திருச்சிற்றம்பலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 2, 2024
பார்வையிட்டோர்: 1,428 
 
 

(1973ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருச்சிற்றம்பலம் இப்படிச் செய்வான் எனச் சண்முகலிங்கம் எதிர் பார்க்கவே இல்லை. சண்முகலிங்கம் மட்டுமல்ல திருச்சிற்றம்பலத்தோடு பழகிய வேறு யாருங்கூடத்தான் திருச்சிற்றம்பலத்தின் இந்த முடிவை நினைத்திருக்க மாட்டார்கள். 

சண்முகலிங்கம் புரண்டு புரண்டு படுத்தும் நித்திரையே வரவில்லை. அடுத்த அறையிலிருந்து இலேசாக யாரோ இருமுவது கேட்டது. அந்த மனநிலையில் மெல்லிய இருமலும் மூளையைத் தகர்க்கும் பேரோசை போலச் சண்முகலிங்கத்தின் மனதைத் தாக்க, சண்முகலிங்கம் கனத்துக் கறுத்த இருள் செறிந்திருந்த அந்த அறையை வீட்டு வெளியே வந்தான். 

வெளியே நிலவு மங்கிக்கிடந்தது. முனையுடைந்த கடற் சிப்பிபோல நிலவும் பியந்ததுபோல வடிவமற்ற பாதியாய் மங்கி, சோம்பலான பிரகா சத்தை வீசிக்கொண்டிருந்தது. இரண்டொரு முகிற்திரள்கள் மேலும் கீழும் கிழிந்து காற்றுத் திசையோடு ஓடிக்கொண்டிருந்தன. இதுபோன்ற ஒரு நிலவுக்காலத்தின்போதுதான் திருச்சிற்றம்பலமும் சண்முகலிங்கமும் முதன் முதலிற் சந்தித்தார்கள். அந்தச் சந்திப்பு நிகழ்ந்து இரண்டு வருஷங்கள் கழிந்திருக்கலாம். திருச்சிற்றம்பலத்தின் தோற்றமோ பேச்சோ எவரை யும் கவரக் கூடியவை அல்ல. அதுவும் அவன் பேசுவது புத்தகவசனங்களை ஒப்புவிப்பதுபோலக் கேட்டவருக்கே மனதினுள் சிரிப்பைத் தோற்றுவிக் கும். எப்போதும் பின்னாலே முதுகைச் சுரண்டிக்கொண்டிருக்கும் இடதுகை ஒன்று தான் அவனை நினைக்கையில் மனதிலே உருவமாய் விழும். அடிக் கடி சுளித்துக்கொள்ளும் அந்த மயிரடந்த புருவங்களின் கீழே நம்பிக்கை வறட்சி தோய்ந்த அவனின் கண்கள் லேசாக அடைபட்டிருந்தன. திருச் சிற்றம்பலத்தின் தடித்த உதடுகள் மலர்வது வெகு அபூர்வம். திடீரென அரிதாக அவன் இதழ்களில் புன்னகை தவழும்; அப்படிப் புன்னகைத் தாலும் முகத்திற் பிரகாசம் கொடுத்த சில கணங்களிலே அந்த சிரிப்பு புஸ்என்று அழிந்து விடும். சிரிப்பதையும் ஓர் குற்றமான செயல் என நினைப்பது போலிருந்தது திருசிற்றம்பலத்தின் போக்கு. 

முல்லைத்தீவுக்கு அரசாங்க எழுதுவினைஞனாக நியமிக்கபட்ட சண் முகலிங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் – அங்கு யாருமே அவனுக்குப் பழக்கமாகாத நிலையில், போன முதல் வாரத்தில் கடற்கரையிலுள்ள மீன் பிடிப்பட கொன்றின் பக்கத்தில் தனிமையில் உட்கார்ந்திருந்தான். மணல் பரந்து மனதினுக்கே இனம் புரியாத அமைதியினைக் கொடுக்கும் அக்கடற்கரையில் அலையின் வயிறு குலுங்கும் கத்தலைத் தவிர வேறு ஒலியில்லை. அந்த ஓசை கூட அக் கடற்கரையின் மௌனத்தை ரசிக்கவைக் கும் பின்னணியாக ஒலித்தது. எவ்வளவு துயரச்சுமையோடு போகிறவனது மனதையும் அந்த கடற்கரையின் பரந்த தன்மையும், உயர்ந்து விழுந்து நுரைசீறும் அலைகளின் எழிலும், அந்த கருநீல வண்ணத்தின் குளிர்மையும் கழுவி அமைதி கொடுத்து விடும் என அன்று சண்முகலிங்கம் நிணை த்தான். வேலையால்களைத்து அலுவலகத்திலிருந்து திரும்பி மாலை வேளைகளில் கடற்கரையில் போயிருக்கும் சண்முகலிங்கத்திற்கு இந்த அனுபவம் வாழ்வோடு என்றும் பிணைந்திருக்க வேண்டுமென்ற மன விருப்பமிருந்தது. பணமில்லாமல் அனுபவிக்கும் இச்சுகத்தை அவன் மனதார விரும்பினான். 

அலையின் நீண்ட கரமொன்று நுரையோடு சீறிக் கிளம்பி சோகி ஒன்றைக் கரையில் எற்றி உதைத்துத் திரும்பிற்று. முதுகோட்டில் சிவப்பு வரிகள் நிறைந்த நண்டுக் குஞ்சொன்று கிளு கிளுவென்று வெகு தூரம் மணலுக்கு வந்துகொண்டிருந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்த சண்முகலிங்கம் யாரோ கூப்பிட்ட உணர்வில் பின்புறமாகத் திரும்பிப் பார்த்தான். 

இடது கையால் பின்முதுகைச் சுரண்டிக்கொண்டு தன்னை அழைத்த அந்த உருவத்தைச் சண்முகலிங்கம் கண்டிருக்கின்றான். முல்லைத்தீவின் புத் தகக் கடை ஒன்றிலே கண்டதாக நினைவு. 

‘ஏன் கூப்பிட்டீர்?” என்கிற கேள்வியைச் சண்முகலிங்கத்தின் கண்க ளாலேயே கிரகித்துக்கொண்ட அந்த மனிதன் அதற்குப் பதிலாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். அவன் பெயர் திருச்சிற்றம்பலம். முல்லைத் தீவிலுள்ள ஒரே புத்தகக் கடையான சரஸ்வதி புத்தக நிலையத்தில் நிக்கிறான். 

திருச்சிற்றம்பலம் சொன்னவற்றைப் புருவத்தைச் சுழித்துக் கொண்டே சண்முகலிங்கம் கேட்டுக்கொண்டிருந்தான். நேரம் போகப் போக இருவரிடையேயும் ஒருமன நெருக்கம் தோன்றிற்று. முதற் சந் திப்பிலே தங்களிடையே இறுகிய பிணைப்பொன்று தோன்றி விட்டதாய் இருவரும் தங்களுக்குள் உணர்ந்து காண்டார்கள். திருச்சிற்றம்பலம் எப்போதுமே உரத்தகுரலிற் பேசுவான். மற்றவர்கள் தன்னைப் பார்த்து கேலி செய்கின்ற வேளைகளில் மட்டுமே அவன் மனங்சோர்வுடன் வாய்க் குள் முணுமுணுத்துக் கொண்டு போவான்; காற்பெருவிரலால் நிலத்தைத் தேய்த்துக்கொள்வான். 

முல்லைத்தீவில், மத்தியதரவர்க்கத்துக்கு கீழ்த்தட்டினருக்கு தங்கு வதற்கென்றுள்ள அந்தப் பெரிய வீட்டில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அதில் தனியாக வாழ்ந்தான் சண்முகலிங்கம், அந்தப் பெரிய வீட்டின் எல்லா அறைகளிலும் பலர் வாடகைக்கு இருந்த போதிலும் அவர்களில் யாருடனும் சண்முகலிங்கம் மனம் விட்டு பழகியதில்லை. 

சண்முகலிங்கம் முல்லைத்தீவுக்கு உத்தியோகம் பார்க்க வருமுன்பு திருச்சிற்றம்பலம் சரஸ்வதி புத்தக நிலையத்தின் முன்புறத்திலுள்ள ஓடுங் கிய திண்ணையில்தான் படுப்பது வழக்கம். எலும்புகளையே நக்கிச் சுரண்டும் ஊசி நாக்கு, அங்கு வீசும் பனிக்காற்றுக்கு. அதுவும் கடற்காற்று. கடையின் முன் திண்ணையில் குறண்டிக்கொண்டு சின்னப் போர்வைக்குள் வெடவெடக்கும் திருச்சிற்றம்பலம் ஓயாது மூக்கைச் சிந்தி உறிஞ்சிக்கொண் டிருந்தான்; எவ்வளவுதான் தலையைக்காவை மூடினாலும் கிஸ்சென்ற பனிக் காற்று அவன் மூடிப்போர்த்த போர்வைக்குள நிரம்பிப் பம்மி விழும். ஓயாத தடிமன் காரணமாக விக்ஸ் டப்பி ஒன்றை அவன் தன்னுடைய மடிக்குள் பத்திரமாக வைத்திருந்தான். வந்த புதிதில் திருச்சிற்றம்பலத் தின் இருக்கை பற்றி சண்முகலிங்கம் ஒன்றுமே விசாரிக்கவில்லை. அங்கு இருக்கத்தொடங்கி ஒரு மாதங்கழிந்த பின்னர்தான் சண்முகலிங்கத்தோடு ஓரளவு அறிமுகமாயிருந்த இரத்தினசிங்கம் திருச்சிற்றம்பலத்தின் இந்தப் பேய்த்தனமான வேலையைப் பற்றிச் சொன்னான். 

மறுநாள் மாலையில், சண்முகலிங்கமும், திருச்சிற்றம்பலமும் கடற் கரையில் இருந்து கதைத்துக் கொண்டிருக்கையில் நட்புக் கலந்து தொனித்த அழுத்தமான குரலில் தன்னுடைய அறையிலேயே திருச்சிற்றம்பலத்தை யும் வந்து தங்கும்படி சண்முகலிங்கம் வேண்டிக்கொண்டான். திருச்சிற் றம்பலம் ஒரு உதிரித் தொழிலாளியாக இருந்தபோதிலும் தனது நட் புக்கு மிக அவசரமாய் ஒருவன் தேவைப்பட்டதால் மட்டுமல்லாது திருச் சிற்றம்பலத்தின் ஒளிவுமறைவற்ற குணங்கள் காரணமாகவும் சிருச்சிற்றம் பலத்தோடு சண்முகலிங்கம் சினேகிதம் வைத்துக் கொண்டான். 

திருச்சிற்றம்பலம் தனது உடமைகளோடு சண்முகலிங்கத்தின் அறைக்கு வந்தான் – ஒரு பழைய சூட்கேசுக்குள் உடுப்புகள், அரைப் பழ மண்ணெண்ணைக் குக்கர், சில புத்தகங்கள், கடதாசிப் பெட்டி நிறைய தட்டுமுட்டுச் சாமான்கள், இவற்றை எல்லாம்விட விசேஷ கவ னத்துடன் கோண்டுவரப்பட்ட இரண்டு படங்கள், ஒன்று விநாயகர் படம், மற்றது அவனின் குடும்பப் படம். அதுவும் ஓடுகின்ற தண்ணீரிலே தோற்ற மளிக்கும் பிரதிபிம்பம் போல உருவம் மங்கிக் கிடந்தது. 

இவைதான் அவனின் சொத்துக்கள்! 

சண்முகலிங்கம் நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். 

மிட்டாய்க்காரனின் மிஷினுக்குள் அரைபட்டுவரும் தும்பு மிட்டாய் போல முகிற் குவியல்கள் வானத்தின் கிழக்கு மூலையில் துணுக்குகளாய் ஒடிக்கொண்டிருந்தன. அவ்வேளையில் சண்முகலிங்கத்தின் மனத்திற்குள் இனந்தெரியாத பொருமல், கூக்குரல், பயங்கரம் யாவும் கலந்து சீறிற்று. 

திருச்சிற்றம்பலம் எங்குபோய் எப்படி…? 

தன்னுடைய அந்தச் சொத்துகளை தனது வீட்டு விலாசத்துக்கே அனுப்பும்படியும், தன்னையாருமே தேடவேண்டாம் என்று வெகு உருக்க மாகவும் எழுதிவைத்துவிட்டுத் திருச்சிற்றம்பலம் இன்று பகல் எங்கோ போய்விட்டான். எல்லோரிடமும் அவனைப்பற்றி விசாரித்தாகிவிட்டது. அவன் மிகவும் கவலை தோய்ந்த முகத்துடன் வந்து தன்னிடம் திறப்பைத் தந்துவிட்டுச் சாப்பிடப்போய் வருவதாய்ச் சொல்லிவிட்டுப் போனவன் மாலைப்பொழுதாகியும் திரும்பிவரவில்லை என்று சொன்னதோடு திருச்சிற்றம்பலம் காணாமற் போனது பற்றிய கவலையை சரஸ்வதி புத்தக நிலையச் சொந்தக்காரன் தீர்த்துக்கொண்டான். திருச்சிற்றம்பலத்தின் இந்த மாதச் சம்பளத்தை இன்னமும் கொடுக்காதபடியால் அப்பணம் தனக்கு இலா பம் என எண்ணி புத்தகக் கடையின் சொந்தக்காரன் சந்தோஷங்கொண் டான். நன்றாகக் கேட்டுப் பார்த்ததில் பகல் பத்து மணிக்கு மாங்குளம் என்ற இடத்திற்குப்போன பஸ்ஸில் திருச்சிற்றம்பலம் போனதாக அறிய முடிந்தது. 

திருச்சிற்றம்பலம் ஏன் இந்த முடிவுக்கு வந்தான் என்பதை சண் முகலிங்கம் பல தடவை மூளையைக் குழப்பியும் தீர்மானித்துக்கொள்ள முடியவில்லை. சிலவேளை திருச்சிற்றம்பலம் தற்கொலை செய்துகொள்வதற் காக… இருக்காது, அவன் தன்னுடைய குடும்பத்தை மிகவும் பொறுப் புடன் தாங்கி வாழ்பவன். தன்னுடைய தாய், தங்கச்சி, தம்பி ஆகி யோருக்காகலே உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதாக அவனே அடிக்கடி சண்முகலிங்கத்துக்குச் சொல்லியிருக்கிறான். 

ஆனால் அவன் சண்முகலிங்கத்திற்கு எழுதின அந்தக் கடிதம், அவனின் அந்தச் சொத்துக்களைத் தன் குடும்பத்தினரிடம் சேர்க்கும்படி எழுதி யிருந்த விதம், தன்னையாருமே தேடவேண்டாம் என்றும், இனிக் கவலை களற்ற உலகில் தான் வாழப்போவதாயும் எழுதிய உருக்கம்… இவைகள் யாவும் தற்கொலை செய்யத் தீர்மானித்தவனின் முன் முயற்சிகள் தானே! 

*** 

திருச்சிற்றம்பலத்திற்கு முப்பத்தியாறு வயதாகி விட்ட போதிலும், தோற்றமோ நாற்பது வயதை மதிப்பிடவைத்தது. முன்னுச்சி மயிர் முற் றாக உதிர்ந்து ஏறு நெற்றி விழுந்தது, திருச்சிற்றம்பலத்திற்குள் உள்ளூர் மனதை அரிக்கும் கவலையாக இருந்தது. சண்முகலிங்கம் அறைக்குள் இல் லாத வேளைகளில் கண்ணாடியைத் தலைப்பக்கமாகச் சரித்து பல கோணங் களிலும் வைத்துப் பார்த்து தனது தலையில் விழும் வழுக்கைக்காகத் தனக்குள் தானே மனம் வெதும்புவான். 

மெல்லிய சன்னமாக உடைந்த குரலில் தன்னுடைய நிலைமையைச் சொல்லித்தானே மனம் அலுத்துக்கொள்வது அவனுக்கு நித்திய தொழி லாகிவிட்டது. வாழ்ந்துதான் என்ன பிரயோசனம்? என்று மனம் புழுங்கு கிற அதே வேளையில் அதே மனம் அவனை மறுபுறத்தில் ஒரு சுயநலக்காரன், பொய்யன் என்று சுட்டிக்காட்டவும் தவறுவதில்லை. தான் வாழ் வதே தனது குடும்பத்தின் நல்வாழ்வுக்காக என்று அடிக்கடி சொல்லும் அவனுக்கு, மனம் முற்றாக அலுத்துக்களைத்த வேளையில் அதே விரக்தி தோய்ந்த வசனங்களே ஓயாமல் வாயிலும் நினைவிலும் வரும். 

திருச்சிற்றம்பலமே அவனது குடும்பத்தின் சுமைதாங்கி. 

திருச்சிற்றம்பலத்தின் தாய் பொன்னம்மா ஓயாத நோயாளி. அவ னது தங்கச்சி அன்னலெட்சுமிக்கு இருபத்தியேழு வயது. தம்பி விநாயக மூர்த்தி எச். எஸ். ஸி. வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறான். பொன் னம்மா கணவனை இழந்த பின்பு பலகாரம் சுட்டு விற்று வாழ்க்கையை ஒரு மாதிரித் தாக்காட்டிக்கொள்ள முயன்றபோதும் அது மிகவும் சிரம மாக இருந்தது. அதோடு சிறுவயதிலிருந்தே திருச்சிற்றம்பலம் படிப்பில் மிகவும் குறைவாக இருந்தபடியினால் அப்போதே ஏதாவது வேலைக்கு அவனை அனுப்ப முடிவெடுக்கப்பட்டிருந்தது. அன்னலெட்சுமி தாயோடு சேர்ந்து விற்பதற்குப் பலகாரங்கள் செய்வதற்கு உதவி ஒத்தாசை செய்துகொண் டிருந்தாள். விநாயகமூர்த்தி நன்றாகப் படிக்கக் கூடியவன். எவ்விதமான கடும் முயற்சிகளுமின்றி, எல்லாப் பரீட்சைகளிலும் முதற்தரமாகச் சித்தி எய்தினான். எஸ். எஸ். ஸி. பரீட்சையிற் சித்தியெய்திய பிறகு சிலருக்கு அவன் ரீயூஷன் சொல்லிக்கொடுத்து அவ்வருவாயிலிருந்தே தொடர்ந்தும் தன் படிப்பைப் படித்துக்கொண்டிருந்தான். 

ஒரு முறை திருச்சிற்றம்பலத்திடம் முல்லைத் தீவுக்கு வினாயகமூர்த்தி வந்தபோது சண்முகலிங்கம் அவனோடு கதைத்திருக்கின்றான். தமையனைப் போலவேதான் வினாயகமூர்த்திக்கு மயிரடர்ந்த புருவமும் தடித்த உதடு களும். நீள முகமுமாயினும், துறுதுறுத்த கண்கள் அவனைப் பார்த்த பார் வையில் மனதைப் பதியவைப்பனவாயிருந்தன. வினாயகமூர்த்தியோடு கதைத்த சில நிமிஷங்களிலேயே அவன் புத்திகூர்மையுள்ள திறமைசாலி என்பதனைச் சண்முகலிங்கம் உணர்ந்துகொண்டான். 

வினாயகமூர்த்திக்கு மேற்படிப்புப் படிக்கவேண்டுமென்ற ஆசை மனம் நிறையவே இருந்ததை அவனுடைய தயக்கமான கதைகளிலிருந்து சண் முகலிங்கம் கிரகித்துக் கொண்டானாயினும் அதையிட்டு எவ்விதமான அனு தாப உணர்ச்சியையோ, உற்சாகத்தையோ காண்பிக்கவில்லை. அதற்கு அவன் மனதிற்குள்ளேயே காரணம் இருந்தது. வினாயகமூர்த்தி அங்கு வந்து நின்ற சில நிமிஷங்களுக்குள்ளேயே அந்த இன்ரவியூவுக்குப் போனாயா, இந்த வேலைக்கு மனுப்பண்ணினாயா? என்ற கேள்விகளால் திருச் சிற்றம்பலம் அவனைத் துளைத்தெடுத்துவிட்டான். தமையன் அறையில் இல் லாதபோது வினாயகமூர்த்தி நடந்து கொண்டவிதம், கதைத்தகதைகள், சீறியெழுந்த பெருமூச்சுகள் ஆகியன தனது வாழ்க்கையின் முன்னேற்றத் திற்கும், சிறப்பிற்கும் திருச்சிற்றம்பலமும் ஒரு தடை என்ற குறுகுறுப் புணர்ச்சியினை மௌனமாக ஆனால் விசனத்தோடு தெரிவிப்பதனைப் போலிருந்தது. 

வினாயகமூர்த்தி அங்கிருந்து போய்விட்ட பிறகு, திருச்சிற்றம்பலத் தோடு சண்முகலிங்கம் இலேசாகக் கதையைத் தொடங்கினான். 

“வினாயகமூர்த்தி நன்றாகப் படிக்கக்கூடியவன். அவனை ஒருமாதிரிக் கஷ்டப்பட்டு மேலுக்குப் படிக்கவைத்தால் என்ன?” 

மெலிந்து முகம் வாடியிருந்த திருச்சிற்றம்பலம், முதுகைச் சுரண்டிய. இடது கையைக் கன்னத்திற்கு இழுத்து, உறிஞ்சிக்கொண்டு சிறிது நேரம் மௌனமாயிருந்தான். தனது தடித்த உதடுகளை நாக்கினால் நனைத்து ஈரப் பசையாக்கினான். 

”உமக்கு என்ன? வெகு இலேசாகச் சொல்லிவிட்டீர். இப்போதே நான் படுங்கஷ்டங்களும் ஏற்றிருக்கும் சுமைகளும் என்னாலே தாங்கமுடி யாதவைகளாக உள்ளன. எத்தனை செலவுகள்… வை எல்லாவற்றையும்விட..” 

திருச்சிற்றம்பலத்தின் உடைந்து உருக்குலைந்த குரல் தளதளத்துக் கலங்கிற்று. சிறிது நேரம் கடலின் சுதறலைத் தவிர வேறு ஒலிகளின் குறுக்கீடற்ற சூழலில் அவர்கள் இருவருமிருந்தனர். 

“நான் எப்போதாவது போயா விடுமுறை நாள். விசேட நாள் என்று வீட்டிற்குப் போனதை நீர் கண்டிருக்கின்றீரா? தொண்ணூறு மைல் தூரமுள்ள என் வீட்டை தொளாயிரம் மைல் தூரத்திலேயுள்ள இடமாகக் கருதிக்கொண்டு, குடும்ப நினைவொன்றையே ஏக்கமாகச் சுமந்து கொண்டு நான் இங்கு இங்கு எப்படி வாழ்கிறேன் என்று உமக்குத் தெரியாதா” 

அந்த வார்த்தைகள் சுமந்து வந்த துயரம், சண்முகலிங்கத்தின் மன அந்தரங்கத்தையே சுண்டி இழுத்தது. 

சண்முகலிங்கத்திற்குக் கிடைக்கும் லீ வுகள் எல்லாவற்றையும் அவன் தன்னுடைய வீட்டிற்குப் போய் நின்று வருவதிலேயே கழித்தான். சண்முகலிங்கம் வீட்டிற்குப் போக முன் அறைத் திறப்பைத் திருச்சிற் றம்பலத்திடம் கொடுக்கும்போது மனதின் துயரை முகத்தில் காட்டாது மறைக்கும் முகபாவத்தோடு அவனிடம் திருச்சிற்றம்பலம் திறப்பைப் பெற்றுக்கொள்ளுவான். வீட்டுக்குப் போவது பற்றிய கதை வந்ததாயின், போய்த்தான் என்ன பிரயோசனம்? என்ற தொனிப்பில் ஏதாவது சொல்லி மனதைப் பிளக்கும் வேதனையையும், சஞ்சலத்தையும் நெஞ்சி னுள்ளே அடக்கி அந்தப் பேச்சையே திருச்சிற்றம்பலம் வழிமாற்றித் தடம் புரளவைப்பான். இன்றுதான் திருச்சிற்றம்பலம் தன்னுடைய வீட் டிற்குப் போகாமலிருக்கும் காரணமே சண்முகலிங்கத்திற்கு விளங்கிற்று. 

“எப்பிடித்தான் மிச்சம் பிடிக்க முயற்சித்தாலும் ஒரு பிரயோச னமும் இல்லை. என்னுடைய மனதினை இரும்புக் குண்டுகள் போல பிரச் சினைகள் நசித்து அமுக்கிக்கொண்டு இருக்கின்றன. சில வேளைகளில் இந் தத் துன்பங்களுக்கு எல்லாம் அஞ்சி அவற்றை மனத்தில் இருந்து பிய்த் தெறிவதற்காக நான் புத்தகங்களிடம் தஞ்சம் அடைவேன். அவைகூடச் சில வேலைகளில் என்னைத் துயரத்தில் ஆழ்த்தி விடுகின்றன 

விழிகளைத் தாழ்த்தி யோசித்த படியிருந்த அவனைச் சண்முகலிங்கம் ஆச்சரியத்தோடு பார்த்தான். அவன் குனிந்தபடியே மெலிந்த குரலில் புத்தகத்திலுள்ள வசனங்களை உணர்ச்சி ததும்ப வாசிப்பவனைப் போலக் கதைத்துக் கொண்டிருந்தான். ஓயாமல் புத்தகத்தைப் படித்துக் கதைப் பதைக் குறைத்துக் கொண்டமையினால் புத்தகத் தமிழே பேச்சுத் தமி ழாகி, அவன் பேசுவதே மற்றவர்களுக்கு விசித்திரமாகிவிட்டது. அவன் பேசுவதை முதலிற் கேட்பவர் அவன் வேண்டுமென்றே அப்படிக் கதைப் பதாய் நினைத்து விடுவார்கள். அவனோடு பழகிய ஆரம்ப நாட்களில் சண்முகலிங்கமும் அவனைப்பற்றி அப்படித்தான் நினைத்தான். பழகியவர் களுக்கே விளங்குபவனாய் இருந்தான் திருச்சிற்றம்பலம். 

தன்னை மறந்து உணர்ச்சியில் சொல்லிக்கொண்டு போன திருச் சிற்றம்பலம், மௌனமாய் ஏதோ மனதினுள் நினைத்து எங்கோ பார்த் துக் கொண்டிருந்தான். புன்னகை செய்வதே குற்றமென நினைக்கும் அவ னது இறுகிய தடித்த உதடுகளில் இலேசான துயர நடுக்கமிருந்தது. 

“தம்பி, இப்போது என்னைப் பாரும், எனக்கு முப்பத்தியாறு வயது. ஆனால் நான் அரைக் கிழவனாகிவிட்டேன். தங்கச்சிக்கு இருபத் தியேழு வயது. கிராமப் புறத்தில் இருபது வயதிற்குள்ளாகவே பெண் களுக்குத் திருமணமாகிவிடுவதுண்டு. ஊருக்கு நான் மிகவும் ஆசையோடும் ஆர்வத்தோடும் போனால், ‘தங்கச்சிக்கு எப்போது திருமணம் செய்து வைக்கப் போகிறாய்’ என்ற சொந்தக்காரரின் துளைச்சலைத் தாங்கவே முடியாது… அன்னலெட்சுமிக்கு எப்படி நான் கலியாணம் செய்து வைக்கப் போகின்றேன்? என்னுடைய கதைதான் முடிந்து போய்விட்டது.. தங்கச்சியென்றாலும்…” 

மனதில் சாம்பல்பூத்த துயரம் அந்த மெளன நிலவு காலத்தின் இலேசான ஒளியிலும். அவனையும் மீறி அவன் முகத்திலே பீறிட்டழுத தைப் பார்த்துவிட்டுச் சண்முகலிங்கம் ஏதோ சொல்வதற்கு வாய் உன் னியபொது திருச்சிற்றம்பலம் வேட்டித்தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டு மூக்கை உறிஞ்சினான். அது துளிர்த்த கண்ணீரைத் துடைத்த தோர் பாசாங்கு என்பதனைச் சண்முகலிங்கம் மயங்கிய வெளிச்சத்தில் தெளிவுறத் தெரிந்துகொண்ட போதும், அதனைக் காணாதவனேபோலப் பாவனை செய்து எதையாவது சொல்லியாகிலும் திருச்சிற்றம்பலத்தை ஆறுதல் படுத்த நினைத்தான். 

“எந்த நாளிலும் கஷ்டம் இருக்கிறதில்லை. வெய்யிலும் நிழலும் மாறி மாறி வருகிறதுதான்: நீங்கள் வீணாய் யோசியாதையுங்கோ” 

சண்முகலிங்கத்தின் சாக்குருவி வேதாந்தத்தைக் கேட்டு திருச்சிற் நம்பலத்தின் இறுகிய உதடுகள் கேலியாக நெளியாத போதிலும், விரக்தி சிரிக்கும் கண்களினால் அவன் சண்முகலிங்கத்தைப் பார்த்தான். 

“நீர் கந்தோரிலே இருந்து எழுத்து வேலை செய்கிறதைத் தவிர வேறு எதையுமே அறியவில்லை. முன்னும் இருபத்தி ஐந்து வயதிலேயே நானும் இப்படித்தான் வாழ்க்கைக்கு உதவாத பழமொழிகளையும், வெற் றுரைகளையும் கூறிக்கொண்டு திரிந்தேன்… ஆனால் வாழ்க்கையில் நாங் கள் நேர்நேராக நின்று அனுபவம் பெறுகிறபோதுதான் உண்மை நிலைமை தெரியும். வெய்யில் இருந்தால் நிழலும் இருக்கும் என்று சொல்லுகிறீர்… முப்பத்தியாறு வருஷங்களாய் நான் வெய்யிலிற்குள்தான் நிற்கின்றேன். இனி எப்போது தான் நிழல் வரும்? நான் இப்போதே அரைக்கிழவன்… இனி என்னை எவள்தான் கலியாணம் முடிக்கச் சம்மதிப்பாள்?” 

திருச்சிற்றம்பலத்தின் மன அவஸ்தைக்கான மூலக்குரல் அவனை யறியாமலே வெளியில் ஓசையிட்டது. 

உண்மைதான், இதோ காய்ந்து கருகி, விரக்தியே ஒலியாய், உரு வாய் நிற்கும் திருச்சிற்றம்பலத்துக்கு இனி நிழல்தான் இருக்கின்றதா? திருச்சிற்றம்பலம் மட்டுமா… அவன் தங்கச்சி அன்னலெட்சுமி… இது போல இன்னும் எத்தனை பேர்? இவர்கள் ஓயாத விசாரம் என்ற பாலைவனத்தில் நடந்தலைந்து விரக்தி என்ற மண் மழையினால் மூடுண்டு மடி வதற்கா பிறந்தனர், சண்முகலிங்கத்தின் மன அரங்கிலே கேள்வியலைகள் உருண்டு எழுந்தன. 

கடல், வயிறு கிழிந்து ஓலமிட்டது, 

*** 

திருச்சிற்றம்பலம் வேலை செய்யும் ‘சரஸ்வதி புத்தக நிலையம்’ அப் படியொன்றும் பெரிய கடையல்ல. பாடப் புத்தகங்கள், பள்ளிக்கூட உப கரணங்களோடு, வார, மாத இதழ்களும் கதைப் புத்தகங்களும் அங்கு விற்கப்பட்டன. அநேகமாக வியாபாரம் மந்தமாகவே இருக்கும். பொழு தைப் போக்குவதற்காகத் திருச்சிற்றம்பலம் மும்முரமாகப் புத்தகங்கள் வாசிப்பதுண்டு. மனதை எங்கோ பறக்கவிட்டு உணர்வின் எல்லைகளை மீறிப் புதிய உலகினைப் புத்தகங்களிற்கூடாகத் தரிசனம் செய்து கொண்டிருக்கையில் இடையில் மனம் திடீரென்று திசைமாறி விழிப்புறும்போது சுவாரஸ்யம் துக்கமென்னும் கத்தியால் அதலகுதலமாக வெட்டப்பட்டு விடும். ஏனென்றால் காதல் நாவல்களினை வாசித்துக்கொண்டிருக்கும்போது கதாநாயகன் என்ன சொகுசாய் கம்பீரமாய் வருகிறான். அவனைத் தேடிக் காதல் ததும்பும் இதயத்தோடு கடற்கரைக்கு அழகுசுந்தரி வருகின்றாள். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் மோகந்ததும்ப மெய்மறந்து பார்த்திருக்கின்றார்கள். அவள்தான் என்ன லாவண்யமாக வெட்கப்படுகிறாள் – திருச்சிற்றம்பலத்தின் உணர்வுகள் தகிக்கின்றன அவனுடைய அணைப்பினுள்ளே அந்தக் கதாநாயகி. அவளின் கைகளையே தன் கழுத் திற்கு மாலையாக்கி, அவள் கைகளை எடுத்துத் தன் தோள்களில் அவன் ஆசையோடு படரவிடுகின்றான். பாதி மூடிய கண்களோடு தோளில் சாயும் அவளின் கன்னத்தோடு முகம் உராயும் கதாநாயகனின் மூச்சுமட்டுமா தகிக்கின்றது; இதோ திருச்சிற்றம்பலத்தின் மூச்சுந்தான் கொதிக்கின்றது ..! 

சட்டென்று திருச்சிற்றம்பலத்தின் மானசீகக் கனவு கலைந்துவிடும். முன் வழுக்கை விழுந்த தலையைத் தடவியபடியே வெறுப்போடு புத்த கத்தை அடித்து மூடி மேசையில் போட்டுக்கொண்டு தன்னைத்தானே அரு வருத்துத் திட்டுவான். 

“சீ, மண்ணாங்கட்டிக் கனவுகள்! அரைக் கிழவன். அதற்குள் அவ ருக்குக் கண்டறியாத காதல் நினைவுகள்…” 

அந்த வேளையில் சுகத்தோடும் சொகுசோடும் உலகில் வாழ்பவர் கள் அவனுக்கு எதிரியாகி விடுவார்கள். தன் நிலைமைக்கு அவர்களே காரணஸ்தர் என்ற முடிவின் ஆவேசத்தோடு அவர்கள் முழுப்பேரினதை யும் கழுத்தைத் திருகிக்கொல்ல அவனது மனம் ஆவேசங்கொண்டு றும். புருவங்கள் சுழியிட்டு வாய் முணுமுணுக்கும். கடைசியில் இப்படி யொரு நாள் மன வெதும்பலில் இருக்கும்போதிலே யாரோ ஒருவன் ‘அண்ணை’ என்று திருச்சிற்றம்பலத்தைக் கூப்பிட்டமைக்காக அவனை அடிப்பதற்குத் திருச்சிற்றம்பலம் வரிந்து கட்டிக்கொண்டு போய்விட்டான். 

”என்னடா. உனக்கு இப்போது வயதென்ன? கலியாணமாகி மூன்று பிள்ளைகள் உனக்கு, என்னை நீ அண்ணையென்று சொல்லிக் கேலியா செய் கிறாய்? மடையா, என்னை அரைக் கிழவன் என்று நினைத்தா கேலி செய் கிறாய்?” 

வந்தவன் நடுங்கிவிட்டான். தலைதப்பினால் போதும் என்ற யோ ச னையில் அங்கிருந்து நழுவி மறைந்தான். 

சரஸ்வதி புத்தக நிலையத்திற்கு வருபவர்களில் திருச்சிற்றம்பலத் திற்கு மிகவும் பிடித்தமானவன் இரத்தினசிங்கம். மலர்ந்த முகத்தோடு விளங்கும் அவன், அனாவசியமாக எதையும் கதைக்கமாட்டான். அவனும் ஒரு கடைச் சிப்பந்தி; அத்தோடு அங்குள்ள கடைச்சிப்பந்திகள் சங்கத் தில்’ செயலாளராகவும் இருந்தான். 

ஏதாவது கதைத்துக் கொண்டிருந்தாலும் அதன் முடிவில் இரத்தின சிங்கம் ஒரு விஷயத்தைச் சொல்லத் தவறமாட்டான். 

“மனிதனை மனிதன் சுரண்டிக் கொழுக்கும் உலகிலே நாங்கள் வாழுகின்றோம். வாழ்க்கையின் பண்பற்ற தன்மையையும், அரக்கத்தன மான கொடுமைகளையும் நாம் சகித்துக் கொண்டு வாழ, அதுவே விதி யென்று வாழக்கூடாது. விதிகளின் அடிமை அல்ல மனிதன். தனியாக ற்பதன் மூலம் எங்கள் கஷ்டத்தை முறியடிக்க முடியாது. உம்மையும் என்னையும் போன் உதிரித் தொழிலாளிகள் விவசாய தொழிலாளி வர்க்கத்தோடு ஒன்றிணைந்து போராடுவதின் மூலமே விமோசனங் காண முடியும் ..” 

இரத்தினசிங்கம், சண்முகலிங்கத்திற்கும் நண்பனாக இருந்ததால் சிற்றம்பலத்தோடு இரத்தினசிங்கத்தின் நட்பு மேலும் இறுகிற்று. திருச் சிற்றம்பலத்தின் மனப் பலவீனங்களை இரத்தினசிங்கம் மிக 

அனுதாபத் தோடு கவனித்துப் பதில் சொல்வான். சண்முகலிங்கத்தோடு கதைப்ப தற்கும் இரத்தினசிங்கத்தோடு பழகுவதற்குமிடையே பல வேற்றுமைகள் இருப்பதைத் திருச்சிற்றம்பலம் அவதானித்திருந்தான். இரத்தினசிங்கம் திருச்சிற்றம்பலத்தின் சுகதுக்கம், குடும்ப விவகாரம் ஆகியவை பற்றி வெகு அக்கறையாக விசாரிப்பான். அவனுடைய கதைகளில் ஒளிவுமறை விருப்பது இல்லை. சண்முகலிங்கம் தன்னைப் பற்றி விசாரிக்கும் போது ஏதோ ஒரு திரையைத் தனக்கு முன்னர் விரித்துக் கதைப்பது போலவும் சில விஷயங்களை மூடிக் கதைப்பது போலவும் தோன்றும். தானும், இரத்தினசிங்கமும் கடைச் சிப்பந்திகளாகவும், சண்முகலிங்கம் அரசாங்க எழுதுவினைஞனாகவும் இருப்பதே அதற்குக் காரணமாக இருக்கலாம் எனத் திருச்சிற்றம்பலம் மனதினுள்ளே நினைத்துக்கொண்டான். 

இரத்தினசிங்கம் தன்னிடமுள்ள பல புத்தகங்களைப் படிக்கும்படி திருச்சிற்றம்பலத்திடம் கொடுத்திருக்கின்றான். இதுவரையும் காதல் நவீ னங்களையும் துப்பறியும் நாவல்களையுமே ரசித்து வந்த அவனுக்கு இரத் தினசிங்கம் கொடுத்த புத்தகங்களை வாசிப்பது ஆரம்பத்தில் சற்று சிரம மாகவே இருந்தது. ஒருநாள் இரத்தினசிங்கம் ‘தாய்’ என்ற புத்தகத்தைக் கொண்டுவந்து அவனிடம் வாசிக்கும்படி கொடுத்தான். திருச்சிற் றம்பலத்திற்கு முதலில் அதனை வாசிக்க விருப்பமில்லாதபோதும், நடுவிலிருந்து சில பக்கங்களைத் தட்டி வாசித்தான். படித்த பக்கங்கள் பிடித்துக் கொண்டமையால் ஆவலோடு முதலிலிருந்து வாசிக்கத் தொடங்கினான். சுவாரஸ்யத்தோடு புதிய சிந்தனைகளும் அவனது நெஞ்சிலே தோன் றிற்று. அன்று மாலை இரத்தினசிங்கம் ‘வீரம் விளைந்தது’ என்ற இன்னோர் புத்தகத்தைக் கொண்டு வந்து திருச்சிற்றம்பலத்திடம் கொடுத்த போது தலையங்கத்தை மனதினால் வாசித்துவிட்டுத் திருச்சிற்றம்பலம் சண்முகலிங்கத்தை ஊடுருவியபடியே கேட்டான். “என்னைப் போன்றவர் கள் இந்த வீரக்கதைகளைப் படித்து என்ன செய்யமுடியும்? நானென்ன வீரனா, வெறும் ஏழை மனிதன்”

சண்முகலிங்கம்போல மெளனமாகவிராது, இரத்தினசிங்கம் கட கடவென்று சிரித்தான். 

“பணக்காரனும் ஆளணி உள்ளவனுமல்ல வீரன், சோதனைக்கட்டத்தில் மனித சமுதாயத்தின் நன்மைக்காகத் தன்னால் முடிந்ததை எல் லாம் செய்கிறவன்தான் வீரன். நீங்கள் உங்களைப்பற்றி ஒருநாளும் குறை வாக நினைக்கக்கூடாது. எதிலும் தனித்து ஒதுங்கிப் போகக்கூடாது. துன் பப்படுகிறவர்கள் தனித்து நிற்கவில்லை என்பதனை நீங்கள் உணரவேண்டும்.” 

இரத்தினசிங்கம் அனேகமாக தொழிலாளர் போராட்டங்கள். தொழிற்சங்க இயக்கங்கள். சர்வதேச அரசியல் நிலைமைபற்றித் தெரிவிக் கும் பத்திரிகைகளைக் கடைக்குக் கொண்டு வருவது வழக்கம். ஒருநாள் கதையோடு கதையாகத் தொழிற்சங்க இயக்கங்கள் பற்றிக் கூறிவிட்டுத் திருச்சிற்றம்பலத்தையும் தங்கள் தொழிற் சங்கத்தில் சேரும்படி இரத் தினசிங்கம் கேட்டான். அப்போது திருச்சிற்றம்பலம் ஏதோ கூறி மழுப்பிவிட்டான். 

சண்முகலிங்கம் திருச்சிற்றம்பலத்தோடு அரசியல் பேசியதில்லை. “நமக்கென்ன, அரசியலில் பங்குபற்றினால் வேலைக்கு ஆபத்து, பேசாம லிருப்போம்” என்று கூறினாலும் இரத்தினசிங்கத்தோடு அரசியல் இயக் கங்கள் பற்றிக் கதைத்துக் கொள்வதுண்டு. 

வெளியே வானத்தையே பார்த்துக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந் திருந்த சண்முகலிங்கம் மீண்டும் அறைக்குள் வந்தான். அவனுடைய மனம் மிகவும் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தது. அறைக்குள் இருள் மண்டியிருந் தது. கதவை அடுத்திருந்த சுவரிலுள்ள மின்சார சுவிச்சைத் தட்டினான். அறையெங்கும் ஒளி வெள்ளம் பாய்ந்தது. உரத்த அடக்கமுடியாத சிரிப் பினையே கேட்டறியாத திருச்சிற்றம்பலம் வாழ்ந்த அறையின் மேற்கு மூ லை யைச் சண்முகலிங்கம் பார்த்தான். மேற்கு மூலைச் சுவரிலே வினாயகர் பட மும், அவனது குடும்பப் படமும் மாட்டப்பட்டிருந்தன. படங்களின் கீழ ருகாக மண்ணெண்ணைக் குக்கர் வைக்கப்பட்டிருந்தது. அவனது தட்டு முட்டுச் சாமான்களும், புத்தகங்களுமடங்கிய பெட்டிகளின் மேல் அவன் படுக்கும் பாயும், தலையணையும் ஒழுங்காகக் கிடந்தன. அவனுடைய உடுப்பு கள் அடங்கிய சூட்கேஸ் தனியாக ஒரு மூலையில் சாத்தப்பட்டிருந்தது. 

சண்முகலிங்கம் நிறம் மங்கிய அந்தக் குடும்பப் படத்தையே கூர்ந்து கவனித்தான். அந்தப்படத்தினுள்ளிருந்து திருச்சிற்றம்பலத்தின் தாயும் அன்னலெட்சுமியும், வினாயகமூர்த்தியும் தன்னையே உறுத்துப் பார்த்து, “எங்கே திருச்சிற்றம்பலம்? எங்கே என் மகன்? எங்கே எங்கள் அண்ணா? என்று கூவுவது போல இருந்தது. திருச்சிற்றம்பலத்தின் மறைவுக்கு அவன்தான் பதில் சொல்ல வேண்டும். தன் பொருட்களை தன் குடும்பத் திடம் ஒப்படைக்கும்படி உருக்கத்தோடு எழுதி வைத்துவிட்டு மாங்குளம் போன பஸ்ஸிலே திருச்சிற்றம்பலம் ஏறிப் போய்விட்டான். அங்கே நீண்டு ஓடும் புகையிரதத் தண்டவாளங்களை மிதித்து வரும் ராட்சதப் புகையிர தத்தின் சக்கரங்களைத் தன் உடல் மீதேற வைத்து மரணமடையவா அவன் போனான்? 

மாலையில் இரத்தின சிங்கத்தைத் தேடிப் பார்ந்தபோது, அவன் எங்கோ வெளியே போனதாகத் தெரியவந்தது. 

திருச்சிற்றம்பலம், தன் குடும்பத்தின் சுமைதாங்கி தானேதான் என்று எத்தனையோ தரம் பெருமையடித்துக்கொண்டான்; அவற்றையெல் லாம் பொய்யாக்கி விட்டு எங்கோ போனதின் மூலம் தன்னைப் பிறர் துரு வித் துருவி ஆராயும் நிலைக்கு ஆளாக்கி விட்டானே என்று நினைத்த போது கசப்புணர்ச்சியும், ஆத்திரமும் சண்முகலிங்கத்தின் மனதினுள்ளே வெடித்துச் சீறின. 

‘திருச்சிற்றம்பலம் என்னை ஒரு பழிகாரனாக்கிவிட்டு எங்கே நீ போய் விட்டாய்? எனக்கு இப்படியொரு நிலைமையை ஏற்படுத்தித் தருவதற் குத்தானா உன்னை என்னுடைய அறைக்கு நான் கொண்டுவந்து சேர்த்தேன்?’ 


சண்முகலிங்கத்தின் அறையில் திருச்சிற்றம்பலமும், இரத்தினசிங்க மும் சுவாரஸ்யமாக சண்முகலிங்கத்தோடு கதைத்துக்கொண்டிருந்தபோது மேற்கு மூலைச் சுவரில் இருந்த வினாயகர் படத்தையே பார்த்தவண்ண மிருந்த இரத்தினசிங்கம் புன்னகை ததும்பும் முகத்தோடு கேட்டான்: 

“என்ன திருச்சிற்றம்பலம், ‘விநாயகர் படத்தை மட்டுந்தான் வைத்து வணங்குகிறீர்? விநாயகர்தான் உமது இஷ்ட தெய்வமா?” 

இடது கையினால் பின்முதுகைச் சுரண்டிக் கொண்டிருந்த திருச்சிற் றம்பலம் தலையைச் சற்று வளைத்துச் சுவரிலிருந்த விநாயகர் படத்தைச் சிலகணங்கள் பார்த்து விட்டு உரத்த குரலைத் தணித்தபடி சொன்னான்; 

“உண்மைதான், விநாயகர்தான் என் இஷ்ட தெய்வம். ஏனென்றால் விநாயகரும், நானும் ஒரே மாதிரித்தான். விநாயகருக்குத் திருமணமே ஆகவில்லை, எனக்கும் அப்படித்தான். விநாயகர் பருத்த உடலுடையவர். ஆனால் சிறிய எலியே அவருக்கு வாகனம். அந்தச் சிறிய எலி தான் பருத்த உடலைச் சுமக்கின்றது. அதுபோலவே வாழ்க்கையில் கனமான சுமைகளை நானும் சுமக்கின்றேன்”. 

அவன் விரக்தியோடு சொன்னதைக் கேட்ட சண்முகலிங்கம் கடகட வென்று சிரித்தான். ஏறு நெற்றியில் துளிர்த்த வியர்வையைத் துடைத் துக்கொண்டே திருச்சிற்றம்பலம் மௌனமாயிருந்தான். 

இரத்தினசிங்கம் சில கணங்கள் பேசாதிருந்தான், பிறகு தன் கையிலிருந்த புத்தகத்தின் பக்கமொன்றைப் பிரித்தபடியே திருச்சிற்றம்பலத் தைப் பார்த்தான். 

“எதிலும் விரக்தி கொள்ளவேண்டாம். உன்னைப் போலத்தான் உல கிலேயே பலகோடி மக்கள் நசுக்கப்படுகின்றார்கள், தனித்திருக்கவில்லை நீங் கள், உங்களைப்போன்ற மக்களின் இயக்கத்தோடு உங்களை நீங்கள் பிணைத்துக்கொள்ளுங்கள்.” 

குறி பார்த்துப் பாயும் துப்பாக்கிக் குண்டுகள் போலச் சீறின அவன் வார்த்தைகள்; ‘இந்தப் பக்கத்தை ஒருமுறை படியும். “இடது கையினால் முதுகைச்சுரண்டி விட்டு அவனுடைய கையிலிருந்த புத்தகத்தை வாங்கி வாசித்தான் திருச்சிற்றம்பலம். ‘ஒன்றை நீங்கள் உணரவேண்டும். என்னைப் போன்றவர்கள் அந்தக் காலத்தில் தனியாட்களாக இருந்தோம்; சமுதா யத்தின் மாற்றாந் தாய்ப் பிள்ளைகளாக இருந்தோம். நீங்களோ இப்போது லட்சக்கணக்கில் இருக்கின்றீர்கள். தனது பலத்தை உணர்ந்து வைத்துள்ள ஒரு தொழிலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள். உங்களை நசுக்கு கின்ற கொடுமைகளை யெல்லாம் துகள் துகளாக அழித்தொழித்துப் பிர காசமான வாழ்வைக் கட்டியெழுப்ப ஒன்று சேருங்கள்! உலகம் உங்க ளுக்கே உரியது.”

திருச்சிற்றம்பலம் அதைப் படித்துவிட்டு ஒன்றுமே பேசாது சண்முக லிங்கத்தையும், இரத்தினசிங்கத்தையும் பரிதாபத்தோடு பார்த்தபடி எழுந்து அறை மூலைக்குப் போனான். 

அன்றைக்கு அவன் எழுந்துபோன அதே மூலை இன்று வெறுமை யாகிக் கிடப்பதைப் பார்த்த சண்முகலிங்கம் பெருமூச்சொன்றை உதிர்த் தான். அப்போது இரவு மூன்று மணி ஆயிருக்கும். மனப் படபடப்பால் உறக்கம் வராதபோதும் அவனுடைய கண்கள் அரைகுறையாக மூடிக் கொண்டு கெஞ்சின. அறையில் நிறைந்த வெளிச்சம்தான் அவனுக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது. வெளிச்சம் உமிழும் முன் விளக்கையே பார்த் தபடி இருந்தான்…… திடீரென்று யாரோ சிலர் அவனை மாங்குளத்திற்கு அங்கிருந்து அழைத்துச் சென்றார்கள். மாங்குளத்திற்கும், முல்லைத்தீவிற் குமிடையே இடைத் தூரம் முப்பது மைல்கள்தான், ஆனால் அந்த வேக மும் எவ்வளவு சீக்கிரத்தில் அந்தக் காரினால் கடக்கப்பட்டுவிட்டது. மாங் குளம் புகையிரத நிலையத்தில் சண்முகலிங்கம் இறங்கியதுதான் தாமதம் திருச்சிற்றம்பலத்தின் தாயும், அன்னலெட்சுமியும், விநாயகமூர்த்தியும் ஓ வென்று அலறினார்கள். ‘அண்ணனைக் கொன்று விட்டாயே’ ‘என் செல் லத்தைக் கொன்றுவிட்டாயே’ என்ற அழுகையின் பிரலாபம் எங்கும் விம் மியது. சண்முகலிங்கம் ஒன்றுமே பேசவில்லை. புகையிரதத் தண்டவாளங் களைப் பார்த்தான். என்ன கோரம்! புகையிரதச் சக்கரங்கள் திருச்சிற் றம்பலத்தின் உடலைத் துவைத்து நசுக்கியிருந்தன, கழுத்துத் துண்டிக்கப் பட்ட முண்டத்தின் கைகால்கல் சதை சிதறித் தண்டவாளத்தில் அரைந்து இரத்தமும் எலும்புத் துண்டுகளுமாய் விசிறிக் கிடந்தன. திருச்சிற்றம் பலத்தின் தலைமட்டும், உருக்குலையாமல் இரத்தம் தோய்ந்து தொங்கும் கழுத்துச் சதையோடு கற்களிடையே தனித்துக்கிடந்தது, சண்முகலிங்கத் தின் இதயம் அடைத்தது. அடக்க முடியாத வேதனையோடு நெஞ்சைப் பொத்திக்கொண்டான்…… அதற்கு மேலே தரங்கமுடியாத திகிலோடு, வியர்வை பொங்கும் உடலோடு சண்முகலிங்கம் துள்ளியெழுந்தான், என்ன கோரக் கனவு! 

தான் கண்டது கனவென்றறிந்த நிம்மதியிலே முக வியர்வையைத் துடைத்துக் கொண்டு சண்முகலிங்கம் எழுந்தபோது கதவை வெளியே யாரோ படபடவென்று தட்டினார்கள். 


கதவைத் திறந்த சண்முகலிங்கம் திகைத்துப்போய் நின்றுவிட்டான்!

அவன் முன்னே திருச்சிற்றம்பலம், இரத்தினசிங்கத்தோடு நின்றான்.

சண்முகலிங்கத்தின் திகைப்புக் கலந்த மெளனத்தைத் திருச்சிற்றம் பலமே கலைத்தான். 

“என்ன பேசாமலே நிற்கிறீர்?” 

திகைப்புக் குலையவில்லை சண்முகலிங்கத்திற்கு. “என்ன நீர். நீர் எங்கே போய்… எப்படி?” 

“பயப்பட வேண்டாம். நான் தான் திருச்சிற்றம்பலம் உயிரோடு திரும்பி வந்துவிட்டேன்.” 

தான் மாங்குளத்திற்கு பஸ்ஸில் ஏறியதைச் சொல்லிவிட்டுத் திருச் சிற்றம்பலம் தொடர்ந்தான். 

“உன்மையாகவே இன்று தற்கொலை செய்துகொள்வதற்காகத் தான் நான் இங்கிருந்து மாங்குளத்திற்கு பஸ்ஸிலே சென்றேன். என் தற்கொலை முயற்சிக்கு என்ன காரணம் தெரியுமா?… அது ஒரு சுயந லத்தின் தோல்வியினால் ஏற்பட்டது… இதற்காக நான் வெட்கப்படுகின் றேன். இன்று பகல் எனக்கு ஒரு கடிதம் வந்தது. விநாயகமூர்த்தியைப் பற்றியது அக்கடிதம். எனது தங்கச்சி எழுதியிருந்தாள். எனது தம்பி வினாயகமூர்த்தி யாரோ ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு எங்கோ போய் விட்டானாம்… இந்தக் கடிதத்தைப் பார்த்ததும் என் வாழ்க்கையின் கனவே சரிந்துவிட்டதாய் நான் உணர்ந்தேன்…. என்னுடைய குடும்பச் சுமையை நானே இதுவரை சுமந்திருந்தேன்… விநாயகமூர்த்தியை ஏதா வது ஒரு வேலையில் சேர்ப்பது, அவன் உழைப்பையும் சேர்த்துத்தான் என் தங்கச்சிக்குத் திருமணம் செய்து வைப்பது…… (தயக்கக் குரலில்) பிறகு என் வாழ்விற்கும் ஒருத்தியைத் தேடிக்கொள்வது, இதுதான் என் நீண்டநாள் திட்டமாக இருந்தது. இதனால்தான் விநாயகமூர்த்தியை மேலே படிக்கவிடாமல் ஏதாவது தொழிலுக்கு போகும்படி வற்புறுத்திக்கொண்டிருந்தேன்… ஆனால் நேற்றுக் காலையில் வந்த கடிதம் என் கற்பனைகளையே தகர்த்தது. விநாயகமூர்த்தி வீட்டைவிட்டுப்போனால் ன்தான் வாழ்நாள் பூராவும் குடும்பச் சுமையைச் சுமக்க வேண்டும். தங்கச்சிக்குத் திருமணம் செய்து முடித்தபின் அம்மாவைப் பார்ப்பதற் குத் தொடர்ந்து உழைக்கவேண்டும். நானும் மற்றவர்கள்போல திரு மணம் செய்து குழந்தை குட்டிகளோடு வாழும் வாழ்வு எனக்குக் கிடை யாதா ஒன்றாகிவிடுமோ என நினைத்தபோது எனக்கு வாழ்வே வெறுத் தது… நிம்மதியற்ற தொடர் வாழ்வைவிடத் தற்கொலை நல்லது என்ற முடிவிற்கு வந்தேன்…… தற்கொலை செய்யும் முடிவோடு மாங்குளம் செல்லும் பஸ்ஸில் ஏறிக்கொண்டேன். பஸ்ஸில் ஏறி இருந்துகொண்டே நெஞ்சில் உள்ளவர்கள் ஒவ்வொருவரையும் மறக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன்… எல்லோரையும் மறக்கமுடியுமென்று தோன்றிற்று. இவரது நினைவோ (இரத்தினசிங்கத்தைச் சுட்டிக்காட்டி) அகற்ற முடியாத ஒன்றாகிவிட்டது. பஸ்ஸில் போகும்போது இருபுறமும் பார்த்துக்கொண் டிருந்தேன். வயலில் நிறைய விவசாயிகள் வேலை செய்து கொண்டிருந் தார்கள்… அவர்களைப்பற்றியும் இரத்தினசிங்கம் சொன்னது என் நினை விற்கு வந்தது. இந்த உலகம் உழைக்கின்ற எங்களுக்கே, என்று நான் பல முறை கூட்டங்களில் தொழிலாளிகள் கூறக் கேட்டிருக்கின்றேன். பிறகு நான் கோழைபோலப் புகையிரதத்தின் முன் விழுந்து சாவதா என நினைத்துக்கொண்டேன். ஆனால் என் மறுமனம் தற்கொலைக்கே தூண்டியது. இரவில் பதுங்கிப் பதுங்கித் தண்டவாளத்திலிருந்து புகை காத்திருந்தேன் … இருளின் நடுவே தொலைவில் யிரதம் வருவதைக் காத்திருந்தேன்… 

நெஞ்சில் பல எண்ணங்கள் ஒளியொன்று துலங்கி ஜொலித்தது. என் புரண்டன. இரத்தினசிங்கத்தின் குரல் மாறி மாறிக் கேட்டது. தனியாளில்லை, துணையுள்ளவன். இத்துணையோடு, இலட்சக்கணக்கானவர்களின் பலத்தோடு புத்துலகை ஆக்கி மகிழ்வாய் வாழமுடியும் என் எண்ணம் என் நெஞ்சில் இருளிடையே ஒளியெனத் தோன்றிற்று… நான் ஆழச் சிந்தித்தேன்; தொலையில் புகையிரதம் கூவியது.. உறுதியான முடிவுடன் என் தற்கொலை முயற்சியைத் தூக்கியெறிந்துவிட்டு புதிய மனிதனாய்த் திரும்பிவிட்டேன்!” 

திருச்சிற்றம்பலத்தின் முகத்திலே புதிய ஒளி துலங்கிற்று: இலேசான புன்முறுவல் முகத்தை மலர்த்திற்று. 

– ஒளி நமக்கு வேண்டும் (குறுநாவல்கள்), முதற் பதிப்பு: ஜூலை 1973, மலர் பதிப்பகம், மட்டக்களப்பு

Print Friendly, PDF & Email
ஈழத்து எழுத்தாளர் செ.யோகநாதன் - எழுதியவர்: முல்லை அமுதன் - 05 February 2008 1942ல் பிறந்த செ.யோகநாதன் அவர்கள் மாரடைப்பால் இறக்கும் வரை நிறையவே எழுதிக்குவித்தவர். 1962ல் தன் முதல் சிறுகதையான ‘மனக்கோலத்தை’ எழுதியது முதல் தொடர்ந்து சிறுகதை, நாவல், குறுநாவல், சிறுவர் இலக்கியம், திரைப்படம், விமர்சனங்கள் என எழுத்தை விரிவுபடுத்தியவர். ஜெயகாந்தனின் ‘வாழ்க்கை அழைக்கிறது’ நாவலை ‘அக்கினிப் பிரவேசம்’ எனும் சிறுகதையை வாசித்தபோது ஏற்பட்ட அதிர்வலைகள் எனக்கு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *