தேற்றுவார் யார்?

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 1, 2021
பார்வையிட்டோர்: 3,193 
 
 

(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பணத்தை வீணாக்காதீர்கள்; “நேஷனல் சேவிங்ஸ் ‘சர்டிபிகேட்’டுகளை வாங்கி, பத்து ரூபாய்க்குப் பதினைந்து ரூபாயாகப் பத்து வருடங்களுக்குப் பிறகு பெற்றுக் கொள்ளுங்கள்!” என்னும் சர்க்கார் விளம்பரத்தைப் படிக்கும் போதெல்லாம் எங்கள் ஊர் உத்தமநாத நாயுடுகாருக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வரும். “ஆஹா! ஏமி தயாளச் சித்த! எந்த பரோபகாரமு!” என்று அவர் தமக்குள் எண்ணிக் கொள்வார்.

பத்து ரூபாய்க்குப் பத்து வருடங்களில் அறுநூறு ரூபாய் வட்டி வாங்கும் அவருக்கு, சர்க்கார் கொடுக்கும் ஐந்து ரூபாய் வட்டியை நினைத்தால் சிரிக்காமலிருக்க முடியுமா?

உலகத்துக்கெல்லாம் ஒரு காலண்டர் என்றால், எங்கள் ஊர் உத்தமநாத நாயுடுகாருக்கு மட்டும் தனிக் காலண்டர்! –அவருடைய காலண்டரில் வருஷம் பன்னிரண்டு மாதமும் முப்பத்திரண்டு நாட்கள்தான்; கூடுதலோ குறைச்சலோ ஒன்றும் கிடையவே கிடையாது!

பொழுது விடிந்தால் இந்த அங்காடிக் கூடைக்காரர்கள் இருக்கிறார்களே, அவர்கள் வந்து நாயுடுகாருவிள் வீட்டை வெல்லத்தில் ஈ மொய்ப்பதுபோல் மொய்த்துக் கொள்ளுவார்கள். அன்றைக்குத் தாங்கள் செய்யப் போகும் வியாபாரத்துக்கு முதலாக அவரிடமிருந்து ஆளுக்கு ஐந்து, பத்து என்று வாங்கிக் கொண்டு போவார்கள். சாயந்திரமானால் ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு போனவர்கள், ரூபாய்க்குக் காலணா வீதம் ஒன்றே காலணா வட்டியும் அசலில் இரண்டரை அணாவுமாகச் சேர்த்து மூன்றே முக்காலணா கொண்டு வந்து கொடுத்துவிட வேண்டும். பத்து ரூபாய் வாங்கியவர்கள் வட்டி இரண்டரை அணாவும் அசலில் ஐந்தணாவுமாகச் சேர்த்து ஏழரை அணா கொண்டு வந்து கொடுத்துவிட வேண்டும். முப்பத்திரண்டு நாட்கள் இவ்வாறு கொடுத்து வாங்கும் கடனை அடைத்த பிறகு மீண்டும் வந்து வழக்கம்போல் தங்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொண்டு போகலாம். தினசரி தங்கள் வியாபாரத்தில் அவர்களுக்கு லாபம் வந்தாலும் சரி, வராமல் போனாலும் சரி– மேற்கூறிய சட்ட திட்டங்களை ஒருவரும்– ஒரு நாளும் மீறவே கூடாது. தவறினால் தலை போனாலும் பரவாயில்லையே– ‘கவலை விட்டது!’ என்று அந்த அங்காடிக் கூடைக்காரர்கள் நினைத்துக் கொள்வதற்குக் கூட வழியில்லாமல் தரித்திரம் அவர்களை விட்டுத் தொலைத்துவிடும் பிழைப்பே போய்விட்டால்..? பிச்சை எடுப்பதைத் தவிர வேறு வழி?


அன்று அம்மாயி வழக்கத்துக்கு விரோதமாகக் கொஞ்சம் நேரம் கழித்து வந்தாள். எப்பொழுது போனாலும் தர்மராஜா இல்லை என்று சொல்லமாட்டார் என்ற நம்பிக்கை அவளுக்கு!– ஆமாம், நாயுடுகாருவிடம் கடன் வாங்கும் அங்காடிக் கூடைக்காரர்கள் அத்தனை பேரும் அவரை ‘தர்மராஜா’ என்றுதான் மனமார வாயார வாழ்த்தி வந்தனர்.

‘தர்மராஜா’ என்பதற்காக எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும் நாயுடுகாரு சும்மா இருக்க முடியுமா, என்ன? சரக்கு மோசமாயிருந்தாலும் செட்டியார் மிடுக்காக இருக்க வேண்டாமா? ஆகவே “ஏன் இவ்வளவு நேரம்? நீ வரவில்லை என்பதற்காக நான் காத்துக் கொண்டிருக்க வேண்டுமோ?” என்று அம்மாயியைக் கொஞ்சம் அதட்டிக் கேட்டார்.

“பக்கத்து வீட்டுக்காரம்மா எங்கேயோ போயிருந்தாங்க, சாமி! அவங்க வந்ததும் என் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டுவிட்டு வரலாம்னு காத்துக்கிட்டு இருந்தேன். அதனாலே கொஞ்சம் நேரமாயிடுச்சிங்க!” என்றாள் அம்மாயி கையைப் பிசைந்து கொண்டே.

“உன் குழந்தைகளை யாராவது பார்த்துக் கொள்ளாவிட்டால் அவர்களைப் பருந்து வந்து தூக்கிக் கொண்டு போய் விடுமாக்கும்! இவ்வளவு நேரம் கழித்து வந்திருக்கிறாயே, இனிமேல் என்னத்தை வாங்கி விற்று எப்பொழுது ‘தண்டல்’ கொண்டு வந்து கட்டுவது?– உங்கள் பேரில் குற்றம் சொல்லிப் பிரயோசனம் இல்லை; என்னைச் சொல்ல வேண்டும். நல்லதுக்குக் காலமா, இது? போனால் போகிறதென்று புண்ணியத்துக்கு என் வீட்டுப் பணத்தைக் கொடுத்தால், அதை நேரத்தோடு வந்து வாங்கிக் கொண்டு போகக் கூடாதோ?”

‘அட, நீங்கள் பணம் கொடுப்பதில் புண்ணியம் வேறு இருக்கிறதா!’ என்று அம்மாயி கொஞ்சமாவது ஆச்சரியப் பட வேண்டுமே? இல்லவே இல்லை. அதற்குப் பதிலாக, “நான் எம்மா நேரம் கழிச்சு வந்தா உங்களுக்கு என்ன சாமி? எப்படியாச்சும் சாயந்திரம் உங்களுக்குத் ‘தண்டல்’ வந்து சேர்ந்துவிடும்!’ என்றாள் அவள்.

“என்ன, ஒரு சொல்லு சொன்னா ஒரேயடியா இப்படிக் கோவிச்சுக்கிறயே? யாருக்காக நீ சாயந்திரத்துக்குள்ளே ‘தண்டல்’ கட்டப் போறே? உன் அப்பனுக்கு அழுது கொண்டு கட்ட வேணாம்?”

அம்மாயிக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. “என்னை இன்னொரு தரம் இப்படியெல்லாம் சொல்லாதீங்க, சாமி! உங்கக்கிட்ட நான் ஒரு அஞ்சு ரூவா கடன் வாங்கறதுக்காவ நீங்க வேறே எனக்கு அப்பாவா இருக்க வேண்டியதில்லே!” என்றாள் அழுகையும் ஆத்திரமும் கலந்த குரலில்.

நாயுடுகாருக்குச் ‘சுருக்’கென்றது. ஆனாலும் அதை அவர் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. இந்தச் சின்ன விஷயத்துக்காக அவர் ஒரு வாடிக்கைக்காரியை இழந்துவிட முடியுமா? ஆகவே மேலுக்குச் சிரித்துக் கொண்டே, “அதற்குச் சொல்லவில்லை, அம்மாயி! சும்மா நீ எப்படி இருக்கிறேன்னு பார்த்தேன்! அடே யப்பா! நீ இவ்வளவு ரோசக்காரி என்று எனக்கு இப்போதுதான் தெரிந்தது!” என்று சொல்லிக் கொண்டே ஐந்து ரூபாயை எடுத்து அவளிடம் கொடுத்தார்.

அதை அடக்க ஒடுக்கத்துடன் வாங்கி முந்தானையில் முடிந்து கொண்டு, “நான் போய்விட்டு வரேன், சாமி!” என்று அம்மாயி தலைகுனிந்த வண்ணம் போய்விட்டாள்.


அன்று கிடங்குத் தெருவிலிருந்த எல்லாக் கடைகளிலும் ஒரே மாம்பழக் குவியலாயிருந்தது. என்னதான் பழங்கள் வந்து குவிந்திருந்தாலும் விலை என்னமோ ஏகக் கிராக்கிதான். நல்ல பழங்கள் நூறு பத்து ரூபாய்க்குக் குறையவில்லை. கொஞ்சம் வெம்பியும் அழுகியும் இருந்த பழங்கள் நூறு ஐந்து ரூபாய்க்குக் கிடைத்தன.

“என்னத்தை வாங்கி விற்றால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?” என்ற சிந்தனையில் அம்மாயி நெடு நேரமாக ஈடுபட்டிருந்தாள். கடைசியாக, நூறு ஐந்து ரூபாய்க்கு விற்கும் அந்த அழுகல் மாம்பழங்களின் மேல்தான் அவள் கவனம் சென்றது. கைவசம் அப்போது இருந்ததும் ஐந்து ரூபாய்தானே? ஆகவே அதற்குமேல் அவளுடைய யோசனை ஓடவில்லை.

அந்தப் பழத்தை வாங்கி ஒன்று ஓரணா என்று விற்றாலும் ஒன்றேகால் ரூபாய் லாபம் கிடைக்கும். “அங்கே நிற்காதே; இங்கே உட்காராதே!” என்று அடிக்கடி வந்து மிரட்டும் போலீஸ்காரர்களுக்கு ‘நாலணா தண்டக் காசு’ அழுதாலும்கூட ஒரு ரூபாய் கட்டாயம் மிஞ்சும். ஊராரில் சிலர் தங்கள் குழந்தைகளுக்குப் பலூன் வாங்கிக் கொடுத்தாலும் கொடுத்துவிடுகிறார்கள், அதைப் பார்த்துவிட்டு நம் குழந்தைகளும் தங்களுக்குப் பலூன் வாங்கித் தர வேண்டும் என்று இரண்டு மூன்று நாட்களாய் ஒற்றைக் காலால் நின்று தொலைக்கின்றன. நம்முடைய நிலைமை அந்தக் குழந்தைகளுக்குத் தெரிகிறதா, என்ன? நாமும் எத்தனை நாளைக்குத்தான் அவற்றை ஏமாற்றிக்கொண்டு வருவது? இன்றைக்கு எப்படியாவது இரண்டணா கொடுத்து இரண்டு பலூன்களை வாங்கிக் கொண்டுபோய்க் குழந்தைகளிடம் கொடுத்துவிட வேண்டும். அப்புறம் பதினாலணா மீதி இருக்கும். அந்த ‘தர்மராஜா’ நாயுடுவுக்கு அசலில் இரண்டறையணாவும் வட்டி ஒன்றே காலணாவும் கொடுத்துவிட்டால் பத்தே காலணாதான் கடைசியில் மிச்சமாகும். அதிலும் வெற்றிலை பாக்கு, புகையிலைக்கு ஓரணா போனால் பாக்கி ஒன்பதே காலணாதான்!– இவ்வளவு போதாதா, ராத்திரி சாப்பாட்டுக்கு?– இப்படியெல்லாம் என்னவெல்லாமோ எண்ணித் தனக்குள் சமாதானம் செய்துகொண்டே அருகிலிருந்த ஒரு கடைக்காரனிடம் ஐந்து ரூபாய் நோட்டை நீட்டி, “ஐயா! இந்தப் பழத்தில் எனக்கு நூறு போடுங்க!” என்று சொல்லிக்கொண்டே கையோடு கொண்டு வந்திருந்த கூடையைக் கீழே வைத்தாள்.

உடனே அவன் கைக்கு ஐந்து பழங்களாக எடுத்து, “ஒண்ணு, ஒண்ணு, ஒண்ணு!…… ரெண்டு, ரெண்டு, ரெண்டு!” என்று ஏதோ ஒரு தினுசாக ராகம் இழுத்துப் பாடிய வண்ணம் எண்ணிப் போட்டான். பதினெட்டாவது ‘கை’ போடும்போதே, தினசரி எத்தனையோ பேரை ஏமாற்றி ஏமாற்றிப் பழகிப்போயிருந்த அவனுடைய வாய், “இருபது, இருபது…!” என்று ‘மங்களம்’ பாடி முடித்து விட்டது!

பாவம், தான் போட்ட லாபக் கணக்கில் அந்தக் கடைக்காரனின் கைங்கரியத்தால் பத்தணா குறைந்து போனதை அவள் அறியவில்லை; துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்யும் பகவானும் பிரசன்னமாகி அவளுக்கு நீதி வழங்கவில்லை.


“மாம்பழம், மாம்பழம்!” என்று கூவிக்கொண்டே தெருத் தெருவாக நடந்தாள் அம்மாயி. பஸ்ஸுக்காக வழிநடைப் பாதையில் காத்திருந்த ஒருத்தி, “ஏ, மாம்பழம்!” என்று அவளைக் கூப்பிட்டாள்.

“ஏம்மா!” என்று பதிலுக்குக் குரல் கொடுத்துக் கொண்டே வந்து, தலைமேலிருந்த கூடையை இறக்கிக் கீழே வைத்தாள் அம்மாயி.

“டஜன் என்ன விலை?”

“ஒரே விலை சொல்லவா? இல்லே– இரண்டு விலை சொல்லவா?”

“ஒரே விலைதான் சொல்லு!”

“வேறே விலை கேட்கமாட்டீங்களே?”

“கேட்க மாட்டேன்.”

“டஜன் பன்னிரண்டணா!” என்று சொல்லி விட்டு, மனைவியை அடகு வைத்துக் காலகண்டய்யரின் கடனை அடைத்துவிட்ட அரிச்சந்திரனைப் போல ஏழை அம்மாயி சந்தோஷமடைந்தாள்.

இந்த உண்மை அந்த அம்மாளுக்குத் தெரியவில்லை. அவள் அலட்சியமாகத் தன் வாக்குறுதியை மீறி, “டஜன் ஆறணாவுக்குக் கொடுக்கமாட்டாயா?” என்று கேட்டாள்.

“என்ன, அம்மா! வேறே விலை கேட்க மாட்டேன்னு சொல்லிவிட்டு இப்படிக் கேட்கிறீங்களே?” என்று சொல்லிக்கொண்டே, அம்மாயி கூடையைத் தூக்கி மீண்டும் தலையில் வைத்துக்கொண்டாள்.

“முதல் முதல்லே ‘போனி’ பண்ணுவாங்கன்னு பார்த்தா, அந்த அம்மா இப்படிக் கேட்டுவிட்டாங்களே! அதுக்காக நஷ்டத்துக்குப் போனி பண்ண முடியுமா?” என்று தனக்குள் முணுமுணுத்துக்கொண்டாள் அம்மாயி,

மீண்டும் இன்னொரு இடத்திலிருந்து அழைப்பு!– போனாள்.

“டஜன் என்ன விலை?”

இந்தத் தடவை அவள் அரிச்சந்திரனைப் பின்பற்ற விரும்பவில்லை. “ஒண்ணரை ரூபாயுங்க!” என்றாள்.

“முக்கால் ரூபாய் கொடுப்பாயா?” என்று கொஞ்சங் கூடக் கூசாமல் கேட்டார் அந்த ஆசாமி.

“சரி, எடுங்கோ! முதல் முதல்லே போனி பண்ணுங்கோ!” என்றாள் அம்மாயி.

அந்த மனிதர் கால் டஜன் பழங்களை எடுத்துக்கொண்டு மூன்றணுவை எடுத்து அவளிடம் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்டு திரும்பியபோது அவளுக்கு எதிரே ஒரு பலூன்காரன் வந்தான். “அப்புறம் மறந்து விட்டாலும் மறந்து விடுவோம். குழந்தைகள் ஏமாந்து போகும்!” என்று எண்ணி, அவனிடம் இரண்டணாவைக் கொடுத்து இரண்டு பலூன்களை வாங்கி வைத்துக்கொண்டாள்.

சிறிது தூரம் சென்றபிறகு, அவளுக்கு வயிற்றைக் கிள்ளியது. அதற்கு ஏற்ற மாற்று வெற்றிலை போட்டுக் கொண்டு, வாயில் புகையிலையை அடக்கிக் கொள்வது என்பதுதான் அவள் வாழ்க்கையில் கண்டறிந்த அனுபவ உண்மையாயிற்றே! அருகிலிருந்த கடையில் ஓரணாவுக்கு வெற்றிலை, பாக்கு, புகையிலை வாங்கிக் கொஞ்சம் போட்டுக் கொண்டு, மீதியை மடியில் கட்டி வைத்துக் கொண்டாள்.


ஊரில் அப்பொழுது காலரா என்பதற்காக, சுகாதார அதிகாரிகள் வேறொன்றும் செய்யாவிட்டாலும் ஊரைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தனர். அன்று காலை கிடங்குத் தெருவில் அவர்களுடைய நடமாட்டம் அதிகமாயிருந்தது. “எங்கே அழுகல் பழங்களோடு நல்ல பழங்களியும் சேர்த்து வாரி லாரியில் கொட்டிக்கொண்டு போய் விடுவார்களோ!” என்று எல்லாக் கடைக்காரர்களும் அவர்களைப் பீதியுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அவர்களில் யாராவது ஒருவர் தன் கடைக்கு அருகே வந்துவிட்டால் போதும், உடனே அந்தக் கடைக்காரன் அவரைக் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டே, “அடேய், பையா ‘ஐயா’வின் வீடு உனக்குத் தெரியுமோ, இல்லையோ? நல்ல பழங்களாக ஒரு டஜன் பொறுக்கி எடுத்துக் கொண்டுபோய் ‘அம்மா’கிட்ட கொடுத்து விட்டு வாடா!” என்பான், ‘ஐயா’வும் அந்தக் கடையைக் கவனிக்காதவர்போல் அப்பால் போய்விடுவார்!

அந்த அற்புதமான காட்சி ஏனோ திடீரென்று அம்மாயியின் மனக் கண் முன்னால் தோன்றிற்று. “ஐயோ! அந்தப் புண்ணியவான்கள் கண்ணில் நாம் படாமல் இருக்க வேண்டுமே!” என்ற கவலை அவளைப் பீடித்தது. முன்னும் பின்னும் பார்த்துக்கொண்டே பரபரப்புடன் நடந்தாள்.

இவ்வாறு எண்ணி அவள் இரண்டடிகூட எடுத்து வைத்திருக்கமாட்டாள். “ஏய்! கூடையில் என்னாம்மே?” என்று யாரோ அதிகார தோரணையில் கேட்பது போலிருந்தது, அம்மாயி திரும்பிப் பார்த்தாள். ‘கிரீச்’சென்று நின்ற லாரியிலிருந்து யாரோ ஒருவர் இறங்கிக் கொண்டிருந்தார்.

அவர் சுகாதார அதிகாரி என்பதை அறிந்து கொண்ட அவள் கதி கலங்கிப் போய்விட்டாள். “சாமி, சாமி! ஏழையை ஒண்ணும் செய்யாதிங்க, சாமி!” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டே கூடையை இறக்கிக் கீழே வைத்துவிட்டு, அந்த அதிகாரியின் காலைப் பிடித்துக் கொண்டாள்.

அதிகாரி ஓர் அலட்சியப் புன்னகை புரிந்துவிட்டு, “உன்னைத்தானே ஒன்றும் செய்யவேண்டாம் என்கிறாய்? சரி, போ!– டேய்! யாரடா, அங்கே?– உ.ம்…!” என்று உறுமினர்.

அடுத்த நிமிஷம் அவர் அருகிலேயே நின்று கொண்டிருந்த ஒரு நகர சுத்தித் தொழிலாளி, அம்மாயியின் கூடையைப் பருந்துபோல் பாய்ந்து தூக்கிக்கொண்டு லாரியை நோக்கி ஓடினான்.

“ஐயையோ!” என்று அலறினாள் அம்மாயி.

அதை அவன் லட்சியம் செய்யவில்லை. பழங்களை லாரியில் கொட்டிக் கொண்டு, கூடையை அவளுக்கு முன்னால் வீசி எறிந்துவிட்டு வண்டியில் ஏறிக்கொண்டான். சுகாதார அதிகாரியும் அவனுடன் ஏறிக்கொண்டார். அவருடைய முகத்தில் அலாதிக்களை வீசிற்று. “அம்மாயியின் கூடையைக் காலி செய்ததின் மூலம் காலராவை நகரத்திலிருந்து அடியோடு ஒழித்து விட்டோம்!” என்ற திருப்தியோ, என்னமோ!

மறுகணம் அம்மாயியின் கண்களில் மண்ணை வாரிப் போட்டுக்கொண்டே லாரி ‘விர்’ரென்று கிளம்பி விட்டது.

“அட, பாவிங்களா! சாயந்திரம் அந்த நாயுடுகாருக்கு நான் என்ன பதில் சொல்வேன்? குழந்தை குட்டிக்கு எப்படிக் கஞ்சி காய்ச்சி வார்ப்பேன்” என்று கண்ணீரும் கம்பலையுமுடன் கதறிக் கொண்டே, கீழே உட்கார்ந்து விட்டாள் அம்மாயி.

தன்னை மறந்த துக்கத்தில், தன் கையிலிருந்த இரண்டு பலூன்களும் விடுதலையடைந்து வானவீதியை நோக்கிப் பறந்ததைக்கூட அவள் கவனிக்கவில்லை; தானும் தன்னுடைய குழந்தைகளும் இரவு பட்டினி கிடக்க வேண்டுமே என்றுகூட அவள் அவ்வளவாகக் கவலையடையவில்லை; ‘தர்ம ராஜா நாயுடுகாரு’வுக்கு என்ன பதில் சொல்லுவது என்று எண்ணி எண்ணித்தான் அவள் ஓயாமல் அழுது கொண்டேயிருந்தாள்.

பாவம், கதியற்ற அவளுக்கு விதியைத் தவிர வேறு ஏதாவது ஆறுதல் சொல்லித் தேற்றுவார் யார்?

– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.

– ஒரே உரிமை, 1950, வெளியீடு எண்:6 – அக்டோபர் 1985, புத்தகப் பூங்கா, சென்னை.

விந்தன் என்று அறியப்படும் கோவிந்தன் (செப்டம்பர் 22, 1916 - ஜூன் 30, 1975) புதின எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார். கோவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்குப் பிறந்தார். சென்னை சூளைப் பகுதியில் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார். இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *