அவன் நடந்து கொண்டிருக்கிறான்…… அவன் எதையோ தேடுகிறான்…. கூட்டம் தாறுமாறாக வருவதும் போவதுமாக…. அந்த சாலை முழுக்க மனித தலைகள்… தானாக மிதந்து செல்வது போல கானலின் காட்சி மினு மினுக்கிறது…
கோவையில்… முக்கிய சாலை…. ஒன்றில்… நடக்கிறான்….
அந்த சாலை தாண்டி.. அடுத்த சாலைக்குள் நுழைகிறான்.. நடை கூடுகிறது.. வியர்த்து ஒழுகுகிறது…
அங்கும் தேடுகிறான்……பதட்டமாக காணப் படுகிறான்….. நடை இன்னும் கூடுகிறது….
பக்கத்தில் இருக்கும் சாலையின் குறுக்கு வழியில் செல்கிறான்…வேக வேகமாய் நடக்கிறான்… சுற்றி சுற்றி பார்த்துக் கொள்கிறான்.. மக்கள் யாரும் யாரையும் கவனிக்காமல் போவதும்….வருவதும்….. நிற்பதும்……. அது ஒரு மனிதக் காடென நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது…
அவன் தேடிக் கொண்டே நடக்கிறான்…. தேட தேட நடக்கிறான்.. நடக்க நடக்க தேடுகிறான்… அவன் கண்கள் அலை பாய்கிறது…உடல் மொழியில் அவன் மெல்ல நடுங்கும் மாற்றங்களை சிரமப்பட்டு சுமக்கிறான்…….. புதிதாக திருடியவன் போல… அவன் மூளை பிறழ்வது நடையில்… வெளிப்படுகிறது…. நடந்தவன்.. அந்த சாலையின் முடிவுக்கு வந்து அதைத் தொட்ட மாதிரி இருக்கும் அடுத்த சாலையின் முகப்பில் நுழைந்து மீண்டும் அதே போல தேடிக் கொண்டே நடக்கிறான்…. மக்களின் மௌனம்… வாகனங்களின் இரைச்சல்……என… அது ஒரு தீரா தவமென கலைந்து கொண்டே இருக்கிறது…
மனிதர்களின் வேகம்… தூரம்…….. தீர்ந்தபாடில்லை… அவன் ஒரு புதிரைப் போல நகர்ந்து கொண்டே இருக்கிறான்.. அவன் உடல் தளர்ந்தே விட்டது… முகத்தில் அப்படி ஒரு கோபம்… வந்து வந்து போய்க் கொண்டிருக்கிறது…
அடுத்த சாலைக்கு வந்து விட்ட நொடியில் அவன் முகம் அவனையுமறியாமல் மெல்ல பிரகாஷமாகிறது….. தவிப்பு அடங்கி விட்ட ஓர் உணர்வு அவன் உடலில் பரவுகிறது.. மெல்ல பார்வையை சுற்றும் முற்றும் பார்த்தவன் … சட்டென வேகமெடுக்கிறான்…ஓட்டமும் நடையுமாக அவன் அந்த கட்டண கழிப்பறைக்குள் காசைக் கொடுத்தபடி ஓடுகிறான்…
கழிப்பறை… தன் திறந்த முகத்தில் ஈயாட பார்த்துக் கொண்டே இருக்கிறது…
கண நேரத்தில் வெளியே ஓடி வருகிறான்…..வந்தவன்…. முகம் சுழித்த வடிவத்தோடு.. அங்கும் இங்கும் பார்த்து விட்டு.. வரவழைத்துக் கொண்ட துணிச்சலில்… கழிப்பறைக்கு பக்கத்தில் இருக்கும்.. சாக்கடையில் சிறுநீர் கழிக்கத் துவங்குகிறான்…கடுக் கோபத்தின் உடல் மொழியோடு……
நகரத்தின் கடைசிக் கதவும் திறந்து தான் கிடக்கிறது…