தீதும் நன்றும்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 17, 2014
பார்வையிட்டோர்: 10,657 
 
 

“அம்மா, என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கம்மா” அம்மாவின் காலில் விழுந்தேன்.

“எழுந்திருப்பா. இதே மாதிரி இன்னும் நிறைய பிறந்த நாள் உனக்கு வரணும். சந்தோஷமா, நிம்மதியா இருக்கணும்” என் தோளை தொட்டு தூக்கினார். எழுந்து பார்த்தபோது அம்மாவின் கண்களில் அன்பு, பாசம் வழிந்து கொண்டிருந்தது.

“என்னம்மா, பிறந்த நாள் கிஃப்ட் எதுவும் இல்லையா?” கண்ணடித்தேன்.

“இருப்பா வர்றேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார். சில நொடிகளில் ஒரு ரூபாய் நோட்டினை எடுத்து வந்து என் கையில் அழுத்திவிட்டு, தலையில் கைவைத்து ஆசிர்வதித்துச் சிரித்தார்.

ஐநூறு ரூபாய் தாள் அது! மனதில் மகிழ்ச்சி!

அடுத்து அப்பாவை தேடிச் செல்ல, அவர் வீட்டுக்கூடத்தில் உட்கார்ந்து கொண்டு, செய்தித்தாளை புரட்டிக் கொண்டிருந்தார்.

“அப்பா, என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க” மடக்கென்று அவர் காலில் விழுந்தேன்.

“நல்லா இரு, சந்தோஷமா இரு” என்று சொல்லி ஆசீர்வதித்துவிட்டு, “எல்லாம் சரி, என்ன புதுசா கால்ல விழுந்திருக்கே? எதையாவது எதிர்பார்க்கறியா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

“இல்லப்பா…. ஆசீர்வாதம் வாங்கலாம்னுதான்…..” என்று நான் மழுப்புவதை பார்த்ததும் உள்ளே சென்று ஒரு ஐநூறு ரூபாய் தாளை எடுத்து வந்து என்னிடம் கொடுத்தார்.

ஆஹா, திட்டமிட்டபடி இன்று ஆயிரம் ரூபாய் பார்த்தாகிவிட்டது என்ற திருப்தியில், “சரிப்பா. நான் குளிச்சிட்டு பாட்டி வீட்டுக்கு போயிட்டு, அப்படியே சினிமா போயிட்டு ராத்திரிதான் வீட்டுக்கு வருவேன்” என்று சொல்லிவிட்டு என் அறைக்குச் சென்றேன்.

குளித்துவிட்டு, புது டீசர்ட், ஜீன்ஸ் உடுத்தி, என் இரு சக்கர வாகனத்தில் வெளியே கிளம்பினேன். சனிக்கிழமை போன்ற விடுமுறை நாளில் பிறந்த நாள் வந்தால் இந்த மாதிரி நிறைய வசதிகள் உண்டு.

அதுவும் அந்த ஊரிலேயே நெருங்கிய உறவினர்கள் இருந்தால், இன்னும் அற்புதம். பிறந்த நாள் என்ற சாக்கு வைத்துக்கொண்டு ஒவ்வொரு உறவினர் வீடாகச் சென்று காசு பார்த்துவிடலாம். நேற்றும் அதுதான் நடந்தது. முதலில் பாட்டி வீட்டுக்குச் சென்றேன்.

நான் கதவைத் திறந்ததுமே பாட்டிக்குக் கொள்ளை சந்தோஷம். “வாப்பா கண்ணா, வா. நீ வருவேன்னு நான் எதிர்பார்த்துட்டு இருந்தேன்” என்றார். முகம் முழுவதும் மலர்ந்திருந்தது. அப்போது தாத்தா வீட்டில் இல்லை.

கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்தார். பாட்டி வீட்டுக்குப் போனால், வெறும் வயிறுடன் வர முடியுமா என்ன? மூச்சு முட்டும் அளவுக்கு சாப்பிட்டாகிவிட்டது.

சாப்பிட்டு முடிப்பதற்குள் சுடச்சுட சேமியா பாயாசம் தயார் செய்து கொடுத்தார். ஏகப்பட்ட முந்திரி, திராட்சையுடன், அமிர்தமாக இருந்தது.

திருப்தியாக சாப்பிட்டுவிட்டு, வந்த வேலையை செய்தேன். பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன். பூரித்துப் போய்விட்டார் என நினைக்கிறேன். கன்னத்தில் ஒரு முத்தத்துடன், கையில் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை அழுத்தினார். என்ன இருந்தாலும், பாட்டி பாட்டிதான்.

பேரானந்தத்துடன் அங்கிருந்து கிளம்பி மாமா வீட்டுக்குச் சென்றேன். அவரிடம் இருந்து ஒரு இருநூறையும், சித்தி வீட்டுக்குச் சென்று அவரிடம் இருந்து ஒரு முன்னூறையும் கறந்தேன். “இவர்கள் எல்லாம் இருப்பதால்தான் கொஞ்சமாவது மழை பெய்கிறது” என நினைத்துக் கொண்டேன்.

மொத்தம் 2500 ரூபாய் வசூலாகியிருந்தது. அடடா, நல்ல தொகைதான். எதிர்பார்த்ததைவிட அதிகம். மனம் இளையராஜா அவர்களின் பாடல்களையும், ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் பாடல்களையும் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. பின்னே இருக்காதா, 2500 ரூபாய் என்பது கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவனுக்குப் பெரிய தொகைதானே!

வசூல் வேட்டைக்குப்பின், இரண்டு திரைப்படங்கள். படம் பார்த்துவிட்டு, திரையரங்கைவிட்டு வெளியே வரும்போது இரவு 7 ஆகியிருக்கும் என நினைக்கிறேன்.

இவ்வளவு பணத்தை வைத்து என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தேன். ஒரு சிக்னல் வந்தது. அந்த இடத்தில், சாலையின் ஓரத்தில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். பாவம், அவருக்குக் கால் ஊனம் போல் தெரிந்தது. சரியாக நடக்க முடியாமல், கட்டைகளை அக்குள்களில் வைத்திருந்தார்.

எனக்குள் ஏதோ ஒரு குரல் என்னவோ சொல்ல, வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தி, அவரருகே சென்றேன்.

“ஐயா, எங்கேயாவது போகணுமா?”

“ஆமாம் பா. நம்ம மெயின் மார்க்கெட்டை ஒட்டின மாதிரி ஒரு தெரு இருக்கே, அங்க போகணும். பஸ் ஸ்டாப்புக்கு போயிக்கிட்டு இருந்தேன். கால் வலிக்க ஆரம்பிச்சது. அதுதான் நின்னுட்டேன்” வலி எந்த அளவுக்கு அவரை உறுத்திக் கொண்டிருந்தது என்பதை அவரது குரல் உணர்த்தியது.

“வாங்கய்யா. நானும் அந்தப் பக்கமாதான் போறேன். உங்களை அங்க விட்டுடறேன்”

“ரொம்ப நன்றிப்பா. ரொம்ப நன்றி” அவரது முகத்திலும், குரலிலும் நிம்மதி தென்பட்டது.

“இதுல என்னய்யா இருக்கு. நீங்க இங்கயே இருங்க. நான் போய் வண்டியை எடுத்துட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு வண்டியை நோக்கி நடந்தேன். என் மனதில் “அந்த வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே” பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.

வண்டியை கிளப்பி, அவரருகே வந்து, அவர் ஏறி உட்கார்ந்தபின் அங்கிருந்து கிளம்பினோம். “பொறந்த நாளும் அதுவுமா நல்லது செய்யறியேடா, எங்கேயோ போயிட்டே போ” என்று, மனதுக்குள் தற்புகழ்ச்சி தாண்டவமாடத் தொடங்கியது. வழியில் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன்.

“எந்த ஊருங்க நீங்க? இதே ஊர்தானா?”

“இல்லப்பா. நான் பக்கத்து ஊரு. இங்க ஒரு வேலை விஷயமா வந்தேன்”

“என்ன வேலைங்க?”

“ரயில்ல விப்பாங்களே சின்னச் சின்ன பொம்மைங்க, கீ செயின், டார்ச்.. இதையெல்லாம் வாங்கி ஊருல சந்தைல விப்பேன் நான். இந்த பொம்மைங்க இந்த ஊருல இருக்கற ஒரு ஃபேக்டரிலதான் செய்யறாங்க. அந்த ஃபேக்டரில வேலை வாங்கி தர்றதா என் சொந்தக்காரன் ஒருத்தன், என் அண்ணன் மகன் சொன்னான். அதான் வந்தேன்”

“வேலை கிடைச்சாச்சுங்களா?” ஆர்வத்துடன் கேட்டேன்.

“இல்லப்பா. அந்த சொந்தக்காரப் பய ஊருல இல்ல. அடுத்த வாரம் வரச் சொல்லிட்டான்”

ஏமாற்றமாய் இருந்தது எனக்கு. தொடர்ந்து பேசினார் அவர்.

“ஊருல நாங்க இருக்கற வீட்டுக்கு என்னால வாடகை கொடுக்க முடியலை. 4 மாச வாடகை பாக்கி. அதனால எங்களை வெளியே துரத்திட்டார் வீட்டு ஓனர். பொண்டாட்டி, புள்ளையோட இங்க வந்தேன். பாத்தா, இங்க இப்படி ஆகிடுச்சு” வேதனையுடன் அவர் சொல்ல, நான் வேதனையுடன் கேட்டுக் கொண்டேன். அடுத்த சில நிமிடங்கள் மௌனம்தான் பேசியது.

அவர் சொன்ன இடம் வந்தது. அவரை பத்திரமாகக் கீழே இறக்கிவிடும்போது, “ஹீரோவாகும் சமயம் இதுதாண்டா” என்று என் மனது எனக்குச் சொன்னது.

உடனே பாக்கெட்டில் கைவிட்டு நான் இதுவரை வசூலித்திருந்த 2500 ரூபாயை எடுத்து, அதிலிருந்து 1500 ரூபாயை அவரிடம் கொடுத்தேன்.

“இந்தாங்கய்யா. வெச்சுக்கோங்க. எதுக்காவது பயன்படும்”

என் முகம் இப்போது பார்ப்பதற்கு ‘முத்து’ படத்தில் வரும் வள்ளல் ரஜினிகாந்த் அவர்களின் முகம் போல் இருக்குமோ என்ற எண்ணம் உள்ளூர ஓடியது.

“ஐயோ, இல்லப்பா. பரவால்ல. நீ என்ன இவ்ளோ தூரம் கொண்டு வந்து விட்டிருக்கியே. இதுவே பெரிய விஷயம்” என்றார் அவர். அடடா, என்ன ஒரு சுயமரியாதை. நான் விடுவதாக இல்லை.

“பரவால்லைங்கய்யா. உங்க தம்பி கொடுத்தா வாங்கிக்க மாட்டீங்களா? அந்த மாதிரிதான். தயவு செஞ்சு வாங்கிக்கோங்க” என்றேன்.

“சரிப்பா. நீ இவ்ளோ சொல்றதால வாங்கிக்கறேன். ரொம்ப ரொம்ப நன்றி” என்று வேறு வழியில்லாமல் வாங்கிக் கொண்டார் அவர். முகமெல்லாம் சந்தோஷம்.

“ஒரு நிமிஷம் எங்கூட வாப்பா. வந்து ஒரு வாய் காப்பி சாப்பிட்டுட்டு போ” என்றார் அவர்.

“இங்க எங்க தங்கிருக்கீங்க நீங்க?” அக்கறையுடன் கேட்டேன் நான்.

“இங்க ஒரு மண்டபத்துல தங்கியிருக்கோம். என் அண்ணன் மகன் இங்க தான் வரச் சொல்லியிருந்தான். அதான் நேரா மூட்டை முடிச்சு கட்டிக்கிட்டு இங்க வந்துட்டோம்”

“சரி, வாங்க போகலாம்” என்று அங்கிருந்து அவருடன் சென்றேன். அடுத்த ஐந்தாவது நிமிடம் அந்த மண்டபத்தை அடைந்தோம் இருவரும்.

இவர் உள்ளே சென்று இரண்டொரு நிமிடங்களில் தன் மனைவி, மகளை அழைத்து வந்தார். நடந்ததையெல்லாம் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். இவரின் மனைவி வெளியே வந்தவுடனேயே கை கூப்பி, ‘ரொம்ப நன்றிப்பா” என்று கண்ணீர் மல்கச் சொன்னார்.

“ஐயோ பரவால்லைங்க. இதுல என்ன இருக்கு?” என்றேன் நெகிழ்ச்சியுடன்.

“ஒரு நிமிஷம் இருப்பா. காப்பி கொண்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு, என் பதிலுக்குக் காத்திருக்காமல் உள்ளே சென்று ஒரு டம்ளரில் காபி ஊற்றி எடுத்து வந்தார்.

குடித்தேன். சுவையாக இருந்தது. மனதுக்குள் “ ஃபில்டர் காபியா, இல்லை உடனடி காபியா” என்ற கேள்வி ஓடியது. அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது நினைவில் இல்லை.

இன்று:

கண் விழித்து, எழுந்து நின்று பத்து நிமிடங்கள் ஆகிறது. மணி அநேகமாக 7, 7:30 இருக்கும். வெயில் சுளீரென்று அடித்துக் கொண்டிருந்தது. இன்னும் அதே கல்யாண மண்டபத்தின் வாசலில்தான் இருக்கிறேன். ஆனால் அந்த பெரியவர், அவர் மனைவி, மகள் யாரும் அங்கு இல்லை. அவர் ஊன்றி நடப்பதற்கு வைத்திருந்த அந்த கட்டைகள் மட்டும் என் பக்கத்தில் இருந்தன.

என்ன நடந்தது என்ற குழப்பத்துடன், பாக்கெட்டில் கைவிட்டேன். என் பர்ஸ், நான் வைத்திருந்த 1000 ரூபாய், வண்டி சாவி கைப்பேசி என ஒன்றுமே இல்லை.

நடந்தது புரியும்போது, அழுகையும் கோபமும் சேர்ந்து வந்த அதே நேரத்தில், “சட்டையும் பேண்ட்டையும் உருவாமல் விட்டார்களே” என்று தோன்றியது.

“நான் ஒரு முட்டாளுங்க” என்ற பாடல் ஏதோ ஒரு ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருந்தது கேட்டது. எனக்காகவே எழுதப்பட்ட வரிகளோ என நினைத்துக்கொண்டு, ஏதாவது ஒரு ஆட்டோவில் ஏறி வீட்டுக்குச் சென்றுவிடலாம் என நினைத்து, நடக்கத் தொடங்கினேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *