நடத்துனர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 4, 2015
பார்வையிட்டோர்: 6,101 
 

பஸ்ஸுக்காக நீண்ட நேரம் காத்துக்கொண்டிருந்தேன். இந்த அவினாசி சாலையில் நிறைய பஸ்கள் வரும், ஆனால் எதுவுமே நாம் எதிர் பார்க்கும் நேரம் வராது. பொதுவாக காலை வேலைக்கு போகும் நேரம் 8மணி முதல் 9மணி வரையிலும் வேலைமுடிந்து போகும் மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் கண்டிப்பாக பஸ்ஸை குறித்த நேரத்தில் எதிர்பார்க்க முடியாது.அப்படியே குறித்த நேரத்தில் வந்தாலும் கண்டிப்பாக எங்கள் நிறுத்தத்தில் நிற்காது. இது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் இரவு ஏழு மணிக்கு பஸ்ஸுக்கு நிற்கிறேன், கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்களாக நிற்கிறேன், ஒரு மனிதனின் வாழ்நாளில் அதுவும் என்னைப்போல பஸ்ஸை நம்பும் மக்களுக்கு அவகர்கள் வாழ் நாளில கால் நூற்றாண்டுகளை பஸ்ஸ¤க்கு காத்திருப்பதிலேயே செலவழிக்கிறார்கள் என்பது என் அனுபவம்.

தூரத்தில் பஸ் வருவது தெரிந்தது. தயாராகிக்கொண்டேன், எப்படியும் நிறுத்தத்தில் பஸ் நிற்காது என்பது தெரியும், எப்படியாவது பஸ்ஸில் ஏறி விடுவது என் முடிவு செய்து கொண்டேன். பஸ் நிறுத்தத்திலிருந்து ஐம்பது அறுபது அடி முன்னால் நின்றுகொண்டேன். எப்படியும் ஆட்களை இறக்க பஸ் நின்றுதான் ஆக வேண்டும், ஆனால் என்னைப்போல யோசித்து பலரும் என்னுடன் வந்து நின்றுகொண்டனர்.இதுவே கூட்டமாக இருந்தது. பஸ் கூட்டத்தைப் பார்த்து நிறுத்தாமல் போய்விட்டால் என்ன செய்வது.! பயம் பிடித்துக்கொண்டது. பயந்தது போலவே பஸ் நிறுத்தத்தை விட்டு தள்ளி நிற்க வந்தது ஆனால் எங்களைப்பார்த்தவுடன் மீண்டும் வேகம் பிடித்தது.

அரை பர்லாங்கு தள்ளி நின்றது. சோர்ந்து போய்விட்டேன். இருந்தாலும் ஒரு நப்பாசை ஓடிப்பிடித்துவிடலாம் என்று ஓட ஆரம்பித்தேன். மூச்சு இரைத்தது. இருந்தாலும் விடவில்லை கையில் இருந்த பை வேறு இடித்தது, இறுந்தாலும் விடவில்லை, இறுகப் பையை பிடித்துக்கொண்டு ஓடிப்போய் கம்பியைப் பிடித்து பஸ்ஸில் கால் வைக்கவும் நடத்துனர் விசில் ஊதவும் சரியாக இருந்தது. ஒலிம்பிக்கில் பதக்கம் கிடைத்திருந்தால் கூட இவ்வளவு சந்தோசப்பட்டிருக்கமாட்டேன். ஒரு பெரிய காரியம் செய்துவிட்டதைப் போல் சந்தோசப்பட்டுக் கொண்டேன்.

பஸ் படியில் காலை வைத்துவிட்டேனே தவிர உள்ளே ஏறமுடியவில்லை. நல்ல கூட்டமாக இருந்தது. ஒவ்வொருவரும் மலை போல் சிலையாக நின்று கொண்டிருந்தனர். சார் கொஞ்சம் வழி விடுங்க இல்ல உள்ளே போங்க, என்று எனக்கு முதுகைகாட்டிக்கொண்டிருந்தவரிடம் சொன்னேன்.
theri
அவர் என்னை திரும்பிப் பார்த்து ஒரு அற்ப ஜந்துவை பார்ப்பது போல பார்த்து “நீ வேணும்னா முன்னாடி போ’ மத்தவங்களுக்கு பண்ணாட்டு பண்ணாத என்று சத்தம் போட்டார். கூட்டத்தில் இவர் சத்தம் போட்டது எனக்கு சங்கடமாக இருந்தது, என்ன செய்வது என்று எனக்குள் நானே நொந்து கொண்டு அவரை இடித்துக்கொண்டே (வேண்டுமென்றே) உள்ளே சென்றேன். எப்படியோ நகர்ந்து நகர்ந்து முன்னால் வந்து விட்டேன். அப்பாடி என நான் நினைக்கும்போது ஒரு ஆள் சடாரென முதுகில் மோதி நின்றான். நான் அவனைமுறைத்தேன், சாரி சார் பின்னாடியிருந்து இடிக்கிறாங்க கோபப்படாதிங்க என்றான். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை கூட்ட நெரிசலில் இதெல்லாம் சகஜம் என்றாலும் உடம்பும், மனசும் கேட்பதில்லலையே.

டிக்கட் டிக்கட் நடத்துனர் கூட்டத்தை விலக்கிக்கொண்டு உள்ளே வந்தார். என் அருகில் வந்தவரிடம் நான் முன்னரே கையில் சுருட்டி வைத்திருநத ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டி ஒரு காந்திபுரம் கொடுங்க என்றேன், ரூபாய் நோட்டையும் என்னையும் மாறி மாறி பார்த்தவர் சில்லறை வேணும் என்றார். ஏற்கனவே பஸ்ஸில் ஓடி வந்து ஏறிய கோபம் பின்னால் இடித்தவர் மீது கோபம் எல்லாம் சேர்ந்து நடத்துனரிடம் கூச்சல் போட ஆரம்பித்துவிட்டேன். எதுக்கு சில்லறை? என்ன விளையாடறிங்களா? இங்கிருந்து காந்திபுரம் போறதுக்கு சில்லறை வேணும்னா நாங்க எங்க போறது? எங்கிட்ட சில்லறை இல்ல டிக்கெட் கொடுக்க முடிஞ்சா கொடுங்க’ என் கூச்சலில் கூட்டம் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது. நடத்துனர் ஒன்றும் பேசாமல் டிக்கெட்டை கிழித்து கையில் கொடுத்துவிட்டு பாக்கிய காந்திபுரம் வந்து வாங்கிங்க என்று சொல்லிவிட்டு அடுத்தவருக்கு டிக்கெட் கொடுக்க ஆரம்பித்து விட்டார். கூட்டம் என்னை முன்னும் பின்னும் தள்ளியது. எனக்கு பாக்கிப்பணம் ரூபாய் நாற்பத்தைந்து எப்படி நடத்துனரிடம் வாங்குவது என்று பெருங்கவலை சூழ்ந்துகொண்டது. ஞாபகம் பூராவும் பாக்கிப்பணத்தின் மீதே இருந்தது.

ஒவ்வொரு முறையும் கண்டக்டர் என்னை தாண்டி செல்லும்போதும் பாக்கியை கேட்கத்தோன்றும், ஆனால் அவர் திட்டிவிட்டால் என்ன செய்வது என்று பயம் வேறு தோன்றும். ஒரு முறை தைரியமாக கேட்டுவிட்டேன் சார் பாக்கி உடனே அவர் யோவ் தராம போயிடமாட்டேன், நீ முதல்ல உள்ளே போ விரட்டினார். நான் எதுவும் பேசாமல் நான்கைந்து பேரை இடித்துக்கொண்டு முன்னே சென்றேன். பாக்கி பணம் வரவேண்டுமே.

காந்திபுரம் வரை கூட்டம் இருந்தது. எனக்கு நடத்துனர் பாக்கி தரவேண்டுமே என்ற கவலையிலேயே பிரயாணம் முடிந்தது. நடத்துனரிடம் சென்று பாக்கி என்றேன். பொறுங்க சார் எல்லாரும் இறங்கறாங்கல்ல, தர்றேன் என்றவர் அதற்குள் ஏறுவதற்கு முண்டியடித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து கத்தினார். எல்லாரும் இறங்கன் பின்னால ஏறுனா போதும். எனக்கு சந்தேகமாகிவிட்டது. இந்த ஆள் நம்மை ஏமாற்றுகிறான். விடக்கூடாது என்று பக்கத்திலேயே நின்று கொண்டேன். கூட்டம் அனைத்தும் இறங்கி கீழே நின்றிருந்த அனைவரும் மேலேறி உட்கார்ந்துவிட்டனர்.. நடத்துனர் மெல்ல என்னிடம் இநதாங்க உங்க பாக்கி என்று பணத்தை எண்ணி கொடுத்தார். பின் உங்க சட்டைப்பையில பணம் ஏதாவது வச்சிருக்கீங்களா? என்று கேட்டார்.

எனக்கு பகீரென்றது இவருக்கு எப்படித் தெரியும்? பணம் ரூ 7500/- உள் சட்டைப்பையில் வைத்திருந்தேன். தொட்டுப்பார்த்தேன். இருந்தது. கேள்விக்குறியுடன் அவரைப்பார்க்க உங்க பின்னாடி ஒருத்தன் உங்க சட்டைப்பையில கைவிட முயற்சி பண்ணிக்கிட்டிருந்தான். அதனாலதான் பாக்கிப்பணம் உங்களுக்கு உடனே தரலை, அதனால எங்கிட்ட பாக்கி வாங்கணுமேன்னு, நீங்க உஷாராவே நின்னுகிட்டிருந்தீங்க. அப்புறம் நான் சத்தம் போட்ட உடனே உள்ளே போனிங்க அதனால அவன் பணம் எடுக்க முடியல்ல, அதுவுமில்லாம நான் கடைசியில ஏன் பணம் கொடுத்தேன்னா அவன் கீழே இறங்கி உங்களுக்காக வெயிட் பண்ணிக் கிட்டிருந்தான். அவன் அங்க கூட்டமா போற பஸ்ஸுல ஏறிட்டான், நீங்க போகலாம் என்றார்.

நான் கண்கலங்கி அவரின் கைகுலுக்கி நன்றி சொன்னேன். எனக்கு நடத்துனர்களிடம் தனி மரியாதை இப்போது ஏற்பட்டது.

Print Friendly, PDF & Email

விடியல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2023

சோதனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2023

யார் முதல்வன்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)