”விடிந்தால் வயல் அறுவடைக்கு மெசினை இழுத்துக்கொண்டு செல்ல வேண்டும்” என்று தன் முன்னால் அடிபட்டு படுக்கையில் கிடந்த எழுத்தாளர் ’வசந்த நிலா’வின் ”எங்கே என் சுவாசங்கள்?” நாவலை தொடக்கத்தில் வாசித்துக் கொண்டிருக்கும் போது அவன் வலியின் முனகலில்,திரும்ப்பார்த்து புத்தகதை வைத்து விட்டு அவனுக்கு மருந்து கொடுக்க ஆரம்பித்தாள் நர்ஸ் அரசி.
’இவனை நான் எப்படி…. அப்படியே கழுத்தை நெரித்துக் கொன்று விடுவோமா?’ என்று கண்கள் சிவக்க கோபப்பட்டவள், ‘இவனோடு எப்படி நான்.. அதுவும் மூன்று ஆண்டுகள் வாழ்ந்தேன். ஆச்சரியமாக இருக்கிறது?’.
கண்களிலிருந்து கன்னத்தில் வழிந்த சூடான நீரை கைகுட்டை கொண்டு துடைத்துக்கொண்டாள்.
இரவு முக்கியமான மருத்துவர் வந்து பார்த்துவிட்டு இன்னும் சில மருந்துகளைக் கொடுக்க சொல்லிவிட்டுப் போக, அவள், அவனோடு யாரும் வந்திருக்கிறார்களா என்று பார்த்து விட்டு
யாரையும் காணாததால், அவளே போய் மருந்தகத்தில் பணம் கொடுத்து வாங்கி வந்து ஊசி போட்டு மருந்துகளை கொடுத்தாள்.
“சிஸ்டர் அரசி. இராத்திரி முழுவதும் பார்த்துக்கொள்ளுங்கள். காலையிலே யாராவது தெரிந்தவர்கள் வருகிறார்களா பார்க்கலாம்” என்று மருத்துவர் சொல்லி விட்டு, “ஆமாம். நீங்கள் காலையிலே டியூட்டிக்கு வந்திருப்பீங்களே… நைட் டியூட்டிக்கு நர்ஸ் யார்?” என்று கேட்டார்.
“சியாமளா சிஸ்டர் டாக்டர். அவர்களுக்கு உடம்பு சரியில்லை.”
”அப்படீண்ணா நீங்க ரோஸ் மேரியைக் கூப்பிட்டிருக்கலாமே”
“ஒண்ணும் பிரச்சினையில்லை. நான் கவனித்துக்கொள்கிறேன் டாக்டர்”
“சரி” என்று மருத்துவர் கிளம்பினார்.
வீட்டிலே பெண் பார்க்கும் படலத்திற்காக தடபுடலாக தயாரிப்பு நடந்து கொண்டிருந்தது.
அவன் ஆட்டோவிலிருந்து இறங்க கூடவே அவனுடைய அத்தையும் இறங்கினாள்.
அவள் அவனை முதலில் ஜன்னல் வழியாக பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது.
எனக்காக பிறந்தவன் இவன் என்று அப்போதே முடிவு செய்தாள்
திருமணம் முடிந்து அவன் பெரிய எழுத்தாளன் என்றும் “கொஞ்சம் அட்ஜ்ஸ்ட் பண்ணிப்போ” என்றும் அம்மா பெரியதாக அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தாள்
‘மூன்று நாளையிலே எனக்காக பிறந்தவன் இவனில்லை என்று புரிந்து விட, தினமும் மது போதையில் என்ன செய்கிறான் என்று அவனுக்கே புரியாமல்…
பெரிதாக மூச்சு விட்டாள். மூன்றாண்டுகள் வாழ்க்கையோடு போராடி, ‘அவள் அழகாக இல்லை’ என்று சொல்லி விட்டு வேறு யாரோ ஒரு பெண்ணோடு வாழ்ப்போய் விட்டான்.
நான்கைந்து ஆண்டுகள் ஓடி விட்டது. இப்போது… அதுவும் கைகாலெல்லாம் அடிபட்டு… முகமெல்லாம் இரத்த வெள்ளமாக..
அவன் நினைவு வர, “தண்ணி” என்றான். அவளைப்பார்த்து ஆச்சரியப்பட்டு “நீ… நீ.. அரசி” என்று சொல்லி விட்டு அவள் தண்ணீர் கொடுப்பதற்குள் திரும்பவும் மயங்கிப்போனான்.
அவள் தண்ணீர் கொடுத்து விட்டு… “ இவன் என் வாழ்க்கையை நாசமாக்கியவன். இப்போது நினைத்தாலும்.. கொன்று மறு உலகமனுப்பி விடலாம்” என்று ஒரு நிமிடம் வந்த நினைவை விரட்டி விட்டு, அவனுக்கு வேண்டியவைகளை செய்ய ஆரம்பித்தாள்.
இரவு தூக்கம் பல முறை கண்ணை அழுத்த, அவனைக் கவனிக்க வேண்டும் என்ற காரணத்தால் அங்குமிங்கும் அலைய ஆரம்பித்தாள்.
காலையில் அழுது கொண்டே வந்த அந்த பெண்ணும் அவளோடு அழுது கொண்டு வந்த பெண் குழந்தையையும் பார்த்து பரிதாபமாக இருந்தது.
அவளை அழ வேண்டாம் என்று சொல்லித்தேற்றி, “நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அனுப்பி விட்டு மாலையில் கொஞ்சம் தூக்கம் கண்ணை அழுத்த… மருத்துவர் ராஜ் “சிஸ்டர். சியாமா இருக்காங்களே… நீங்க வீட்டுக்குப் போகலாமே” என்றார்.
”இல்லை. டாக்டர். நான் இருந்து பார்த்துக் கொள்கிறேன்” என்றாள்.
இரு முறை விழிப்பு வந்து எழுந்த வசந்த நிலா, “உனக்குத்தூக்கம் வரவில்லையா?’” என்றான் கொஞ்சம் பயத்தோடு.
அவள் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு“பயப்பட்டதீங்க… தூங்குங்கள்” என்று சொல்லி விட்டு அவனுடைய கட்டுகளுக்கு மருந்து போட ஆரம்பித்தாள்.
சிஸ்டர் சியாமளா வந்து, “யாராவது தெரிந்தவர்களா?” என்று கேட்க, “இல்லை” என்று சிரித்தவள் தூக்கம் வராமலிருக்க தண்ணீரை எடுத்துக்குடித்தாள்.