தீராத விளையாட்டுப் பிள்ளை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 11, 2018
பார்வையிட்டோர்: 7,220 
 
 

தர்மலிங்கம் பிரபல அரசியல் கட்சியின் வட்டப் பிரதிநிதி . அவரது குடும்பமே ஆரம்ப நாளிலிருந்தே கட்சியில் இருக்கிறது. கட்சி ஆட்சியில் இல்லாதபோது பலர் வழக்கு வியாஜியங்களிலிருந்து தப்பிக்க வேண்டி சுயநலத்துடன் வேறு கட்சிக்குச் சென்றபோதும் அவர் கட்சி மாறவில்லை. இயற்கையிலேயே நல்ல வசதியான குடும்பம். ஆகவே எந்த தவறான வழிக்கும் போய் பணம் சம்பாதிக்க அவசியம் ஏற்படவில்லை. வட்டத்தின் ஒவ்வொரு தொண்டனையும் தனித்தனியாக பெயர் சொல்லி அழைக்கும் அளவு அறிமுகமானவர். ஆனால் கட்சியில் அவருக்குப் பின்னால் வந்தவர்களும், இப்போது ஆட்சிக்கு வந்த பின்னர் கட்சி மாறி வந்தவர்களும் என்னதான் மாயம் செய்தார்களோ இல்லை செய்கிறார்களோ தெரியவில்லை, அவரைத் தாண்டி பலபடிகள் முன்னே சென்று விட்டனர். முப்பத்தைந்தாண்டு அரசியல் வாழ்வில் அடிப்படை உறுப்பினரிலிருந்து வட்டப் பிரதிநிதி என்பதே அவரது அதிகபட்ச வளர்ச்சி. மாவட்ட அளவில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் போதெல்லாம் தலைமை விரும்புவதாக சிலரது பெயர்கள் சொல்லப்பட்டு அவரை விலகிக் கொள்ள வேண்டுகோள் சில கைத்தடிகள் மூலம் தரப்படும். அப்புறம் சாதி வேறு அவருக்கு சாதகமாக இல்லை. ஆகக் கூடி மேலிடம் வேறுயாரையாவது பரிந்துரைக்கும். அதில் அவருக்கு வருத்தம்தான். அவர் தன் மனவருத்தத்தை இதுவரையாரிடமும் வாயா வார்த்தையாகக் கூடச் சொன்னது இல்லை. கட்சி விசுவாசம் என்று ஒன்று அவர் ரத்தத்தில் கலந்திருந்தது. கடந்த பொதுக்குழுவில் கூட அவரால் பத்து வருஷம் முன்பாக கட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட நாற்பத்தைந்து வயதேயான கோவிந்தன் மாவட்டச் செயலாளராக முதல் வரிசையில் அமர்ந்திருந்த போது அறுபதைச் சில வருடங்களில் எட்டப்போகும் இவர் போய், “தம்பி நல்லா இருக்கீங்களா”? என்று கண்டு கொள்ள வேண்டியிருந்தது.

அது கூட பரவாயில்லை. சிரமப்பட்டு ஜீரணித்துக் கொண்டார். மாரிமுத்து என்று ஒரு தீவிரத் தொண்டன். எந்த போராட்டம் தலைவர் அறிவித்தாலும் அங்கு முதல் ஆளாக நிற்பான். தர்மலிங்கத்தின் முக்கியமான சீடன். பொதுக் குழுவிற்கு இரண்டு வாரம் முன்னால் மார்க்கெட்டில் எதோ தகராறு என்று போலீசில் பிடித்துக் கொண்டு போய் உள்ளே வைத்துவிட்டார்கள். செய்தி அறிந்த தர்மலிங்கம் ஸ்டேஷனுக்குப் போய் இன்ஸ்பெக்டரை பார்த்து பேசி வெளியே எடுக்கப் போனால் முடியவில்லை. இன்ஸ்பெக்டர் சாடைமாடையாக அவரிடம் மாவட்டம் ரிமாண்ட் பண்ணச் சொல்லியிருக்காரு, அவரைப் பார்த்து பேசிட்டு வாங்க என்றார்.

அட, மாவட்டம் நாம கை காட்டிய புள்ளைதானே என்று கோவிந்தனுக்கு போன் போட்டால் அவன், “யோவ், என்னய்யா தர்மலிங்கம் என்னை எதிர்த்து பாலிட்டிக்ஸ் பண்ணற போலிருக்கு” என்றதும் ஒரு கணம் திகைத்துப் போனார். சமாளித்துக் கொண்டு “அப்படியெல்லாம் இல்லைங்க தம்பி. மாரிமுத்து நம்ம பையன். கட்சி விசுவாசி. ஆரம்ப காலம் தொட்டு கட்சியில இருக்கிறான். என்ன தப்பு செய்தான்னு சொல்லுங்க, கண்டிக்கிறேன். ரிமாண்ட் பண்ண வேண்டாம்”, என்று படு ஜாக்கிரதையாகத்தான் பேசினார். மறுமுனையில், “அவன் ஆரம்ப காலம் தொட்டு இருக்கான்னா, நா இடையில கட்சி விட்டு போனத குத்திக்காட்டுறயா”? என்று காட்டமாகப் பேசி போனை வைத்துவிட அவமானமாகப் போய் விட்டது.

அப்புறம் விசாரித்த போதுதான் தெரிந்தது. கோவிந்தனின் பல தொடுப்புகளில் ஒன்று மார்கெட்டில் காய் வாங்க வந்திருந்ததாம். மாரிமுத்து முதுகில் தூக்கிய உருளைக்கிழங்கு மூட்டையுடன் “வழி, வழி” “ஓரம் போ”, “ஓரம் போ” என்றபடி ஓட்டமும் நடையுமாக நடைபாதையில் வரும் போது அந்த தொடுப்பு மீது தெரியாமல் இடித்து விட்டான். தொடுப்பு ஒரு கேவலமான வார்த்தையால் திட்ட, இவன் திட்ட ஒரே பிரச்சனையாகி தொடுப்பு கோவிந்தனுக்கு தகவல் தர போலீஸ் மாரிமுத்துவை அள்ளிக்கொண்டு போனது.

அப்புறம் தலைவர் வரை போகாமல் துணைப் பொதுச் செயலாளர் சமரசம் செய்து பிரச்சனை ஒரு வழியாக முடிந்தது. இந்த பனிப் போர் இன்னும் தலைவர் காது வரை போகவில்லை. அந்த நாளில் தலைவர் கட்சியில் இரண்டாம் மட்டத் தலைவராக இருந்த போது தர்மலிங்கத்தின் வட்டத்தில் எப்போது கட்சிக் கூட்டமோ, பொதுக் கூட்டமோ நடந்தாலும் தர்மலிங்கத்தின் வீட்டில்தான் சாப்பாடு. ஆகவே தனிப்பட்ட முறையில் தலைவருடன் நல்ல பழக்கம் தான். ஆனால் இப்போதெல்லாம் தலைவரை நேரில் பார்க்கவே முடியவில்லை. எல்லா இடத்திலும் ஒரே பூசாரிகள் மயம். சின்ன விஷயங்களில் கூட மாவட்டத்தின் தலையீடு. தனது தெருவில் நகராட்சி தண்ணீர் வருவதில்லை , சாலை போட வேண்டும், தெரு விளக்கு எரியவில்லை என்று மக்களிடமிருந்து கோரிக்கைகள் வரும் போது அந்த அதிகாரிகளை சந்தித்து எல்லாம் பேசி முடித்து வேலை ஆரம்பிக்கும் போது மாவட்டம் அதிகாரிகளுக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்து வேலையை நிறுத்தி விடுவார். ஆக தன் சொந்த காசில் செய்யலாம் என்றால் அதற்கும் எதாவது முட்டுக்கட்டை போட்டு தடுத்து விடுவார். இப்படி போய்க் கொண்டிருந்த போதுதான் அவள் மகளுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் வந்தது. தலைவர் தலைமையில் திருமணம் நடத்த வேண்டும் என்பது அவரதுநெடுநாள் ஆசை. தலைவரை நேரில் பார்த்துப் பேச முடியவில்லை. வாசலில் வரவேற்பு அறை இன்டெர்காமில் பேசிய தலைவர் வருவதாக வாக்களித்தார். கல்யாண வேலைகளை கவனிக்க புறப்படத் தயாராயிருந்த தர்மலிங்கம், தன் இன்னோவாவில் ஏறுவதற்கு முன், கூடவே வந்த மனைவியிடம்,

“ஏய் காமாட்சி நான் போய் சத்திரத்தை பேசி முடிச்சிட்டு வரேன். நீ முகூர்த்த தேதி நேரம் எல்லாம் சரியாத்தானே பார்த்து வைச்சிருக்க. அப்புறம் அதை மாற்ற முடியாது. தலைவர் தெளிவாவே சொல்லிட்டாரு. அந்த தேதியில முக்கியமான கட்சிக் காரங்க கல்யாணங்க மூணு வெளியூருங்களில் இருக்காம். இருந்தாலும் உன்னய மதிச்சி முந்திய நாள் வரவேற்பு வைச்சா, அதுவும் மெயினான ரோட்டில் உள்ள அந்த குறிப்பிட்ட சத்திரமா இருந்தா வந்து கலந்துகிறேன்னு. தலைவர் வந்தா ஏரியாவில என்னோட மதிப்பு எங்கயோ போயிடும். சரி. கிளம்பறேன். வர நேரமாகும். சின்னவன் வந்தா எனக்கு போன் பண்ணச் சொல்லு” என்றபடி காரில் ஏறினார்.

சத்திரத்தில் பேசி முன்பணம் கொடுத்து விட்டு பத்திரிக்கை அடிக்கும் முன்பு தலைவரை மீண்டும் ஒரு முறை சத்திரம் அதன் அமைவிடம் அவரது இல்லத்திலிருந்து தூரம் எல்லாம் சொல்லி உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். சத்திரத்திலிருந்து கட்சி அலுவலகத்திற்கு வந்து விஷயத்தைச் சொல்லி தலைவரை நேரில் காண அனுமதி கேட்க அன்று மாலை ஐந்து மணிக்கு வரச் சொல்லி அனுமதி கிடைத்து. இதற்குள் மணி பிற்பகல் இரண்டு ஆகி விட கட்சி அலுவலகத்தின் அருகில் இருந்த நல்ல உணவகத்தில் சாப்பிட அமர்ந்தால் கைபேசியில் அழைப்பு ஓசை. எடுத்துப் பேச சத்திரத்தின் மேலாளர் தான் அழைத்திருந்தார்.

“சார் கொஞ்சம் சத்திரம் வரை வந்து போக முடியுமா”?

“என்ன சார், என்ன விஷயம்”?

“ஆ… அது ஒன்னுமில்லை. வாங்க நாம நேரில பேசிக்கலாம்”

சரி. இப்போ சாப்பிட வந்திருக்கிறேன். நாலு மணிக்கு வருகிறேன்”.

“நல்லது . நான் காத்திருக்கிறேன் சார்”.

சாப்பிட்டுவிட்டு சத்திரம் வந்தவரை மேனேஜருடன் முதலாளியும் வரவேற்றார். நேரடியாக விஷயத்திற்கு வந்தவர், “அய்யா மன்னிக்கணும். நீங்க கேட்ட அன்னிக்கு சத்திரம் நமக்கு சத்திரம் தர முடியாத சூழ்நிலை. இதை விட நல்ல பெரிய சத்திரம் இதே செலவில ஏற்பாடு செய்துடலாம். என் நிலை அப்படி மன்னிச்சுக்குங்க” என்று கையைப் பிடித்துக் கெஞ்சினார். விபரம் கேட்டபோது தன் மச்சினியின் திருமணத்திற்கு கோவிந்தன் கேட்டதாகவும், தர்மலிங்கம் மகளின் திருமணத்திற்கு முன்பதிவு செய்த தகவல் சொன்னதும், அதை ரத்து செய்துவிட்டு தனக்கு தரச் சொல்லி அழுத்தமாய் அன்புமிரட்டலாக சொல்லிவிட்டுச் சென்றுள்ளதாகவும் கூறினார்.

“சார் என் நிலையைப் புரிந்து கொள்ளுங்கள். அவரைப் பகைச்சிக்கிட்டு தொழில் செய்யும் நிலையில் நான் இல்லை. உங்களுக்கு அந்த கமலாம்பாள் சத்திரம் ஏற்பாடு செய்து தருகிறேன். கூடுதல் பணம் எதுவும் நீங்கள் தர வேண்டாம். உங்களுக்கு சரின்னா உடனே பதிஞ்சிடலாம். சத்திரமும் உங்களுக்கு பக்கமாக இருக்கும்” என்றார்.

“என்னங்க இது. தலைவர் கல்யாணத்திற்கு வருவதற்கு வேண்டித்தான் இந்த சத்திரத்தை தேர்ந்தெடுத்தேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் தலைவரை போய் பார்த்து இடம் தேதி உறுதிப்படுத்தப் போகிறேன். அதற்குள் இப்படி. சரி என்ன பண்ண முடியும். என்னால் உங்களுக்குப் பிரச்சனை வர வேண்டாம். அந்த கமலாம்பாள் மண்டபத்தையே முடிச்சிக் கொடுங்க. அதில் மாற்றம் எதுவும் இருக்காதே. உங்க வார்த்தையை காப்பாத்துங்க. அப்ப நான் வரட்டுமா” என்று தலைவரைப் பார்க்க கிளம்பினார்.

வரவேற்பறையில் தலைவரிடம் தனது வருகையைத் தெரியப்படுத்தச் சொன்னார். பூசாரிகள் யாரும் அருகில் இல்லை போலிருக்கிறது. சொன்ன பத்து நிமிடத்தில் தலைவர் கூப்பிட்டு அனுப்பவும், மனசு ஆனந்தத்தில் துள்ளியது. தலைவர் அறையில் நுழைந்தவரை, தனது ஆறு வயது பேரனுடன் விளையாடிக் கொண்டிருந்த தலைவர், “என்ன தர்மு, கல்யாண வேலையெல்லாம் நடக்குதா? சொன்ன மாதிரி சத்திரம் எல்லாம் பதிவு பண்ணிட்டயா? பத்திரிக்கை அடிக்கக் கொடுத்தாச்சா”? என்று கேள்விகளாக அடுக்கினார்.

“இல்லீங்க தலைவரே, சத்திரம் கொஞ்சம் பிரச்சினை. அதான் உங்களை கேட்டு சத்திரம் பதிஞ்சிட்டு பத்திரிக்கை அடிக்கணும்”.

“என்ன பிரச்சினை”?

“அந்த சத்திரம் கிடைக்கல தலைவரே. அதாங்காட்டியும் உங்களைக் கேட்டுக்கிட்டு கமலம்மாள் மண்டபம் பதிஞ்சிடலாமா இல்லை வேற தேதி க்கு மாத்திடலாமா ன்னு யோசனை”?

“ஹூம். அப்படியா. கல்யாண தேதியை மாத்த வேண்டாம். சத்திரத்துக்கு போன் போட்டு உனக்குத் தரச் சொல்லறேன்”.

“அதெல்லாம் வேண்டாம் தலைவரே. நீங்க நம்ம வீட்டு கல்யாணத்தில கலந்துகிட்டாப் போதும்”.

“சரி. அன்னிக்கு வேற முக்கியமான நிகழ்ச்சி எதுவும் இல்லைன்னா கண்டிப்பாக வரேன். பத்திரிக்கையை நேரத்தோட கொடுத்துடு”.

“ஆகட்டும் தலைவரே, பத்திரிக்கையில் திருமணம் உங்க தலைமையில் ன்னு போட்டு அடிச்சிடறேன்”.

“வேண்டாம். பொதுச் செயலாளர் தலைமையிலன்னே போடு”. நான் நிலைமையைப் பார்த்துக்கிட்டு கலந்துகிடறேன்”.

அதற்குள் “தாத்தா,நேத்து பாதியில விட்ட அந்த ராஜகுமாரன் கதை சொல்லு” என்ற நச்சரித்த பேரனிடம் “வந்துட்டேண்டா ராஜா. தாத்தாகிட்ட எல்லாத்திலும் உனக்குத்தாண்டா முன்னுரிமை செல்லம்” என்றவர், “சரி தர்மு, பத்திரிக்கை அடிச்சிட்டு பொதுச் செயலாளரைப் பார்த்து பத்திரிக்கையைக் கொடுத்து நான் சொன்ன விவரம் சொல்லிடு. அப்புறமா பார்க்கலாம்” என்று விடை கொடுத்தார்.

திருமண பத்திரிக்கையுடன் மாவட்டத்தை அழைக்க கிளம்பினார் தர்மலிங்கம். போனவன் வந்தவன் எல்லாரையும் பார்க்க அழைத்த மாவட்டம் அரைநாள் தர்மலிங்கத்தைக் காக்க வைத்து அழைத்தார்.பத்திரிக்கையை கொடுத்து அழைத்தவரிடம், நீ என்னதான் சத்திரம் மேட்டரில் வில்லங்கம் பண்ணினாலும் என்னய ஒண்ணும் பண்ண முடியாது. அப்புறம் மக கல்யாணம் பொதுச் செயலாளர் வராரு அது இதுன்னு சாக்கு போக்கு சொல்லிட்டுஉங்க வீட்டு கல்யாண வேலையை ஓவரா ஆடம்பரமா செய்ய வேண்டாம். அதெல்லாம் தலைவருக்குப் பிடிக்காது. முக்கியமா கட்சி ஆட்களை சொந்த வேலைக்கு பயன்படுத்தக் கூடாதுன்னு கட்சி விதி 26 (1) அ சொல்லியிருக்கு. தெரியுமில்ல. அன்னிக்கு நம்ம வீட்டுலயும் கல்யாணம் தலைவர் தலைமையில் நடக்குது. பத்திரிக்கை தரேன். வந்துடுங்க”. ஏன்றவர்

“ டேய் மகேந்திரா, அண்ணனுக்கும் நம்ம வூட்டு கண்ணால நோட்டிஸ் கொடுத்திருடா” என்றார். அவமானத்தில் கூனிக்குறுகி வெளிவந்த தர்மலிங்கத்திடம், “ சார், பெயர் சொல்லுங்க” என்று ஏழாவது வார்டில் இருந்த கோவிந்தனின் கைத்தடி ஒன்று அவரைத் தெரியாத மாதிரி பெயர் கேட்டு பெயர் எழுதிக் கொடுத்தது. “பத்திரிகையைத் தொலைச்சிடாதீங்க. ஒரு பத்திரிக்கை 250 ரூவா” என்று நக்கல் வேறு செய்தது. ஹூம் எல்லாம் தலையெழுத்து என்று விதியை நொந்தபடி புறப்பட்டார்தர்மலிங்கம்.

திருமண நாள் தர்மலிங்கத்தின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் அதிகம் கூட்டம். முஹூர்த்த நேரம் நெருங்குகிறது. பொதுச் செயலரையும் வேறு காணவில்லை. தொண்டை வரண்டு போன நிலையில் திடீரென்று பரபரப்பு.

வாசலில் தலைவரை வாழ்த்திக் கோஷம். தர்மலிங்கத்துக்குக் கண்களை நம்ப முடியவில்லை. மனைவி, பேரன், மகள் கூடவே பொதுச் செயலாளர் என்று படை பட்டாளமாக நுழைந்து கொண்டிருந்தார் தலைவர். அவரது திகைப்பைக்கண்ட தலைவர், “ஏன்ன தர்மு, ஆச்சரியமாக இருக்கா? அங்க கோவிந்தன் வீட்டுக்கு நம்ம அவை முன்னவரை அனுப்பி வைச்சிட்டேன். இங்க சத்திரத்துக்கு பக்கத்துத் தெரு பள்ளிக்கூடத்தில பேரன் கலந்துக்கிற கலை நிகழ்ச்சி இன்னிக்கு 10 மணிக்கு இருக்காம். தாத்தா வரணும்னு ராத்திரி பூராவும் ஒரே அழுகை அடம். அவனை மீற முடியல. அங்க போயிட்டு கோவிந்தன் கல்யாணம் போக முடியாது. தூரமும் அதிகம். அதனால ஒன்னோட வீட்டுக் கல்யாணத்துக்கு நானும் பொதுச் செயலாளரும் ஒண்ணா வந்திட்டோம்”, என்று கண்ணன் வேடமிட்டிருந்த பேரனை கொஞ்சியபடி பேசிய தலைவர் திருமணத்தை நடத்த ஆயத்தமானார்.

தலைவர் ஏன் வரவில்லை என்று புரியாமல் அதிகப் பரிச்சியம் இல்லாத அவைமுன்னவரை “வாங்க, வாங்க” என்று வரவேற்று அழைத்துக் கொண்டிருந்தார் கோவிந்தன். கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளைதான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *