(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஓங்காரரீ! ரீங்காரீ! பயங்கரீ! சங்கரீ!
உமையுமானவன் நீயே!
பாங்காக என் பூஜை
தனை ஏற்று வந்திடுவாய்,
பரிபூரணானந்தவல்லீ!
தேன் பாகுடன் நல்ல
தெள்ளமுது படைத்தேன்,
தேவியே! சரணமம்மா!
வீண் தாமதம் வேண்டாம்.
வேண்டினேன் வந்தருள்வாய்,
வீரகுணவல்லி, தாயே!
உடுக்கையும் சிலம்பும் உருக்கமான பாடலொலியும், கேட்டு. ‘பக்தர்கள்’ கூடினர், ஊர்க்கோடியில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் உலகம்மை சன்னதியில்.
நீண்ட நாட்களாக இப்படி ஒரு பூஜை செய்யப்படாததால், சோர்வடைந்திருந்த பூஜாரி, அன்று தன் திறமை அவ்வளவும் காட்டி, ஊர் மக்களையும். பூஜையைக் காண வெளியூர்களிலிருந்து வரும் மக்களையும் பரவசப்படுத்த வேண்டும் என்று தீர்மானித்து, பூஜைக்கு நாலைந்து நாட்களுக்கு முன்பிருந்தே பாடல்களை நினைவிற்குக் கொண்டு வருவதும், சிலம்பு போட்டுப் பார்த்துக் கொள்வதும், ஆனந்தக் கூத்தாடிப் பார்ப்பதுமாக இருந்து வந்தான்.
உலகம்மை கோயிலுக்கு விசேஷமான அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஊர்மக்களில், வேண்டுதல் செய்து கொண்டவர்கள், விதவிதமான படையலிட்டுப் பூஜை செய்தனர். பெண்கள் கூட்டம் ஏராளம். பேச்சியம்மாள் அங்கு வந்ததும். உடுக்கை அடிக்கும் பூஜாரிகூட ஒரு விநாடி, தன் வேலையை நிறுத்திக் கொண்டு, அந்த அம்மையைப் பார்த்தான். மற்றப் பெண்களெல்லாம், பேச்சியம்மாளை வியப்புடன் பார்த்தனர். தெரிந்தவர்கள், பேசினர் – தெரியாதவர்கள்கூட, பேச்சியின் பக்கம் சென்று பார்வையிட்டனர். பேச்சியம்மை வந்ததும் பூஜையைக்கூட மறந்து விட்டனர் – உலகம்மையைக் கூடத்தான்! பேச்சியம்மாள், தன் வீரதீரத்தால், கணவன் உயிரையே காப்பாற்றி, பெரும் புகழ் பெற்ற மாதரசி. எப்படித்தான் தைரியம் வந்ததோ! என்று பலர் வியந்தனர். எல்லாம் அவளுடைய மாங்கல்ய பலம் என்று சிலர் கூறினர். அரிவாள், நல்ல கூர்! ஒரு வெட்டிலே தலையையே கீழே சாய்த்துவிடக் கூடியதாம்! என்று விளக்கமளித்தனர் வேறு சிலர்.
”பேச்சி! நடந்த கதையைத்தான் கொஞ்சம் விளங்கச் சொல்லேன்” – என்று கேட்டாள் முத்தம்மை. “முனியம்மாவிடம் நேற்றே விவரமாகச் சொன்னேனே, எத்தனை முறைதான் சொல்லுவது, எனக்கு வாய்கூட வலிக்குது போ!” என்று பேச்சி கூறினால், விடுகிறார்களா, வற்புறுத்திப் பேச வைக்கிறார்கள்.
பேச்சியம்மாளை, விழுங்கி விடுவது போலப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணரசி, அருகில் வந்து, அமர்ந்தது கண்டு, பேச்சி “யாரம்மா நீ! இந்த ஊரல்ல!” என்று கேட்டாள். ”ஆமாம்மா! வெளி ஊர்!” என்று விசாரத்துடன் கூறினாள். புதியவன். “இங்கே யார் வீட்டுக்கு வந்திருக்கிறே?” என்று கேட்டாள், பேச்சி.
“உலகம்மா பூஜையைப் பார்க்கத்தான்” என்று கூறிவிட்டு, “உன் கதையையும் கேட்டுவிட்டுப் போகத்தான் வந்தேன்” என்று தொடர்ந்து பேசி, பேச்சியம்மாளைப் பேசத் தூண்டினாள். “பூஜை நடக்கட்டும், வெளியே குளத்தங்கரைப் பக்கமாகச் சென்று பேசுவோம், வா”, என்று கூறி, பேச்சியம்மாள் புதிய மாதரசியை அழைத்துச் சென்றாள்.
யாரோ பெரிய இடத்துப் பொம்பளை போலிருக்கு. மேனி அழகும் நடையுடையும் சொகுசாக வாழ்கிறவளென்று காட்டுகிறது. கொடுத்து வைத்தவள். வரகரிசியைக் கொதிக் வைத்துக் குடித்துவிட்டு, வயல் வேலை பார்க்கிற நம்மைப்போல இருந்தால்,உடலிலே இந்த மினு மினுப்பும் பளபளப்பும் எப்படி இருக்கும். பெரிய இடத்து அம்மா! பெரியபண்ணைக் குடும்பமாக இருக்கும் என்று பேச்சி எண்ணிக் கொண்டு, மரியாதையாக நடந்து கொண்டாள்.
“உம் பேரு என்னம்மா?” என்று பேச்சி கேட்க, “பரமேஸ்வரி! கன்னி என்றும் சொல்வார்கள்!” என்று புதியவள் விசாரத்துடன் பதில் சொன்னாள்.
“பிரமாதமான காரியம் ஒன்றும் செய்துவிடவில்லையம்மா கன்னிம்மாதானே உம் பேரு கன்னிம்மா! எங்க வீட்டுக்காரரும் நானும், பங்காளி வீட்டுக்குப் போயிருந்தோம், ஒரு விசேஷத் துக்காக. திரும்பி வருகிறபோது, எவனோ ஒரு படுபாவி – பேரு என்னமோ சண்முகமாம், மோப்பம் பிடிச்சுகிட்டு எங்களைத் தொடர்ந்து இருக்கறான் போலிருக்கு, எங்களுக்குத் தெரியாது. எங்களவர் மடியிலே கொஞ்சம் பணம் இருந்தது. அதைத்தான் அந்தப் படுபாவிப்பய மோப்பம் பிடிச்சுட்டான். ஊர்க்கதை பேசிகிட்டே நாங்க வந்தோம் ‘யார்டா அது! டேய்! நில்லு! ஓடினே, தலையைச் சீவிடுவேன்னு, கூச்சலிட்டுக் கொண்டு ஓடிவந்தான் அந்த ஆளு “பேச்சி! வந்தது ஆபத்து’ என்று சொல்லிக்கிட்டே, வந்த ஆளை மடக்கிப் பிடிக்க வழி என்னான்னு எங்களவர் யோசிச்சார். படுபாவிப் பய, தடியாலே, ஒங்கி அவர் மண்டையிலே போட்டான் – ஐயயோ! பேச்சின்னு கூவினாரு, எம் புருஷன். என் குலையே நடுநடுங்கிப் போச்சி. இரத்தம் குபுகுபுன்னு கிளம்பிடிச்சி. படுபாவிப் பய, அவர் மடியிலிருக்கிற பணத்தைப் பறிக்கறான். பார்த்தேன். சே! இனி நம்ம உயிரு என்ன வெல்லமான்னு தோணிச்சி, அவன் பெரிய சூரப் புலியாத்தான் இருக்கட்டும், நம்ம உயிர் போகிறதுக்கு முன்னே அவனை ஒழிக்க நம்மாலானதைச் செய்தாகணும்ணு தோணிச்சி. இப்ப, நிதானமாச் சொல்றேண்டியம்மா,அப்ப, படபடன்னு மனசு அடிச்சுக்குது, ஐயோ! அடபாவி! கொலை பாதகா! அப்படி இப்படின்னுதான், கூச்சலிட்டேன். என் எதிரிலேயே, என் புருஷன் மண்டையைப் பிளந்தா,எனக்கு, எம்மாம் ஆவேசம் வரும். பத்ரகாளிபோல ஆயிட்டேன். ஒரு கூச்சல் போட்டேன் பாரு, கன்னியம்மா, இப்ப நினைச்சுப் பார்த்தா எனக்குப் பயமாத்தான் இருக்கு. எடுத்தேன் அரிவாளை, போட்டேன். அந்தப் படுபாவி கழுத்தைப் பார்த்து, அடி பாவின்னு அலறினான், கழுத்து கீழே அறுந்து விழவில்லை, ஆனா, ஆசாமி கீழே விழுந்தான் வெட்டு சாதாரணமானதா வீராவேசமானவளா இருந்தனே, அப்போ! கெடுவான் கேடு நினைப்பான்! ஒரு பொம்பளைதானே என்று எண்ணிக் கிட்டான், ஏமாளி. ஆனால், கன்னியம்மா! எப்படித்தான் எனக்கு அந்தத் துணிச்சல் வந்துதோ தெரியலே, போ! படுபாவிப்பய மகன், ஆஸ்பத்திரியிலே படுத்துக்கிட்டுக் கிடக்கறானாம். எம் புருஷன், என்னைக் கட்டித் தழுவிக்கிட்டு, கண்ணேங்கறாரு. கண்ணாட்டிங்கறாரு, சிங்க்குட்டிங்கிறாரு, ஒரே சந்தோஷம். எனக்கு ஆனந்தம் என் தாலி தப்பிச்சின்னு. ஊரே திரண்டுவந்து உபசாரம் பேசுது! பேச்சியுடைய தைரியத்தைப் பாருங்கடி. பொம்பளைன்னு இருந்தா அப்படி இருக்கவேனும் புருஷன் உயிரைக் காப்பாத்தின புண்யவதி அவ, அப்படி இப்படின்னு எல்லோரும் புகழறாங்க. எனக்கு ஒரே வெட்கம். ஆனா, நான் மட்டும், அந்த விநாடி, அரிவாளைத் தூக்கி ஒரு வெட்டுப் போடாமெ இருந்தா,எம் புருஷனைக் கொன்னுபோட்டிருப்பான், அந்தப் படுபாவி. உலகாத்தா புண்யத்தாலே, எனக்குத் தைரியம் வந்தது, என் மஞ்சள் குங்குமம் நிலைச்சுது – இது தாண்டியம்மா, என்கதை” – என்று பேச்சியம்மாள் கூறி முடித்தாள்.
”உனக்குப் பயமே தோணலியா, பேச்சி”
“தோணாமே இருக்குமா ஆனா என்ன செய்றது ஆபத்தான சமயம் பயந்தா ஆகுமா?”
“பயந்து பயந்துதான், நான் பாழாப் போனேன்”
“உனக்கும் ஏதாச்சும் ஆபத்தா? கன்னிம்மா! ஏன் கண்ணைத் துடைக்கிறே? என்னா நடந்தது, சொல்லேன்”
“சொல்ல வெட்கமா இருக்குது பேச்சி! உன்னோட தைரியத்திலே ஆயிரத்திலே ஒரு பங்கு இருந்தாக்கூட போதும். எனக்கு இல்லை, அந்தத் தைரியம். படுபாவிப்பய.”
”யாரு? என்ன செய்தான்?”
“என் வீட்டிலே புகுந்து பெட்டியை உடைத்து, பொருளை எல்லம் களவாடிகிட்டுப் போயிட்டான். என் தலைக்கு பொன்னாலே செய்த முடி உண்டு, அதை எடுத்துகிட்டான். ரொக்கம், நகை நட்டு எல்லாம் போச்சி”
“வீட்டிலே யார் இருந்தது?”
“நான் மட்டும்தான்”
“திருட்டுப் பய வந்தது உனக்குத் தெரியலையா? ஏன் கூச்சல் போட்டு ஊரையே, எழுப்பி விட்டிருக்கலாமே”
“கூச்சல் போடக்கூடாது பேச்சி! கூச்சல் போடக் கூடாது!”
“ஏன்! கூச்சல் போட்டா படுபாவிப் பய, கொன்று போட்டுடுவான்னு பயமா?”
“பைத்யக்காரப் பொண்ணுடி நீ! பேச்சியம்மா! நான் யாருன்னு தெரியாததாலே இப்படிப் பேசறே. ஊரிலே களவு, கொலை அடிதடி, சண்டை இதெல்லாம் நேரிடாதபடி தடுக்க போலீசு இருக்கேல்லோ, அந்தப் போலீசு தலைவரையே ஒரு காவாலிப்பய அடிச்சா, அவர்கூச்சல்போட்டு, ஊராரை உதவிக்குக் கூப்பிட்டா, அவரோட கௌரவம் என்ன ஆகும்? அதுபோல, என் நிலை உனக்குப் புரியாது. நான்தான் அந்த ஊருக்கே முதன்மை. யாருக்கு என்ன கஷ்டம் வந்தாலும் ஆபத்து வந்தாலும், என்னிடம்தான் வந்து சொல்லுவாங்க. என்னோட தயவு இருந்தா போதும்; சகலமும் கிடைக்கும்னு நம்பி வாழறாங்க. உங்க ஊரிலே உலகாத்தா இல்லையா எவ்வளவு பூஜை நடக்குது, எவ்வளவு செல்வாக்கு, அது போலன்னு வைத்துக் கொள்ளேன். நான், அந்த ஊருக்கு உலகாத்தா!”
“நீ பேசறது விசித்திரமா இருக்குடிம்மா! ஆமாம் கள்ளன் வந்தபோது நீ தூங்கிவிட்டயா?”
“இல்லையே! ஊர் உலகம் தூங்கிக் கொண்டு இருக்கற போது, விழித்துக் கொண்டிருந்து மக்களைக் காப்பாற்றுகிற நான், தூங்க முடியுமா?”
“விழித்துக் கொண்டிருக்கச்சேயா, திருடு நடந்தது – அங்கே. கல்லு கட்டை எதுவும் கிடைக்கலையா – தூக்கி வீசினா திருட்டுப்பய, ஓடிடுவானே”
“சூலம்கூட இருந்தது”
”சூலமா! எடுத்து அவன் மார்பிலே குத்தலாமே”
“குத்தலாம்! ஆனா நான் என்ன, பேச்சியம்மாளா?”
“எந்த அம்மாவா இருந்தா என்ன? நம்ம பொருளைக் களவாடறான் நம்ம வீடு விழிச்சுக்கிட்டும் இருக்கறே சூலமும் இருக்குது என்கிறே என் சும்மா இருந்தே? அது என்னடிம்மா, அப்படிப்பட்ட பயம்.”
“பயத்தை எல்லாம் போக்கும் பரமேஸ்வரின்னு, என்னை ஊரார் புகழ்வார்கள்!”
“இது, அதைவிட வேடிக்கையா இருக்கு. உள்ளே நுழைஞ்சி பொருளைக் களவாடறவனைப் பிடிக்க முடியாமல்,நீ, பயந்து கொண்டு இருக்கறே. உன்னைப் புகழறாங்களாம்! வேடிக்கையான ஊருதான்! என்ன பேரு, அந்த ஊருக்கு?”
“ஆத்தூரு – இந்த ஊர்ப் பேர் என்ன?”
“பத்மநாப மங்கலம்னு இந்த ஊருக்குப் பேரு. ஊர்பேரு கிடக்கட்டும். நீ ஏன் கல்லாட்டமா இருந்துவிட்டே, அதைச் சொல்லு”
“கல்லாத்தான் இருக்கறேன்”
“நல்லாத்தான் இருக்கு உன் கதையோட வேடிக்கை அப்புறம் என்னாதான் நடந்தது”
“போலீசார், துப்பு விசாரித்துக் கொண்டு இருக்கறாங்க”
“என்னோட தைரியத்தைப் போலீசாரு ரொம்பப் புகழ்ந்து பேசினாங்க”
“போலீசாரு மட்டுமா! நானே உன்னோட தைரியத்தைப் பார்த்து புகழத்தான் வேண்டியிருக்கு. பேச்சியம்மா! உன் போன்ற வீரப் பெண்மணிகளைத்தான் மக்கள் பாராட்ட வேணும், புகழவேணும். உன் போன்ற பெண்மணிகளோட கதையைத்தான் ஊரார் தெரிந்து வைத்துக் கொள்ள வேணும். அதை விட்டுவிட்டு, களவாடியவனைக் கூடப் பிடிக்க முடியாத என் போன்றவர்களை, கொண்டாடுவதும், பூஜை போட்டுப் புகழ் பாடுவதும், காணிக்கை செலுத்துவதும், கற்பூரம் கொளுத்தி வைச்சி, தாயே! தயாபரி! பரமேஸ்வரி! சகலலோக நாயகி! இப்படின்னு அர்ச்சனை செய்யறதும், உப்புக்கும் உதவப் போறதில்லை.”
”நீ பேசறது, எனக்கு ஒண்ணும் புரியலையே – உனக்குப் பூஜை போடறாங்களா”
”ஆமாம் – எனக்குத்தான்”
“இது என்ன பைத்யக்காரத்தனம்!”
“ரொம்பகாலமாக இருந்து வருகிற பைத்யக்காரத்தனம், பேச்சியம்மா! உன் புருஷனோட உயிரைக் காப்பாத்தற வீர தீரம் உன்னிடம் இருந்தது எனக்கோ, ஒரு கள்ளனைப் பிடிக்கும் தைரியம் இல்லை ஆனா, நான் யார் தெரியுமா…”
“யாரு….?”
”பேச்சி! நான்தான், கன்னிகா பரமேஸ்வரி என்கிற தெய்வம்.”
“என்னது – தெய்வமா?”
“ஆமாம்! தெய்வமேதான்!”
இந்த உரையாடல் முடிந்ததும், பேச்சியம்மாளிடம் பேசிக் கொண்டிருந்த மாதரசி மாயமாக மறைந்து விட்டாள்.
“என்னடா வீரா! உன் புளுகு மூட்டையை, என்னிடமே காட்ட ஆரம்பித்து விட்டாயே” என்று கேட்டான்.
“இல்லை, பரதா! இது முழுவதும் பொய் அல்ல!” என்றான் வீரன்.
“அப்படியானால், கன்னிகா பரமேஸ்வரி எனும் தேவதை பேச்சியம்மாளிடம் பேசி, தன் வேதனையையும் வெட்கத்தையும் எடுத்துக் கூறினாள் என்பதை நானும் நாடும் நம்ப வேண்டும்! என்ன, அப்படித்தானே!” என்று நான் கேட்டேன்.
“எனக்கென்ன, ஜடாமுடி இருக்கிறதா, திருநீறாவது உண்டா, நான் புளுகு சொல்லி. ‘நம்பச் சொன்னால்’ நீயும் இந்த நாடும் நம்புவதற்கு. பரதா! இது கற்பனைதான் ஆனால் உண்மையும் கலந்து” என்றான் வீரன்.
”என்ன உண்மை, நீ சொல்லும் அபத்தத்திலே புகுந்து கொண்டிருக்கிறது?” என்று நான் குத்தலாகக் கேட்டேன், அவனோ, நம்பிக்கையுடன், என்னிடம் ஒரு தினத்தாள் தந்தான் கோடிட்ட செய்திகளைக் காட்டினான். நான் கண்ட செய்திகள் இவை.
முதல் செய்தி
பத்மநாபமங்கலம், செந்திலான் பண்ணைச் சேரியைச் சேர்ந்து முண்டக்குடும்பனும், அவரது மனைவி பேச்சியம்மாளும் பொட்டாலூரணி கிராமத்திலுள்ள ஒரு உறவினரைப் பார்த்துவிட்டு 7ம் தேதியன்று தம் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். வரும் வழியில் சண்முக வேளாளர் என்பவர், திடீரென்று தோன்றி, முண்டக்குடும்பனை அடித்து, அவர் மடியிலிருந்த பணத்தை அபகரிக்க முயன்றதாகவும், அப்போது பேச்சியம்மாள் தன் கையிலிருந்த அரிவாளால் சண்முக வேளாளர் பிடரியில் அடித்து அவரைக் கீழே வீழ்த்தியதாகவும் தெரிகிறது. சண்முக வேளாளர் ஆஸ்பத்திரியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இரண்டாம் செய்தி
ஆத்தூர் ஸ்ரீகன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோயிலின் மூலஸ்தான கதவுச் சங்கிலிகளை வெட்டியும், பூட்டுகளை உடைத்தும் சில திருடர்கள் உள்ளே புகுந்து அம்மனின் கிரீடத்தை களவாடிச் சென்றதாகத் தெரிய வருகிறது. மேற்படி திருடர்கள் அடுத்த அறையின் பூட்டையும் கள்ளச்சாவி போட்டுத் திறந்து சில நகைகளையும் ரொக்கத்தையும் களவாடிக் கோயிலின் பின்புறமாக ஒடிவிட்டதாகவும் தெரிகிறது.
இதற்குமேல் நான் என்ன செய்ய முடியும்! எப்படி வீரன் தந்த இந்த உண்மை தழுவிய கற்பனையை உங்களிடம் தராமலிருக்க முடியும் எனவேதான் தந்திருக்கிறேன்.
– 18-7-1954, திராவிடநாடு.