாக உடுத்தியிருந்தான். ஆனால், நிறைய மெலிந்திருந்தான். மீசையை மழித்து மழமழப்பாக சவரம் செய்திருந்தான்.

புருவங்கள் வெளித்தள்ளி கண்கள் உள் வாங்கியிருந்தன, என்னைப் பார்த்துப் புன்னகைத்து எழுந்தான், கண்கள் நிச்சயமின்றி அலைந்தன. கையை நீட்டி என் கையைப் பற்றிக் குலுக்கினான். அவன் விரல்களில் சின்ன நடுக்கமும், சற்றே நம்பிக்கையும் தெரிந்தன.

எனக்குள் எதுவோ அசைவதை உணர்ந்தேன்.

இன்ஸ்பெக்டர் தன் இருக்கையை எனக்கு விட்டுக் கொடுத்து, நின்றபடி, பேசினார்.

“எழுநூறு கிராமுக்கு மேல சட்டைக் குள்ள ஒளிச்சு வச்சிருந்தாரு சார். காலேஜ் ஹாஸ்டலுக்குள்ள நுழையற சமயத்துல மடக்கிட்டோம். அங்கே ரெகுலரா இவர் நான் சப்ளை செய்யறார்னு பசங்க வாக்குமூலம் கொடுத்திருக்காங்க, ஸ்டேஷனுக்கு இழுத்திட்டு வந்து கேஸ் எழுதினப்புறம் தான் உங்க பேரைச் சொன்னாரு, சார்”

“நான் கொஞ்சம் தனியாப் பேசணும்” என்றேன்.

“அந்த ரூமுக்குப் போயிடலாம். சார்” என்று பக்கத்து விசாரணை அறையைக் காட்டினார்.

“ஸாரி, லோகு” என்றான், அரவிந்தன் எடுத்தவுடனே, “ரொம்ப பயமாயிருந்தது. அதனாலத்தான் உதவி கமிஷனரைத் தெரியும்னு உன் பேரைச் சொன்னேன்”

“இருபத்திநாலு வருஷம் கழிச்சு பார்க்கறோம்” என்றேன், தொப்பியை மேஜை மீது வைத்தபடி, அவனோடு சேர்ந்து ஒரு சிகரெட்டைப் புகைக்க வேண்டும் போலிருந்த தாகத்தை அடக்கினேன்.

“பேப்பால உன் ஃபோட்டோவை அடிக்கடி பார்ப்பேன் லோகு. ஆனா கூப்பிட்டுப் பேச தைரியமில்ல”

“பம்பாய்க்கில்ல போனே?” என்றேன்

“மாமா செத்ததும், அவர் கம்பெனியும் செத்துப் போச்சு. அப்புறம் வாழ்க்கை போராடித் தோத்துட்டேன். அதான்.”

“எல்லாரும் சொல்ற காரணம்தான், படிக்கற பசங்காள போதைப்பழக்கத்துக்கு – அடிமையாக்கலாமா, அரவிந்த?”

கண்களைத் தழைத்துக் கொண்டான் “தப்பு தான், ஆனா, நான் சப்ளை செய்யலேன்னா, திருந்திடப் போறாங்களா? வேற ஒருத்தனைத் தேடிப் போவாங்க.”

“ஸோ, இதைத் தொடர்ந்து செய்வே?”

“இல்ல.. இந்தத் தடவை மனனிச்சு விட்டுரு. இனிமே வேற பொழப்பைப் பார்த்துக்கறேன்”

அவன் முகத்தைப் பார்க்காமல் என் உள்ளங்கை ரேகைகளை சற்று நேரம் ஆராய்ந்து கொண்டிருந்தேன்.

“லோகு, இப்ப உன் பசங்களுக்கு கணக்கு நீ தான் கத்துத் தரியா?” என்றான்.

கணக்கைப் பற்றி அவள் பேசிய காரணம் புரிந்தது.

“நான் என்ன செய்யணும்னு எதிர் பார்க்கறே?”

“கேஸ் எதுவும் எழுதாம் விட்டுறச் சொல்லு, சரக்கைத் திருப்பித் தர வேண்டாம். பல லட்சம் நஷ்டம்தான். அது எனக்குக் கொடுத்த தண்டனையா இருக்கட்டும்”

மேஜையில் இரு கைகளையும் ஊன்றி எழுந்தேன், அவனைக் கண்களுக்குள் பார்த்துப் பேசினேன்.

“அரவிந்த், நீ என் நண்பன் தான். நீ அன்னிக்கு உதவி செய்யலேன்னா, நான் டிகிரியை முடிக்காம, வேற எப்படியோ மாறிப் போயிருப்பேன். இப்ப போலீஸ் அதிகாரியா உன் முன்னால நின்னிருக்கக் கூட மாட்டேன், ஆனா, இப்ப ஒரு நியாயமான அதிகாரியா நான் நடந்துக்கலைன்னா, அன்னிக்கு எனக்காக நாப்பது மார்க்கை நீ தியாகம் பண்ணின அந்த நட்புக்கே அர்த்தமில்லாமப் போயிடும்”

அவன் மிரட்சியுடன் என்னைப் பார்த்தான்.

“இந்த பிஸினஸ்ல யார், யார் உனக்குக் கூட்டாளின்று சொல்லு, அப்ரூவரா மாறிடு”

உதடுகளை ஈரம் செய்து கொண்டான்.

“எனக்குப் பெரிய பெரிய வக்கிலை யெல்லாம் பழக்கம். உன்னை வெளியே கொண்டு வர வேண்டியது என் பொறுப்பு: உன் குடும்பத்தை நான் பார்த்துக்கறேன்” என்று அவன் தோளை அழுத்திக் கொடுத்தேன்.

மௌனமாக நின்றான்.

வெளியே வந்ததும், இன்ஸ்பெக்டர் என் முகத்தைப் பார்த்தார்.

“அவன் என் நண்பன். வாக்குமூலம் வாங்கறப்ப ரொம்ப அடிக்காதீங்க..”

“யெஸ், சார்”

“அவன் எப்ப என்கிட்ட பேசணும்னு சொன்னாலும், என்னைக் கூப்புடுங்க”

“லோகு” அரவிந்தின் குரல் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

“இதை மறந்துட்டியே!” என்று என் தொப்பியை எடுத்து நீட்டினான்.

– 23-01-2005

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *