திக்கற்றவர்களுக்கு

0
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 10, 2024
பார்வையிட்டோர்: 162 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அம்மா, வேண்டா! இந்த வாரம் நீ பள்ளிக்கூடம் போக வேணாம்மா… நம்பப் பண்ணையார் சூளை வைச்சி அம்பதாயிரம் செங்கல் சுடப் போறாராம். நாம குடும்பத்தோட இந்த வாரம் பூரா அதுக்கான வேலையைக் கவனிக்கணும்மா” என்று சொல்லியபடியே வாசலைச் சுத்தம் செய்துகொண்டிருந்தாள் முனியம்மாள். பாவம், முனியம்மாள்! வரிசையாக ஐந்து பெண்களைப் பெற்றெடுத்துவிட்டாள். ஆறாவதாகப் புள்ளை பொறக்கும். அவன் ஆனை கட்டி வாழ்வான்னு எப்பொழுதோ ஒரு குடுகுடுப்பைக்காரன் சொன்னதை மனத்தில் வைத்துக் கொண்டு, இப்போது வயிற்றில் ஒன்றைச் சுமக்கிறாள்.

இவள் கணவன் வீரய்யன் கிளி சோதிடனிடம் கேட்டுப்பார்த்தானாம். ‘ஆம்பளப் புள்ளைதான் பொறக்கும்… பெண்ணா பொறந்தாலும் நல்ல குழந்தையாக இருக்கும் என்று சொல்லிட்டுப் பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு போய்விட்டானாம். இதைப் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருப்பான் வீரய்யன். இவன் என்னவோ ஆள்… வாட்ட சாட்டமாகக் தான் இருப்பான். ஆனால், இந்த முனியம்மாள் சப்பிப் போட்ட மாங்கொட்டை போலத்தான் இருப்பாள்.

கட்டுவிட்டுப்போன மைக்குச்சி எழுதுகோலை உதறி உதறி ஏதோ எழுதிக்கொண்டிருந்தாள். வேண்டா, கவனம் முழுவதும் அதிலேயே வைத்திருந்தாள்.

“ஏன்டி நான் சொல்லறேன்! அப்படியே குத்துக்கல்லா உக்காந்துக்கீறே. என்ன கொழுப்பா?” என்று சீறினாள் முனியம்மாள்.

”உன்னையும், என்னையும் பார்த்தாக் கொழுப்புள்ளவங்கன்னு யாரும்மா சொல்லுவாங்க ? காதுல விழலையான்னு, வேணுன்னாக் கேளும்மா, ஏன்னா இப்ப எனக்குப் பசி காதை அடைக்குது” என்று மெல்லிய குரலில் பேசினாள் வேண்டா.

“அடிப் பொட்டக் கழுதை! அஞ்சாம் வகுப்பு படிக்கிற திமிர்ல்ல கூடக்கூடக் சவடால் உட்டுப்பேசறீயே, மரியாதையா எழுந்து போயிக் கொஞ்சம் சோறு பொங்கு. அப்படியே சின்னப் பாப்பாவையும் ஏணையிலே போட்டுத் தூங்க வை. நாங்கள் சாயுங்காலந்தான் வருவோம்” என்று பேசியபடியே பல்துலக்கச் செங்கல் பொடியை எடுத்துத் தேய்த்துக் கொண்டிருந்தாள் முனியம்மாள்.

வேண்டாவுக்கு அம்மா மேலே கோபம், கோபமாக வந்தது. ஆயினும், “அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்” என்று ஆசிரியர் சொல்லிக் கொடுத்தது மனசில் வரவே, ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, “அம்மா! இந்த வாரம் எனக்குக் கால் ஆண்டுத்தேர்விலே யார் முதல் மதிப்பெண் வாங்கறாங்களே… அவங்களுக்கு விலை உயர்ந்த, பேனா ஒன்று பரிசு கொடுக்கப் போவதாகத் தலைமை ஆசிரியர் சொல்லியிருக்காரும்மா… அதனால் என்னை நிக்கச் சொல்லாதிங்கம்மா என்று ஒரு குயிலைப் போலப் பேசி முடித்தாள் வேண்டா.

“கால் ஆண்டுத்தேர்வோ, ஆண்டுத்தேர்வோ, அதெல்லாம் எனக்குத் தெரியாது, வேண்டா, இந்த வாரம் நீ பள்ளிக்கூடத்துக்குப் போக வேணாம்… அதான் நான் சொல்லுவேன். மீறிப் போனா தொடப்பக்கட்டைப் பிஞ்சிப் போயிடும். உள்ளே போ மரியாதையா…!” என்று கட்டளை போலக் கூச்சல் போட்டாள் முனியம்மாள்.

அவள் கூச்சலைக் கேட்டு எழுந்து வந்த வீரய்யன், “என்ன, வேண்டா காலங்காத்தால அம்மா கூட வம்பு பேசிக்கிட்டுக்கிறே ? அவுங்க சொல்லறாங்க இல்லே, இந்த வாரம் பள்ளிக்கூடம் போகலேன்னா. குடியா மூழ்கிப்பூடும். இன்னிக்கு நாலு காசைப் பாக்கறத்தை வுட்டுப்பூட்டுப் பள்ளிக்கூடம் போறாளாம், பெரிய்ய பள்ளிச்கூடம். இதுக்கெல்லாம் தண்டச் செலவு செய்ய யாரால முடியும் ? போ.. போ. போய் ஆக வேண்டிய வேலையைப் பாரு.. என்று பட்டாசாய் வெடித்தான் வீரய்யன்.

“அப்பா இந்த அஞ்சாம் வகுப்பு வரைக்கும் நான் படிச்சதாலே எனக்கு என்னப்பா பெரிய செலவு செஞ்சிட்டே, இலவசமாப் புத்தகம், துணி, சத்துணவு, வாரம் ஒரு முட்டைன்னு அரசாங்கம் தானே செலவு செஞ்சிக்கிட்டு வருது” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள் வேண்டா.

“ஏ, திமிரு பிடிச்ச நாயே… வரவர இந்த மாதிரி எதிர்த்துப் பேச ஆரம்பிச்சிட்டையே, போடி உள்ளே !” என்று கூறிக்கொண்டே அவள் தலையிலும், முதுகிலும் இரண்டு தட்டுத் தட்டினான் வீரய்யன். அதற்கு மேலும் பேசினால் வம்புதான் என்று அறிந்திருந்த வேண்டா புத்தகங்களை அள்ளிக்கொண்டு உள்ளே போய்விட்டாள்.

சித்தேரி ஓரம் சூளை போடுகின்ற வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. பண்ணையார் நாகலிங்கம் வேலையாளோடு வேலையாளாய் நின்றுகொண்டு அதட்டி மிரட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தார். அவரிடம் மேற்பார்வையாளர் ஆக இருக்கின்ற முனியப்பன் பண்ணையாரிடம் நல்ல பயிற்சி பெற்றவன் வேலை செய்யாமல் யாரும் அவன் கண்ணிலிருந்து தப்பிக்கவே முடியாது.

மறைவான இடத்தில் குழந்தைகளுக்குப் பால் கொடுக்கின்ற பெண்களிடம் சென்று, “எவ்வளோ நேரம் பால் கொடுப்பீங்க, எழுந்து போய்ச் சீக்கிரம் வேலையைப் பாருங்கடி” என விரட்டுவான். அப்படியே பார்க்கக்கூடாததையும் பார்த்து இரசிப்பான்.

“சரி ..சரி..மசமசன்னு நிக்காமே கல்லெல்லாம் ஒழுங்கா அடுக்கிச் சரியா கணக்குப்பாரு, முனியப்பா” என்று சொல்லிக்கொண்டே வண்டியை உதைத்துக் கிளம்பிவிட்டார் பண்ணையார்.

“ஏண்டி..! உங்க அப்பனும், ஆத்தாளும் இன்னும் வரலே… வீரய்யன் வந்தா.. வேலை வேகமா ஓடும்” என்று கேட்டபடிச் சேற்றை மிதித்துக்கொண்டிருக்கின்ற குப்பம்மா, எல்லம்மாவிடம் வந்து நின்றான் முனியப்பன். “இன்னும் சிறிது நேரத்தில் வந்துடுவாங்க.” என்று சொல்லிக் கொண்டே மண்ணை ஒரு பக்குவ நிலைக்கு வரும்படி மிதித்துக்கொண்டிருந்தார்கள் இருவரும். குப்பம்மாவுக்குப் பதினான்கு வயது. எல்லம்மாவுக்குப் பன்னிரெண்டு. இருவரும் இரண்டாம் வகுப்புக் படித்ததோடு சரி. தட்டுத் தடுமாறிக் கையெழுத்துப் போடுவார்கள். அவர்களால் வருமானம் கிடைக்க ஆரம்பித்ததும் படிப்பு நிறுத்தப்பட்டது.

குப்பம்மா பெரிய பெண் ஆகிவிட்டாள், என்ற சங்கடம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அவள் உழைத்துக் காசுகொண்டு வந்தால் சரி எனப் பெற்றோர்கள் விட்டுவிட்டார்கள். அவர்கள் மறைத்தாலும் பருவப்பூரிப்பும், முகத் தோற்றமும் முனியப்பன் போன்ற கழுகுக் கண்காரர்களுக்கு நன்றாகவே தெரியும்.

எப்படியும் அவளை வலையில் வீழ்த்திவிட வேண்டும் என்று ரிப்பன் வாங்கித் தருவது, நகப்பூச்சு வாங்கித் தருவது எனச் சிறிது சிறிதாக நெருங்கிக் கொண்டிருந்தான் முனியப்பன்.

இன்றுப் பத்து ரூபாயில் ஒரு முத்துமாலையை வாங்கி வைத்திருந்தான். விவரம் தெரியாத குப்பம்மா, “நாம நல்லா வேலை செய்யறத்துக்காக அவர் தருகின்ற வெகுமதி இவையெல்லாம்” என்று எண்ணியிருந்தாள்.

“என்ன குப்பம்மா! தண்ணி மத்த இடத்திலே எல்லாம் போகலே போலிருக்கே” போய் அந்த இயந்திர விசையைப் போட்டுக் குழாயை செருகி விடு” என்றான் முனியப்பன். சிறிது தொலைவில் உள்ள குழாய்ப் பக்கம் மானாய்த் துள்ளி ஓடினாள் குப்பம்மா… பக்கத்தில் உள்ளவர்களிடம் பேச்சுக்கொடுத்துக் கொண்டே இவனும் அங்கே நெருங்கினான்.

உள்ளே நுழைந்த குப்பம்மாள் விசையை அழுத்தினாள். இயந்திரம் ஓடவில்லை. “என்ன குப்பம்மா! இயந்திரம் ஓடலையா…? எனக் குரல் கொடுத்துக்கொண்டே வந்த முனியப்பன், விசையைப் பிடுங்கிப் பார்த்துவிட்டு.” அய்யய்யோ. இணைப்பு இல்லையா! குப்பம்மா உன்னைத் தூக்கறேன். மேலே உள்ள பலகையிலே இது மாதிரி இருக்கா, பாரு என்று சொல்லிக்கொண்டே அவள் இடுப்பைப் பிடித்துத் தூக்கித் தழுவிக்கொண்டே இருந்தான்.கெட்ட எண்ணத்தோடு.

அப்படியும் இப்படியும் தடவிப் பார்த்த குப்பம்மா,” இல்லையே என்றாள். “நல்லாப் பாரு, குப்பம்மா” என அல்ப சுகத்தில் திளைத்தான் முனியப்பன். நிலை தடுமாறிய குப்பம்மா அப்படியே கீழே சரிந்தாள். அவள் மீது தடுமாறி விழுவதுபோல இவனும் சாய்ந்தான். அவள் சுதாரித்துக்கொண்டு எழுந்து நின்றாள்.

“இதோ பாரு, குப்பம்மா, உனக்காக இந்த முத்து மாலையை வாங்கி வந்தேன் நல்லாக்கீதா, பாரு!” என்று அவள் கழுத்தில் அதைப்போட்டுவிட்டு மார்பில் தொங்கிய மாலையைச் சரி செய்வது போல இப்படியும், அப்படியும் அவன் தேவைக்குத் தடவினான். குப்பம்மா முத்துமாலை அழகில் மயங்கினாலும் அவள் உடம்பிலும், மனதிலும் ஏதோ ஒரு அருவருப்புப் பொறி தட்டியது. “இனி இங்கு இருப்பது சரியில்லை” என எண்ணிக் கொண்டு “அதோ எங்க அம்மாவும், அப்பாவும் வந்துட்டாங்க நான் போய் வேலையைப் பார்க்கிறேன்” என்று உரத்தக் குரலில் சொல்லி விட்டுச் சூளைப்பக்கம் ஓடி வந்தாள்.

மாலையில், வேலையை முடித்துக்கொண்டு வீரய்யன், மனைவியோடும், இரண்டு பெண்களோடும் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தான். தீடீரென்று முனியம்மாவின் காதைக்கடித்தான் வீரய்யன். உடனே முனியம்மாள்,

“ஏய், நீங்க இரண்டு பேரும் வீட்டுக்குப் போய்க் குளிச்சிப்பூட்டுச் சோறாக்கி, இரசம் வையுங்கடி, அப்படியே சிறிது முருங்கைக் கீரையை பெரட்டி வையுங்கடி. நாங்கள் கூலியை வாங்கிக்கிட்டுக் கடைத் தெருப்பக்கமாப் போய் வரோம்” என்றாள்.

“சரிம்மா” என்றனர் இருவரும்.

பாதை மாறிய வீரய்யனும், முனியம்மாவும் வேகமாக நடந்தார்கள். சிறிது காலமாக முனியம்மாவுக்கும் சாராயம் குடிக்கக் கற்றுக்கொடுத்துவீட்டான் வீரய்யன். உடம்பு வலி தெரியாமல் தூங்க முடிகிறது என வாரம் ஒரு முறை இவளும் அவனோடு சேர்ந்து குடிக்க ஆரம்பித்துவிட்டாள். கடையை நெருங்கினார்கள். எதிர்க்கட்சிக்காரர்கள் தகராறு செய்து கடையைச் சூறையாடியிருந்தனர். “என்னைப் பார்த்தால் வேறு ஏதாவது ஏற்பாடு செய்வான். வா போகலாம்னு” வேகமாக நடந்தான் வீரய்யன். முனியம்மாளும் அவனைத் தொடர்ந்தாள்.

”அம்மாவும், அப்பாவும் எங்கே போனார்கள்? இன்னும் வரவில்லையே? மணி பத்து ஆகுதே” என்று எண்ணியபடியே குப்பம்மாவும், மற்ற பெண்களும் தூங்கி விட்டார்கள். அமாவாசை இருள் எங்கும் அடர்த்தியாக இருந்தது.

கொஞ்ச நேரத்தில் “குய்யோ முறையோ”ன்னு அலறல் ஓசை கேட்டது. வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு சில பெண்கள் ஓடி வந்தார்கள். குப்பம்மாவும், எல்லம்மாவும் வாரிச் சுருட்டிக் கொண்டு வெளியே வந்து நின்றார்கள்.

“நச்சுச் சாராயம் குடித்து உங்க அப்பனும், ஆத்தாளும் செத்துப்பூட்டாங்கம்மா…” என்று குப்பம்மாவையும், எல்லம்மாளையும் அணைத்துக்கொண்டு ஓ என்று அழுதாள் பக்கத்து வீட்டு மாரியம்மா.

இடி விழுந்தது போல நொறுங்கிப்போனார்கள் இருவரும், வேண்டாவும், சின்னப் பொண்ணும் எழுந்து வந்து ஏதோ கனவு காண்பது போல மலங்க மலங்க விழித்தார்கள்.

அந்தக் கிராமத்தில் பத்துப்பேருக்கு மேல் இறந்து விட்டார்கள். எங்கும் அழுகுரல், அவலக்குரல்.

மறுநாள் செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி எல்லாம் அந்தக் கிராமத்து அசிங்கத்தையும், அவலத்தையும் உலகமெங்கும் பரப்பின.

எதிர்க்கட்சிக்காரர்களுக்குப் பரபரப்பான செய்தி கிடைத்து விட்டது. பழி போட்டுத் திட்டித் தீர்க்க. ஆனால், போன உயிர்கள் போனவை தாமே. யார் இதற்கு ஈடு செய்வார்கள் ?

சில நாள் கழித்து ஆசிரியை, ஆனந்தி குப்பம்மாவையும், மற்ற பெண்களையும் பார்த்து ஆறுதலாகப் பேசி அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டினாள். “வேண்டாவை நிறுத்தாமல் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வையுமா…” நீயும் அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து போம்மா… என்றாள்.

மறுநாள் குப்பம்மா ஆசிரியை வீட்டுக்குப் போனாள்.

தன்னிடமிருந்த பழைய சட்டை, பாவாடை, துண்டு இவைகளைக் கொடுத்து மீதமிருந்த சாப்பாட்டையும் குப்பம்மாவுக்குக் கொடுத்தாள். ஆசிரியையின் அன்புக்கு அடிமையான குப்பம்மா, அவர்கள் வீட்டு வேலைகளை எல்லாம் காலை, மாலை வந்து செய்தாள். ஓய்வான நேரத்தில் ஆசிரியை ஆனந்தி குப்பம்மாவுக்குப் படிக்கவும், எழுதவும் கற்றுத் தந்தாள் கல்வியின் பெருமையை அவளுக்கு எடுத்துரைத்தாள்.

ஒரு நாள் எல்லம்மா கையிலே நகப் பூச்சு வைத்துக்கொண்டு நகத்தில் பூசிக்கொண்டிருந்தாள்.

“ஏதுடீ இந்த நகப்பூச்சு?” என்றாள் குப்பம்மா ”அந்த மேற்பார்வையாளர் கொடுத்தாருக்கா” என்றாள் எல்லம்மா. “முரட்டுக்காளை மேய்ச்சல் நிலத்தை மாற்றிக்கொண்டது” எனப் புரிந்துக்கொண்டாள் குப்பம்மா. அதை ஆவேசத்துடன் பிடுங்கி வீசி எறிந்தாள்.

“ஏங்கா.. ஏன்? அதை உடைச்சே” என விவரம் புரியாமல் கேட்டாள் எல்லம்மா.

“எல்லம்மா.. இனிமேல் அந்தச் சூளை வேலைக்கும், அந்த மேற்பார்வையாளர் இருக்கிற பக்கமும் நீ போக வேண்டாம். மாரியம்மா அக்காக்கூடப் பக்கத்து நகரத்திலே நடக்கற கட்டிட வேலைக்குக் போம்மா” என்றாள் தீர்க்கமாக.

“சரிக்கா” என்றாள் எல்லம்மா.

ஒரு நாள் பேச்சுவாக்கில் எய்ட்ஸ் நோய் பற்றியும். ஆசிரியை ஆனந்தி குப்பம்மாளுக்கு எடுத்துக் கூறினாள். மேற்ப்பார்வையாளர் முனியப்பனுக்கு “எய்ட்ஸ்” வந்து சென்னை மருத்துவமனையில் அபாய நிலையில உள்ளான் என்ற செய்தியும் குப்பம்மாவுக்குத் தெரிய வந்தது.

“வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என் ஆசிரியை ஆனந்தி என்றோ சொன்னது அப்பொழுது குப்பம்மாளுக்கு நினைவுக்கு வந்தது.

– தெள்ளாறு.ந.பானு, திரு அண்ணாமலை.

– மனங்கவர் மலர்கள், முதற் பதிப்பு: ஜூன் 2005, சிங்கைத் தமிழ்ச் செல்வம், சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *