தலைவர் என்ன பண்ணிட்டிருக்கிறார் – யார் இப்படி ஃபோன்ல உங்களைப்பத்தி விசாரிச்சாருன்னு சொல்லுங்க.
அவள் கேட்டதும், சிரித்துக்கொண்டே தெரியும், என்ன எலக்ஷன் சமயத்தில் என்னை இவர் தலைவர் ஆக்கிட்டாரா என்று பதில் சொன்னாலும் தலைவர் என்ற சொல்லிலிருந்து மனசுக்குள்ளே வேறொரு போக்கில் சிந்தனை உருவாகிடுச்சு.
நான் தலைவர்னா யாருக்கு தலைவர் அப்போ அவர் யாரு.
தலைவரா இருந்தா கட்சி இருக்கணுமே.
நினைத்தவுடன் மனசு சுத்த ஆரம்பிடுச்சு. ஆமா உடனடியா கட்சி ஒண்ணு இப்போ உருவாயிடுச்சு மனசுக்குள்ளே
அ ஆ இ – ஆமாம் இதுதான் கட்சியின் பெயர்.
அப்படின்னா விரிச்சு சொல்லுங்க
அ……ஆ…….இ
நல்லாயிருக்கு. உங்க கட்சிக்கு கொடி இருக்கா
இருக்கு. அது துணியினால் ஆனது அல்ல. நீரால் ஆனது. நீர் ஓடிக்கிட்டே இருக்கும். ஆனா ஒரு சொட்டு தண்ணியும் கீழே விழாது.
கேக்க நல்லாயிருக்கே. அலைஅலையா நீரினால் ஆன கொடி அந்தரத்தில் அசைவது என்னால் மனசிலே பாக்க முடியுது. அதில் ஓடும் நீர் எங்கிருந்து வந்து எங்கே போவுது
வருவதும் போவதும் யாருக்கும் தெரியாது. கொடியில் ஓடிக்கொண்டு இருக்கும் நீர் மட்டும் பார்வையில் படும்.
ஒரே பிரமிப்பா இருக்கு. . . இதெல்லாம் சாத்தியமா
ஏனில்லாம, ஒரு சின்ன செல்லிலெ என்னனமோ ஜின்னு பேரெ சொல்லி எவ்வளவு தெரியும்போது எல்லாமெ சாத்தியந்தான் இந்தக் கொடிக்கு என்ன நிறம் தெரியுமா
சொல்லுங்க
கொடி பிடிச்சிட்டு நிக்கறவர் மனசுக்கு என்ன நிறம் பிடிக்குமோ
அந்த நிறம் அவருக்குக் காட்டும். வேற ஒருத்தர் வேற நிறம் விரும்பினா அத அவருக்குக் காட்டும். எல்லாம் ஒரே நேரத்தில்.
எனக்கு நான் பாக்கற கொடியிலே வெறுமனே எந்த நிறமும் இல்லாம அலைஅலையா நீர் அசைவது ரொம்ப பரவசமா இருக்கு என்றாள் அவள்.
சரி அப்படி பிடிச்சிருந்தா அப்படியே வெச்சுக்கலாம் உங்களுக்கு
அவங்கவங்களுக்கு என்ன நிறம் பிடிக்குதோ அந்த கலர்லே கொடி பிடிச்சுக்கிட்டு ஒரே இடத்தில் கூடி இருப்பாங்க எல்லோரும். அத்தனை பேரும் அ ஆ இ ஆளுங்கதான்.
தொண்டர்களா
அப்படியும் சொல்லிக்கலாம். இங்கே யாராச்சும் தான் தலைவர் அப்படின்னு மனசில் என்ணினா அந்தக் கணமே அவர் தலைவர் ஆயிடுவார். வேற ஒருத்தர் தான் தலைவர்னு நெனச்சார்னா அந்த நேரத்திலேயே அவர் தலைவர் ஆயிடுவார். இப்படி இன்னொருத்தர் தன்னை தலைவரா நெனச்ச அடுத்த வினாடி தான் தொண்டர் இப்போன்னு நெனச்சா அவர் அப்படி இருப்பார். யாரும் யாரையும் கேக்கவும் வேணாம் இதற்கு.
அப்பொ, ஒரே நேரத்தில் எல்லாரும் தலைவரா இருக்க முடியும்?
ஆமா, தலைவனும் வேண்டாம் தொண்டனும் வேண்டாம். அப்படின்னும் இருக்கலாம் அ ஆ இ யில்.
ஹை, ஜாலியா இருக்கே அ ஆ இ விற்கு சின்னம் இருக்கா
ஒரு கணம் யோசித்து சிரித்தபடி
அ ஆ இ வின் சின்னம் கண் என்றேன். இந்தச் சின்னம் கொடியில் நீரில் இருக்கும். வேறெங்கும் சின்னம் பார்க்க முடியாது. கண் திறந்தபடி இருக்கும், பார்க்கும்பொழுது.
பார்க்காதபொழுது மூடிக்கொள்ளும்.
அதெப்படி சொல்றீங்க
அது அப்படித்தான். எப்பொ கொடிய பார்த்தாலும் கண் திறந்து தெரியும். தலையை இந்தப்பக்கம் அந்தப்பக்கம் திருப்பும் சமயத்தில் கண் மூடிக்கொள்ளும். அது ஒரு நொடி என்றாலும் சரி மணிக்கணக்கா பாக்காம இருந்தாலும் சரி. எப்பொ எல்லாம் பாக்காம இருக்கிறோமோ அப்பல்லாம் அது மூடிக் கொள்ளும். ஒரு நொடிமட்டும் பார்த்தாலும் அந்த நொடியில் கண் திறந்து தெரியும்.
அத பார்க்கும்பொழுது கண், பார்க்கிறவனை பார்க்கிறது சரியா?
அப்படியே வெச்சுக்கோங்க.
கண், அதுவும் திறந்தபடி தண்ணீரில், அலைஅலையா போகும் தண்ணீரில் பார்க்கவே என்னமோ பண்ணுது எனக்குள்ளே. இதில் நீர் எங்கிருந்தோ வந்து எங்கேயோ போனபடி சதா இருக்கும். நீரின் ஓட்டம் மட்டும் எப்பொழுதும். அந்த ஓட்டத்தில் திறந்து இருக்கும் கண். ரொம்ப ஆழமா எதெயோ சொல்லுது இந்தக்கண்.
கண்- திறந்த கண் இருக்கும் கொடியிலிருந்து ஒரு சொட்டு நீரும் விழாது கீழே.
இந்தக் கட்சியின் கொள்கையென்ன
எந்தக் கொள்கையுடன் எங்கே இருந்தாலும் இங்கு வந்தவுடன் அந்தக் கொள்கையெல்லாம் காணாமல் போய்விடும். அதுதான் இந்த அ ஆ இ வின் ஸ்பெஷாலிடி.
கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்களேன்
கொடி அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு நிறம் மாறித் தெரியும் இல்லையா, மனசில் தலைவர் தொண்டன் எண்ணத்திற்கு ஏற்றாற்போல் யார் வேணும்னாலும் அதுவாக இருக்க முடிகிறது இல்லையா, அதே மாதிரி இங்கே யாருக்கும் எந்தக் கொள்கையும் தேவைப்படாம போயிடும். மனசிலெ அப்படி ஒண்ணு தோணவும் தோணாது. கொள்கைன்னு ஒண்ணு இல்லாமலே எல்லா வேலையும் சுதந்திரமா செய்ய முடியும் இங்கே.
ரொம்ப உற்சாகமா இருக்கு. கொடி சொன்னீங்க சின்னம் சொன்னீங்க. அ ஆ இ கட்சியின் அலுவலகம் எங்கே
எல்லாம் அந்தக் கொடிக்குக் கீழேதான்.
என்னது
ஆமா, கொடியெ தூக்கிக்கிட்டு போற பக்கமெல்லாம் அதன் அலுவலகம் நகர்ந்தபடி இருக்கும். எங்க நிக்கறாங்களோ அந்தந்த இடத்தில் அது செயல்படும்.
அப்போ அலுவலகத்துக்குன்னு தனியா ஒரு இடம் கிடையாதா
ஒரே நேரத்தில் அங்கங்கே இருக்குமா அது
அப்படித்தான். அதில் ஒரு சிக்கலும் கிடையாது
மொபைல் ஆஃபிஸா
ஆஃபிஸ் மொபைல்லே இருக்கும். ஆனா அது மொபைல் ஆஃபிஸ்னு ஆகாது
ம், அப்படியா, சரி உங்க அ ஆ இ வுடைய நலத்திட்டங்கள் ஏதாச்சும் இருக்கா
இல்லாமலா. அதுதானே முக்கியம். எல்லாத்தையும் கொடியே பார்த்துக்கொள்ளும். யார் கையில் கொடி இருக்கிறதோ அவர் நலம் அவர் கொடியில். வெயில் கடுமையா இருக்குன்னு நெனச்சா
கொடி உடனே குடைபோல ஆயிடும். மழை பொழியும்போது நீர்க்கொடி தலையை மறைத்துக்கொள்ளும். கொஞ்சமும் நனையாமல் போகலாம். மழைத்தண்ணீரும் மேலே விழாது கொடியில் உள்ள நீரும் மேலே விழாது.
அப்புறம், யாருக்காச்சும் வீடு வேணும்னு தோணிச்சின்னா உடனே கொடி தானா விரிந்து கூரைபோல் மறைத்துக்கொள்ளும். வீடு இருக்கிறவன் கையில் கொடி இருந்தா அவனுக்கு வேணும்கிற இந்த நெனப்பே வராது
குளிர் காலங்களில் கொடியையே போர்த்திக்கொண்டு நன்றாக தூங்கலாம். கதகதப்பாக இதமாக இருக்கும். ஈரமாக இருக்காது.
நீர்க்கொடி ஈரமா இருக்காதா
ஆமா, கொடியின் ஈரம் ஒடம்பிலெ அப்பொ ஒட்டவும் செய்யாது
வாகன வசதி இல்லாத இடத்திற்கு அவசரமா போகணும்னா, பேசாம கொடிமேல் ஏறி நின்றுகொண்டால் பறக்கும் கம்பளமாக மாறிவிடும். வாகனம் வசதி இருந்தா கம்பளமா மாறாது
ரயில் பஸ் போன்ற நெரிசலான பயணங்களின்போது உள்ளே கொடி விரிந்தோ அல்லது சுருங்கியோ தேவைக்கேற்ற வெளி ஏற்படுத்தித்தரும். அந்த வெளியில் அமர்ந்து கொள்ளலாம் நின்று கொள்ளலாம். வசதியாக இருக்கும் பயணம். அலுப்பு தெரியாது.
எல்லாம் சரி, புவ்வாவுக்கு என்ன பண்றது
அ ஆ இ வில் இருக்கிறோம்னா சும்மாவே வந்துடணுமா எல்லாம். வேலை செய்ரீங்க இல்லே சம்பாதிக்கிறதெ வெச்சு சாப்பிடுங்க. யாருக்கும் எந்த குறையும் இருக்காது. குறை நிறை எல்லாம் நாம தான் உண்டாக்கிக்கிறோம். வீணா மத்த நடைமுறையோட சம்பந்தப்படுத்திகாம உள்ளே வந்து பாருங்க. நீர்க்கொடிக்குக் கீழெ நின்னு பாருங்க. அதுலே இருக்கிற கண்ணெ பாத்துட்டெ இருங்க.
இன்னொண்ணும் சொல்லத் தோணுது இங்கே
என்னது
. . . யாருக்காவது தான் இருக்கும் வெளி விரிந்து பேரண்டமாக ஆக வேண்டும் என்று தோன்றினால் இந்தக்கொடி எல்லையற்று விரிந்து அதுவாக மாறி அவரை உள் வாங்கிக்கொள்ளும்.
0
ரொம்ப நேரம் அமைதியாயிருந்து பின் அவள் ஒண்ணு கேக்கலாமா என்றாள்
தாராளமா
இப்பொ நீங்க தலைவரா வேறயா
எதுவாவும் எப்பவும் இல்லே நான். உங்களுக்கு எப்படி தோணுதோ அப்படி அதுவா தெரிஞ்சா சரி.
மீண்டும் கொஞ்ச நேரம் மௌனமாயிருந்து இப்போ எங்கேயிருந்து ஆரம்பிக்கலாம் என்றாள்
கிளையிலிருந்து
என்னது கிளையிலிருந்தா எந்தக் கிளை
மரக்கிளை
மரக்கிளைக்கும் அ ஆ இ வுக்கும் என்ன தொடர்பு
அ ஆ இ விற்கு கொடி ஒன்று உண்டு. கொடி பிடிக்கக் கம்பம் உண்டு. அந்தக் கம்பம் மரக்கிளையினால் செஞ்சது இல்லையா. அப்போ கிளையிலிருந்தே துவக்கலாமே
கிளையிலே என்ன சொல்லப்போறீங்க
கிளை மேல் பறவைகள் அமரும். அணில் குரங்கும் இருக்கும் . . .