“சின்னமலை,அந்த அண்ணாமலை நமக்கு துணையிருக்கார். இல்லேன்னா பெரிய மலையா இருக்கிற ஆங்கிலேயப்படை இந்த சின்னமலையா இருக்கிற நம்ம படைய கண்டு சிதறி ஓடியிக்குமா என்ன? நம்ம வருங்கால சந்ததிகள் உங்களை தெய்வமா வணங்கத்தான் போறாங்க” சொல்லி முடித்த நண்பரை கட்டித்தழுவினார் தீர்த்தகிரி எனும் தீரன் சின்னமலை. கிரி என்றால் மலை எனும் பொருள் அவருக்கு பொருத்தமாக அமைந்து விட்டது!
“நாமென்ன அடுத்தவன் சொத்துக்கு ஆசப்பட்டா கொள்ளையடிக்கப்போனோம்? நம்ம தேசத்து சொத்த நாசமாக்க வந்த நாதாரி பசங்களை,அந்த வெள்ளைக்காரங்களைத்தானே விரட்டியடிச்சோம். நம்ம வரிப்பணத்தை வாங்கி நம்ம மக்களுக்கு தானே கொடுத்தோம். நாமும் ஊதாரித்தனமா மத்தவங்க மாதிரி சுத்தித்திரிஞ்சா சொந்த மண்ணுல வெந்ததை திண்ணுட்டு காலத்துக்கும் அடிமையாத்தான் கிடக்கோனும். எம்பட உசுரே போனாலும்,சொத்து,சொகத்த எழந்தாலும் அவனுகள நாட்ட விட்டு தொரத்தாம தூக்கமில்ல இந்த சின்னமலைக்கு..” என நெஞ்சை நிமிர்த்தி,மீசையை முறுக்கி கொண்டு சிங்கமாக கர்ஜித்ததைக்கண்டு அங்கிருந்த குதிரைகள் நான்கு கால்களையும் ஒரு சேர தூக்கி குதித்து இதோ இப்போதே நாங்கள் தயார் என ஆமோதித்தது அங்கிருந்த சக வீரர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது!
பெரிய தொட்டியில் ஊரே குடிக்க நீர் சேமித்து வைத்திருந்தாலும் ஒரு பெருச்சாலி தொட்டியை குடைந்து நீரை வெளியேறச்செய்வது போல அக்கிரமக்கார ஆங்கிலேய அதிகாரிகள் தம்மை எதிர்ப்போரிடம் சம்பளமில்லா வேலைக்காரர்களாக, தாங்கள் சம்பளம் கொடுத்து தேசபக்தி இல்லாத துரோகி ஆட்களை அனுப்பி விடுவர். அவர்களை வைத்து கட்டுச்சோற்று எலி போல காரியத்தை சாதித்து எதிர்செயலை முறியடித்து விடுவர். அப்படித்தான் கோவைப்புரட்சியை தடுத்தனர்!
உயிரோடு வாழ்ந்தால் போதும் என மற்றோர் நினைத்திருக்க உரிமையோடு வாழ வேண்டுமென நினைத்ததால் ஆயுதத்தை ஏந்த துணிவு வந்தது சின்ன மலைக்கு!
தேசபக்தியுள்ளவர்கள் போல் நடித்த, ஆங்கிலேயர்களால் உளவாளிகளாக அனுப்பி வைக்கப்பட்ட, வேசதாரிகளை நம்பி தம்படையில் சேர்த்துக்கொண்டதின் விளைவாக சின்னமலையிடம் உண்மையாக இருப்பது போல் நடித்து ,ரகசியங்களை கசியவிட்டு, துரோகம் செய்து கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த எட்டப்பனாக சிலர் செயல்பட, எதார்த்தமாக நம்பிய சின்னமலையை தாங்கள் விரித்த சதி வலையில் வீழ்த்தி விட்டனர் ஆங்கிலேய எதிரிகள்!
சிக்கிய சிங்கத்தை சிரசேதம் செய்யாமல் விட்டால் மொத்தமாக அழித்து விடும் என கணக்கு போட்ட அந்நிய கயவர்கள், ஆடிப்பெருக்கு நாளில் தூக்கில் போட்டு அவரது உடலை அழித்தனர். உடல் அழிந்தாலும் தம் தாய் நாட்டைக்காக்க பாடுபட்ட,போராடிய தமது உயிரெனும் ஆத்மா பாரத தேசத்து மக்களின் மனங்களில் என்றும் உயிர்ப்புடன் வாழ்ந்து வழிகாட்டும் எனும் நம்பிக்கையுடன் உடலை விட்டு உயிர் பிரிந்தது!